கண்கள் தேடுது தஞ்சம் – 2

அத்தியாயம் – 2
அன்றைய வெயிலின் தாக்கம் குறைந்திருந்த அந்த மாலைவேளையின் காற்று சுகமாய் முகத்தில் வந்து மோத, அதனைத் தன் மூச்சுக்காற்றில் சுகித்தப்படி வேட்டியின் நுனியை லேசாகத் தூக்கிப் பிடித்த படி வந்து கொண்டிருந்த பைந்தமிழரசன், தன் எதிரே பெண்கள் வருவதைப் பார்த்து வேட்டியை கீழே இறக்கி விட்டுவிட்டு, எல்லாருக்கும் முன்னால் வந்த இரு பெண்களையும் தூரத்தில் வரும் போதே ஒரு நொடி கூர்ந்து பார்த்து விட்டு நங்கையின் மீது ஒரு நொடி பார்வையை நிலைக்க விட்டவனின் கண்களில் கோபம் மின்னலாய் வந்து போனது.

ஆனாலும் நொடியில் சாதாரணமாகத் தன் பார்வையை மாற்றிக்கொண்டான்.

அவர்களை நெருங்கின போது தான் வாணி அவனைக் கண்டு நங்கையிடம் சொல்ல, தன் முகத்தில் எந்தப் பாவனையும் காட்டாமல் சீரான நடையுடன் அவர்கள் எதிரே நடந்து வந்தான்.

நங்கை அவனைப் பார்த்ததும் கடுப்புடன் முகத்தைத் திருப்பிக் கொண்டதை கவனிக்கத் தான் செய்தான். அதைக் கொஞ்சமும் லட்சியம் செய்யாமல் சென்றவனின் காதில் நங்கை அவனைப் பற்றி முணுமுணுத்தது நன்றாகவே அவனுக்குக் கேட்டது. ஆனாலும் எந்த முக மாற்றமும் இல்லாமல் அவர்களைத் தாண்டிச் சென்றான்.

அவனுக்கு எதிரே வந்த மற்ற பெண்களில் ஒருவர் அவனிடம் பேச்சுக் கொடுத்தார்.

“என்ன தம்பி, இப்பதான் உங்க வயலுக்குப் போறீகளா?”

“ஆமாக்கா. இப்பதான் அந்த வயல்ல வேலை முடிஞ்சது. அதான் இங்க வர நேரம் ஆகிருச்சு”.

“சரி தம்பி. பார்த்துப்போங்க…!” என்றார் அவர்.

“சரிக்கா… இருட்டப் போகுது. நீங்க வெரசா வீட்டுக்குப் போய்ச் சேருங்க” என்று சொல்லிவிட்டு தன் தந்தையின் வயலை நோக்கிச் சென்றான்.

வயலுக்குச் சென்ற அரசு, ‘இன்றைய வேலை எல்லாம் சரியாக நடந்ததா?’ என்று பார்க்க வயலை சுற்றி வந்து கொண்டிருந்தான்.

அப்பொழுது அரசு அங்கே இருப்பதைத் தூரத்தில் இருந்து பார்த்து விட்டு, பக்கத்து வயலின் உரிமைக்காரனும், பைந்தமிழரசனின் நண்பனுமான மாறன் அங்கே வந்தான்.

அருகில் வரும் போதே “என்னடா தமிழரசா? இன்னைக்குத் தரிசனம் முடிச்சுட்டியா?” என்ற கேள்வியுடன் அவனின் தோளில் கைப்போட்டான்.

மாறன் கேட்டது புரியாத அரசு “என்னடா? என்ன கேட்குற? என்ன தரிசனம்? இன்னைக்கு நான் எந்தக் கோவிலுக்கும் போகலையே?” என்று கேட்டான்.

“டேய்…! நான் கோவில் தரிசனத்தையா சொன்னேன்? உன் நங்கை தரிசனத்தைச் சொன்னேன்” என்று விட்டு அரசுவை பார்த்து கிண்டலாகச் சிரித்தான்.

அவன் கேள்வியிலும், கிண்டல் சிரிப்பிலும் கடுப்படைந்த அரசு, தன் தோளில் இருந்த மாறனின் கையை வேகமாகத் தட்டிவிட்டு, “லூசுபய மாதிரி உளறாதேடா! ஏது…? நான் அவ தரிசனத்துக்காகக் காத்திருக்கேனாக்கும்? அவ எல்லாம் ஒரு ஆளு, அவ கூடப் போய்ச் சேர்த்துப் பேசுறான். மடப்பய” என்று இளக்காரமும், கோபமும் கலந்து மாறனை திட்டினான்.

அவன் கோபத்தில் கொஞ்சமும் அசராமல் “யாரு…? நான் உளறுறேனா? எல்லாம் எனக்குத் தெரியும்டா. நங்கை அவங்க வயலுக்கு வந்து ஒரு வேலையும் செய்றது இல்லை. ஆனா தினமும் நாள் தவறாம இங்க வருது அந்தப் புள்ள. அது கூட ஏதோ அவங்க வயலு, சும்மா பொழுது போக்க வருதுன்னு நினைக்கலாம்.

ஆனா தினமும் சொல்லி வச்சது போல, கண்மாய்க் கரையில் இரண்டு பேரும் பார்த்துக்கிறது எனக்குத் தெரியாதுன்னு நினைச்சியா? என் பார்வையில் இருந்து நீங்க தப்பிக்க முடியாது டோய்…!” ஏதோ பெரிய ரகசியத்தைக் கண்டுபிடித்தவன் போலச் சொன்னான்.

அவன் பேச, பேச ஏதோ வேப்பங்காயை கடித்தது போல முகத்தைச் சுளித்த அரசு “நீ லூசே தான்டா. எனக்கு உறுதியா தெரிஞ்சிடுச்சு. ஏதோ அவ அந்தப் பக்கம் போறா. நான் இந்தப் பக்கம் வாறேன். இதுக்கு எல்லாம் புது அர்த்தம் போடுறான். நாங்க தினமும் பார்க்கிறதா நீ எப்படிச் சொல்ற? ஏதோ எதேச்சையா மத்த ஆளுங்க கூட அவளும் எதிர்ல நடந்து வர்றா.

ஏன் அந்தப் புள்ள வாணியையும் தான் நான் அடிக்கடி எதிரில் பார்க்கிறேன். அதுக்கும் ஒரு காரணம் சொல்லுவியா? இதுல பெரிய ஜேம்ஸ்பாண்ட் துப்பறிஞ்சது போலப் பெருமை வேற. போடா டேய்…! போய்ப் பிழைப்பை பாரு! எனக்கு வேலை இருக்கு” என்றவன் அங்கிருந்து கிளம்பப் போனான்.

அவனைச் செல்ல விடாமல் வழி மறைத்த மாறன் “டேய்! என்னைச் சும்மா, சும்மா லூசுன்னு சொல்லாதே!” என்று அதட்டியவன், “அப்போ நங்கைக்கும், உனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. அப்படித்தானே?” என்று திரும்பவும் கேட்டான்.

“அதைத் தானேடா அப்ப இருந்து சொல்றேன். எந்தச் சம்பந்தமும் இல்லை. அவளும், அவ பேரும் அவளே பகையை வச்சுக்கிட்டு சுத்துறா, அவ கூடப் போய் என்னைச் சேர்த்து பேசுற? அதுக்கு உன்னை லூஸுன்னு சொல்லாம, பாராட்டு பத்திரமா வாசிப்பாங்க?” என்றான் அரசு.

“என்னடா சொல்ற? பகை வச்சுக்கிட்டு சுத்துறாளா? எந்தப் பகையைச் சொல்ற? உங்க குடும்பத்துக்கும், அவங்க குடும்பத்துக்கும் இப்ப இருக்கற பகையையா?” என்று மாறன் கேட்டான்.

“ஹ்ம்ம்… அது எங்க குடும்பப்பகை… அதோட சேர்ந்து அவ பேர்லயே பகை இருக்கே…! நான் அதைத் தான் சொல்றேன்”

“என்னடா சொல்ற?” என மாறன் புரியாமல் கேட்டான்.

“அவ முழுப் பேரு என்ன?”

“பவளநங்கை…! ஏன்…? நல்ல பேரு தானே?”

“அந்தப் பேர்ல முதல் எழுத்தையும், கடைசி எழுத்தையும் சேர்த்து பாரு! உனக்கே புரியும்…” என்றான்.

அவன் சொன்னது போல மாறன் சொல்லிப் பார்க்க “பகை” என்று வந்தது. அதைச் சொல்லிப் பார்த்ததும் ‘அடப்பாவி…!’ என வாயை திறந்து தன் திகைப்பை காட்டியவன், “இப்படி நீ சொன்னது மட்டும் அவளுக்குத் தெரியணும். உன்னை உண்டு இல்லைனு ஆக்கிருவா” என்றான்.

“சரி தான் போடா! அவளுக்குப் பயப்படுறதுக்கு வேற ஆளை பாரு” என்றவன் அதற்கு மேல் பேசாமல் அந்த இடத்தை விட்டு நகர்ந்தான்.

அவன் பின்னாலேயே தொடர்ந்து சென்ற மாறன், “சரி விடு…! அவளைப் பத்தி பேச வேண்டாம். அந்த விதை பத்தி உன்கிட்ட ஒன்னு கேட்கணும்னு நினைச்சேன். அதைப் பத்தி பேசுவோம். வா…!” என்று பேச்சை மாற்றிக் கொண்டு அவன் பின் சென்றான்.

பைந்தமிழரசனின் தந்தை தேவநாயகத்திற்கு விவசாயம் என்றால் உயிர். அந்த உயிரை தன் மகனிடமும் சிறிது செலுத்தி விட்டிருந்தார்.

அரசுவின் சிறு வயதில் இருந்தே, விவசாயத்தால் கிடைக்கும் நன்மைகள், அதன் பெருமைகள், அதை நாம் எப்படிப் பாதுகாக்க வேண்டும்… என்று சொல்லி, சொல்லி வளர்த்தார்.

‘நீ இது தான் செய்ய வேண்டும்’ என்று அரசுவிடம் அவர் வற்புறுத்தலாய்ச் சொல்லியிருந்தால் அவன் கேட்டு இருப்பானோ? என்னவோ? ஆனால் அவர் வயலைப் பற்றிச் சொல்லும் பொழுது, தன் வீட்டில் அதுவும் ஒரு ஆள் என்பது போலத் தான் பேசுவார்.

சிறு வயதில் விதை விதைக்கும் போது அரசுவையும் அழைத்துச் செல்பவர் ‘இதை எப்படிச் செய்கிறார்கள் பார்!’ என்று சொல்லாமல் அவனைக் அழைத்துக் கொண்டு போய் விடுவதோடு அவர் வேலை முடிந்துவிடும்.

ஆனால் அவன் நடவடிக்கையைக் கண்காணித்துக் கொண்டே இருப்பார். சிறு குழந்தைகளுக்கு எதையும் அறிந்து கொள்ளும் ஆவல் வருவது இயற்கை தானே? அந்த இயல்பின் படி வயலை சுற்றி வருபவன் அங்கே நடக்கும் வேலையைப் பற்றிக் கேள்வி கேட்க ஆரம்பிப்பான்.

அவனாக அப்படிக் கேள்வி கேட்கும் வரை காத்திருப்பவர், அதன் பிறகு காரணத்தை விளக்கிச் சொல்வார்.

விதை விதைப்பது பற்றியும், அது முளைவிடும் போது பார்க்க எப்படி இருக்கும், களை எடுப்பது, அறுவடை செய்வது என அந்தந்த வேலைகள் நடக்கும் போதும், அவனையே நேராகப் பார்க்க வைத்து விளக்கம் சொல்வார்.

அதே போலப் பருவத்தில் மழை இல்லாமல் விளைச்சல் குறைந்து போகும் போது “பாவம்டா அரசு நம்ம பயிர்கள் தண்ணி இல்லாம செத்துருச்சு” என்று சொல்லி தன் வருத்தத்தைக் காட்டி வருந்துவார்.

பயிர்கள் நல்ல விளைச்சலை தரும் போது “இங்கே பாருடா அரசு. நம்ம விதை விதைச்சு அதை அறுவடை செய்யும் போது அப்படியே நம்மையும் ஒரு தாயை போல நினைக்க வைக்கும்டா” எனச் சொல்லி தன் சந்தோஷத்தை பகிர்ந்து கொள்பவர் கண்களில் பெரிமிதம் இருக்கும்.

அந்தப் பெரிமிதம் தான் ஒரு ‘விவசாயி’ என்ற பெருமிதம்.

அதைக் கண்ணுற்று வளர்ந்த பைந்தமிழரசனுக்கும் ரத்தத்திலேயே ஊறினது போல், அவனுக்கும் விவசாயத்தின் மீது பற்று வந்து பற்றிக் கொண்டது.

அந்தப் பற்றுதலின் பலனாகத் தன் பள்ளிப் படிப்பை முடித்ததும், விவசாயக் கல்லூரியில் சேர்ந்து விவசாயப் பிரிவில் உயர் பட்டப்படிப்பு வரை படித்து விட்டு, தந்தையுடன் சேர்ந்து விவசாயம் பார்க்க ஆரம்பித்தவன், இப்பொழுது தனக்கெனத் தனியாக நிலத்தை வாங்கித் தனியாக இயற்கை உரம் தயாரித்து அதன் மூலம் விவசாயம் செய்வதோடு, தந்தை வயலிலும் அதை நடைமுறை படுத்திச் செழிப்பான பயிர்களை அறுவடை செய்கின்றான்.

அதனுடன் இயற்கை உரம் தயாரிக்கும் பண்ணை வைத்து அதை ஏற்றுமதியும் செய்து வருகின்றான். அதுமட்டும் இல்லாமல் இன்னும் சிலதும் அவன் முயற்சியில் நடந்து கொண்டிருக்கிறது. அது என்ன என்பதைப் பிறகு பார்க்கலாம்.

இப்பொழுது அவன் பொறுப்பில் வேறு இடத்தில் இருக்கும் வயலில் அன்றையை வேலையை முடித்து விட்டு இப்பொழுது தந்தையின் பொறுப்பில் இருக்கும் வயலை பார்வையிட வந்து விட்டான். இது அவனின் அன்றாட வேலை.

அன்றைய வேலைகளை எல்லாம் முடித்துவிட்டு எட்டு மணி அளவில் வீடு போய்ச் சேர்ந்தான். குளித்து விட்டு வந்து சாப்பிட அமர, அவன் தந்தையும் அவன் அருகில் வந்து அமர்ந்தார்.

“என்னய்யா தமிழு…! இன்னைக்கு எல்லா வேலையும் முடிஞ்சுதா? தேங்காய் லோடு அனுப்பிட்டியா?” என்று கேட்டார் தேவநாயகம்.

“முடிஞ்சதுப்பா… லோடு அனுப்பியாச்சு. மதுரைக்கு நாளைக்கு ஒரு லோடு அனுப்பணும்ப்பா” என்றான்.

“சரிய்யா…” என்று அவர் சொல்லிக் கொண்டிருக்க, அவர்களுக்கு அமைதியாகப் பரிமாறிக் கொண்டிருந்த அவனின் அம்மா அம்சவேணி “சாப்பிட்டு அப்புறம் பேசுங்களேன். இங்கயே பேசாட்டி என்ன?” எனச் சலிப்பாகக் கேட்டார்.

இப்படிச் சாப்பிடும் நேரத்தில் பேசிக் கொள்வது அவ்வீட்டில் தினமும் நடக்கும் வாடிக்கை தான் என்றாலும் இன்றைக்கு ஏனோ சலித்துக் கொண்டார் அம்சவேணி.

அவரின் சலிப்பை பார்த்துப் பேச்சை நிறுத்திய அப்பாவும், மகனும் ஒருவரை ஒருவர் பார்த்து விட்டு “என்னாச்சு அம்சா? எதுக்கு உனக்கு இன்னைக்கு இவ்வளவு சலிப்பு? நீ எதுவும் பேசணுமா?” எனத் தேவநாயகம் விசாரித்தார்.

“மச்ச்…” என மட்டும் சொல்லியவர் முகத்தைத் திருப்ப “என்னம்மா, என்ன கோபம்?” என இப்பொழுது தமிழரசன் கேட்டான்.

“நாளைக்கு நம்ம கனி வர்றேன்னு சொன்னா. அதைப் பத்தி சொல்லுவோம்னு பார்த்தா. உங்களுக்கு எப்பயும் வெளியே நடக்குறதை தான் வீட்டில் பேசணும். நான் இங்க தனியா முழிச்சுக்கிட்டு நிக்க வேண்டியது தான்” என்று சூடாகச் சொன்னார்.

“சரி… சரி…! இப்ப என்ன கனி வர்றா. வரட்டும்… நல்ல விஷயம் தான். உன் பொண்ணு வந்தா உனக்குச் சந்தோஷம் தானே. சந்தோசப்படுறதை விட்டுட்டு அதுக்கு ஏன் இப்படிச் சலிச்சுக்கிற?” என்று கேட்டவரிடம்,

“ஆமா நான் என்னத்தைச் சந்தோசப்பட? அவ வழக்கமா வர்ற விஷயமாத்தான் வர்றா. ஆனா அதுக்குத் தான் இங்க எந்தப் பதிலும் கிடைக்காதே. அவளும் அதை விட மாட்டா. நீங்களும் எதுக்கும் ஒத்துவர மாட்டீங்க. உங்க மூனு பேருக்கும் இடையில நான் தான் மாட்டிகிட்டு முழிக்கணும்” என்று ஆதங்கமாகப் பேசியவர் கண்கள் லேசாகக் கலங்க ஆரம்பித்தது.

வழக்கமான விஷயம் என்றதும் வேகமாகத் தந்தையின் முகத்தை ஆராய்ந்து பார்த்துக் கொண்டிருந்த அரசு, அன்னை கண் கலங்கவும் “அம்மா இப்ப நீங்க எதுக்குக் கண் கலங்குறீங்க? அவ வரட்டும். நான் பேசிக்கிறேன்” என்று சமாதானப்படுத்தினான். அந்த நேரத்தில் மகனின் முகத்தை ஆராய்ந்து பார்த்தார் தேவநாயகம்.

இருவரும் ஒருவர் அறியாமல் ஒருவர் ஆராய்ந்து பார்த்துக் கொண்டதை கவனிக்காத அம்சவேணி “நீ பேசாதே…! போடா…! எல்லாம் உன்னால் தான். அதுவும் உங்க அப்பா உனக்கு மேல இருக்கார். நீ ஒரு காரணம் சொல்லுவ, உங்க அப்பா ஒரு காரணம் சொல்லுவார். கேட்டு, கேட்டு எனக்குச் சலிச்சுப் போச்சு” என்று அவர் புலம்ப ஆரம்பித்தார்.

மகனின் முகத்தில் ஒன்றையும் கண்டு பிடிக்க முடியாமல் மனைவியின் புறம் திரும்பிய தேவநாயகம் “இங்க பாரு அம்சா… எனக்கு எதை எப்ப செய்யணும்னு தெரியும். சும்மா புலம்பாம இருக்கப் பாரு. அவ வரட்டும். இந்த முறை அவ திரும்பப் பேசாத மாதிரி நான் பார்த்துக்கிறேன்” என்று ஒரு அதட்டல் போட்டவர், மகனை ஓரப்பார்வையாகப் பார்த்துக் கொண்டார்.

தந்தையின் பேச்சை காதில் வாங்கிக்கொண்டே ஒன்றும் அறியாதவன் போல், எழுந்து கைக்கழுவி விட்டு வந்த அரசு, “அம்மா இப்ப என்ன அவ நாளைக்கு வழக்கமா வர்ற நேரத்துல தான வருவா? நான் நாளைக்குத் திருச்சி ஸ்டேஷன் போய்க் கூப்பிட்டு வந்துறேன். முதலில் அவ வரட்டும். அப்புறமா நாம எதையும் பேசிக்கலாம். சரியா…? இப்ப அமைதியா போய்ச் சாப்பிட்டு படுங்க. நான் நாளைக்கு நாலு மணிக்கெல்லாம் கிளம்பி லோடு ஏத்த போகணும். நான் போய்ப் படுக்கிறேன். அப்பா நீங்களும் போய்ப் படுங்க” வேறு எந்த உணர்வையும் காட்டாமல் தன் அறைக்குச் சென்று விட்டான்.

அவனை புரியாத பார்வை பார்த்துவிட்டு “அதான் அவனே சொல்லிட்டான்ல? போ…! போய்ச் சாப்பிட்டு தூங்கு…!” என்று மனைவியை சமாதானம் செய்துவிட்டு தானும் எழுந்து சென்றார்.

தந்தையும், மகனும் ஆடும் கண்ணாமூச்சி பற்றி அறியாமல், இருவரும் தன்னிடமிருந்து நழுவுவதில் குறியாக இருப்பதைப் பார்த்து “நான் பேச ஆரம்பிச்சா அப்பாவும், மகனும் இப்படி எழுந்து போய்ருங்க. இருந்தாலும் இரண்டு பேரும் இவ்வளவு ஒற்றுமையா இருந்திருக்க வேண்டாம்…” என்று தன் புலம்பலை விடாமல் தொடர்ந்தார் அம்சவேணி.