என்னுள் யாவும் நீயாக – 24

அத்தியாயம் – 24

நாட்கள் அதன் வேகத்திற்கு நகர்ந்து கொண்டிருந்தன.

அன்று ஞாயிற்றுக்கிழமை.

கிருஷ்ணன், ராதா, பிரசன்னா, வசுந்தரா, யாதவ் என அனைவரும் அன்றைய மதிய உணவைச் சேர்ந்து அமர்ந்து உண்டு கொண்டிருந்தனர்.

“காலையில் வசுவோட அப்பா பேசினார் பிரசன்னா. ஈவ்னிங் போல வந்து காஞ்சனா வளைகாப்புக்கு அழைப்பு வைக்கிறதா சொன்னாங்க. உனக்கு ஈவ்னிங் எதுவும் புரோகிராம் இருக்கா?” என்று கேட்டார் கிருஷ்ணன்.

“மாமா என்னிடமும் பேசினார்பா. நான் ஈவ்னிங் ஃப்ரீ தான். தாராளமா வாங்க மாமான்னு சொல்லிட்டேன்…” என்றான் பிரசன்னா.

“அப்போ சரி…” என்ற கிருஷ்ணன் உணவைத் தொடர, மேலும் அங்கே அமைதியாக மதிய உணவு நேரம் சென்றது.

சாப்பிட்டு முடித்ததும் ஆண்கள் வரவேற்பறையில் அமர்ந்து பேச ஆரம்பிக்க, ராதாவும், வசுந்தராவும் சமையலறையை ஒதுங்க வைக்க ஆரம்பித்தனர்.

“இன்னைக்கு நீங்க வச்ச சிக்கன் குழம்பு நல்லா இருந்தது அத்தை. அந்தப் பக்குவம் எனக்கும் சொல்லித்தாங்க. நான் அடுத்த வாரம் செய்றேன்…” என்றாள் வசுந்தரா.

“சொல்லித் தர்றேன் வசு. நீ செய்த மட்டன் சுக்காவும் நல்லா இருந்தது. எப்பவும் அளவா நான்வெஜ் சாப்பிடும் பிரசன்னா கூட இன்னைக்குக் கொஞ்சம் உண்டன சாப்பிட்டான்…” என்றார் ராதா.

மாமியாரின் பாராட்டை விட, கணவன் தான் சமைத்ததை விரும்பிச் சாப்பிட்டான் என்றதில் அவளின் மனது பூரிப்படைந்தது.

“உன் மாமா கூட உன் திறமையைப் பற்றிச் சொன்னார். ஷோரூம் பத்தி எல்லா விஷயத்தையும் விரல் நுனியில் வச்சுருக்கியாம். அவருக்கு என் மருமகளின் புத்திசாலித்தனத்தைப் பாருன்னு அவ்வளவு பெருமை…” என்று ராதா பெருமையுடன் சொல்ல, வசுந்தரா மென்மையாகச் சிரித்துக் கொண்டாள்.

“நான் கூடப் பிரசன்னாவுக்குப் பொண்ணு பார்க்கும் போது பயந்திருக்கேன். வீட்டுக்கு வர்ற பொண்ணு எப்படி இருப்பாளோ? அவள் குணம் எப்படியோ? எங்களோட ஒத்துப் போவாளோ என்னவோன்னு எல்லா அம்மாக்களுக்கும் இருக்கும் பயம் எனக்கும் இருந்துச்சு. ஆனா நீ இந்த வீட்டுக்கு மருமகளா வந்து எங்க பயத்தை எல்லாம் ஒன்னும் இல்லாததா செய்து விட்டாய். வேலைக்குப் போனாலும் எனக்கு ஒத்தாசையா இருக்குறதாகட்டும், உங்க அப்பாவுக்கு மட்டும் இல்லாம நம்ம ஷோரூமையும் பொறுப்பா பார்த்துக்கிறதாகட்டும் எல்லாத்திலேயும் எங்களுக்கு உன் மேல் பரம திருப்தி.

அதுவும் நீ ஷோரூம் போறதில் உன் மாமா இப்போ கொஞ்சம் ரிலாக்ஸா இருக்கார். பிள்ளைங்க எல்லாம் அவங்கவங்களுக்குப் பிடிச்ச படிப்புப் படிச்சுட்டு அப்படியே போகவும் உங்க மாமாவுக்குச் சின்னக் கவலை இருந்தது. இன்னும் கொஞ்சம் வயசாகிட்டா ஷோரூமை வித்துட்டு வீட்டில்தான் இருக்கணும்னு புலம்புவார். ஆனா இப்போ அந்த நினைப்பே இல்லை. இனி நீ பொறுப்பா பார்த்துக் கொள்வாய்னு அவருக்கு ரொம்ப நிம்மதி…” என்று சொல்லிவிட்டு மருமகளைப் பார்த்து முறுவலித்தார் ராதா.

மாமியார், மாமனார் மெச்சிய மருமகளாக இருப்பதில் வசுந்தராவிற்கு மகிழ்ச்சியாகவே இருந்தது.

அதே நேரம் ‘நீ நல்ல மருமகள் என்பது சரி! ஆனால் நீ ஒரு நல்ல மனைவி தானா?’ என்று உள்ளிருந்து ஒரு குரல் அவளைப் போட்டு உலுக்கி எடுக்க, அவளால் மாமியாரின் பாராட்டைக் கூட முழுதாக அனுபவிக்க முடியவில்லை.

பெயருக்கு அவரைப் பார்த்துச் சிரித்து வைத்தாள்.

“என்னம்மா உங்க மருமகளுக்கு ஓவரா ஐஸ் வச்சுட்டு இருக்கீங்க. பாவம் அவளுக்கு ஜலதோஷம் பிடிச்சுக்கப் போகுது…” என்று சொல்லிய படி சமையலறை வாசலில் நின்றிருந்த கணவனின் குரலில் அவனின் புறம் திரும்பினாள் வசுந்தரா.

பிரசன்னாவின் பேச்சு அன்னையிடம் இருந்தாலும், அவனின் பார்வை முழுவதும் தன் மனைவியிடமே இருந்தது.

மனைவியின் பார்வை தன் புறம் திரும்பவும் நிதானமாக அவளைப் பார்த்துக் கண்சிமிட்டினான்.

‘ஆமா இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை’ என்று உள்ளுக்குள் நொடித்துக் கொண்டாள் வசுந்தரா.

அவனின் பார்வை அவளை அவ்வப்போது விழுங்குவதும், பின் நெருங்கி வந்து விலகிச் செல்வதும் என்றிருந்த கணவனின் நடவடிக்கை அவளை அப்படி நொடித்துக் கொள்ள வைத்தது.

அவளும் இப்பொழுதெல்லாம் கணவனை ஆர்வமாகப் பார்க்க ஆரம்பித்திருந்தாள்.

திருமணம் முடித்துக் கொண்ட கடமைக்காக அவனுடன் வாழ ஆரம்பிப்போம் என்று ஆரம்பத்தில் நினைத்தவள் தான்.

ஆனால் மஞ்சள் கயிறு மேஜிக் அவளின் வாழ்க்கையிலும் நடந்ததோ? கடமையை மீறி அவளின் பார்வை அவனின் மீது வட்டமிட்டது. கணவனின் அருகாமையை விரும்ப ஆரம்பித்திருந்தாள்.

ஆனால் அந்த அருகாமையைத் தர வேண்டியவனோ எட்ட நின்றே அவளைச் சீண்டிக் கொண்டிருந்தான்.

ஆண் மகனான அவனே விலகும் போது அவளாலும் அவனை நெருங்க முடியவில்லை. அதுவும் இல்லாமல் தான் முன்னால் வேறு ஒருவனைக் காதலித்ததால் தான் கணவன் தன்னை விலக்கி வைக்கிறான் என்ற அவளின் எண்ணமும் அவளை நெருங்க விடவில்லை.

முன்பிருந்த குற்றவுணர்வு அவளிடம் குறைந்திருந்தாலும் கணவனின் விலகலில் அந்தக் காதல் விஷயம் உள்ளுக்குள் பானகத் துரும்பாக அவளை உறுத்திக் கொண்டிருந்தது.

“நாங்க மாமியார், மருமகள் என்னவும் பேசிட்டுப் போறோம். எங்க பேச்சில் நீ ஏன்டா மூக்கை நுழைக்கிற?” என்று கேட்ட ராதாவின் கேள்வியில் வசுந்தராவின் கவனம் அவர்களின் பேச்சின் பக்கம் திரும்பியது.

“மாமியாரும், மருமகளும் இப்படி ஐஸ் வச்சுப் பேசிட்டு இருப்பீங்கனு நான் கண்டேனா அம்மா? நீங்க இரண்டு பேரும் குடும்பிப் பிடி சண்டைப் போட்டுட்டு இருப்பீங்கனு நினைச்சுல வந்தேன்…” என்று கிண்டலாகச் சொன்னான் பிரசன்னா.

“உனக்கு ரொம்பவும் தான் ஏத்தம் ஆகிப்போச்சுடா. மாமியாரும், மருமகளுமா இருந்தா எப்பவும் சண்டை மட்டும் தான் போடுவாங்களா என்ன? அப்படி எதுவும் நீ கனவு கண்டுகிட்டு இருந்தா அதை இப்பவே அழிச்சுடு. அதோட என் மருமகளுக்கு நான் ஐஸும் வைப்பேன், ஜூஸும் வைப்பேன். அதில் உனக்கு ஏன்டா பொறாமை?” என்றார்.

“நீங்க ஐஸ் வச்சா என் பொண்டாட்டிக்கு இல்லமா ஜலதோஷம் பிடிக்கும். உங்களுக்கு என்ன கஷ்டம்? அவளுக்குத் தான் கஷ்டம்…” என்று அக்கறையாகச் சொன்னவன் மனைவியைப் பார்த்து மீண்டும் கண்சிமிட்டினான்.

‘என் மேல ரொம்பத் தான் அக்கறை…’ என்று நினைத்துக் கொண்டவள் உதட்டைச் சுழித்துக் காட்டினாள்.

அதைக் கண்டு கொண்டவனின் கண்கள் குறும்பில் ஜொலித்தன.

“என் மருமகளுக்கு ஜலதோஷம் பிடிச்சா நான் கசாயம் போட்டுக் கொடுத்துச் சரியாக்கி விட்டுருவேன். அதனால் அதைப்பற்றி நீ கவலைப்படாதே!” என்று மகனுக்குச் சரியாகப் பேசிக் கொண்டிருந்தார் ராதா.

“என்ன டாக்டர் நான் இருக்கும் போது கசாயமா?” என்று அதீத வியப்பை பிரசன்னா காட்ட,

“டாக்டர் உனக்கே நான் கசாயம் தான்டா கொடுப்பேன். ரொம்பத் தான் வாயைப் பிளக்குறான். போடா டேய்…” என்று கையை வீசி சொன்னார் ராதா.

அன்னையும், மகனும் வழக்காடிக் கொண்டிருக்க இருவரையும் உதட்டில் உறைந்த புன்சிரிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தாள் வசுந்தரா.

அதே நேரத்தில் “இங்க என்ன சண்டை? இங்க என்ன சண்டை?” என்று கேட்டுக் கொண்டே அங்கே வந்தான் யாதவ்.

அதற்கு மேலும் அந்த இடத்தில் பேச்சிற்குப் பஞ்சமா என்ன? அன்னையும், இரண்டு மகன்களும் சேர்ந்து மாற்றி மாற்றிப் பேசிக் கலாய்த்துக் கொண்டிருக்க வசுந்தராவிற்கு அவர்களின் பேச்சைக் கேட்டுச் சிரிப்பு வந்தது.

“அண்ணனுக்கும், தம்பிக்கும் வேலை எதுவும் இல்லையாடா? நாங்க சாதாரணமா பேசிக் கொண்டிருப்பதைக் கூடச் சண்டைன்னு சொல்லி நாரதர் வேலை பார்க்கக் கிளம்பி வர்றீங்க…” என்று சடைத்துக் கொண்டார் ராதா.

“அச்சோ! அப்போ சண்டை இல்லையா?” என்று யாதவ் அதிர்வுடன் கேட்டான்.

“நீ என்னடா ஓவர் ரியாக்ஷன் காட்டுற?” என்று தம்பியின் தோளின் மீது கையைப் போட்டவாறு கேட்டான் பிரசன்னா.

“பின்ன என்ன அண்ணாரே… இந்த வீட்டில் ஒரு வக்கீல் இருக்கேன். ஏதாவது சண்டை இருந்தால் தானே வக்கீலா களத்தில் இறங்கி வாதம், பிரதிவாதம் கேட்க முடியும். அதுக்கு வழி இல்லாம சண்டை இல்லைனு சொல்லி அம்மா என் வக்கீல் தொழிலுக்கு ஆப்பு அடிச்சுட்டாங்களே…” என்று போலியாகக் கண்களைத் துடைத்துக் கொண்டான்.

“நீ ஒன்னும் தப்பா நினைச்சுக்காதே வசுமா. அண்ணனுக்கும், தம்பிக்கும் அவங்க படிப்பை டமாரம் அடிச்சே ஆகணும். அதனால அப்பப்போ இப்படித்தான் நான் டாக்டர், நான் வக்கீல்னு பெருமைப் பேசிக்கிட்டு திரிவானுங்க…” என்று இவர்களின் பேச்சைக் கேட்டுச் சிரித்துக் கொண்டிருந்த வசுந்தராவிடம் இரு மகன்களையும் பற்றி நக்கலாகச் சொன்னார் ராதா.

“என்னமா இப்படிச் சொல்லிட்டீங்க? நாங்க கஷ்டப்பட்டுப் படிச்சுப் பட்டம் வாங்கின படிப்பும்மா. அதை நீங்க பெருமையா சொல்லணும். ஆனா நீங்கதான் சொல்ல மாட்டேங்கிறீங்களே. அதான் உங்களுக்குப் பதிலா நாங்களே சொல்லிக்கிறோம்…” என்று சோகம் போலச் சொல்லி நீலிக் கண்ணீர் வடித்தான் யாதவ்.

“அதானே? சொல்ல வேண்டிய நீங்களே சொல்லலைன்னா நாங்க என்ன பண்ணுவது? அதுதான் எங்களுக்கு நாங்களே பாராட்டிக்கிறோம்…” என்று தம்பியுடன் ஒத்து ஊதினான் பிரசன்னா.

“ஆமா அண்ணாரே… இந்த வீட்டில் நீதி இல்லை… நியாயம் இல்லை… பெருமையும் இல்லை…” போர்க்கொடி தூக்குபவன் போல முழக்கமிட்டான் யாதவ்.

“ஆமாடா ஆமா. எதுவுமே இல்லை. ரொம்ப அநியாயம் டா யாதவா…” என்று பிரசன்னாவும் பின் பாட்டுப் பாடினான்.

அவர்களின் பேச்சைக் கேட்டு விரிந்த சிரிப்பை வெளியிட்டாள் வசுந்தரா.

தம்பியிடம் பேசிக் கொண்டிருந்தாலும் பிரசன்னாவின் கண்கள் மனைவியின் புன்னகை நிறைந்த முகத்தை ரசனையுடன் தழுவி மீண்டது.

அந்தப் பார்வையைக் கண்ட வசுந்தரா ‘அங்க பேசும் போது இங்கே என்ன பார்வை வேண்டி கிடக்கு?’ என்று உள்ளுக்குள் அலுத்துக் கொண்டாள்.

“போதும் டா! வாயாடி வாலுங்களா. போய்க் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுங்க. நான் இந்த வேலையை முடிச்சிட்டு வர்றேன்…” என்று ராதா மகன்கள் இருவரையும் பொய்க் கோபத்துடன் விரட்ட, இருவரும் சிரித்துக்கொண்டே அவரவர் அறைக்குச் சென்றனர்.

அவர்கள் சென்றதும் மாமியாருடன் மீதி வேலையைத் தொடர்ந்தாள் வசுந்தரா.

அன்று வீட்டில் வேலை செய்யும் பெண்மணி விடுமுறை எடுத்திருந்தார். அதனால் ராதாவும், வசுந்தராவுமே வீட்டு வேலைகளைக் கவனித்துக் கொண்டிருந்தனர்.

பிரசன்னாவும், வசுந்தராவும் அவர்களுக்குள் விலகி இருப்பது இன்னும் வீட்டினரின் பார்வை வரை வரவில்லை.

மகன் மனைவியுடன் உணவைப் பரிமாறிக் கொள்வதையும், அவளுடன் நேரம் செலவழிக்க வேலைக்குச் செல்லும்போதும் உடன் அழைத்துச் செல்வதையும், வீட்டிலிருக்கும் நேரத்தையும் அவளுடனே கழிக்க விரும்புவதையும் கண்ட அந்தப் பெற்றோருக்கு மகன் மகிழ்ச்சியான திருமண வாழ்க்கை வாழ்கிறான் என்ற எண்ணத்தைத்தான் ஏற்படுத்தியிருந்தது.

அதோடு பிரசன்னா, வசுந்தராவின் பிணக்கம் எல்லாம் அவர்களின் அறைக்குள் மட்டுமே இருந்தது. அறையை விட்டு வெளியே வந்து விட்டால் அன்னியோன்யமான தம்பதிகள் போலத்தான் நடந்து கொள்வார்கள்.

அவன் அவளைத் ‘தாரா’ என்றழைத்தது அனைவருக்கும் தெரியும் என்பதால் இப்போது ‘வசு’ என்று அழைப்பதைக் கூட மற்றவர்கள் முன்‌ முடிந்தவரை தவிர்த்து விடுவான். அதனால் அழைப்பின் வேறுபாடும் அவர்களின் கண்களுக்குச் சிக்கவில்லை.

அதுமட்டுமில்லாமல் இருவரும் அவ்வப்போது ஒருவரை ஒருவர் பார்வையால் தழுவிக் கொள்வதும், எந்த வித்தியாசமும் இல்லாமல் சாதாரணமாகப் பேசிப் பழகிக் கொள்வதும் அந்த வீட்டில் இருந்த மற்றவர்களுக்கு அவர்கள் இன்னும் தம்பதிகளாக வாழவில்லை என்பதை மறைக்க உதவப் போதுமானதாக இருந்தது.

தன் அத்தையுடன் வேலைகளை எல்லாம் பார்த்து முடித்த வசுந்தரா தங்கள் அறைக்கு ஓய்வெடுக்கச் சென்றாள்.

அவள் அறைக்குள் நுழைந்த போது ஓய்வு எடுப்பதற்காக முன்பே அறைக்கு வந்த கணவன் படுக்கையில் இல்லை என்றதும் யோசனையுடன் அவனைத் தேடினாள்.

அவளின் தேடலுக்குப் பதிலாகப் பால்கனியில் நின்றிருந்த கணவன் கண்களுக்குக் காணக் கிடைத்தான்.

‘படுக்காம அங்க போய் என்ன செய்றார்?’ என்று யோசித்துக் கொண்டே தங்கள் அறைக் கதவை மூடித் தாழிட்டாள்.

அந்தச் சப்தத்தில் பால்கனியில் நின்றிருந்தவனின் பார்வை அறைக்குள் திரும்பியது.

மனைவியை ஆழ்ந்த பார்வையுடன் நோக்கியவன் நிதானமான எட்டுக்கள் எடுத்து வைத்து அவளை நோக்கி நடந்து வந்தான்.

அங்கிருந்த படுக்கைக்கு நகரலாம் என்று நினைத்து ஓர் அடி முன்னால் எடுத்து வைத்த வசுந்தரா கணவனின் ஊடுருவும் பார்வையின் தாக்கத்தால் மேலும் நகர முடியாமல் அப்படியே உறைந்து நின்றாள். அவனுடைய ஆழ்ந்த பார்வையும், நிதானமான நடையும் அவளைத் தயங்கித் தடுமாற வைத்தது.

அவன் முன்னால் நெருங்கி வர வர தன்னிச்சையாக வசுந்தராவின் கால்கள் பின்னடைந்ததின் விளைவாக அவள் சாற்றிய கதவின் மீதே மோதி நின்றாள்.

‘என்னாச்சு இவருக்கு? எதுக்கு இப்படிப் பார்க்கிறார்?’ என்று தோன்றினாலும் தானும் அவனின் பார்வையைச் சளைக்காமல் எதிர்கொண்டாள். ஆனால் அதுவும் சில நொடிகளே!

எப்பொழுதும் அவனின் பார்வையைத் தாங்கி நிற்பவள் இப்பொழுது அவனின் கண்களில் தெரிந்த காதலில் கட்டுண்டுப் போய் அவளின் கண்கள் தன்னால் தாழ்ந்து போயின.

அந்தக் காதல் ஏற்படுத்திய தாக்கம் அவள் வதனத்தில் நாணப் பூக்களையும் பூக்க வைக்க, முதல்முறையாக அவனின் முன் நாணத்துடன் நின்றாள் வசுந்தரா.

இதற்கு முன்பும் சில முறை அவனின் பார்வையின் வீச்சைத் தாங்க முடியாமல் பார்வையைத் தழைத்திருக்கிறாள் தான்.

ஆனால் அப்பொழுதெல்லாம் பிரசன்னாவின் கண்களில் ஒருவித ஆராயும் தன்மை இருக்கும். அந்த ஆராயும் பார்வை அவளுக்கு இருந்த குற்றவுணர்வுவைத் தலைதூக்க வைக்கும் என்பதால் அதன் தாக்கத்தால் பார்வையைத் தழைத்துக் கொள்வாள். ஆனால் இப்பொழுதோ அவனின் பார்வை முழுக்க முழுக்கக் காதல் பார்வையாக மட்டுமே இருந்தது.

அந்தக் காதல் அவளிடமும் பிரதிபலிப்பது போல் நாணத்தை வெளிப்படுத்தினாள். மனைவியின் முகத்தில் முதல் முறையாக நாணப் பூக்களைக் கண்ட பிரசன்னாவின் புருவங்கள் வியப்புடன் ஏறி இறங்கின!

அவனை நேராகப் பார்க்க முடியாமல் ஓரவிழிகளால் கண்டவள் அவனின் ஏறி இறங்கிய புருவத்தைக் கண்டு ‘இதை ஒன்றைக் கற்று வைத்திருக்கிறார்!’ என்று அலுத்துக் கொண்டாள்.

ஆனாலும் ‘அவர் அப்படிச் செய்வது நன்றாகத்தான் இருக்கிறது…’ என்று ரசித்தும் கொண்டாள்.

மனைவியை நெருங்கிய பிரசன்னா கதவில் சாய்ந்து நின்றிருந்தவளின் இருபுறமும் தன் கைகளை அழுத்தமாக ஊன்றி நின்று அவளை ஊடுருவும் பார்வை பார்த்தான்.

‘என்ன இது இப்படியெல்லாம் நிக்கிறாங்க?’ என்ற கேள்வி மனதிற்குள் ஓடினாலும் லேசான படபடப்புடன் அப்படியே நின்றிருந்தாள் வசுந்தரா.

“என்ன பத்தி அடிக்கடி மனசுக்குள்ள கவுண்டர் கொடுத்துக்கிறீயே… என்ன அது?” என்று அவளின் படபடப்பை ரசனையுடன் பார்த்துக் கொண்டே கேட்டான் பிரசன்னா.

‘ஊப்! இதைக் கேட்க தான் இத்தனை பாடா?’ என்று உள்ளுக்குள் அவன் அறியாமல் பெருமூச்சு விட்டுக்கொண்டவள் மெல்ல நிமிர்ந்து அவனின் முகத்தைப் பார்த்து “சொல்ல முடியாது…” என்றாள் பிடிவாதமாக.

“சொல்ல முடியாதா? ஏன்?” என்று அவன் இன்னும் வியப்புடன் கேட்க, “அது அப்படித்தான்…” என்றாள்.

“அப்படித்தானா? ஏன் அப்படி?” நீ சொல்லாமல் விடமாட்டேன் என்னும் விதமாய் அவனின் கேள்வி வேகமாக வந்து விழுந்தது.

“அப்படித்தானா? அப்படியே தான்! இதுக்கு மேல சொல்ல ஒன்னுமில்லை…” என்று பிடிவாதமாகச் சொன்னவளின் உதட்டோரம் லேசாகச் சிரிப்பில் துடித்தது.

“பிடிவாதம்! ஹ்ம்ம்…” என்று இழுத்தவன் அவளுக்கு அணைப்போட்டிருந்த ஒரு கையை எடுத்துத் துடித்துக் கொண்டிருந்த அவளின் உதட்டோரத்தை ஒற்றை விரலால் மென்மையாக வருடினான்.

அவனின் வருடலில் அவளின் உடலில் சிலிர்ப்பு ஓடியது.

அதனை உணர்ந்தவனுக்கு இன்னும் அவளைச் சீண்டிப் பார்க்கும் ஆவல் வர, உதட்டின் ஓரத்தில் இருந்த தன் விரலை மெதுவாக நகர்த்தி அவளின் உதடுகள் முழுவதும் வலம் வர விட்டான்.

அவனின் சீண்டலில் அவளின் உதடுகள் நடுங்கவே ஆரம்பித்து விட்டன!

அவளின் நிலையை உணர்ந்தாலும் தன் கையை விலக்கிக் கொள்ளாதவன், “நான் உன்கிட்ட ஒன்னு கேட்கணுமே…” என்றான்.

அவனின் தொடுகையில் தனக்குள் ஏற்படும் ரசாயன மாற்றங்களை மறைக்கப் போராடிக் கொண்டே, ‘என்ன?’ என்பது போல் அவனைப் பார்த்தாள்.

அவளின் கண்களைக் கூரிய விழிகளால் பார்த்துக் கொண்டே, “எங்க அம்மா, அப்பாகிட்ட நல்ல மருமகள்னு பேரு வாங்கிட்ட. சந்தோசம்! ஆனா…” என்று இழுத்தவன் பேச்சை நிறுத்திப் பின், “என்கிட்ட எப்போ நல்ல மனைவின்னு பேர் வாங்கப் போற?” என்று நிதானமாக ஒவ்வொரு வார்த்தைக்கும் அழுத்தம் கொடுத்து, அவள் அப்போது தன்னைத் தானே கேட்டுக் கொண்ட கேள்வியை வாய் விட்டுக் கேட்டிருந்தான் பிரசன்னா.

தனக்குள் கேட்டுக் கொண்ட அதே கேள்வியைக் கணவனும் கேட்கவும், தங்களுக்குள் ஏற்பட்ட ஒற்றுமையை வியப்பாக நினைத்துக் கொண்டே “அது என் கையில் மட்டும் இல்லை…” என்றாள்.

“பின்ன?” அவன் வழக்கம் போல் புருவம் உயர்த்திக் கேட்க,

“என் கணவனான உங்கள் கையில் தான் அது இருக்கு…” என்று அவன் கண்ணோடு கண்கள் கலந்து கொண்டே சொன்னவள் குரலில் ‘நீ தான் என்னை விலக்கி வைத்திருக்கிறாய்’ என்ற தொனி இருந்ததோ?

அவளின் பதிலில் இப்போது அவனின் உதட்டோரம் துடித்தது.

“ஆஹான்!” என்று சொன்னவனின் குரலில் என்ன இருந்தது? அவளால் அனுமானிக்க முடியவில்லை.

ஆனால் அவன் சொன்ன ‘ஆஹான்!’ என்பற்கான அர்த்தத்தைக் கூடிய விரைவில் செயலிலேயே காட்டினான் பிரசன்னா.