கண்கள் தேடுது தஞ்சம் – 25

Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels

அத்தியாயம் – 25

சருகாய் பறந்து பத்து நாட்கள் சென்றிருந்தன.

இந்தப் பத்து நாட்களும் நங்கை அரசுவிடம் சொல்லி விட்டு வந்தது போல வயல் பக்கமே செல்லவில்லை.

மறுநாள் வந்து நேற்று என்ன ஆயிற்று என்று விசாரித்த வாணியிடம் முதல் நாள் கதிர்வேல் சொன்னதையும், அன்று மாலை அரசுவிடம் தான் பேசியதையும் சொன்னவள் இனி அவனைப் பார்க்க போக மாட்டேன் என்றும் சொன்னாள்‌.

“அவசரப் பட்டு முடிவெடுக்காதே நங்கை! இன்னோரு நாள் ஏன் இப்படிச் செய்தாங்கன்னு போய்க் கேட்டுட்டு வந்துரு!” என்று வாணி சொன்னதைக் காதிலே வாங்கிக் கொள்ளவில்லை.

“ப்ச்ச்…! போ வாணி!” என்று சலித்துக் கொண்ட நங்கை, “இந்தப் பத்து வருஷமா ஏதோ வேண்டுதல் போல அவனைப் பார்க்க நான் ஓடினதெல்லாம் போதும்! இதுக்கு மேல இதைத் தொடர என் மனசில் தெம்பில்லை. எப்போ அவன் கதிர்வேல்கிட்ட போய் அப்படிப் பேசினானோ அப்பயே எல்லாம் விட்டுப்போனது போல இருக்கு” என்று வருத்தமாகச் சொன்னாள்.

“எல்லாம் சரி தான் நங்கை! ஆனா நீ இன்னும் உன் காதலை சொல்லையே? நீ அவங்களைக் காதலிக்கிறது தெரியாம உன் வாழ்க்கை நல்லா இருக்கணும்னு நினைச்சு கூடக் கதிர்வேலு கிட்ட போய் அப்படிப் பேசிருக்கலாம்ல?” என்று வாணி எடுத்து சொல்ல… அவளை மௌனமாகப் பார்த்தாள் நங்கை.

அவள் பார்வை புரியாமல் “என்னடி? எதுக்கு இப்படிப் பார்க்குற?” என்று கேட்டாள்.

“என் மனசு என்னனு என் மாமனுக்குத் தெரியாம இருக்கும்னு நினைச்சியா வாணி? என்னோட சிறு முக மாற்றத்துக்கும் அதால அர்த்தம் கண்டு பிடிக்க முடியும். அப்படி இருக்கும் போது ஒரு இரண்டு வருஷமா அதை என் மனசுல சுமக்க ஆரம்பிச்சதையும் எப்படியும் கண்டு பிடிச்சிருக்கும். வாயால நான் சொன்னதில்லையே தவிர என் மாமனை நான் பார்க்கும் பார்வை மாற்றத்தை வைத்தே அதால புரிஞ்சுக்க முடிஞ்சிருக்கும். ஆனா அப்படிப் புரிஞ்சியிருந்தும் கதிர்வேல்கிட்ட போய் அப்படிப் பேசியதை தான் என்னால தாங்க முடியலை” என்று வலியை தாங்கி வந்த அவளின் வார்த்தையைக் கேட்டு வாணிக்கும் கஷ்டமாக இருந்தது.

ஆனால் இவளால் மட்டும் என்ன செய்ய முடியும். அதுவும் இவர்கள் குடும்பம் இருக்கும் நிலையில் இவளின் காதல் எப்படிக் கை கூடப் போகின்றதோ? என்று வேறு வாணிக்கு கவலையைத் தந்தது.

சிறிது நேரம் நங்கையிடம் பேசி சமாதானப் படுத்தியவள் தன் வீட்டிற்குக் கிளம்பி சென்றாள்.

அந்தப் பத்து நாட்களும் அவ்வப்போது வந்து பார்த்து விட்டுச் சென்றாள் வாணி.

நங்கை வெளியே செல்லாமல் வீட்டிற்குள்ளேயே வலம் வந்தாள். வீரமாக அவனிடம் பேசிவிட்டு வந்து விட்டாலும் மீண்டும் அரசுவை சென்று பார்க்க அவளின் நேசம் கொண்ட மனம் துடித்தது. ஆனால் தன்னை அடக்கிக் கொண்டாள்.

அது மட்டும் இல்லாமல் மாலை ஆனதும் வயலுக்குச் செல்ல பரபரத்த கால்களைக் கட்டுப்படுத்துவதே அவளுக்குப் பெரும் பாடாய் இருந்தது.

அது மழை காலம் ஆதலால் ஊரில் அடிக்கடி மழை பெய்து கொண்டிருந்தது.

முதலில் நங்கை வழக்கமாகச் செல்வது போல் வெளியே செல்லாமல் இருப்பதே மழை பெய்வதால் தான் என்று நினைத்துக் கொண்டிருந்த ஈஸ்வரி, மகள் மழை இல்லாத நாட்களிலும் செல்லாமல் இருப்பதைப் பார்த்து அவளை வினோதமாகப் பார்த்தார்.

முன்பெல்லாம் இன்று வீட்டில் இரு. வயலுக்குப் போக வேண்டாம் என்று சொன்னாலும் காதில் வாங்காமல் ஓடும் மகள், இப்போது தொடர்ந்து பத்து நாட்களாகச் செல்லாமல் இருப்பது அவரின் மனதிற்குச் சரியாகப் படவில்லை.

அதுவும் வீட்டில் இருக்கும் நேரத்தில் எப்போதும் ஏதாவது பேசிக் கொண்டே இருப்பவள், இப்போது மௌன விரதம் காப்பவள் போல இருந்தாள். ஏதாவது கேட்டால் கோபத்தைக் கேடயமாக்கி அதற்குள் மறைந்துக் கொண்டாள்.

அப்படியும் ஒரு நாள் விடாமல் “ஏன்டி பவளம்… வயல் பக்கமே போகாம இப்படிக் குட்டி போட்ட பூனை போல வீட்டையே சுத்திவர்ற?” என்று ஈஸ்வரி கேட்க…

“ஏம்மா..‌! என்னைப் பார்த்தா உனக்கு எப்படி இருக்கு? வெளியே போனா ஊர் சுத்தாதேன்னு சொல்ற! வீட்டில் இருந்தா ஏன் வீட்டில் இருக்கன்னு கேட்குற? நான் எது செய்தாலும் அதில் ஒரு குத்தம் கண்டுபிடிப்பியா?” என்று எரிந்து விழுந்தாள்.

அவள் கோபத்தைப் புரியாமல் பார்த்தாலும், வேறு எதுவும் கேட்காமல் விட்டார். ஆனால் அவ்வப்போது அவளிடம் இருந்து காரணத்தை அறிய முயலத்தான் செய்தார். ஆனால் நங்கையிடம் அவரால் உண்மையான பதிலைத்தான் வாங்க முடியவில்லை.

கண்ணோடு கண் கலந்து
உன் நெஞ்சத்தில் நுழைந்திடத்தான்
தவிக்கின்றேன் நான்!!!

தஞ்சமடையத் தேடிய
உன் நெஞ்சத்தை மூடி வைத்து
என்னைத் துடிக்க வைக்கிறாய் நீ!!!

என் தவிப்பும், துடிப்பும் என்று தணியும்??
என்னவனே!!!

விடை தெரிந்தால் சொல்லிவிடு!!!
என் விழி மூடும் முன்!!!


இங்கே நங்கை இவ்வாறு சுற்றிக் கொண்டிருக்கத் தமிழரசன் வேறு மாதிரி சுற்றிக் கொண்டிருந்தான்.

அத்தனை வேலையிலும் நங்கை பேசியது அவனைத் துரத்திக் கொண்டே இருந்தது. அப்படிப் பேசினவள் மேல் அவனுக்குக் கோபம் தான் வந்தது. ‘நான் என்ன சொல்ல வர்றேன்னு கொஞ்சம் கூடப் புரிஞ்சுக்காம போறா! போனா போகட்டும் எனக்கென்ன?’ என்று அவளை மனதார திட்டிக் கொண்டான்.

‘அப்படியே அப்பனை மாதிரியே அவசர புத்தி. அவள் நல்லதுக்காக ஒரு காரியம் செஞ்சா அதைப் புரிஞ்சுக்காம தைய தைக்கன்னு குதிக்கிறா. கழுதை…!’ என்று திட்டியவனுக்கு அன்று மாலை அவள் பேசியதெல்லாம் காதில் ஒலித்துக் கொண்டே இருந்தது.

‘சாவு, கீவுன்னு என்ன பேச்சு அது?’ என்று இப்போதும் அந்த வார்த்தையை நினைத்து அவள் மீது கோபம் அதிகமாகியது.

அவளை மீண்டும் பார்த்து விளக்கம் சொல்ல நினைத்தால் அது அவனால் முடியாத காரியம் அல்ல. முயற்சி செய்தால் உடனே செய்து முடிப்பவன் தான். ஆனால் இப்போது அவளிடம் நிதானமாகப் பேசி எடுத்துச் சொல்வதற்கு நேரம் இல்லாமல் சுற்றிக் கொண்டிருந்தான்.

அவன் இப்போது செய்து கொண்டிருந்த வேலை அவனை முழுதாகத் தன் பக்கம் இழுத்துக் கொண்டிருந்தது.

இரவு வெகு நேரம் கழித்துத் தான் வீட்டிற்கே வர முடிந்தது. இத்தனை வேலை நெருக்கடியிலும் ஒருவேளை வழக்கம் போல நங்கை வந்தால் என்ன செய்வது என்று நினைத்து ஓரிரு நாள் மட்டும் வயல் பக்கம் அவள் வரும் நேரத்திற்குப் போய் வந்தான்.

ஆனால் நங்கை வைராக்கியமாக வராமல் இருந்ததால் அதன் பிறகு அவனும் அவளைப் பார்க்க நினைக்க வில்லை.

இன்றும் வேலை முடிந்து நேரம் கழித்து வீட்டிற்கு வந்தவன் இரவு உணவை முடித்து விட்டுப் படுக்கையில் விழுந்த பிறகு நங்கையின் அன்றைய பேச்சை அசைப் போட்டான்.

அப்பொழுது அவனின் தொலைப்பேசி இசைக்க ஆரம்பித்தது.

இந்நேரத்தில் யார் என்று எடுத்து பார்க்க, கனிமொழி அழைத்திருந்தாள்.

‘அக்கா எதுக்கு இந்த நேரத்துக்குக் கூப்பிடுறா?’ என்று நினைத்துக் கொண்டே காலை ஆன் செய்து போனை காதில் வைத்த நிமிடத்தில் “டேய்…!” என்று கேட்ட அதிகச் சத்தத்தில் திரும்பவும் காதில் இருந்து போனை வேகமாக விளங்கினான்.

அதோடு தன் காதையும் தேய்த்து விட்டுக்கொண்டான்.

பின்பு போனை தள்ளி வைத்துக் கொண்டே “அக்கா கொஞ்சம் மெல்ல பேசு! ஏன் இந்தக் கத்து கத்துற? என் காதே செவுடா போகும் போல?” என்று மெல்லிய புன்னகையுடன் சொன்னான்.

“டேய்…! என்ன கொழுப்பா? எனக்கு இருக்குற கோபத்துக்கு நேரில் இருந்தேன் இரண்டு அறை விட்டுருப்பேன். அப்ப உண்மையாலுமே உன் காது செவுடா தான் போயிருக்கும்” என்று அதிகக் கோபத்துடன் பேசினாள்.

அவள் கோபத்தின் காரணம் புரியாமல் “என் அக்காவுக்கு இந்தச் செல்ல தம்பியை அடிக்கிற அளவுக்கு என்ன கோபம்?” என்று அவளைச் சமாதானப் படுத்தும் பொருட்டுப் பாசமாகக் கேட்டு வைத்தான்.

உன் பசப்பு என் கிட்ட செல்லாது என்பது போல “நீ ஒன்னும் என் செல்ல தம்பி இல்லை!” என்று அதே கோபத்துடன் மொழிந்தாள்.

அவள் பதிலில் அரசுவிற்குச் சிரிப்பு வந்தது. ஆனால் தான் இப்போது சிரித்தால் இன்னும் அவள் கோபம் அதிகம் தான் ஆகும் என்பதால் சிரிப்பை அடக்கிக் கொண்டு “ப்ச்ச்…! நீ இவ்வளவு கோபமா இருந்தா நீ ஒன்னும் என்கிட்ட பேச வேண்டாம். போனை வை!” என்றான்.

“அடேய்‌..‌.!” என்று பல்லை கடித்தாள் கனிமொழி.

“சரி… சரி…! கோபப்படாதேகா! சொல்லு என்ன விஷயம்?” என்று அரசு சீரியஸாகக் கேட்டான்.

“என் நாத்தனாரை என்ன சொன்னடா? அவ இரண்டு வாரமா மூஞ்சை தூக்கி வச்சுட்டுச் சுத்துறாளாம். அவளுக்குக் கேட்க ஆளுயில்லைன்னு நினைச்சியா? அவளுக்குக் கேட்க அவள் அண்ணி நான் இருக்கேன். ஞாபகத்தில் வச்சுக்கோ!” என்று மிரட்டலாகக் கேட்டாள்

“ஓஹோ…! அதுக்குள்ள நியூஸ் அங்க வந்துருச்சா? உன் நாத்தனாரை நான் ஒன்னும் சொல்லலை! அவளா வந்தா, பேசினா, கோபப்பட்டா, போய்ட்டா! அதுவும் அவ என்ன வார்த்தையெல்லாம் பேசினானு தெரிஞ்சா நீயே அவ மேல கோபப்படுவ!” என்றான்.

“நானே அவ மேல கோபப்படுற அளவுக்கு அப்படி அவ என்னடா பேசினா?”

“ஹ்ம்ம்…! சாவு, கீவுன்னு என்னென்னமோ உளறினா, லூசு…!” என்று அவன் சொல்லி முடிக்கும் முன்….

“டேய்…! என்னடா சொல்ற?” என்று முன்பை விட இப்போது அதிகமாகக் கத்திய கனி தொடர்ந்து “அவ சாவு பத்தி பேசுற அளவுக்கு நீ என்னடா செய்து வைச்ச?” என்று தம்பியின் மீது பாய்ந்தாள்.

“அவளைப் பொண்ணு பார்க்க ஒருத்தனை போகச் சொன்னேன். அதுவும் அவன் அவ பின்னாடி காதலிக்கிறேன்னு சுத்திட்டு திரிஞ்சான். அதான் போய்ப் பொண்ணு கேளுன்னு சொன்னேன்” என்று அசால்ட்டாகப் பதில் சொன்னான்.

“அடப்பாவி…! என்ன காரியம் பண்ணி வச்சுருக்க? அவ உன்னை அடிக்காமயா விட்டா? ஒருத்தன் அவ பின்னாடி சுத்தினா போய் அவனை அடிச்சு விரட்டாம பொண்ணு கேட்க போகச் சொன்னியா?” என்று கனி கோபமாகக் கேட்டாள்.

அவள் கோபத்தைக் கண்டு கொள்ளாமல் “நான் ஏன் அவனை அடிச்சு விரட்டணும்?” என்று அலட்சியமாகக் கேட்டான்.

அவனின் அலட்சியம் கனிக்கு எரிச்சலை தந்தது.

“ச்சை…! உன்கிட்ட போய் அவளைப் பத்தி பேசுறேன் பாரு! என்னைச் சொல்லணும். அவ மேல கொஞ்சனாலும் அக்கறை இருந்தா இப்படிச் செய்வியாடா? நம்ம மேல பாசம் வச்ச பாவத்துக்கு அவளுக்கு வலியை மட்டும் தான்டா நாம திருப்பித் தர்றோம். இப்ப கொஞ்ச நாளா தான் என் கிட்ட பேசுறா! இப்ப நீ செய்து வச்ச காரியத்தால நான் போன் போட்டா எடுக்கக் கூட மாட்டேங்கிறா! என் மேல மட்டும் இல்லாம அவ அண்ணன் மேலேயும் கோபம் வந்திருச்சு போல. இவரும் ஒரு வாரமா போன் அடிச்சுகிட்டே இருக்கார்… எடுக்க மாட்டீங்கிறா!

இன்னைக்கு காலையில் தான் எங்க அத்தைகிட்ட சொல்லி ஈஸ்வரி அத்தைக்குப் போன் போட்டு கேட்க சொன்னேன். அப்பதான் பவளம் பத்துநாளைக்கு முன்னால வயலுக்குப் போய்ட்டு கோபமா வந்தவ வீட்டுக்குள்ளேயே அடைஞ்சு போய்க் கிடக்குறானு அவங்க ஒரே புலம்பல் புலம்பினதா சொன்னாங்க. அப்பயே நினைச்சேன். நீ தான் அவளை ஏதாவது சொல்லிருப்பனு. ஏன்டா…? ஏன்டா அவளைப் போட்டு இந்தப் பாடு படுத்துற?” என்று ஆதங்கம், கோபம், எரிச்சல், வருத்தம் எல்லாம் வார்த்தையில் காட்டி பேசினாள் கனிமொழி.

அவள் குரலில் இருந்த உணர்ச்சிகள் புரிந்தாலும் அவளுக்கு எந்தப் பதிலும் சொல்லாமல் அமைதியாக இருந்தான்.

அவனிடம் இருந்து ஏதாவது பதிலை எதிர்ப்பார்த்த கனிக்கு அரசுவின் அமைதி கடுப்பை உண்டாக்கியது.

அதே கடுப்புடன் “இப்படி அமைதியா இருந்தா என்னடா அர்த்தம்?” என்று கேட்டாள்.

“அக்கா…ப்ளீஸ்… புரிஞ்சுக்கோ! எல்லாம் அவ நல்லதுக்குத் தான் அப்படிச் செய்தேன்” என்று அரசு சொல்லி முடிக்கும் முன்… “டேய்…!” என்று பல்லை கடித்தாள் கனி.

“எதுடா அவ நல்லது? உன்னையே நினைச்சுகிட்டு இருக்குறவளை போய் அடுத்தவனுக்குக் கட்டி வைக்கிறதா நல்லது?” என்று கனி கேட்டாள்.

“என்னை விரும்புறேன்னு உன்கிட்ட வந்து சொன்னாளா என்ன?” என்று கடுப்புடன் திருப்பிக் கேட்டான் அரசு.

“அவளா எப்படிடா வந்து சொல்லுவா? நானா தான் கண்டு பிடிச்சேன். நாங்க இரண்டு பேரும் பேச ஆரம்பிச்சதில் இருந்து அவ வாயில் இருந்து அதிகம் வார்த்தை வரதே உன்னைப் பத்தின பேச்சா தான் இருக்கும். அப்படி இருக்குறவள போய் இப்படி வேதனை பட வச்சுருக்கியே உன்னை எல்லாம் என்ன செய்ய?” என்று கேட்டாள்.

“என்னை நீ ஒன்னும் செய்ய வேண்டாம். ஆமா… நீ ஏன் இன்னும் தூங்காம இந்த நேரத்தில் போன் போட்டு டென்சன் ஆகிட்டு இருக்க? இந்த நேரத்தில் வேற எதைப் பத்தியும் யோசிக்காம போய் நிம்மதியா தூங்கு! நான் இங்க செய்ய வேண்டியதை சரியா தான் செய்வேன். உன் நாத்தனாரை நான் ஒன்னும் செய்துற மாட்டேன். சீக்கிரமே அவ உன்கிட்ட பேசுவா. இப்போ போனை வை!” என்றான் அரசு.

“சரிதான் ரொம்பதான் மிரட்டாதடா… இன்னும் நாலு நாள் பார்ப்பேன். அதுக்குள்ள அவ போன் எனக்கு வரலைனா நான் நேரில் கிளம்பி வந்துருவேன். இந்த முறை நேரா அவ வீட்டுக்கே போய் மருதன் மாமாகிட்டயே பேசிருவேன். இன்னும் எத்தனை நாள் தான் இப்ப பேசிரலாம் அப்புறம் பேசிரலாம்ன்னு தள்ளிப் போட? ஒன்னு சீக்கிரம் ஏதாவது செய்து அவளைச் சமாதானப் படுத்து. இல்லனா… நான் நேரில் வந்து அப்பாகிட்டயும், மாமாகிட்டையும் பேசிக்கிறேன்” என்றாள்.

ஆம்…! வெறும் வாய் வார்த்தையாய் மட்டும் இல்லாமல் உண்மையில் நங்கை கனிமொழிக்கு நாத்தனார் ஆனாள்.

கனிமொழியின் கணவன் சந்திரன் மருதனின் ஒன்று விட்ட அண்ணன் நடராஜன் மகன் தான்.

ஐந்து வருடத்திற்கு முன் சந்திரனின் வீட்டில் இருந்து கனிமொழியைப் பெண் கேட்டுத் தேவநாயகத்திற்குத் தகவல் வந்தது.

மருதவாணனின் ஒன்று விட்ட அண்ணன் நடராசனிடம் இருந்து நிச்சயம் இப்படி ஒரு தகவல் வரும் என்று எதிர்பார்க்கவில்லை நாயகம்.

ஏனென்றால் மருதனுக்கும், தனக்கும் பேச்சு வார்த்தை இல்லை என்று அறிந்தவர் நடராசன். அப்படி இருக்கும் போது தம்பிக்கு பிடிக்காத வீட்டில் எப்படிப் பெண் எடுக்கச் சம்மதித்தார் என்று எண்ணினார்.

அதோடு மருதன் குடும்பத்துடன் வரும் சம்பந்தம் என்பதால், அவர்கள் வீட்டில் பெண் கொடுப்பது சரியா? தவறா? என்று மிகவும் குழம்பி போனார்.

பின்பு என்ன நினைத்தாரோ அடுத்து வந்த ஒரு வாரத்தில் அவர்கள் வீட்டில் பெண் கொடுக்க நாயகம் சம்மதம் சொல்ல… ஏற்பாடுகள் வேகமாக நடந்தன.

தன் அண்ணன் நாயகம் வீட்டில் பெண் எடுப்பதைக் கேள்வி பட்ட மருதன் முதலில் தாம் தூம் எனக் குதித்தார். அந்தக் கல்யாணத்திற்குத் தான் வர மாட்டேன் என்றார்.

ஆனால் அவரின் கோபத்திற்கு ஒரு நல்ல பொண்ணைத் தாங்கள் விட முடியாது என்று நடராசன் பிடிவாதமாக இருந்து மகனுக்குக் கனிமொழியைத் திருமணம் செய்து வைத்தார்.

அந்தத் திருமணத்திற்கு மருதன் வீட்டிலிருந்து யாரும் போக வில்லை.

சந்திரன் சிறுவயதில் திருவிழா நடக்கும் நேரத்தில் நங்கையின் வீட்டிற்கு வந்திருக்கின்றான். அவன் வீட்டில் ஒற்றைப் பிள்ளையான அவனுக்கு ஒரு குட்டி தங்கையாய் நங்கை இருந்தது அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது.

திருவிழா முடியும் மூன்று நாட்களும் தன் சித்தப்பா மருதன் வீட்டில் இருந்து நங்கையுடன் அன்பாகப் பழகி விட்டுச் சென்றிருக்கின்றான்.

நங்கைக்கும் வருடத்தில் ஒரு முறை வந்து செல்லும் அண்ணனை மிகவும் பிடித்திருந்தது.

அதனால் அவன் திருமணம் கனியுடன் எனக் கேள்வி பட்டவள் மிகவும் சந்தோஷப் பட்டாள்.

ஆனால் மருதன் அந்தத் திருமணத்திற்கு யாரும் போகக் கூடாது என்று சொல்லவும், தனக்குத் தூரத்துச் சொந்தமாக இருந்த ஒரே ஒரு அண்ணன் திருமணத்திற்குக் கூடத் தன்னால் போக முடியவில்லையே என்று மிகவும் வருந்தினாள்.

நங்கை வீட்டில் இருந்து யாரும் திருமணத்திற்கு வராதற்காகக் கோபம் இருந்தால் சந்திரன் மாமனார் வீட்டிற்கு வரும் போது மருதன் வீட்டு பக்கமே சில நாட்கள் போகாமல் இருந்தான்.

நங்கை அடிக்கடி தமிழரசனை வம்பிழுப்பது போலக் கனிமொழியையும் அவ்வபோது வம்பிழுப்பாள் என்பதால் திருமணத்திற்குப் பிறகு இன்னும் அண்ணன் மனைவி என்னும் உரிமையுடன் அவள் தாய் வீடு வரும் போது கோவிலிலோ, அல்லது தெருவில் எங்கேயாவதோ கனியை பார்த்து விட்டால் வம்பிழுப்பாள்.

இதில் சந்திரனும் தன் வீட்டிற்கு வராமல் போக, அவர்கள் இருவரையும் ஒன்றாகப் பார்க்கும் போது வேண்டும் என்றே கனியை இடித்துச் சந்திரன் மீது தள்ளி விடுவாள்.

அதில் சந்திரன் அவளுடன் ‘ஏன் நங்கை இப்படிச் சேட்டை செய்ற?’ என்று செல்லமாகக் கண்டிக்க ஆரம்பித்து அவனை அவளுடன் பேச வைத்து விட்டாள்.

கனிக்கு நங்கையின் சேட்டை பழகிய ஒன்று தான் என்பதால் எப்போதும் போலச் சில நாட்கள் அமைதியாகச் சென்றாள்.

ஆனால் நாட்கள் செல்லச் செல்ல கோவிலில் சந்திரன் நங்கையுடன் அதிகம் பேச ஆரம்பித்து மனைவியையும் பேச்சில் இழுத்து விட்டான்.

கனியும் ஆரம்பத்தில் நங்கையிடம் பாசம் இருந்தாலும் தந்தைக்காகப் பேசாமல் இருந்தவள் கணவனின் தூண்டுதலால் மெல்ல நங்கையுடன் பேச ஆரம்பித்தாள்.

கனி தன்னிடம் பேசாத போதெல்லாம் வம்பிழுத்த நங்கை அவள் தன்னிடம் பேச வரும் போது பிகு செய்து பேச மாட்டேன் என்று அடம் பிடித்தாள்.

பின்பு கனி அவளிடம் கெஞ்சி கொஞ்சி சமாதானப் படுத்தித் தன்னிடம் பேச வைத்தாள்.

நாட்கள் செல்லச் செல்ல நங்கைக்குத் தன் தம்பியின் மீது விருப்பம் இருப்பது கனிக்கு தெரிய வந்தது.

கனியிடம் பேசும் போது அரசுவை பற்றி அதிகம் பேச வைத்து கேட்டுக் கொள்வாள். அவனைப் பற்றிப் பேசும் போது அவள் முகத்தில் வந்து போகும் பிரகாசம் அவளில் மனதை படம் பிடித்துக் காட்டியது.

அன்று அரசுவை பார்க்க சென்ற நங்கை ஏமாற்றத்துடன் திரும்பி முதலில் கனிக்கு தான் போன் போட்டாள். அவள் சொல்லி தான் அவன் மதுரைக்குச் சென்றதால் வயலுக்கு வரவில்லை என்று தெரிந்துக் கொண்டாள்.

முன்பே நங்கையின் மனதை அறிந்து சந்தோஷப்படக் கனி தன் தம்பிக்கு அவளைத் திருமணம் செய்து வைக்க நினைத்தாள்.

அதற்கு முதலில் தன் அம்மாவை தன்னுடன் கூட்டு சேர்த்துக் கொண்டாள்.

நங்கை தன் மருமகளாக வந்தால் தனக்கு ரொம்பச் சந்தோசம் என்று உடனே சம்மதித்தார் அம்சவேணி.

அதனால் மகனின் விருப்பம் என்னவென்று அறிய அவ்வபோது அவனின் திருமணம் பற்றி அவனிடம் பேச்சை எடுத்தார்.

நங்கையைத் தான் திருமணம் செய்ய வேண்டும் என்று சொல்லாமல் யாரையாவது திருமணம் செய்தால் சரி என்று சொல்லி அவன் மன நிலை என்ன? என்று அறிய முயன்றார்.

அவன் கழுவிற மீனில் நழுவுற மீனாக அன்னையிடம் இருந்து தப்பினான்.

கனியும் ஆரம்பத்தில் சீக்கிரம் திருமணம் செய்து கொள் என்று சொல்ல ஆரம்பித்து ஒரு நாள் ‘என் நாத்தனார் நங்கையைத் திருமணம் செய்து கொள்’ என்று வந்து நின்றாள்.

முதலில் தன் அக்கா சொன்னதைக் கேட்டு அதிர்ந்து தான் போனான் அரசு.

பின்பு ‘அப்பாவை அசிங்கமாகப் பேசிய குடும்பத்துடன் போய் என்னைச் சேர்ந்து பேசுறயே’ என்று ஆரம்பத்தில் சத்தம் போட்டான்.

பின்பு ‘அடிக்கடி இப்படி என் திருமணம் பற்றிப் பேசாதே!” என்று கண்டித்தான்.

அடுத்து ‘எனக்குத் திருமணமும் வேண்டாம். எவளும் வேண்டாம்!’ என்று தன் கோபத்தைக் காட்டினான்.

அதுவும் அவள் நாத்தனார் என்று நங்கையைப் பற்றிக் கனி பேச ஆரம்பித்தாலே எரிந்து விழுந்தான்.

கனி நங்கையைப் பற்றிப் பேசியது தேவநாயகம் காதுக்கும் சென்றது.

கனியும், நங்கையும் பேசிக் கொள்வதைப் பற்றி ஒன்றும் சொல்லாதவர் ‘திருமண விஷயத்தைப் பற்றி நீ பேசாதே அமைதியா இரு!’ என்று கனியை அடக்கி வைத்தார்.

தந்தை மருதன் மீது இருக்கும் கோபத்தில் அப்படிச் சொல்கிறார் என்று நினைத்து கனியும் அடக்கியே வாசித்தாள்.

ஆனால் அவ்வப்போது தம்பியிடம் நங்கை பற்றிப் பேசுவதை மட்டும் நிறுத்த வில்லை.

நங்கையின் பாசத்திற்குத் தாங்கள் நியாயம் செய்யவில்லை என்ற உறுத்தல் கனிக்கு அதிகம் இருந்தது.

அதனாலேயே அவள் காதலை தான் எப்பாடு பட்டாவது நிறைவேற்றி விட வேண்டும் என்பதில் முனைப்பாய் இருந்தாள்.

நங்கையை எப்படியாவது தம்பிக்குத் திருமணம் செய்து வைத்து விட வேண்டும் என்று அவள் முயற்சி செய்து கொண்டிருக்கும் போது தம்பி நங்கைக்கு மாப்பிள்ளை பார்ப்பான் என்று அவள் கனவிலும் நினைக்கவில்லை. அந்தக் கோபத்தைத் தான் தம்பிடம் காட்டினாள்.

“நங்கையைச் சமாதானப் படுத்து இல்லனா நான் நேரில் வந்து அப்பாகிட்டயும், மாமாகிட்டையும் பேசிக்கிறேன்” என்ற கனியின் கூற்றுப் புரியாமல் முழித்த அரசு…

“இரண்டு பேர்கிட்டேயும் நீ என்ன பேசப் போற?” என்று கேட்டான்.

“தமிழு என் கல்யாணத்துக்குப் பின்னாடி ஒரு பெரிய கதையே இருக்குடா! அப்பா நம்ம கிட்ட இத்தனை நாளும் சொல்லாம மறைச்சுட்டார். இப்போ தான் என் மாமனார் சொன்னார். அதுவும் பவளம் என்கிட்டே பேச மாட்டிங்கிறான்னு வீட்டுல ரொம்பப் புலம்பினேனா? புள்ளத்தாச்சி பொண்ணு இப்படிப் புலம்புறேனேன்னு என்கிட்டே ஒரு விஷயம் சொன்னார்” என்றாள்.

“அப்படி என்னக்கா விஷயம்?” என்று அரசு ஆர்வமாகக் கேட்க…

“என்னைப் பவளத்தோட ஒன்னு விட்ட பெரியப்பா பையனுக்குப் பொண்ணு கேட்க வந்தப்ப அப்பா என்ன சொன்னார்? ஏற்கனவே என் மேல கோபமா இருக்குற மருதன் இந்தக் கல்யாணம் நடந்தா இன்னும் கோபப் படுவான் அதனால இந்தக் கல்யாணம் வேணாம்னு தானே முதலில் சொன்னார். அப்புறம் என்ன நினைச்சாரோ ஒரு வாரத்துல மனசு மாறி சரினு சொன்னார்ல?” என்று கனி கேட்க…

“ஆமாம்…! ஆனா அதில் என்ன கதை இருக்கு? அதான் அப்பா அப்பயே தெளிவா சொன்னாரே! மாப்பிள்ளை நல்ல மாப்பிள்ளை. அவர் அப்பா அம்மாவும் நல்லவங்க. மருதன் கோபப்படுவான்னு என் பொண்ணுக்கு வர நல்ல சம்பந்தத்தை விட முடியாது. அந்தக் குடும்பம் நம்ம பொண்ணை நல்லா பார்த்துப்பாங்கன்னு சொல்லி தானே சந்திரன் மாமாவை அப்பா ஓகே சொன்னார். இதில எந்த ரகசியமும் இருக்குறதா தெரியலை” என்றான் அரசு.

“எல்லாம் சரி தான்டா! ஆனா நமக்குத் தெரியாத விஷயமும் ஒன்னு இருக்கு!” என்ற கனி சொல்ல…

“என்னக்கா சொல்ற?” என்று தமிழரசன் அவள் சொல்ல வருவதை புரியாமல் கேட்டான்.

“ஹம்ம்…! ஆமாடா…!” என்று கனி தொடர்ந்து சொன்ன விஷயம் தமிழரசனை ஒரு முடிவெடுக்க வைத்தது .