கண்கள் தேடுது தஞ்சம் – 27
அத்தியாயம் – 27
மருதன் தனக்கு எதிரே நின்றிருந்த தமிழரசனை கூர்ந்து பார்க்க, அவருக்குச் சற்றும் குறையாத பார்வையுடன் அவரின் பார்வையை எதிர் கொண்டான் அரசு.
மருதன் அவனை எதுவும் சொல்லி விடுவாரோ என்று பயந்த ஈஸ்வரி, “என்னங்க… நம்ம தமிழ் தான் உங்களைக் காப்பாத்தி, இங்க கொண்டு வந்து சேர்த்தது” என்று வேகமாகச் சொன்னார்.
மனைவியை ஒரு பார்வை பார்த்த மருதன், திரும்ப அரசுவை பார்த்து ‘இங்கே வா!’ என்பது போலக் கையை அசைத்தார்.
அவரை ஆச்சரியமாக ஒரு பார்வை பார்த்த அரசு, அவரின் அருகே சென்றான்.
நங்கையும் தந்தையை வியப்பாகப் பார்த்து அவனுக்கு வழி விட்டு விலகி நின்றாள்.
தன் அருகே வந்தவனின் ஒரு கையை எடுத்து தன் கைகளுக்குள் இறுக பற்றிக் கொண்டார்.
தன் கையில் அதிக அழுத்தத்தை உணர்ந்த அரசு அவர் அதிகம் உணர்ச்சி வசப்பட்டிருப்பதை அறிந்து கொண்டான்.
தன் இன்னொரு கையால் அவரின் கையின் மீது வைத்து அழுத்தி விட்டவன் “பயப்பட ஒன்னும் இல்லை மாமா. நீ நல்லா இருக்க. இதோ இப்ப வீட்டுக்குப் போய்றளாம்” என்று ஆறுதலாகச் சொன்னான்.
அவனின் ஆறுதலில் லேசாகக் கண் கலங்கிய மருதன் “நன்றிய்யா!” என்றார் மெதுவாக.
அவரை லேசாக முறைத்து பார்த்த அரசு “உன் மருமவனுக்கு நீ நன்றி சொல்லுவியா?” என்று உரிமையாக அதட்டினான்.
அவர்கள் இருவரையும் வாயை திறந்து “ஆ…!” என்று அதிர்ச்சியாகப் பார்த்தார்கள் நங்கையும், ஈஸ்வரியும்.
மருதன் எப்படி அவனிடம் நடந்து கொள்வாரோ என்று பயந்துக் கொண்டிருந்தவர்களுக்கு அவர்கள் இருவரும் உரிமையாகப் பேசிக் கொள்வதைப் பார்த்து வியக்காமல் என்ன செய்வார்கள்?
அவர்கள் வியந்து நிற்கும் போதே “மருதா…! என்னப்பா நீ இப்படிப் பயமுறித்திட்ட?” என்ற படி உள்ளே வந்தார் நாயகம்.
அவரின் குரல் கேட்டு ஆர்வமாக மருதன் வாசலை பார்க்க, இப்போது மீண்டும் என்ன நடக்குமோ என்ற பதைப்புடன் நின்றிருந்தார் ஈஸ்வரி.
நாயகம் வேகமாக மருதனின் அருகில் வந்தவர் “ஏன் மருதா இப்படிப் பண்ணின? விஷயம் கேள்வி பட்டதும் என் கொலையே நடுங்கி போச்சு. ஆத்துல தான் தண்ணி வரும்னு தெரியும்ல? அப்புறமும் ஏன் அதில் இறங்கி வரணும்? நம்ம நல்ல நேரம் உனக்கு ஒன்னும் ஆகலை. இல்லன்னா…?” என்று படபடப்பாகப் பேசிய படி மருதனின் தோளை பிடித்துத் தடவிக் கொடுத்தார்.
நாயகத்தின் வரவை எதிர்ப்பார்க்காத மருதன் ஒரு நொடி திகைத்து, அவர் உரிமையான அதட்டலில் நெகிழ்ந்து, பதில் பேச முடியாமல் லேசாகக் கண் கலங்கினார்.
அதைப் பார்த்து “அய்யோ…! என்னப்பா மருதா… எதுக்குக் கண் கலங்குற?” என்று நாயகம் பதறி கேட்டார்.
“என்னாச்சு ண்ணே…? உடம்புக்கு எதுவும் பண்ணுதா?” என்று வேணியும் பதட்டப்பட்டார்.
அவர்களை அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்த அரசு “அப்பா… மாமா ரொம்ப உணர்ச்சி வசப்பட்டிருக்கார். அதுதான்னு நினைக்கிறேன்” என்றான்.
அவன் சொன்னதைக் கேட்ட நாயகம் “அப்படியா மருதா? நான் வந்ததுல அதிர்ச்சி ஆகிட்டியா? என் நண்பன் உயிருக்கு போராடி பிழைச்சு வந்துருக்கான். அப்பயும் நான் பார்க்க வரலைனா நான் என்ன மனுஷன்…?” என்று மென்மையாகச் சொன்னார்.
“என்னை மன்னிச்சுரு நாயகம்!” என்றார் மருதவாணன்.
அவர் பேச்சுப் புரியாமல் “என்ன மருதா? இப்ப எதுக்கு மன்னிப்பு?” என்று கேட்டார்.
“சாவை நுனி வரைக்கும் தொட்டுட்டு வந்துட்டேன். இப்ப இருப்பமா? நாளைக்கு இருப்பமான்னு தெரியாம காரணமே இல்லாம சண்டை போட்டு, இத்தனை வருஷம் நல்ல நட்பை இழந்திருக்கேன். சாவை கண்ணில் பார்த்த அந்த நொடியில் உணர்ந்தேன். அய்யோ…! உங்க யாரையும் பார்க்காம போறனேன்னு. இப்ப உயிரோட உன் முன்னாடி படுத்திருக்கேன்னா அதுக்கு உன் பிள்ள தான் காரணம். அவன் மட்டும் பகை, சண்டையை எல்லாம் மனசுல வச்சுகிட்டு காப்பாத்தாம போயிருந்தான்னா என் பொணத்த தான் பார்த்துருப்பிங்க” என்று மருதன் சொல்ல…
“வாயிலேயே ஒன்னு போட போறேன் மருதா! என்ன வார்த்தை எல்லாம் சொல்ற?” என்று அதட்டினார் நாயகம்.
பிரிந்தவர்கள் கூடினால் அங்கே வார்த்தைக்குப் பஞ்சம் ஏது?
சாதாரணமாக ஆரம்பித்த பேச்சு பெரிய வாக்குவாதத்தில் ஆரம்பித்து, பெரிய பிரிவை கொண்டு வந்தது போல… ஒரு உயிரின் மதிப்பு அங்கே ஒற்றுமையைக் கொண்டு வந்தது.
மரணம் எந்த மனிதனையும் எப்படியும் மாற்றும் வல்லமை கொண்டது.
மரணப் பயத்தில் தன் நெருங்கிய சொந்தங்களைத் தேடுவது இயல்பு!
நாளைய நிலை எப்படி இருக்கும் என்று தெரியாமலேயே பிறர் மீது தேவை இல்லாமல் பகையை வளர்த்துக் கொள்கிறோம்.
நாற்பது வருடத்திற்கு மேலான கள்ளம் கபடற்ற நட்பு ஒரு சம்பவத்தால் முழுவதும் உடைந்து போகுமா என்ன?
நாயகத்திற்கும், மருதனுக்கும் இடையே சிறு பிரிவு வந்ததே தவிர அவர்களின் உண்மையான நட்பிற்கு உள்ளுக்குள் பிரிவே இல்லை என்பதை அடுத்தடுத்து வந்த சம்பவங்கள் நிரூபிக்கக் காத்திருந்தன.
இப்போது மருதனும், நாயகமும் உரிமையாகப் பேசிக் கொண்டதில் அவர்களின் விலகல் எல்லாம் அவர்களை விட்டு விலகி ஓட அங்கே நட்பு தன் தடத்தைப் பதித்தது.
சிறிது நேரம் அனைவரும் நலம் விசாரித்துப் பேசிவிட்டு வீட்டிற்குக் கிளம்பத் தயாரானார்கள்.
முருகனுடன் காரில் வந்ததால் மருதனை காரில் அழைத்துக் கொண்டு அவர்களில் வீட்டிற்குச் சென்றார்கள்.
மருதன் வீடு கட்டிய பிறகு அப்பொழுது தான் முதன் முதலில் நாயகம் அங்கே வருவதால் “வா நாயகம்… நீ இங்கே வர இத்தனை வருசம் ஆகணும்னு இருந்திருக்கு போல?” என்று வருத்தமாகச் சொன்னார் மருதன்.
“அதுக்கு என்ன மருதா…? இப்பவாவது வர முடிஞ்சுதேன்னு சந்தோஷப்பட்டுக்க வேண்டியது தான்” என்ற படி உள்ளே நுழைந்தார் நாயகம்.
நாயகமும், அரசுவும் கைத்தாங்களாக மருதனை அழைத்துச் சென்று கட்டிலில் சாய்ந்து அமர வைத்தார்கள். பாதம் முழுவதும் கட்டுப் போடப்பட்டு இருந்ததால் வசதியாகத் தலையணையைக் காலுக்கு வைத்து விட்டான் அரசு.
வருடம் கழித்து அவர்கள் தங்கள் வீட்டிற்கு வந்திருப்பதால் கையும் ஓடாமல், காலும் ஓடாமல் என்பது போலப் பரபரக்க வரவேற்று அவர்களை அமர வைத்த ஈஸ்வரி குடிக்க எடுத்து வந்து கொடுத்தார்.
இவ்வளவு பரபரப்பு இருந்தும் அதில் எதிலும் கலந்து கொள்ளாமல் அமைதியாக ஒரு ஓரமாகச் சென்று அமர்ந்தாள் பவளநங்கை.
அனைவரும் உணர்ச்சி வசப்பட்டதெல்லாம் முடிந்த பிறகு நங்கையைக் கவனித்த வேணி அவள் இதுவரை ஒரு வார்த்தை கூடப் பேசாததை உணர்ந்து “என்னடா பவளம்! எங்க கூடப் பேச மாட்டியா?” என்று கேட்டார்.
அரசுவும் அவளைக் கேள்வியாகப் பார்த்தான். நாயகமும் “பவளம் பெருசா வளர்ந்துட்டால…அதான் பேச தயக்கம் போல” என்றார்.
நாயகத்தையும், வேணியையும் அமைதியாகப் பார்த்த நங்கை “உங்க இரண்டு பேருக்கும் இப்ப தான் என் ஞாபகம் வந்ததாக்கும்?” என்று கேட்டு முகத்தைத் திருப்பினாள்.
‘இந்தச் சில்வண்டுக்குக் கொழுப்பை பாரு. அம்மா, அப்பாகிட்ட போய் முகத்தைத் திருப்புறா’ என்று அரசு மனதிற்குள் அவளைக் கடிந்து கொண்டான் என்றால், மருதன் சத்தமாகவே கடிந்தார்.
“பவளம்… என்ன பேச்சு இது? மாமா, அத்தைகிட்ட மரியாதையா பேசு!” என்றார்.
அவர் அப்படிச் சொன்னதும் பட்டெனச் நாற்காலியில் இருந்து எழுந்தவள் “நீங்க பேசுனா… பேசணும். பேசாதேனா… பேசக்கூடாது. அப்படித் தானே? எனக்குன்னு எந்த உணர்ச்சியும் இருக்கக் கூடாது” என்று கோபமாகப் பொரிந்தவள் தன் அறைக்குள் கோபமாக நுழைந்துக் கொண்டாள்.
அவளின் கோபத்தைப் பார்த்து எல்லாரும் ஒரு நொடி அதிர்ந்தே போயினர்.
“அடியே…!” என்று ஈஸ்வரி சத்தம் கொடுத்தார்.
எல்லாரும் அவள் சென்ற திசையையே அதிர்ச்சியாகப் பார்த்துக் கொண்டிருக்கும் போதே போன வேகத்தில் திரும்பி வந்த நங்கை வேணியின் அருகில் வந்து வேகமாக அவரைக் கட்டி அணைத்துக் கொண்டவள் சத்தம் போட்டு அழ ஆரம்பித்தாள்.
“நீ கூட என்னை ஒதுக்கி வச்சுட்டேல அத்தை?” என்று கேட்டுக் கொண்டே அழுதாள்.
அவளை ஆறுதலாக அணைத்துக் கொண்ட வேணிக்கு என்ன பதில் சொல்வது என்றே தெரியவில்லை. அவரும் அவளை அணைத்துக் கொண்டு கண்ணீர் விட்டார்.
அவர்கள் இருவரின் அருகிலும் வந்த நாயகம், நங்கையின் தலையில் கைவைத்துப் பாசமாகத் தடவிக் கொடுத்தார்.
மருதனும், ஈஸ்வரியும் கண்கள் கலங்கியபடி அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
அவர்களுக்கு எதிரே இருந்த சுவரில் சாய்ந்து நின்றிருந்த அரசு தன் கைகளை இறுக கட்டிக் கொண்டு அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தான்.
தான் மட்டும் தனியே இருப்பது போல அவனுக்குத் தோன்றியது. தான் என்ன உணர்வில் ஆட் கொண்டுள்ளோம் என்று புரியாத வகையில் இறுகி போய் இருந்தது அவனின் முகம்.
அவளின் அழுகை விடாமல் தொடரவும், “தப்பு தான்டா… மன்னிச்சுரு! என் பவளம் நல்ல பொண்ணு இல்ல. அழாதேடா!” என்று வேணி குழந்தையைச் சமாதானப் படுத்துவது போலக் கொஞ்சி சமாதானப் படுத்தினார்.
“பவளம் அழாதேமா!” என்று நாயகமும் சொல்ல… அவளின் அழுகை சிறிதும் குறையவில்லை. இத்தனை நாட்களும் அவர்களுடன் பேசாமல் இருந்தது அவளுக்குச் சாதாரண விஷயமாக இல்லை.
தூரத்தில் அவர்களைப் பார்த்தாலும் பேச முடியாமல் விலகியவள் இப்பொழுது அவர்களை இவ்வளவு அருகில் பார்த்ததும், சிறு குழந்தையாகவே மாறி தேம்பி அழ ஆரம்பித்தாள்.
மருதனுக்கு அவளின் அழுகையைப் பார்த்து மனது உறுத்தியது.
ஈஸ்வரி மகளின் தவிப்பை அறிந்தவர் தானே. அதனால் தானும் கண்ணீர் விட்டப் படி இருந்தார்.
நங்கையின் அழுகை விடாமல் தொடரவும், அவ்வளவு நேரம் அமைதியாக இருந்த தமிழரசன் “அப்பா, அம்மா வாங்க போகலாம்! இனி ஒரு நிமிஷம் கூட இங்க இருக்க முடியாது” என்றான்.
அவனின் பேச்சை கேட்டு இப்பொழுது அனைவரும் அவனைப் பார்த்து ‘இவனுக்கு இப்ப என்னாச்சு?’ என்பதுபோல அதிர்ந்து பார்க்க… வேணியின் தோளில் சாய்ந்து அழுது கரைந்தவள் சட்டென முகத்தை நிமிர்த்தி அவனைக் கண்ணீர் கண்களுடன் முறைத்து பார்த்தாள் பவளநங்கை.
“எய்யா தமிழு! உனக்கு என்னய்யா கோபம்?” என்று ஈஸ்வரி பதறி போய்க் கேட்டார்.
“பின்ன என்ன அத்த? ரொம்ப வருஷம் கழிச்சு உங்க வீட்டுக்கு வந்திருக்கோம். சந்தோஷமா எங்களை வரவேற்காம இப்படி அழுதா எப்படி?” என்று கிண்டலாகக் கேட்டான்.
அவனின் கேலியில் ஆசுவாசமாக மூச்சு விட்ட ஈஸ்வரி “தம்பி சொல்றதும் சரிதானே? பவளம் போ…! போய் முகத்தைக் கழுவிட்டு வா!” என்று ஒரு அதட்டல் போட்டார்.
அம்மாவையும், அரசுவையும் ஒருசேர முறைத்த நங்கை, வேணியிடம் திரும்பி “உங்க பிள்ளைக்குப் பொறாமை அத்தை… நான் உங்க மேல சாஞ்சிருக்கேன்னு” என்று சொல்லிவிட்டு திரும்ப வேணியின் மீது சாய்ந்துக் கொண்டாள். ஆனால் அவளின் அழுகை நின்றிருந்தது.
வேணியும் மகனை கேலியாகப் பார்த்து விட்டு “ஆமாடா பவளம்!” என்றார்.
அவர்களின் கேலியை பார்த்து முறைப்பது போலக் காட்டிக் கொண்டாலும் அவளின் அழுகை நின்றதில் நிம்மதியாக உணர்ந்தான்.
பின்பு சிறிது நேரம் அங்கே ஒரு பாச போராட்டம் நடந்து முடிந்தது.
மருதனின் விஷயம் கேள்விப்பட்டு ஊர்க்காரர்கள் பலர் அவரைப் பார்க்க வர, போக என்று அடுத்து வந்த இரண்டு நாட்கள் சென்றன.
நாயகமும், வேணியும் தினமும் வந்து பார்த்து விட்டுச் சென்றார்கள்.
அடுத்து வந்த ஒரு வாரத்தில் அரசு இரண்டு முறை மட்டுமே அங்கே வந்தான். அவனின் வேலைகள் வர நேரம் இல்லாமல் செய்திருந்தன.
அப்படி வந்த இரண்டு முறையும் ‘வாங்க’ என்று கூட அழைக்காமல் அவனை முறைத்து விட்டு ஒதுங்கிச் சென்றாள் நங்கை.
அவளின் முறைப்பை கண்டு இன்னும் எத்தனை நாள் உனக்கு இந்த வீம்புன்னு நானும் பார்க்கிறேன் என்பது போல அவளைப் பார்த்து ரகசிய சிரிப்பை ஒன்றை சிந்தி விட்டு செல்வான்.
கனிமொழிக்கு விஷயம் தெரிந்து இரு குடும்பமும் பேசிக் கொண்டதில் சந்தோஷப்பட்டாள்.
அடுத்த நாட்களில் மழையும் குறைந்திருந்ததால் விவசாய மக்கள் வருத்தத்துடன் அடுத்துச் செய்ய வேண்டிய வேலைகளில் ஈடு பட்டார்கள்.
அன்று நாயகமும், மருதனும் சில பழைய கதைகளைப் பேசிக் கொண்டிருக்க வேணியும், ஈஷ்வரியும் சமையலறையில் இருந்தார்கள்.
நங்கை அம்மாவையும், அத்தையையும் வேலை வாங்குபவள் போலச் சமயலறையில் ஒரு நாற்காலியை எடுத்து போட்டு அமர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டு வேணி கொண்டு வந்து கொடுத்த பலகாரத்தை வாயில் போட்டு மென்று கொண்டிருந்தாள்.
அப்போது வெளியே பேசிக் கொண்டிருந்த மருதனின் பேச்சுக் காதில் விழ பலகாரம் தொண்டைக் குழியில் சிக்கிக் கொண்டதை போல வாயை திறந்த படி “ஆ…!” என அதிர்ந்தே போனாள்.
அங்கே “என் பொண்ணு பவளத்தை உன் பையனுக்குக் கட்டி வைப்பியா நாயகம்?” என்று கேட்டுக் கொண்டிருந்தார் மருதவாணன்.
மருதன் நாயகத்திடம் கேட்ட கேள்வியில் நங்கை வாயை பிளந்து அதிர்ந்து போக… வேணியும், ஈஷ்வரியும் தங்கள் காதில் கேட்ட செய்தியில் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துச் சந்தோஷமாகச் சிரித்துக் கொண்டார்கள்.
ஈஸ்வரியின் கையைப் பற்றிக் கொண்ட வேணி, அதிர்ந்து அமர்ந்திருந்த நங்கையின் அருகில் வந்து அவளின் கன்னத்தைத் தடவி விட்டு தன் கையை முத்தமிடுவது போல வைத்தார்.
அவர் கை தன் மேல் பட்டதும் திறந்திருந்த வாயை மூடியவள் வேணியைப் பார்த்தாள்.
அவர்கள் இவளை கவனியாது வெளியே சென்று கொண்டிருந்தார்கள்.
மருதன் கேட்ட கேள்விக்குப் பதிலாக “நீ கேட்டதில் எனக்கு ரொம்பச் சந்தோஷம் மருதா! ஆனா… நம்ம பிள்ளைக விருப்பம் என்னனு ஒரு வார்த்தை கேட்கணுமேப்பா? அவங்க இரண்டு பேரும் சம்மதம் சொல்லிட்டா சந்தோஷமா கல்யாணத்தை முடிச்சு வச்சுறுவோம்” என்றார் நாயகம்.
“சரிதான் நாயகம். இப்பயே கேட்டுருவோம்” என்றார் மருதன்.
“அதுக்கு முன்ன நம்ம வீட்டு பொம்பளககிட்ட கேட்டுருவோம்” என்ற நாயகம் அங்கே வந்த வேணியிடம் “என்னம்மா நீ என்ன சொல்ற? என்று கேட்டார்.
“எனக்கு உடனே கல்யாணம் வச்சா கூடச் சரிதாங்க” என்றார் வேணி.
மருதன் அங்கே வந்த ஈஸ்வரியிடம் “உனக்கு என்ன தோணுது ஈஸ்வரி?” என்று கேட்டார்.
“ரொம்பச் சந்தோஷம்ங்க” என்று மட்டும் சொன்ன ஈஸ்வரி லேசாகக் கண் கலங்கினார்.
இவர்கள் எல்லாம் மகிழ்ச்சியாகப் பேசிக் கொண்டிருக்க, இவர்களின் பேச்சுக்கு சம்பந்தப்பட்டவளோ உள்ளே முகம் இறுக அமர்ந்திருந்தாள்.
தமிழரசனை மனதில் குடியேற்றிய நாள் முதல் இந்த நாள் வராதா என்று ஏங்கி தவித்தவள் தான். ஆனால் இப்போது ஏனோ சந்தோஷப்பட முடியாமல் அவள் மனம் வலித்தது.
தான் மட்டும் அவனை விரும்பி என்ன செய்ய? அவனும் தன்னை விரும்ப வேண்டாமா? இன்னொருத்தனை தனக்கு மாப்பிள்ளையாகப் போகச் சொன்னவனிடம் எப்படித் தன் மீது நேசம் இருக்கும் என்று நினைக்க முடியும்.
தன்னை விரும்பாதவனைத் தான் மணப்பதா? என்று கேள்வி அவள் மூளையையும், மனதையும் போட்டுக் குடைந்தது.
இவ்வாறு யோசனையில் இருந்தவளை அழைத்த படி உள்ளே வந்தார் ஈஸ்வரி, கூடவே வேணியும்.
தன் எதிரே நின்ற இருவரையும் பார்த்தவள் தானும் எழுந்து நின்றாள்.
அவளின் அருகே வந்த வேணி அவளின் கையை எடுத்து தன் கைகளுக்குள் வைத்துக் கொண்டு “அம்மாடி பவளம்! வெளியே பேசியதை கேட்டீல? உனக்குச் சம்மதம் தானேமா?” என்று கேட்டார்.
கனி ஏற்கனவே நங்கை அரசுவை விரும்புவதாக யூகித்துச் சொல்லியிருந்தாலும் நங்கையின் வாயால் அவளின் விருப்பத்தை அறிய விரும்பினார்.
வேணி கேட்ட கேள்வியைத் தன் முகத்திலும் தாங்கிய படி அவளை ஆர்வமாகப் பார்த்தார் ஈஸ்வரி.
இருவரின் ஆர்வமும் புரிந்தாலும், மனம் நிறைய அரசுவின் மீது நேசம் இருந்தாலும், தன் பதில் இப்போது முக்கியமில்லை என்றே அவளுக்குப் பட்டது.
அதனால் தன் மனதை மறைத்து வேணியைப் பார்த்தவள் “அத்தை! நீங்க பேசிக்கிட்டது கேட்டுச்சு. ஆனா முதலில் சம்மதம் கேட்க வேண்டியது என்கிட்ட இல்லை. உங்க பிள்ளைகிட்ட. முதலில் அவங்க என்ன சொல்றாங்கன்னு கேட்டுட்டு வாங்க! அப்புறம் என் பதில் சொல்றேன்” என்றாள்.
அவள் சம்மதத்தை ஆவலாக எதிர்பார்த்த அன்னையர் இருவருக்கும் சொத்தென ஆனது.
ஆனாலும் விடாமல் “தமிழ்க்கிட்டயும் கேட்க தான் போறோம் பவளம். இப்ப நீ சொல்லு!” என்றார் ஈஸ்வரி.
“எம்மா… ப்ளீஸ்! இதில என்கூட வாக்குவாதம் பண்ணாம நான் சொல்றதை கேளேன்!” என்றாள் இறைஞ்சுதலாக.
எப்போதும் இல்லாத அளவில் அவளின் குரலில் தெரிந்த கெஞ்சுதலில் மகள் முகத்தைக் கவனித்துப் பார்த்தார். அவள் முகத்தில் தெரிந்த சோர்வுடன் கூடிய கெஞ்சுதல் மனதிற்கு ஏதோ சரியில்லை என்று பட்டது. அதோடு சென்ற ஒரு மாதமாக மகளிடம் தெரியும் அமைதி. எல்லாம் சேர்ந்து இவளுக்கு என்ன பிரச்சினையோ என்று மனது பதறியது. ஆனாலும் வேணி அருகில் இருக்க எப்படி மகளிடம் அதற்கு மேல் வாதாட என்று நினைத்து அமைதியானார்.
ஆனால் வேணியால் அமைதியாக இருக்க முடியவில்லை. ஏன்னென்றால் அவளின் மனம் என்னவென்று கனியின் மூலம் அறிந்தவர் ஆயிற்றே. அதனால் அவள் சம்மதம் உடனே சொல்லுவாள் என்று எதிர்பார்த்தார். ஆனால் அவளின் பதில் அவர் எதிர்பாராதது.
அதனால் “ஏன்டா… நீ தான் முதல சொல்லேன். உன்னை இப்பயே கூட மருமகளா என் வீட்டுக்கு கூட்டிட்டுப் போகத் தயாரா இந்த அத்தை ஆசையா இருக்கேன்” என்றார்.
அவரின் பேச்சில் உள்ளுக்குள் விரக்தியாகச் சிரித்தவள் ‘நீங்க மட்டும் ஆசைபட்டு என்ன பண்றது அத்தை?’ என்று மனதிற்குள் கேட்டுக் கொண்டாள்.
அவளுக்கும் தான் அந்த ஆசை மலையளவு இருக்கிறது. ஆனால்? என்று கேள்விக்குறியுடன் எண்ணியவள், தன் கையை எடுத்து அவரின் தோளில் வைத்தவள் “அத்தை இப்ப கூட நானும் உங்க வீட்டுக்கு வர தயாரா இருக்கேன். ஆனா அது மருமகளா வர்றதா? இல்ல வெறும் உங்க பவளமா வர்றதான்னு உங்க பிள்ளை சொல்லட்டும். சரியா?” என்று தலை சாய்த்து கேட்டாள்.
என்ன சொல்லுவார் வேணி? அவள் இவ்வளவு பிடிவாதமாகச் சொல்லும் போது அவருக்கும் வழி இல்லாமல் ‘சரி’ என்றார்.
ஆனால் அப்போது தான் இன்னொன்றையும் கவனித்தார். அவளின் வாயில் இருந்து ‘மாமா’ என்ற சொல்லே வர வில்லை. அவருக்குத் தெரிந்து சிறுவயதில் பேசும் போது தமிழை அவள் மாமா என்ற அழைப்பு இல்லாமல் பேசியது இல்லை. ஆனால் இப்போது எதற்கெடுத்தாலும் அவள் உங்க பிள்ளை என்றுதான் சொல்கிறாள் என்பது உரைக்க… ‘ஏன் அப்படி அழைக்கிறாள்?’ என்று புரியாமல் குழம்பி போனார். ஒரு வேளை தங்களுக்குத் தெரியாமல் இருவருக்கும் எதுவும் சண்டையா? என்று நினைத்து திடுக்கிட்டுப் போனார்.
அன்று அவரின் மகன் செய்து வைத்த வேலை இன்னும் அவருக்குத் தெரியவில்லை. கனி தனக்குத் தெரிந்ததை அம்மா கவலைப்படுவார் என்று நினைத்து முதலில் சொல்லாமல் இருந்தாள். அதோடு அடுத்தடுத்து மழை, பயிர்கள் நாசம், மருதன் உடல் நிலை என எல்லாம் சேர்ந்து அவளும் அதைச் சொல்ல சந்தர்ப்பம் அமையவில்லை.
ஏற்கனவே கனி, நங்கையைத் திருமணம் செய்ய அரசுவிடம் கேட்ட போது மறுத்திருக்கின்றான். அதனால் தான் இப்போதும் ஒருவேளை அவன் மறுத்தால் என்ன செய்வது? என்று தான் முதலில் நங்கையின் சம்மதம் வாங்கி விட வேண்டும் என்று நினைத்தார். அவள் சம்மதம் சொல்லிவிட்டால் மகனை சுலபமாகச் சம்மதிக்க வைத்து விடலாம் என்று வேணி நினைக்க, நங்கையின் பதில் அவரை வருத்தத்தில் ஆழ்த்தியது.
அவரின் முகத்தில் வருத்தத்தைக் கண்டு “என்ன அத்தை… என் மேல கோபமா?” என்று கேட்டாள்.
“ச்சே… ச்சே…! இல்லடா பவளம்! நீ சம்மதம் சொல்லுவேனு ஆசையா இருந்தேனா? நீ இப்படிச் சொல்லவும் கொஞ்சம் கஷ்டமா இருந்துச்சு. வேற ஒன்னும் இல்ல. இப்ப என்ன தமிழ்க்கிட்ட உடனே சம்மதம் வாங்கிட்டு வந்து உன் சம்மதத்தைத் தெரிஞ்சுக்கிறேன்” என்றார்.
நங்கை அவரைப் பரிதாபமாகப் பார்த்தாள். ‘அவன் வேண்டாம் என்று சொல்லும் போது நீங்க அதைத் தாங்கிக்கணுமே அத்தை’ என்று நினைத்தவள் அமைதியாகப் போய் அமர்ந்தாள்.
இவள் சொன்னதை மருதனுக்கும், நாயகத்திற்கும் சொல்ல போனார்கள் அன்னையர்கள்.
தமிழரசனுக்கு முன் தான் சம்மதம் சொல்லி அதை அவன் மறுத்து விட்டால் அதை விடத் தனக்கு அவமானம் ஏதும் இல்லை என்று நினைத்தாள். அவன் எப்படியும் வேண்டாம் என்று தான் சொல்ல போகின்றான் என்று ஸ்திரமாக நம்பினாள். ஆனால் அவன் அதைச் சொல்லும் போது தாங்கும் சக்தி தனக்கு இருக்கின்றதா? என்று எண்ணியவளுக்கு மனம் ரணமாக வலித்தது.
சத்தம் போட்டு அழுது விட வேண்டும் போலத் தோன்றியது. ஆனால் வீட்டில் இத்தனை பேர் இருக்கும் போது தான் அதை இப்போது செய்ய முடியாதே என்று தன்னை அடக்கிக் கொண்டு அமர்ந்திருந்தாள்.
நங்கையின் பதிலுக்கு ஆவலாகக் காத்திருந்த மருதனுக்கு ஏமாற்றமாக இருந்தது. “ஏன் இப்பயே சொல்ல வேண்டியது தானே?” என்று ஈஸ்வரியிடம் கோபப்பட்டார்.
“விடு மருதா! இதில என்ன இருக்கு? முதல அவ மாமன் சம்மதத்தைத் தெரிஞ்சுக்க ஆசைப்படுறா போல. இப்ப கொஞ்ச நேரத்தில் தமிழ் வர்றேன்னு சொல்லிருக்கான். அவன்கிட்டயே கேட்டுருவோம்” என்றார் நாயகம்.
‘என்ன… இங்க வச்சு கேட்க போறாங்களா?’ என்று திடுக்கிட்டு போனாள் நங்கை. எல்லோரின் முன்னாலும் அவன் வேண்டாம் என்று சொன்னால் என்னாவது? திரும்பவும் இவர்களுக்குள் பிரச்சனை வந்து விட்டால் என்ன செய்வது? என்று பயந்தே போனாள்.
‘அதுவும் அவன் சம்மதம் இல்லை என்று சொல்லப்போவது தன் காதில் விழுந்தால் அதை நான் தாங்குவேனா?’ என்று தனக்குள் புலம்பி வருத்தப்பட்டவள் காதில் “வாய்யா தமிழு!” என்று ஈஸ்வரி வரவேற்பது கேட்டது.
‘அய்யோ…! வந்துட்டானே… என்ன ஆகப் போகுதோ?’ என்று நினைத்து நகங்களைப் பதட்டமாகக் கடிக்க ஆரம்பித்தாள்.
“வர்றேன் அத்த! என்ன மாமா காலு வலி எப்படி இருக்கு?” விசாரித்த படி அவரின் எதிரே அமர்ந்தான்.
“இப்ப பரவாயில்லைய்யா! வலி கொஞ்சம் குறைஞ்சிருக்கு” என்றார்.
“சரி மாமா!” என்றவன், தன் தந்தையின் புறம் திரும்பி “மாமாவுக்கு இன்னும் என் மேல கோபம் போகலை போல இருக்குப்பா!” என்றான்.
அவன் அப்படிச் சொல்லவும் “என்ன தமிழு சொல்ற?” என்று நாயகமும், “என்னய்யா சொல்ற? அப்படியெல்லாம் ஒன்னும் இல்லை. உன் மேல எனக்கு எந்தக் கோபமும் இல்லைய்யா” என்றார் மருதன்.
“கோபம் இல்லைன்னு உங்க வாய் வார்த்தை தான் சொல்லுது. ஆனா உள்ளத்தில் இருந்து சொல்லலையே?” என்றான்.
“என்னய்யா குழப்புற? நான் நிஜமாதான் சொன்னேன். எனக்குக் கோபமெல்லாம் இல்லை” என்றார் மருதன் திரும்பவும்.
“கோபம் இல்லைனா இந்நேரம் உங்க வாயில் இருந்து மருமகனேன்ற வார்த்தை வந்துருக்குமே? ஆனா நீங்க என்னை அப்படிக் கூப்பிடவே இல்லை” என்றவன் தொடர்ந்து, “உங்க கோபமும் நியாயம் தான். சின்ன வயசுல நான் உங்களை அடிக்கக் கை ஓங்கினது பெரிய தப்பு மாமா. அப்ப என்ன செய்றோம்னு தெரியாமையே செய்துட்டேன்.
உங்க வயசுக்காவது மரியாதை கொடுத்துருக்கணும். இது முன்னாடியே கேட்டுருக்க வேண்டிய மன்னிப்பு. ஆனா சூழ்நிலையால இப்ப கேட்குறேன். என்னை மன்னிச்சுருங்க” என்று எழுந்து நின்று அவரின் நீட்டி இருந்த காலை தொட்டான்.
“எய்யா தமிழு… என்னய்யா? காலை எல்லாம் தொட்டுக்கிட்டு? விடுய்யா! அப்ப நானும் தான் வரைமுறை தெரியாம பேசிட்டேன். என் மேலயும் தப்பு இருக்கு. அப்போ ஏதோ விரக்தி. என்னை என்ன எல்லாமோ பேச வைச்சுருச்சு” என்று வருந்தினார்.
“மருதா… இப்ப எதுக்குப் பழைய கதை எல்லாம்? விட்டு தள்ளு!” என்றார் நாயகம்.
“சரி நாயகம்!” என்ற மருதன் “நீயும் விட்டுருய்யா. பழசை எல்லாம் தோண்டி துருவ வேண்டாம்” என்றார்.
அவர்கள் பேசிக் கொண்டதை கேட்ட நங்கைக்குக் காதில் விழுந்த செய்தி புதிது. அவளுக்குச் சிறுவயதில் அவன் தன் அப்பாவை அடிக்கக் கை ஓங்கியது தெரியாது. இரண்டு குடும்பத்திற்கு என்ன பிரச்சனை? ஏன் சண்டை? என்று ஊர்க்காரர்கள் கேள்வி எழுப்பிய போது, மருதனுக்கும், நாயகத்திற்கும் வாக்குவாதம் முத்தி நாயகம், மருதனை அடிக்க வந்துட்டாராம். அதான் இப்ப பேசிக்கிறது இல்லை என்று தான் அவளுக்குத் தெரியும். அதைத் தான் இத்தனை நாள் அவளும் நம்பிக் கொண்டிருந்தாள்.
அவள் தன் அம்மாவிடம் வேறு எதுவும் விவரம் கேட்டுருக்க வில்லை. என்ன நடந்தது என்று கேட்கும் பக்குவமும் அப்போது அவளுக்கு இல்லை. அவளுக்குத் தெரிந்தது எல்லாம் இரு குடும்பமும் சண்டையில் பிரிந்து விட்டது. இனி அத்தை மாமா, தமிழு மாமா, கனி மதினிகிட்ட பேச முடியாது. எப்படி நான் பேசாமல் இருப்பேன் என்ற எண்ணம் மட்டுமே தான் அப்போது குழந்தை நங்கைக்கு இருந்தது. இப்போது இப்படி ஒரு விஷயம் கேள்விப் படவும்,
‘என்ன? என் அப்பாவை அடிக்கக் கை ஓங்கினா? அய்யோ…! இது கூடத் தெரியாம தான் அவன் பின்னாடி சுத்திக்கிட்டு திரிஞ்சேனா?’ என்று தன் தலையில் ஒரு அடி அடித்துக் கொண்டவள் முகத்தில் கோபம் தான் வந்து போனது.
இன்னும் வெளியே பேச்சு நடந்து கொண்டிருந்தது. “விட்டுறலாம் மாமா! ஆனா நீங்க இன்னும் என்னை மருமகன்னு கூப்பிடலையே ஏன்?” என்று தமிழ், மருதனிடம் கேட்டுக் கொண்டிருந்தான்.
அவன் பேச்சின் காரணம் புரிய “இவ்வளவு தானா? நான் கூட என்னமோ? ஏதோனு நினைச்சுப் பயந்துட்டேன்” என்ற மருதன் தொடர்ந்து “என் மகளைக் கட்டிக்கிறேன்னு சொல்லுங்க… இப்பயே மருமகனேன்னு வாய் நிறையக் கூப்பிடுறேன்” என்று பட்டென விசயத்தைப் போட்டுடைத்தார்.
அவர்களின் பேச்சை கேட்டுக் கொண்டிருந்த நங்கைக்கு இது என்ன கனவா? என்றுதான் தோன்றியது. இருவரும் உரிமையாகப் பேசிக் கொள்வது அவளுக்கு வியப்பாக இருந்தது. அதோடு தன் தந்தை இப்படி விஷயத்தைப் பட்டெனப் போட்டுடைப்பார் என்று கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.
அவளின் தந்தை இப்படிப் பேசக் கூடியவர் இல்லை என்றே அவள் நினைத்தாள். ஆனால் இதுயெல்லாம் ஒரு அதிர்ச்சியா என்பது போல அடுத்து கேட்ட வார்த்தையில் ஸ்தம்பித்துப் போனாள் பவளநங்கை.
ஏன்னென்றால் “நாளைக்கே கூடக் கட்டிக்கிறேன் மாமா!” என்று சொல்லிக் கொண்டிருந்தான் பைந்தமிழரசன்.
என்ன? என்ன? நிஜமாகவே அவன் சம்மதம் சொன்னானா? தன் காதில் விழுந்த வார்த்தைகள் உண்மையா? என்று அதிர்ந்து போனவளின் கைகள் அந்தரத்தில் நின்றன.
எப்படி…? எப்படி…? இது சாத்தியம்? தன்னை வேறு ஒருவனுக்கு மணம் முடித்து வைக்க நினைத்தவன் எப்படிச் சம்மதம் சொன்னான்? என்று தனக்குள் பல கேள்விகள் கேட்டுக் கொண்டாள்.
இவள் இங்கே குழம்பிக் கொண்டிருக்க வெளியே பெற்றவர்கள் அவனின் பதிலில் குளிர்ந்து போய்ச் சந்தோஷமாக இருந்தார்கள்.
அவன் சம்மதம் கிடைத்ததும் சந்தோசமாக உள்ளே ஓடி வந்தார் ஈஸ்வரி.
“பவளம், தமிழு சம்மதம் சொல்லியாச்சுடி! இப்ப உன் பதிலை சொல்லு!” என்ற படி எதிரே நின்றார்.
தன் அன்னையை எந்தச் சலனமும் இல்லாமல் பார்த்து “எனக்குச் சம்மதம் இல்லம்மா” என்று நிதானமாகச் சொன்னாள் பவளநங்கை.