என்னுள் யாவும் நீயாக – 27

அத்தியாயம் – 27

மறுநாள் காலை விடிந்து அலாரம் அடித்த சப்தத்திலும் கண்களைத் திறக்க முடியாமல் படுத்திருந்தாள் வசுந்தரா.

இரவெல்லாம் சரியாக உறங்காமல் நான்கு மணியளவில் தான் கண்ணயர்ந்திருந்தாள். கண்கள் தீயாக எரிந்தன.

எழ வேண்டும், கிளம்பிக் கீழே செல்ல வேண்டும் என்று தோன்றினாலும் அதைச் செய்ய முடியாமல் கட்டிலில் லேசாகப் புரண்டு படுத்தாள்.

அப்போது அவளின் கை சற்றுத் தள்ளிப் படுத்திருந்த பிரசன்னாவின் மீது பட, வேகமாக எழுந்தமர்ந்தாள்.

கண்களைப் பட்டென்று திறந்து கணவனைப் பார்க்க, அவனோ இரண்டு கைகளையும் தலைக்கு அடியில் வைத்துப் படுத்தபடி அவளைத் தான் பார்த்துக் கொண்டிருந்தான்.

அவனின் பார்வை ஏதோ அவளையே கவர்ந்திழுப்பது போலிருக்க, இன்னும் கண்களைக் கசக்கி விட்டுக் கொண்டு, ‘என்ன பார்வை இது?’ என்று பார்த்தவள், எழுந்து இன்னும் கைபேசியில் அடித்துக் கொண்டிருந்த அலாரத்தை அமர்த்தி வைத்தாள்.

‘அலாரம் இந்தக் கத்து கத்துது. முழித்துத் தானே இருக்கார். ஆப் பண்ணிருக்கலாம்ல? என்று நினைத்துக் கொண்டே அவனை ஒரு பார்வை பார்த்தவள் கட்டிலை விட்டு இறங்கி குளியலறைக்குள் புகுந்து கொண்டாள்.

மூடிய குளியலறைக் கதவைப் பார்த்துப் புன்முறுவல் பூத்தான் பிரசன்னா.

சற்று நேரத்தில் வெளியே வந்த வசுந்தரா கட்டிலில் படுத்திருந்த கணவனை ‘இன்னும் எழவில்லையா?’ என்பது போல் பார்த்துக் கொண்டே அறையை விட்டு வெளியே சென்றாள்.

‘உனக்காகத் தான் வெயிட்டிங் பொண்டாட்டி. சீக்கிரம் வா! இன்னைக்கு ஆட்டத்தை ஆரம்பிப்போம்…’ என்று தனக்குள் ரகசியமாகச் சொல்லிக் கொண்டு எழுந்து குளியலறைக்குள் சென்றான்.

அவன் திரும்பி வெளியில் வந்தபோது கையில் காஃபி கப்புகளுடன் அறைக்குள் நுழைந்தாள் வசுந்தரா.

நேற்று நடந்த நிகழ்வை மனதில் ஒரு ஓரமாகப் போட்டு வைத்திருந்த வசுந்தரா இப்பொழுது இயல்பாகத் தன்னைக் காட்டிக் கொண்டாள்.

முகம் துடைத்தபடி அங்கிருந்த இருக்கையில் அமர்ந்த கணவனிடம் காஃபியை நீட்டினாள்.

அவன் கையில் வாங்கிக் கொள்ளவும் தானும் அவனுக்கு எதிரே இருந்த இருக்கையில் அமர்ந்து கணவனைப் பார்த்தாள்.

அவன் வழக்கமாகத் தான் ஒரு மிடறு காஃபி குடித்து விட்டு அடுத்த மிடறு அவளுக்குத் தருவான் என்பதால் காஃபியைக் குடிக்காமல் காத்திருந்தாள்.

ஆனால் அடுத்த வாய்க் காஃபியைத் தன்னையே பார்த்துக் கொண்டிருந்த மனைவிக்குக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் சிறிதும் இல்லாமல், அப்படி ஒரு பழக்கமே தங்களுக்குள் இல்லாதது போல் அவளின் புறமே திரும்பாமல் ஒரு சொட்டுக் கூட விட்டு வைக்காமல் தன் காஃபியை ரசித்துப் பருகியவன் “நான் போய் எக்ஸசைஸ் ஆரம்பிக்கிறேன். நீ உன் காஃபியைக் குடிச்சுட்டு வா…” என்று காலியான காஃபி கப்பை நிதானமாக மேஜையின் மீது வைத்து விட்டு எழுந்து சென்றான்.

அவன் இரண்டாவது மிடறு காஃபியை அவளுக்குக் கொடுக்காமல் அவனே அருந்த ஆரம்பிக்கும் போதே விக்கித்து நம்பமுடியாமல் பார்க்க ஆரம்பித்த வசுந்தரா, அவன் எழுந்து சென்ற பிறகும் கணவன் வைத்துவிட்டுச் சென்ற காஃபி கப்பையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

ஊட்டிக்குச் சென்று விட்டு வந்ததில் இருந்து ஒருநாள் ஒரு பொழுது கூட அவள் அருகில் இருக்கும் போது எந்த உணவையும் அவன் அவளுடன் பகிர்ந்து கொள்ளாமல் உண்டதே இல்லை.

அதிலும் காஃபி!

காஃபி மூலம் தான் முதல் முதலில் கணவன் அந்தப் பழக்கத்தை ஆரம்பித்து வைத்தான் என்பதால் அது முன்பை விட மிகவும் விருப்பமான பானமாக மாறியிருந்தது.

அதிலும் மற்ற உணவு வகைகள் கூட ஒரு வாய் உணவோடு முடிய, காஃபியைப் பல நாட்கள் முடியும் வரை அவள் ஒரு மிடறு அவன் ஒரு மிடறு என்று மாறி மாறிக் குடிக்க வைப்பான்.

ஆனால் இன்றோ ஒரு மிடறு கூடக் கொடுக்காமல் அவனே முழுவதும் குடித்து விட அவளால் அதைத் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை.

அதோடு நேற்று அவளிடம் பொய்ச் சொல்லிவிட்டு வேறு அவன் கிளம்பி வந்திருக்க, திரும்பி வரும் போது அவள் உணர்ந்த வெறுமை வேறு ஞாபகம் வர, இப்போது அவன் காஃபியை வேறு பகிர்ந்து கொள்ளாமல் இருக்கத் தன்னை அவன் விலக்கி வைக்கின்றானோ? என்று தோன்ற ஆரம்பிக்க உள்ளுக்குள் ஏதோ உடைந்தது போல் உணர்ந்தாள்.

கணவன் அங்கிருந்து சென்று பல நிமிடங்கள் கடந்த பிறகும் அவள் அப்படியே உறைந்து அமர்ந்திருக்க, “என்ன இன்னும் நீ வரலையா?” என்று வாசலில் இருந்து குரல் கொடுத்தான் அவளின் கணவன்.

‘வருகிறேன்’ என்று பின்னால் திரும்பிக் கூடப் பார்க்காமல் தலையை மட்டும் அவள் அசைக்க, அவளை மேலும் சில நொடிகள் நின்று பார்த்திருந்து விட்டே அங்கிருந்து அகன்றான் பிரசன்னா.

அவன் நின்றிருந்ததை வசுந்தரா உணரவே செய்தாள். அவன் அங்கிருந்து சென்றதும் தன் கையில் இருந்த காஃபி கப்பை பார்த்தாள்.

காபி ஏடு விழுந்து சூடு ஆற ஆரம்பித்திருந்தது. ஆனாலும் அதை அப்படியே ருசி அறியாது வாயில் ஊற்றிக் கொண்டவள் எழுந்து உடற்பயிற்சி அறைக்குச் சென்றாள்.

பிரசன்னா, யாதவ் இருவரின் அறைக்கு நடுவில் உடற்பயிற்சி அறை இருந்தது.

வசுந்தரா உள்ளே சென்ற போது நடைப்பயிற்சி செய்யும் மிஷினில் நடந்து கொண்டிருந்த பிரசன்னா, வசுந்தரா உள்ளே வந்ததும் அதில் அவளை நடக்கச் சொல்லிவிட்டு அவன் சைக்கிளிங் உடற்பயிற்சி மிஷினில் ஏறித் தன் பயிற்சியைத் தொடர்ந்தான்.

நடக்க ஆரம்பித்த வசுந்தராவின் பார்வை மெதுவாகக் கணவனின் புறம் திரும்பியது அவனோ உடற்பயிற்சி செய்வதில் இருந்து சிறிதும் கவனத்தைத் திருப்பாமல் கடமையே கண்ணாக இருந்தான்.

அரைமணி நேரம் கடந்த பிறகும் அவன் சிறிதும் இவள் பக்கமே திரும்பாமல் இருக்க, மீண்டும் உள்ளுக்குள் உடைந்து போனாள் வசுந்தரா.

வழக்கமாக இருவரும் உடற்பயிற்சி செய்யும் போது பேசிக்கொள்ள மாட்டார்கள் தான். ஆனால் அவனின் பார்வை அடிக்கடி இவளின் மீது படிந்து மீளும்.

ஆரம்பத்தில் அவனின் அந்தப் பார்வையில் தடுமாறியவள் போகப் போக அவனின் பார்வையை இயல்பாகப் பழகிக்கொள்ள ஆரம்பித்திருந்தாள்.

கணவனின் அந்தப் பார்வையை அவளும் ரசிக்க ஆரம்பித்திருந்தாள். அப்படியிருக்க, இன்றோ ஒரு பார்வைக் கூட அவளைப் பார்க்கவில்லை என்றதும், இன்று உடற்பயிற்சி செய்யும் ஆர்வமே அவளுக்குக் குறைந்து விட்டது.

உடலை விட மனம் அதிகமாகச் சோர்வடைந்து விட, அதற்கு மேல் கணவனின் பாராமுகத்தால் அங்கே இருக்க முடியாமல் நடைபயிற்சியை முடித்துக் கொண்டு விருட்டென்று அறையில் இருந்து வெளியே செல்லப் போனாள்.

“இன்னும் ஒரு மணி நேரம் ஆகலை. அதுக்குள்ள எங்கே போற?” வாயில் அருகே சென்றவளை பிரசன்னாவின் கேள்வித் தடுத்து நிறுத்தியது.

வழக்கமாக ஒரு மணி நேரம் உடற்பயிற்சி செய்வார்கள். ஆனால் இன்று அரைமணி நேரத்தில் கிளம்பவும் அவளைத் தடுத்து நிறுத்தினான்.

அவனின் குரல் கேட்டதும் வேகமாகத் திரும்பிப் பார்த்தாள். ஆனால் அடுத்த நொடி அவளின் முகம் சுருங்கிப் போனது. குரல் மட்டுமே கொடுத்திருந்தானே தவிர, அவள் பக்கம் அவன் பார்க்கவே இல்லை.

‘அப்படி என்ன என் முகத்தைப் பார்க்க முடியாத அளவுக்கு உங்களுக்குக் கோபம்?’ என்று அவளுக்குக் கோபம் வர, பதிலே சொல்லாமல் அடுத்த நிமிடம் நிற்காமல் விருட்டென்று வெளியே சென்றே விட்டாள்.

அவள் சென்ற பிறகு வாயிலின் புறம் திரும்பிய பிரசன்னாவின் உதடுகள் புன்னகையைச் சிந்தின.

காலை வேலைகளை முடித்துக் கிளம்பி இருவரும் சாப்பாட்டு மேஜையின் முன் வந்தமர்ந்தனர்.

கிருஷ்ணன் முக்கிய வேலை என்று முன்பே ஷோரூம் சென்றிருக்க, யாதவும் அன்று சீக்கிரமே வெளியே கிளம்பிச் சென்றிருந்தான். இவர்கள் இருவரையும் சாப்பிட சொல்லிவிட்டு ராதா வேறு ஏதோ வேலை பார்த்துக் கொண்டிருந்தார்.

வசுந்தரா இருவருக்குமான உணவைத் தட்டில் பரிமாறி முடித்ததும், அவன் காஃபியைக் கொடுக்காமல் போனதால் இப்போது கணவன் உணவைத் தந்துவிட வேண்டுமே என்ற தவிப்புடன் இருந்தவள், எப்போதும் அவன் உணவைத் தந்த பிறகே தன் உணவை அவனிடம் கொடுப்பவள் இன்று முதல் வேலையாகத் தன் தட்டில் இருந்து உணவை எடுத்து அவனின் தட்டில் வைத்தாள்.

அவளின் வேகத்தைப் பார்த்து உள்ளுக்குள் சிரித்துக் கொண்டவன், அவள் வைத்த உணவை எடுத்து உண்டான்.

அதைக் கண்டவளின் முகம் பிரகாசமாக மாறியது. ஆனால் அடுத்த நொடியே வாடியும் போனது.

அவன் உணவைத் தருவான் என்று பார்த்துக் கொண்டிருந்தவளை ஏமாற்றி விட்டு அவளுக்குக் கொடுக்காமல் உண்ண ஆரம்பித்து விட்டான்.

‘நான் வைச்சதை சாப்பிட்டாங்க தானே. அப்போ எனக்கு மட்டும் ஏன் கொடுக்கலை?’ என்று மனதில் தோன்றிய கேள்வியுடன் தன் உணவைத் தொடாமல் அவனையே பார்த்துக் கொண்டிருந்தவள் முகம் வேதனையில் கசங்கி இருந்தது.

“என்னமா சாப்பிடலையா?” என்று கேட்டு அவளின் கவனத்தை அப்போது தான் சாப்பிட அமர்ந்த ராதா கலைத்தார்.

“இதோ அத்தை…” என்று முனங்கி விட்டு, அப்போதும் கணவன் தருவானா என்று அவனை ஏக்கமாக ஒரு பார்வை பார்த்து வைக்க, அவன் தான் கடிவாளம் கட்டிய குதிரை போல் அவனின் தட்டை தவிர வேறு பக்கம் திரும்பாமல் உண்டு கொண்டிருந்தானே!

அவனின் செயலில் ஏமாற்றம் சூழ, தன் எதிரே இருந்த அத்தையின் கேள்வியில் இருந்து தப்பிக்கத் தன் உணவை எடுத்து வாயில் வைத்தவளுக்கு அதை உண்ணவே முடியவில்லை.

கணவன் கொடுத்த உணவை உண்டுவிட்டு உண்ண ஆரம்பிப்பவளுக்கு இன்று அது இல்லாமல் ஒரு வாய் கூட இறங்க மறுத்தது.

“என்னமா சாப்பாடு நல்லா இல்லையா?” என்று ராதா கேட்க,

“அப்படியெல்லாம் இல்லை அத்தை. ரொம்ப நல்லா இருக்கு…” என்று வாய் வார்த்தையாகச் சொல்லி ருசியே அறியாது கஷ்டப்பட்டு உணவை உள்ளே தள்ளினாள்.

அன்னையும், மனைவியும் பேசிக் கொண்டதை கவனித்தாலும் எதையும் பொருட்படுத்தாமல் உணவை முடித்துக் கொண்டு எழுந்தான் பிரசன்னா.

வசுந்தராவும் வலுக்கட்டாயமாக உண்டு விட்டு எழுந்தாள்.

இருவரும் ராதாவிடம் சொல்லிவிட்டு வெளியே செல்ல, தன் காரின் அருகே நிறுத்தியிருந்த மனைவியின் இருசக்கர வாகனத்தைப் பார்த்த பிரசன்னா புருவத்தைச் சுருக்கினான்.

பின் மனைவியின் புறம் திரும்பி, “நேத்து உங்க வீட்டிலிருந்து வண்டியிலா வந்தாய்?” என்று கேட்டான்.

“ம்ம்…” என்று சோர்வுடன் தலையை அசைத்தாள். கணவனின் செயலும், விலகலும் அவளைச் சோர்வடைய வைத்தது.

“அப்போ சரி… நீ உன் ஸ்கூட்டியில் ஷோரூம் போ! இன்னைக்கு நான் கொஞ்சம் சீக்கிரம் கிளம்பணும்…” என்று சொன்னவன் அவள் என்ன என்று புரிந்து கொள்ளும் முன்பே அங்கிருந்து விரைந்து காரை எடுத்துக்கொண்டு சென்றே விட்டான்.

‘என்ன என்னை விட்டுட்டு கிளம்பிட்டாரா?’ என்று அவள் நினைக்கும் போது சில நொடிகள் கடந்திருந்தன.

அடுத்தடுத்துக் கணவன் செய்த செய்கையில் ஆடிப் போனாள் வசுந்தரா.

“என்ன வசு, நீ இங்கே நிற்கிற? பிரசன்னா எங்கே?” அவளின் பின்னால் இருந்து ராதா கேட்க,

தலையை உலுக்கி தன் அதிர்ச்சியில் இருந்து வெளியே வந்த வசுந்தரா, “ஏதோ அவசரமா போகணுமாம் அத்தை. அதான் கிளம்பிட்டார். என்னை ஸ்கூட்டியில் போகச் சொன்னார்…” மாமியாரிடம் எதையும் காட்டிக் கொள்ளாமல் சாதாரணமாக உரைத்தாள்.

“அவசரம்னா என்ன? எப்படியும் அந்த வழியா தானே போவான். என்ன ஒரு ரோடு மட்டும் தானே சுத்தணும். அதில் அப்படி என்ன லேட் ஆகும்? இத்தனை நாளும் அப்படித்தானே செய்து கொண்டிருந்தான். இப்போ உன்னை எதுக்கு ஸ்கூட்டியில் போகச் சொன்னான். அவனால் முடியலையானால் இதைக் காலையில் சீக்கிரமே சொல்லியிருந்தால் உன்னை மாமா கூடவே அனுப்பி வச்சுருப்பேன்ல…” என்றார் ராதா.

“இப்ப என்ன அத்தை? ஒன்னும் ப்ராபளம் இல்லை. எனக்குத் தான் ஸ்கூட்டி இருக்குல. அதுல நான் போய்க்குவேன்…” என்று ராதாவை அவள் தான் சமாதானப்படுத்த வேண்டியதாகிற்று.

கணவனின் செயலில் உள்ளுக்குள் உருக்குலைந்து கொண்டிருந்தாலும் வெளியில் ஒன்றும் காட்டிக் கொள்ளாமல் இருக்கத் தடுமாறிப் போனாள்.

“சரிமா… நீ பார்த்துக் கவனமா போய்ட்டு வா…” என்று ராதா சொல்ல, வசுந்தரா அவரிடம் சொல்லிவிட்டுக் கிளம்பினாள்.

வண்டியில் செல்ல ஆரம்பித்தவளுக்கு இன்னும் காலையிலிருந்து நடந்ததை ஜீரணிக்கவே முடியவில்லை.

‘என் மேல் அவருக்கு என்ன கோபம்? நான் எதுவும் எனக்கே தெரியாமல் தவறு செய்து விட்டேனா?’ என்ற கேள்விகள் மட்டும் அவளுக்குள் குடைந்து கொண்டே இருந்தது.

அதற்கு மேல் அவளால் எதுவும் சிந்திக்கக் கூட முடியவில்லை. மனமும், மூளையும் மரத்துப் போனது போல் இருந்தது.

அன்று மட்டுமில்லாமல் அடுத்து வந்த மூன்று நாட்களும் இதுவே தான் தொடர்ந்தன.

அவனே ஆரம்பித்து வைத்த பழக்கத்தை எல்லாம் அப்படியே நிறுத்தினான் பிரசன்னா.

இருவருக்கும் இடையே இருந்த பேச்சையும் குறைத்துக் கொள்ள ஆரம்பித்தான்.

இரவில் தலைக் கோதி விடச் சொல்வதை ஒரு நாள் கூடத் தவறவிடாத பிரசன்னா, இரண்டாவது நாள் அவள் அவனின் தலையில் கையை வைத்ததும் ‘வேண்டாம்’ என்று சொல்லி அவளின் கையை எடுத்து விட்டு அவளுக்கு அதிர்ச்சியைக் கொடுத்து விலகிப் படுத்துக்கொண்டான்.

‘ஏன் இப்படி?’ என்று கேட்க நினைத்து அவனின் முன் சென்று நின்றால், அவளைப் பேசவிடாமல் தவிர்த்து விட்டுச் சென்று மனைவியைத் தவிக்க விட்டான்.

மூன்றாவது நாள் காலை வேலைக்குக் கிளம்பும் போது, “இன்னைக்கிருந்து மதியம் நீ தினமும் உங்க வீட்டுக்குப் போய்டு வசு…” என்றவனைத் திடுக்கிட்டு பார்த்தாள் வசுந்தரா.

அவளால் வாயைத் திறந்து ஏன் என்று கூடக் கேட்க முடியவில்லை. அவன் ஒவ்வொரு விஷயமாகத் தன்னை விலக்கி வைக்க வைக்க அவளால் தாளவே முடியவில்லை.

“அங்கே அண்ணிக்குப் பிரசவ டேட் நெருங்கிட்டு வருது. உங்க அப்பா ஷோரூமில் இருக்கிறப்ப, நீ உன் அம்மா, அக்கா கூட இருந்தால் அவங்களுக்குத் தெம்பா இருக்கும். அதனால் குழந்தைப் பிறக்கும் வரை போய்ட்டு வா…” என்றவனை வெறித்துப் பார்த்தாள்.

‘அது மட்டும் தான் காரணமா?’ என்று அவளின் கண்கள் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்ல அவன் அங்கே நின்றிருந்தால் தானே? சொன்னதும் என் பேச்சு முடிந்தது என்று கிளம்பிக் கொண்டே அல்லவா இருந்தான்.

இப்போதெல்லாம் அவன் தனியாக அவள் தனியாகத்தான் செல்வது என்பதால் அவன் முன்னால் சென்று விட்டான்.

‘அவளை ஏன் தனியாக வண்டியில் அனுப்புகிறாய்?’ என்று கிருஷ்ணனும், ராதாவும் கேட்க, “நான் கொஞ்ச நாள் பிஸியா இருப்பேன் மா. நார்மல் வேலை வரும் வரை அவள் வண்டியில் போகட்டும்…” என்று சொல்லி அவர்களைச் சமாளித்து வைத்தான்.

அவன் விலக விலக வசுந்தரா துடித்துப் போனாள். ஆரம்பத்தில் ஏதோ கோபம் இன்று சரியாகிவிடுவான். நாளை சரியாகிவிடுவான் என்று அவள் எண்ணிக் கொண்டிருக்க, அதற்கு மாறாக நடந்து கொள்ளும் கணவனைப் பார்த்து முற்றிலும் தன்னை விலக்கி வைக்க முடிவு செய்து விட்டானோ என்று நினைத்துக் கலங்கிப் போனாள்.

தன் வருத்தத்தை அவளால் வெளியேவும் காண்பித்துக் கொள்ள முடியவில்லை.

உள்ளுக்குள் கேள்விகளாகக் கேட்டுக் குழம்பித் தவித்து, கலங்கி, இறுகிப் போனாள் வசுந்தரா.