என்னுள் யாவும் நீயாக – 25

அத்தியாயம் – 25

அந்த வேன் முன் சென்ற வாகனங்களை எல்லாம் முந்திக் கொண்டு விரைந்து கொண்டிருந்தது.

‘ஒரு ஜீவன் அழைத்தது
ஒரு ஜீவன் துடித்தது

முல்லை பூ போலே உள்ளம் வைத்தாய்
முள்ளை உள்ளே வைத்தாய்.. ஹோ..

என்னைக் கேளாமல் கன்னம் வைத்தாய்
நெஞ்சில் கன்னம் வைத்தாய்.. ஹோ

நீ இல்லை என்றால் என் வானில் என்றும்
பகல் என்று ஒன்று கிடையாது

அன்பே நம் வாழ்வில் பிரிவென்பதில்லை
ஆகாயம் ரெண்டாய் உடையாது…’

அந்த வேனில் இளையராஜா இசையமைத்த பாடல்களாக ஒலித்துக் கொண்டிருக்க, பிரசன்னாவின் கரங்கள் அவனின் மடியில் மெதுவாகத் தாளம் போட்டன.

‘நீ இல்லை என்றால் என் வானில் என்றும்
பகல் என்று ஒன்று கிடையாது

அன்பே நம் வாழ்வில் பிரிவென்பதில்லை’

என்ற வரிகள் வந்த போது தன் அருகே அமர்ந்திருந்த மனைவியின் காதோரம் மெல்லச் சாய்ந்து அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில் ரசித்து உருக்கமாகப் பாடினான் பிரசன்னா.

கணவனின் குரலில் இருந்த உருக்கம் வசுந்தராவையும் உருக வைக்க, அவளும் அந்தப் பாடல் வரிகளை உள்வாங்கினாள்.

‘இந்தப் பாடலை இவர் இன்னும் சத்தமாகப் பாடினால் எப்படி இருக்கும்? இப்போது இருக்கும் சூழ்நிலையில் பாட முடியாதே’ என்று நினைத்தவள் தங்களைச் சுற்றிப் பார்வையைச் செலுத்தினாள்.

அவளின் அன்னையும், தந்தையும் அவர்களுக்குப் பின்னால் இரண்டு இருக்கைகள் தள்ளி அமர்ந்திருந்தனர்.

மற்ற இருக்கைகள் அனைத்திலும் அவளின் நெருங்கிய உறவினர்கள் அமர்ந்து பேசிக் கொண்டு வந்தனர்.

கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை வசுந்தராவின் புகுந்த வீட்டிற்கு வந்து எத்திராஜும், கல்பனாவும் மூத்த மகளின் வளைகாப்பிற்குக் குடும்பத்தோடு வர வேண்டும் என்று அனைவருக்கும் அழைப்பு விடுத்திருந்தனர்.

இந்த ஞாயிறு ஒரு வேனை பிடித்து அதிகாலையிலேயே புதுச்சேரிக்குக் கிளம்பி இருந்தனர்.

பிரசன்னாவும், வசுந்தராவும் அவளின் பெற்றோருடன் வேனிலேயே வந்து விட, அவனின் பெற்றோரும், யாதவும் தனியாகக் காரில் வருவதாக இருந்தனர்.

தீபாவிற்கும், சரணுக்கும் அழைப்பு விடுத்திருந்தாலும், நேற்றிலிருந்து அவர்களின் மகள் மயூரிக்குக் காய்ச்சலாக இருக்க, அதில் அவள் அழுது கொண்டே இருந்ததால் காஞ்சனாவை இங்கே அழைத்து வந்த பிறகு பார்க்க வருகிறோம் என்று சொல்லிவிட்டார்கள்.

வேன் சென்னையைத் தாண்டி புதுச்சேரியை நோக்கி சாலையில் விரைந்து கொண்டிருக்க, இருவரின் தோள்களும் ஒன்றுடன் ஒன்று உரச, வேனில் ஒலித்த பாடல்களை ரசித்த படி அமர்ந்திருந்தனர் வசுந்தராவும், பிரசன்னாவும்.

அதிலும் தோள்கள் உரசிக் கொண்டதில் அவ்வப்போது உடலில் ஏற்பட்ட சிலிர்ப்பை முயன்று கணவனுக்குக் காட்டாமல் மறைத்த படி அமர்ந்திருந்தாள் வசுந்தரா.

காரில் இருவரும் அருகருகில் அமர்ந்து பயணித்தாலும் உடல்களின் உரசல் நேரா வண்ணம் இருக்கைகள் இடைவெளி விட்டு இருப்பதால், இத்தனை நாட்களில் இருவரும் இந்தளவு நெருக்கமாக அமர்ந்து பயணித்ததே இல்லை.

இன்றைய பயணம் அவளுக்குப் புது அனுபவமாக இருந்தது.

தனக்கு மட்டும் தான் இப்படி இருக்கின்றதோ? அவனுக்கு ஒரு வித்தியாசமும் தோன்றவில்லையா? என்று நினைத்துக் கொண்டே கணவனை ஓர விழிகளால் ஆராய்ச்சியாகப் பார்த்தாள்.

அவனோ இப்போது முன்னால் இருந்த இருக்கையின் கம்பியின் மீது கையை வைத்து லேசாக விரல்களை அசைத்து, அடுத்தப் பாடலை ரசித்துக் கொண்டிருக்க, ‘அப்படி என்ன பாட்டு?’ என்று கவனிக்க ஆரம்பித்தவளின் முகம் மாறியது.

அவளின் முகப்பாவத்தை மேலும் மாற்றும் வண்ணம், அந்தப் பாடலின் வரிகளை மனைவியை நோக்கி மிக மிக மெல்லிய குரலில் பாட ஆரம்பித்தான் பிரசன்னா.

‘மன்றம் வந்த தென்றலுக்கு
மஞ்சம் வர நெஞ்சம் இல்லையோ
அன்பே என் அன்பே’

என்ற பாடல் ஒலித்துக் கொண்டிருக்க, அந்தப் பாட்டில் அடுத்து வந்த வரிகளான

‘தாமரை மேலே நீர் துளி போல்
தலைவனும் தலைவியும் வாழ்வதென்ன
நண்பர்கள் போலே வாழ்வதற்கு
மாலையும் மேளமும் தேவையென்ன…’

என்று மனைவியை நோக்கிப் பாடிப் புருவத்தையும் கேள்வியாக உயர்த்திக் காட்டினான்.

அந்த வரிகள் அவர்கள் தற்போது வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கையைச் சொல்வது போல் இருக்க, வசுந்தராவின் முகத்தோடு மனமும் சுணங்கிப் போனது.

சற்று நேரத்திற்கு முன் வேறு ஒரு பாடலை அவன் சத்தமாகப் பாடினால் நன்றாக இருக்கும் என்று நினைத்தவள், இந்தப் பாடலை கேட்டதும், ‘எங்கே கணவனின் இந்த மெல்லிய குரல் கூட மற்றவர்களுக்குக் கேட்டு விடுமோ?’ என்று பயந்தாள்.

‘மேடையைப் போலே வாழ்க்கை அல்ல
நாடகம் ஆனதும் விலகிச்செல்ல
ஓடையைப் போலே உறவும் அல்ல
பாதைகள் மாறியே பயணம் செல்ல…’

என்ற வரிகளையும் அவன் மனைவியைப் பார்த்தே பாட,

“நம்ம வாழ்க்கை நாடகமென்று நான் என்னைக்கும் சொன்னதில்லை. அதோட பாதை மாறிப் பயணம் செய்யவும் நான் என்னைக்கும் நினைத்ததும் இல்லை…” என்று பட்டென்று மெல்லிய குரலிலேயே சொன்னாள்.

‘விண்ணோடுதான் உலாவும் வெள்ளி வண்ண நிலாவும்
என்னோடு நீ வந்தால் என்ன வா…’

அவளின் பேச்சைக் கேட்டுக் கொண்டே அடுத்த வரியையும் பாடியவன், ‘வா!’ என்று வார்த்தையில் மட்டும் இல்லாது கண்களிலும் அழைப்பு விடுத்தான்.

“நான் எப்பவோ உங்க பக்கம் வந்துட்டேன்…” என்று அதற்கும் மெல்லிய குரலில் பதில் சொன்ன மனைவியைப் பாட்டுப் பாடுவதை நிறுத்தி விட்டுப் புன்சிரிப்புடன் பார்த்தான்.

அவன் பதிலுக்கு ஒன்றும் சொல்லவில்லை. ஆனால் அவனின் உதடுகளில் பூத்தப் புன்முறுவல் மட்டும் அங்கேயே தேங்கி நின்று போனது.

தன் பேச்சிற்கு அவன் ஒன்றும் சொல்லாததில் கடுப்பானவள் அவனின் புறம் திரும்பாமல் விறைப்பாக அமர்ந்து கொண்டாள்.

அவளின் கடுப்புப் புரிந்தாலும் கண்டு கொள்ளாமல் அவனும் மனைவியிடமிருந்து பார்வையைத் திருப்பிக் கொண்டு மீண்டும் பாடலைத் தொடர,

“பெரிய பாடகரென்று நினைப்பு. இவர் பாட்டுக் கத்துக்காமயே இருந்திருக்கலாம்…” என்று சிடுசிடுப்புடன் முனங்கிக் கொண்டாள்.

அவளின் பேச்சு அவனின் காதிலும் விழ, ஆச்சரியமாக மனைவியின் புறம் பார்வையைத் திருப்பினான்.

அவள் தன்னைத் திட்டத்தான் அப்படிப் பேசினாள் என்று புரிந்தாலும் அவனுக்கு ஆச்சரியம் தான் வந்ததே தவிரக் கோபம் வரவில்லை.

அவனின் ஆச்சரியத்திற்கும் காரணம் இருந்தது.

அவள் அவனின் மீது கோபப்பட்டாள். ஆம்! முதல் முறையாக வெளிப்படையாக உரிமையுடன் கோபப்பட்டாள். அதை அவளே உணரவில்லை.

அதை உணர்ந்து கொண்டவனின் உதடுகள் இன்னும் பெரியதாக விரிந்து புன்னகையைச் சிந்த, கண்களோ அவனின் வழக்கமான குறும்பைக் குத்தகைக்கு எடுத்துக் கொண்டன.

‘வெயிட் அன்ட் ஸீ பொண்டாட்டி…’ என்று தன் மனதில் குறும்போடு சொல்லியும் கொண்டான்.

காலை உணவு நேரத்தில் அனைவரும் புதுச்சேரி சென்று இறங்க, தன் பெரிய வயிற்றைத் தூக்கிக் கொண்டு தாய்மையின் நிறைவுடன் நடந்து வந்து உறவினர்களை உற்சாகமாக வரவேற்றாள் காஞ்சனா.

அக்காவைப் பார்த்ததும் அவளின் கையைப் பற்றிக்கொண்டவள், அதன்பின் அவளுடனேயே ஒட்டிக் கொண்டு திரிந்தாள் வசுந்தரா.

காலை உணவிற்குக் கமலேஷின் வீட்டார் ஏற்பாடு செய்திருக்க அனைவரும் காலை உணவை முடித்துக் கொண்டனர்.

கமலேஷின் பெற்றவர்களுக்கு அவன் ஒரு பையன் தான் என்பதால் தங்கள் மருமகளின் வளைகாப்பிற்குத் தாங்களும் சிறப்பாகச் செய்ய ஆசைப்பட்டனர்.

அதனால் காலை உணவிற்கே உறவினர்களை அழைத்திருந்தார்கள். காலை உணவு தடபுடலாக நடந்து முடிந்து, அதன் பிறகு மதிய உணவிற்குத் தேவையான வேலை ஆரம்பிக்கப்பட்டது.

ஒருபக்கம் ஏழு வகையான சாதம் தயாராகிக் கொண்டிருக்க, இந்தப் பக்கம் காஞ்சனாவைத் தயார் செய்தனர்.

மணப்பெண்ணிற்கு அலங்காரம் செய்வது போல் தன் அக்காவை அலங்கரித்து அழைத்து வந்த வசுந்தராவும் விசேஷத்திற்கு ஏற்றவாறு தயாராகி வந்திருக்கப் பிரசன்னாவின் கண்கள் மனைவியை விட்டு அகல மறுத்தன.

கமலேஷ் தாய்மையில் பூரித்திருந்த தன் மனைவியை விட்டு பார்வையை அகற்றாமல் ரசித்துக் கொண்டிருக்க, இந்தப்பக்கம் பிரசன்னா தன் மனைவியை ரசித்துக் கொண்டிருந்தான்.

அவர்கள் இருவருக்கும் நடுவே சற்று முன்புதான் பெற்றோருடன் வந்திறங்கிய யாதவ் அமர்ந்திருந்தான்.

தங்கள் மனைவிமார்களை ரசித்துக்கொண்டு தன் இருபக்கமும் அமர்ந்திருந்த அண்ணன்களைப் பார்த்தவன், “டேய் யாதவா! நீ எல்லாம் சிங்கிளா சிங்கி அடிக்கத் தான்டா லாயக்கு. மிங்கிளாகி ஜொள்ளு விட்டுகிட்டு இருக்குற அண்ணனுக்கும், அவரோட சகலைக்கும் நடுவில் வந்து இப்படி வசமா மாட்டிக்கிட்டு முழிக்கிறியே. இந்த நேரம் நீ என்ன பண்ணி இருக்கணும்? இல்ல என்ன பண்ணி இருக்கணும்னு கேட்கிறேன்? இத்தனை சொந்த பந்தங்கள் வந்திருக்காங்களே… இவ்வளவு சொந்தத்துக்கு நடுவில் ஏதாவது நமக்குச் செட்டாகிறது மாதிரி பொண்ணு கிடைக்குதான்னு தேடுவதை விட்டுவிட்டு இப்படியா வந்து சிக்கிக் கொள்வ?” என்று தன்னைத்தானே திட்டிக் கொண்டான் யாதவ்.

“இப்பவும் ஒண்ணும் கெட்டுப் போகலைடா யாதவா. இன்னும் நேரமிருக்கு. நல்லா கண்ணை உருட்டி சுற்றிப் பார். எங்கேயாவது உனக்குச் செட்டாகும் ஃபிகர் கிடைக்கும்….” என்று தன் தோளில் தனக்குத்தானே தட்டிக் கொண்டு கண்களை அலைய விட்டு ‘வயது பெண்கள் யாரும் அகப்படுகின்றார்களா?’ என்று நோட்டமிட ஆரம்பித்தான்.

அவன் கண்களை அலைய விட்ட மறுநிமிடம் அவனின் கண்களை மறைப்பது போல் இரு கைகள் அவனின் முன் நின்றன.

“எவ அவ? என் சைட்டுக்குக் கேட் போட்டது…” என்று தன் கண் முன்னால் இருந்த கைகளைப் பார்க்க, அது இரண்டுமே ஆண் மகனின் கைகளாக இருந்தன.

“ஓ! எவ அவ இல்லையா? எவன் அவனா?” என்று கேட்டுக்கொண்டே தன் முன்னால் இருந்த கைகளைப் பிடித்துக் கீழே இறக்கினான்.

அவன் இறங்கி விட்ட வேகத்தில் மீண்டும் கைகள் மேலேறி கொண்டதோடு “கண்ணு இரண்டையும் தோண்டி விடுவேன்டா…” என்று பிரசன்னா சொன்ன அதே நேரத்தில் “கண்ணு போயிரும் தம்பி…” என்று கமலேஷும் நக்கலாகச் சொன்னான்.

“அட! அண்ணாருங்களா… இவ்வளவு நேரம் இரண்டு பேரும் உங்க மிசஸ் கூடப் பார்வையாலேயே மிங்கிள் ஆகித்தானே இருந்தீங்க? நானும் இங்கே ஒரு மிட்டாயைப் பிடிச்சு மிங்கிள் ஆகலாம்னு பார்த்தால் இப்படி என் கண்ணு மேல காண்டு ஆகுறீங்களே…” என்று புலம்பினான் யாதவ்.

“என்னது மிட்டாயா?” என்று பிரசன்னாவும், கமலேஷும் ஒன்று போல் கேட்க,

“சகலைங்க இரண்டு பேரும் ஒண்ணா சவுண்ட் கொடுக்கணும்னு வேண்டுதல் எதுவும் வச்சிருக்கீங்களா?” என்று அவர்களிருவரும் ஒன்று போல் பேசுவதைப் பார்த்துக் கேட்டான்.

“அடேய் வக்கீலு… வழக்காடுவதை நிறுத்திட்டு மிட்டாய்னா என்னன்னு சொல்லுடா…” என்று தம்பியை அதட்டினான் பிரசன்னா.

“மிட்டாய், என் வருங்கால மிசஸ்க்கு வச்ச செல்லப் பேரு. எப்படி இருக்கு?” என்று ஆவலாகக் கேட்டான் யாதவ்.

“மிட்டாய்னு ஒரு பேரா? சரிதான். இப்பவே வருங்கால மிசஸ்க்கு செல்லப்பெயர் வைக்கிற அளவுக்குப் போயாச்சா?” என்று வியப்புடன் கேட்டான் கமலேஷ்.

“ஏன்டா டேய்… எல்லோரும் பொண்ணைச் செலக்ட் பண்ணிட்டு அப்புறம் தான் செல்லப்பெயர் வைப்பாங்க. நீ என்னென்னா பேரை வச்சுட்டு அப்புறம் ஆளைத் தேடப் போறியா?” என்று கேட்டான் பிரசன்னா.

“பின்ன? இந்த யாதவை யாருன்னு நினைச்சீங்க? பேரை வெச்சிட்டு தான் ஆளைத் தேடுவான்…” என்று பெருமையாகச் சட்டையின் கழுத்துப் பட்டையைத் தூக்கி விட்டுக் கொண்டான்.

“உன் பெருமையில் பெட்ரோலை தான்டா ஊத்தணும்…” என்று நக்கலாகச் சொன்ன பிரசன்னா, மீண்டும் பார்வையை மனைவியின் புறம் திருப்பினான்.

“தம்பி, இங்க வந்திருக்கிற வயசு பிள்ளைங்க நிறையப் பேரு நமக்குத் தங்கச்சி முறைங்க தான். அதனால உங்க மிட்டாயை இங்கே தேடி யார்கிட்டயும் ஜவ்வு மிட்டாய் வாங்கிறாதீங்க…” என்று சொன்ன கமலேஷ் அடிப்பது போல் ஜாடை காட்டி, அதற்குப் பேர் ஜவ்வு மிட்டாய் என்று சுட்டிக் காட்டினான்.

“என் அண்ணாவாது என் பெருமையில் தான் பெட்ரோலை ஊத்தினான். நீங்க என் வாழ்க்கையிலேயே பெட்ரோலை ஊத்திட்டீங்களே அண்ணாரே…” என்று போலியாகக் கண்ணீர் சிந்தினான் யாதவ்.

அவனின் போலிக் கண்ணீரைக் காண கமலேஷின் கண்கள் அவனின் புறம் இருந்தால்தானே? அவனும் மனைவியின் மீது பார்வையைப் பதித்து அவளை ரசிக்க ஆரம்பித்து விட்டான்.

“திரும்பவும் ஜொள்ளு ஊத்த ஆரம்பிச்சுட்டாங்கடா…” என்று புலம்பிக் கொண்டே ‘தேமே’ என்று அமர்ந்திருந்தான் யாதவ்.

பிரசன்னா யாதவிடம் பேச ஆரம்பித்ததுமே வசுந்தரா கணவனைத் தான் பார்க்க ஆரம்பித்தாள்.

விஷேசம் என்பதால் பிரசன்னா வேட்டி, சட்டை அணிந்திருந்தான். அவர்களின் கல்யாணத்திற்கும் அவன் அந்த உடை தான் அணிந்திருந்தான் என்றாலும் அப்போது அவள் இருந்த மனநிலையில் அவனின் தோற்றத்தைப் பெரிதாகப் பொருட்படுத்தவில்லை.

ஆனால் இன்றோ அவனைக் கவனித்து, அவன் உடை அணிந்திருந்த விதத்தை மட்டுமில்லாது அவனின் கம்பீரமான தோற்றத்தையும் ரசனையுடன் பார்த்தாள்.

அவனின் தோற்றம் ‘இவன் என் கணவன்!’ என்று அவளைப் பெருமையுடன் எண்ண வைத்தது.

அவனின் பார்வை மீண்டும் தன் புறம் திரும்பவும் வேகமாக அக்காவின் பக்கம் பார்வையைத் திருப்பிக் கொண்டாள்.

ஆனாலும் அவன் அறியா வண்ணம் ஓர விழிகளால் அவ்வப்போது பார்வையால் தழுவிக் கொண்டாள்.

கணவன் அறியா வண்ணம்தான் அவனைப் பார்க்கிறோம் என்று அவளே நினைத்துக் கொண்டாள். ஆனால் அவளின் ஒவ்வொரு அசைவையும் உள்வாங்கிக் கொள்ளும் பிரசன்னாவிற்கு அவள் தன்னைப் பார்ப்பது நன்றாகத் தெரிந்தே இருந்தது.

அதனால் உண்டான மகிழ்ச்சியை அவனின் முகம் பூரிப்புடன் வெளிப்படுத்தியது.

நேரம் செல்ல வளைகாப்புச் சடங்குகள் தொடங்கி உறவினர்கள் ஒவ்வொருவராகக் காஞ்சனாவிற்குச் சந்தனம் பூசி, வளையல் பூட்டி ஆசிர்வதித்தனர்.

அடுத்ததாகக் கமலேஷும் மனைவிக்குக் காதலுடன் வளையலைப் போட்டுவிட்டுச் சந்தனத்தைப் பூசிவிட்டு அவளின் வதனத்தில் இருந்து கையை எடுக்க மனமே இல்லாதவன் போலத் தடவி கொண்டிருக்க, உறவினர்கள் கேலி செய்து சிரிக்க ஆரம்பித்தனர்.

அவர்களின் கேலியில் வெட்கம் கொண்டு கன்னம் சிவந்தாலும் கணவனின் காதல் பார்வைக்குத் தானும் பதில் சொல்லிக் கொண்டிருந்தாள் காஞ்சனா.

இருவரும் ஒருவரை ஒருவர் காதலுடன் பார்த்துக் கொண்ட காட்சி அவ்வளவு அழகாக இருக்க, அவர்களை அருகில் இருந்து பார்த்த வசுந்தராவிற்கு மனதிற்குள் ஒரு கற்பனைக் காட்சித் தோன்ற ஆரம்பித்தது.

தனக்கும் இதே போல் வளைகாப்பு நடக்க, பிரசன்னா அவளுக்குச் சந்தனம் பூசிக் காதலுடன் தன் கன்னத்தில் முத்தம் ஒன்றையும் பதிப்பதாக அவளின் கற்பனையில் தோன்ற, விதிர்த்துப் போய்த் தலையை உதறினாள் வசுந்தரா.

அவளின் விதிர்ப்பு சந்தோஷ விதிர்ப்பாகவே இருந்தது. தன் கற்பனையில் கண்டதை நினைத்து உள்ளம் மகிழ்ந்தவள் நாணத்துடன் கணவனைப் பார்த்தாள்.

அவனின் பார்வையும் அவளின் மீதே இருந்ததால் அவள் தலையை உலுக்கி கொண்டதும், பின் வெட்கப்பட்டதையும் கண்டிருந்தவன், அவள் தன் புறம் திரும்பவும், ‘என்ன?’ என்பதாகப் புருவம் உயர்த்திக் கேட்டான்.

‘அச்சோ! கண்டுவிட்டானே…’ என்று நினைத்தவள் நாக்கைக் கடித்துக் கொண்டு வேகமாகப் பார்வையைத் திருப்பிக் கொண்டாள்.

அவளின் அந்தச் செயல் எதற்கு என்று புரியாவிட்டாலும் அந்தச் செயலில் திக்குமுக்காடித்தான் போனான் பிரசன்னா.

‘ஹப்பா! முன்னாடி எல்லாம் பார்க்கவே மாட்டாள். இப்போ என்னவென்றால் என்னா பார்வை பார்க்கிறாள்…’ என்று நினைத்தவன் ‘ஊப்ப்…’ என்று மூச்சை இழுத்து விட்டுத் தன்னைச் சமன்படுத்த முயன்றான்.

‘பிரசன்னா ஸ்டெடி… ஸ்டெடி… இனி தான் உன் ஆட்டத்தை ஆடலாம் என்று இருக்கிறாய். உன் பொண்டாட்டி பார்வையில் கவுந்துடாதே!’ என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டான்.

அவனின் ஆட்டத்தின் முதல் கட்டமாக வளைகாப்பு முடிந்து, மதிய உணவும் முடியவும், சில உறவுகள் கிளம்ப ஆரம்பிக்க, தன் பெற்றோரை அழைத்துக் கொண்டு யாதவும் கிளம்பத் தயாரான போது மனைவியைத் தனியாக அழைத்தான் பிரசன்னா.

‘என்னவோ?’ என்று நினைத்து அவள் வர, “நான் உடனே கிளம்பணும் வசு. நானும் அப்பா, அம்மா கூடவே ஊருக்குக் கிளம்புறேன். நீ உங்க அக்காவை ஈவ்னிங் வேனில் கூட்டிட்டு வரும் போது அவங்க கூட வந்திடு…” என்றான் பிரசன்னா.

மாலை தான் நல்ல நேரம் என்பதால் காஞ்சனாவை மாலையில் தங்கள் வீட்டிற்கு அழைத்துச் செல்ல எத்திராஜ் ஏற்பாடு செய்திருந்தார்.

அதனால் வந்தது போலவே பிரசன்னாவும், வசுந்தராவும் காஞ்சனாவையும் அழைத்துக் கொண்டு வேனில் செல்வதாக முடிவாகி இருந்தது.

யாதவும், அவனின் பெற்றோரும் காரிலேயே மதியம் போல் கிளம்புவதாக இருந்தனர். முன்னரே எல்லோரும் சேர்ந்து பேசி வைத்தது தான்.

ஆனால் திட்டம் அப்படியிருக்க, இப்போது திடீரென்று பிரசன்னா காரில் பெற்றோருடன் கிளம்புவதாகச் சொன்னதும் அவளின் முகம் வாட்டத்தைப் பிரதிபலித்தது.

“ஏன்?” என்று மட்டும் குரலே எழும்பாமல் கேட்டாள்.

“ஒரு எமர்ஜென்சி கேஸ் வசு. புரிஞ்சிக்கோ…” என்று இறுக்கமான குரலில் சொன்னவன் அடுத்த நிமிடம் அதற்கு மேல் அங்கே நிற்காமல் அனைவரிடமும் சொல்லிக்கொண்டு தன் பெற்றோருடன் கிளம்பியே விட்டான் பிரசன்னா.