ஒரு மழை நாளில் -2

துளி 2


நான் தாமரையல்ல..
கதிரவன் வரும் முன்னே
காத்திருக்கும் முல்லை …

சிறு வயதிலேயே அவள் அம்மாயி அதிகாலையில் எழும் பழக்கத்தை ஏற்படுத்தி இருந்ததால் துயில் கலைந்து
எழுந்தாள். கைப்பேசியில் வந்த தகவல்களை எல்லாம் படித்து முடித்ததும்
அம்மாயி ஹார்லிக்ஸ் தர குடித்தாள். அவர்களுக்கு தேவையான
உதவிகளை செய்தாள். அம்மாயிடம் தான் வயக்காடு செல்வதாக சொல்லிக்கொண்டு
தனது மிதிவண்டியை எடுத்தாள்.

ஆறு மணிக்கு வயக்காடு செல்வது மதுராவுக்கு மிகவும் பிடித்த விஷயம். சூரியனின் கதிர்கள் பட்டு மரகத்தின் மேல் வைரம் போல் பனித்துளிகள் புற்களின் மீது மின்னிக்கொண்டிருந்தது.

சிறு வயதிலிருந்தே அவள் மன அமைதி வேண்டும் என்றால் நாடிச்செல்வது வயக்காட்டைத்தான். சுத்தமான பிராண வாயு மனதையும் புத்துணர்ச்சியை அளிக்க இருகைகளையும் நீட்டி மூச்சை உள்ளிழுத்தாள். மயில்கள் ஆங்காங்கே சுற்றியபடி இருந்தன. அதை ரசித்தபடி இருந்தாள்.

அவள் அம்மாய் வந்தபின் பழைய கதைகளைப் பேசியபடியே பொழுதுகழிந்தது. வயக்காடு வந்த ஊர்க்காரர்களும் அவளை வந்து நலம் விசாரித்துச் சென்றனர். மேமாதம் என்பதால் ஊரிலிருந்து மதியம் அவள் சித்தி பையன்கள் எல்லாம் வந்திருந்தனர். இதற்கு முன்பு கொட்டமடித்ததைப் போல் தங்கள் சேட்டையைத் தொடங்கினர். இவள் தான் கேங்லீடர் . அனைவரும் டிவியில் பாடல்கள் போட்டு ஆடத்தொடங்கினர். இறுதியாக படம் பார்க்க முடிவு செய்து கேடிவியைப் போட அதில் தீராத விளையாட்டு பிள்ளை படம் ஓடிக்கொண்டிருந்தது.

அதில் கார்த்திக் என்ற பெயரைக் கேட்டதும் நினைவுகள் பின்னோக்கிச் செல்ல தொடங்கியது.

மே மாதம், 5 வருடங்களுக்கு முன்பு , கோவையில் உள்ள பிரபல தனியார் கல்லுரியில் மதுரா முதல் வருடம் உளவியல் முடித்திருந்தாள். அட்மிஷன்வெர்க்கில் வாலன்டியர் , டிரைனிங்கில் இருந்தாள். கோடைகாலமாதலால் வெப்பம் தாங்காமல் மழை நன்றாக பெய்து விட்டு தூரல்போட்டுக் கொண்டிருந்து. இவளும் தன் தோழிகளுடன் மதிய உணவுக்காக கேன்டீன் சென்றாள். கேன்டீனுக்கு அருகில் அவள் தோழி யாரோ ஒருவனுடன் பேசுவதற்காக நின்றாள்.

அப்போது தான் முதன்முதலில் கார்த்திக்கை அவள் பார்த்தது. யாரது ஸ்மார்ட்டாக இருக்கான் என்று நினைத்து விட்டு அவளின் மற்றொரு தோழி காயத்ரி அழைக்க அவளும் தன் வழக்கமான வேலைகளில் மூழ்கிவிட்டாள். 12 வது வகுப்பு தேர்வு முடிவுக்கு முந்தைய நாள். அன்று ..

அக்கா…அக்கா.. தன் சித்தியின் கடைசிப்பையன் மோகனின் அழைப்பினில் நினைவு கலைந்து திரும்பினாள். “என்னடா வேணும்? ..அக்கா நைட் ப்ரைடுரைஸ் பண்ணித்தரியா ? ம்ம்ம் பண்ணித்தரேன்டா..சரி வாக்கா சட்டூல்காக்(இறகுப்பந்து) விளையாடலாம்”.அன்று முழுவதும் தம்பிகளுடன் செய்த கலாட்டாவில் நேரம் பறந்தது. என்ன முயன்றும் இரவில் கார்த்திக்கை நினைக்காமல் இருக்க முடியவில்லை. களைப்பினால் எப்படியோ ஒரு வழியாக இமைகளை உறக்கம் தழுவியது. அடுத்தநாளின் அதிர்ச்சிக்காக இரவும் காத்திருக்கத் தொடங்கியது.