என்னுள் யாவும் நீயாக – 29

அத்தியாயம் – 29

“ஹாய் வசுந்தரா… எப்படி இருக்க?” என்ற கேள்வியுடன் தன் முன்னால் வந்து நின்ற கிருபாகரனை வசுந்தரா சற்றும் எதிர்பார்க்கவில்லை.

இத்தனை நாட்களில், என்றேனும் இவனை எதிர் எதிரே பார்க்க நேரிட்டால் என்ன செய்வதென்று அவளுக்குத் தோன்றியதில்லை தான்.

ஆனாலும் சிறிதும் தடுமாறாமல் யாரோ ஒருவனைப் பார்ப்பது போல் கிருபாகரனை எதிர்கொண்டாள் வசுந்தரா.

“ஹலோ மிஸ்டர்…” என்று மட்டும் சொல்லிப் பேச்சை நிறுத்தினாள்.

“என்ன வசுந்தரா என்னைத் தெரியாததைப் போலப் பார்க்கிறே? என் பேரும் மறந்து விட்டதா உனக்கு? மிஸ்டர்னு கூப்பிடுறே!” என்று கேட்டான். உண்மையில் இந்தளவு அன்னியத்தன்மையை வசுந்திரா காட்டியது அவனுக்கு அதிர்ச்சியே!

“ஏன் தெரியாம… நீங்க நான் முன்னால் வேலை பார்த்த கம்பெனியின் மேனேஜர் என்று எனக்கு நல்லாவே தெரியும். உங்க பேர் கிருபாகரன் என்பதும் ஞாபகமிருக்கு…” என்று அழுத்தமாகச் சொன்னாள்.

‘நீ… நான் வேலை பார்த்த முன்னால் கம்பெனியின் மேனேஜர். அவ்வளவு தான் நமக்கிடையே இருக்கும் உறவுநிலை. வேற எதுவும் சம்மந்தமில்லை. அதனுடன் அங்கேயே நில்!’ என்று சொல்லாமல் சொல்லி அவனைத் தள்ளி நிறுத்தினாள் வசுந்தரா.

அவளுடைய பேச்சிலும் அதைச் சொல்லிய மிடுக்கிலும் திடுக்கிட்டான் கிருபா.

“பை தி வே, கால் மீ மிசஸ் வசுந்தரா பிரசன்னா…” என்று தோரணையுடன் சொன்னாள்.

அப்போது அவளின் குரலில் தெரிந்த கம்பீரத்தில் “சாரி மிசஸ் பிரசன்னா…” என்று இரங்கிய குரலில் உடனே தன் அழைப்பை மாற்றிக் கொண்டான் கிருபாகரன்.

ஆனாலும் அவனின் கண்கள் வசுந்தராவை ஆராய்ச்சியாகப் பார்த்தன. அவளின் நிலையைத் தெரிந்து கொள்ளும் ஆர்வம் அவனுக்குள்ளே இருந்தது.

“என்ன விஷயம், எதுக்கு என்னை வழி மறைச்சுப் பேசிட்டு இருக்கீங்க மிஸ்டர்?” என்று அவனின் பார்வையைப் பிடிக்காமல் கேட்டுவிட்டாள்.

கிருபாகரனைப் பார்த்ததால் தயக்கமோ, தடுமாற்றமோ, ஐயோ! இவனைப் பார்த்து விட்டேனே என்ற பரிதவிப்போ, நீயா? என்ற அதிர்ச்சியோ வசுந்தராவிடம் சிறிதும் இல்லை.

முன்பு ஒரு காலத்தில் காதலித்தவன் தான் முன்னால் வந்து நிற்கிறான். எப்போது அவன் இன்னொருத்தியின் கணவன் ஆனானோ அப்போதிருந்து அடுத்தவளின் கணவன் அவன் என்பது மட்டும் தான் அவளின் ஞாபகத்தில் இருந்தது. அதைத் தாண்டி அவளின் சிந்தனை ஒரு நாளும் செல்லாததால் அவனைச் சிறிதும் தடுமாற்றம் இல்லாமல் எதிர்கொண்டாள்.

அது மட்டுமில்லாமல் இப்போது அவளின் மனம் முழுவதும் பிரசன்னா ஆட்சி செய்து கொண்டிருக்க, கணவனைத் தவிர அடுத்த ஆண்கள் எல்லாம் அவளுக்கு அந்நிய ஆடவர்களே!

கணவனைக் காதலிக்கத் தொடங்கி அவனை மனத்திற்குள் சுமந்து கொண்டிருப்பவளுக்கு முன்னால் காதல் என்ற ஒன்றை நினைக்கவும் பிடிக்கவில்லை. அதனாலேயே வார்த்தையிலேயே கிருபாகரனை எட்ட நிறுத்தினாள்.

அவளின் அந்தப் பேச்சினால் அடுத்து என்ன பேச என்று கூடப் புரியாமல் தடுமாறிப் போனது என்னவோ கிருபாகரன் தான்.

“சொல்றதுக்கு ஒன்னும் இல்லைனா நான் கிளம்புறேன்…” என்று அவனைத் தாண்டிச் செல்லப் போனாள் வசுந்தரா.

“வசுந்தரா ஒரு நிமிஷம்… சாரி மிசஸ் பிரசன்னா…” அவளின் கண்டனமான பார்வையில் உடனே திருத்தினான் கிருபாகரன்.

“என்ன விஷயம்னு சொல்லுங்க மிஸ்டர் கிருபாகரன்?” என்றாள்.

“உனக்கு… நீ… சாரி! எப்படி இருக்கிறீங்க மிசஸ் வசுந்தரா பிரச்சனா?” என்று அவளை நேரே பார்த்தாலும் தயக்கத்துடனே நலம் விசாரிக்க முயன்றான் கிருபா.

“நீங்க என்னைத் திரும்ப திரும்ப சொல்ல வச்சுட்டு இருக்கீங்க. நீங்க என் பழைய மேனேஜர், நான் பழைய ஸ்டாப் அவ்வளவு தான். இருந்தாலும் சொல்றேன். நான் ரொம்பச் சந்தோசமா இருக்கேன். இப்ப எனக்கு வழி விடுறீங்களா?”

அவனை வெடுக்கென்று வெட்டிவிட்டாள்.

‘இவள் தான் காதலித்த வசுந்தராவா? இல்லை… இவள் முழுதாக மிசஸ் பிரசன்னா ஆகிவிட்டாள்’ என்றே தோன்றியது கிருபாகரனிற்கு. அது அவனுக்கு நிம்மதியே.

ஆனாலும் அவளுடைய உதாசீனத்தை மீறித் தன் மனதில் இருந்ததை அவளிடம் பேசினான்.

“உன்… சாரி உங்க இப்போதைய வாழ்க்கையில் தலையிட எனக்கு உரிமை இல்லைதான். நான் தப்பா எதுவும் நினைச்சுக் கேட்கலை. முன்னாடி ஒரு பொண்ணுக்கு நான் வலியைக் கொடுத்துட்டேன். அதில் என் மனசாட்சி என்னை உள்ளுக்குள் அப்பப்போ குத்திக் காட்டிட்டு இருந்தது. அதனால்தான் ஏதோ உந்துதலில் கேட்டுட்டேன்.

அதுவும் இப்போ எதிர்பாராமல் நேரில் பார்த்ததால் கேட்டேன். இல்லைனா உங்கள் வழியில் எப்பவும் நான் குறுக்க வந்திருக்க மாட்டேன். ஆனா எப்போ மிசஸ் வசுந்தரா பிரசன்னான்னு உங்களை அறிமுகப்படுத்திக்கிட்டீங்களோ அதுக்குப் பிறகு நான் விசாரிப்பது தவறு தான். சாரி…” என்றான் கிருபாகரன்.

அவனுக்கு எந்தப் பதிலும் சொல்லாமல் வசுந்தரா அங்கிருந்து செல்லப் போக, “ஆனா என் முன்னாள் ஸ்டாபோ, இந்நாள் ஸ்டாபோ யாரா இருந்தாலும் ஒரு மனிதாபிமான அடிப்படையில் ஹாஸ்பிட்டலில் பார்க்கும்போது நீங்க என்ன விஷயமா ஹாஸ்பிட்டல் வந்துருக்கீங்க? யாருக்கும் உடம்பு சரியில்லையான்னு கேட்பது மனித இயல்பு. அதை மட்டும் நான் தெரிந்து கொள்ளலாமா?” என்று கேட்டான்.

“என்னோட அக்காவுக்குக் குழந்தை பிறந்திருக்கு…” என்று அதற்கு மட்டும் சாதாராணமாகப் பதில் சொன்னாள் வசுந்தரா.

“என்னங்க, இன்னும் நீங்க மெடிக்கல் போகலையா?” என்று கேட்ட படி லேசாக மேடிட ஆரம்பித்திருந்த வயிற்றுடன் அங்கே வந்தாள் கிருபாகரனின் மனைவி.

“இதோ போறேன்டா ராஜி. நீ ஏன் அதுக்குள்ள எழுந்து வந்த? ஸ்கேன் பார்க்கிற இடத்துலேயே உட்கார்ந்து இருக்க வேண்டியது தானே? இங்கே பார் அதுக்குள்ள எப்படி வேர்த்திருக்குன்னு…” என்று மனைவியின் முகத்தில் பூத்திருந்த வியர்வையைத் தானே துடைத்தான் கிருபாகரன்.

அவர்கள் பேசிக் கொண்டதை கேட்ட படியே விலகிச் சென்றாள் வசுந்தரா.

“அவங்க யாருங்க?” என்ற மனைவியின் கேள்விக்கு “முன்னாடி என் ஆபீஸில் வேலை பார்த்தவங்கடா ராஜி. தற்செயலா இங்கே பார்க்கவும் விசாரிச்சேன். நீ வா நாம போகலாம்…” என்று மனைவியை அழைத்துக் கொண்டு அங்கிருந்து சென்றான் கிருபாகரன்.

இங்கே கிருபாகரன் நல்லவனா? கெட்டவனா? என்று கேள்வி நமக்குத் தேவையில்லாத ஒன்று தான்! அவன் நல்ல குணம் படைத்தவன் தான் என்றாலும் பெற்றோருக்கு அடங்கிப் போகும் மகன் அவன்! அதே நேரம் அவனை நம்பி திருமணம் முடித்துக் கொண்ட மனைவிக்கு நல்ல கணவன்! சூழ்நிலைக்கு ஏற்ப தன் வாழ்க்கையை ஏற்றுக் கொண்ட ஒரு சராசரி ஆண்மகன்! அதையும் தாண்டி அவனைப் பற்றிய ஆராய்ச்சி நமக்குத் தேவை இல்லை என்பதால் நாம் இனி பிரசன்னா, வசுந்தராவை மட்டும் பார்ப்போம்.

மனைவியுடன் பேசிக் கொண்டே சென்ற கிருபாகரனைப் பார்த்துக் கொண்டே அவர்களைத் தாண்டித் தன் மனைவியை நோக்கிச் சென்றான் பிரசன்னா.

வசுந்தராவும், கிருபாகரனும் பேசிக் கொண்டது அவனின் காதில் நன்றாகவே விழுந்தது.

அவர்களின் பேச்சில் இருந்தே கிருபாகரன் யார் என்று பிரசன்னாவிற்குப் புரிந்து விட்டது. ஆனாலும் முகத்தில் எந்தப் பாகுபாடும் காட்டாமல் அவர்களைக் கடந்து சென்றான்.

“வசு…” சில அடிகள் முன்னால் சென்று கொண்டிருந்தவளை தடுத்து நிறுத்தினான் பிரசன்னா.

கணவனின் குரலில் மலர்ந்த முகத்துடன் திரும்பிப் பார்த்தாள் வசுந்தரா.

அவளின் மலர்ச்சியைக் கண்டு பிரசன்னாவின் முகமும் மலர முயன்றது. ஆனாலும் மனைவியிடம் ஆடிக் கொண்டிருந்த கண்ணாமூச்சி ஆட்டம் இன்னும் முடிவுக்கு வராததால் முயன்று தன் மலர்ச்சியைக் கட்டுப்படுத்திக் கொண்டான்.

“என்னங்க இன்னைக்குச் சீக்கிரம் வேலைக்கு வந்துட்டீங்களா?” என்று கேட்டாள்.

“இல்லை அண்ணியையும், குழந்தையையும் பார்த்துட்டுப் போகத்தான் முன்னாடியே வந்தேன். ஆமா நீ என்ன இவ்வளவு லேட்டா சாப்பாடு கொண்டு வந்திருக்க?” என்று விசாரித்தான்.

“நான் அப்பவே வந்துட்டேங்க. இங்க வந்ததும் யாரோ ஒருத்தர் என் வழியை மறைச்சுக் கேள்விக் கேட்டு நேரமாக்கி விட்டுட்டார்…” என்றாள் சலிப்பாக.

“சரி வா… இன்னும் லேட் பண்ணாம சாப்பாட்டைக் கொடு…” மனைவியுடன் காஞ்சனா தங்கியிருந்த அறைக்குள் நுழைந்தான்.

வசுந்தராவும் கிருபாகரன் பற்றிக் கணவனிடம் சொல்லவில்லை. பிரசன்னாவும் கிருபாகரன் யாரென்று தெரிந்தும் மனைவியிடம் விவரமாகக் கேட்டுக் கொள்ளவில்லை.

வசுந்தராவைப் பொறுத்த வரை கிருபாகரன் யாரோ மூன்றாம் மனிதன். அவ்வளவுதான்!

பிரசன்னாவைப் பொறுத்த வரை?

“ஹலோ குட்டி பேபி… என்ன செய்றீங்க?” என்று ஆர்பாட்டமாகக் கேட்ட படி அறைக்குள் நுழைந்தாள் வசுந்தரா.

“வாங்க மாப்பிள்ளை…” என்று மருமகனை வரவேற்ற கல்பனா, “சாப்பாட்டை முதலில் கொடுத்துட்டு பாப்பாவைக் கொஞ்சு வசு. அக்கா அப்பவே பசிக்கிதுன்னு சொன்னாள்…” என்று சாப்பாட்டை வாங்கிய கல்பனா பெரிய மகளுக்குப் பரிமாற ஆரம்பித்தார்.

“எப்படி இருக்கீங்க அண்ணி? பேபி எப்படி இருக்காள்? டாக்டர் என்ன சொன்னார்?” என்று காஞ்சனாவிடம் அவளின் உடல் நலத்தை விசாரித்தான் பிரசன்னா.

“நல்லா இருக்கேன் தம்பி. டாக்டர் நானும், பேபியும் நல்லா இருக்கோம் ஒரு பிரச்சினையும் இல்லைனு சொல்லிட்டார். இன்னைக்கு ஈவ்னிங் டிஸ்சார்ஜ் பண்ண சொல்லிட்டாங்க…” என்றாள் காஞ்சனா.

“ஓகே அண்ணி. டேக் கேர்….” என்ற பிரசன்னா சற்று நேரம் வசுந்தரா கையில் தூக்கி வைத்திருந்த குழந்தையைப் பார்த்துவிட்டு அங்கிருந்த கமலேஷிடம் பேச ஆரம்பித்து விட்டான்.

அன்று மாலையே காஞ்சனாவை வீட்டிற்கு அழைத்துச் சென்று விட்டனர்.

மேலும் இரண்டு நாட்கள் அக்காவுடனும், அவளின் குழந்தையுடனும் நேரத்தைச் செலவழித்துவிட்டு, மூன்றாவது நாள் தன் வீடு வந்து சேர்ந்தாள் வசுந்தரா.

மாலையில் வீட்டிற்கு வந்தவள் சிறிது நேரம் மாமியாருடன் பேசிக் கொண்டிருந்தாள்.

பிரசன்னா மருத்துவமனைக்குச் சென்றிருந்தான்.

தங்கள் அறைக்குச் சென்றவள் குளித்துவிட்டு ஒரு அழகிய சேலையைக் கட்டிக் கொண்டாள். பின்னர்த் தலைவாரி, பூ வைத்து, மங்களகரமாகக் கீழே இறங்கி வந்து மாமியாருடன் வேலையில் உதவிக் கொண்டிருந்தாள். வேலையாள் இருந்ததால் அன்று அவளுக்கு அதிக வேலைகள் இருக்கவில்லை.

சற்று நேரத்தில் மாமனார் வரவும் சில நாட்கள் ஷோரூம் செல்லாததால் அவரிடம் ஷோரூம் விஷயமாகச் சிறிது நேரம் பேசினாள். பின் வெளியே சென்றிருந்த யாதவும் வர, ராதாவும் சேர்ந்து கொள்ள நால்வரும் பேசிக் கொண்டிருந்தனர்.

“டின்னர் டைம் ஆச்சு சாப்பிடுவோமா?” என்று கேட்டார் ராதா.

“நான் வழக்கம் போல அவர் கூடவே சாப்பிடுறேன் அத்தை. நீங்க எல்லாரும் சாப்பிடுங்க…” என்றாள் வசுந்தரா.

பிரசன்னா இரவு எப்போதும் சற்று நேரம் சென்று தான் வருவதால் வசுந்தரா அவன் வந்த பிறகு அவனுடன் தான் சாப்பிடுவாள்.

அம்மாவின் வீட்டிற்குச் செல்லும் முன் சில நாட்கள் கணவன் உணவைப் பகிராமல் இருந்தது மனதில் இருந்தாலும், ஒருவேளை இன்று கோபத்தை விட்டுவிட்டு உணவைக் கொடுத்து விட்டுச் சாப்பிடுவானோ என்ற எதிர்பார்ப்புடன் இருந்தாள் வசுந்தரா. அதனால் கணவனுடன் இரவு உணவு உண்ண ஆவலுடன் காத்திருந்தாள்.

வசுந்தரா பரிமாற மற்றவர்கள் சாப்பிட்டு முடித்தனர்.

மேலும் சிறிது நேரம் பேசிக்கொண்டு இருந்து விட்டு படுக்க அவரவர் அறைக்குச் சென்றனர்.

வசுந்தரா மட்டும் வழக்கம் போல் கணவனின் வருகைக்காக வரவேற்பறையில் காத்திருந்தாள்.

பத்து மணி அளவில் வீடு வந்து சேர்ந்தான் பிரசன்னா. அலங்காரச் சிலையாக வந்து கதவைத் திறந்து விட்ட மனைவியை மனதில் தோன்றிய பரவசத்துடன் பார்த்தான் பிரசன்னா.

அவனின் பரவசத்தை அவனின் கண்கள் தான் பிரகாசித்துப் பிரதிபலித்ததே தவிர முகம் இறுக்கமாக இருந்தது.

வசுந்தராவின் பார்வையில் கணவனின் இறுகிய முகம் மட்டும் விழ, ‘இவர் இன்னும் மலையிறங்கலையா?’ என்று வருத்தத்துடன் நினைத்துக் கொண்டே இரவு உணவை எடுத்து வைத்தாள்.

மனைவியைப் பாராமல் பார்த்துக் கொண்டே மாடி ஏறிச் சென்ற பிரசன்னா குளித்துவிட்டு வந்து சாப்பிட அமர்ந்தான்.

கணவனுக்குப் பரிமாறிய தட்டில், அன்று போல் முதல் வேலையாக முதல் வாய் உணவை அவனின் தட்டில் எடுத்து வைத்துவிட்டு, கணவன் தரப்போகும் உணவிற்காக எதிர்பார்ப்புடன் பார்த்துக் கொண்டிருந்தாள் வசுந்தரா.

ஆனால் அவளின் எதிர்பார்ப்பை ப் பொய்யாக்கி விட்டு அவளுக்குத் உணவைத் தராதது மட்டுமில்லாமல் இன்று அவள் வைத்த உணவையும் பிரசன்னா தொட்டுக் கூடப் பார்க்கவில்லை.

அதைக் கண்ட வசுந்தராவிற்கு ஒரு வாய் உணவு கூட உண்ண முடியவில்லை. வேகமாக அவளின் கண்கள் கலங்க ஆரம்பித்தன.

“சீக்கிரம் சாப்பிட்டு முடி வசு. தூங்கப் போகணும். டயர்டா இருக்கு…” என்று விரட்டினான் பிரசன்னா.

இப்போது அவன் ‘வசு’ என்று அழைத்ததிலும் கோபம் வந்தது. உணவை வைத்து விட்டு எழுந்து செல்லத்தான் மனது துடித்தது.

ஆனாலும் உணவை வீணாக்க வேண்டாமே என்ற எண்ணத்தில் கஷ்டப்பட்டு உண்டு முடித்தவள் சாப்பிட்டதை ஒதுங்க வைத்தாள். அப்போது கணவன் தட்டில் ஓரமாக இருந்த அவள் வைத்த உணவு அவளைப் பார்த்துச் சிரிப்பது போல் இருந்தது.

என்றும் அவள் அடக்கும் கண்ணீர் இன்று அவளையும் மீறி வெளியே வரத் துடித்துக் கொண்டிருந்தது. ஒதுங்க வைத்து விட்டுத் தங்கள் அறைக்குச் சென்றாள்.

அவள் சாப்பிட்டு முடித்ததுமே அறைக்குச் சென்ற பிரசன்னா பால்கனியில் நடந்து கொண்டிருந்தான்.

அவனை ஓரப் பார்வையில் கண்டவள் அமைதியாக அவனுக்கு முதுகைக் காட்டிய படி படுக்கையில் விழுந்தாள். வழக்கமாக மாற்றும் இரவு உடையை இன்று மாற்றி விட்டுப் படுக்கக் கூட அவளால் முடியவில்லை. மனதில் இருந்த பாரம் அவளுக்குச் சோர்வைத் தந்திருந்தது.

அவள் படுத்ததைப் பார்த்த பிரசன்னா அறைக்குள் வந்து, “சாப்பிட்டதும் படுக்கக் கூடாதுன்னு சொல்லிருக்கேன்ல வசு…” என்றான் அதட்டலாக.

‘ஆமா ரொம்பத் தான் அக்கறை. வசுவாம் வசு…’ என்று உள்ளுக்குள் கடுகடுத்த வசுந்தரா அவன் பேச்சுக் காதில் விழாதது போல் படுத்திருந்தாள்.

“உன்னைத்தான் வசு. எழுந்திரு…” என்று மீண்டும் அழைத்தான்.

ம்கூம்… சிறிதும் அசைவேனா என்றாள் வசுந்தரா.

அவளுக்கு இப்போது கணவன் தான் வைத்த உணவையும் உண்ணாமல் விட்டதை நினைத்து வெடித்து அழ வேண்டும் போல் தோன்றியது.

“ட்ரஸ் மாத்திட்டு வந்துனாலும் படு…” என்று சொல்லிப் பார்த்தான்.

வசுந்தரா தான் இருக்கும் மனநிலையில் எழ மனதில்லாமல் படுத்திருந்தாள்.

அவள் எழ மாட்டாள் என்று உறுதியாகி விட, தோளைக் குலுக்கி விட்டுக் கொண்டு மீண்டும் பால்கனி பக்கம் சென்று நடந்து விட்டு வந்து படுத்தான்.

அவன் படுத்து மேலும் சிறிது நேரம் கடந்த பிறகும் அமைதியாகப் படுத்திருந்த வசுந்தரா அவ்வளவு நேரம் கணவனுக்குத் தெரியாமல் லேசாகக் கண்ணீர் சிந்திக் கொண்டிருந்தவள் இப்போது சின்னக் கேவலுடன் அழ ஆரம்பித்தாள்.

கேவல் அவளையும் மீறி பெரிதாக வெளியே வந்துவிட வேகமாகக் கையை வைத்து வாயை மூடிக் கொண்டாள்.

கணவன் தன்னிடம் காட்டிய விலகல், பற்றற்ற தன்மை, திடீரென்று நன்றாகப் பேசுவதும், பின் விலகிப் போவதும் என்று அவளை அலைக்கழித்ததில் இத்தனை நாட்களும் உள்ளுக்குள் உடைந்து கொண்டிருந்தவளுக்கு இன்று அனைத்தையும் நினைத்து நிற்காமல் கண்ணீர் வந்து கொண்டே இருந்தது.

அவளின் கண்ணீர் கன்னம் தொட்டு ஓட “வசு அழறீயா?” என்று பதட்டத்துடன் கேட்டுத் தனக்கு முதுகு காட்டிப் படுத்திருந்தவளை வேகமாகத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான் பிரசன்னா.

அவன் இழுத்த வேகத்தில் அவனின் மார்போடு ஒண்டினாள் வசுந்தரா.

மனைவியை இறுக அணைத்துக் கொண்ட பிரசன்னாவிற்கு வருத்தமாக இருந்தது.

தான் கோபமாக அவளைக் குத்திக் காட்டிய போது கூட அழாதவள் இன்று அழவும் அவனால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. வசுந்தரா அழுது முதல்முறையாகப் பார்க்கிறான்.

அவன் அவளிடம் எதிர்பார்த்தது அவளின் அழுகையை இல்லையே?

“வசு… ப்ளீஸ் அழாதே!” என்று தவிப்புடன் சொன்னான்.

கணவனின் அணைப்பில் இருக்கிறோம் என்பதைக் கூட உணராமல், அழுது கொண்டிருந்தாள் வசுந்தரா.

அவளின் மனதின் வேதனை எதையும் உணர விடவில்லை. அடக்கி வைக்க வைக்க ஒரு நாள் வெடித்துக் கொண்டு சிதறும் என்பது போல் அவள் அடக்கி வைத்த கண்ணீர் அனைத்தும் இன்று அணையை உடைத்துக் கொண்டு வெளியே வருவது போல் வந்து கொண்டிருந்தது.

அவள் அப்படி அழுவது பிரசன்னாவிற்குத் தாங்கொணா வேதனையைத் தந்தது.

“வசுமா… ப்ளீஸ் அழாதே! இங்கே பார்! என்னைப் பார் வசு… வசு… வசு…” என்று தன்னை விட்டு சிறிது விலக்கி அவளின் தோளைப் பிடித்து உலுக்கிய படி மனைவியின் அழுகையை நிறுத்த முயன்றான்.

அவன் மீண்டும் மீண்டும் வசு… வசு… என்று அழைத்து உலுக்க, அந்த அழைப்பு அவளின் கண்களில் அருவியாக ஓடிக் கொண்டிருந்த கண்ணீரைச் சட்டென்று நிறுத்த வைத்தது.

‘வசு… வசு…’ என்ற அந்த அழைப்பே இன்னும் அவன் தன்னை மனதளவில் விலக்கி வைத்திருப்பதாக அவளுக்கு எடுத்துரைக்க, “போதும் நிறுத்துங்க…” என்று கோபமாக வெடித்திருந்தாள் வசுந்தரா.

வசுந்தராவின் கண்ணீர் நின்று அவள் அடக்கி வைத்திருந்த கோபம் வெடித்துச் சிதறிப் பிரசன்னாவின் மீது அனலைக் கக்கத் தயாரானது.