கண்கள் தேடுது தஞ்சம் – 18

Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels

அத்தியாயம் – 18

அந்தக் கோவில் முழுவதும் ஆட்கள் நிறைந்திருந்தனர். வீட்டிற்கு ஒரு ஆள் வரவேண்டும் என்ற நியமனத்தின் படி அங்கே கூடியிருந்தார்கள்.

நியமனத்தையும் தாண்டி, என்ன பேச போகின்றார்கள்? என்ன முடிவு எடுப்பார்கள்? என்று தெரிந்து கொள்ளும் ஆர்வத்திலும் சிலர் வந்திருந்தார்கள்.

அந்த ஊரின் பழக்கம் அது. ஊருக்கு தேவையான பொதுவான முடிவை எடுக்கத் தண்டோரா போட்டு வீட்டுக்கு ஒருவரை வரவைத்து பேசி முடிவெடுப்பார்கள்.

அப்பொழுது அந்தக் கூட்டத்தில் இருந்த வயதில் மூத்த ஒருவர் பேச்சை ஆரம்பித்து வைத்தார்.

“எல்லாரும் வந்தாச்சுன்னு நினைக்கிறேன். இப்ப பேச்சை ஆரம்பிப்போம். இங்க நாம எல்லாம் எதுக்குக் கூடியிருக்கோம்னு உங்க எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கும். இந்த ஊருக்குள்ள இதுவரை எந்த ஒரு பேக்டரியும் இல்லை. ஆனா இப்ப பேக்டரி கட்ட போறேன் எடம் குடு. உனக்கு நான் வேலை கொடுக்குறேன்னு ஒரு பெரிய மனுஷன் வந்து நிக்கிறான். இது நம்ம ஊர் இதுவரைக்கும் சந்திக்காத பிரச்சனை. இதை இப்படியே வளர விட்டா நம்ம ஊரே தலைகீழா மாறிப் போகும். போனா போகுதுன்னு விட இது ஒன்னும் சாதாரண விஷயமும் இல்லை. நமக்கு எல்லாம் சோறு போட்ட நிலம். அதை இப்ப இருக்குற வறட்சியைக் காரணமா வச்சு விக்க நினைக்கிறது முட்டாள்தனமான காரியம். நாம பார்க்காத வறட்சியா? இல்ல நாம பார்க்காத ஏக போக விளைச்சலா?

விளைச்சல் வரும் போது எப்படி நாம அதைச் சந்தோஷமா அனுபவிக்கிறமோ, அதே போல இப்ப இருக்குற வறட்சியையும் அனுபவிச்சுட்டு போவோமே. ஆனா பேக்டரின்னு ஒன்னு கட்டிட்டா நாம பச்சை பசேல்னு பார்த்து வந்த பூமியை இனிமே கண்ணிலேயே பார்க்க முடியாம போய்ரும்.

என்னைப் பொறுத்தவரை என்னோட நிலம் எனக்குத் தாய் மாதிரி. அதை நான் யார் கேட்டாலும் விக்க மாட்டேன். இந்த ஊருக்குள்ள பேக்டரி வர்றதுல எனக்கு விருப்பம் இல்லை. இப்ப நீங்க எல்லாம் என்ன நினைக்கிறீங்கனு சொல்லுங்க யா” என்றார்.

அவர் பேசி முடித்ததும் சிறிது நேரம் அங்கிருந்தவர்கள் அவர்களுக்குள் ஏதோ சலசலத்துக் கொண்டிருந்தார்கள்.

அப்போது கூட்டத்தில் இருந்து “நீங்க சொல்றது உங்களுக்கு வேணா சரியா இருக்கலாம் பெரிசு. ஆனா நாங்க எல்லாம் இப்ப தான் படிச்சு முடிச்சிருக்கோம். எங்க படிப்புக்கு தகுந்த மாதிரி வேலைக்குப் போகத் தான் எங்களுக்குப் பிடிச்சுருக்கு. வெளியூரில் போய் வேலை தேடுறதுக்குப் பதிலா ஊருக்குள்ளேயே பேக்டரி கட்டி அதில் வேலையும் தானா கூப்பிட்டு கொடுக்குற நல்ல சான்சை நாங்க ஏன் விடணும் பெருசு? நீங்க எல்லாம் வாழ்ந்து முடிச்சவங்க. நாங்க இனி தான் வாழ போறோம். என் அப்பாரு மாதிரி நானும் ஏன் அந்த வயல்ல கிடந்து வேகணும்?

அதுவும் இப்ப மழை பேயாம தண்ணி இல்லாம காய்ஞ்சுப் போய்த் தான் கிடக்கு. அதை வித்தா கைநிறைய காசும் கிடைக்கும். எங்களுக்கு வேலையும் கிடைக்கும். லட்சுமி எங்கள தேடி தானா வருதுன்னு நாங்க நினைச்சுட்டு இருக்கோம். நீங்க என்னனா இன்னும் இப்படியே சொல்லிக்கிட்டு இருக்கீங்க?” என்று எகிறினான் படித்து விட்டு வேலை தேடிக் கொண்டிருக்கும் இளைஞன் ஒருவன்.

“அப்படிச் சொல்லுடா மாப்பிள்ள. இதையே தான் நானும் எங்க அப்பாகிட்ட சொன்னேன் நிலத்தைப் பேக்டரிகாரன்கிட்ட கொடுத்துட்டு நான் அந்தப் பேக்டரியில் வேலை பார்க்க போறேன்னு. ஆனா எங்கப்பன் முடியாதுன்னு சும்மா குதிக்கிறார்” என்று அவனுக்கு ஒத்து ஊதினான் அவனின் நண்பன்.

“அடேய்… சின்னப் பசங்களா! உங்களுக்கு நிலத்தை விக்கிறதுனா சாதாரணமா இருக்காடா? அந்த நிலத்தோட அருமை தெரியாம பேசிக்கிட்டு திரியாதிங்கடா. இப்ப நான் படிச்சுருக்கேன்னு சொல்லி பெருமை பேசிக்கிட்டுத் திரியுரிங்களே அந்தப் படிப்பை தந்ததே அந்த நிலம் தாண்டா. உங்க அப்பனுங்க மட்டும் மாடா அதில் உழைக்கலைனா நீங்க இப்படிப் பேசிக்கிட்டு திரியமுடியுமாடா?

நீ நாளைக்கு அந்தப் பேக்டரியிலேயே வேலை பார்த்தாலும் வீட்டுக்கு வந்து சோறை தாண்டா திங்கணும். அவன் உனக்குக் கொடுக்குற காசை திங்க முடியாது. அந்தச் சோறு வேணும்னா நிலம் வேணும் அந்த நிலத்தையே அழிச்சுட்டு நீங்க எல்லாம் காசை தின்னுகிறேன்னு சொல்லுங்கடா. இப்பயே எல்லாரும் நிலத்தை வித்துறலாம்” என்றார் இன்னொரு பெரியவர் ஆவேசமாக.

“இதெல்லாம் விதண்டாவாதம் பெருசு. ஏன்? நம்ம ஊரை விட்டா வேற யாருமே விவசாயம் செய்யாம போய்ருவாங்களா என்ன?” என்று இன்னொருத்தன் வாதாட…

“இப்ப நீங்க தாண்டா விதாண்டாவாதமா பேசறீங்க. உங்களைப் போல ஒவ்வொரு விவசாயியும் நினைக்க ஆரம்பிச்சுட்டா நாடே சுடுகாடா தான் போகும். அதுக்குத் தான் எல்லாப் பயலும் ஆசை படுறீங்க போல?” என்று பதில் சொன்னார் ஒருவர்.

இங்கே பெரியவர்களும், சிறியவர்களும் மாறி மாறி விவாதம் செய்து கொண்டிருக்க… அவர்கள் பேச்சை காதில் வாங்கினாலும் எதுவும் பேசாமல் ஒருவரை ஒருவர் முறைத்துக் கொண்டு அங்கே நின்றிருந்தார்கள் நாயகமும், மருதனும்.

ஒரு இளைஞனிடம் பேசிவிட்டு நாயகம் புறம் திரும்பிய ஒரு பெரியவர் “என்ன நாயகம்… எதுவும் பேசாம அமைதியா இருக்க? அப்ப உனக்கும் நிலத்தை விக்கிறதுக்குச் சம்மதமா?” என்று கேட்டார்.

மருதனை முறைத்துக் கொண்டிருந்த நாயகம் அவரின் புறம் திரும்பி “அய்யா! என்னைப் பத்தி உங்களுக்கே தெரியும். நான் எப்படிபட்டவன்னு! என் நிலம்னா எனக்கு உசுரு. அந்த உசுரு என்னை விட்டு போனா? நான் வெறும் பொணம் தான். அப்படிபட்ட என்னைப் பார்த்து நீங்களே இப்படி ஒரு கேள்வி கேட்கலாமா?” என்று நாயகம் உணர்ச்சிகரமாகப் பதில் சொல்ல….

“அது எனக்கும் தெரியும்ப்பா. ஆனா நீ கொஞ்சம் பெரிய இடத்து ஆளு. இப்படி நிலம் காஞ்சு போன நிலையிலும் நீ திரும்ப விவசாயம் பார்ப்பியான்னு சந்தேகத்தில் தான் கேட்டேன். அப்ப சரி உன் கருத்தையும் சொல்லி இந்த இளசுகளுக்குப் புரிய வை. படிச்சுட்டோம்னு திமிருல ரொம்பத் தான் ஆடுறானுங்க. விவசாயம்னா இவனுங்களுக்கு மட்டமா தெரியுது” என்று அவர் தன் ஆதங்கத்தைக் கொட்டினார்.

“நீங்க வேறய்யா! இங்க இளவட்டங்க மட்டுமா ஆடுறானுங்க. நிறையப் பயலுக இப்படித்தான் மூளை இல்லாம பேசிக்கிட்டு திரியுறானுங்க” என்று மருதனை ஓரக்கண்ணில் ஒரு பார்வை பார்த்தப் படி சொன்னார் நாயகம்.

நாயகம் தன்னைத் தான் சொல்கிறார் என்பதைப் புரிந்து மருதன் கோபம் பொங்க அவரை முறைத்து பார்த்தார்.

அவரின் முறைப்பை கண்டு கொள்ளாமல் அந்த இளைஞர்கள் பக்கம் திரும்பிய நாயகம் “ஏன்ப்பா பசங்களா! படிச்சிருக்கோம் படிச்சிருக்கோம்னு குதிக்கிறீங்களே? அந்தப் படிச்ச அறிவை கொஞ்சமா யோசிக்கவும் உபயோகப் படுத்தலாம்ல? பேக்டரி வந்தா உங்களுக்கு வேலை கிடைக்கிறது இருக்கட்டும். அந்தப் பேக்டரியை எங்க கட்டணும்? ஏதாவது தரிசான நிலத்தில் கட்டணும். ஆனா இங்க என்ன நடக்குது? இப்ப நாம தண்ணி இல்லாம கஷ்டப்படுறதை மனசுல வச்சுக்கிட்டு நம்ம நிலத்தை எல்லாம் பிடிங்கி போடலாம்னு ஒருத்தன் கிளம்பி வந்துருக்கான். நியாயமா பார்த்தா இந்நேரத்துக்கு நீங்க இளைஞர்கள் எல்லாம் சேர்ந்து பேக்டரி கட்டறத எப்படித் தடுக்கலாம்னு எங்களுக்கு யோசனை சொல்லிருக்கணும்.

ஆனா நீங்க தான் நிலத்தைத் தூக்கிக் கொடுக்க மொத ஆளா நிக்கிறீங்க. வருத்தமா இருக்குய்யா. அதை விட முக்கியமான விஷயம் பேக்டரி கட்டுறதால இப்ப வேணும்னா உங்களுக்குச் சொகுசா தெரியலாம். ஆனா அவன் பேக்டரி கட்டினா அதுல இருந்து வெளியேருற கழிவு தண்ணியை எங்க விடுவான்? நம்ம ஊரை சுத்தி ஓடுற ஆத்துல விடுவான். ஏற்கனவே இதுபோலச் சாயக் கழிவை ஆத்துல விட்டு அந்தப் பக்கம் இருக்குற ஊர் மக்கள் குடிக்க நல்ல தண்ணி இல்லாம கஷ்டப்படுறதா செய்திதாள்ல எல்லாம் படிச்சிருப்பிங்க தானே?

அப்புறமும் எப்படிக் கொஞ்சம் கூட அறிவில்லாம விக்கலாம் விக்கலாம்ன்னு குதிக்கிறீங்கன்னு தான் தெரியல” என்று தன் நியாயத்தைப் பேசிய நாயகம் கடைசி வரியை மருதனை கூர்மையாகப் பார்த்துக் கொண்டே சொன்னார்.

அதற்குப் பதிலுக்கு முறைத்த படி “ஆமா இவர் பெரிய அறிவாளிதான். அவனவன் கஷ்டம் அவனவனுக்குத் தான் தெரியும். ஆத்துக்குள்ள தண்ணி விடக்கூடாதுன்னு சொல்லிட்டா பிரச்சனை முடிஞ்சது” என்று பதில் சொன்ன மருதனை ஏற இறங்க பார்த்த நாயகம் “அத்தனை பெரிய பணக்காரன் நம்ம பேச்சை கேட்டு நாம சொல்றத தான் செய்வான்னு நினைச்சா அதை விட முட்டாள் தனம் எதுவும் இல்லை. கொஞ்ச நாளா சுயமா யோசிக்காம அடுத்தவன் பேச்சை கேட்டு ஆடுற நீயெல்லாம்…” என்று சொல்லி நிறுத்தியவர் அங்கே ஓரமாக நின்றிருந்த சுந்தரத்தை ஒரு முறை முறைத்தார்.

“உன் வார்த்தை எல்லாம் வரவர சரியில்லை நாயகம். வார்த்தையை அடக்கி பேசு” என்று பதிலுக்கு எகிறினார் மருதன்.

அவர்கள் இருவரும் மாறி மாறி வழக்காட ஆரம்பிக்க, “ஏய் நிறுத்துங்கப்பா… மொத ஊர் பிரச்சனையைப் பார்ப்போம். அப்புறம் நீங்க தோஸ்துங்க உங்க பிரச்னையைப் பார்த்துக்கோங்க” என்று ஒரு பெரியவர் இருவரையும் அடக்கினார்.

“யாருக்கு யாரு தோஸ்து? அதெல்லாம் போன வாரத்தோட முடிஞ்சது” என்று சொன்ன மருதன், நாயகத்தைக் கடுப்புடன் பார்த்து முகத்தைத் திருப்பிக் கொண்டார்.

நாயகத்திற்கு அவரின் செயல் கஷ்டமாக இருந்தாலும் புரிந்து கொள்ளாமல் நடந்து கொள்ளும் மருதனின் நடவடிக்கை அவரை எரிச்சலில் ஆழ்த்தி இருந்தது.

ஒருவாரத்திற்கு முன்பு வரை நண்பர்களாக இருந்த இருவரும் இப்போது ஒருவருக்கொருவர் முறைத்துக் கொண்டிருந்தனர்.


மருதன் நிலத்தை விற்க முடிவெடுத்த இரண்டு நாட்களில் இன்னும் சிலரும் தங்கள் நிலத்தை விற்பதை பற்றிப் பேசிக் கொள்ள விஷயம் ஊர் முழுவதும் பரவியது.

சுந்தரத்தின் கைங்கரியத்தின் படி சிறுநிலம் வைத்திருப்பவர்களை எல்லாம் முதலில் தூண்டில் போட, சிலர் தங்கள் பிள்ளைகளின் கட்டாயத்தினாலும், தங்களாலும் இனி உழைக்க முடியாது என்ற வயோதிகத்தாலும் சிலர் நிலத்தை விற்க முடிவெடுத்தார்கள்.

அது கொஞ்சம் கொஞ்சமாக ஊர் முழுவதும் விஷயத்தைப் பரப்பி விடத் தேவநாயகம் காதிலும் அந்தச் செய்தி சேர அவர் அதிர்ந்தே போனார்.

அதுவும் தன் நிலத்தைச் சுற்றி உள்ளவர்கள் எல்லாம் விற்றால் அடுத்து தன் நிலத்தில் தான் கைவைப்பார்கள் என்ற எண்ணத்தில் இன்னும் கொதித்துப் போனார்.

தன்னிடம் மட்டும் கேட்டு வரட்டும் உண்டு இல்லை என்று செய்துவிடுகிறேன் என்ற முடிவுடன் கோபத்துடன் இருந்தார்.

அப்போது அன்று மாலையில் மருதனிடம் இந்த விஷயத்தைப் பற்றிப் பேச அவரின் வயலுக்கு சென்றார். அவருக்கு மருதனும் நிலத்தை விற்க முடிவெடுத்தது இன்னும் தெரியாது. மருதன் அவருக்குள் முடிவு செய்திருந்தாரே தவிர இன்னும் சுந்தரத்திடம் சம்மதம் சொல்லவில்லை. அதனால் நாயகத்திற்கும் அவரின் முடிவு தெரியாமல் இருக்கச் சாதாரணமாகப் பேச்சை ஆரம்பித்தார் நாயகம்.

அங்கே மருதன் ஒரு மரத்தடியில் அமர்ந்து தன் நிலத்தையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்க… “என்ன மருதா! இப்படி வயலையே வெறிச்சுகிட்டு இருக்க? இப்படிக் காய்ஞ்சு போய்க் கிடைக்கேனு வருத்தமா இருக்கா? வருத்த படாதப்பா இந்த நிலை சீக்கிரம் மாறிடும். வர மாசத்தில் நல்ல மழை பெய்து நம்மள குளிர வைப்பா பூமி மாதா!” என்று பேசிய படி மருதன் அருகில் அமர்ந்தார்.

அவர் சொன்னதைக் காதில் வாங்கிய மருதன் “ஆமாப்பா! நிச்சயம் நிலைமை மாறும். ஆனா அப்ப அந்த நிலத்தை நான் பார்க்க முடியாதே! அதான் இப்பயே பார்த்துக்கிட்டு இருக்கேன்” என்று அவர் புதிராகச் சொல்ல…

நாயகம் புரியாமல் முழித்தார். “என்ன மருதா சொல்ற? பார்க்க முடியாதா? பார்க்காம எங்க போகப் போற?” என்று கேள்வி கேட்டார்.

அவரின் முகத்தைப் பார்த்த மருதன் “ஹ்ம்ம்…! நான் எங்கேயும் போகல. நிலம் தான் என் கையை விட்டுப் போகப் போகுது. அதைத் தான் சொல்றேன்” என்றார்.

அவர் பதிலில் திகைத்த நாயகம் “என்னப்பா சொல்ற? புரியுற மாதிரி சொல்லு?” என்றார் கடினம் சுமந்த முகத்துடன் கேட்டவருக்கு மருதனின் வார்த்தைக்கான அர்த்தம் பிடிப்பட்டது. ஆனாலும் அதை அவரால் நம்பத் தான் முடியவில்லை.

ஆனால் உன் யூகம் சரிதான் என்பது போல அசால்ட்டாக “உன் முகத்தைப் பார்த்தாலே உனக்குப் புரிஞ்சிருச்சின்னு தெரியுது. நீ நினைச்சது சரிதான். நான் நிலத்தை விற்க போறேன். வித்துட்டு பேசாம வேலைக்குப் போனோமா, உழைச்சோமா, பணம் சம்பாதிச்சோமான்னு இருக்கப் போறேன்” என்றார்.

மருதனின் அசால்ட்டான பேச்சை கேட்டதும் அதிர்ந்து சட்டென எழுந்த நாயகம் “ஹே மருதா…! நீ புரிஞ்சு தான் பேசுறியா? நிலத்தை விற்க போறதா சர்வசாதாரணமா சொல்ற? உன்கிட்ட நான் இதை எதிர்பார்க்கலை மருதா! உனக்கு என்ன பைத்தியமா பிடிச்சிருக்கு? அறிவு கெட்டதனமா பேசாம, யோசிச்சு பேசு!” என்று கோபத்துடன் கடிந்து கொண்டார்.

தானும் எழுந்து நின்ற மருதன் அவரின் வார்த்தையில் வெகுண்டு “இப்ப என்னத்த அறிவுகெட்டதனத்தைக் கண்டுட்ட நாயகம்? என் நிலத்தைத் தானே நான் விக்கப் போறதா சொன்னேன். அதுக்கு எதுக்கு நீ கிடந்து துடிக்கிற?” என்று கோபத்துடன் கத்தினார்.

பைத்தியம், அறிவுகெட்ட தனம் என்ற வார்த்தைகள் அவரைக் கோபப்பட வைத்தது.

சாதாரணமாக ஆரம்பித்த பேச்சு இருவரின் நிதானமில்லாத கோபத்தில் கடுமையாக மாற ஆரம்பித்ததை அவர்கள் உணரவே இல்லை.

நிலத்தை விற்கும் சிலரில் மருதனும் இருப்பார் என்று நாயகம் சிறிதும் எண்ணவில்லை.

மருதனுக்கு இன்னும் நல்லா யோசிச்சு முடிவெடுப்போம் என்ற எண்ணம் இருந்ததால் சுந்தரத்திடம் சம்மதம் எதுவும் சொல்லாமல் இருந்தார். அதனால் தான் மற்ற நிலத்துகாரர்கள் சொன்ன போது மருதத்தின் பேர் அடிப்படவில்லை.

மருதன் இப்போது தான் யோசித்து ஒரு முடிவுக்கு வந்தவர், விற்று விட உறுதியான முடிவை எடுத்துவிட்டு நிலத்தைச் சென்று ஒரு முறை பார்த்து வருவோம் என்ற எண்ணத்தில் இங்கே வந்து அமர்ந்து விட்டார்.

இப்போது நாயகம் தன்னை ஏனோ முட்டாள் போலப் பேசவும் அவருக்குக் கோபம் வந்து விட்டது.

அதே கோபத்துடன் “இங்க பாரு நாயகம் இது என் சொந்த விஷயம் நீ இதில் தலையிடாதே” என்று மருதன் சொல்ல…

நாயகத்திற்குச் சுருக்கென்று இருந்தது. மருதன் ஏன் இப்படிக் கோபப்படுகிறார் என்று அவருக்குப் புரியவே இல்லை.

என்னவோ தன்னை யாரோ போல் மருதன் பேசவும் அவராலும் தாங்கவே முடியவில்லை.

“என்ன மருதா! பேச்செல்லாம் ஒரு மாதிரியா இருக்கு? நான் தலையிடாம வேற யார் தலையிடுவா? நல்லது, கெட்டது எடுத்து சொல்றவன் தான் நண்பன். இப்ப என் நண்பன் நீ தப்பான ஒரு முடிவு எடுக்கும் போது என்னைக் கையைக் கட்டி வேடிக்கை பார்க்க சொல்றீயா? அது என்னால முடியாது. நான் உன்னை விக்க விடமாட்டேன்” என்றார் நாயகம்‌.

“நீ என்னடா என்னை விக்க விடமாட்டேன்னு சொல்றது? நான் வித்துக் காட்டுறேனா இல்லையானு பாரு” என்று எகிறினார் மருதன்.

மருதனை அந்த நேரத்தில் எந்தச் சைத்தான் பிடித்து ஆட்டியதோ தன் முடிவை நண்பனே ஆனாலும் நாயகம் குறை சொல்வதா என்ற எண்ணம் தலை தூக்க விடாத கோபத்துடன் பதிலுக்குப் பேசினார்.

அதற்கு அவரின் குணமும் ஒத்துதியது.

மருதனுக்குத் தன்னைத் தாழ்வாக யாராவது நினைத்தால் பேசினால் தன்னிரக்கமாக நினைப்பார்.

ஏற்கனவே தாழ்வு மனப்பான்மையால் உள்ளுக்குள் காயப்பட்டிருந்தவர் இப்போது நாயகம் தன்னை முட்டாள் போலப் பேசவும் இன்னும் இறுகி போனார். தன் நண்பனே தன்னை முட்டாள் என்பதா? என்ற எண்ணம் தான் வந்ததே தவிர, தன் நண்பன் தன் நல்லதுக்குத் தான் சொல்வான் என்ற எண்ணம் ஏனோ அந்தச் சூழ்நிலையில் அவருக்கு வரவில்லை.

அவருக்குள் இத்தனை நாளும் புதைந்திருந்த தாழ்வு மனப்பான்மை வார்த்தைகளாக அங்கே வெடிக்க ஆரம்பித்தது.

விவசாய நிலத்தை உயிராகக் கருதும் நாயத்திற்கு மருதனின் முடிவை தாங்கிக் கொள்ள முடியவில்லை. அதனால் அவரும் பதிலுக்குப் பதில் என்று பேச ஆரம்பித்தார்.

“எப்படி நீ விக்குறன்னு நானும் பார்க்கிறேன் மருதா!” என்று நாயகம் சவால் போலச் சொன்னார்.

“உனக்கென நாயகம் நீ காசு பணம் வச்சுருக்கிறவன். நீ தெனாவெட்டா பேசதான் செய்வ! ஆனா நான் அப்படியா? வெறும் பத்து ரூபா மெய்யெழுதுற அன்னாடம் காட்சி. என் கஷ்டம் உனக்கெங்கே புரிய போகுது?” என்று மருதன் பதில் சொல்ல…

“ஏன் மருதா இப்படியெல்லாம் பேசுற. நாளைக்கே மழை பேஞ்சா உன் நிலையும் மாறும். எப்பயும் இப்படியே இருந்துருவோம்னு ஏன் நினைக்கிற? உன் முட்டாள் தனமான முடிவை மொத மாத்து!’ என்று நாயகம் கொஞ்சம் பொறுமையாக எடுத்து சொல்ல முயன்றார்.

மருதன் எதையும் காதில் வாங்குவதாக இல்லை.

தான் நல்ல நிலைக்கு வர வேண்டும் என்றால் இந்த நிலத்தில் வேலை பார்த்தால் மட்டும் முடியாது என்ற எண்ணத்தை வலுவாகத் தன் மனதிற்குள் ஏற்றிக் கொண்டவர் அந்த முடிவில் இருந்து மாறுவதாக இல்லை.

“இல்லை நாயகம் முடியாது. நான் முடிவெடுத்துட்டேன். நாளைக்கு உன் முன்னாடியும், என் சகலைங்க முன்னாடியும் நானும் தலைநிமிர்ந்து இருக்கணும்னா இந்த விவசாயத்தை விட்டு வெளியே வந்து தான் ஆகணும். இந்த முடிவு நல்லா யோசிச்சு தான் எடுத்துருக்கேன். எப்பயும் அடுத்தவங்க முன்னாடி என் நிலை தாழ்ந்து தான் இருந்துருக்கு. இனியும் நான் இப்படியே இருக்க எனக்கு விருப்பம் இல்லை” என்று நீளமாகப் பேசிய மருதன் தன் முடிவில் தன் உறுதியைக் காட்டினார்.

“ஏன் மருதா உங்க அப்பா வாழ்ந்த வீடுன்னு அந்த வீட்டை இடிக்கவே அவ்வளவு யோசிச்ச நீ இப்ப உங்க அப்பா அள்ளும் பகலும் உழைச்ச இந்த நிலத்தை விக்கப் போறேன்னு சொல்றியே உனக்கே இது நியாயமா இருக்கா?” என்று கேட்டார்.

“அதையே தான் நானும் சொல்றேன் நாயகம். எங்க அப்பா மட்டும் இல்லாம நானும் அப்படி உழைச்சு என்னத்தைக் கண்டோம் சொல்லு? ஒரு கல்யாண வீட்டில் கூட அவமானப்படுற நிலையில் தானே நான் இருக்கேன்” என்று வருத்தமாகப் பேசிய மருதன் “இனி எதுவும் பேசி என்னை மாத்த நினைக்காதே நாயகம். என்னை என் வழியில் விட்டுரு. நண்பன்கிறதுக்காக நான் என் முடிவை மாத்திகிறதா இல்ல” என்றார்.

சொன்னதையே சொல்லும் மருதத்தைக் கடுப்புடன் நாயகம் முறைத்துக் கொண்டிருக்கும் போது அங்கே வந்தான் பத்தொன்பது வயதான தமிழரசன்.

பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு ஒரு விவசாயக் கல்லூரியில் சேர்ந்திருந்தான். கல்லூரி தூரமாக இருந்ததால் விடுதியில் தங்கி படித்துக் கொண்டிருந்தான். இப்போது வார விடுமுறையில் வந்தவன் தந்தையைத் தேடி வயலுக்கு வந்தவனுக்குத் தூரத்தில் வரும் போதே இருவரும் கோபமாகப் பேசிக் கொண்டிருப்பது தெரிந்தது.

அதனைக் கண்டு வேகமாக அருகில் வந்து “என்னாச்சுப்பா? எதுக்கு மாமா கூடக் கோபமா பேசிட்டு இருக்கீங்க?” என்று கேட்டான்.

ஏற்கனவே மருதன் சொன்னதையே சொல்லிக் கொண்டு இருந்த கடுப்பில் இருந்த நாயகம் “ஹ்ம்ம்…! உன் மாமனுக்குக் கிறுக்கு பிடிச்சுருச்சுடா! அதான் அறிவை அடகு வச்சவன் போலப் பேசிகிட்டுத் திரியுறான்” என்று எடுத்ததும் கடுப்புடன் மகனிடம் சொன்னார்.

‘ஏன் அப்பா அப்படிச் சொல்கிறார்?’ என்று புரியாமல் அரசு முழிக்க… மருதனுக்குக் கடும் கோபம் பொங்கியது.

தன்னை ஒரு சிறு பையனிடம் போய் மட்டமாகச் சொல்வதா? என்று நினைத்த மருதன் “வார்த்தையை அளந்து பேசு நாயகம். ஒரு பொடி பய கிட்ட போய் என்னைப் பத்தி குறை சொல்லிகிட்டு இருக்க! எனக்கா கிறுக்கு பிடிச்சுருக்கு. என்னை எந்த மாதிரி இளக்காரமா நினைச்சுருந்தா இப்படிச் சொல்வ?” என்று கத்தினார்.

இருவரின் கோபத்திலும் திடுக்கிட்ட அரசு “எதுக்கு மாமா இவ்வளவு கோபம்?” என்று கேட்டான்.

ஏற்கனவே நாயகத்தின் மீது கோபமாக இருந்தவர் அரசுவின் கேள்வியில் சின்னப் பையனுக்கு நான் விளக்கம் சொல்வதா என்ற எண்ணத்தில் முகத்தைச் சுளித்தார்.

அவரின் நடவடிக்கை சரியில்லாததை உணர்ந்த அரசு தன் தந்தையைக் கேள்வியாகப் பார்த்தான்.

நாயகம் அவனுக்கு நடந்ததைச் சொல்லி “எவ்வளவு சொன்னாலும் புரிஞ்சிக்க மாட்டேன்னு நிக்கிறான்டா” என்று தன் தலையில் லேசாக அடித்துக் கொண்டார்.

அவனுக்கும் தெரியும் தானே தன் அப்பாவிற்கு நிலத்தின் மீது எவ்வளவு பற்று என்று. அந்தப் பற்று அவனுக்கும் இருக்கிறதே. அதனால் தன் அப்பாவின் சார்பில் தான் பேச ஆரம்பித்தான்.

“ஏன் மாமா அப்பா சொல்றது சரி தான? பேக்டரி கட்டினா நம்ம ஊரே பசுமை இல்லாம அழிஞ்சு போய்ருமே? அதை நீங்க யோசிக்கவே இல்லையா. ஏன் மாமா இப்படித் தப்பான முடிவெடுத்துருக்கீங்க?” என்று கேட்டான்.

இருவரும் ஏதோ குற்றவாளி போல மாறி மாறி தன்னைக் கேள்வி கேட்பதா என்று நினைத்த மருதன் “என்னடா நான் பார்த்து வளந்தவன் நீ என்னை என்ன கேள்வி கேக்குறது? பேசாம போடா அங்கிட்டு” என்றார் கோபத்துடன்.

அவரின் கோபத்தைக் கண்டு கொள்ளாமல் “நியாயத்தை யார் வேணும்னாலும் கேட்கலாம் மாமா. அதே போல நல்லதையும் யார் வேணும்னாலும் எடுத்துச் சொல்லலாம். இதில் சின்னவன் என்ன? பெரியவன் என்ன?” என்று நிதானமாகத் திருப்பிக் கேட்டான்.

அவனின் நிதானம் அவரை மட்டமாக நினைப்பதாக அவருக்குத் தோன்ற “என்ன நாயகம் இது? சின்னப் பையனை பேச விட்டு வேடிக்கை பார்க்குற? இது சரியில்லை… சொல்லிட்டேன்” என்றார்.

“என்ன பண்றது மருதா? சின்னப் பையனுக்கு இருக்குற புத்தி கூட இப்ப உன்கிட்ட இல்லையே. சின்னப் பையன் எடுத்து சொல்ற அளவுக்கு இருக்கு நீ செய்ற காரியம். பின்ன சொல்லாம என்ன செய்வான்?” என்று நாயகமும் நிதானமாகப் பதில் சொன்னார்.

இருவரும் தன்னிடம் இப்படி வாதம் பண்ணுவதில் கடுப்படைந்த மருதன் “நீங்க இரண்டு பேரும் அறிவாளிங்க தாண்டா. என்னைப் பார்த்தா உங்களுக்கு முட்டாளா தான் தெரியும். ஆனா இந்த முட்டாளுக்கு உங்க புத்தி எதுவும் தேவை இல்லை. நான் வேற எதுவும் சொல்றதுக்குள்ள போங்க இங்க இருந்து” என்றார்.

“நல்லதை சொன்னா எடுத்துக்க வேண்டியது தானே மாமா. இதுக்கு எதுக்கு உங்களுக்கு இவ்வளவு கோபம் வருது?” என்று அரசு கேட்க…

“யப்பா சாமி… பெரிய மனுஷா! நீ ஒன்னும் எனக்கு நல்லது சொல்ல தேவை இல்லை. எனக்கே எது நல்லது? எனது கெட்டதுன்னு தெரியும். நீ உன் வேலையைப் பார்த்துட்டு போ” என்று மருதன் திருப்பிச் சொல்ல…

அதற்கு எதுவோ திருப்பிப் பதில் பேசப் போன அரசுவை கையைக் காட்டி நிறுத்திய நாயகம் “இப்ப முடிவா என்னதான் சொல்ற மருதா? உன் முடிவை மாத்த முடியுமா? முடியாதா?” என்று கேட்டார்.

“முடியாது நாயகம்” என்று மருதன் அழுத்தமாகச் சொல்ல…

அதில் நாயகத்திற்குக் கோபம் ஏற “இவன் முட்டாபயலே தாண்டா தமிழு! எப்படித் தேஞ்ச ரெக்கார்டு போலச் சொன்னதையே சொல்றான் பாரு!” என்று அரசுவிடம் சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவரின் சட்டையைப் பாய்ந்து பிடித்த மருதன் “இன்னொரு முறை முட்டாள்பயன்னு சொன்ன மரியாதை கெட்டுரும் நாயகம்” என்று வார்த்தைகளைக் கடித்துத் துப்பியவர் கோபம் கட்டுக்கடுங்காத போது கெட்ட வார்த்தையைச் சரளமாக உரைக்கும் மருதன் இப்போது நண்பன் என்றும் பாராமல் அசிங்கமான வார்த்தை ஒன்றையும் உரைத்து விட்டார்.

அதைக் கேட்டதும் மருதனா தன்னை இப்படிப் பேசுவது என்று நாயகம் அதிர்ந்து பார்க்க… தன் அப்பாவை சட்டையைப் பிடித்தது மட்டும் இல்லாமல் அசிங்கமாக வேறு பேசிய மருதனை இத்தனை நாளும் மாமா என்று அழைத்த உறவை மறந்து அவரின் சட்டையை அரசு பாய்ந்து பிடித்து விட்டான்.

“யோவ்… என்ன எங்க அப்பாவை மரியாதை இல்லாம பேசுற” என்று கேட்ட அரசு கோபத்தில் சட்டென நிதானம் இழந்து கையையும் ஓங்கிவிட்டான்.

அதுவரை அதிர்ந்து நின்றிருந்த நாயகம் வேகமாக அரசுவின் கையைப் பிடித்துத் தடுத்தார்.

அரசு இப்படித் தன்னை அடிக்க வருவான் என்று எதிர்ப்பார்க்காத மருதன் அப்படியே சமைந்து நின்றுவிட்டார்.

நாயகம் மகனை தன்பக்கம் இழுத்து “டேய் தமிழா! யாரை அடிக்கப் போற? உன் மாமாடா அவன். அவனைப் போய்க் கை ஓங்குற!” என்று நாயகம் சத்தம் போட்டார்.

“யாரு மாமா? உண்மையாவே என் மாமனா இருந்தா உங்களை அப்படிக் கெட்ட வார்த்தையில் திட்டி இருப்பாரா?” என்று அரசு கோபபட…

“டேய்…! நீ கையை நீட்டினது தப்பு. மன்னிப்பு கேளு!” என்று நாயகம் கட்டளையிட்டார்.

அதுவரை திகைத்துப் போயிருந்த மருதன் தெளிந்து “நல்லா இருக்கு நாயகம் உன் நியாயம். நீ என்னை முட்டா பையம்ப. உன் மகன் என்னை அடிக்க வருவான். நீ அப்படியே நல்லவன் போல மன்னிப்பு கேட்க சொல்லுவ! நல்லா அப்பனும் மவனும் நாடகம் போடுறீங்கடா” என்று அவமானத்திலும் கோபத்திலும் கொதித்தார்.

“இல்ல மருதா! இப்படி இவன் செய்வான்னு நான் நினைக்கலை. நீ கோவிச்சுக்காத. ஏதோ சின்னப் பையன் கோபப் பட்டுட்டான்” என்று நாயகம் சமாதானப் படுத்த…

“போதும் நிறுத்து நாயகம்! யாருக்கு வேணும் உன் மன்னிப்பு. எப்ப சின்னப் பைய என்னை அடிக்க வந்தானோ. அப்ப இருந்து நீ யாரோ நான் யாரோ. நமக்குள்ள ரத்த சம்பந்தமா என்ன? உறவு விட்டு போகாம இருக்க. நீயும் உன் பணக்கார புத்தியை காட்டிட்ட…

ஏற்கனவே உன் அப்பன் என்னைக் கண்டா ஏதோ நாயை பார்க்குறது போலப் பார்ப்பான். அப்ப ஏதோ விவரம் தெரியாததால பொறுத்துப் போனேன். ஆனா இப்ப உன் மகன் என்னை அடிக்க வாரான். இப்பயும் நான் பொறுத்துப் போவேன்னு நினைச்சியா?

நான் ஒன்னும் சூடு சொரணை கெட்டவன் இல்லை. வேணாம்! இனி உங்க சங்காத்தமே எனக்கு வேணாம். ஆளை விடுங்கடா சாமி” என்று என்ன பேசுகிறோம் என்று உணராமல் தன் ஆதங்கத்தை எல்லாம் கோபமாகக் கொட்டினார்.

அரசுவும் அப்போது கோபமாக இருந்தவன் “இவர்ட்ட எதுக்குப்பா நீங்க கெஞ்சிட்டு இருக்கீங்க? வாங்க நாம போகலாம்” என்று தன் தந்தையின் கையைப் பிடித்து இழுத்தான்.

நாயகத்திற்கும் மருதன் தன்னைக் கெட்ட வார்த்தையில் திட்டியது கோபத்தைத் தந்தாலும் விடு என்றால் விட்டுவிட நட்பு என்பது சாதாரணமான ஒன்றா? அதனால் இன்னும் பேசி பார்ப்போம் என்று தான் நினைத்தார்.

ஆனால் மருதனின் வார்த்தைகள் அவரைக் காயப்படுத்தியது. எப்போதோ தன் தந்தை பேசியதை மனதில் வைத்துக் கொண்டு தன் நட்பை கொச்சை படுத்தியதாக உணர்ந்தார்.

ஆனாலும் நிலம் விற்க போவதை அப்படிச் சாதாரணமாக விட முடியாதே. அதற்கு ஏதாவது தான் செய்தே தீர வேண்டும் என்று நினைத்துக் கொண்டார்.

மகன் தன்னை இழுத்தாலும் அங்கிருந்து செல்ல முடியாமல் நாயகம் தடுமாற… அதைப் பார்த்த மருதன் “அதான் செய்ய வேண்டியதையும், பேச வேண்டியதையும் அப்பனும் மகனும் செய்தாச்சே இன்னும் ஏன் இங்க நிற்கணும். இனி நமக்குள்ள எந்த ஒட்டு உறவும் வேணாம். போங்கடா இங்கிருந்து” என்று மருதன் கத்த.. .

அவமானமாக உணர்ந்த நாயகம் அங்கிருந்து நடந்தார். அரசு அவரின் பேச்சில் திரும்ப ஏதோ சொல்ல போக அவனின் கையைப் பிடித்து அடக்கிய நாயகம் அவனை அழைத்துக் கொண்டு சென்றார்.

பல வருட நட்பு இரு நண்பர்களுக்கு இடையே அங்கே திணறி கண்ணீர் விட்டு நின்றது.