கண்கள் தேடுது தஞ்சம் – 10

அத்தியாயம் – 10
அன்று காலையில் குளித்துக் கிளம்பிய நங்கை, வாணியுடன் கோவிலுக்குச் சென்றாள். சாமி தரிசனம் முடிந்ததும் அங்கே இருந்த ஒரு மரத்தடியில் போய் இருவரும் அமர்ந்தார்கள்.

அப்பொழுது அங்கே அந்த மரத்தின் பின் இருந்து வந்தான் கதிர்வேல். வந்தவன் நங்கையிடம் எதுவும் பேச முயற்சி செய்யாமல், அவள் அமர்ந்திருந்த மரத்திற்கு நேராக இருந்த ஒரு மண்டபத்தில் போய் அமர்ந்து அவளையே பார்க்க ஆரம்பித்தான்.

அவனைக் கவனித்த நங்கை ‘இவன் எங்கே இங்கே?’ என்பது போலப் பார்த்தவள், அவன் தன்னையே பார்க்கவும் தீயாய் விழித்து அவனை முறைத்துப் பார்த்தாள்.

கோவிலுக்கு வந்தவர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த வாணி ஏதோ சொல்வதற்காக நங்கையின் புறம் திரும்ப, அவள் யாரையோ முறைத்துக் கொண்டிருப்பதைப் பார்த்து, ‘யாரை இப்படி முறைக்கிறா?’ என்று நினைத்துக் கொண்டே அந்தத் திசையில் அவளும் பார்க்க கதிர்வேல் அமர்ந்திருந்தான்.

அவனைப் பார்த்ததும் நங்கையின் கையைப் பிடித்துத் தன் புறம் திருப்பியவள் “என்னடி இது? இவன் நம்ம ஊருக்கே வந்து தெனாவெட்டா உட்கார்ந்து இப்படிப் பார்க்கிறான். என்ன திமிர் பாறேன்” என்று வாணி கோபமாகச் சொல்ல…

“ஆமா வாணி… நான் முறைக்கிறேன், அப்படியும் எப்படி அசையாம உட்கார்ந்துருக்கான் பாரு. படிக்கிறப்ப என்கிட்ட வந்து பேசவே தயங்கியவனுக்கு எங்க இருந்துடி இவ்வளவு தைரியம் வந்துச்சு?” என்று நங்கையும் அவனைப் பார்த்த கோபத்துடன் பொருமினாள்.

“அதான் நங்கை எனக்கும் புரியலை. இவன் இப்படிப் பார்க்கிறதை யாராவது பார்த்தா என்ன ஆகுறது. நீ எதுக்கும் கொஞ்சம் ஜாக்கிரதையா இருடி. அவன் திமிரை பார்த்தா ஏதோ வேணும்னே செய்றது போல இருக்கு” என்று வாணி பயத்துடன் சொன்னாள்.

“ஹேய்…! பயப்படாதே வாணி. நம்ம ஊர்ல இவன் என்ன செய்ய முடியும்? இப்படி அவன் தூரத்திலேயே இருக்குற வரை தான் அவனுக்குப் பாதுகாப்பு. அன்னைக்குப் போலப் பேச மட்டும் முயற்சிக்கட்டும் அப்புறம் இருக்கு அவனுக்கு” என்றாள் கடுப்புடன்.

“அடியே…! நீ எதுவும் வம்பு இழுத்துக்கிட்டு இருக்காதே. வா! நாம போவோம்!” என்று வாணி அழைக்க… “அவனுக்குப் பயந்துக்கிட்டு நம்ம எதுக்கு ஓடணும்” என்றாள் நங்கை.

“பச்ச்… நங்கை…! துஷ்டனை கண்டால் தூர விலகுனு தான் இருக்கணும். சும்மா எதுக்கெடுத்தாலும் சண்டை கோழியா நிக்காதே. அவன் என்ன உன் மாமன்னு நினைச்சியா? நீ என்ன சேட்டை செய்தாலும் கம்முனு போக. வினையை இழுக்காம வா, போகலாம்!” என்று வாணி எழுந்து நின்று நங்கையையும் எழுப்பினாள்.

தோழியின் வார்த்தைக்குக் கட்டுப்பட்டு அவளுடன் நடந்து சென்ற நங்கை, கதிர்வேலை ஒரு முறை முறைத்து விட்டு தான் சென்றாள்.

தன்னைப் பற்றித் தான் ஏதோ கோபமாகப் பேசிக் கொள்கிறார்கள் என்று தெரிந்தும் அசராமல் அமர்ந்திருந்த கதிர்வேல், அவர்கள் சென்ற பின் தானும் எழுந்து நடக்க ஆரம்பித்தான்.

வீட்டிற்குச் செல்வதற்காக நங்கையும், வாணியும் அந்த வீதியில் நடந்து கொண்டிருக்க, அவர்கள் பின்னேயே எழுந்து வந்த கதிர்வேல் ஊருக்குள் என்பதால் அமைதியாக அவர்களைக் கடந்து சென்றான்.

தங்களைத் தாண்டி முன்னால் சென்றவனைப் பார்த்த இருவரும் நடையை மெதுவாக்கினர்.

“என்னடி! இவன் இப்படிச் சுத்துறான்?” என்று வாணி பயத்துடன் வருத்தப்பட்டாள்.

“சரிதான்… விடுடி…! இதெல்லாம் ஒரு விஷயமா நினைச்சுக்கிட்டு ஏன் இவ்வளவு சீரியஸ் ஆகுற?” என்று வாணியைச் சமாதானப்படுத்தியவள் “அதென்ன கோவிலுக்குள்ள மாமன் கீம்மன்னு சொல்லிட்டு இருந்த? இனியும் என் முன்னாடி அவனை மாமன்னு சொன்ன அடிதான் உனக்கு” என்று கடுப்பாக நங்கை வாணியின் மனநிலையை மாற்ற தோழியிடம் வம்பிலுத்தாள்.

அவளை முறைத்த வாணி “இப்ப நீ தான் என்கிட்ட அடி வாங்க போற! எதை நிரூபிக்க மாமன் இல்லை! மாமன் இல்லைன்னு சொல்லிட்டு இருக்க? சின்ன வயசுல இருந்து உன் கூடச் சுத்துறவ நான். உன்னைப் பத்தி எனக்குத் தெரியாதா? உன் மனசையே நீ கேட்டு பாரு. நீ செய்றது, பேசுறது எல்லாம் சரியா தப்பான்னு?” என்று வாணி கோபமாக அவளைக் கடிந்துக் கொண்டாள்.

வாணியின் மனதை மாற்ற அரசுவின் பேச்சை எடுத்தது தனக்கே திரும்பும் என்று எதிர்பார்க்காத நங்கை அவள் பேசினதை கேட்டு அமைதியாகி மனதில் தோன்றிய வெறுமையை மறைக்க “என்னடி இன்னைக்கு அட்வைஸ் அம்புஜமா மாறிட்டியா? ரொம்ப ப்ளேடு போடாம பேசாம வாடி!” என்று விளையாட்டாகப் பேசி பேச்சை முடித்தாள்.

அவளின் பேச்சை மாற்றும் தன்மையைப் புரிந்து கொண்ட வாணி ‘இன்னும் எத்தனை நாள் இந்த மழுப்பல்னு நானும் பார்க்கிறேன்’ என்ற எண்ணத்துடன் வேறு எதுவும் சொல்லாமல் விட்டாள்.

பைந்தமிழரசனை தன் மாமன் என்று சொல்லக்கூடாது என்று அதட்டிய பவளநங்கையே விரைவில் அவனை ‘மாமா’ என்று தானே அழைக்கும் நிலை வரப்போவதை அவள் அப்பொழுது அறியவில்லை.

காலையில் என்னதான் வாணியின் பயத்தைப் போக்கிவிட்டுத் தன்னைத் தைரியமானவளாக வெளியே காட்டிக் கொண்டாலும், கதிர்வேல் தன் ஊருக்கே வந்து தன்னைத் தைரியமாக உறுத்து பார்த்துக் கொண்டிருந்தது ஏதோ இனம் புரியாத பயத்தை அவளுக்குள் விளைவித்து இருந்தது.

‘ஒருவேளை அவன் சொன்னது போல அவன் வீட்டில் பேசி சம்மதம் வாங்கி விட்டானோ? இல்லை எனக்குத் தெரியாமல் என் வீட்டில் பெண் எதுவும் கேட்டிருப்பானோ?’ என்று ஏதேதோ நினைத்து அவள் மனம் கலக்கத்திற்கு உள்ளானது.

நங்கையின் அந்தக் கலக்கம் தான் அன்று மாலையில் தமிழரசனின் கண்ணில் பட்டது.


நாட்கள் பறந்து ஒரு வாரம் சென்றிருக்க, அந்தச் சின்ன மைதானமே கூட்டம் நிறைந்து இருந்தது.

அன்று விடுமுறை தினம் வேறு என்பதால் சிறுவர்களும், பெரியவர்களுமாகக் கூடி இருந்தனர். பேச்சு சத்தமும் அதிகமாகக் கேட்டது.

அங்கே வாராந்திர சந்தை நடைப்பெற்றுக் கொண்டிருந்தது. அங்கிருக்கும் அனைத்து காய்கறிகளும் இயற்கை விவசாயத்தால் விளைந்தவை.

பொழிலூர் விவசாயிகளும், அந்த ஊரை சுற்றி இருக்கும் கிராம விவசாயிகளும் விற்பனை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். மொத்தமாக வெளியூர்களுக்கு அனுப்பும் போது விவசாயிகளுக்குக் கிடைக்க வேண்டிய நியாயமான விலை கிடைக்காமல் போவதால், தங்கள் தோட்டத்தில் விளைந்தவைகளை இது போலச் சந்தையில் கொண்டு வந்து விற்பனை செய்கிறார்கள்.

தங்கள் ஊரை சுற்றி இருக்கும் மக்கள் வாங்கிச் சென்ற பிறகு மீதம் இருக்கும் காய்களைப் பொழுது சாயும் வேளையில் மொத்த விலைக்கு வாங்க வருபவர்களுக்கு விற்பனை செய்வார்கள்.

இந்தச் சந்தை கூடுவதற்கு முக்கியக் காரணம் அந்தந்த ஊரிலும் உள்ள இளைய தலைமுறை விவசாயிகள் தான். அதற்குத் தலைமையாக இருந்து ஆரம்பித்து வைத்தது பைந்தமிழரசன்.

அவனின் ஆரம்ப ஏற்பாட்டின் படி சுற்றி உள்ள அனைத்து கிராம இளைஞர்களையும் ஒருங்கிணைத்து அந்தந்த ஊர் பெரியவர்களிடமும் பேசி இந்தச் சந்தையை நடைமுறை படித்தி இருக்கின்றார்கள்.

அரசுவும் அன்று அங்கே ஒரு கடை போட்டிருந்தான். அவனுக்கு உதவியாக முருகன் இருந்தான். அவன் தோட்டத்திலும், தந்தையின் தோட்டத்திலும் விளைந்த காய்கள், பூக்கள் எல்லாம் அங்கே இடம் பெற்றிருந்தன.

அரசு சிறிது நேரம் இருந்து விற்பனையைப் பார்ப்பவன், பின்பு முருகனிடம் மீதி வேலைகளை ஒப்படைத்துவிட்டு வேறு வேலைகள் பார்க்க சென்று விடுவான்.

அன்று தங்கள் விற்பனை பொருட்கள் சார்ப்பாக நங்கையும், அவளின் அன்னையும் வந்திருந்தார்கள். மருதவாணன் வேறு வேலையாகச் சென்றிருந்ததால் அன்னைக்கு உதவியாக அமர்ந்திருந்தவள் சிறிது கூட்டம் குறையவும், “எம்மா…! நான் அப்படியே சுத்தி ஒரு ரவுன்ட் அடிச்சுட்டு வர்றேன். இப்ப கூட்டம் கொஞ்சமா தானே இருக்கு. நீயே பார்த்துக்கோம்மா!” என்று எழுந்தாள்.

“சரிடி…! போய்ட்டு வா…! அப்படியே நம்ம வீட்டுக்குக் கொஞ்சம் காய், கிழங்கு எல்லாம் வாங்கிட்டு வா!” என்று ஒரு பையையும் பணத்தையும் எடுத்து கொடுத்தார்.

“ஆமா என்னைச் சும்மா சுத்த விடாம அதுக்கும் ஒரு வேலை வச்சுறுவியே” என்று முனங்கியப்படி பையை வாங்கிக் கொண்டு கிளம்பினாள்.

‘ச்சே… இந்த வாணி இன்னைக்குன்னு பார்த்து வரலையே. அவ வந்தா பேசிக்கிட்டே சுத்துறதுக்கு நல்லா இருக்கும்’ என்று உள்ளுக்குள் புலம்பிக் கொண்டே சுற்றி வந்து காய்கள் வாங்கினாள்.

அரசு கடையை மட்டும் விட்டுவிட்டு மற்ற கடையில் எல்லாம் நின்று என்னென்ன பொருட்கள் இருக்கிறது என்று வேடிக்கைப் பார்த்துவிட்டு தங்களுக்குத் தேவையானதை வாங்கி கொண்டு இருந்தாள். அப்பொழுது அவள், அவனின் கடையைத் தாண்டி போகும் போது “ஏன்பா தமிழரசா! அந்தப் பொண்ணு மருதன் பொண்ணு தானே?” என்று அவனிடம் பக்கத்து ஊரை சேர்ந்த ஒரு பெரியவர் கேட்பது காதில் விழ, நடந்து கொண்டிருந்தவள் கால்கள் தன் வேகத்தைக் குறைத்தது.

அவளை நிமிர்ந்து பார்த்துவிட்டு “ம்ம்… ஆமாங்கய்யா” என்று அரசு பதில் சொன்னான்.

“என்ன இருந்தாலும் இந்த மருதனுக்குப் புத்தி அப்படிப் போயிருக்க வேண்டாம். எப்படி இருந்த குடும்பம்? இரண்டு குடும்ப ஒத்துமையைப் பார்த்து ஊரே கண்ணு போட்டுருச்சு போல. இப்ப இரண்டு குடும்பமும் இரண்டு பட்டு நிக்குது. பாரு…! அந்தப் பொண்ணு இங்க தவிர எல்லாக் கடைக்கும் போகுது. ஆனா நீங்க மட்டும் ஒத்துமையா இருந்திருந்தா இங்கன தவிர வேற எங்கயும் போயிருக்குமா?

நீங்க சின்னப் பிள்ளையா இருக்கும் போது உங்க ஊர் திருவிழாக்கு வரும் போது பார்த்திருக்கேன். அந்தப் பிள்ளை உன் பின்னாடியே தான் சுத்தும். இப்ப நெலம தலைகீழா இருக்கு” என்று அவர்கள் குடும்பத்தைப் பற்றி நன்றாக அறிந்த அந்த முதியவர் மிகவும் வருந்தி பேசினார்.

அவருக்கு என்ன பதில் சொல்வது? எனப் புரியாமல் அமைதியாக இருந்தான் பைந்தமிழரசன்.

அவர் பேசியதை எல்லாம் கேட்ட பவளநங்கையும் முகம் இறுகி போனவளாக நிமிர்ந்து அரசுவை பார்த்தாள்.

அவனும் அப்பொழுது அவளைத் தான் பார்த்துக் கொண்டிருந்தான்.

சில கணங்கள் இருவர் கண்களும் கலந்து எதையோ தேடி தவித்தது. ஆனாலும் இருவர் கண்களும் தங்கள் உணர்வுகளைக் காட்டாமல் கண்ணாமூச்சி ஆடியது.

ஒரு கட்டத்தில் தன் பார்வையை முதலில் தாழ்த்திய நங்கை அங்கிருந்து சென்றாள்.

அவள் செல்வதையே பார்த்துக் கொண்டிருந்தவன் கண்களில் ஒரு வலி தோன்றி மறைந்தது.

ஆனால் அதை உடனே மறைத்தவன் மீதி வேலைகளை முருகனிடம் ஒப்படைத்து விட்டு அங்கிருந்து சென்றான்.

அங்கிருந்து நேராகத் தன் அன்னை இருக்கும் இடத்திற்கு வந்த நங்கையின் மனதில் ஏதோ பாரம் ஏறிக்கொண்டது போல இருந்தது.

ஆனால் இருக்கும் இடம் உணர்ந்து தன் உணர்வுகளை அடக்கிக் கொண்டாள்.

நங்கை வாங்கி வந்த காய்களைச் சரி பார்த்த ஈஸ்வரி “என்னடி இன்னும் கொஞ்சம் வாங்கிருக்கலாம்ல?” என்று கேட்டார்.

தன் நினைவில் இருந்து வெளியே வந்தவள் “நான் இது போதும்னு நினைச்சேன்ம்மா” என்று அமைதியாகப் பதில் சொன்னாள்.

“இது எப்படிப் போதும்?” என்றார்.

‘பத்தாது’ என்று அவளுக்கும் புரிந்தது. ஆனால் திரும்பி போக விருப்பம் இல்லாமல் “நீ ரொம்ப நேரமா உட்கார்ந்து இருக்கேல? நீ அப்படியே நடந்து போய் வாங்கிட்டு வா. நான் வியாபாரத்தைப் பார்த்துக்கிறேன்” என்றாள்.

“அதுவும் சரிதான்… கால் மரத்துப் போனது போல இருக்கு. நான் நடந்தது போலவும் இருக்கும், வேலையும் முடியும்” என்றவர் கிளம்பிச் சென்றார்.

இரவு வீட்டிற்கு வந்து படுக்கையில் விழுந்தவளுக்கு எண்ணங்கள் அலை மோதின. அன்று கதிர்வேலை தன் ஊரில் பார்த்ததில் இருந்தே உள்ளுக்குள் ஏதோ கலக்கத்தோடு சுற்றிக் கொண்டிருந்தவள் சிறிது தெளிந்து வரும்போதே, இன்று அந்த முதியவரின் பேச்சால் மனம் எதை எதையோ நினைத்து தவிக்க ஆரம்பித்தது.

‘தங்கள் குடும்பம் மட்டும் முன்பு போல ஒற்றுமையாக இருந்திருந்தால், அந்தக் கதிர்வேல் தைரியமாகத் தன் பின்னால் சுற்றுவானா? இந்நேரம் அவன் அதற்கான பலனை அனுபவிக்கும் படி அவன்(அரசு) செய்திருக்க மாட்டானா? ஆனால் இப்போது தனக்குள்ளேயே வைத்து மறுக வேண்டிய நிலைக்கு எது காரணம்? காலமா? இல்லை தன் தந்தையின் வார்த்தைகளா?’ என்று தனக்குள்ளேயே கேள்விகள் கேட்டுக் கொண்டாள்.

கேள்விக்கு விடை தான் அவளுக்குக் கிடைக்க வில்லை.

இன்று அரசுவின் கண்களைச் சந்தித்ததை நினைத்துப் பார்த்தாள். அந்தக் கண்களில் காணாமல் போன உணர்ச்சியைக் கண்டவளுக்குச் சிறுவயதில் தான் கண்ட சாந்தமான கண்கள் நினைவிற்கு வந்து பழைய நினைவுகள் முட்டி மோதி வெளியே வர பார்த்தது.

ஆனாலும் அதை வெளியே வர விடாமல் தன்னுள்ளேயே அடக்கி வைத்து அதில் வெற்றியும் கண்டாள். ஆனால் அந்த வெற்றியை வெகு விரைவில் தானே தகர்க்க போவது பற்றி அவளுக்கு அப்பொழுது தெரியாமல் போனது.

அதைத் தெரிந்து கொள்ளும் காலமும் வந்தது. அதற்கு வித்திட்டது அவளின் திருச்சி பயணம்!