கண்கள் தேடுது தஞ்சம் – 1

அத்தியாயம் – 1


நான் ஏரிக்கரை மேலிருந்து
எட்டுத் திசை பார்த்திருந்து
ஏந்திழைக்குக் காத்திருந்தேன் காணலே
மணி ஏழு எட்டு ஆன பின்னும்
ஊரடங்கிப் போன பின்னும்
சோறு தண்ணி வேணுமுன்னு தோணலே
என் தெம்மாங்கு பாட்ட கேட்டு
தென்காத்து ஓடி வந்து
தூதாகப் போக வேணும் அக்கரையிலே
நான் உண்டான ஆசைகளை
உள்ளாற பூட்டி வச்சே ஒத்தையிலே
வாடுறேனே இக்கரையிலே…..


என்று பாட்டுப் பாடிக் கொண்டே அந்தக் கண்மாய்க் கரையின் மீது நடந்தாளா? இல்லை பறந்தாளா? என்று புரியாத வகையில், தான் அணிந்திருந்த தாவணியின் நுனியை பிடித்து வீசிக் கொண்டே படத்தின் நாயகி பாணியில் ஒய்யாரமாக வந்து கொண்டிருந்தாள் அந்த ஏந்திழை.

அவளின் பின்னால் சில பெண்களும் வயல்களில் அன்றைய கூலி வேலையை முடித்து விட்டு நடந்து வந்து கொண்டிருந்தார்கள்.

அந்தப் பெண்களின் சிறு கூட்டத்துடன் வந்து கொண்டிருந்த வயது அதிகம் முதிர்ந்திருந்தாலும், இப்பொழுதும் வயல் வேலைக்குச் செல்லும் தங்கம்மாள் பாட்டி, அந்த ஏந்திழையின் பாட்டை நிறுத்தும் வண்ணம் “ஏன்டி பவளம்…! உனக்கு என்ன பெரிய சினிமா கதாநாயகினு நினைப்பா? பாட்டுப் பாடிக்கிட்டே இந்தப் பற பறக்கிற…! பாடுறது தான் பாடுற ஒரு புதுப்பாட்டா பாடக்கூடாது? அதென்ன இவ்வளவு பழைய பாட்டு பாடுற?” என்று தனக்கு முன்னால் போய்க் கொண்டிருந்தவளை பார்த்துக் கேட்டார்.

அவரின் பேச்சுச் சத்தம் கேட்டுப் பறப்பது போல நடந்து கொண்டிருந்த அந்தப் பாவை சட்டென நின்று அவரின் பக்கம் திரும்பி “ஏய் கிழவி…! உனக்கு எத்தனை தடவை சொல்லியிருக்கேன். எங்க அம்மா, அப்பா மட்டும் தான் பவளம்னு கூப்பிடுவாங்க. நீ என்னைப் பவளம்னு கூப்பிட்டாதே, நங்கைனு கூப்பிடுனு சொல்லியிருக்கேன்ல? அதைக் காதில் வாங்காம திரும்ப, திரும்ப அப்படியே கூப்பிடுற? ஒழுங்கா நங்கைனு கூப்பிடு!” என அவரைத் திருத்தினாள் பாவையவள் பவளநங்கை.

அத்தோடு பேச்சை நிறுத்தாமல் “நாளைக்குக் கட்டைல போற வயசுல இருந்துகிட்டு உனக்குப் புதுப்பாட்டு கேக்குதாக்கும் புதுப்பாட்டு?” என நாடியை தோளில் வைத்து நொடித்த படி கேட்டாள்.

உறவுகள் யாரும் இல்லாத தங்கம்மாள் பாட்டிக்கு அந்த ஊர் மக்கள் தான் சொந்தங்கள். பலர் ‘கிழவி’ என்று தான் உரிமையாக அழைப்பர். அதனால் நங்கை கிழவி என்று சொன்னதைக் கண்டு கொள்ளாமல் மேலும் அவளிடம் உரிமையாகத் தன் பேச்சை வளர்த்தார்.

“ஆத்தாடி…! என்ன பேச்சு பேசுறா? அடியே! நானா கட்டைல போற வயசு? அதுக்கு இன்னும் பல வருஷம் இருக்குடி” என்றார் எண்பத்து எட்டு வயதான தங்கம்மாள் பாட்டி.

“அம்மாடியோ…! இன்னும் பல வருஷமா? இந்தப் பூமி தாங்குமா?” என அதிர்ச்சியாகக் கன்னத்தில் கை வைத்த நங்கை “இது உனக்கே நியாயமா இருக்கா?” எனக் கேட்டாள்.

“எல்லாம் நியாயந்தான்…” என்ற பாட்டி, “நீ ஏன்டி இந்தச் சிலுப்பு சிலுப்புறவ? உன்னைப் பார்த்தா யாராவது காலேஜு போய் மூனு வருஷம் படிச்சவன்னு நம்புவாங்களா? அப்படியே ஒன்னும் படிக்காத பட்டிக்காடு மாதிரியே தா நடக்குறவ! பேச்சும், துணியும் அப்படியே பட்டிக்காடுதான் போ! ஒரு சுடிதாரு, ஜீனுசு எல்லாம் எடுத்து மாட்டக் கூடாது?” என அலுத்தது போல் கேட்டார்.

“அடக்கிழவி…! உனக்கு இலவச டீவி கிடைச்சாலும் கிடைச்சது, எந்நேரமும் அதைப் பார்த்து நீ கெட்டு போய்ட்ட. அதான் உனக்கு ஜீனுசு பத்தியெல்லாம் தெரியுது. நீ முதலில் டீவி பார்க்கிறதை குறை! இல்லனா நீ இன்னும் கெட்டுப் போய்ருவ” என்றாள் நங்கை.

“ஆமா…! இவ தான் என் பக்கத்துல உட்காந்து நான் டிவி பார்க்கிறதை கண்டா. சரி தான் போடி கழுதை. உன் கூடப் படிச்ச கழுதைங்க எல்லாம் அந்தச் சுடிதாரு மாட்டிக்கிட்டு தானே சுத்துதுங்க. நீ மட்டும் இன்னும் தாவணியைக் கட்டிக்கிட்டு சுத்துறயேனு கேட்டா? இவ என்ன குறை சொல்ல வந்துட்டா” என அவரும் பதிலுக்கு நீட்டி முழங்கினார்.

“போ கிழவி…! எனக்கு இது தான் பிடிச்சிருக்கு. அதுவும் இப்படித் தாவணியைப் பிடிச்சுக்கிட்டு வீசி நடக்கும் போது எப்படி இருக்கு தெரியுமா?” எனத் தாவணியின் நுனியை பிடித்து ஒரு வீசு வீசிக் காட்டியப்படி ரசித்துச் சொன்னாள் பவளநங்கை.

“அட…! எவடி இவ? தாவணியோட பெருமையைப் பத்தி எனக்குச் சொல்றவ? நானும் ஒரு காலத்தில் இப்படித் தாவணியைக் கட்டிக்கிட்டு சுத்தினவதானாக்கும். அதுவும் என்ற மாமன் என்னைத் தாவணியில் பார்த்து தான் மயங்கினாராக்கும்” என்ற பாட்டி அந்தக் கால நினைவிற்குச் சென்றார்.

“சரி… சரி…! நீ உடனே கனவு காண போய்றாதே! கனவு கண்டு எங்கனையும் விழுந்து வைக்காம வெரசா வீடு போய்ச் சேரு. ராவைக்குச் சோறு பொங்கிறாதே! நான் உனக்குச் சாப்பாடு எங்க வீட்டில் இருந்து எடுத்தாறேன்” என்று நங்கை உரிமையுடன் சொல்ல கனவில் இருந்து கொண்டே ஆகட்டும் என்பது போலத் தலையசைத்தார் தங்கம்மாள்.

இது தான் இவர்களின் பாசப்பிணைப்பு. யாருமில்லா தங்கம்மாளுக்கு இது போல உரிமையுடன் உணவு கொடுத்து வம்பிலுத்து, உடம்பு முடியாத நாட்களில் உதவி செய்து எனப் பழகுபவர்கள் அந்த ஊரில் அநேகம் பேர். சில கிராமத்தில் இன்னும் மழுங்கி போகாத ஒரு ஒற்றுமை உணர்வு அது.

அவர்கள் இங்கே வழக்கடித்துக் கொண்டிருக்க, அவர்களுக்குப் பின்னால் வந்த பெண்களுக்கு இது அடிக்கடி நடக்கும் ஒரு விஷயம் என்பதால் அவர்கள் என்ன பேசிக் கொண்டார்கள் என்பதைக் கூடக் கண்டு கொள்ளாமல் தங்களுக்குள் ஊருக்குள் நடக்கும் பல வீட்டு விஷயங்களைப் பற்றியும், தங்களுக்குத் தெரிந்ததை ‘அவர்கள் வீட்டில் என்ன நடந்தது தெரியுமா?’ என நீட்டி முழங்கி காரசாரமாகப் பேசிக் கொண்டு வந்தார்கள்.

அந்தப் பெண்களின் கூட்டத்தில் சேராமல் பவளநங்கையின் அருகில் நின்றுக்கொண்டிருந்த அவளின் தோழி வாணி, தங்கம்மாளையும், நங்கையையும் மாறி, மாறி பார்த்தாள்.

இருவருமே தங்கள் அரட்டை முடிந்ததும் கனவுலகில் இருப்பது போல ஆடி அசைந்து நடந்து வர ‘ஆஹா…! இது சரியில்லையே’ என்பது போலப் பார்த்த வாணி “அம்மாடி நங்கை! கொஞ்சம் இந்த லோகத்துக்கு வர்றியா. நல்லா பேசிட்டே வர்றவ தாவணி பத்தி பேசினா மட்டும் வேற லோகத்துக்குப் போய்ருவயே? கீழ இறங்கி வாடியம்மா வா…!” எனப் பவளநங்கையின் தோளை பிடித்து அசைத்தாள்.

அவளின் உலுக்கலில் ‘ஹா…!’ என்று சுதாரித்த நங்கை “ஹேய்…! என்னடி உளர்ற? அதெல்லாம் ஒன்னும் இல்லை” எனத் தன் தோழியை அடக்கினாள்.

“உன்னைப் பத்தி எனக்குத் தெரியாதாக்கும்? நீ இல்லைனு சொன்னாலும் நான் நம்ப மாட்டேன். சரியா…?” என்று வாணி சொல்லவும், நங்கை அவளை முறைத்துப் பார்த்தாள்.

அவளின் முறைப்பை பார்த்து “சரி… முறைக்காதே…!” அந்தப் பேச்சை விட்டுட்டேன். நான் இதுக்கு மேல எதுவும் பேசினா உனக்குக் கோபம் வரும்” என்ற வாணி, தங்கம்மாள் பாட்டியை காட்டி “நீ கனவுலகத்துக்குப் போறது கூட நியாயம். ஏன்னா உன் வயசு அப்படி. அந்தக் கிழவியைப் பாரு! மேலோகத்துக்குப் போன அவர் வீட்டுகாரர் கூட டூயட் பாட போயிருச்சு” என்று நமட்டுச் சிரிப்புடன் சொன்னாள்.

நங்கை அவரைத் திரும்பி பார்க்க, வாணி சொன்னது போலத் தன் இளமை காலப் பருவத்தில் மூழ்கி இருந்தார் தங்கம்மாள் பாட்டி.

“சரி தான் வாடி…! அந்தக் கிழவி டூயட் பாடிட்டு வர்றதுக்குள்ள நாம முன்னாடி போய்ருவோம். ரொம்ப நேரம் ஆகிருச்சு” எனச் சொல்லிவிட்டு நடையை எட்டி போட்டாள் பவளநங்கை. அவளைப் பின்பற்றித் தானும் விரைந்து நடக்க ஆரம்பித்தாள் வாணி.

இருவரும் நடந்து கொண்டு இருக்க, வாணி மெதுவாக மீண்டும் பேச்சை ஆரம்பித்தாள். “சரி நங்கை! இன்றைய பாட்டின் ரகசியம் என்னவோ? ஹ்ம்ம்…! அதுவும் நீ பாடின வரி எல்லாம் உன் மாமன் பாட வேண்டியது. ஆனா அதை நீ படுற? ஒருவேளை உன் மாமன் பாடாதுன்னு நீயாவது பாடுவோம்னு நினைச்சு பாடினியோ?” என நாடியில் விரல் வைத்து யோசிப்பது போலப் பாவனைக் காட்டிக் கேட்டாள்.

வாணி பேச்சை ஆரம்பித்ததுமே தன் கோபத்தைக் கண்களில் காட்டிய நங்கை வார்த்தையிலும் கோபம் மின்ன “ஹே…! என்னடி இன்னைக்கு உளறிக்கிட்டே இருக்க? எனக்கு ஏது மாமன்? எனக்கு மாமன் எவனும் கிடையாது. இல்லாத மாமனுக்குப் பாட்டு வேற நான் பாடணுமாக்கும்” என்று நொடித்தாள்.

“பார்த்துடி பார்த்து…! சும்மா, சும்மா அந்தக் கழுத்தை நொடிக்காதே! மூஞ்சி கோணிக்கப் போகுது. அப்புறம் உன் மாமன் வேற ஆள தேடிக்கப் போவுது. நீ மழுப்பினாலும் நான் நம்பிருவேனாக்கும்?” என வாணி திருப்பிக் கொடுத்தாள்.

“இவ ஒருத்தி…! நான் மாமனே இல்லைங்கிறேன். இவ இல்லாத மாமன், வேற ஆள தேடிக்கும்கிறா…” என்று கோபத்தைக் காட்டிய பவளநங்கை, அதற்கு மேல் பேசாமல் அமைதியாக நடையைத் தொடர்ந்தாள். அவளின் அமைதியைப் பார்த்து வாணியும் அமைதியானாள்.

வாணிக்குத் தெரியும், இனி என்ன பேசினாலும் அவள் தோழியின் வாயில் இருந்து பதிலாக ஒரு சொல் கூட வராது என்று. எனவே இருவரும் கரையின் மேலேயே அமைதியாக நடந்தனர்.

திருச்சிராப்பள்ளி மாவட்டத்துடன் சேர்ந்த பொழிலூர்(கற்பனை பெயர்) கிராமத்தில் இருக்கும் கண்மாய்க் கரை மீது தான் அவர்கள் நடந்து சென்று கொண்டிருந்தார்கள்.

கிராமம் என்றதும் பச்சை பசேல் எனத் தானியங்கள் விளைந்திருக்க, ஒரு பக்கம் கதிரடிக்க, இன்னொரு பக்கம் நெல் காய வைத்திருக்க, மண் பாதையில் மாட்டு வண்டிகள் சலங்கைகள் சலசலக்க ஓட, என்று உங்கள் கற்பனைகள் விரிந்தால், கண்டு கொள்ளுங்கள், உங்கள் கற்பனையில் மட்டும்.

ஆம்…! கற்பனையில் மட்டுமே இனி அந்தக் காட்சிகளைக் காண முடியும் போல்.

திருச்சிராப்பள்ளி மாவட்டத்துடன் சேர்ந்து இருக்கும் பல கிராமங்களில் பொழிலூர் கிராமமும் ஒன்று. கிராமத்தோடு சேர்ந்து அந்தக் கண்மாய் இருக்க, அந்த ஊருக்கு அப்பால் காவிரி பாய்ந்தோடும் ஆறு இருந்தது.

மழை காலங்களில் செழித்து விவசாயம் நடப்பதும், மழையும் இல்லாமல், தண்ணீரும் இல்லாமல் இருக்கும் காலங்களில் வறட்சியாகவும் இருக்கும் ஊர் தான் அது.

அந்த வருடம் ஆற்றில் தண்ணீர் இல்லாமல் வறண்டு போயிருக்க, அந்தக் கண்மாயில் சரியாக மழை இல்லாததால் பாதங்கள் மட்டுமே மூழ்கும் அளவில் சிறிதளவு தண்ணீரே இருந்தது. அந்த மாலை நேர காற்றில் அந்தத் தண்ணீர் பளபளத்துக் காட்சி அளித்தது.

பொழிலூரில் இருந்து வயல்கள் இருக்கும் பகுதிக்கு செல்ல, அந்தக் கண்மாயை தாண்டித் தான் செல்ல வேண்டும். அந்தக் கண்மாய்க் கரை தான் வயல்களுக்குச் செல்லும் பாதை. அந்தப் பாதையை விட்டால் இரண்டு கிலோ மீட்டருக்கும் மேலாகச் சுற்றிக் கொண்டு தான் செல்ல வேண்டும். அதனால் அவர்கள் வழக்கமாகச் செல்லும் பாதை அதுதான்.

பவளநங்கை திருச்சியில் உள்ள ஒரு மகளிர் கல்லூரியில் பி.எஸ்.சி. தாவரவியல் பிரிவில் படித்து முடித்து விட்டு, இப்பொழுது வீட்டில் தான் இருக்கின்றாள். வாணியும் அவள் படித்த பிரிவிலேயே படிப்பை முடித்திருந்தாள். கல்லூரி பேருந்து அந்த ஊருக்கு வந்து சென்றதால் எந்தக் கஷ்டமும் இல்லாமல் படிப்பை முடித்தார்கள்.

நங்கைக்கு மேலும் படிக்க ஆர்வம் இல்லாமல் போக, அத்தோடு படிப்பை நிறுத்தி விட்டாள். வாணிக்கு அவளின் பெற்றோர் அவள் படித்த வரை போதும் என நிறுத்தியிருந்தார்கள்.

அந்த ஊர் பெண்கள் பலரும் கல்லூரி படிப்பை தொடர்பவர்கள் தான்.

பொழிலூர் பின் தங்கிய கிராமமாக இல்லாமல் ஓரளவு நாகரீகம் அங்கேயும் நுழைந்த ஊராகவே இருந்தது.

பவளநங்கையின் தந்தை சொந்த நிலத்தில் விவசாயம் செய்வதால் தினமும் ஒரு முறையாவது நங்கை அங்கே சென்று விட்டு தான் வருவாள்.

கல்லூரியில் படிக்கும் போதும் வீட்டிற்கு வந்ததும் மாலையில் ஒரு முறை கூட அவர்களின் நிலத்திற்குச் செல்லாமல் இருந்தது இல்லை.

அங்கே வேலை எதுவும் செய்கின்றாளோ, இல்லையோ? அங்கே செல்வது அவளுக்குப் பிடித்த ஒன்றாக, அவளின் அன்றாடச் செயலாக அது மாறி விட்டது. அப்படிச் செல்லும் பொழுது வாணியையும் உடன் அழைத்துக் கொள்வாள்.

கல்லூரிக்குச் சென்ற காலங்களில் சுடிதார் அணிந்து கல்லூரிக்குச் சென்றாலும் வீட்டிற்கு வந்ததும் தாவணி அணிந்துக் கொள்வாள். வழக்கம் போல இன்றும் நிலத்திற்குச் சென்று விட்டு திரும்பிக் கொண்டிருந்தார்கள்.

நங்கையின் அருகில் நடந்து வந்து கொண்டிருந்த வாணி திடீரென அவளின் கையைப் பிடித்து நிறுத்தினாள். ஏதோ யோசனையுடன் நடந்து கொண்டிருந்த நங்கை, வாணியின் செய்கையில் அவளை நிமிர்ந்து ‘என்ன?’ என்பது போலப் பார்த்தாள்.

என்னவென்று வார்த்தையால் சொல்லாமல் கண்களாலேயே ‘அங்கே பார்!’ எனத் தங்களுக்கு எதிர் திசையைக் காட்டினாள்.

அங்கே வேட்டி, சட்டை அணிந்து ஒரு கையில் வேட்டியின் நுனியை தூக்கி பிடித்த படி வேக நடையில் உழைப்பின் உரம் உடல் கட்டில் தெரிய வாட்ட, சாட்டமாக வந்துக்கொண்டிருந்தான் ஒருவன்.

அவனைப் பார்த்த நங்கை தன் உதட்டை சுளித்து விட்டு, முகத்தை வேகமாகத் திருப்பிக் கொண்டு, அவன் செல்வதற்கு வழி விட்டு நடக்க ஆரம்பித்தாள்.

இருவர் மட்டும் நடக்கும் அகலத்திற்கு மட்டுமே அந்தப் பாதை இருந்தது. அதனால் அருகருகே வந்த தோழிகள் ஒருவர் பின் ஒருவராக நடக்கத் தொடங்கினார்கள்.

எதிரே வந்தவனும் பெண்கள் வருவதைக் கண்டு தூக்கி பிடித்திருந்த வேட்டியை கீழே இறக்கி விட்டுட்டு, யாரின் முகத்தையும் நிமிர்ந்து பார்க்காமல் உணர்ச்சியற்ற பார்வையுடனும், கடினம் காட்டின முகத்துடனும் அவர்களைக் கடந்து சென்றான்.

அவன் அவர்களைக் கடந்து அந்தப் பக்கம் சென்றதும் “ஆளையும் மூஞ்சியையும் பாரு. சரியான குடமிளகா!” என முணுமுணுத்தபடி நங்கை முன்னால் செல்ல, அவளுக்குப் பின்னால் வந்த வாணி “ஏய்…! இப்ப ஆளுக்கு என்னத்தைக் கண்டுட்டனு முணுமுணுக்கிற? ஏன் உன் மாமன் பார்க்க நல்லாத்தானே இருக்கு?” என்றாள்.

அவளைத் திரும்பி பார்த்து முறைத்த நங்கை “யாருக்கு யார் மாமன்? வாயை மூடிகிட்டு வாடி? மாமனாம் மாமன்… மண்ணாங்கட்டி மாமன்…” என அதட்டினாள்.

“ஓ…! அப்ப அவர் உன் மாமா இல்லையா? இது எனக்குத் தெரியாதே…!” என ஆச்சரியமும், நக்கலும் கலந்து கேட்டாள் வாணி.

அவளின் நக்கலில் கடுப்படைந்தவள் “நீ அடங்க மாட்ட? சரிதான் போடி…! நான் போறேன்” என்றுவிட்டு “பேரைப் பாரு பேரை… ‘பைந்தமிழரசன்’ அப்படியே அவனுக்குப் பெரிய அரசன்னு நினைப்பு” என்று வீடு செல்லும் வரை அவனைத் திட்டிக் கொண்டே சென்றாள் பவளநங்கை.