என் வசீகரனே
” வசீகரா என் நெஞ்சினிக்க உன் பொன் மடியில் தூங்கினால் போதும்….” என்றவள் பாடிக் கொண்டே தன் சேலைக்கு இஸ்திரி போட்டுக்கொண்டு இருந்தாள் விதுர்ஷி.
” என்னக்கா பாட்டெல்லாம் பலமா இருக்கு… ரொம்ப சந்தோசமா இருக்க போல?” என கேட்டு அவள் ஆடையை இஸ்திரி போடக் கொடுக்க,ஏதோ சிந்தனையில் இருந்தவள், மறுப்பேதும் சொல்லாமல் அதை வாங்கிக்கொண்டாள்.
என்றும் இல்லாமல், இன்று தன்னை கடிந்து கொள்ளாமல் தன் ஆடையை வாங்கும் தமக்கையைக் காண, புதிதாக தெரிந்தாள்.
விதுர்ஷியை தன் பக்கம் திருப்பிய சித்ராக்ஷி, ” என்னக்கா ஆச்சு உனக்கு? எப்பயும் நான் ஐயன் பண்ண ட்ரெஸ் கொடுத்தா, திட்டுவ, பண்ண மாட்டேன் சொல்லுவ.. இப்ப என்ன அமைதியா வாங்கி வைக்கிற? சரியில்லையே நீ” என்னும் போதே சுதாரித்தவள்,
” ஏய் என்னடி… பாவமே என் தங்கையாச்சே உதவி செய்யலாம் நினைச்சால் என்னை கேள்வி கேட்டு நிக்கிற.இப்படி கேட்டுட்டு நின்னா, அப்றம் ஐயன் பண்ணி தர மாட்டேன்.” என்றவளை மிரட்ட, ” ஒ.கே ஒ.கே நான் எதுவும் கேட்க மாட்டேன். யூ கண்டினு…” என்றவள் இடத்தை காலிச் செய்தாள்.
பின் இருவருமாக கிளம்பி கல்லூரிக்கு வந்தனர்..
முதலில் வண்டியை தனியாக நிறுத்த எண்ணியவள், தனது நாயகனின் தேரினைக் கண்டதும் அதன் அருகே இருந்த சிறு இடத்தில் தன் வண்டியை நிறுத்தி விட்டு வந்தவளை வினோதமாக பார்த்தாள் சித்ராக்ஷி .
” ஏன் அக்கா அவ்வளவு இடம் இருக்கும் போது, ஏன் இந்த இடுக்குல போய் நிறுத்தற? “
” அங்க நிறுத்துன்னா வெயில் அடிக்கும் அதான்… ” சமாளித்து விட்டு ஸ்டாப் ரூம்மிற்கு வேக எட்டில் சென்றவளை பார்த்து குழம்பியவள் தோளை குலுக்கி விட்டுச் சென்றாள்.
ஸ்டாப் ரூமிற்கு வர அங்கே அவன் இல்லை, முதல்வரை பார்க்கச் சென்றதாக
காற்றில் வந்தது செய்தி.
வருவான் என்று காத்திருந்தவளுக்கு பதில் பூஜ்யமானது. அவன் அப்படியே வகுப்பிற்குச் சென்றுவிட்டான் … பொறுமை காத்தவள், அடுத்த வகுப்பு இவளுடையது என்பதால் பத்து நிமிடத்திற்கு முன்பே வகுப்பிற்கு அவனை பார்க்க செல்ல, அங்கே அவனோ இல்லை சற்று முன் சென்றதாக மாணவர்கள் சொல்ல, “ச்ச…” என்றவள் உதட்டை கடித்து தன் தவிப்பை மறைத்தாள்.
அதன் பின் வந்த வகுப்புகளிலும் வெளியே ஸ்டாப் ரூமிலும் அவனை பார்க்கவே முடியவில்லை.
” டேய் கர்ணன் சாரை பார்த்தீயா டா.. தாடிக்குள்ள இவ்வளவு அழகை மறைச்சி வச்சிருந்திருக்கார் டா.
நல்ல வேளை பொண்ணுங்க எல்லாரும் அவரை அண்ணனா பார்க்கிறாங்க இல்லைன்னா, நம்ம கதி…” என்றொருவன் புலம்பி கொண்டு சென்றான்.
” ச்ச… எல்லாருக்கும் இந்த மனுசன் காட்சி கொடுத்திருக்கார். ஆனால் எனக்கும் மட்டும் முகத்தை காட்டல..” என்று அவனை கடிந்தாள்.
கல்லூரியும் முடிய, கோபமாக வண்டி நிறுத்தும் இடத்திற்கு வந்தவள், தன் வண்டியில் சாவியைப் பொறுத்தி வண்டியை எடுக்க, ” எவ்வளவு இடம் இருக்கு. இங்க தான் நிறுத்தணுமா ?” என்ற கேள்வி தன் பக்கவாட்டிலிருந்து வர, அவளோ
” ஆமாய்யா, இங்க தான் நிறுத்துவேன் என்ன பண்ணுமோ பண்ணிக்கோ” என்றாள் கடுப்பில்.
” அப்ப, நாங்க எப்படி வண்டியை எடுக்கிறதாம்? ” மீண்டும் அவனே கேட்க,
” எடு, எடுக்காம போ… எனக்கென்ன ? ” என்று பேசியவள் சட்டென நிறுத்தி அவன் யாரென பார்க்க, காலையலிருந்து காண முடியாமல் தவித்திருந்த அந்த வதனவுடையான் தான்.
தாடியின்றி, மீசை முறுக்குடன் கம்பிரமாக இருந்த அவனது வதனம் வசீகர சிரிப்போடு இருந்தது. கைகளை மார்புக்கு குறுக்கே கட்டி ஒற்றை புருவத்தை உயர்த்தி நின்றான். நேற்று அவள் கேட்டுக் கொண்டதால் இந்த மாற்றம்.
அவள் முகத்தை கண்டதும் தாமரையாய் அவள் வதனம் மலர்ந்தாலும் தன்னை காலையிலிருந்து தவிக்க விட்டதால், அவன் மேல் பொய் கோபம் கொண்டு இதழைச் சுளித்துவிட்டு தன் வண்டியை வெளியே எடுத்தாள்.
” என்ன மேடம், ஒண்ணும் சொல்லாம போறீங்க? ” அதே இடத்தில் நின்றவாறு கேட்டான்.
” நான் எதுக்கு சொல்லணும்? வந்ததும், உங்க முகத்தை காட்டாம வேணும்னே தவிக்கவிட்டீங்கள. நான் எதும் சொல்ல மாட்டேன்” என்று மீண்டும் இதழைச் சுளித்துவிட்டு திரும்பிக் கொண்டாள்.
அவனோ அவளது செய்கையில் தன் அதரங்களை மடித்து சிரிப்பை அடக்கினான்.
சற்று தூரம் சென்று வண்டியை நிறுத்தியவள் கண்ணாடியில் தெரியும் அவன் முகத்தை வழித்து நெற்றிமுறித்து,முத்தம் கொடுத்து விட்டு வண்டியை எடுத்தாள்.
அவளது செய்கையில் அவன் முகத்தில் மலர்ந்த மூரல், மேலும் அவன் வதனத்தை வசீகரமாக்கியது..