ஒரு மழை நாளில்
துளி 3
நான் அறியேனடா?
உன் ஒற்றை பார்வை
என் நினைவைத்
தடம் புரட்டிப் போடும் என்று…
விதி வலியது
என்னை சீண்டி
நான் இங்கு இருக்கிறேன்
என தலையில் கொட்டிச் சென்றது.
நான் போக மாட்டேன் என்று மறுத்த இரவுப் பெண்ணைக் கதிரவன் தன் கதிரவன் தன் கதிர்களால் கட்டி இழுத்துச் சென்றான். திங்கள் கிழமை பணியில் சேர வேண்டிய நாள். வீட்டில் பெரியவர்களிடம் ஆசிர்வாதம் வாங்கிக் கொண்டு அலுவலகத்திற்கு கிளம்பினாள்.
திருப்பூர் மாநகராட்சி. நெய்யலாற்றைக் கடக்கும்போதெல்லாம் குற்ற உணர்வு எழுவதை அவளால் தடுக்க இயலாது. வளர்ச்சி என்ற பெயரால் , சிலரின் சுயநலத்தால் நொய்யல் பாழ்பட்டுவிட்டது. தட்டி கேட்காத மக்களும் ஒரு காரணம். முதல் நாள் , பி.ஏ. பார்க்க வேண்டிய பைல்களை கொடுக்க அவளும் பார்க்க ஆரம்பித்தாள். பின் அவரிடம் திருப்பூர் பற்றிய முழு விவரங்களை அடங்கிய அறிக்கை ஒன்றைத் தயார் செய்ய உத்திரவிட்டாள்.
மதிய வேளையில் , அவளது பி.ஏ வந்து ஒரு பிரபல நாளிதழின் ஸ்டாப் ரிப்போட்டர் பேட்டி காண நேரம் கேட்டதைக் கூறினார். இவளும் தனக்கு பெரிதாக விருப்பம் இல்லை என்றாலும் மாலை 5.30 க்கு ஹோட்டல் கௌரி கிருஷ்ணா வரச் சொல்லுங்கள் என்று கூறி அவரிடம் தொலைபேசி எண்ணை வாங்கியும்கொண்டாள். அவள் கூறியபடியே சரியான நேரத்திற்கு வந்து காத்திருக்கத் தொடங்கினாள்.
கடைசி நேரத்தில் ஒரு சிக்கலாகி விட்டது , மதுராவை பார்க்க வேண்டிய ரிப்போட்டருக்கு தீடிரென சொந்த ஊருக்குப் போக வேண்டிய சூழல். அதனால் தன் நண்பனிடம் வேலையை ஒப்படைத்துவிட்டு சென்று விட்டார். நண்பனும் மாவட்ட ஆட்சியரின் தொலைபேசி எண்ணைப் பெற்றுக்கொண்டு ஹோட்டலை அடைந்து கால் செய்தான்.
மதுராவும் தான் இருக்குமிடத்தைப் பற்றிக்கூறினாள். அவள் போனில் கேட்ட குரல் ஏதோ ஒரு அவஸ்தையே மனதில் ஏற்படுத்தியது. ஏதோ ஒரு குழப்பத்தில் கைக்குட்டையை கீழே தவற விட அதை எடுக்க குனிந்தாள். அவள் நிமிர்வதற்கும் அவன் வந்து நிற்பதற்கும் சரியாக இருந்தது. அவன் சொன்ன குட்ஈவினிங்கும் பாதியில் ஸ்ம்பித்து நின்றது.
யாரவன்?..முகில் கார்த்திக். இன்றும் அதே வசீகரப் புன்னகையுடன் நிற்கிறான். மதுரா ஒரு நொடியில் சுதாரித்து அவனை அமரச் சொன்னாள். அவனும் இயல்புநிலைக்கு திரும்பி அமர்ந்து மதுராவை பார்வையால் அளந்தான். முன்பு பார்த்தது போல்தான் இருக்கிறாள். ஆனால் முகத்தில் கம்பீரமும் கூடியிருக்கிறது.
தப்பித்தவறி கூட இருவரும் பழையதைப் பேசவில்லை. மதுரா அப்பவே அவ்வளவு கெத்து காட்டுவாள் . இன்றும் அதையே கடைபிடித்தாள். அவனும் சளைத்த ஆளில்லை. இருவரும் தான் வந்த வேலையை முடித்துக் கைகுலுக்கி விட்டு பிரிந்தனர். மது தான் இயல்பாக இருப்பது போலக் காட்டிக் கொண்டாள். கார்த்திக் மனதில் அவளை சந்தித்த தருணம் நிழலாடியது. பன்னிரெண்டாம் வகுப்பு முடிவுகளுக்கு முந்தைய நாள்…
சாரல் வீசும்…..