கண்கள் தேடுது தஞ்சம் – 12

அத்தியாயம் – 12
உடை கிழிந்ததில் பேருந்தை விட்டு இறங்கி வழியில் இருக்கும் பல வீடுகள் தாண்டி தன் வீட்டிற்கு எப்படிச் செல்லப் போகின்றோம்? என்று புரியாமல் தவித்துப் போன பவளநங்கைக்குத் தமிழரசனை பார்த்ததும் அவளை அறியாமலே கண்ணீர் வழிந்து ஓடியது.

நங்கையையே கவனித்துக் கொண்டு அமர்ந்திருந்த அரசு, அவள் தன்னைப் பார்த்துக் கண்ணீர் விட ஆரம்பித்ததும், வேகமாகத் தான் இருந்த இடத்தை விட்டு எழுந்தவன் அவளுக்கு முன் காலியாக இருந்த இடத்தில் அவளை மறைத்த படி அமர்ந்து கொண்டான்.

அவன் அப்படி வேகமாக எழுந்து வந்து அமர்ந்ததை முதலில் புரியாமல் பார்த்த நங்கை, அவளை மறைத்த படி அமரவும், முன்பக்கத்தில் இருக்கும் ஆட்கள் திரும்பி பார்த்தால் தன் கண்ணீர் தெரிந்து விடும் என்று தான் அப்படி அமர்ந்தான் என்று உணர்ந்தவள், உடனே தலையைக் குனிந்து தன் கண்ணீரை தோளில் துடைத்துக் கொண்டாள்.

கண்ணீரை துடைத்து விட்டு நிமிர்ந்து அவன் ஏதாவது கேட்பானா? என்பது போலப் பார்த்தாள். அரசு முகத்தில் எந்த உணர்ச்சியும் இல்லாமல் தன் கைகளால் முன் இருந்த கம்பிகளை இறுக பற்றிய படி அமைதியாக ஜன்னல் வழியே பார்த்தபடி வந்தான்.

அவனாக எதுவும் பேசவில்லை எனவும் நங்கையின் மனது சோர்ந்து போனது. அவனிடம் வம்பிலுத்தாலும் ஒரு வார்த்தை கூடச் சில வருடங்கள் நேருக்கு நேராகப் பேசாமல் இருந்தவளுக்கு இப்போது பேச வார்த்தையே வரவில்லை.

தன் கண்ணீரை கண்டு அருகில் வந்தவன் அவனாக என்னவென்று கேட்பான். அப்பொழுது பதில் சொல்லலாம் என்று நினைத்து நங்கை சிறிது நேரம் அமைதியாக இருந்தாள். ஆனால் எவ்வளவு நேரம் அப்படியே இருக்க முடியும்?

அவனை மீண்டும் பார்த்தாள் நங்கை. நான் முதலில் பேசப் போவது இல்லை என்பதைப் பறைச் சாற்றியது தமிழரசனின் முக இறுக்கம்.

நங்கை நல்ல மனநிலையில் இருந்திருந்தால் அவன் இப்படி இருப்பதற்கு ஏதாவது துடுக்குத் தனமாகப் பேசியிருப்பாள். ஆனால் தற்போதைய அவளின் நிலை வேறு எதையும் சிந்திக்க விடாமல் செய்திருந்தது.

பேச தயங்கிய படி பார்வையை ஜன்னல் பக்கமாகத் திரும்பி பார்த்த நங்கையிடம் பதட்டம் கூடியது. வெளியே தெரிந்த காட்சிகள் ஊர் நெருங்கி கொண்டிருப்பதை எடுத்துரைத்தது.

இன்னும் பத்து நிமிடங்களில் அவள் இறங்க வேண்டும். அதற்குள் அவனிடம் தன் நிலையைச் சொல்ல வேண்டுமே என்று வேகமாக அவன் பக்கம் திரும்பினாள். இன்னும் எந்த மாற்றமும் இல்லாமல் அதே நிலையில் தான் அமர்ந்திருந்தான் பைந்தமிழரசன்.

அவன் ஏன் முதலில் பேசாமல் அப்படி அமர்ந்திருக்கிறான் என்று அவளுக்கும் புரிந்தது. ஆனால் தன் கண்ணீரை பார்த்தும் பேச மறுக்கும் அவனின் மௌனம் கண்டு கோபம் எழுந்தது. ஆனால் இது கோபம் கொண்டு முறுக்கிக் கொண்டிருக்கும் நேரம் இல்லையே?

தன் கோபத்தை விடுத்து அவன் முகம் பார்த்தவள் மனதில் அவனின் மௌனம் சோர்வை தந்தாலும், அதையும் தாண்டிய தற்போதைய தன் நிலை மட்டுமே இப்போது பெரிதாகத் தோன்றியது. அதனால் தன் தயக்கத்தை உதறி தள்ளி தொண்டையை அடைத்த இறுக்கத்தைக் கலைந்து விட்டு, தன் செவ்விதழை மெதுவாக அசைத்து, மெல்லிய குரலில் “மாமா” என்றழைத்தாள் பாவையவள்.

அவ்வளவு நேரமும் எந்தப் பாவனையும் காட்டாமல் இறுக்கமாய் அமர்ந்திருந்தவன், நங்கையின் அழைப்பில் சட்டெனத் திரும்பி கூர்மையுடன் அவளைப் பார்த்தான். அவனின் கைகள் பற்றி இருந்த கம்பியை மேலும் இறுக்கி பிடித்தது.

தன் அழைப்பினால் அரசுவிடம் ஏற்பட்ட உணர்ச்சிகளைக் கண்டவள் தானும் அவன் கண்களைச் சந்தித்தாள். ஆனால் சில நொடிகளுக்கு மேல் அவன் கண்களின் கூர்மையைத் தாங்கும் சக்தியற்று தன் கண்களை மெல்ல தழைத்துக் கொண்டாள்.

அவன் கண்களில் கண்ட கேள்விக்குப் பதில் சொல்ல முடியாமல் தவித்துப் போனாள். பின்னே இத்தனை நாளும் அவன் காது படவே அவனைத் தன் மாமன் இல்லை என்று மறுத்தவள் ஆகிற்றே!

இப்போது அழைத்தால் ‘நீயா என்னை அழைத்தாய்?’ என்பது போலப் பார்க்கத்தானே செய்வான் என்று தனக்குள்ளேயே புலம்ப ஆரம்பித்தவளை அரசுவின் செரும்பல் ஒலி கலைத்தது.

தயக்கத்துடன் நிமிர்ந்தவள் இப்போது ‘நீயே பேச்சை ஆரம்பியேன்’ என்பது போலப் பார்த்தாள்.

அவளின் கண்களின் இறைஞ்சலில் மனம் இறங்கியவன் மெதுவாக “எதுக்கு அழுத நங்கா?” என்று அமைதியாகக் கேட்டான். வெகு நாட்களுக்குப் பின் அவளிடம் நேராகப் பேசியவன் குரலில் லேசான தடுமாற்றம் தெரிந்தது.

அவனின் “நங்கா” என்றழைப்பில் பெண்ணவளின் மனது நெகிழ்ந்து தான் போனது.

வருடங்கள் கடந்த அவனின் அழைப்பு ஏனோ நங்கையின் கண்களை மேலும் கலங்கத்தான் வைத்தது. உணர்ச்சி வசப்பட்டவள் போல உடலில் ஒரு சிலிர்ப்பு ஓடியதை போல உணர்ந்தாள்.

தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டாள். அரசுவின் நங்கா என்ற அழைப்பில் அவளிடம் இருந்த கொஞ்ச, நஞ்ச தயக்கமும் ஓடிப் போனது. தொண்டையைச் செருமி தன் தயக்கத்தைக் கலைந்து ‘அது வந்து மாமா…” என்று லேசாக இழுத்து, பின்பு மெல்ல “என் ட்ரஸ்” என்று மட்டும் சொல்லிவிட்டு கண்களால் தன் கை பக்கம் காட்டினாள்.

அவள் முகத்தில் வந்து போல உணர்ச்சி குவியலை கண்ணெடுத்துக் கொண்டிருந்தவன், அவள் சொல்ல வருவது புரியாமல் அவள் கண் போன பக்கம் பார்த்தான். அவள் இறுக்கி பிடித்திருந்ததில் கிழிந்தது பார்த்ததும் தெரியவில்லை என்றாலும் அவள் உடையில் தான் ஏதோ பிரச்சினை என்று கொஞ்சம் புரிந்தது.

முழுதாக அறிந்து கொள்ள ‘அங்கே என்ன?’ என்பது போல் அவளைப் பார்த்தான்.

‘எப்படிச் சொல்வது?’ என்பது போல ஒரு கணம் தயங்கியவள், பின்பு ஒரு பெருமூச்சை வெளியிட்டுத் தன்னைச் சமனப்படுத்திக் கொண்டு “பஸ்ஸில் ஏறும் போது என் சுடிதாரை யாரோ மிதிச்சிட்டாங்க மாமா. ஒரு சைட் புல்லா கிழிஞ்சிருச்சு” என்று மெதுவான குரலில் கொஞ்சம் வேகமாக அவனிடம் சொல்லிவிட்டவள், மேலும் கண் கலங்கிய படி “இதோட இறங்கி எப்படி வீட்டுக்கு நடந்து போறதுன்னு தெரியல” என்றாள்.

“ஓ…!” என்று அவள் சொன்னதைப் பொறுமையாகக் கேட்டு கொண்டவனுக்கு அவள் நிலை நன்றாகப் புரிந்தது. எப்படித் தவித்துப் போய் இருப்பாள் என்பதை அவளின் கண்ணீரும் நன்றாகவே உணர வைத்தது. தான் இனி என்ன செய்வது? என ஒரு நிமிடம் கண்ணை மூடி யோசித்தான்.

பின்பு இறங்கும் நேரம் நெருங்கிக் கொண்டிருப்பதைக் கவனத்தில் கொண்டு அவளின் பக்கம் திரும்பியவன் “இறங்கும் போது என்னை ஒட்டியே நடந்து வா!” என்று மட்டும் சொன்னவன் எழுந்து அவள் இருக்கைக்கு நேராக வந்து நின்றான்.

அவன் நிற்கவும் அவர்கள் ஊர் வரவும் சரியாக இருந்தது. அவர்கள் ஊரின் மற்ற ஆட்கள் முன் படியின் வழியே இறங்கிக் கொண்டிருந்தார்கள். நங்கை கவனமாக எழுந்து தன் உடையை இறுக பற்றியப்படி அவன் பக்கத்தில் நெருங்கி வந்தாள்.

அவள் தன் அருகில் வந்ததும் அவளை மறைத்தார் போல நின்று கொண்டு அவளை முதலில் இறங்க சொல்லி, தான் பின்னால் இறங்கினான்.

அவள் இறங்கும் போது எங்கே தன் உடல் பாகம் தெரிந்து விடுமோ என்று பயந்து கொண்டே இறங்கினாள். அவள் பயந்தது போல இடுப்பில் இருந்து லேசாகத் துணி விலகத் தான் செய்தது. ஆனால் பின்னால் வந்த அரசு அவளை மறைக்கும் வகையில் அவளை நெருங்கியே இறங்கி வந்தான். அதனால் வேறு யாரும் பார்த்தாலும் தெரியாது என்று நிம்மதியில் அவன் சொன்ன படி அவனை ஒட்டியே இறங்கினாள்.

பேருந்தை விட்டு இறங்கியதும் இன்னும் நெருங்கி நின்று வேகமாக அவளை மறைத்தப்படி அங்கே அருகில் இருந்த மரத்தடி பக்கம் நடக்கக் கைகாட்டினான்.

அப்படி நடக்கும் போது இருவரின் தோள்களும் உரசிட நேர்ந்தது. ஆனால் இருவருமே அதை உணரும் நிலையில் கூட இல்லை.

நங்கை பதட்டத்தில் இருக்க, அரசு சுற்றுப்புறத்தை ஆராய்ந்தப் படி வந்தான். அவனின் கவனம் எல்லாம் ‘அடுத்து என்ன செய்வது?’ என்று இருந்ததால் வேறு எந்த எண்ணமும் அண்டவில்லை.

பேருந்து நகரும் முன் அவளை வேகமாக அந்த மரத்தின் பின் புறம் நகர்த்திச் சென்று நிறுத்தி விட்டு சாலையின் புறம் வந்தவன் ஆட்கள் நடமாட்டத்தைப் பார்த்தான்.

அந்தச் சின்ன மைதானம் போன்ற இடத்தில் சில சிறுவர்களும், இளவட்டங்களுமாகக் கிரிக்கெட் விளையாட்டிக் கொண்டிருந்தார்கள்.

அவர்களைத் தாண்டி உடையை வித்தியாசமாகப் பிடித்துக் கொண்டு எப்படி நடந்து செல்ல முடியும்? என யோசித்தவன் என்ன செய்ய என்று சுற்றிலும் பார்க்க, அவர்களின் நல்ல நேரமாக எதிரே இருந்த டீக்கடை மூடி இருந்தது.

‘நல்ல வேளை அந்தக் கடை அண்ணன் ஏதோ விஷேசத்திற்குப் போய்ட்டார் போல? இல்லனா கடையில் வேற ஆட்கள் இந்த நேரத்தில் இருந்திருப்பாங்க’ என்று எண்ணிக்கொண்டே கடைக்கு அப்பால் பார்த்தான். அங்கே இருந்த சிறு வீட்டை கவனித்தவனுக்கு அங்கே செல்வதே சரியாகத் தோன்ற… “நங்கா வா!” என்று குரல் கொடுத்தான்.

அவள் மரத்தின் பின் இருந்து வந்து அவனுடன் நடந்தாள்.

விளையாடுபவர்கள் கவனத்தைக் கவராத வகையில் அவளை அழைத்துக் கொண்டு அந்த வீட்டை நோக்கி சென்றான்.

செல்லும் போது அருகருகில் நெருங்கி தோளோடு தோள் உரச நேர்ந்தாலும் இப்போதும் அவர்கள் கவனத்தில் அது ஏறவே இல்லை. அந்த வீட்டின் போய் நின்று “ஆத்தா…” என்று அரசு குரல் கொடுத்தான்.

“யாருய்யா?” என்று கேட்டுக்கொண்டே வெளியே வந்தார் தங்கம்மாள் பாட்டி.

அரசுவை பார்த்ததும் “என்ன அதிசயம்யா? இந்தக் கிழவி வீட்டுக்கு வராதவக வந்துருக்கீக” என்று வியந்து வரவேற்றார்.

“வாய்யா உள்ளார வா!” என்று அழைக்க, அவன் நங்கையின் புறம் திரும்பி “போ…!” என்று தனக்கு அருகில் இருந்தவளிடம் சொன்னான்.

அதுவரை நங்கையைக் கவனிக்காத பாட்டி, அவளைப் பார்த்ததும், வாயை பிளத்து “ஆத்தாடி…!” என நாடியில் கை வைத்தவர் ‘என்னாதிது!! சண்ட கோழிக இரண்டும் சோடி போட்டு வந்துருக்குதுக’ என்று மனதில் எண்ணமிட்டப்படி இருவரையும் அருகருகே பார்த்து அதிசயத்து அயர்ந்து போனார்.

அவரின் பார்வையைப் புரிந்தவன் போல “அவ சொல்லுவா ஆத்தா” என்று அவரிடம் சொல்லிவிட்டு, நங்கையிடம் திரும்பி “இந்தா நங்கா! உள்ள போய் உங்கம்மாவுக்குப் போன் போட்டு வேற துணி எடுத்துட்டு வர சொல்லு!” என்று போனைக் கொடுத்தான்.

அவனிடம் சரி என்பதாகத் தலையசைத்தவள் உள்ளே சென்றாள். அரசு அங்கே இருந்த திண்ணையில் அமர்ந்து கொண்டான்.

உள்ளே சென்றவள் பாட்டியிடம் விவரம் சொல்ல “அட பாவமே!” என்று அதிர்ந்து “மொத போனை போட்டு உங்கம்மாவை வர சொல்லு தாயி! இங்கனையே துணிய மாத்திட்டு போய்ரு. இப்படிப் பிடிச்சுட்டே எப்படி வீடு போய்ச் சேர? துணி கிழிஞ்சி போய்ப் போறதை யாராவது வீம்புக்காரி பார்த்திருந்தா, ஊரு பூரால்லாம் சேதி பரப்பி விடுவா. அதும் ஊருக்காரவக வாயி எந்த வாயி, எப்படி மெல்லும்னே சொல்ல முடியாது. நல்ல வேளை உன் மாமன் கண்ணில் பட்ட” என்று தன் பாட்டில் புலம்பியவரின் வார்த்தையில் இருந்த உண்மையில் நங்கையின் உடலில் ஒரு நடுக்கம் ஓடி மறைந்தது.

ஊர் வாய் எப்படியும் பேசும் தானே? அதுவும் கிராமத்தில் நொடியில் ஊருக்கே விஷயம் பரப்பபட்டு விடும். நல்ல வேளை அப்படி எதுவும் நேராமல் தான் தப்பினோம் என்று நினைத்துக் கொண்டாள்.

ஆனாலும் இன்னும் மனதில் ஒட்டி இருந்த நடுக்கத்துடன் வீட்டிற்கு அழைத்து “அம்மா…” என்று அழைத்தவுடனேயே, அவளை முழுதாகப் பேச விடாமல் அந்தப் பக்கம் இருந்து இருமடங்கில் சத்தம் வந்தது.

“அடியே…!‍ எங்கடி போய்த் தொலைஞ்ச? இன்னைக்கு வாணி உன் கூட வரலையாம்ல? நீ மட்டும் எதுக்குப் போன? இன்னும் ஏன் வரலை?” என்று ஈஸ்வரி அவளை இன்னும் காணாத தவிப்பில் கத்த ஆரம்பித்தார்.

அவர் கத்தலில் கொஞ்சம் தெளிந்தவள் தன்னைப் பேச விடாத கடுப்பில் “எம்மா…!” என்று அவருக்கு மேலாகக் கத்தினாள்.

அந்தக் கத்தல் வெளியே அமர்ந்திருந்த அரசுவிற்குக் கேட்க “ஹப்பா…! தெளிஞ்சுட்டா போல?” என்று நினைத்தவனின் அதரங்கள் சிரிப்பில் விரிந்தன.

‘இந்த வாயிக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல. என்ன பண்ணறதுன்னு தெரியாம கண்ணுல தண்ணியா ஊத்திட்டு இப்ப சவுண்டை பாரு’ என்று நினைத்த படி அதே மெல்லிய சிரிப்புடன் அமர்ந்திருந்தான்.

உள்ளே நங்கை “எம்மா! நான் சொல்றதை மொத கேளு!” என்றவள், தன் நிலையைச் சொல்லி அதற்கு அவரின் திட்டலையும் வாங்கிக் கொண்டு உடை எடுத்து வர சொன்னவள் போனை வைத்தாள்.

போன் பேசிவிட்டு கதவின் ஓரம் தன்னை மறைத்துக் கொண்டே அரசுவிடம் போனை நீட்ட, வாங்கிப் பையில் போட்டுக் கொண்டவன் “நீ உங்கம்மா வந்ததும் போ நங்கா! நான் கிளம்புறேன்” என்றான்.

“ஹ்ம்ம்…!” என்றவள் அவன் முகத்தையே சில நொடிகள் பார்த்தாள். அரசுவும் ஒரு நொடி அவளைப் பார்த்தவன் வேறு எதுவும் பேசாமல் அங்கிருந்து சென்றான்.

அவன் போவதையே பார்த்த நங்கை, அமைதியாக உள்ளே சென்று அமர, பாட்டி அவளிடம் பேச்சுக் கொடுத்து அவளின் கவனத்தைத் தன் பக்கம் திருப்பினார்.

சிறிது நேரத்தில் ஈஸ்வரி உடையை எடுத்துக் கொண்டு வர, அதை மாற்றிக் கொண்டு இருவரும் அங்கிருந்து கிளம்பினார்கள். வீட்டிற்குச் சென்றதும் ஈஸ்வரி அவள் தனியே போனதற்காகத் திட்டி தீர்த்தார்.

“வாணி உன்னோட வரலைன்னு எனக்கு மதியம் தான் தெரியும். அப்ப இருந்து உனக்குப் போன் பண்ணி பார்த்துட்டேன். போன் அடிச்சுட்டே இருக்கு எடுக்குற வழியைக் காணோம். உங்க அப்பாகிட்ட சொன்னா அதெல்லாம் என் பொண்ணு பத்திரமா வந்திருவா. நீ கவலை படாதேனு என்னை அடக்குறார். பஸ்ஸில் ஏறும் போது பார்த்து ஏற வேண்டியது தானே? துணி கிழிஞ்சது வேற யாருக்காவது தெரிஞ்சிருந்தா மானமே போயிருக்கும்.

ஊர் சுத்திக் கழுதை! உன்னைக் கல்யாணம் முடிச்சுக் கொடுத்தா தான் நிம்மதி. ஆனா அதுக்கும் இங்க வழியைக் காணோம்” என்று அவர் திட்டின திட்டிற்கு எல்லாம் சாதாரண மனநிலையில் இருக்கும் போது என்றால் பதிலுக்குப் பதில் வார்த்தையாடும் நங்கை, இன்று எதுவுமே காதில் விழாதது போல அமர்ந்திருந்தாள்.

ஈஸ்வரிக்கு அரசு உதவியது தெரியவில்லை. நங்கை சொல்லாமல் இருக்க, போனும் வீட்டுப் போன் என்பதால் நம்பர் மாறி மகள் அழைத்தது தெரியவில்லை. பேருந்தை விட்டு மகளாக அந்தப் பாட்டி வீட்டிற்குப் போனதாக நினைத்துக் கொண்டார். அந்தப் பாட்டியும் அரசு வந்தது தெரிந்தால் அவர்களுக்குள் எதுவும் பிரச்சனை வருமோ? என்று நினைத்துச் சொல்லாமல் விட்டுவிட்டார்.

வாயாடும் மகள் அந்த நேர சூழ்நிலையைச் சமாளிக்கத் தெரியாமல், யோசிக்கக் கூட முடியாமல் திணறிப் போனதை அவர் அறியவில்லை. தொடர்ந்து திட்டியவர் நங்கையின் அமைதியில் பேச்சை நிறுத்தி அவளைப் பார்த்தார்.

‘இன்னைக்கு நடந்த விஷயத்தில் பயந்துட்டா போல?’ என்று அவள் அமைதியைப் பார்த்து முடிவுக்கு வந்தவர், இரவு உணவு தயாரிக்கப் போனார்.

நங்கை காதில் இன்னும் அரசு அழைத்த ‘நங்கா’ என்ற சொல்லே ஒலித்துக் கொண்டிருந்தது.

‘எத்தனை வருஷம் ஆகிருச்சு? அவன் தன்னை அப்படி அழைத்து?’ என்று நினைத்தவள் கண்ணில் கண்ணீர் கசிய ஆரம்பித்தது.

‘மாமா!’ என்று அவனை அழைக்கக் கூடாது என அவளுக்கு இருந்த வைராக்கியம் இன்று உடைந்ததை நினைத்து ‘இப்படியாடி தோத்துப் போவ?’ என்று தன் தலையில் லேசாக அடித்துக் கொண்டாள். ஆனால் அடித்துக் கொண்டதற்கு மாறாக அவள் இதழ்கள் புன்னகைத்துக் கொண்டது.

இன்றைய நாள் ஆரம்பித்த விதத்தையும், முடிந்த விதத்தையும் இரவு உணவை அரையும், குறையுமாக முடித்துக் கொண்டு வந்து படுக்கையில் விழுந்தப்படி நினைத்துப் பார்த்த நங்கையின் மனதில் பலவிதமான எண்ணங்கள் அலை மோதியது.

இன்று பேருந்தில் சரியான நேரத்திற்கு அரசு வந்ததை நினைத்துப் பார்த்தாள். தமிழரசன் எப்படிப் பேருந்தில் வந்தான் என்று அவளுக்கு இன்னும் புரியவே இல்லை. அவன் அதிகம் இருசக்கர வாகனம் தான் பயன்படுத்துவான் என்று அவளுக்குத் தெரியும்.

அப்படி இருக்க, ‘அவன் எப்படிப் பஸ்ஸில், அதுவும் தன்னையே கவனித்த படி அமர்ந்திருந்தான்?’ என்று யோசித்தவளுக்கு எதுவுமே ஞாபகத்திற்கு வரவில்லை. ‘தான் தான் எதையும் யோசிக்க மறந்து போனோமே’ என்று தன்னையே கடிந்துக் கொண்டாள்.

ஆனாலும் தான் சொன்னவுடன், வேறு எதுவும் பேசாமல் உடனேயே உதவி செய்த தன் மாமனின் மனம் அவளுக்குத் தித்திப்பாய் இனித்தது.

‘நீ மாறவே இல்லை மாமா. சிறுவயதில் இருந்த அதே குணம் இன்னும் போகலைன்னு நல்லா புரிய வச்சுட்ட மாமா’ என்று தனக்குள் அவனுக்குப் பாராட்டுப் பத்திரம் வாசித்துக் கொண்டாள்.

சிறுவயது என்று யோசித்ததுமே தாங்கள் சந்தோஷமாக இருந்த நாட்கள் அவளின் நினைவடுக்கில் வந்து வரிசைக் கட்டி நின்றன.

அதோடு தான் ‘மாமா’ என்று இனி சொல்ல மாட்டேன் என்று தன் மனதில் உறுதி எடுத்த நாளையும் நினைத்துப் பார்த்தப் படி இரவை கழிக்க ஆரம்பித்தாள்.


மாலையில் நங்கையைத் தங்கம்மாள் பாட்டியின் வீட்டில் விட்டுவிட்டு தன் வேலைகளையும் முடித்து விட்டு, இரவு உணவிற்குப் பிறகு தன் அறைக்கு வந்த தமிழரசன் எப்பொழுதும் வழக்கமாக அறைக்கு வந்ததும் அன்றைய கணக்கு வழக்கு பார்ப்பவன் இன்று அந்த எண்ணமே இல்லாதவன் போலப் படுக்கையில் விழுந்தான்.

அவன் மனதில் பேருந்தில் ஜன்னலோரம் அமர்ந்து சுற்றுப்புறம் மறந்து வெறித்த பார்வையுடன் அமர்ந்திருந்த நங்கை வந்தாள்.

அன்று மாலை தன் ஊரில் இருந்து மூன்று ஊர் தள்ளி இருக்கும் இன்னொரு ஊரிற்கு ஒருவரை பார்ப்பதற்காக இருசக்கர வாகனத்தில் சென்றிருந்தான்.

அவரைப் பார்த்து விட்டு திரும்பும் வழியில் சக்கரம் பஞ்சராகி விட, அந்த ஊரின் பேருந்து நிறுத்தம் அருகில் இருந்த பஞ்சர் கடையில் வண்டியை விட்டுவிட்டு அங்கிருந்த இருக்கையில் வண்டி தயாராவதற்காகக் காத்திருந்தான்.

அப்பொழுது நங்கை வந்த பேருந்து அங்கே வந்து நின்றது. தற்செயலாக அவன் பார்வையைப் பேருந்தின் புறம் திரும்ப, கண்ணில் கண்ணீரை அணைக்கட்டியப்படி வெளியே வெறித்த படி இருந்த நங்கையைப் பார்த்ததும் அதிர்ந்தான்.

‘என்னாச்சு? என்ன இவ இப்படி உட்கார்ந்து இருக்கா?’ என்று எண்ணியவன் அவள் தன்னைக் கவனித்தாளா என்று கூர்ந்து பார்த்தான்.

ம்கூம்…! அவள் அப்படியே தான் இருந்தாளே தவிரக் கண்ணைக் கூடச் சிமிட்டவில்லை.

அவளின் அந்தத் தோற்றம் வித்தியாசமாகப் பட, அதற்கு மேல் அவளை அப்படிப் பார்த்துக் கொண்டிருக்க முடியாமல், சட்டென இருக்கையில் இருந்து எழுந்தான்.

அவன் எழுந்ததைப் பார்த்து பஞ்சர் கடை ஆள் “இன்னும் கொஞ்ச நேரம் தம்பி. இந்த வண்டியை முடிச்சுக் கொடுத்துட்டு உங்க வண்டிய பார்க்கிறேன்” என்றார்.

அவர் சொன்னதும் தான் தன் வண்டி அங்கே நிற்பதை பற்றி நினைத்தவன் “பரவாயில்ல அண்ணே. மெதுவாவே பாருங்க! எனக்குப் பக்கத்து ஊருல ஒரு வேலை இருக்கு. நான் பஸ்ஸில் போய் அதை முடிச்சுட்டு வந்துடுறேன். நீங்க வண்டியை ரெடி பண்ணி வைங்க” என்று சொல்லி விட்டு கிளம்ப ஆரம்பித்த பேருந்தில் வேகமாகப் பின்பக்கம் தொத்திக்கொண்டு ஏறிவிட்டான்.

பேருந்தில் ஏறி விட்டாலும் நங்கையிடம் பேச யோசித்துப் பின் இருக்கையில் சென்று அமர்ந்து விட்டான். முன்பக்கம் மட்டுமே ஆட்கள் இருந்ததால் அவளையே கவனித்துக் கொண்டு வந்தான்.

அவன் ஏறினதை பார்த்து நடத்துனர் வந்து பயணச்சீட்டு கொடுத்து விட்டு சென்றதை கூட நங்கை கவனிக்கவில்லை என்றதும் அருகில் சென்று பார்ப்போமா என்று அவன் நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் நங்கை தன் பக்கம் திரும்பி தன்னைப் பார்த்துக் கண்ணீர் விட்டதும் சட்டென அவளை மறைத்த படி சென்று அமர்ந்து விட்டான்.

ஆனாலும் அவளிடம் பேச ஏதோ தயக்கம் வந்து அவனைத் தடை போட்டது. அந்தத் தடையை உடைக்க முடியாமல் இறுகி போய் அமர்ந்திருந்தான்.

அந்த மன இறுக்கத்தைத் தளர்த்தது நங்கையின் ‘மாமா’ என்ற அழைப்பு. அவள் அப்படி அழைத்ததும் ஒரு நொடி இது உண்மை தானா? அவளா அழைத்தாள்? என்பது போலப் பார்த்தான்.

பின்பு அவள் தன்னைத் தயக்கமாகப் பார்க்கவும், வார்த்தைகளை வர விடாமல் தடுத்த தொண்டையைச் சரி செய்து கொண்டு ‘எதுக்கு அழுத நங்கா?’ என்று கேட்டான்.

தான் நங்கா என்றதும் அவளின் முகத்தில் வந்து போன உணர்வு கலவையைப் பார்த்தவனுக்குத் தன் அழைப்பு அவளை எவ்வளவு உணர்ச்சி வசப்பட வைத்திருக்கின்றது என்று அவனுக்கு நன்றாகவே புரிந்தது.

இத்தனை நாளும் தன்னிடம் பேசவில்லை என்றாலும் தன்னை வம்பிழுத்துக் கொண்டு சுற்றிய நங்கை, இப்பொழுது ஒரு பிரச்சனை என்றதும் யோசிக்கக் கூட முடியாமல் தடுமாறியது அவனுக்குச் சிறுவயது நங்கையைத் தான் ஞாபகப்படுத்தியது.

அவள் தன்னிடம் சேட்டை செய்யும் பொழுது மட்டும் இல்லாமல், சூழ்நிலையைச் சமாளிக்க முடியாமல் திணறியதில் இருந்தும் குமரியானாலும் இன்னும் உள்ளுக்குள் அவளை விட்டு மறையாத குழந்தைத்தனத்தை உணர்ந்து கொண்டான்.

‘நீ எப்பவும் சுட்டி நங்கை தான் நங்கா’ என்று தனக்குள் சொல்லிக் கொண்டவனுக்குத் தங்கள் சிறுவயது பருவம் நினைவில் ஆடியது.

‘நமக்குள் இரத்த சம்பந்தம் இல்லையென்றாலும் நீ என் மீது வைத்திருக்கும் பாசம் எப்பொழுதும் போல என்னை மனம் வருட வைக்குதடி சில்வண்டு!’ என்று தனக்குள் சொல்லிக் கொண்டான்.


தமிழரசனுக்கும், நங்கைக்கும் சற்றும் குறையாத நினைவுகளுடன் பயணிக்க ஆரம்பித்தார். அவர்கள் இருவரையும் ஒன்றாகப் பார்த்த ஒருவர்.

அவர்கள் அப்படி உரசிக் கொண்டு தங்கம்மாள் பாட்டி வீட்டிற்குச் சென்றதைப் பார்த்ததில் இருந்து அந்த மனிதருக்கு தான் என்ன மனநிலையில் இருக்கிறோம் என்றே தெரிய வில்லை.

இருவரும் ஒன்றாகச் சென்றதையும், சிறிது நேரத்தில் அரசு மட்டும் திரும்பி வந்ததையும் பார்த்தது பார்த்தப் படி நின்று விட்டவர் தளர்ந்த நடையுடன் அங்கிருந்து சென்றார்.

ஏதோ இனம் புரியாத பயம் அவரை ஆட்டுவிக்க ஆரம்பித்தது. இன்று வளர்ந்தவர்களாக அருகருகில் சென்றவர்கள், சிறுவயதாக இருக்கும் போது எப்படி இருந்தார்கள் என்று மனதில் உலா வந்தது. தங்கள் குடும்பம் ஒற்றுமையாக இருந்த நாட்களை அவரும் நினைத்துப் பார்க்க ஆரம்பித்தார்.