கண்கள் தேடுது தஞ்சம் – 21

அத்தியாயம் – 21

தயக்கம் வந்து தடை போட, அடுத்து வந்த இரண்டு நாட்களும் பவளநங்கை வயல் பக்கமே செல்லவில்லை.

வாணியும் அவளாகத் தெளிந்து வரட்டும் என்று நினைத்து நங்கையின் போக்கில் அவளை விட்டுவிட்டாள்.

மகள் வீட்டிற்குள்ளேயே சுற்றி வருவதை வினோதமாகப் பார்த்த ஈஷ்வரியும், அவள் நடவடிக்கையை மட்டும் கண்காணித்த படி அமைதியாக இருந்தார்.

இரண்டு நாட்களுக்கு மேல் தாங்க முடியாத நங்கை, தன் தயக்கத்தை உதறி தமிழரசனை பார்க்கும் ஆவல் தலை தூக்க, வயலுக்குக் கிளம்பிவிட்டாள்.

வாணியின் கையைப் பிடித்து நடந்து சென்று கொண்டிருந்த நங்கையின் கையில் மெல்லிய நடுக்கம் ஓடி மறைந்தது.

அவளின் நடுக்கத்தை உணர்ந்த வாணி, “என்னடி இது…? இத்தனை நாளும் இல்லாத சேட்டையெல்லாம் செஞ்சுட்டு, என்னமோ இப்பத்தான் உன் மாமனை மொத, மொத பார்க்க போறவ கணக்கா இப்படி நடுங்குற? நிஜமாவே நீ நங்கை தானா? இல்ல வேற எவளுமா?” என்று நங்கையின் முகத்தைத் தன் பக்கம் திருப்பிப் பார்த்துக் கேட்டாள்.

தன் கன்னத்தைத் தாங்கியிருந்த வாணியின் கையைத் தட்டி விட்ட நங்கை “என்னடி? உனக்கு நக்கலா இருக்கா? என்னைப் பத்தி உனக்குத் தெரியாதா என்ன? என் சேட்டை எல்லாம் வெறும் வெளி வேஷம் தான். ஆனா இப்ப இருக்குற நங்கை தான் உண்மையானவ! பாசமா மட்டும் பார்த்துக்கிட்டு இருந்த என் மாமனை எப்ப காதலா பார்க்க ஆரம்பிச்சேனோ அப்ப இருந்தே என் மனதை மறைக்கத் தான் என் சேட்டையை அதிகமாக்குனேன்னு உனக்குத் தெரியாதா என்ன?

அன்னைக்குப் பஸ்ஸில் என் மாமன்கிட்ட உதவி கேட்குறதுக்காகப் பேசிட்டாலும், இப்ப திரும்பப் பார்க்குறப்ப பேசாம எப்படி இருக்கப் போறேன்? இல்ல நானா பேசி என் மாமன் பேசாம முகத்தைத் திருப்பிக்கிட்டு போய்ருச்சுன்னா என்ன பண்றது? இப்படியெல்லாம் யோசிச்சு யோசிச்சே உள்ளுக்குள்ள நொறுங்கி போயிருக்கேன். நீ வேற என் வாயை கிளராத!” என்று நங்கை லேசாகக் கண் கலங்கிய படி சொன்னாள்.

“ஹப்பா…! ஒரு வழியா மனசுல இருக்கிறதை எல்லாத்தையும் கொட்டிட்டியா? வாடிம்மா வா! நான் கேட்கும் போதெல்லாம் ஒன்னும் இல்லை, ஒன்னும் இல்லைனு நழுவினவ! இன்னைக்கு நீயே உன் வாயால உன் மாமன் மேல உனக்கு இருக்குறது காதல் தான்னு ஒத்துக்கிட்டியா?

இத்தனை நாளும் என்னைக் குழப்பி விட்டவ தானே நீ? அதான் கொஞ்சம் சீண்டினேன். கவலை படாத… அந்த அண்ணே அப்படி ஒன்னும் முகம் திருப்பாதுன்னு தான் எனக்குத் தோணுது” என்று சொல்லி நங்கையைச் சமாதானப் படுத்தினாள்.

“ஹ்ம்ம்…!” என்று வெளியே சொல்லி தன்னைத் திடப் படுத்திக் கொண்டாலும், உள்ளுக்குள் அரிக்கும் உணர்வை என்ன செய்து சமாதானம் செய்வது என்றே அவளுக்குத் தெரியவில்லை.

இரு குடும்பமும் இன்னமும் முகம் திருப்பிக் கொண்டிருக்கும் நிலையில் தன் காதல் சரி தானா? என்று அவளையே கேட்டுக் கொண்டாள்.

சரியில்லை என்றாலும் இயற்கை தன் மனதில் புகுத்தி விட்ட காதலை விட்டு விலகி விடவும் அவள் தயாராக இல்லை.

தன் மாமன் மனதில் தனக்கான இடம் கிடைக்குமா? என்று தெரியாமல் கலங்கி போய் இருந்தாள்.

தன் மீதான அவனின் பாசம் வேண்டுமானால் மாறாமல் இருக்கலாம். ஆனால் தன்னைப் போல் அவனுக்கும் காதல் இருக்கிறதா? இல்லையா? என்று தான் புரியாமல் தவித்தாள்.

ஒருவேளை அவனுக்குத் தன் மீது பாசம் தவிர நேசம் என்ற ஒன்று இல்லையானால் நான் என்ன ஆவேன்? என்று துடிக்கும் மனதிற்குப் பதில் சொல்ல போவது அவனின் வார்த்தையில் தான் உள்ளது என்பதால், அவனைப் பார்க்கும் நொடி எப்படி இருக்கும் என்று தெரியாமல் தான் அவளின் இத்தனை கலக்கமும்.

அவளின் கலக்கத்திற்குப் பதில் சொல்ல வேண்டியவனோ அன்று வயலுக்கே வரவில்லை. மாலை வெகு நேரம் வரை தன் வயலில் அமர்ந்து அவன் வரும் பாதையைப் பார்த்திருந்தவள் அவன் வரும் நேரம் சென்றும் வர வில்லை என்றதும் நங்கையின் மனது சோர்ந்து போனது.

இருள் துரத்திக் கொண்டு வர, அதற்கு மேலும் அங்கே இருக்க முடியாமல் கிளம்பி விட்டாள்.

உறவில்லா நம் உறவை
உயிர்ப்பிக்க வருவாயா??


நங்கை தேடிய மன்னவன் அதே நேரத்தில் மதுரையில் இருந்தான்.

இரண்டு நாட்கள் மகளைப் பார்த்து சில செய்முறைகளைச் செய்து விட்டு நாயகமும், வேணியும் ஊர் திரும்பவும், தந்தையிடம் பொறுப்பை ஒப்படைத்து விட்டு மதுரையில் உள்ள தன் அக்கா கனிமொழியைப் பார்க்க கிளம்பி விட்டான்.

அங்கிருந்தவர்களை எல்லாம் நலம் அறிந்து விட்டு, தமக்கைக்குப் பார்க்கும் மருத்துவம் எல்லாவற்றையும் விசாரித்துவிட்டு, அப்போது தான் நிதானமாகக் காபி அருந்தி கொண்டு அமர்ந்திருந்தான்.

அவன் எதிரே அமர்ந்திருந்த கனிமொழியின் கணவன் சந்திரன் “அப்புறம் மாப்பிள்ள… எப்படிப் போகுது உங்க வேலையெல்லாம்?” என்று விசாரித்தான்.

“அதுக்கென்ன மாமா சூப்பரா போகுது. விவசாயத்தில் கத்துக்க என்னென்ன இருக்கோ எல்லாம் கத்துக்கிட்டு வர்றேன். வாழ்க்கை ஸ்முத்தா ஓடிக்கிட்டு இருக்கு” என்றான்.

அவன் கடைசியாகச் சொன்னதைக் கேட்டதும் கனிமொழியும், சந்திரனும் அர்த்தத்துடன் ஒரு பார்வை பார்த்துக் கொண்டனர்.

அவர்கள் மூவரும் மட்டுமே அங்கே இருந்ததால் கனி மெல்ல கணவனிடம் கண் காட்டினாள்.

அதைப் புரிந்து கொண்டவனும் ‘பேசுறேன்’ என்று சாடை காட்டினான்.

காபியை ருசித்து அருந்துவது போல் காட்டிக் கொண்டாலும், அரசு இருவரையும் கவனித்துக் கொண்டு தான் இருந்தான்.

அவனுக்குத் தெரியாதா என்ன? அவர்கள் என்ன பேசப் போகிறார்கள் என்று? அதை அறிந்திருந்தவன் உள்ளுக்குள் சிரித்துக் கொண்டான்.

தன் தொண்டையை லேசாகச் செருமிக் கொண்ட சந்திரன் “அப்புறம் என்ன மாப்பிள்ள… உங்க வேலை தான் ஸ்முத்தா போக ஆரம்பிச்சுருச்சே! அடுத்துக் கல்யாணம் தானே? அது எப்ப பண்ண போறீங்க?” என்று கேட்டான்.

காபி கப்பை கீழே வைத்தவன் “ஹ்ம்ம்…! ஆமா மாமா! கல்யாணம் தான். அதான் நான் சொன்ன மாதிரி அக்காவுக்குக் குழந்தை பிறக்க போகுதே. இனி என் கல்யாணத்தை முடிச்சுர வேண்டியது தான்” என்று சாதாரணமாகச் சொன்னான்.

அவனின் பேச்சைக் கேட்டு கனிமொழி ஆனந்த அதிர்ச்சி அடைந்தவள் போலத் தம்பியை திகைத்துப் போய்ப் பார்த்தாள்.

கல்யாணம் பற்றிப் பேசினாலே குதித்தவன் இப்போது உடனே ‘சரி’ என்று சொன்னது தன் குழந்தை வரவால் மட்டும் தானா? இல்லை வேற எதுவும் காரணமா? என்பது போல அவளின் பார்வை மாறியது.

கனிமொழியின் பார்வையைப் பார்த்து நமட்டுச் சிரிப்பை ஒன்றை சிந்தியவன் “என்னக்கா… என்னை அப்படிச் சந்தேகமா பார்க்குற? நீ ரொம்ப நாளா கேட்ட விஷயத்துக்குத் தானே இப்ப சரி சொன்னேன். அதுக்குச் சந்தோஷப்படாம இப்படியா சந்தேகமா பார்ப்பாங்க?” என்று கனிமொழியிடம் அப்பாவியாகப் பேசியவன்,

சந்திரனை பார்த்து “என்ன மாமா… என் அக்காவை இப்படி மாத்தி வச்சுருக்கீங்க? சந்தோஷப்பட வேண்டியதுக்குச் சந்தோஷப்படக் கூடத் தெரியாம என் அக்கா எப்படி மாறியிருக்கான்னு பாருங்க” என்று அவனையும் வம்பிழுத்தான்.

“ஆமாப்பா! பின்ன உன் அக்கா வேற எப்படி இருப்பா? நீ எப்ப என்ன செய்து வைப்பன்னு தெரியாதது போலத் தானே உன் அக்காக்கும் எப்ப என்ன ரியாக்ஷன் தர்றதுன்னு தெரியலை” என்று சந்திரன் அசராமல் பதிலடி கொடுத்தான்.

“ஆஹா…! அக்கா பாரு! மாமா நம்ம இரண்டு பேரையும் ஓட்டுறார். என்னனு கேட்காம அமைதியா இருக்க?” என்று கனிமொழியைப் பேச்சில் இழுத்துச் சந்திரனை போட்டுக் கொடுத்தான்.

“ப்ச்ச்…! அவர் கிடக்குறார். நீ சொல்லுடா! நிஜமா தான் சொல்றியா? நீ கல்யாணம் பண்ணிக்க உண்மையா தானே சரின்னு சொன்ன? இதை மட்டும் அம்மா கேட்டுருக்கணும். எவ்வளவு சந்தோஷப் பட்டுருப்பாங்கனு தெரியுமா?” என்று லேசாகக் கண் கலங்க சொன்னாள்.

“அக்கா… இப்ப எதுக்குக் கண் கலங்குற? நிஜம், உண்மை எல்லாம் ஒரே அர்த்தம் தான? அதை ஏன் பிரிச்சு பிரிச்சுக் கேட்குற?” என்று கேலி செய்து அவள் மனநிலையை அவன் மாற்ற முயன்றான்.

“டேய்…! நீ பேச்சை மாத்த பார்க்காத! கல்யாணத்துக்குச் சரி சொல்லிட்டேல. அது போதும்” என்று சந்தோஷப் பட்டவள் “அப்புறம் என் நாத்தனார்….” என்று ஏதோ கனி சொல்ல ஆரம்பிக்க…

அவள் முகத்திற்கு நேராகக் கை காட்டி பேச்சை நிறுத்த சொன்ன அரசு “அக்கா ப்ளீஸ்! இந்த மாதிரி நேரத்தில் நீ சந்தோஷமா இருக்கணும்னு தான் நான், நீ மாமாவை விட்டு என் கல்யாண விஷயம் கேட்க சொன்னதும் சரின்னு சொன்னேன். ஆனா எப்ப கல்யாணம் பண்ணிக்கிறதுனு நான் இன்னும் முடிவு பண்ணலை. அதுக்குள்ள நீ தேவையில்லாத கற்பனை எல்லாம் பண்ணிக்காத! கட்டாயம் நான் கல்யாணம் பண்ணிக்குவேன். ஆனா யாரை எப்பன்னு மட்டும் கேட்டு என்னைக் குடையாதே. அதுக்கு என்னால பதில் சொல்ல முடியாது” என்றான்.

அவன் அப்படிச் சொன்னதும் கனியின் முகம் சுருங்கியது.

“ஆமா… உடனே முகத்தைச் சுருக்கிரு! சந்தோஷமா இருக்க வேண்டிய நேரத்தில் கண்டதெல்லாம் யோசிச்சு குழம்பாம நிம்மதியா இரு! நான் நைட் இங்க தங்கிட்டுக் காலையில் கிளம்பலாம்கிற ஐடியாவில் வந்துருக்கேன். நீ இப்படி முகத்தைத் தூக்கி வச்சுட்டு இருந்தா நான் இப்பயே கிளம்புறேன்” என்று அவன் இருக்கையை விட்டு எழுந்தான்

அவனுக்கு முன் எழுந்த கனி “ஏய்…! சும்மா மிரட்டாம உட்காருடா! நான் போய் நைட்டுக்கு சமையல் செய்றேன்” என்று கனி வேகமாக உள்ளே விரைய… “மெல்ல போடா கனிமா!” என்றான் சந்திரன் அவள் வேகத்தைப் பார்த்து.

அவர்களைப் பார்த்து மகிழ்ச்சியாகப் புன்னகைத்தான் தமிழரசன்.


மறுநாள் காலையில் எழும்போதே பரபரப்புடன் இருந்தாள் பவளநங்கை.

நேற்று தமிழரசன் ஊருக்குச் சென்றிருந்த விஷயம் அவள் காதிற்கு வந்திருந்தது.

இன்று எப்படியும் வந்து விடுவான் என்று தெரிந்ததினால் இன்று பார்க்கும் போது எப்படியும் அவனிடம் பேசி விட்ட வேண்டும் என நினைத்த படி இப்போதே அதன் பரபரப்பு தொற்றிக் கொண்டவள் போல என்ன பேசலாம் என்று வார்த்தைகளைக் கோர்வையாக்கி காத்திருக்க ஆரம்பித்தாள்.

ஆனால் அவள் முடிவு செய்திருந்ததற்கு மாறாக அன்றைய காரியங்கள் எல்லாம் வரிசையாக நடந்தேறின.

அதில் அவள் ஆசை எல்லாம் நிராசையாக, சந்தோஷமாக மாமனிடம் பேச நினைத்திருந்தவள் எண்ணம் தவிடுபொடியாக ஆத்திரமும், கோபமும், கண்ணீரும் கடுப்புமாகப் பேசினாள்.

அவள் பேசுவதையே சுவாரஸ்யத்துடன் பார்த்த தமிழரசனின் பார்வைக்கு அர்த்தம் இன்னதென்று அறிய முடியாமல் திகைத்தவள், இனி உன்னைத் தேடி நான் வரவே மாட்டேன் என்று உறுதியாகச் சொல்லிவிட்டு அவனை விட்டு விலகி சென்றாள் பவளநங்கை.

உன் மௌனம் உடைய காத்திருந்தால்
என் மனம் உடைத்துச் செல்கிறாய்!!