என்னுள் யாவும் நீயாக – 26

அத்தியாயம் – 26

மீண்டும் வேன் பயணம் தான்.

ஆனால் இந்த முறை வேன் பயணம் வசுந்தராவிற்குச் சிறிதும் ரசிக்கவில்லை!

போகும் போது ஒலித்த பாடல்கள் இப்போதும் ஒலித்தன தான். ஆனால் அவளின் காதோரம் சாய்ந்து பாடல்களுடன் சேர்ந்து பாடிக் கொண்டு வந்த கணவனின் குரல் ஒலிக்காமல் பாடல்களும் அவளுக்குக் கேட்கப் பிடிக்கவில்லை.

சில மாதங்களுக்குப் பிறகு பார்த்த அக்கா அவளின் அருகில் தான் அமர்ந்திருந்தாள். ஆனால் அவளிடம் பேசிக் கொண்டு வர வேண்டும் என்ற ஆர்வமும் அவளுக்கு வரவில்லை.

வேனில் அவளைச் சுற்றிலும் உள்ள இருக்கைகளில் அமர்ந்து அவளின் உறவினர்கள் சிரித்துப் பேசி அரட்டை அடித்துக் கொண்டு வந்தனர். ஆனால் அவர்கள் பக்கம் அவளின் கவனம் சிறிதும் திரும்பவில்லை.

கணவனின் அருகாமை இல்லாமல் எதுவோ குறைந்தது போல் உணர்ந்தாள் வசுந்தரா.

“என்னடி வசு ஒரு மாதிரி இருக்க?” என்று அவளின் அமைதியைப் பார்த்துக் கேட்டாள் காஞ்சனா.

“நல்லாதான் இருக்கேன்கா…” என்றாள் அமைதியாகவே.

“ஆனா உன்னைப் பார்த்தால் அப்படித் தெரியலையே…” என்று தங்கையின் குரலில் உற்சாகம் காணாமல் போனதைக் கவனித்துக் கேட்டாள்.

“அப்படியெல்லாம் எதுவும் இல்லைக்கா…” என்று அக்காவிற்காகக் குரலில் உற்சாகத்தை வரவைக்க முயன்று கொண்டே பதில் சொன்னாள் தங்கை.

“இல்லைனு வார்த்தை தான் சொல்லுது. என்ன உன் ஹஸ்பண்ட் உன் கூட வராம அவரோட அப்பா, அம்மா கூடக் கிளம்பிப் போயிட்டாரேன்னு வருத்தமா?” என்று சரியாகக் கணித்துக் கேட்டாள் காஞ்சனா.

‘அக்கா கண்டு கொண்டாளே’ என்று விழித்து வைத்துத் தன்னையே காட்டிக் கொடுத்துக் கொண்டாள் வசுந்தரா.

“என்ன சரியா சொல்லிட்டேன் போல?” என்று சிரித்துக்கொண்டே கேட்ட காஞ்சனா “ஆனாலும் இதெல்லாம் ரொம்ப ஓவர் டி…” என்று கிண்டலாகச் சொன்னாள்.

“ம்ப்ச்… போக்கா…” அக்காளின் கேலியில் சலித்துக் கொண்டாள் வசுந்தரா.

“ஏன்டி, என் வீட்டுக்காரர் என் கூட வரலையேன்னு நான் வருத்தப்படுவதில் ஒரு நியாயம் இருக்கு. ஏன்னா குழந்தை பிறந்து மூணு மாசம் ஆன பிறகுதான் திரும்ப என் வீட்டுக்காரர் கிட்ட நான் போவேன். ஆனா நீ அப்படியா? இதோ இப்ப கொஞ்ச நேரத்தில் சென்னைக்குப் போய்ச் சேர்ந்திடுவோம். அப்புறம் உங்க வீட்டுக்குப் போயிடுவ. உடனே உன் ஹஸ்பண்டை பார்க்கப் போற. அதுக்குள்ள இத்தனை வாட்டமாடி வசு?” என்று காஞ்சனா கேலியில் இறங்க, வசுந்தரா யோசனையில் இறங்கினாள்.

‘ஆமாம் உண்மைதானே? எப்படியும் இன்றைக்கு இரவுக்குள் கணவனைப் பார்த்துவிடுவாள். அப்படியிருக்க, இந்தச் சிறிது நேரப் பிரிவையே தன்னால் தாங்க முடியவில்லையா? அந்த அளவிற்கா கணவனைத் தன் மனம் தேடுகிறது?’ என்று யோசித்தாள் வசுந்தரா.

‘இதுல யோசிக்க என்ன இருக்கு? அவரை உனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு. அதனால்தான் அவரின் சிறு பிரிவைக் கூட உன்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நீ அவரை விரும்ப ஆரம்பித்து விட்டாய்…’ என்று மனம் எடுத்துச்சொல்ல,

‘அவரை நான் விரும்புகின்றேனா? நிஜமாகவா?’ என்று தன்னையே நம்ப முடியாமல் மீண்டும் கேட்டுக் கொண்டாள்.

‘நீ சந்தேகப்படத் தேவையே இல்லை. நிஜம் தான்!’ என்று கணவனையே சுற்றிவந்த அவளின் மனம் அழுத்தமாக அவளுக்கு எடுத்துரைத்தது.

கணவனின் நினைவில் ஆழ்ந்து விட்ட தங்கையைச் சிரிப்புடன் பார்த்துக் கொண்டு வந்தாள் காஞ்சனா.

அப்போது கமலேஷிடம் இருந்து காஞ்சனாவிற்கு அலைபேசி அழைப்பு வர, அவளும் அதில் ஆழ்ந்து போனாள்.

சூரியன் மறைந்து இரவு மெல்ல சூழ ஆரம்பித்த நேரத்தில் சென்னை வந்து சேர்ந்தனர்.

வீடு சென்று சேர்ந்த சிறிது நேரத்திலேயே வசுந்தரா தங்கள் வீட்டிற்குக் கிளம்புவதாகச் சொல்லி அன்னையிடம் வந்து நின்றாள்.

“என்ன வசு வீட்டுக்குள்ள வந்ததும் கிளம்புறேன்னு நிற்கிற? இப்போதானே வந்தோம். கொஞ்ச நேரம் உன் அக்காகிட்ட பேசிட்டு இரு. அதுக்குள்ள நைட் டிபன் ரெடி பண்றேன். சாப்பிட்டு உங்க வீட்டுக்குக் கிளம்பு. அப்பாவைக் கொண்டு வந்து விடச் சொல்றேன்…” என்றார் கல்பனா.

வேனில் வரும் போது கணவனைப் பற்றி மனம் எடுத்துச் சொன்ன பதிலிலேயே ஆழ்ந்திருந்தவளுக்கு உடனே கணவனை நேரில் பார்க்க வேண்டும் என்று மனம் அடித்துக் கொண்டது.

அன்னை அப்படிச் சொல்லவும் அவரிடம் எப்படி ‘நான் உடனே வீட்டுக்குப் போயே ஆகணும்னு சொல்ல?’ என்று புரியாமல் தடுமாறினாள்.

“அம்மா… அது…” என்று அவள் இழுக்க,

“உன் மாமியார், ‘நீ காலையில் கூட வா’ன்னு தானே சொன்னாங்க. நீ ஏன் உடனே போகணும்னு துடிக்கிற? ஒருவேளை இப்போ போன் போட்டு வரச் சொன்னாங்களா?” என்று கேட்டார்.

அதற்கு வசுந்தரா மறுப்பாகப் பதில் சொல்லும் முன், அன்னையும், தங்கையும் பேசுவதைக் கேட்ட காஞ்சனா, “அம்மா வசுவை அவளோட மாமியார் வரச் சொல்லலை. உங்க பொண்ணுக்குத் தான் அவளோட வீட்டுக்காரரை விட்டுட்டு இருக்க முடியலை. அதான் வந்து இறங்கியதும் பறக்கிறாள்…” என்று கேலியாகச் சொல்லிச் சிரித்தாள்.

‘அப்படியா?’ என்பது போல் இளைய மகளின் முகத்தை ஆராய்ந்து பார்த்தார் கல்பனா.

‘அக்கா இப்படி அம்மாவிடம் மாட்டி விட்டு விட்டாளே’ என்று சங்கடப்பட்டு வசுந்தரா அன்னையின் முகத்தை நேராகப் பார்க்க முடியாமல் நிற்க, அதைப் புரிந்து கொண்ட கல்பனா நிறைவுடன் மகிழ்ந்து கொண்டார்.

‘மகள் எப்படி வாழ்வாளோ?’ என்று அவரும் உள்ளுக்குள் அவ்வப்போது பதறிக் கொண்டு தான் இருப்பார்.

ஆனாலும் திருமணமான புதிதில் மட்டுமே அவருக்கு அந்தப் பயம் அதிகமாக இருந்தது. அதன் பிறகு பிரசன்னா தங்கள் மகளிடம் நன்றாகப் பேசுவதையும், மகளின் முகத்தில் ஒரு பிரச்சினையும் தெரியாமல் போனதாலும் அவரின் பயம் சிறிது மட்டுப்பட்டிருந்தது.

பெற்றவர்கள் தன் முகம் பார்த்தே தன்னைக் கண்டு கொள்வார்களே என்ற எண்ணத்தில் சில முறை பயிற்சி செய்து; முகத்தைச் சாதாரணமாக வைத்துக் கொள்ளப் பழகிக் கொண்டு தானே கணவனிடம் உண்மையைச் சொல்ல தயாரானாள் வசுந்தரா. அதனாலேயே திருமணமான சமயத்தில் அவளால் பெற்றவர்களிடம் இயல்பாகக் காட்டிக்கொள்ள முடிந்தது.

மகளின் முயற்சி தெரியாமல் அவளின் முகம் பார்த்தே சிறிது நிம்மதியாக இருந்தார்.

ஆனால் இப்போது எந்த ஒளிவு மறைவும் இல்லாமல் முகம் முழுவதும் மலர்ச்சியுடன் கணவனைப் பார்க்கத் துடித்துக் கொண்டு நிற்கும் மகளைக் கண்டு அவர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

மகளின் கன்னத்தை வாஞ்சையுடன் தடவியவர் “அம்மா காஃபி போடுறேன். அதை மட்டுமாவது குடிச்சுட்டுக் கிளம்பு. அப்படியே அப்பாவை உன்னை விட்டுட்டு வரக் கிளம்பச் சொல்றேன்…” என்றார்.

“இல்லம்மா… அப்பாவுக்கு இங்கே வேலை இருக்கும். என் ஸ்கூட்டி இங்கே தானே இருக்கு. நான் அதில் கிளம்புறேன்…” என்றாள்.

அதற்கு ஏதோ மறுப்புச் சொல்ல வாயைத் திறந்த கல்பனா, பின் மகளின் உற்சாகத்தைக் கலைக்க மனமில்லாமல், “சரி, நீ வண்டி ஓட்டி ரொம்ப நாளாச்சு. பார்த்துக் கவனமா ஓட்டு…” என்று மட்டும் சொல்லி முடித்துக் கொண்டார்.

“என்னக்கா இப்போ எல்லாம் என்னைப் பார்த்துச் சட்டு சட்டுன்னு உண்மையைக் கண்டுபிடிச்சுடுற?” என்று அன்னை உள்ளே செல்லவும் தமக்கையிடம் வியப்பாகக் கேட்டாள் வசுந்தரா.

“காதலர்களின் தவிப்பை காதலர்கள் அறிவார்கள்…” என்று சொல்லிக் கண்ணைச் சிமிட்டிச் சிரித்தாள் காஞ்சனா.

அவள் சொன்ன விதத்தில் வசுந்தராவும் சிரித்தாள்.

அக்காவும், தங்கையும் சிரித்துக் கொண்டிருக்கும் போதே காஞ்சனாவின் அலைபேசி அவளை அழைத்தது.

அழைப்பை ஏற்றவள் “இதோ ஹார்லிக்ஸ் குடிக்கப் போறேங்க. ஆமா, அம்மா போட போறாங்க…” கைபேசியில் பேசிக் கொண்டே அவளின் அறைக்குச் சென்றாள் காஞ்சனா.

‘காதல் பறவைகள்!’ என்று அக்காவைப் பார்த்துச் சிரித்த வசுந்தரா சற்று நேரத்தில் அனைவரிடமும் சொல்லிக் கொண்டு தன் இருசக்கர வாகனத்தில் கிளம்பி விட்டாள்.

‘எமர்ஜென்சி என்று சொன்னாரே. இந்நேரம் வீட்டுக்கு வந்திருப்பாரா? இல்லை இன்னும் ஹாஸ்பிட்டலில் தான் இருப்பாரா? வந்திருந்தால் நல்லா இருக்கும். ஒருவேளை வரத் தாமதமானால் கொஞ்ச நேரம் காத்திருக்க வேண்டியது தான்…’ என்று செல்லும் போதே கணவனைப் பற்றி நினைத்துக் கொண்டே சென்றாள்.

“வா வசு… உங்க அக்காவை அழைச்சுட்டு வந்துட்டீங்களா? நீ என்ன அதுக்குள்ள வந்துட்ட. உன் அக்காகிட்ட பேசிட்டு இருக்கலையா?” என்று வரவேற்பறையில் இருந்த ராதா அவளை வரவேற்றபடி கேட்டார்.

“வந்துட்டோம் அத்தை. அக்காவுக்கு அலைச்சல். ரெஸ்ட் எடுக்கட்டும்னு வந்துட்டேன்…” என்றவள் “என்ன அத்தை மாமா, யாதவ் யாரையும் காணோம். நீங்க மட்டும் இருக்கீங்க?” என்று கேட்டாள்.

“உன் மாமா அவரோட பிரண்டு ஒருத்தரை பார்க்கப் போயிருக்கார். யாதவ் பிரண்ட்ஸ் கூடச் சினிமாவுக்குப் போயிருக்கான். உன் வீட்டுக்காரன் உங்க ரூம்ல படுத்துருக்கான்…” என்று அவள் கேட்காத நபருக்கும் சேர்த்தே பதில் சொன்னார் ராதா.

“படுத்துருக்காரா? ஏன் அத்தை ஹாஸ்பிட்டல் போகலையா? இல்லை போய்ட்டு வந்துட்டாரா?” என்று கேட்டாள்.

“சாதாரணத் தலைவலிக்கு எதுக்கு ஹாஸ்பிட்டல்? வந்ததும் படுத்துட்டான். இப்போ விட்டுருக்கும்னு தான் நினைக்கிறேன்…”

“தலைவலியா? இல்லை அத்தை. ஏதோ…” எமர்ஜென்சினு சொல்லிட்டு வந்தார் என்று சொல்ல வந்தவள் கப்பென்று வாயை மூடி ஏதோ என்பதோடு நிறுத்திக் கொண்டாள்.

ராதா மருமகளைக் கேள்வியாகப் பார்க்க, “நான் போய் அவருக்கு எப்படி இருக்குனு பார்த்துட்டு வர்றேன் அத்தை…” என்று அவரின் பார்வையைத் தவிர்த்துப் படபடவென்று படிகளில் ஏறினாள்.

மேலே ஏறும் போதே ‘என்கிட்ட எமர்ஜென்சி என்று தானே சொன்னார். தலைவலி என்றால் அங்கே என்கிட்டயே சொல்லியிருக்கலாமே? ஏன் எமர்ஜென்சி என்று சொல்லிவிட்டு வரணும்? ஒருவேளை தலைவலி என்று அங்கே வச்சுச் சொன்னால் நான் வருத்தப்படுவேன் என்று சொல்லாமல் விட்டாரா?’ என்று நினைத்துக் கொண்டே தங்கள் அறைக்குச் சென்றாள்.

கணவன் படுக்கையில் படுத்து ஓய்வெடுத்துக் கொண்டிருப்பான் என்று நினைத்து அவள் கதவைத் திறந்து பார்க்க, அவனோ அங்கிருந்த மேஜையின் முன் அமர்ந்து ஒரு புத்தகத்தில் ஆழ்ந்திருந்தான்.

அவள் கதவைத் திறந்த சப்தத்தில் திரும்பியவன், மனைவியை ஒரு பார்வை பார்த்துவிட்டு மீண்டும் திரும்பிப் புத்தகத்தில் ஆழ்ந்தான்.

யோசனையாகக் கணவனைப் பார்த்தவள் “என்னங்க தலைவலி இப்போ எப்படி இருக்கு?” என்று கேட்டாள்.

“தலைவலியா? யாருக்கு?” என்று புத்தகத்தை விட்டுத் தலையை நிமிர்த்தாமலேயே கேட்டான் பிரசன்னா.

“என்ன இப்படிக் கேட்குறீங்க? நீங்க தானே அத்தை கிட்ட தலைவலினு சொன்னீங்க? ஆனா என்கிட்ட ஏன் எமர்ஜென்சி கேஸ்னு சொல்லிட்டு வந்தீங்க? அங்கேயே தலைவலினு என்கிட்ட சொல்லியிருக்கலாமே…” என்று குழப்பத்துடன் கேட்டாள்.

“எனக்குத் தலைவலியும் இல்லை. எமர்ஜென்சி கேஸும் வரலை…” என்று இன்னும் நிமிராமல் குரல் மட்டும் கொடுத்தான்.

“இல்லையா? அப்புறம் ஏன் அப்படிச் சொன்னீங்க?” ஒட்டாமல் பேசும் கணவனைப் புரிந்து கொள்ள முடியாமல் கேட்டாள்.

“சும்மா தான் சொன்னேன். இப்போ எதுக்கு என்னைப் படிக்க விடாம தொண தொணன்னு பேசிட்டு இருக்க? வேற வேலை இருந்தால் போய்ப் பார்…” என்றான் சிடுசிடுப்பாக.

“சும்மாவா? ஏன்?” என்று குரலே எழும்பாமல் கேட்டாள்.

ஆனால் பதில் சொல்ல வேண்டிய பிரசன்னாவோ ஏதோ பரீட்சைக்குப் படிப்பவன் போல் புத்தகத்தில் தலையை விட்டுக் கொண்டிருந்தான்.

அவளின் கேள்விக் காதில் விழுந்தாலும் அதுவரை பதில் சொல்லிக் கொண்டிருந்தவன் இப்போது சொல்லவில்லை.

வசுந்தரா சில நொடிகள் கணவனின் பதிலுக்காக அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவன் பதில் சொல்லவில்லை என்றதும் இன்னும் குழம்பிப் போனாள். ‘காலையில் நன்றாகத்தானே இருந்தார்? தன்னுடன் நன்றாகப் பேசினார், பாடினார், சிரித்தார். அதற்குள் என்ன ஆனது?’ என்று நினைத்தவளுக்கு அவனுக்கு இப்போது என்ன கோபம் என்று புரியவே இல்லை.

திருமணமான புதிதில் தான் சொன்ன விஷயத்திற்காகச் சில நாட்கள் கோபமாக இருந்தான் தான். ஆனால் அந்த நேரத்தில் கூட அவரின் கோபம் நியாயமானது, அவருக்கும் வருத்தமாகத் தானே இருக்கும். அதனால் அப்படி இருக்கிறார் என்று நினைத்திருக்கின்றாள்.

ஆனால் நடுவில் இத்தனை நாட்கள் நன்றாகப் பழகி விட்டு இன்று பார்த்து ஏன் இவ்வளவு கோபம்? நான் எதுவும் தப்புச் செய்து விட்டேனா? என்று தன்னையே கேள்விக் கேட்டபடி நின்று கொண்டிருந்தாள்.

அவள் அசையாமல் அந்த இடத்திலேயே உறைந்து போய் நிற்க, அவளின் பார்வையும் கணவனைப் பார்த்த வண்ணமே உறைந்து போயிருந்தது.

“சும்மா என்ன வெறிச்சுப் பார்க்காம உன்னை அந்தப் பக்கம் போன்னு சொன்னேன்…” என்று கடுப்புடன் கத்தினான்.

அவன் கத்தியதில் ஒரு நொடி திடுக்கிட்டுத் தான் போனாள்.

அவனின் கோபத்தில் கண்கள் கலங்கும் போலிருந்தது. ஆனால் வழக்கம் போல் கண்ணீரை அடக்கிக் குளியலறைக்குள் புகுந்து கொண்டாள்.

உள்ளே சென்று நன்றாக முகத்தைக் கழுவி விட்டு அவள் வெளியில் வந்தபோது அவன் அங்கே இல்லை. அறை வெறுமையாக இருந்தது.

‘எங்கே போனார்?’ என்று கேள்வி தோன்றினாலும் ஏனோ அவனைத் தேடிச் செல்ல முயலவில்லை. கணவன் காட்டிய கோபம் அவளுக்குத் தாங்க முடியாததாக இருந்தது.

ஆனாலும் நிதானமாக யோசிக்க முயன்றாள்.

‘என்கிட்ட பொய்ச் சொல்லிட்டு முன்னாடியே கிளம்பி வரும் அளவுக்கு என்ன நடந்திருக்கும்? ஒருவேளை அங்கே யாரும் அவரைக் காயப்படுத்தினார்களா? அவருக்கு மதிப்புக் கொடுக்கவில்லையா?’ என்று யோசித்துப் பார்த்தாள்.

ஆனால் அங்கே இருந்தவரை அவளின் பார்வைக் கணவனையே சுற்றி வந்ததால் அப்படி எதுவும் நடந்ததாக அவளுக்கு ஞாபகமில்லை. எல்லோரிடமும் சிரித்துத் தான் பேசிக்கொண்டிருந்தான்.

அதனால் அங்கே பிரச்சினை இருக்க வாய்ப்பில்லை என்ற முடிவிற்கு வந்தவள் ‘வேற என்ன பிரச்சனை?’ என்ற கேள்வியுடன் அப்படியே அமர்ந்திருந்தாள்.

“இப்படியே எவ்வளவு நேரம் உட்கார்ந்திருப்ப? அம்மா சாப்பிடக் கூப்பிட்டு ரொம்ப நேரமாச்சு. கீழே இறங்கி வா!” என்ற குரல் கேட்ட பிறகுதான் கணவன் அறைக்குள் வந்ததையே உணர்ந்தாள்.

இப்படியே எவ்வளவு நேரமா? அப்படி எவ்வளவு நேரமாச்சு? என்று நினைத்துக் கடிகாரத்தைப் பார்க்க, அவள் அறைக்கு வந்து ஒரு மணிநேரத்திற்கும் மேலாகக் கடந்திருந்தது.

‘இவ்வளவு நேரம் இப்படியே உறைந்து போயா இருந்தேன்?’ என்று தன்னையே நிந்தித்துக் கொண்டவள் கீழே இறங்கிச் சென்றாள்.

சாப்பிட அமர்ந்ததும் வழக்கம் போல அவளின் தட்டில் ஒரு வாய் உணவை எடுத்து வைத்தான் பிரசன்னா.

அவ்வளவு நேரம் குழம்பித் தவித்த அவளுக்கு அந்த ஒரு வாய் உணவு நிறைவை உண்டாக்க, அவள் கலக்கம் எல்லாம் ஓடி ஒளிய மகிழ்வுடன் அந்த உணவை எடுத்து வாயில் வைத்தாள்.

ஆனால் அந்த மகிழ்ச்சிக்கும் கூட மறுநாளே முடிவு வரும் என்று அவள் நினைக்கவே இல்லை!

கணவன் உணவைப் பகிர்ந்த மகிழ்ச்சியில் இரவு படுக்கையில் விழுந்ததும் மீண்டும் “அங்க விசேஷத்தில் யாரும் உங்களை மரியாதை குறைவாக நடத்திட்டாங்களா?” என்று தயங்கியபடி கேட்டாள்.

அவளுக்கு முதுகு காட்டிப் படுத்திருந்தவன் “அப்படி எல்லாம் எதுவும் இல்லை…” என்றான் வறண்ட குரலில்

‘இவர் ஏன் இப்படி ஒரு மாதிரியாகவே பேசுகிறார்’ என்று நினைத்தாலும், அப்போது போல் கோபம் கொள்ளாமல் அவன் இப்போது பேச ஆரம்பித்ததால் தொடர்ந்து கேட்டுவிட முடிவு செய்து “அப்புறம் என்னாச்சு? ஏன் என் கூட வேனில் வராம தனியா வந்தீங்க? அத்தைகிட்ட தலைவலின்னு வேற சொல்லியிருக்கீங்க?” என்று கேட்டாள்.

“என்னால் காரணம் எல்லாம் சொல்ல முடியாது. அம்மாகிட்ட தலை வலிக்குது வீட்டுக்குப் போய் ரெஸ்ட் எடுத்தா நல்லா இருக்கும்னு சொல்லி அவங்களோட கிளம்பி வந்தேன். அவங்களும் தலை வலின்னு தெரிந்து வேற எந்தக் கேள்வியும் கேட்கலை…” என்றான்.

“ஏன் காரணம் சொன்னா என்ன?”

“அதான் சொல்ல முடியாதுன்னு சொல்லிட்டேன்ல…” என்று மீண்டும் எரிச்சல் பட்டான்.

‘என்னடா இது?’ என்று தான் அவளுக்குச் சலிப்பாக இருந்தது.

இன்று எரிச்சல் பட்டவன் இனி அவளை எரிச்சல் படுத்தும் வேலைகளைச் செய்யப் போகிறான் என்று அறியாமல் அவனுக்கு என்ன கோபம் என்று அறிந்து கொள்ள முடியாத குழப்பத்துடன் அன்றைய இரவைத் தூக்கம் வராமல் கடத்தினாள் வசுந்தரா.