கண்கள் தேடுது தஞ்சம் – 22
Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels
அத்தியாயம் – 22
காலையில் எழுந்ததில் இருந்து சுறுசுறுப்பாகச் சுற்றிய பவளநங்கை அடிக்கடி ஏதாவது பாடலை முணுமுணுத்துக் கொண்டே சுற்றினாள்.
அடுத்தெடுத்த பாடல்கள் விடாமல் வந்து கொண்டே இருந்தன.
அவளின் பாடல்களைக் கேட்டுச் சலித்துப் போன ஈஸ்வரி “அடியே மவளே…! எதுனா ஸ்பீக்கரை முழுங்கிட்டியா? நானும் காலையில் இருந்து பார்த்துக்கிட்டு இருக்கேன்! ஒரே கத்தா கத்திக்கிட்டே இருக்க!” என்று இப்போது அவர் தான் ஸ்பீக்கரை முழுங்கியது போல் மகளைப் பார்த்துக் கத்தினார்.
அவரின் கத்தலில் தன் காதை தேய்த்து விட்டுக் கொண்ட நங்கை “எம்மா… பொய் சொல்லாதே! நானா கத்துறேன்? எவ்வளவு அழகா பாட்டு பாடுறேன். அதைப் போய்க் கத்துறேன்னு சொல்ற? இப்ப நீ தான் கத்துற” என்று இடுப்பில் கை வைத்து ஈஸ்வரியை முறைக்க ஆரம்பித்தாள்.
தன் தோளில் இடித்துக் கொண்ட ஈஸ்வரி “ஹ்க்கும்…! நீ பாடுற லட்சணத்தை நீ தான் பெருமையா சொல்லிக்கணும்” என்றார்.
அவரை நக்கலாகப் பார்த்த நங்கை “ம்மா… உனக்குக் கற்பூர வாசனை தெரியலைமா” என்று நமட்டு சிரிப்புடன் சொன்னாள்.
“கற்பூர வாசனை எனக்குத் தெரியுமே…” என்று பதிலுக்குப் பதில் சொல்லிக் கொண்டு வந்த ஈஸ்வரிக்கு அப்போது தான் அவள் தன்னைக் கழுதை என்று சொல்கிறாள் எனப் புரிந்தது.
“அடி கழுதை! என்னையா கழுதைன்னு சொன்ன?இங்க வா! முதுகுலேயே இரண்டு போடுறேன்” என்று சொல்லிய படி அவளை அடிக்கக் கையை ஓங்கிக் கொண்டு போனார்.
“ஹா…! நான் சிக்க மாட்டேனே…” என்று அவர் கைகளுக்குத் தப்பாமல் துள்ளி ஓடிய நங்கை வாசலுக்குச் சென்று கொண்டே “ம்மா… நான் கோவிலுக்குப் போய்ட்டு வர்றேன்” என்று வெளியே ஓடினாள்.
அவளைத் துரத்திக் கொண்டு வந்தவர் “போய்ட்டு வா! அப்பவாவது விளையாட்டு புத்தி போகட்டும்” என்றார்.
அவர் எந்த நேரத்தில் அதைச் சொன்னாரோ? அது பலிக்கப் போவதை அவர் அப்போது உணர்வே இல்லை.
துள்ளிக் கொண்டு ஓடிய மகள் திரும்பி வரும் போது அவளின் துள்ளலை இழந்து வருவாள் என்று அவர் அறிந்தாரா என்ன?
என் கண்களைத்
திறந்து கொண்டே கனவுகள் காண்கின்றேன்!!
உன் கண்ணின் வழியே காதல் தேடி அலைகின்றேன்!!.
நங்கை கோவிலுக்குள் நுழைந்த போது காலை ஒன்பது மணி ஆகியிருந்தது. பன்னிரண்டு மணி வரை கோவில் திறந்திருக்கும் என்பதால் உள்ளே நுழைந்து தரிசனத்தை முடித்துவிட்டு நிதானமாகப் பிரகாரத்தைச் சுற்ற ஆரம்பித்தாள்.
அந்த நேரத்தில் ஒரு சிலரே கோவிலில் இருந்ததால் கோவில் அமைதியாக இருந்தது. இந்த அமைதிக்காகத் தான் அவள் இந்த நேரத்தில் வந்ததே.
நங்கை பிரகாரத்தை இரண்டாவது முறை சுற்ற ஆரம்பிக்கும் போது “ஹப்பாடி…! எப்படிடா இன்னைக்கு உன்னைப் பார்க்குறதுன்னு நினைச்சேன். நல்ல வேலை நீயே கோவிலுக்கு வந்துட்ட!” என்று சொல்லிப் படி நங்கையின் பின்புறம் அரவம் தெரியாமல் நடந்து வந்து கொண்டிருந்தான் கதிர்வேல்.
பக்திமயமாய்ச் சுற்றிக் கொண்டிருந்தவளின் பின்னால் திடீரெனப் பேச்சுச் சத்தம் கேட்கவும் அதிர்ந்து திரும்பிய நங்கை, அங்கே கதிரை பார்க்கவும் இவன் எப்போது வந்தான்? என்பது போலத் திகைத்துப் பார்த்தாள்.
அவள் திகைப்பை பார்த்து “என்ன பயந்துட்டியா நங்கை? நான் காலைல ஏழு மணில இருந்து உங்க ஊருக்குள்ள தான் சுத்திட்டு இருக்கேன். இன்னைக்கு உன்னை எப்படியாவது பார்த்துடணும்னு. என் நல்லவேளை தான் நீ கோவிலுக்கு வந்தது. நீ சுத்து பாதில நிறுத்தாத” என்று அவளை முன்னால் செல்ல கை காட்டினான்.
அவனின் உரிமையான, நிதானமான பேச்சைக் கேட்டு இன்னும் பயந்த நங்கை எங்கிருந்து இவனுக்கு இவ்வளவு நிதானம் வந்தது? என்று நினைத்தவள் தன் பயத்தை உள்ளுக்குள் மறைத்த படி “என்ன கொழுப்பா? நீ ஏன் என்னைப் பார்க்க காத்திருக்கணும்? உனக்கும், எனக்கும் என்ன சம்பந்தம்? நீ அன்னைக்குக் கேட்ட கேள்விக்குப் பதில் அப்பயே சொல்லிட்டேன். அப்புறமும் ஏன் தேவையில்லாம என் பின்னாடியே சுத்திட்டு இருக்குற?” என்று கேட்டாள்.
“என்ன நங்கை இப்படிச் சொல்லிட்ட? நீ போன்னு சொன்னதும் நான் போய்ருவேனா? நான் தான் அன்னைக்கே சொன்னேன்ல எங்க அப்பாவை வச்சுக் காரியத்தைச் சாதிச்சுக்குவேன்னு! இன்னைக்குச் சாதிச்சுட்டேன். அதான் தைரியமா பேச வந்துட்டேன்” என்றான்.
‘என்ன சொல்கிறான் இவன்?’ என்று நங்கை புரியாமல் முழித்தாள்.
“என்ன நங்கை புரியலையா? நானே சொல்லிடுறேன்! எங்க அப்பா என் காதலுக்குச் சரின்னு சொல்லிட்டார். நாளைக்கு நான் உன்னைப் பெண் கேட்டு உங்க வீட்டுக்கு வர போறேன். அந்தச் சந்தோஷமான விஷயத்தைச் சொல்லத்தான் நான் உன்னைத் தேடி வந்தேன். இப்ப விஷயத்தையும் சொல்லிட்டேன்! இப்பத்தான் எனக்கு நிம்மதியா இருக்கு” என்று சொல்லி முகம் முழுவதும் சந்தோஷத்துடன் நங்கையைப் பார்த்துச் சிரித்தான் கதிர்வேல்.
அவன் சந்தோஷத்திற்கு மாறாக நங்கையின் முகம் வெளுத்துப் போனது.
ஆனால் உடனேயே முகத்தில் கோபம் பொங்க “ஹே…! என்ன விளையாடுறையா? உனக்குப் பிடிச்சா மட்டும் போதுமா? எனக்குப் பிடிக்க வேண்டாமா?” என்றாள்.
“அதெல்லாம் உனக்கும் என்னைப் பிடிக்கும் நங்கை. நான் நல்ல வசதியான வீட்டு பையன். பார்க்கவும் நல்லா இருக்கேன். அப்புறம் எப்படி என்னைப் பிடிக்காம போகும். அதுவும் உங்க அப்பா எதுவும் சொன்னா உடனே சரின்னு சொல்லுவியாமே? உங்க அப்பா என்னைக் கட்டுன்னு சொன்னா கட்டிட்டு போற. நாங்க உங்க வீட்டுக்கு பொண்ணு கேட்கவே சீர்வரிசை எல்லாம் நிறையக் கொண்டு வருவோம். அப்படி இருக்கும் போது எந்தப் பெத்தவங்களுக்குத் தான் என்னை வேண்டாம்னு சொல்ல மனசு வரும்?
உங்கப்பாவும் உடனே சரி சொல்ல போறார். அப்புறம் என்ன? அடுத்த முகூர்த்தத்தில் நம்ம கல்யாணம் தான்” என்று இப்பவே எல்லாத்தையும் கண் முன் பார்ப்பவன் போலப் படபடவெனச் சொல்லிக் கொண்டே போனான். எல்லாவற்றையும் பணத்தை வைத்து அளந்தவனாகத் தான் அவனின் பேச்சு இருந்தது.
கதிர்வேல் பேச, பேச நங்கையின் முகம் கடுகடுவென்று ஆனது.
‘ஓவரா கற்பனை பண்ணாதடா பக்கி!’ என்று அவனை மனதிற்குள் திட்டியவள் எதிரே நின்றிருந்தவனை ஏற இறங்க ஒரு பார்வை பார்த்தாள்.
பின்பு அவளுக்குள் இருந்த அத்தனை நிதானத்தையும் தன் முகத்தில் கொண்டு வந்தவள் “ஹம்ம்…! அப்புறம் கற்பனை எல்லாம் கடிவாளம் இல்லாத குதிரை மாதிரி தறிக்கெட்டு ஓடுதே கதிர்வேலா!” என்று ஆச்சரியமாகக் கேட்டவள்,
தன் கைகளைக் கட்டிக்கொண்டு “ஆனா இதெல்லாம் நடக்காம போனா நீ என்ன ஆவயோன்னு நினைச்சு தான் உனக்காகப் பீல் பண்றேன்” என்றாள்.
நங்கையின் பேச்சைக் கேட்டு அவளைப் புரியாமல் பார்த்தவன் “ஏன்? ஏன் நடக்காதுங்கிறேன்? அது எப்படி நடக்காம போகும்?” என்று கதிர் பதட்டமாகக் கேட்டான்.
“எதுக்கு நீ இப்படிப் பதட்டப்படுற கதிர்வேலா? இவ்வளவு நேரமும் நிதானமா நீ பேசியதை நான் கேட்டேன்ல? அதே மாதிரி நீயும் கொஞ்ச நேரம் தான் கேளேன்!” என்றாள்.
ஒரு பெருமூச்சை இழுத்து விட்டவன் “சரி சொல்லு! ஏன் நடக்காதுன்னு?” என்று கேட்டான்.
“அதுவா..? அதுவந்து… நான் வேற ஒருத்தரை விரும்புறேன். அப்படி இருக்கும் போது நான் எப்படி உன்னைக் கல்யாணம் பண்ணிக்குவேன்னு எதிர்பார்க்கிற?” என்று அழுத்தமாகக் கேட்டாள்.
அவள் சொன்னதைக் கேட்டு அதிர்ந்தே போனான் அவன்.
“என்னது…? என்.. என்ன சொல்ற? லவ் பண்றியா? யாரை? நான் உன்னை அப்படி வேற யார் கூடவும் பார்த்தது இல்லையே?” என்று அதிர்வு மாறாமலேயே கேட்டான்.
‘அடேய் மாடையா…! நான் லவ் பண்றவனைப் பார்க்க உன்னையும் கூடக் கூட்டிட்டா போக முடியும்? கேட்குறான் பார் கேனப்பய மாதிரி?’ என்று மானசீகமாகத் தலையில் அடித்துக் கொண்டாள் நங்கை.
அவள் அமைதியை பார்த்து “ஏய்…! என்கிட்ட பொய் சொல்லி ஏமாத்தப் பார்க்கிறயா? நான் ஏமாற மாட்டேன். ஒழுங்கா உண்மையைச் சொல்லு” அவள் பொய் தான் சொல்கின்றாள் என்று நினைத்து தன் பதட்டத்தைத் தனித்தப்படி கேட்டான்.
“நீ என்ன லூசா? உண்மையைச் சொல்லிக்கிட்டு இருக்குறவகிட்ட போய் உண்மை சொல்லுன்னு சொன்னா என்னத்தைச் சொல்ல?” என்று கடுப்புடன் சொன்னாள்.
“உண்மையா?” என்று கேட்டு முகத்தைச் சுளித்தவன், “யாரை லவ் பண்ணற?” என்று மெதுவாக விசாரித்தான்.
“அதை ஏன் நான் உன்கிட்ட சொல்லணும்?” என்று நங்கை அலட்சியமாகக் கேட்டாள்.
“அப்ப நீ பொய் தான் சொல்ற! உண்மைனா இந்நேரம் யாருன்னு சொல்லிருப்பயே? சும்மா என்னைச் சமாளிக்கப் பார்க்காத நங்கை. நான் நாளைக்கு உங்க வீட்டுக்கு வர தான் போறேன். இப்ப நான் வீட்டுக்கு போய் எங்க அப்பாகிட்ட உங்க வீட்டுக்கு நாங்க வரப் போற தகவல் சொல்ல சொல்ல தான் போறேன்” என்று வீம்பாகப் பேசிக் கொண்டே போனான்.
அவன் பேச்சு நங்கையை எரிச்சலடைய வைத்தது. ‘அட…! இவன்ட்ட யாருன்னு சொன்னாத்தான் தன் தேஞ்ச ரெக்கார்ட நிறுத்துவான் போல இருக்கே?’ என்று நினைத்தவள் ‘தன் காதலை தன் மாமனிடமே இன்னும் சொல்லாத போது, இவனிடம் எப்படிச் சொல்ல முடியும்?’ என்று தயங்கினாள்.
ஆனாலும் இவனை எப்படிச் சமாளிக்க என்று அவளுக்குத் தெரியவே இல்லை. இன்று எப்படியும் தன் மாமனுடன் பேசவேண்டும். அதற்கு முன் கோவிலுக்குச் சென்று விட்டு வருவோம் என்று நினைத்து இங்கே வந்தால் இந்தக் கொடுமை இங்கே வந்து நிக்கிது.
இப்ப என்ன நான் யாரை லவ் பண்றேன்னு சொன்னாத்தான் இவன் போவானமா? கிரகம் பிடிச்சவன். என்னமோ உலகத்தில் பொண்ணுங்களே இல்லாதது போல என்னை வந்து இந்தக் கிரகம் சுத்துது என்று அவனை மனதிற்குள் திட்டி தீர்த்துக் கொண்டிருந்தாள் நங்கை.
அவளின் தயக்கத்தையும், அமைதியையும் பார்த்து அவள் பொய் தான் சொல்கின்றாள் எனக் கதிர்வேல் உறுதியே செய்து விட்டான்.
அவன் முகத்தில் சந்தோஷம் தாண்டவம் ஆடியது.
அதைப் பார்த்து கடுப்பான நங்கை “என் மாமனை தான் நான் விரும்புறேன் போதுமா?” என்று பட்டெனச் சொன்னாள்.
அவள் பதிலை கேட்டு கதிர்வேல் யோசனையாக முகத்தைச் சுருக்கினான்.
“எந்த மாமன்? உனக்கு நெருங்கின சொந்தத்தில் அப்படி யாரும் மாமா இல்லையே? நான் நல்லா விசாரிச்சுட்டேனே? அப்புறம் எங்கிருந்து வந்தான் மாமன்?” என்று யோசனையோடு நங்கையிடம் கேட்டவனின் முகம் திடீரெனப் பிரகாசித்தது.
ஏதோ நினைத்துக் கொண்டது போல “ஏய்! அன்னைக்கு மலைக்கோட்டையில் பார்த்தோமே? அந்தத் தமிழ் அண்ணாவையா சொல்ற?” என்று சந்தோஷத்துடன் கேட்டான்.
அவன் வார்த்தையில் இப்போது நங்கை திகைத்தாள். ‘என்னது அண்ணாவா? அவன் எப்போ இவனுக்கு அண்ணன் ஆனான்? ஆமா இவனுக்கு ஏன் இவ்வளவு சந்தோஷம் வருது. நான் காதலிக்கிறேன்னு சொன்னது இவனுக்குச் சிரிப்பாவா இருக்கு?’ என்று நினைத்தவளுக்குப் பதில் சொல்வது போலக் கதிர்வேல் இப்போது சத்தமாகச் சிரிக்க ஆரம்பித்தான்.
அவன் சத்தத்தைப் பார்த்து பயந்த நங்கை கோவிலை சுற்றிலும் பார்த்தாள்.
ஏற்கனவே இவனிடம் இப்படிப் பேசிக் கொண்டிருப்பதை எத்தனை பேர் பார்த்தார்களோ என்று பயந்திருந்தவளுக்கு அவனின் சிரிப்பு மேலும் கிலியை உண்டு பண்ணியது.
அவளின் பார்வை புரிந்து தன் சிரிப்பை நிறுத்தியவன் “பயப்படாத நங்கை… நம்மளை இதுவரை யாரும் பார்க்கலை!” என்றான்.
அதில் நிம்மதி அடைந்தாலும் அவன் சிரிப்பில் கடுப்பாக இருந்தவள் “அது சரி! நீ ஏன் இப்படிச் சிரிக்கிற? நான் என்ன ஜோக்கா சொன்னேன்?” என்று கேட்டாள்.
“பின்ன சிரிக்காம என்ன செய்ய? அந்த அண்ணாவு,ம் நீயும் என்கிட்ட விளையாடுறிங்களா என்ன? நான் இன்னைக்கு இங்க வந்து பேச முக்கியக் காரணம் யார் தெரியுமா?” என்று பீடிகை போட்டான்.
அவன் பேச்சும் சிரிப்பும் புரியாமல் அவனைப் பார்த்தவள் “யாரு?” என்று மெதுவாகக் கேட்டாள்.
“நீ இப்ப உன் மாமான்னு சொன்னியே அந்தத் தமிழ் அண்ணா தான் உன்னைப் பொண்ணு கேட்டுப் போகச் சொன்னாங்க” என்று நங்கை மனதில் இடியை இறக்கினான் கதிர்வேல்.
அவன் சொன்ன விஷயத்தில் இதயம் அதிர சிலையாக நின்றாள் பவளநங்கை.
மனதின் வலிகள்
மரத்துப் போன பின்
கண்ணீர் அங்கே
கானல் நீர்!!