என்னுள் யாவும் நீயாக – 32

அத்தியாயம் – 32

முதல் முத்தம் இருவரையும் சித்தம் கொள்ள வைத்தது.

சில நொடிகளுக்குப் பிறகு மெதுவாக அவளின் இதழ்களை விட்டுத் தன் அதரங்களைப் பிரித்தவனின் பார்வை மனைவியின் முகத்தை ஆராய, அவளோ மயக்கத்தில் இருப்பவள் போல இன்னும் கண்களை இறுக மூடிக் கொண்டிருந்தாள்.

அவளின் நிலையைக் கண்டவன் குறும்பு மின்ன, அவளின் கண்களில் முத்தமிட்டு அவளை இழுத்து அணைத்துக் கொண்டான்.

“இப்படி முத்தம் கொடுக்கணும், இப்படிக் கட்டிப் பிடிக்கணும், உன்னை விதவிதமா கொஞ்சணும்னு ஆசை எனக்கு அந்த நொடியில் கொழுந்து விட்டு எரிய ஆரம்பிச்சது. ஆனாலும் எனக்கு அது வேண்டாம்னு தோணுச்சு…” என்று சொன்னவன் பேச்சை நிறுத்தினான்.

கணவனின் மார்போடு ஒண்டிக் கிடந்தவள் மெதுவாக அவனை விட்டு விலகி ‘ஏன்?’ என்று கண்களால் கேள்விக் கேட்டாள்.

“நான் உன் உடம்பை ஜெயிக்கணும்னு நினைச்சுருந்தால் நீ என் கூட மனைவியா வாழத் தயார்னு சொன்னதும் என்னால் அதைச் செய்திருக்க முடியாதா தாரா?” என்று அவளின் கண்களை ஆழ்ந்து பார்த்துக் கேட்டான் பிரசன்னா.

அவளின் பதிலை எதிர்பார்க்காமல், “நான் ஜெயிக்கணும்னு நினைச்சது உன் மனசைத் தாரா!” என்றான் ஆழமான குரலில்.

“ஒரு பொண்ணோட உடலை ஜெயிக்கணும்னா ஆணின் உடல் பலம் போதுமே. ஆனா ஒரு பெண்ணின் மனசை ஜெயிக்கணும்னா அவளின் உடலைத் தீண்டாமல் மனதைத் தீண்டனும். ஆனா அப்படி மனதைத் தீண்டுவது அவ்வளவு சுலபம் இல்லை. அதுவும் ஏற்கனவே காதல் தோல்வியில் இருந்த உன் மனதைத் தீண்டுவது இன்னும் கடினம் தான்!”

“அப்படி இருக்கும் போது தினமும் முத்தம் வாங்கிக் கொள்ளும் பழக்கத்தைக் கொண்டு வந்தால் எங்கே உன் உடலை மட்டும் தான் நான் ஜெயிப்பேனோனு எனக்குப் பயம் வந்திருச்சு. அதனால் தான் அந்தப் பழக்கம் வேண்டாம்னு விலகிப் போனேன். ஆனாலும் நானும் உணர்வுகள் உள்ள மனிதன் தானே? அதான் அன்னைக்கு என்னையே கட்டுப்படுத்திக்க முடியாமல் கட்டிப்பிடிச்சுட்டேன்…” என்றான் பிரசன்னா.

‘தான் இன்னொருவனைக் காதலித்தேன் என்ற காரணத்தையும் ஒதுக்கித் தள்ளி, என் மேல் உள்ள கோபத்தையும் குறைச்சுக்கிட்டு, நானே வழிய மனைவியா வாழத் தயார் என்று சொன்னப் பிறகும் விலகி நின்று, உடலாலும் சரி, மனதாலும் சரி குத்திக் கிழித்துக் காயப்படுத்தாமல் முடிந்தவரை கட்டுப்பாடாக இருந்து, என் உடலைத் தொட்டு ஆளணும் என்று நினைக்காமல் என் மனதைத் தொட்டு ஆளணும் என்று நினைத்த என் கணவன் எவ்வளவு நல்லவன்! உன்னதமானவன்!’ என்று கணவனைப் பற்றி மனதில் உயர்வாக நினைத்துப் பிரமிப்புடன் பார்த்தாள் வசுந்தரா.

“என்ன இது என்னை இப்படிப் பார்க்கிற தாரா?” என்று அவளின் தோளின் மீது கையைப் போட்டுக் கொண்டு கேட்டான்.

தான் மனதில் நினைத்ததைக் கணவனிடம் சொன்னாள் வசுந்தரா.

“நான் அவ்வளவு நல்லவனாவா இருந்தேன்? உன்னை விட்டு விலகி இருந்து தவிக்கவும் விட்டேன் தானே?” என்று கேட்டான்.

“அது உண்மைதான்! ஆனா அதுக்கும் உங்க பக்கம் நியாயம் இருக்கும்னு எனக்கு இப்போது தோணுது…” என்று சொல்லிக் கணவனைப் பார்த்து மென்னகை புரிந்தாள் வசுந்தரா.

“ஆமா காரணம் இருக்கு…” என்றவன், “ஏன் அப்படித் தவிக்க விட்டேன்னா என் செய்கை மூலம் உன்னை என் பக்கம் நெருங்கி வர வைத்தேன் தான். ஆனால் நீ கணவனுக்குச் செய்யும் கடமையாகத் தான் ஆரம்பத்தில் நெருங்கி வந்தாய். ஆனா எனக்குத் தேவை கடமை இல்லை காதல்!”

“அதனால் தான் என் காதலியாக உன்னை வரவைக்கப் போராடி உன்னை என் பக்கம் இழுக்க என்னவெல்லாம் செய்தேனோ அதை எல்லாம் கொஞ்சம் கொஞ்சமா குறைத்துக் கொண்டே வந்தேன். அப்படியும் முழுசா உன்னை விட்டு விலகக் கூடாதுனு தான் நான் உனக்குச் சாப்பாடு கொடுக்கலைனாலும் நீ கொடுத்ததை மறுக்காமல் வாங்கிக் கொண்டேன். …” என்று சொல்லி ஆழ்ந்த பெருமூச்சு ஒன்றை இழுத்து விட்டான்.

“அக்கா வளைகாப்புக்குப் புதுச்சேரி போனப்ப ஏன் என்னை விட்டுட்டு வந்தீங்க?” என்று கேட்டாள்.

“ஏன்னா நீ அன்னைக்குத் தான் உன்னை நீயே நன்றாக உணர ஆரம்பித்திருந்தாய்…” என்று சொல்லிப் புன்னகை புரிந்தான் பிரசன்னா.

“என்ன சொல்றீங்க? அப்போ உங்களுக்கும் என் மனநிலை புரிந்ததா? நான் அன்னைக்குத் தான் என் மனதை நன்றாகப் புரிந்து கொண்டேன். அது எப்படி உங்களுக்குத் தெரிந்தது?” என்று கேட்டாள்.

வேனில் போகும்போது அவள் உரிமையாகக் கோபப்பட்டதும், வளைகாப்பு நிகழ்ச்சியின் போது தன்னையே அவளின் பார்வைச் சுற்றி வந்ததையும் எடுத்துச் சொன்னான் பிரசன்னா.

“அது மட்டுமில்ல இன்னும் ஒன்னும் கூட என்னை உணர வைத்தது…” என்று தயக்கத்துடனும், வெட்கத்துடனும் சொன்னாள் வசுந்தரா.

“அட! வெட்கப்படும் அளவுக்கு ஏதோ நினைச்சுருக்கப் போல… என்ன அது?” என்று ஆர்வமாகக் கேட்டான் பிரசன்னா.

தனக்கு வளைகாப்பு நடந்தது போலவும், அவன் முத்தமிட்டது போலவும் தனக்குக் கற்பனையில் தோன்றியதைக் கூச்சத்துடனும், நாணத்துடனும் கணவனிடம் சொன்னாள் வசுந்தரா.

“ஹேய்! கனவில் முத்தம் கொடுத்தேனா? எங்கே இங்கேயா?” என்று அவளின் இதழ்களை வருடி ஆர்ப்பாட்டமாகக் கேட்டான் பிரசன்னா.

“இல்ல..இல்லை… கன்னத்தில் தான்…” என்று வேகமாகச் சொன்ன மனைவியைக் குறும்புடன் பார்த்தான் பிரசன்னா.

அவனின் பார்வை அவளுக்குக் கூச்சத்தைத் தர, கணவனின் மார்பிலேயே புதைந்து கொண்டு தன் வெட்கத்தை மறைக்க முயன்றாள்.

பிரசன்னா அவளை இறுக்கமாக அணைத்துக் கொள்ள, அவனின் மார்பில் இருந்த படியே அன்று வேனில் வரும்போது எப்படிக் கணவன் இல்லாமல் வெறுமையாக உணர்ந்தாள் என்பதையும் எடுத்துச் சொன்னாள்.

“நீ அப்படி உணர வேண்டும் என்று தான் நான் உன்னை விட்டுட்டு வந்தேன் தாரா. அதோட மறுநாளிலிருந்து உன்னை விட்டு விலகியதற்குக் காரணமும் உன் பார்வைதான். நெருங்கிவந்து உன் மனதிற்குள் நெருக்கத்தைக் கொண்டுவர முயன்றது போல, விலகி நின்று இன்னும் நன்றாக உன் மனதை நீயே உணர்ந்து கொள்ள வேண்டும் என்று நினைத்தேன்.

அதோட ‘தாரா’ன்னு உன்னைக் கூப்பிடாமல் ‘வசு’ன்னு உன்னைக் கூப்பிட்டதுக்குக் காரணமும் அது தான். உன் மனதில் எனக்கான இடத்தைப் பிடிக்காமல் உன்னைத் தாரான்னு கூப்பிட கூடாதுன்னு எனக்கு நானே தடைப் போட்டுக் கொண்டேன். ஆனாலும் எத்தனை நாள் உன்னை நான் ஆசையா கூப்பிடும் பேரை இப்படிக் கூப்பிட முடியாமல் போயிருச்சேனு தவிச்சுருக்கேன் தெரியுமா?” என்றான் பிரசன்னா.

“நீங்க விலகி இருந்தப்போ உங்க மேல கோபமாகவும் வந்துச்சு. அதே நேரம் என் மனசும் எனக்குப் புரிஞ்சுதுங்க. ஆனாலும் நீங்க வசுன்னு கூப்பிடும் போதெல்லாம் ஆரம்பத்தில் எவ்வளவு ஆசையா தாரான்னு கூப்பிடுவார். இப்போ வசுன்னு கூப்பிட்டு என்னைத் தள்ளி வைக்கிறாரேனு நானும் வருந்தியிருக்கிறேன். ஆனா அப்படிக் கூப்பிட்டது உங்களுக்கு எவ்வளவு வேதனையைத் தந்திருக்கும்னு எனக்கு இப்போ புரியுதுங்க. சாரி…” என்று வருத்தத்துடன் சொன்னாள் வசுந்தரா.

“வருத்தப்படாதே தாரா! முடிந்ததை விட்டுவிடலாம்…” என்றான் பிரசன்னா.

“ம்ம்… ஆனா நான் இன்னும் ஒரு விஷயமும் சொல்லணும்ங்க…” என்று தயக்கத்துடன் இழுத்தாள்.

“என்ன தாரா? தயங்காமல் சொல்…” என்று மனைவியை ஊக்குவித்தான் பிரசன்னா.

அவனோடு இன்னும் ஒண்டிக் கொண்டவள், “இரண்டு நாளைக்கு முன்னாடி அந்தக் கிரபாகரனைப் பார்த்தேன்…” என்று தயக்கமாக ஆரம்பித்தாள்.

‘உன்னை நான் தவறாக நினைக்கவில்லை. சொல்லி முடி’ என்பது போல் தானும் மனைவியை அணைத்துக்கொண்டான் பிரசன்னா.

“நான் கொஞ்ச நாளைக்கு முன்னாடி ஒருவேளை கிரபாகரனை நேரில் பார்த்தால் என் மனது தடுமாறுமோ, வேதனைப்படுமோ, துவழுமோ என்றெல்லாம் நினைத்திருக்கிறேன். ஆனா இரண்டு நாளைக்கு முன்னாடி கிரபாகரனைப் பார்த்தப்போ யாரோ மூன்றாம் மனிதனைப் பார்க்கும் பார்வைத் தான் என்னால் பார்க்க முடிந்தது.

அதுமட்டுமில்லாம நீங்க என் மனசு முழுவதும் நிறைந்திருக்கும் போது அவன் எனக்கு யாரோ ஒருவனாக மட்டும் தான் தெரிந்தான். இதை நீங்க நம்பணும்…” என்று தயக்கத்துடனேயே சொல்லி முடித்து விட்டு கணவனின் மார்பில் இருந்து முகத்தை மட்டும் நிமிர்த்தி அவனின் கண்களைப் பார்த்துச் சொன்னாள் வசுந்தரா.

“நீ இவ்வளவு விளக்கம் சொல்லத் தேவையே இல்லை தாரா. நான் உன்னை முழுமையாக நம்புகிறேன். அப்புறம் இன்னொரு விஷயம் அன்னைக்கு நீ கிருபாகரனோடு பேசும் போது நானும் அங்கேதான் இருந்தேன். நீங்க ரெண்டு பேரும் பேசியது எல்லாம் எனக்கும் தெரியும்…” என்று அமைதியாகச் சொன்னான் பிரசன்னா.

‘என்ன?’ என்று கணவனை வசுந்தரா அதிர்ந்து பார்த்தாள்.

“நீ இப்படிப் பயத்துடன் பார்க்க வேண்டியதில்லை தாரா. அந்தக் கிருபாகரன் கிட்ட நான் ‘மிசஸ் வசுந்தரா பிரசன்னா’ என்று கம்பீரமாக மட்டுமில்லாமல் காதலுடனும் நீ சொன்னதைக் கேட்டேன். அதற்கு மேல் நீங்க என்ன பேசினீங்க என்பது கூட எனக்குப் பொருட்டே இல்லை. என் மனைவி மனதில் சிம்மாசனமிட்டு அமர்ந்திருப்பவன் நான் தான்! நான் மட்டும்தான்! என்று எனக்கு நன்றாகவே புரிந்து விட்டது…” என்று சொல்லி நிமிர்ந்து பார்த்துக் கொண்டிருந்த மனைவியின் நெற்றியில் முத்தமிட்டான் பிரசன்னா.

கணவன் தன்னைப் புரிந்து கொண்டதோடு மட்டுமில்லாமல், தவறாக நினைக்காமல் போனதில் உள்ளம் உவகை கொள்ளக் காதலுடன் அவனின் கன்னத்தில் முத்தமிட்டாள் வசுந்தரா.

“அம்மாடியோ! முதல்முதலா என் பொண்டாட்டி எனக்கு முத்தம் கொடுத்து விட்டாள்…” ஆர்ப்பாட்டமாகக் கத்தினான் பிரசன்னா.

“அச்சோ! என்ன இது, இப்படிக் கத்துறீங்க?” என்று வெட்கத்துடன் கணவனின் வாயை கைக்கொண்டு மூடினாள்.

“நீ இப்படிக் கையால் மூடுவதை விட உன் உதட்டால் மூடியிருந்தால் சந்தோஷப்பட்டுருப்பேன்…” என்று கேலியாகச் சொன்னான்.

“அதெல்லாம் குடுக்க முடியாது…” என்று வேகமாக மறுத்தாள் வசுந்தரா.

“நீ கொடுக்கா விட்டால் என்ன? நான் கொடுத்துட்டு போறேன். அதோட என் மனைவியின் மனதை கொள்ளையிட்ட எனக்கு அவளிடம் இருந்து ஒரு முத்தம் வாங்குவதா பெரிய விஷயம்? சீக்கிரமே எனக்கு உன்னை முத்தம் கொடுக்க வைக்கிறேன்…” என்று சொல்லிக் கண் சிமிட்டி சிரித்தான் பிரசன்னா.

‘முடிந்தால் கொடுக்க வைத்துக் கொள்ளுங்கள்…’ என்பதுபோல் கணவனை ஒரு பார்வை பார்த்தாள் வசுந்தரா.

அவளின் பார்வை புரிந்தது போல் புன்னகை புரிந்தான் பிரசன்னா.

அவளின் கன்னங்களைத் தன் கைகளால் தாங்கியவன் “என்னுள் யாவும் நீயாக எப்போதோ நிறைந்துவிட்டாய் தாரா. அதேபோல் உன்னுள் யாவும் நானாக இருக்கணும்னு ரொம்ப ஆசைப்பட்டேன். இப்போ அந்த ஆசை நிறைவேறிவிட்டது. எங்கே நீ அப்போ சொன்னாயே உன்னோட எல்லாமே நான்தான் என்று! அதை இன்னொரு முறை சொல்லு தாரா…” என்று காதலுடன் கேட்டான் பிரசன்னா.

அவனின் ஆசையை நிறைவேற்றும் பொருட்டுத் தன் கணவனைக் காதலுடன் பார்த்த வசுந்தரா “என் கணவனும் நீங்க தான்! என் காதலனும் நீங்க தான்! என் எல்லாமும் நீங்க தான்! என்னுள் யாவும் நீங்கதான்! நீங்க மட்டும் தான்!” என்று கணவன் சொன்ன வரிகளையும் சேர்த்துச் சொன்னாள் வசுந்தரா.

அவள் காதலைச் சொன்ன மறுநிமிடம் அவளின் இதழ்களைச் சிறை செய்தான் பிரசன்னா.

சில நிமிடங்களுக்குப் பிறகு மனைவியின் முகத்தை விட்டு நிமிர்ந்தவன், “உன் மனது என் பக்கம் சாய்ந்த பிறகு தான் இயல்பாகக் கூடத் தொட்டுப் பேச முடியும்னு எத்தனையோ நாள் உன்னை விட்டு விலகி இருந்திருக்கிறேன் தாரா. அப்ப எல்லாம் எனக்கு ரொம்பத் தவிப்பாக இருக்கும். ஆனாலும் உன் தாராவோட மனசு தான் உனக்கு முக்கியம் என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டு எனக்குள் உருப்போட்டுக் கொண்டே என் தவிப்பை எல்லாம் உள்ளுக்குள் அடைத்து வைத்திருக்கிறேன் தாரா. இனி நான் அப்படித் தவிக்க வேண்டாம் தானே?” என்று கேட்ட பிரசன்னா மனைவியைத் தவிப்புடன் பார்த்தான்.

கணவனின் தவிப்பைக் கண்டு வசுந்தராவும் தவித்தாள். தன் மனம் மாறப் பொறுமையாகக் காத்திருந்த கணவனுக்குத் தகுந்த பரிசு தான் தான் என்று உணர்ந்த வசுந்தரா ‘தவிக்க வேண்டாம்’ என்று தலையை மட்டும் அசைத்தாள்.

‘எனக்கு இந்தச் சம்மதம் போதாது…’ என்பது போல் மனைவியை அமைதியாகப் பார்த்தான் பிரசன்னா.

‘வேறு என்ன செய்ய?’ என்று அவளும் கண்களால் கேள்வி கேட்க,

‘அது உனக்குத் தான் தெரிய வேண்டும்…’ என்று பதில் சொன்னவன் புருவம் ஏறி இறங்க, கண்களில் குறும்புடன், உதட்டோரம் பூத்த சிரிப்புடன் மனைவியைப் பார்த்தான் பிரசன்னா.

அப்போது அவன் முகம் காதல் கொண்ட கள்வனின் முகமாய்க் காட்சி அளித்தது.

கணவன் என்ன கேட்கிறான் என்று சில நொடிகளில் புரிந்து கொண்டாள் வசுந்தரா.

முதலில் தயங்கினாலும் அவன் மேல் அவள் வைத்திருந்த காதல் தயக்கத்தை உடைத்தெறிய, மென்மையாக, மிக மென்மையாகக் கணவனின் அதரங்களில் தன் இதழ்களைப் பதித்தாள் வசுந்தரா.

மனைவியின் இதழொற்றலில் மயங்கிய பிரசன்னா அவளின் மென்மையை வன்மையாக மாற்றினான்.

நேரம் செல்ல செல்ல, இதழ்களின் யுத்தம் மட்டுமில்லாமல் கட்டில் யுத்தமும் அங்கே ஆரம்பமானது.

கடமைக்காக இல்லாமல் காதலுடன் ஒருவரை ஒருவர் தழுவி தங்கள் தாம்பத்திய வாழ்க்கையைத் துவங்கி வைத்தனர் அத்தம்பதியர்.

முதல் உறவு காதல் கலந்த இனிய உறவாக நிறையுற்றது!

மனைவியுடன் தாம்பத்தியத்தை வெற்றிகரமாக ஆரம்பித்து, அவளுடன் கலந்து, அவளைக் களைத்துப் போக வைத்து, அவளின் நெற்றியில் முத்தமிட்டு நிமிர்ந்த பிரசன்னா “தேங்க்ஸ் தாரா…” என்றான்.

கணவனின் காதல் விளையாட்டால் கண்களை மூடி இனிய மயக்கத்தில் ஆழ்ந்திருந்த வசுந்தராவின் கண்கள் பட்டென்று திறந்து கணவனைச் செல்லமாக முறைத்தன.

அவளின் முறைப்பைக் கண்டு பிரசன்னா சிரிக்க, “நீங்களும் நானும் ஒன்னு தானே. அப்படி இருக்கும்போது எனக்கு நீங்க தேங்க்ஸ் சொல்வது நியாயமா?” என்று முகத்தைச் சுளித்துக் கேட்டாள்.

“ஓஹோ! அப்ப நீயும் நானும் தேங்க்ஸ் சொல்வது நியாயமே இல்லையா?” என்று பிரசன்னா கேலியாகக் கேட்க,

“இல்லவே இல்லை.. காதலர்களுக்குள் தேங்க்ஸ் சொன்னா அது அந்நியமாகத் தான் தெரியும். அதனால் இனிமேல் தேங்க்ஸ் சொல்லாதீங்க…” என்று அழுத்தமாகச் சொன்னாள் வசுந்தரா.

அவளின் அழுத்தத்தில் “ஹா..ஹா…” என்று வாய் விட்டுச் சிரித்தான் பிரசன்னா.

அவனுக்கு அன்றொரு நாள் ‘நமக்கிடையே வரும் தேங்க்ஸ் என்பதற்கான அர்த்தத்தை ஒருநாள் நீயே புரிந்து கொள்வாய்’ என்று சொன்னது அப்போது ஞாபகத்தில் வந்தது.

அவளின் காதல் தன் மீது இல்லாததால் தோற்றுப் போனதாக நினைத்த தன் காதலை ஜெயிக்க வைக்க நினைத்து, இப்போது மனைவியையும் தன் மீது காதல் கொள்ள வைத்துக் காதலில் வெற்றிகரமாக வெற்றி வாகை சூடி இருந்தான் மனைவியின் காதலனாய் மாறிப்போயிருந்த அந்த மருத்துவன்!