என்னுள் யாவும் நீயாக – 28

அத்தியாயம் – 28

காதல்! அது ஒரு முறை மட்டும் தான் வருமா என்றால் கண்டிப்பாக இல்லை.

மாறிக்கொண்டே இருக்கக் கூடியது தான் மனிதனின் மனம்!

ஒருமுறை தான் தனக்குக் காதல் வந்து சென்று விட்டதே… இனி எப்படித் தன் கணவனைக் காதலிக்க முடியும்? அவனைக் கணவன் என்ற உரிமையில் மட்டுமே ஏற்றுக்கொள்ள முடியும் என்று இத்தனை நாட்களும் எண்ணியிருந்த வசுந்தராவின் மனதும் மாறித்தான் விட்டது.

காதல் ஒருவருக்கு இப்படித்தான் வரும். இப்படித்தான் வர வேண்டும் என்று எந்தக் கோட்பாடுகளுக்குள்ளும் அடங்கிக் கொள்வதில்லை.

வெறுப்பில் கூட விருப்பம் வரும். ஒருவரின் நல்ல செய்கைகளைக் கண்டும் விருப்பம் வரும். காரணமே இல்லாமல் கூட ஒருவரின் மீது விருப்பம் வருவதுண்டு.

வசுந்தராவிற்கும் பிரசன்னாவின் மீது விருப்பம் வந்தே விட்டிருந்தது!

காலையில் கண் விழித்ததிலிருந்து இரவு படுக்கையில் விழும் வரை ஏதோ ஒரு வகையில் வசுந்தராவிற்குத் தன் அருகாமையை உணர்த்தியிருந்தான் பிரசன்னா.

இப்போது அவன் பழக்கப்படுத்தி விட்ட வழக்கம் இல்லாமல் தவித்தாள் என்று சொல்வதை விடக் கணவனின் அருகாமையை, பாசச் செய்கையை, சிறு செய்கையிலும் அவன் உணர்த்திய அன்பை இழந்து தவிப்பது போல் உணர்ந்தாள்‌ வசுந்தரா.

நெருங்கி நின்று அவளுடன் ஒரு பிணைப்பை ஏற்படுத்திக் கொண்ட பிரசன்னா, இப்போது விலகி நின்று அவளின் மனதை அவளுக்கே உணர வைத்துக் கொண்டிருந்தான்.

காதல் தோல்வியில் துவண்டு விழுந்த போது கூட அவளின் வாழ்க்கையில் அவள் வெறுமையை உணர்ந்தது இல்லை.

ஆனால் கணவன் அருகில் இருந்தும் இல்லாமல் விலகி நிற்பது அவளுக்கு வெறுமையை உணர்த்திக் கொண்டிருந்தது.

அவன் பழக்கப்படுத்திய பழக்கங்கள் மட்டுமில்லாமல் அவனும் அவளுக்கு வேண்டும், வேண்டும் என்று அவளின் மனது அடித்துக் கொண்டு சொன்னது.

மதிய பொழுதுகள் ஓய்வெடுக்க என்று இருவரும் அறைக்குள் வந்து விட்டாலும் படுத்து உறங்குவதை விடப் பிரசன்னா மனைவியிடம் ஏதாவது பேசிக்கொண்டே நேரத்தைப் போக்கிய நாட்கள் தான் அதிகம்.

ஆனால் இப்பொழுதோ வசுந்தரா அந்த நேரத்தில் அக்காவைப் பார்க்கச் சென்று விட அக்காவிடம் பேசிக் கொண்டிருந்தாலும் அவளால் ஈடுபாட்டுடன் பேச முடியவில்லை.

‘பேசாமல் கணவனிடமே போய் விடுவோமா?’ என்று தோன்றினாலும் அவன் தன் அக்காவின் மீது இருக்கும் அக்கறையில் தானே சொல்லி இருக்கிறான். அவனே அக்கறையுடன் இருக்கும் போது தான் இன்னும் அதிக அக்கறையுடன் அல்லவா தன் அக்காவைப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று மனதைத் தேற்றிக் கொண்டாள்.

எந்த நேரம் வேண்டுமென்றாலும் காஞ்சனாவிற்குப் பிரசவ வலி வரும் என்பதால் அவளை விட்டுச் செல்லவும் அவளுக்கு மனமில்லை.

கணவனின் அருகாமைக்கு ஏங்கிய அதே நேரம் அவனின் மீது பயங்கரமான கோபத்திலும் கொந்தளித்துக் கொண்டிருந்தாள் வசுந்தரா.

‘என் மேல் கோபம் இருந்தால் அது என்ன கோபம் என்று என்கிட்ட சொல்ல வேண்டியது தானே? அதை விட்டு ஏன் என்னை விட்டு விலக வேண்டும்? அப்படி நான் என்ன தவறு செய்தேன்? ஒருவேளை பழைய விஷயத்தைத் தான் இன்னும் பிடித்துக்கொண்டு இப்படிச் செய்கின்றானோ?’ என்று ஏதேதோ நினைத்துக் குழம்பினாலும் அவனின் மீது அதீதமான கோபத்தையும் உள்ளுக்குள் வைத்துக் கொண்டிருந்தாள்‌.

அவளின் அந்தக் கோபம் எப்போது வேண்டுமானாலும் வெடித்துச் சிதறி அவனின் மேல் தணலைத் தெளிக்கக் காத்திருந்தது.

அன்று மதியம் தன் அம்மா வீட்டில் அவளின் அக்காவுடன் பேசிக்கொண்டிருந்தாள் வசுந்தரா.

“இன்னைக்கு என்னக்கா நீ ரொம்பச் சோர்வா இருக்க?” என்று அக்காவின் முகத்தைப் பார்த்து கேட்க,

“தெரியல வசு… இன்னைக்குக் காலையில் எழுந்ததிலிருந்து அப்படித்தான் இருக்கு…” என்று சோர்வுடன் சொன்னாள் காஞ்சனா.

“அப்ப கொஞ்ச நேரம் படுத்து ரெஸ்ட் எடுக்கா. ஈவ்னிங் சரியாகிடும்…” என்றாள் வசுந்தரா.

அப்போது மகள்களின் அருகே வந்த கல்பனா “எனக்கு என்னமோ இவளுக்குச் சீக்கிரம் டெலிவரி ஆகிடும்னு தோணுது. முகத்தைப் பார்த்தால் அப்படித்தான் தெரியுது…” என்றார்.

அதைக் கேட்டுக் காஞ்சனா லேசான பயத்துடன் அன்னையைப் பார்க்க, “பயப்படக்கூடாது காஞ்சனா. எல்லாம் நல்லபடியா நடக்கும். லேசா வலிச்சா கூட உடனே அம்மா கிட்ட சொல்லிடு…” என்றார் கல்பனா.

“ஆமாக்கா, பயப்படாதே! பேபி உனக்குக் கஷ்டம் கொடுக்காமல் வெளியில் வந்துடுவாங்க. தைரியமா இரு…” என்று வசுந்தராவும் காஞ்சனாவைத் தேற்றினாள்.

“நான் எதுக்கும் அவரைக் கிளம்பி வரச் சொல்லட்டுமா அம்மா?” என்று கேட்டாள் காஞ்சனா.

“அவசரப்படாதே காஞ்சனா. உனக்கு வலி வந்ததும் சொல்லிவிடுவோம். இப்போ நீ படுத்து ரெஸ்ட் எடு…” என்றார்.

“நீ அவ பக்கத்திலேயே இரு வசு. நான் மாடியில் துணிக் காயப் போட்டேன். அதைப் போய் எடுத்துட்டு வர்றேன்…” என்று இளைய மகளிடம் சொல்லிவிட்டுச் சென்றார்.

அக்காவின் அருகில் படுத்த வசுந்தராவிற்குக் கணவனின் ஞாபகம் வந்தது.

அவனிடம் பேச வேண்டும் போல் தோன்றியது. கணவனின் விலகலால் அவனின் மீது கோபம் இருந்தாலும் அவனிடம் பேச அவள் உள்ளம் தவித்தது.

‘இப்ப என்ன செய்வார்? போன் போட்டுப் பேசி தான் பார்ப்போமா? இல்லை ஏன் போன் போட்ட என்று திட்டுவாரா?’ என்று யோசித்துக்கொண்டே தன் கைபேசியை எடுத்துக் கணவனின் தொலைபேசி எண்களைப் பார்த்துக்கொண்டே இருந்தாள்.

அவனிடம் பேசியே ஆகவேண்டும் என்று மனம் உந்தித் தள்ள அழைத்தே விட்டுருந்தாள்.

அழைப்பு மணி முழுதாக அடித்து ஓயும் நிமிடம் வரை அவன் எடுக்காமல் போக, அவளின் மனம் ஏமாற்றத்துடன் சோர்வுற்றது.

சரியாக மணி நிற்கப் போகும் நேரத்தில் அழைப்பை ஏற்றிருந்தான் பிரசன்னா.

அழைப்பை ஏற்று விட்டாலும் பிரசன்னா ஒன்றும் பேசாமல் மௌனமாக இருக்க, ‘ஒருவேளை அழைப்பு அடித்து ஓய்ந்து விட்டதோ?’ என்று நினைத்துக் கைபேசியை முகத்திற்கு நேராக எடுத்துத் திரையைப் பார்த்தாள்.

அப்போதுதான் கணவன் அலைபேசி தொடர்பில் இருப்பதைக் கண்டவள் வேகமாகக் கைபேசியைக் காதில் வைத்து “ஹலோ…” என்றாள்.

அவள் ‘ஹலோ’ சொன்ன வேகத்தில் அந்தப்பக்கம் பிரசன்னா மௌனமாகச் சிரித்துக் கொண்டான். ஆனாலும் பதில் பேசாமல் மெளனமாக இருந்தான்.

அவனின் அமைதி வசுந்தராவைக் கொல்லாமல் கொன்றது. தன் மனவலியை ஓரமாக ஒதுக்கி வைத்தவள் “சாப்டீங்களா?” என்று கேட்டாள்.

“ம்ம்…” என்று மட்டும் பிரசன்னா ஒலியை எழுப்ப, அவன் பேச ஆர்வம் காட்டாததில் வசுந்தராவிற்குச் சொத்தென்று ஆனது.

“எங்கிட்ட பேச மாட்டீங்களா?” என்று ஏக்கமாகக் கேட்டவள் உடனே அழைப்பைத் துண்டித்து விட்டாள்.

அவனின் நிராகரிப்பில் அழுகை வரும் போல் இருந்தது. ஆனால் எப்போதும் போல இப்போதும் தன் அழுகையை அடக்கிக் கொண்டாள்.

அவளின் அருகில் படுத்திருந்த காஞ்சனா அசைவது போலிருக்க, முயன்று தன் வேதனையைக் கட்டுப்படுத்திக் கொண்டு அமைதியாகப் படுத்துக் கொண்டாள்.

மனைவியின் ஏக்கத்தை அலைபேசியின் வழியாகக் கேட்ட பிரசன்னாவிற்கு வருத்தத்தை விடச் சந்தோசம் தான் அதிகமாக இருந்தது.

“நம்ம இரண்டு பேரின் நல்லதுக்காகத் தான் நான் இப்படி இருக்கேன் வசு…” என்று மெதுவாக முணுமுணுத்துக் கொண்டவன், தன் கைபேசியில் இருந்த மனைவியின் புகைப்படத்தை எடுத்துப் பார்த்து அவளின் அழகு முகத்தை விரலால் வருடிக் கொடுத்தான்.

மாலை அளவில் காஞ்சனாவும், வசுந்தராவும் அவர்களின் வீட்டை சுற்றி நடந்து கொண்டிருக்க “உன் முகம் ஏன்டி எப்படியோ இருக்கு?” என்று தங்கையிடம் விசாரித்தாள் காஞ்சனா‌.

“அப்படி எதுவும் இல்லைக்கா. நான் நல்லாத்தான் இருக்கேன்…” என்று அக்காவிடம் மழுப்பினாள் வசுந்தரா.

“பார்த்தால் அப்படித் தெரியலையே…” என்று காஞ்சனா சொல்ல, வசுந்தரா அவளுக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் முழித்தாள்.

அதற்குள் நடந்து கொண்டிருந்த காஞ்சனா திடீரென வயிற்றைப் பிடித்துக் கொண்டு சட்டென்று நின்றாள்.

“என்னக்கா?” என்று பதறிக் கேட்டாள் வசுந்தரா.

“லேசா வலிக்கிற மாதிரி இருக்கு வசு…” என்று வலியில் லேசாக முகத்தைச் சுருக்கிக் கொண்டு சொன்னாள்.

“அப்படியா? இரு, அம்மாவைக் கூப்பிடுறேன்…” என்றவள் வேகமாக வீட்டை நோக்கி ஓடினாள்.

கல்பனா வந்து பார்க்கும் பொழுது வயிற்றில் ஒரு பெரிய வலியை உணர்ந்தாள் காஞ்சனா.

காலையிலிருந்து மகள் இருந்த நிலையைப் பார்த்தே கணித்திருந்த கல்பனா “லேபர் பெயின் தான் வந்துடுச்சுப் போல இருக்குடி வசு. நீ உடனே அப்பாவுக்கும், மாமாவுக்கும் போன் போடு. அப்பா வருவதற்காக நாம வெயிட் பண்ணாம இவளை ஹாஸ்பிட்டல் கூட்டிட்டுப் போய்டலாம். அதனால் அப்பாவை நேரா ஹாஸ்பிட்டல் வரச் ‌சொல்லிடு…” என்று வேகமாக முடிவெடுத்தார்.

தந்தைக்கும், அக்காவின் கணவருக்கும் அலைபேசியில் அழைத்துத் தகவல் சொன்ன கையோடு தன் கணவனுக்கும் அழைத்த வசுந்தரா, “என்னங்க அக்காவுக்கு வலி வந்திருச்சு. நாங்க ஹாஸ்பிட்டல் போறோம்…” என்று வேகமாகத் தகவல் சொன்னாள்.

“ஓகே வசு, பதட்டப்படாதே! நான் இப்போ ஹாஸ்பிட்டலில் தான் இருக்கேன். இங்கே நான் எல்லாம் சொல்லி ரெடி பண்ணி வைக்கிறேன். நீங்க கவனமா கிளம்பி வாங்க…” என்றான் பிரசன்னா.

காஞ்சனா இங்கே வந்த பிறகு பிரசன்னா வேலை பார்க்கும் மருத்துவமனையில் தான் காட்டிக் கொண்டிருந்தார்கள்.

அதனால் அவர்கள் வரும் முன் காஞ்சனாவிற்குப் பார்க்கும் பெண் மருத்துவரைத் தொடர்புக் கொண்டு பேசினான்.

சற்று ‌நேரத்தில் பெண்கள் மூவரும் மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தார்கள்.

காஞ்சனாவை மகப்பேறு மருத்துவர் வசம் ஒப்படைத்ததும், வசுந்தராவின் கண்கள் கணவனைத் தான் தேடின.

அவன் அங்கே வரவில்லை என்றதும் உடனே அலைபேசியில் தொடர்புக் கொண்டாள். அவனும் தாமதிக்காமல் மனைவியின் அழைப்பை ஏற்க, “என்னங்க நாங்க இங்கே வந்துட்டோம். நீங்க எங்கே இருக்கீங்க?” என்று தவிப்புடன் கேட்டாள்.

“என் ரூமில் தான் இருக்கேன் வசு. அண்ணி எப்படி இருக்காங்க?” என்று கேட்டான்.

“டாக்டர் பார்த்துட்டு இருக்காங்க…”

“மாமா வந்துட்டாரா?”

“அப்பா இன்னும் வரலை. ஷோரூமுக்கு இன்னைக்குப் புதுப் பைக் வந்து இறங்கிட்டு இருக்கு. அதனால் அப்பாவால் உடனே கிளம்பி வர முடியலை…”

“கமலேஷ் அண்ணாவுக்கு இன்பார்ம் பண்ணிட்டியா? நான் பண்ணட்டுமா?”

“நான் பண்ணிட்டேன்.‌..‌”

“ஓ! சரி… நான் இப்போ அங்கே வர்றேன்…” என்றவன் சற்று ‌நேரத்தில் வந்து சேர்ந்தான்.

கணவனைக் கண்டதும் கலக்கத்துடன் அவனை எதிர்கொண்டாள் வசுந்தரா.

“என்ன வசு எதுக்கு இவ்வளவு பதட்டம்? ரிலாக்ஸாக இரு…” என்றான்.

கணவன் வந்துவிட்டதில் நிம்மதியாக உணர்ந்தவள் கணவனின் அருகில் சென்று உரிமையுடன் அவனின் கையைப் பற்றிக் கொண்டாள்.

அவளின் செயலில் ஒரு நொடி வியந்தவனுக்கு அப்போது‌ தான் மனைவியின் கைகளில் இருந்த நடுக்கத்தை உணர முடிந்தது.

“என்ன‌ இது? ரிலாக்ஸ்!” என்றவன் அவளின் கையை அழுத்திப் பிடித்தான்.

“அவளுக்குக் கொஞ்சம் தைரியம் சொல்லுங்க மாப்பிள்ளை. அவள் அக்கா வலியில் அழறதைப் பார்த்ததில் இருந்து எப்படியோ இருக்காள்…” என்று பெரிய மகள் இருந்த அறையை எட்டிப் பார்த்துக் கொண்டிருந்த கல்பனா இவர்கள் பக்கம் வந்து சொன்னார்.

“நான் இவளைப் பார்த்துக்கிறேன் அத்தை. நீங்க அண்ணியைப் பாருங்க…” என்று மாமியாரிடம் சொன்னவன், மனைவியின் புறம் திரும்பி,

“அண்ணியோட வலி எல்லாம் கொஞ்ச நேரம் தான்மா. அப்புறம் அழகான குட்டி பேபியைப் பார்க்கலாம். அதை மட்டும் மனசில்‌ நினைச்சுக்கிட்டு அத்தையையும் டென்ஷனாக விடாம தைரியமா இரு…” என்றவன் அவளின் விரல்களோடு தன் விரல்களைக் கோர்த்து அழுத்திப் பிடித்தான்.

“ஹம்ம்…” என்றவளுக்குக் கணவனின் தோளில் சாய்ந்து கொள்ள வேண்டும் போல் தோன்றியது‌.

அன்னை அருகில் இருந்ததால் அதைச் செய்ய முடியாமல் தயங்கியவள் கணவனின் கையை இன்னும் அழுத்தமாகப் பற்றிக் கொண்டாள்.

அவளின் மனநிலை புரிந்து அவளுடனேயே இருந்தான் பிரசன்னா.

மேலும் சில மணிநேரங்கள் கடந்தன. எத்திராஜ் விரைவில் வந்து விட, கமலேஷ் குடும்பத்துடன் வந்து சேர்ந்த சற்று நேரத்தில் கமலேஷ், காஞ்சனா தம்பதியினருக்கு அழகான பெண் குழந்தைப் பிறந்தாள்.

முதலில் பெரியவர்கள் அனைவரும் குழந்தையைப் பார்த்து மகிழ, கடைசியாகக் குழந்தையைக் கையில் வாங்கினாள் வசுந்தரா.

“பேபி ரொம்ப அழகா இருக்காள் இல்லைங்க…” என்று கணவனிடம் கேட்டாள்.

“ம்ம்… ஆமா…” என்ற பிரசன்னா, “இப்போ ஹேப்பியா இருக்கியா?” என்று கேட்டான்.

“ரொம்ப…” என்று மலர்ந்த சிரிப்புடன் சொன்னாள் வசுந்தரா.

கையில் அக்காவின் குழந்தையை ஏந்தி மனோகரமாகச் சிரித்த மனைவியை ரசனையுடன் பார்த்தான் பிரசன்னா.

“இதே மாறி ஒரு பிள்ளையைப் பெத்துச் சீக்கிரம் உன் புருஷன் கையில் கொடு…” என்று கமலேஷின் அம்மா கேலியாகச் சொல்ல,

தங்கள் குழந்தை என்று கனவில் நினைத்துப் பார்த்த வசுந்தராவின் வதனம் வெட்கத்தில் சிவந்தது. வெட்க முகம் மாறாமல் கணவனைப் பார்த்துச் சிரித்தாள் வசுந்தரா.

அவளின் முகத்தை ஆசையாகப் பார்த்தான் பிரசன்னா.

காஞ்சனாவை அறைக்கு மாற்றியதும் அனைவரும் பார்க்கச் சென்றனர். பின் கமலேஷும், கல்பனாவும் மட்டும் மருத்துவமனையில் காஞ்சனாவிற்குத் துணையிருக்க மற்றவர்கள் வீட்டிற்குக் கிளம்பினர்.

காஞ்சனா வீட்டிற்கு வரும் வரை வசுந்தராவை அவளின் அன்னையின் வீட்டில் இருக்கச் சொல்லியிருந்தான் பிரசன்னா.

மூன்று நாட்களாக மருத்துவமனையில் இருந்தாள் காஞ்சனா. அவளுக்குத் தேவையான மாற்றுடைகள் எடுத்து வருவதும், உணவு சமைத்து எடுத்து வருவதும் என்று வசுந்தராவின் நேரம் இறக்கை கட்டிப் பறந்தது.

குழந்தை பிறந்த மறுநாளே பிரசன்னாவின் குடும்பத்தினர் அனைவரும் வந்து பார்த்துச் சென்றிருந்தனர்.

மருத்துவமனைக்கு வரும் நேரத்தில் தான் கணவனை அவ்வப்போது சந்தித்துக் கொண்டாள் வசுந்தரா.

காஞ்சனாவிற்குக் குழந்தைப் பிறந்த அன்று வசுந்தராவின் கூடவே இருந்து அவளிடம் நன்றாகப் பேசியவன் மறுநாளில் இருந்து மீண்டும் மௌன கீதம் பாடினான் பிரசன்னா.

அதையும் குடும்பத்தினர் கவனத்திற்குச் செல்லாத வண்ணம் பார்த்துக் கொண்டான்.

மற்றவர்கள் முன் அவள் ஏதாவது கேட்டால் பொதுப்படையாகப் பேசினானே தவிர வேறு எதுவும் பேச மறுத்தான்.

அன்றைக்குப் பிறகு இருவருக்கும் இடையே தொலைபேசி உரையாடல்கள் கூட நேர விடாமல் பார்த்துக் கொண்டான் பிரசன்னா.

அதில் மனம் சோர்ந்து போனாலும் குடும்பத்தினர் முன்பு ஒன்றும் காட்ட முடியாமல் மனதிற்குள்ளேயே போட்டுப் புழுங்கிக் கொண்டிருந்தாள்.

மூன்றாவது நாள் காலை காஞ்சனாவிற்கு உணவை எடுத்துக் கொண்டு வந்த வசுந்தரா மருத்துவமனைக்குள் நுழைந்த போது அவளின் எதிரே வந்து கொண்டிருந்தான் கிருபாகரன்.

வசுந்தராவைப் பார்த்ததும் கிருபாகரன் நேராக அவளின் எதிரே வந்து நின்றான்.

“ஹாய் வசுந்தரா… எப்படி இருக்க?” என்று தன் முன்னால் வந்து நின்று கேட்டுக் கொண்டிருந்தவனை சலனமே இல்லாமல் பார்த்தாள் வசுந்தரா.

எதிரெதிரே நின்றிருந்த இருவரையும் அப்பொழுதுதான் மருத்துவமனை வாசலில் வந்திறங்கிய பிரசன்னாவும் பார்த்து விட்டு அப்படியே நின்று போனான்.