கண்கள் தேடுது தஞ்சம் – 24

அத்தியாயம் – 24

கதிர்வேலிடம் பேசும் வரை தன்னைத் தைரியமாகக் காட்டிக் கொண்ட பவளநங்கைக்கு அவன் அங்கிருந்து சென்றதும் உடலும், மனமும் தளர்ந்தது போல இருந்தது.

கதிர்வேலை தன் வழியில் இருந்து விரட்ட வேண்டும் என்ற ஒரே குறிக்கோளில் இவ்வளவு நேரமும் மனதை இரும்பாக்கிக் கொண்டு அவனிடம் பேசினாள். இப்போது அந்தக் கோழையை விரட்டி அடித்துவிட்டாலும், அவனை இந்தளவு உசுப்பேற்றி அனுப்பி வைத்திருக்கும் தமிழரசன் மீது கோபத்துடன், ஏன் அவன் இந்த வேலை செய்தான்? என்ற கேள்வியும், அவன் இப்படிச் செய்வான் என்று எதிர்ப்பார்க்காததால் அதிர்வும் அவள் மனதில் தோன்றி இருந்தது.

மனதை தாக்கிய அந்த அதிர்வு இதோ என்று கண்கள் கண்ணீரை பொழிய காத்திருந்தது. ஆனால் வெளியிடத்தில் இருக்கும் போது அப்படிக் கண்ணீரை பொழிந்து விட முடியாதே?

கஷ்டப்பட்டுத் தன் கண்ணீரை அடக்கியவள், மீதி பிரகாரத்தைச் சுற்ற வேண்டும் என்பதையும் மறந்து விறுவிறுவென வீட்டை நோக்கி நடையைப் போட்டாள்.

அங்கே ஈஸ்வரி வயலுக்குச் சென்றிருக்க, வீடும் பூட்டியிருந்தது. பக்கத்து வீட்டில் சாவி இருக்கும் என்பதால் அங்கே சென்று வாங்கி வந்தாள்.

அந்த வீட்டு பெண்மணி சாவி கொடுக்கும் போது “மதியத்துக்குச் சாதம் மட்டும் வடிச்சு வைப்பியாம் நங்கை!” என்று அவர் சொன்னது கூடக் காதில் வாங்காமல் வெறுமனே தலையை மட்டும் ஆட்டிவிட்டு வந்தாள்.

வீட்டிற்குள் சென்று கதவை பூட்டி இயந்திர கதியில் செயல் பட்டவள் தன் படுக்கையில் விழுந்ததும், ‘இதோ வந்தே விட்டேன்!’ என்று கண்ணீர் கரைகடைந்து ஓடியது.

கதிர்வேல் பேசின வார்த்தைகளை விட அவளைப் பெண் பார்க்க போகச் சொன்னது அரசு தான் என்று அறிந்த தகவல் மட்டுமே அவளை வலிக்கச் செய்து கண்ணீரை பொழிய வைத்தது.

நான் இங்கே அவனையே என் சுவாசமாய் நினைத்திருக்க, அவன் எனக்கு மாப்பிள்ளை தேடி அலைகின்றானா?

எப்படி…? எப்படி…? அவன் இப்படிச் செய்யலாம்? எனக்கு அவன் மீது நேசம் வந்தது போல அவனுக்கு என் மீது வரவேயில்லையா? நான் மட்டுமே அவனை மனதில் சுமந்து கொண்டு திரிகின்றேனா?

அவனைக் காண மட்டுமே நித்தமும் வயலுக்கு ஓடி வருகிறேன் என்று அவனுக்கு இன்னுமா உரைக்கவில்லை? என்று ஏதேதோ எண்ணி தவித்தவளுக்குத் தான் இன்னும் தன் காதலை அவனிடம் சொல்லவே இல்லை என்று உரைக்கவில்லை.

சொல்லாத காதலை அவன் எப்படி அறிவான் என்றும் அவளுக்குத் தோன்றவில்லை.

தினமும் பார்த்தால் மட்டும் போதுமா? சொல்லியே சிலருக்குப் புரியாமல் போய்விடும் நிலையில் தான் சொல்லாமலேயே அவன் புரிந்து கொள்ள வேண்டும் அவள் எதிர்பார்த்தால் நடக்கத் தான் செய்யுமா?

இது எதையும் உணராமல் அவளில் மன புலம்பல்கள் தொடரத்தான் செய்தன.

என் மனதை பற்றிக் கொஞ்சமும் நினைக்காதவன் மீது எனக்கு ஏன் காதல் வந்தது? எப்போது வந்தது? என்று அவளையே அவள் கேள்விகள் கேட்டுக் கொண்டாள்.

காதல் என்ன எல்லோருக்கும் இப்போது தான் நான் வருவேன் என்று சொல்லிவிட்டா வருகின்றது?

அதுவும் அவன் எதிரே வரும் போதெல்லாம் கண்ணில் காதலை காட்டியதை விடக் கனலை காட்டியது தான் அதிகம். அவளின் அந்தக் கனலையும் அவன் காதலாகப் புரிந்து கொள்ள வேண்டுமாம். நங்கையவளுக்குப் பேராசை அதிகம் தானோ?

நான் காதலை சொல்லவெல்லாம் மாட்டேன். நீ என்னைப் புரிந்து நடந்து நடந்துக்கொள் என்று இவள் விடும் சவாலில் அவன் ஜெயிக்கவும் வேண்டுமாம். அவனே தன்னைத் தேடி வந்து காதல் சொல்வான் என்று அவள் எதிர்பார்த்ததற்கு நேர்மாறாக விஷயங்கள் நடக்கவும் நங்கையின் மனம் திண்டாடிப் போனது.

கண்ணீரில் தன்னை மூழ்கடித்துக் கொண்டாலும் தமிழரசனின் மீது எழுந்த காதலும் சிறிதும் அவளுக்குக் குறையவில்லை. அதே நேரம் அதை விடப் பன்மடங்கு உயர்ந்திருந்த கோபமும் சிறிதும் குறையவில்லை.

அவனை இப்போதே சென்று நிற்க வைத்துக் கேள்வி கேட்க உடலும், மனமும் துடித்தது. இப்போது சென்றால் வயலில் ஆட்கள் இருப்பார்கள் பேச முடியாது என்று தன்னை அடக்கிக் கொண்டு அமைதி காத்தாள்.

அழுது களைத்தவள் எப்போது என்று அறியாமலேயே தூக்கத்தின் பிடியில் சிக்கியிருந்தாள்.

நல்ல தூக்கத்தில் இருக்கும் போது கதவு தட்டும் சத்தம் கேட்க பதறி எழுந்தாள். கண்கள் எரிந்தன. அப்போது தான் அழுதது உரைக்க வேகமாக முகத்தில் தண்ணீர் அடித்துக் கழுவியவள் கதவை திறக்க ஓடினாள்.

அங்கே ஈஸ்வரி வயலுக்குச் சென்று விட்டு வந்திருந்தார்.

“என்னடி செய்த? கதவை திறக்க இவ்வளவு நேரமா?” என்று கேட்டபடி உள்ளே நுழைந்தார்.

“தூங்கிட்டேன்மா” என்று சோர்வாகச் சொல்லியபடி சேரில் சென்று அமர்ந்தாள்.

“தூங்கிட்டியா? சாப்ட்டியா இல்லையா?”

‘இந்நேரம் என்ன சாப்பாடு என்று மணியைப் பார்க்க அது மணி மூன்று எனக் காட்டியது. ஐயோ…! காலையில் படுத்தவ இவ்வளவு நேரம் தூங்கிட்டேனா?’ என்று அவள் எண்ணிக் கொண்டிருக்கும் போதே…

“அடியே…! சோறு எங்கடி…?” என்று சமயலறையில் இருந்து கத்தினார் ஈஸ்வரி.

‘சோறா…? என்ன சோறு?’ என்று நங்கை முழிக்க… “நான் பக்கத்து வீட்டில் சொல்லிட்டு தானே போனேன். அவங்க சொல்லலையா?” என்று கேட்டப்படி மகள் எதிரே கோபமா வந்து நின்றார்.

அந்தப் பெண்மணி ஏதோ சொன்னது மட்டும் அவளுக்கு எங்கே ஞாபகத்தில் இருந்தது. ஈஸ்வரியை பார்த்துப் பதில் சொல்ல முடியாமல் பரிதாபமாக முழித்தாள்.

அப்போது தான் மகளின் முகத்தைக் கூர்ந்து கவனித்த ஈஸ்வரிக்கு அவளின் அழுது களைத்த முகம் வித்தியாசமாகத் தெரிந்தது. “என்னடி…? ஏன் உன் முகம் அழுதது போல இருக்கு?” என்று அவர் பதறிப் போய்க் கேட்டார்.

‘அய்யோ…! என் முகம் காட்டி கொடுத்திருச்சா?’ என்று தவித்த நங்கை உண்மையைச் சொல்ல முடியாமல் “இல்லமா… நான் ஏன் அழுக போறேன்? வெளியே மழை வர மாதிரி இருக்குல அதான் சளி பிடிக்குது. அதோட தூங்கிட்டேன்ல அதனால தான் உனக்கு என் முகம் அப்படித் தெரியுது” என்று சமாளித்தாள்.

“ஆமா… மழை வரப் போகுதுனு தான் நான் சீக்கிரம் வீட்டுக்கு வந்தேன். நீ சோறு பொங்கிருப்பனு நினைச்சு வந்தேன். இனி நான் சோறு பொங்கி அதுக்குப் பிறகு சாப்பிடவா?” என்று அலுத்தவர், “சரி… நீ போய்க் கொஞ்ச நேரம் படுத்துரு! நான் சோறு பொங்கிடு கஷாயம் போட்டுட்டு உன்னை எழுப்புறேன்” என்று திரும்ப உள்ளே சென்றார்.

அவரின் கரிசனையில் மீண்டும் அவளுக்குக் கண் கலங்கியது. ஆனால் ஈஸ்வரிக்குப் பதில் சொல்ல வேண்டி வரும் என்பதால் வாசல் பக்கம் சென்று வெளியே பார்த்தாள் மழை மேகம் கூடிக் கொண்டு வந்தது.

‘மழை பேஞ்சா அவனைப் பார்க்க போக முடியாதே!’ என்று நினைத்து வானத்தையே பார்த்தாள். மழை காலம் ஆரம்பித்து இருந்ததால் சில நாட்களாக அடிக்கடி மழை பெய்து கொண்டிருந்தது.

‘என்ன ஆனாலும் சரி இன்னைக்கு அவனைப் பார்த்துக் கேள்வி கேட்காம விடுறதா இல்லை’ என்று நினைத்தவள் அமைதியாகச் சென்று படுத்தாள்.

ஈஸ்வரி சாதம் வடித்ததும் பசி மரத்த வயிற்றுக்குச் சிறிது உணவையும், ஜலதோஷம் இல்லா உடல் நிலைக்கு அவர் குடுத்த கஷாயத்தையும் குடித்து விட்டு வயலுக்குச் செல்ல கிளம்பினாள்.
‘மழைவரும் போது வெளியே போகாதே!’ என்று சொன்ன ஈஸ்வரியையும், எப்போதும் போல ‘கூட வருகிறேன்’ என்று சொன்ன வாணியிடம் ‘நாளைக்கு விவரமாகச் சொல்கிறேன்’ என்று சமாளித்து விட்டு தன் வயலுக்குச் சென்றாள்.

மழை வர போவதால் வயல் வேலையை முடித்து விட்டு அனேகம் பேர் விரைவில் வீடு பொய் சேர்ந்திருந்தனர். மருதன் அவரின் வேறு வயலுக்குச் சென்றிருந்தார்.

ஓரிரு வயல்களில் சிலர் மட்டும் மழை வந்தால் தண்ணீர் தேங்காமல் இருக்கப் பாத்தி வெட்டிக் கொண்டிருந்தார்கள்.

நங்கை அமைதியாகத் தன் வயலில் காத்திருந்தாள்.

சிறிது நேரத்தில் தூரத்தில் அரசு வருவது தெரிந்தது. அவனைப் பார்த்ததும் வேகமாகக் கண்மாய்க் கரையை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.

நேற்று ஆசையாகப் பார்க்க வந்தவள், இன்று கடும் கோபத்துடன் அவனின் எதிரே சென்று நின்றாள்.

அவள் அவ்வளவு வேகமாக வந்து நின்றதை அரசு முதலில் புரியாமல் பார்த்தான்.

அவளிடம் தெரிந்த கோபத்தைப் பார்த்து ‘என்ன சில்வண்டு இன்னைக்கு காளி அவதாரம் எடுத்துருக்காங்க?’ என்று நினைத்தவனுக்கு அவளின் கோபமும், அழுது சோர்ந்த கண்களும் அதன் காரணத்தை நன்றாகவே புரிய வைத்தன.

ஆனாலும் தன் முன்னால் கோப மூச்சு விட்ட படி நின்றிருந்தவளை பார்த்து ஒரு அமைதியான புன்னகை ஒன்றை சிந்தினான்.

அவன் சிரிப்பை பார்த்ததும் நங்கைக்கு பற்றிக் கொண்டு வந்தது. ‘மவனே…! என்னை அழ வைச்சுட்டு சிரிக்க வேற செய்றியா?’ என்று ஆத்திரம் பொங்கியது.

அதோடு தான் இத்தனை கோபமாக நின்றும் ஏன் கோபம் என்று இன்னும் கேட்காத அவனின் அமைதி வெறியை வர வைத்தது. ‘அமைதியா இருந்தே என்னை இன்னும் எத்தனை நாள் கொல்லுவான்?’ என்ற ஆத்திரத்தில், வார்த்தையால் அவனைக் கடித்துக் குதறி விடும் வேகம் எழ,

“நான் செத்துப் பொணமா போற சூழ்நிலை வந்தாலும் நீயா வந்து என்கிட்டே பேச மாட்டியா மாமா?” என்று வார்த்தையில் உஷ்ணம் பொங்க கேட்டாள்.

அவ்வளவு நேரம் அவள் கோபத்தைச் சுவாரஸ்யமாகப் பார்த்துக் கொண்டிருந்த அரசு, அவள் வார்த்தையில் அதிர்ந்து “நங்கா…!” என்று கோபமாக அழைத்தவன் “அடிச்சு பல்லை எல்லாம் உடைச்சுருவேன்! என்ன வார்த்தை பேசுற?” என்று சொல்லிக் கொண்டே அடிக்கக் கையை ஓங்கினான்.

ஓங்கிய அவன் கையை நிதானமாகப் பார்த்த நங்கை “என்னை அடிக்கிற அளவுக்கு உனக்கு என் மேல உரிமை இருக்கா மாமா?” என்று சிறிதும் அசராமல் கேட்டாள்.

அவள் கேள்வியில் ஒரு நொடி அசந்து நின்று பின் தன் கையை இறுக மூடின அரசு மெதுவாகக் கையைக் கீழே போட்டான்.

ஆனால் அவன் முகத்தில் இருந்த கோபம் மட்டும் சற்றும் குறையவில்லை. தன் கையை ஓங்கி தன் காலில் குத்தி தன் கோபத்தை அடக்க முயன்றான்.

அவனின் செயலை அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்த நங்கை வறட்சியான சிரிப்பை ஒன்றை சிந்தினாள். கதிர்வேலை விரட்ட பொய்யாக வேண்டும் என்றே சாவை பற்றி அப்படிப் பேசினாள் என்றால் இங்கே அரசுவின் செயலால் ரணப்பட்டிருந்த நங்கையின் நெஞ்சம் அவளை அப்படிப் பேச துண்டியது. தன் பேச்சால் அவனிடம் எழுந்த உரிமையான கோபம் கூட அவளை அமைதிப் படுத்த மறுத்தது. இன்னும் அவனைக் கோபப்படுத்தி விட வேண்டும் என்ற வெறி தான் எழுந்தது.

அதனால் “உனக்கு எதுக்கு மாமா இவ்வளவு கோபம் வருது? நான் செத்தா உனக்கென்ன? நான் செத்தா உனக்கு நல்லது தானே மாமா நடக்கும்!” என்று சொல்லி நிறுத்தினாள்.

திரும்பத் திரும்ப அதே வார்த்தையைச் சொல்லும் அவளைக் கனல் பொங்க பார்த்தவன் “இன்னும் கொஞ்ச நேரம் நீ இப்படியே பேசிட்டு இருந்தா எதைப்பத்தியும் யோசிக்காம அடி வெளுத்துருவேன் நங்கா! ஒழுங்கா பேசுறதா இருந்தா பேசு! இல்லைன்னா கிளம்புற வழியைப் பாரு!” என்றான் கடுமையாக.

“அப்படித் தான் பேசுவேன்!” என்று சொல்லி அவனின் கடுமையைத் தூசாக ஊதி தள்ளினாள்.

“நங்கா…!” என்று அதட்டி அழைத்தவனின் குரலை காதில் வாங்காமல் “நீ இன்னும் என் சாவுனால என்ன நல்லதுன்னு கேட்கலையே?” என்று கேட்டு இன்னும் அவனை வார்த்தையால் சாடியவள், அவன் கோபத்தைக் கொஞ்சமும் லட்சியம் செய்யாமல் “நீ கேட்கலைனாலும் நான் சொல்ல தான் செய்வேன்” என்று விட்டு தன் காரணங்களை அடுக்கினாள்.

“நான் செத்துட்டா? தினமும் கிறுக்கச்சி மாதிரி ஒருத்தி உன் பின்னால சுத்துற என்னோட டார்சர் குறையும்! உன்கிட்ட திட்டு வாங்குறதுக்காகனாலும் உன்னைப் பேச வைக்கணும்னு நினைச்சு நான் செய்ற விளையாட்டுதனம் குறையும்! உன்னைப் பார்க்கணும்னு தவம் போலத் தினமும் இந்தப் பாதைல போய்டு இருக்குற என் முகத்தைப் பார்க்குற கொடுமை உனக்குக் குறையும்!” என்று சொல்லி விரக்தியாகச் சிரித்தவள், ஏதோ யோசித்தது போல “பாரேன்… நான் உனக்கு எவ்வளவு டார்ச்சர் கொடுத்துருக்கேன். அதான் என்னைக் கல்யாணம் முடிச்சு அனுப்ப மாப்பிள்ள பார்த்தியா மாமா?” என்று அந்த மாமாவில் ஒரு அழுத்தம் கொடுத்து கேட்டாள்.

அவள் பேச, பேச இறுகிப் போய் நின்றிருந்தவன் கடைசியில் அவள் ‘மாமா’ என்ற வார்த்தையில் கொடுத்த அழுத்தத்தில் இன்னும் கோபம் ஏறியவன் “ஏய்…! என்னடி வாய் நீளுது? எதுக்கு இப்ப இப்படி வந்து தேவையில்லாம கிறுக்குத்தனமா பேசிகிட்டு இருக்குற நங்கா? உனக்கு என்னாச்சு?” என்று கேட்டவனைப் பார்த்து இகழ்ச்சியாகச் சிரித்தாள்.

“ஆமா… நான் கிறுக்கி தான்! பத்து வருஷத்துக்கு முன்னாடி பெரியவங்க சண்டைல சின்னப் பிள்ளயா இருந்த என் மனதை பத்தி கொஞ்சம் கூடக் கவலை படாம அத்தனை நாள் காட்டின பாசத்தை ஒரே நாள்ல தூக்கி எறிஞ்சிட்டு போன உன் குடும்பம் மேல இன்னும் அதே பாசத்தை வச்சுக்கிட்டு சுத்திட்டு இருக்கேன் பாரு! நான் கிறுக்கிதான்!” என்று சொல்லி லேசாகக் கண்கலங்கினாள்.

இவ்வளவு நேரம் பொரிந்து தள்ளியவள் இப்போது கண் கலங்குவது பொறுக்காமல் அவளின் அருகில் நெருங்கி வர ஒரு எட்டு வைத்தவன் கால்கள் ஏதோ நினைத்துக் கொண்டார் போல் அதற்கு மேல் நகர மறுத்தன. ‘அவள் ஒன்னும் இப்போது குட்டி நங்கா இல்லையே? வெட்ட வெளியில் அருகில் போய்க் கண்ணைத் துடைத்துவிட?’ என்று நினைத்து செய்வதறியாது தயங்கி நின்றான்.

இயலாமை கோபத்தைத் தர “ப்ச்ச்…! நங்கா எது பேசுறதா இருந்தாலும் அழுகாம பேசு!” என்றான்.

ஏனோ அவன் மீது இருந்த அத்தனை கோபத்திலும் அவன் சொல்லுக்குப் பணிந்து தன் கண்களைத் துடைத்துக் கொண்ட நங்கை மேலும் தொடர்ந்தாள்.

“சின்ன வயசுல நீ வளர்ந்துட்ட அதுனால என்கிட்ட இருந்து ஒதுங்குற அப்படிங்கிறதை கூட என்னால தாங்கிக்க முடிஞ்சிச்சு. ஆனா எங்க அப்பா பேசினதுக்காக என் முகத்தைக் கூடப் பார்க்காம அக்காவும், தம்பியும் திரும்பிக்கிட்டு போனிங்க பாருங்க. அதைத் தான் என்னால தாங்க முடியலை. உங்களைத் தேடி தேடி பார்க்க வந்த உங்க கண்ணுக்கு நான் ஒரு மனுஷியா கூடத் தெரியலைல?” என்று வருத்தமாகக் கேட்ட நங்கைக்கு என்ன பதில் சொல்வது எனத் தெரியாமல் மௌனியாகி போனான் தமிழரசன்.

அவன் மௌனம் தொடரவும் இவளே பேச்சை தொடர்ந்து “அப்ப அப்படிப் போனவனுக்கு இப்ப என்ன அக்கறைன்னு எனக்கு மாப்பிள்ள பார்க்க கிளம்பின? எனக்கு மாப்பிள்ள பார்க்க நீ யாரு?” என்று கேட்டாள் அழுத்தமாக.

அவள் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்ல அவனின் நாவு துடித்தது. ஆனால் அதற்குள் தூரத்தில் ஒரு இடி விழ, அதைக் கவனித்தவன் சுற்றிலும் ஆட்கள் இல்லாமலும் இருக்கவும், தன் மௌனத்தை விட்டு “நங்கா… நாம இன்னொரு நாள் நிதானாமா பேசலாம் இப்ப மழை வருது வீட்டுக்கு போ!” என்றான் பொறுமையாக.

தான் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லாமல் அவன் தன்னைத் துரத்துவதில் குறியாக இருப்பதாக அவளுக்குத் தோன்ற “நான் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லு மொதல! அப்புறம் நான் போறேன். எதுக்குக் கதிர்வேல்கிட்ட அப்படிச் சொன்ன? அதுக்குப் பதிலை சொல்லு?” என்று வம்படியாகக் கேட்டாள்.

அப்போது ஓரிரு தூறல் விழ ஆரம்பித்தது. மேகம் கூடி நிற்க வானம் இருண்டு கொண்டு வந்தது. இப்போது கிளம்பினாலும் எப்படியும் வீடு போய்ச் சேரும் முன் நனைந்து விடுவோம். இதில் இப்படி நிதானமாகக் கேள்விக் கேட்டு கொண்டிருப்பவளுக்கு என்னவென்று அவன் பதில் சொல்ல? அவள் கேள்விக்கு அவனிடம் பதில்கள் நிறையவே இருந்தது. ஆனாலும் இப்பொழுது அதைப் பற்றிப் பேச அவனுக்கு விருப்பம் இல்லை.

அதனால் அவள் பிடிவாதமாக நிற்பதால் பொறுமையை இழுத்து பிடித்து “நங்கா…! கிளம்புன்னு சொன்னேன்!” என்றான்.

நங்கைக்கும் பொறுமை பறந்தது. தான் காலையில் இருந்து இவன் செய்து வைத்த வேலையால் மனம் துடிக்க இங்கே வந்து அவனிடம் பேசிக் கொண்டிருக்க, அவன் மழையைக் காரணமாக வைத்துத் தன்னைத் துரத்துவதும், தன் கேள்வியை அலட்சியப் படுத்துவதும் தாங்கொண்ணா வலியை உண்டாக்கியது.

எப்போதும் தான் தான் அவன் பின் சுற்றுகிறோம் என்று தன்னை இளக்காரமாக நினைக்கின்றானா? என்று நினைத்தவளின் முகம் அப்பட்டமாக மனதின் வலியை எடுத்துக் காட்டியது.

அவள் முகத்தையே எதிரில் நின்று பார்த்தவன் என்ன நினைத்தானோ அவளின் அருகில் இன்னும் ஒரு எட்டு எடுத்து நெருங்கி வந்தவன் “நங்கா… இங்க பார்! நீ கேட்ட எல்லாக் கேள்விக்கும் என்னால பதில் சொல்ல முடியும். ஆனா அதுக்கு இப்ப நேரமும், சூழ்நிலையும் இல்லை.

மழை பெய்ய ஆரம்பிச்சுருச்சு பாரு! இதுக்கு மேல நீ இங்க இருக்குறது சரி இல்லை. ஒரு நாள் உன் எல்லாக் கேள்விக்கும் நான் பதில் சொல்றேன். என்னை உண்மையிலேயே உன் மாமாவா நினைச்சா? உன் நல்லதுக்குத் தான் நான் இப்ப கிளம்பச் சொல்றேன்னு நினைச்சா? கிளம்பு…!” என்று பொறுமையாக எடுத்துச் சொன்னான்.

ஆனால் இப்பொழுது எதையும் புரிந்து கொள்ளும் நிலையில் நங்கை இல்லை. அவன் அருகில் வந்ததைக் கூடச் சற்றும் பொருட்படுத்தாமல் அசையாமல் நின்றாள்.

ஏனோ அவன் நடவடிக்கைகள் எல்லாம் சற்றும் அவனுக்குத் தன் நேசம் இல்லை என்பதைப் பறை சாற்றுவதாகவே அவளுக்குத் தெரிந்தது.

நேசம் மட்டும் இருந்திருந்தால் இன்னொருவனைப் பெண்பார்க்க செல்ல சொல்வானா?

தான்தான் அவனை மனதில் சுமந்து கொண்டு பைத்தியம் போல் சுற்றுகிறோம் என்ற எண்ணம் தோன்ற தன் மேலேயே வெறுப்பு வந்தது.

இனி என்ன இவனிடம் தான் விளக்கம் கேட்க? ‘உன் விளக்கம் எதுவும் தேவை இல்லை போடா!’ என்று மனதில் அலட்சியமாகச் சொல்லிக் கொண்டவள்,

அங்கிருந்து கிளம்பும் முன் ஒரு முறை அவன் முகத்தைக் கூர்ந்து பார்த்து “என் மனசு துடிச்சுப் போய்க் கேள்வி கேட்க வந்தேன். ஆனா என் மனசு பத்தி கொஞ்சமும் கவலைபடாம மழைன்னு சப்ப காரணம் சொல்லிடு இருக்குற உன்னைப் போய் நான்…..” என்று ஏதோ சொல்ல வந்தவள், சட்டெனத் தன் வாயை மூடிக் கொண்டாள்.

தன்னை இளக்காரமாக நினைக்கும் இவனிடம் போய்த் தன் நேசத்தைச் சொல்வதா? என்று நினைத்தவள் அவனைத் தாண்டி நடந்தாள்.

அவள் சொல்ல வந்தது அவனுக்கும் புரியத்தான் செய்தது. ஆனால் அவளை நிறுத்தி பொறுமையாகப் பதில் சொல்ல இது நேரம் இல்லையே… தான் என்ன செய்ய? என்ற இயலாமையில் அவள் போவதையே பார்த்தான்.

சிறிது தூரம் சென்று திரும்பி பார்த்த நங்கை “இனி உன்னைத் தேடி நான் வரமாட்டேன்! என் தொந்தரவு இல்லாம இனி நிம்மதியா இரு!” என்று அழுத்தமாகச் சொன்னவள், “நங்கா…” என்று அவன் அழைத்ததைக் கூடப் பொருட்படுத்தாமல் வரும் போது இருந்த வேதனையை விடப் பலமடங்கு வேதனையைச் சுமந்து கொண்டு அங்கிருந்து சென்றாள் பவளநங்கை.

விலகி சென்றே நெருங்கி வருகிறாய்!
நெருங்கி நின்றே விலகி நிற்கிறாய்!

விலக வேண்டும் என்றால்,
நெருங்காதே என்னுயிரே!!

நெருங்க வேண்டும் என்றால்,
விலகதே என்னுயிரே!!