என்னுள் யாவும் நீயாக – 33(Final)

அத்தியாயம் – 33

தடக்… தடக்… என்ற சப்தத்துடன் லேசாக ஆடிய படி ஓடிக் கொண்டிருந்த அந்த ரயிலின் ஆட்டத்திற்கு ஏற்ப தன் கையைத் தாளமிட்ட படி வந்தான் பிரசன்னா.

கோயம்புத்தூரை நோக்கி ஓடிக் கொண்டிருந்தது அந்தத் தொடர்வண்டி.

பிரசன்னாவும், வசுந்தராவும் தேனிலவிற்கு ஊட்டிக்குச் சென்று கொண்டிருந்தனர்.

அவர்களுக்கு மட்டுமே தெரிந்த தேனிலவு!

வீட்டினரிடம் தேனிலவு செல்லப் போகிறோம் என்று சொல்ல முடியாமல், ஒரு கான்பிரன்ஸ் இருப்பதாகச் சொல்லி மனைவியையும் அழைத்துக் கொண்டு போவதாகச் சொல்லி எல்லா ஏற்பாடுகளையும் செய்திருந்தான் பிரசன்னா.

வீட்டினரிடம் பொய்ச் சொல்லி கிளம்ப முடிவெடுத்த கணவனை முறைத்துக் கொண்டு திரிந்தாள் வசுந்தரா.

“கோபப்படாதே தாரா! போன முறை இரண்டு பேரும் ஆளுக்கு ஒரு மனநிலையில் இருந்தோம். ஒருத்தர் முகத்தை ஒருத்தர் பார்த்துக்கக் கூடப் பயந்து ஆளுக்கு ஒரு பக்கம் பார்த்துட்டு இருந்தோம். இப்போ அது எதுவுமே இல்லாம நீயும், நானும் கைகள் கோர்த்து மனமும், உடலும் தித்திக்கத் தேனிலவு கொண்டாடணும்னு ஆசைப்படுறேன்.

வீட்டில் ஹனிமூன் போறோம்னு எப்படிச் சொல்ல சொல்ற? அதான் போன முறை போனீங்களேனு கேட்பாங்க. ஒருவேளை உண்மையைச் சொல்லிப் போனாலும் அதுவும் அதே ஊருக்கு போறோம்னு சொன்னால் அவங்க பார்வை நம்மை வித்தியாசமா பார்க்கும். அவங்களை எதுக்குத் தேவையில்லாம குழப்பணும்? அதான் பொய்ச் சொல்றேன்…” என்று ஏதேதோ பேசி மனைவியைக் கெஞ்சி, கொஞ்சி சமாதானம் செய்தான் பிரசன்னா.

“ஒரு டாக்டர் இப்படிப் பொய்ச் சொல்லலாமா?” என்று அவனின் கெஞ்சலுக்குச் சமாதானமாகாமல் முறுக்கிக் கொண்டு கேட்டாள்.

“நான் முதலில் எல்லா உணர்வுகளும் அடங்கிய சராசரி மனுஷன் மா. அப்புறம் தான் டாக்டர் எல்லாம். எனக்கும் என் பொண்டாட்டி கூட இப்படி இருக்கணும்னு ஆசை இருக்கும் தானே?” என்று கண்ணாடி முன் நின்றிருந்த மனைவியைப் பின்னாலிருந்து அணைத்துக் கண்ணாடியில் தெரிந்த அவளின் பிம்பத்தைப் பார்த்துப் புருவத்தை உயர்த்திக் கேட்டான்.

இப்போது கள்வனாக மாறிவிட்ட காதலன் நான்! என்பதைப் பறைசாற்றியது அவனின் குறும்புப் பார்வை!

கணவனின் ஆசையும் அவளுக்குத் தெரியும் என்பதால் அவனின் விருப்பத்திற்கு வளைந்து கொடுத்தாள் வசுந்தரா.

அவள் சம்மதித்த உடனேயே ஊட்டி கிளம்ப ஏற்பாடு செய்துவிட்டான்.

இதோ இப்போது ரயிலில் சென்று கொண்டிருந்தனர். அன்று போல் தான் பயணம் அனைத்தும் ஏற்பாடு செய்திருந்தான். அதனால் அவர்கள் இருவர் மட்டுமே அந்த இருக்கைகளில் இருந்தனர்.

அன்று போல் தனித்தனியாக இல்லாமல் இன்று இருவரும் ஒரே படுக்கையில் அமர்ந்திருந்தனர்.

ஜன்னலில் சாய்ந்து படுக்கையில் கால் நீட்டியபடி பிரசன்னா அமர்ந்திருக்க, அவனின் கால்களுக்கு நடுவே அதே போல் கால்களை நீட்டிக் கொண்டு அமர்ந்து கணவனின் மீது சாய்ந்து கொண்டு வந்தாள் வசுந்தரா.

தன் மேல் சாய்ந்து அமர்ந்திருந்த மனைவியைச் சுற்றி கைகளைப் போட்டு அணைத்துக் கொண்டு, ரயிலின் தாளத்திற்கு ஏற்ப அவளின் மேல் லேசாகத் தாளமிட்ட படி வந்தான் பிரசன்னா.

“ஏங்க…” என்று அழைத்துக் கணவனின் தாளத்தை நிறுத்தினாள் வசுந்தரா.

“என்ன தாரா?”

“ஒரு பாட்டு பாடுங்களேன்…”

“என்ன பாட்டு வேணும் தாரா?”

“கண்ணே கலைமானே… பாடுங்க. அதைத் தான் உங்க குரலில் கேட்கணும்னு எனக்கு ரொம்ப நாளா ஆசை!” என்று கணவனை அண்ணாந்து பார்த்துக் கேட்டாள்.

தன் உதடுகளுக்கு நேராக இருந்த மனைவியின் நெற்றியில் முத்தமிட்ட பிரசன்னா, “அந்தப் பாட்டு பாடினால் நீ தூங்கிடுவியே. என்கூடப் பேசிக்கிட்டே வரணும்னு சொல்லியிருக்கேனா இல்லையா?” என்றான் பிரசன்னா.

“தூங்க மாட்டேன். பாடுங்க…” என்று வசுந்தரா ஆசையாகக் கேட்க,

கண்ணே கலைமானே கன்னி மயிலெனக்
கண்டேன் உனை நானே
கண்ணே கலைமானே கன்னி மயிலெனக்
கண்டேன் உனை நானே
அந்திப் பகல் உனை நான் பார்க்கிறேன்
ஆண்டவனை இதைத்தான் கேட்கிறேன்
ராரிராரோ ஓராரிரோ
ராரிராரோ ஓராரிரோ

என்று பிரசன்னா லயித்துப் பாட ஆரம்பித்ததுமே வசுந்தராவின் கண்கள் தூக்கத்தில் சொருகின.

“தூக்கம் வருதுங்க…” என்று தூக்கக் கலக்கத்துடன் முனங்கினாள்.

“சரி தூங்கு தாரா. ஆனா ஊட்டிக்குப் போனப்பிறகு தூங்கணும்னு சொல்லக் கூடாது…” மிரட்டலாகச் சொன்னான்.

அவனின் ஆசை உணர்ந்தவள் ‘சரி’ என்று சொல்லி விட்டு அப்படியே உறங்கிப் போனாள்.

ஊட்டிக்குப் போய்ச் சேர்ந்து ஹோட்டல் ரூமிற்குள் நுழைந்த இருவரும், சாப்பிடும் நேரம் தவிர மற்ற நேரம் வெளியே வரவே இல்லை.

ஊர் சுற்றாமல் தேனிலவு கொண்டாட வேண்டும் என்ற பிரசன்னாவின் ஆசை இந்த முறை தங்கு தடையின்றிக் காதலுடன் நிறைவேறியது!


“அத்தை மேல விழுந்துடாதே மயூ பேபி. அத்தை வயித்துக்குள்ள குட்டி பேபி இருக்கு…” என்று வசுந்தராவின் மீது தாவி ஏறப்போன தங்கை மகள் மயூரியை வேகமாக ஓடிவந்து தூக்கிக் கொண்டான் பிரசன்னா.

“நா அத்தகித்த உத்காதணும்…” என்று மழலையில் அடம் பிடித்தாள் மயூரி.

“அத்தை இன்னும் கொஞ்ச நேரத்தில் எழுந்து சோஃபாவில் உட்காருவாள்டா பேபி. அப்போ அத்தைகிட்ட போகலாம். இப்போ நீ போய் ஸ்ரீ பேபி கூட விளையாடு…” என்று காஞ்சனாவின் மகள் ‘ஸ்ரீநிதி’யுடன் விளையாட அவள் அருகில் கொண்டு போய் விட்டான்.

“அடுத்து நீ வளையல் போடு பிரசன்னா…” என்று அவனை அழைத்தார் ராதா.

“இதோ வந்துட்டேன்மா…” என்று வளைகாப்பு சடங்கிற்காக மணையில் அமர்ந்திருந்த மனைவியின் அருகில் சென்றான் பிரசன்னா.

அவன் மனைவியை நோக்கிக் செல்லும் போதே அங்கிருந்த உறவினர்கள் அனைவரின் பார்வையும் அவனின் புறம் திரும்பியது.

‘என்னடா இது! எல்லோரும் என்னையே இப்படிப் பார்க்கிறாங்க?’ என்று நினைத்துக்கொண்டே சென்று தாய்மையின் பூரிப்புடன் அமர்ந்திருந்த மனைவியின் கன்னத்தில் சந்தனத்தைப் பூசியவன், அன்னை கொடுத்த வளையல்களை அவளுக்குப் போட்டு விட்டுக் கண்களைச் சிமிட்டிச் சிரித்தான்.

கணவனின் கண் சிமிட்டலிலேயே அவன் அடுத்து என்ன செய்யப் போகின்றான் என்று புரிந்து கொண்டவள் ‘வேண்டாம்’ என்று வேகமாகத் தலையை அசைத்தாள் வசுந்தரா.

‘கள்ளன் வந்துவிட்டான்! கண்டித்தாலும் அடங்க மாட்டான்!’ என்பது போல் முகத்தை வைத்துக் கொண்ட பிரசன்னா மனைவியை நோக்கி மெல்ல குனிந்து அவளின் சந்தனம் பூசிய கன்னத்தில் தன் அதரங்களை அழுத்தி வைத்தான்.

அவன் முத்தமிட்ட மறுநிமிடம் சுற்றி இருந்த அனைவரும் “ஹோ… ஹோ…” என்று ஆரவாரமாகச் சப்தமிட்டனர்.

“அண்ணா, குட் ஷாட்!” என்று இருவரையும் புகைப்படம் எடுத்ததைக் கேமராவை ஆட்டிக் காட்டிச் சிரித்தான் யாதவ்.

தான் கண்ட கனவை நனவாக்கிய கணவனைக் காதலுடன் பார்க்க நினைத்தாலும், சுற்றிலும் இருந்த உறவினர்களின் ஆரவாரத்தில் நாணத்துடன் தலையைக் குனிந்து கொண்டாள் வசுந்தரா.

“அதானே பார்த்தேன். பிரசன்னாவா கொக்கா! அவன் கல்யாணத்துக்கே எல்லார் முன்னாடியும் ப்ரொபோஸ் பண்ணியவன். வளைகாப்புக்கு மட்டும் சும்மா இருப்பானா?” என்று பிரசன்னாவின் நண்பர்கள் குழு ஆரவாரமாகக் கத்தினர்.

“நாங்களும் அப்படி நினைச்சுத்தானே இந்த முறை அவன் என்ன செய்யப் போறான்னு அவனையே பார்த்துட்டு இருந்தோம்…” என்று உறவினர்கள் வேறு ஒரு பக்கம் கத்தினர்.

அந்த இடமே ஆர்ப்பாட்டமாக இருக்க உறவினர்கள், நண்பர்களின் கேலியைச் சற்றும் சட்டை செய்யாமல் மனைவியை மட்டும் காதல் பார்வை பார்த்துக் கொண்டிருந்தான் பிரசன்னா.

பெரியவர்களின் பூரிப்போடும், சிறியவர்களின் ஆரவாரத்தோடும் வசுந்தராவின் வளைகாப்பு நல்லபடியாக நடந்து முடிந்தது.

அன்னையின் வீட்டிற்குக் கிளம்புவதற்கு முன் தங்கள் அறையில் சோகமாக அமர்ந்திருந்தாள் வசுந்தரா.

அப்போது அறைக்கு வந்த பிரசன்னா, “என்னடா தாரா ஏன் இப்படி உட்கார்ந்திருக்க? உடம்புக்கு எதுவும் பண்ணுதா?” என்று கேட்டுக் கொண்டே வேகமாக மனைவியின் அருகே வந்தான் பிரசன்னா.

“இப்போ கொஞ்ச நேரத்தில் நான் அம்மா வீட்டுக்குக் கிளம்பிடுவேன். உங்க கையால் சாப்பிடாம எப்படி எனக்குச் சாப்பாடு இறங்கும்? அதை விட நீங்க என் பக்கத்தில் இல்லாமல் நான் எப்படி அங்க போய் இருக்கப் போறேன்?” என்று வருத்தமாகக் கேட்டாள் வசுந்தரா.

“அட! இதுக்குத் தான் சோகமா? தினமும் மதியம் நீ என் கையால் தான் சாப்பிடுவ. தினமும் உன்னை ஒருமுறையாவது பார்க்க வராமல் இருக்க மாட்டேன். கவலையை விடு…” என்று சமாதானப்படுத்தினான்.

“வருவீங்க தானே? குட்டி என் வயிற்றில் வந்ததிலிருந்து தினமும் சாப்பாடு ஊட்டி விட்டுப் பழக்கி விட்டுட்டீங்க. இப்போ அது இல்லாம எனக்கு எப்படியோ இருக்கும்…” என்றாள் சோகமாக.

“கண்டிப்பா வருவேன்டா தாரா. அம்மாகிட்ட கூட ஏற்கனவே சொல்லிட்டேன். மதியம் நான் என் பொண்டாட்டியைப் பார்க்க போயிருவேன்னு…” என்றவன், மனைவியின் வயிற்றின் அருகே குனிந்து,

“பேபி குட்டி அப்பா பக்கத்தில் இல்லைனு அம்மாகிட்ட ரொம்பச் சேட்டை பண்ணக் கூடாது. அம்மாக்கு ரொம்பத் தொந்தரவு கொடுக்காம சமத்தா இருக்கணும்…” என்று குழந்தையிடம் சொன்னவன் அப்படியே வயிற்றில் முத்தம் வைத்துக் கொஞ்சினான்.

“எனக்கு?” என்று வேகமாகக் கேட்டாள் வசுந்தரா.

அவளின் வேகத்தில் சிரித்த பிரசன்னா, “உனக்கு இல்லாமயா?” என்றவன் அவளின் இதழில் அழுத்தமாக முத்தம் வைத்தான்.

கணவனை அணைத்துக் கொண்ட வசுந்தரா “கடமைக்குக் கல்யாணம்னு இருந்த என்னையும் மாத்தி இப்போ உங்க பின்னாடி பூனைக்குட்டி மாதிரி சுத்த வச்சுட்டீங்களேங்க. உங்களுக்குப் பொறுமை அதிகம் தான்!” என்றாள் வசுந்தரா.

“அது சின்ன விஷயம் தான் தாரா‌. தன் இணையைக் காதலிச்சா மட்டும் போதாது. காதலிக்க வைக்கவும் தெரியணும்! அதைத்தான் நான் செய்தேன். என்று சர்வ சாதாரணமாகச் சொன்ன கணவனைக் காதலுடன் பார்த்தாள் வசுந்தரா.


“மிட்டாய்… ஹோய் மிட்டாய்… எங்கே போன என் தித்திப்பு மிட்டாய்…” என்று தன் அறையிலிருந்து வெளியே வந்து கத்திக் கொண்டிருந்தான் யாதவ்.

“மாமா மிட்டாயி தா…” என்று அங்கே ஓடி விளையாடிக் கொண்டிருந்த மயூரி தன் மாமனிடம் மிட்டாயைக் கேட்டுக் கை நீட்டினாள்.

“நான் மிட்டாய் விக்கலைடா மயூ குட்டி. உன் அத்தை மிருணாவைத் தான் கூப்பிட்டேன்…” என்று அசடு வழிந்தான் யாதவ்.

“போ மாமா…” அவன் மிட்டாய் இல்லை என்றதில் சோகமாக அங்கிருந்து ஓடினாள் மயூரி.

“என் பிள்ளையை ஏமாத்துறதையே வேலையா வச்சுருக்கடா தம்பி பையா. உன் பொண்டாட்டிக்கு வைக்க வேற பேரே கிடைக்கலைன்னு மிட்டாய்னு வச்சுக்கிட்டுச் சின்னப் பிள்ளைகளை எல்லாம் ஏமாத்திட்டு இருக்க…” என்றாள் அப்போதுதான் மாடி ஏறி வந்து கொண்டிருந்த தீபா.

அவளின் வயிறு மேடிட்டிருந்து ஏழுமாத கர்ப்பிணி என்று எடுத்துரைத்துக் கொண்டிருந்தது.

“நீ ஏன்கா மேல ஏறி வந்த? என்ன வேணும்னு என்கிட்ட போன் பண்ணிச் சொல்லியிருந்தால் நான் கீழே எடுத்துட்டு வந்துருப்பேன்ல…” என்றான் யாதவ்.

“நானும் சும்மா எவ்வளவு நேரம் தான் கீழே உட்கார்ந்து இருப்பதுடா? அதான் மெதுவா ஏறி வந்தேன்…” என்ற தீபா “மிருணா அண்ணிகிட்ட தான் ஏதோ ஹெல்ப் கேட்கணும்னு சொல்லிட்டு இருந்தாள். அங்கே இருக்காளானு பாரு‌…” என்றாள்.

“என் மிட்டாய், அண்ணி ரூமில் தான் இருக்காளா? பாருக்கா, நான் இங்கே இருந்து கத்துறேன் உள்ளே இருந்துகிட்டு இங்கே தான் இருக்கேன்னு சப்தம் கூடக் கொடுக்காமல் இருக்காள்…” என்று மனைவியைப் பற்றி அக்காவிடம் போலிக் கண்ணீர் வடித்துக் குறை சொல்லிக் கொண்டிருக்கும் போதே வசுந்தரா இருந்த அறைக் கதவைத் திறந்து வெளியே வந்தாள் யாதவின் மனைவி மிருணாளினி.

யாதவிற்குத் திருமணம் முடிந்து ஒரு வாரம் தான் ஆகியிருந்தது.

ராதா முன்பே சொன்ன படி பெரிய மகன் பிரசன்னாவின் திருமணம் முடிந்து இரண்டு வருடம் கடந்த பிறகு தான் இளைய மகனுக்குப் பெண் தேடவே ஆரம்பித்தார்.

மிருணாளினியைப் பார்த்ததும் அவள் தான் தன் மிட்டாய் என்று யாதவ் ஜொள்ளு விட்டுச் சம்மதம் சொன்னதும் உடனே திருமண ஏற்பாடு நடந்து கடந்த வாரம் திருமணத்தை முடித்து வைத்திருந்தனர்.

“உன் குறையை என்கிட்ட சொல்லாதே! அதோ உன் பொண்டாட்டியே வந்துட்டாள். அவள் கிட்டயே சொல்லு…” என்று தம்பியை முறைத்துக் கொண்டு நின்ற மிருணாவின் பக்கம் கை காட்டி நமட்டுச் சிரிப்புச் சிரித்தவள்,

“கச்சேரி ஆரம்பம் ஆகட்டும். நான் வர்றேன்…” என்ற தீபா அங்கே விளையாடிக் கொண்டிருந்த தன் மகளை அழைத்துக் கொண்டு கீழே இறங்கிச் சென்றாள்.

“ஃபங்ஷனுக்கு இன்னும் கொஞ்ச நேரம் தான் இருக்கு. சீக்கிரம் வந்து சேருங்க…” என்று நடந்து கொண்டே சொல்லிவிட்டுச் சென்றாள் தீபா.

மிருணா கணவனைக் கோபமாக முறைத்துக் கொண்டே தங்கள் அறைக்குள் சென்றாள். அவளின் பின்னாலேயே ஓடிச் சென்று தங்கள் அறைக் கதவை சாற்றித் தாழ் போட்டு, “என் மிட்டாய் அம்சமாக ரெடியாகி இருக்காளே…” என்று அவளைப் பின்னால் இருந்து அணைக்கப் போனான்.

“ஹே… கஷ்டப்பட்டு ரெடியாகி வந்திருக்கேன். கலைச்சு விட்டுறாதீங்க…” என்று சொல்லிக் கொண்டே அவனின் கையில் சிக்காமல் விலகியவள் இடுப்பில் கைவைத்து, “உங்க அக்காகிட்ட என்னமோ என்னைப் பத்தி குறை சொல்லிட்டு இருந்தீங்களே என்ன அது?” என்று கேட்டாள்.

“அது சும்மா விளையாட்டுக்கு மிட்டாய். அதை விடு! இங்கே வா! மிட்டாய் தித்திப்பு டேஸ்ட் இன்னைக்குக் கூடித் தெரியுது. டேஸ்ட் பண்ணிப் பார்க்கணும்…” என்று அவளைத் தப்பிச் செல்ல விடாமல் வேகமாகத் தன் அணைப்பிற்குள் கொண்டு வந்தவன் ‘டேஸ்ட் பார்க்கிறேன்’ என்று சொல்லி அவளின் இதழில் யுத்தம் புரிந்து மனைவியின் கோபத்தை மட்டுமில்லாது அவளையே மறக்கச் செய்து கொண்டிருந்தான் யாதவ்.


அறையில் கண்ணாடி முன் நின்று தலையை வாரி மாமியார் கொடுத்துவிட்ட மல்லிகையை வசுந்தரா தலையில் சூடிக் கொண்டிருந்த போது கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்தான் பிரசன்னா.

“வாவ்!” மனைவி தயாராகியிருந்த விதத்தைக் கண்டு உற்சாகமாகக் கூவினான்.

கடல் நீல நிறத்தில் டிசைனர் சேலை உடுத்தி, தலைமுடியை விரித்து விட்டு அதற்கு நடுவில் மல்லிகையைச் சூடி, அழகாகத் தயாராகியிருந்த வசுந்தரா கணவனின் சப்தத்தில் அவனின் புறம் வேகமாகத் திரும்பினாள்.

தன்னைக் கண்டதும் மலர்ச்சியுடன் சிரித்த மனைவியின் அழகில் மயங்கியவன், ஆவலுடன் அவள் அருகில் சென்று அணைத்துக் கொண்டான்.

“தேவதை மாதிரி இருக்கடா தாரா…” என்ற கணவனின் மார்பில் வாகாகச் சாய்ந்து கொண்டு, “நீங்களும் தான் அழகா இருக்கீங்க…” என்று சொல்லிச் சற்று நிமிர்ந்து கணவனின் கன்னத்தில் இதழ் பதித்தாள் வசுந்தரா.

பதிலுக்கு மனைவியின் இதழ்களில் தன் முத்திரையைப் பதித்த பிரசன்னா, “எங்கே நம்ம குட்டியைக் காணோம்?” என்று கேட்டான்.

“அவன் அத்தை ரூமில் தான் இருக்கான். அவன் முதல் ப்ரத்டேக்கு தாத்தா, பாட்டி நாங்க தான் தயாராக்குவோம்னு சொல்லி அங்கே ரெடி பண்ணிட்டு இருக்காங்க. நீங்க கேக் வாங்கிட்டு வந்துட்டீங்களா?” என்று கேட்டாள்.

“வாங்கிட்டு வந்துட்டேன் தாரா. எல்லாரும் வர்ற நேரமாச்சு. வா, கீழே போகலாம்…” என்றவன் மீண்டும் ஒரு முறை மனைவியை இறுக்கமாக அணைத்து விடுவித்து அவளுடன் கீழே இறங்கினான்.

அவர்கள் கீழே சென்ற சற்று நேரத்தில் வசுந்தராவின் பெற்றோரும், அக்கா குடும்பத்தினரும் வந்து சேர்ந்தனர். அவர்களை அடுத்து சில உறவினர்களும், நட்புகளும் என்று வருகை அதிகரிக்க ஆரம்பித்தது.

அன்றைய விழா நாயகனான விகாஷின் முதல் பிறந்தநாள். பிரசன்னா, வசுந்தராவின் மகன்.

கேக் வெட்டும் நேரம் வர, மகனை கையில் தூக்கிக் கொண்டான் பிரசன்னா. கணவனின் அருகில் நின்று கொண்டாள் வசுந்தரா.

கிருஷ்ணன், ராதா, எத்திராஜ், கல்பனா, தீபா, சரண், மயூரி, காஞ்சனா, கமலேஷ், ஸ்ரீநிதி, யாதவ், மிருணாளினி… என்று அனைவரும் சுற்றி நின்று பிறந்தநாள் வாழ்த்துப் பாட, அவர்களுடன் தன் குட்டி கைகளைத் தட்டிவிட்டு அன்னையின் உதவியுடன் கேக்கை வெட்டினான் விகாஷ்.

முதலில் வசுந்தரா மகனுக்குக் கேக்கை சிறிது எடுத்து ஊட்ட, கேக்கை வாங்க மாட்டேன் என்று சேட்டை செய்து பின் தன் வாய் முழுவதும் ஈசிக்கொண்டு கேக்கை சப்புக் கொட்டி உண்ண ஆரம்பித்தான் விகாஷ்.

பின் கணவனுக்குக் கொடுத்து, தானும் உண்டு, அங்கிருந்த அனைவருக்கும் கேக்கை பகிர்ந்து கொடுத்து விட்டு மகனின் அருகில் மீண்டும் வந்து நின்றாள் வசுந்தரா.

“இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்டா விகாஷ் கண்ணா…” என்று மகனுக்குத் தான் வாங்கி வைத்திருந்த பொம்மைக் கார் பரிசை கொடுத்தான் பிரசன்னா.

பரிசை வாங்கிச் சந்தோஷித்த விகாஷ் கேக் அப்பியிருந்த தன் உதட்டால் தந்தையின் கன்னத்தில் முத்தமிட்டான்.

“விகாஷ் கண்ணா அம்மாவுக்கு…” என்று வசுந்தராவும் மகனிடம் முத்தம் கேட்க, அன்னையின் கன்னத்திலும் முத்தம் வைத்தான்.

பின் தந்தையின் கையில் இருந்த படியே அவனின் கழுத்தில் ஒரு கையைப் போட்டிருந்த விகாஷ் அன்னையின் கழுத்திலும் கையைப் போட்டு, தன் அருகில் இழுத்து மீண்டும் தந்தையின் கன்னத்திலும், அன்னையின் கன்னத்திலும் மாறி மாறி முத்தம் வைக்க, அது பார்க்கவே அழகான காட்சியாக இருந்தது.

அவர்களை அப்படியே தன் கேமிராவில் புகைப்படமாக அடக்கிய யாதவ் “விகாஷ் கண்ணா, பெர்ஃபெக்ட் ஷாட்!” என்று உற்சாகமாகக் குரல் கொடுக்க, சுற்றி இருந்த அனைவரும் மகிழ்ச்சியுடன் அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

அவர்களுடன் சேர்ந்து மகிழ்ச்சியுடன் மகனைப் பார்த்துக் கொண்ட பிரசன்னாவும், வசுந்தராவும் பின் காதலுடன் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள அதையும் அழகான புகைப்படமாக மாற்றினான் யாதவ்.

பின் குடும்பத்தினர் அனைவரையும் நிற்க வைத்துப் புகைப்படக்காரர் புகைப்படம் எடுக்க, அப்புகைப்படத்தில் அனைவரும் மகிழ்ச்சியும், ஒற்றுமையுமாக அழகாகச் சிரித்துக் கொண்டிருந்தனர்.

***சுபம்***