என்னுள் யாவும் நீயாக! – 20
Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels
அத்தியாயம் - 20
வசுந்தரா யோசனையுடன் இருந்த போதே பிரசன்னாவின் வீட்டிலிருந்து அனைவரும் வந்துவிட, அவளின் யோசனை அப்படியே நின்று போனது.
சாப்பிடும் நேரத்திற்குச் சரியாக வந்து நிற்க கூடாது என்று முன்பே வந்திருந்தனர். அவர்களை வரவேற்று அவர்களுடன் பேசிக் கொண்டிருந்தாலும் வசுந்தராவிடம் முன்பிருந்த உற்சாகம் குறைந்து விட்டது.
தன் யோசனை வெளியே தெரியாத வண்ணம் அவள் தன் முகப்பாவனையை மாற்றி இருந்தாலும் அவளிடம் தெரிந்த மாற்றத்தைக் கண்டு கொண்ட பிரசன்னா கூர்மையான பார்வையுடன் மனைவியை அளப்பது போல் பார்த்தான்.
சற்றுநேரம் கவனித்திருப்பான். பின்பு அவளை ஆராயும் பார்வையை விட்டுவிட்டு யாரும் அறியாத வண்ணம் அலட்சியமாகத் தோளைக் குலுக்கி விட்டுக்கொண்டான்.
கணவன் தன்னைக் கூர்ந்து பார்த்ததைக் கூடக் கவனிக்கும் நிலையில் வசுந்தரா இல்லை.
ஆண்கள் அனைவரும் சுற்றி அமர்ந்து நாட்டுநடப்புகளைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்க, பெண்கள் விருந்திற்கான ஏற்பாடுகளைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.
கல்பனா சிரத்தை எடுத்து நிறைய உணவு வகைகளைச் செய்து விருந்து படைக்க ஏற்பாடு செய்திருந்தார்.
சமையல் ஆள் வேறு உதவி கொண்டிருக்க, வேலைகள் விரைவிலேயே முடிந்து அனைத்தும் மேஜையின் மீது எடுத்து வைக்கப்பட்டன.
மதியம் பன்னிரெண்டரை மணிக்கே அனைத்து வேலைகளும் முடிந்திருக்க, “ஒரு மணிக்கு மேலே சாப்பிடுவோம். கொஞ்ச நேரம் உட்காருங்க அத்தை…” என்ற பிரசன்னா “மதியம் சாப்பிட்டு விட்டு கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துட்டு, ஈவ்னிங் போல நாம எல்லாரும் வெளியில் போகலாமா? என்ன சொல்றீங்க?” என்று அனைவரிடமும் கேட்டான்.
“நீயும், வசுந்தராவும் தனியா போனாலும் பரவாயில்லை. எங்களை ஏன் கூப்பிடுற?” என்று கேட்டார் ராதா.
“நாங்க வெளியே போகணும் என்று நினைத்தால் தனியா எப்ப வேணும் என்றாலும் போகலாம்மா. ஆனா நாம எல்லோரும் இந்த மாதிரி ஒரே நேரத்தில் கூட முடியாது. ஆளுக்கு ஒரு வேலை வந்து, ஆளுக்கு ஒரு பக்கம் ஓடுவோம். நாம சேர்ந்து இருக்கும்போது எங்கேயாவது போயிட்டு வரலாம். என்ன சொல்றீங்க?” என்று மீண்டும் கேட்டான்.
“நல்ல ஐடியா அண்ணா, போகலாம்…” என்று முதல் ஆளாகச் சம்மதம் சொல்லியிருந்தான் யாதவ்.
“எனக்கும் ஓகே மச்சான்…” என்றான் சரண்.
சிறியவர்களில் கமலேஷ் மட்டும் தயங்க “என்னாச்சு அண்ணா?” என்று கேட்டான் பிரசன்னா.
“காஞ்சிக்காகத் தான் யோசிக்கிறேன் பிரசன்னா. நேத்து தான் பாண்டியிலிருந்து இங்கே வரை ட்ராவல் பண்ணினோம். இன்னைக்கும் வெளியே சுத்தினால் அவளுக்குச் சேராம போயிடுமோன்னு யோசனையா இருக்கு…” என்றான் கமலேஷ்.
“என்ன அண்ணா, டாக்டர் சகலையைக் கூட வச்சுக்கிட்டே பயப்படுறீங்க…” என்றான் யாதவ்.
“நான் கூட இருந்தாலும் என்னடா யாதவ்? வலினு வந்தால் அதை அண்ணி தானே தாங்கியாகணும். அண்ணா யோசிக்கிறதிலும் நியாயம் இருக்கு…” என்ற பிரசன்னா காஞ்சனாவின் புறம் திரும்பினான்.
“நேத்து ட்ராவல் பண்ணியதில் எதுவும் ஹெல்த் இஸ்ஷு வந்ததா அண்ணி?” என்று கேட்டாள்.
“கொஞ்சம் டயர்டா இருந்தது. சுடு தண்ணியில் குளிச்சுட்டு தூங்கின பிறகு சரியாகிடுச்சு…” என்றாள்.
“இப்போ எதுவும் டயர்டா ஃபீல் பண்றீங்களா?”
“இல்ல… நல்லா இருக்கேன். எனக்கும் வெளியே போகணும்னு ஆசையாத்தான் இருக்கு போகலாம்…” என்று பிரசன்னாவிடம் பேசிக் கொண்டிருந்தாலும் திரும்பிக் கணவனைப் பார்த்தே சொன்னாள்.
“அப்போ பிரச்சினை இல்லை அண்ணா…” என்று பிரசன்னா முடிக்கும் முன்பே மனைவியின் ஆசையைப் பார்த்து ‘சரி’ என்று தலையை ஆட்டியிருந்தான் கமலேஷ்.
பெரியவர்களும் சம்மதம் சொல்லிவிட, மதிய விருந்தை முடித்து விட்டு, சிறிது நேர ஓய்விற்குப் பிறகு கிளம்ப முடிவெடுத்தார்கள்.
விருந்து முடிந்ததும் அனைவரும் ஓய்வெடுக்க ஏற்பாடு செய்த கல்பனா, “நீ மாப்பிள்ளையை உன் ரூமுக்கு கூட்டிட்டு போ வசு…” என்று மகளிடம் சொன்னார்.
காலையில் வந்ததிலிருந்து இன்னும் பிரசன்னா மனைவியின் அறைக்குச் செல்லவில்லை. அனைவரும் கீழே பேசிக் கொண்டிருந்ததால் கீழே உள்ள ஓர் அறையை உபயோகப்படுத்திக் கொண்டான்.
இப்போது மனைவியுடன் அவளின் அறைக்குள் சென்றவனுக்குத் தங்கள் திருமணமான அன்று இரவு நடந்த அனைத்தும் நினைவடுக்கில் வந்தன.
அதில் அவனின் முகம் அவ்வளவு நேரம் இருந்த இலகுத்தன்மையைத் தொலைக்க முயன்றது.
அதே நேரம் வசுந்தராவும் அந்த நினைவில் தான் இருந்தாள்.
அன்றைய நினைவும், கணவனின் ஆசையும், காட்டிய கோபமும், வெறுமையான பார்வையும் ஞாபகத்தில் வர, தவிப்புடன் அவனின் முகத்தைப் பார்த்தாள்.
ஆனால் அவளின் தவிப்பிற்கு நேர்மாறாகப் பிரசன்னாவின் முகம் இப்போது இயல்பாகவே இருந்தது.
அவன் தான், தான் எடுத்து வைத்திருந்த முடிவின் படி தன் மனதைத் தேற்றிக்கொண்டானே!
அதனால் மனைவியை இயல்பாகவே அவனால் எதிர்கொள்ள முடிந்தது. அவன் இயல்பாக இருக்கவும் தான் வசுந்தராவிற்குப் போன மூச்சுத் திரும்பி வந்தது போல் இருந்தது.
ஏனோ திருமணம் முடிந்த பிறகு என்றும் இல்லாமல் இன்று மனது இலகுவாக இருப்பது போல் உணர்ந்தவள் படுக்கையில் தனக்கு முதுகைக் காட்டிப் படுத்திருந்த கணவனையே பார்த்தாள்.
வசுந்தரா பெற்றோருக்காகத் திருமணம் செய்யச் சம்மதித்துத் திருமணம் முடித்துக் கொண்டாலும் அது அவளின் முழு மனதோடு இல்லை தான்.
கைப்பிடிப்பான் என்று காதலித்தவன் இன்னொருத்தியைத் திருமணம் செய்து கொண்ட பிறகு அவனை முழு மூச்சாக மறக்க நினைத்தாள்.
இன்னொருத்தியின் கணவன் என்பதே அவனை அவளின் நினைவுகளை விட்டுத் தள்ளி நிறுத்த அவளுக்குப் போதுமானதாக இருந்தது.
ஆனாலும் மனதின் ஒரு மூலையில் ‘தான் ஏற்கனவே ஒருவனைக் காதலித்தவள்’ என்ற எண்ணம் அழுத்தமாகப் பதிந்து போக, அந்த எண்ணம் அவளின் மனதில் ஒரு வித உறுத்தலை உருவாக்கி வைத்திருந்தது.
பிரசன்னாவை உதட்டளவில் பிடித்திருப்பதாகச் சொல்லி திருமணம் செய்து கொண்டாலும் அவனை முழுமையாக இன்னும் அவளின் மனது கணவனாக ஏற்றுக் கொள்ளவில்லை.
அவளின் உறுத்தலும், குற்ற உணர்ச்சியும் அவளை ஏற்றுக்கொள்ள விடவில்லை.
அப்படி இருந்தும் முதலிரவில் கணவனின் வேதனையான முகத்தைப் பார்த்து ஏதோ ஒரு வேகத்தில் மனைவியாக வாழத் தயார் என்று சொல்லிவிட்டாள்.
சொன்ன பிறகு தான் தன் வாயில் இருந்து என்ன வார்த்தைகள் வந்தது என்றே அவளால் கிரகிக்க முடிந்தது.
‘உன் காதல் விஷயத்தையும் சொல்லிவிட்டு மனைவியாகவும் வாழத் தயார் என்று என்ன தைரியத்தில் சொன்னாய் வசுந்தரா?’ என்று அவளின் மனமே அவளை இடிந்துரைத்தது.
ஆனால் கொட்டிய வார்த்தைகளை அள்ள முடியாதே!
‘சொல்லி விட்ட வார்த்தையில் இருந்து பின் வாங்கவும் முடியாது வசுந்தரா’ என்று மனம் மேலும் எடுத்துச் சொல்ல, கணவன் என்ன முடிவெடுத்தாலும் சம்மதம் தான் என்று தன்னைத் தானே தேற்றிக் கொள்ள முயன்றாள்.
ஆனாலும் பிரசன்னா கணவனாக அவளை அணுகி இருந்தால் அதுவும் அவளுக்கு இன்னும் குற்றவுணர்ச்சியைத் தான் தந்திருக்கும்.
அவனை முழுமனதோடு கணவனாக ஏற்றுக்கொள்ளாமல் சொல்லிவிட்ட வார்த்தைக்காகத் தாம்பத்தியத்தில் ஈடுபட்டிருந்தால் அது ஒரு நல்ல தாம்பத்தியமே இல்லையே! என்று அவளின் உள்ளுணர்வு அவளைக் குத்திக் குடைந்தது.
ஆனால் அவளை மேலும் குத்திக் குடைய விடாமல் பிரசன்னா அவளிடம் கோபத்தைக் காட்ட, அவளுக்கு அதில் நிம்மதியே உண்டானது.
அன்று இரவு பிரசன்னா அவளைத் தள்ளி நிறுத்தியது ஒருவகையில் அவளுக்குப் பெரும் மனப் போராட்டத்தில் இருந்து தப்பிக்கும் உணர்வைத் தான் தந்தது.
அந்த உணர்வை அவளுக்குத் தந்ததற்காகவே பிரசன்னா அவள் மனதில் கணவனாக முதல் தடத்தைப் பதித்திருந்தான் என்பதை அவள் அறியவில்லை.
அடுத்ததாக அவளின் காதல் விஷயம் கேள்விப்பட்டுக் கோபப்பட்டாலும் அவ்வப்போது குத்திப் பேசினாலும் அவளை வக்கிரமாக நடத்தாதது… தங்கள் திருமண வாழ்க்கையை ஏற்றுக் கொண்டு அதன்படி நாம் தம்பதிகள் என்ற நிலை மாறாது என்று அவன் சொன்னது அவளுக்குப் பிடித்திருந்தது.
உலகத்தில் எத்தனையோ விஷயங்கள் சர்வ சாதாரணமாக நடக்கின்றன. வேறொரு ஆண்மகனைச் சாதாரணமாக ஒரு முறை திரும்பிப் பார்த்து விட்டாலே பெண்களைச் சந்தேகக் கண்ணுடன் பார்த்துக் கொடுமைப்படுத்தும் கணவன்மார்கள் எத்தனையோ பேர் உண்டு.
அடுத்த ஆண்களிடம் சாதாரணமாகப் பெண் பேசி விட்டாலே அவர்கள் இருவரையும் இணைத்துப் பேசிக் கொடுமைப்படுத்தும் கணவர்மார்கள் கூட எத்தனையோ பேர் உண்டு.
இதுபோல் விதவிதமாகப் பெண்களைச் சந்தேகக் கண்ணுடன் பார்த்துக் கொடுமைப்படுத்திச் சித்ரவதை செய்யும் கணவர்மார்கள் உண்டு.
அப்படிப்பட்ட உலகத்தில், தான் வேறு ஒருவரைக் காதலித்தேன் என்று சொன்ன பிறகு அவன் எந்த மாதிரி நடந்து கொள்வானோ என்று அவளுக்குப் பயமாகவே இருந்தது. ஆனாலும் அந்தப் பயத்தை மீறி அவனிடம் விஷயத்தைத் துணிந்து சொன்னாள்.
ஆனால் அதைச் சொல்லும் முன் என்ன பாடுபட்டாள் என்று அவளுக்குத் தான் தெரியும்.
ஒருவேளை கணவனும் வக்கிர குணமாக இருந்து தன்னைச் சித்திரவதை செய்வானோ என்று கூட ஆரம்பத்தில் நினைத்திருக்கிறாள்.
ஆனால் போகப் போக ஏதோ ஒரு நம்பிக்கை பிரசன்னா அப்படி நடந்து கொள்ள மாட்டான் என்று தோன்ற வைத்தது.
அவளின் நம்பிக்கையைப் பொய்த்துப் போகவிடாமல் பிரசன்னாவும் அந்தக் கணவர்மார்களில் ஒருவனாக இல்லாமல் அவனின் ஏமாற்றத்தை மட்டுமே கோபமாக வெளியிட்டான்.
அவனின் அந்தக் குணம் வசுந்தராவின் மனதில் இன்னொரு தடத்தைப் பதித்தது!
உங்கள் பெண் இன்னொருவனைக் காதலித்தாளே என்று கணவன் தன் பெற்றோரைச் சாடாமல் இருந்தது. அவனின் பெற்றோரிடம் அவளைப் பற்றி எதுவும் சொல்லாமல் ரகசியம் காத்தது என இன்னொரு தடத்தை அவளின் மனதில் பதிய உதவி செய்தது.
அடுத்ததாக நேற்று அப்படியே மொத்தமாக மாறிப்போன பிரசன்னாவைக் கண்டாள்.
நேற்றிலிருந்து அவன் பார்த்த பார்வை, பேசிய பேச்சு, செய்த செய்கைகள், உணவுப் பரிமாற்றம் அனைத்தும் ஒரு பெரிய தடத்தை அவளின் இதயத்தில் பதிக்கப் போதுமானதாக இருந்தன.
நேற்றிலிருந்து அவன் ஏன் அப்படி மாறினான்? எதற்காக மாறினான்? வேறு எதுவும் காரணம் உண்டா? என்று எந்தக் காரணமுமே அவளுக்குத் தெரியாது.
ஆனாலும் அவளின் மனதை அவன் அசைத்துப் பார்த்திருந்தான்.
ஒரு பெண்ணின் மனதில் இடம் பிடிக்கப் பெரிது பெரிதாக நகையோ, பொருளோ, இடமோ தான் வாங்கிக் கொடுக்க வேண்டும் என்பது இல்லை.
சில சின்ன சின்ன அன்பு செய்கையால் கூடப் பெண்ணின் மனதில் இடம் பிடிக்க முடியும்.
தற்போதைக்கு வசுந்தராவின் மனமென்னும் பெட்டகத்தைத் திறக்கும் சாவியை உள்ளே நுழைத்திருந்தான் பிரசன்னா.
அதன் வெளிப்பாடாகத் தான் முதல் முறையாக அவனை உரிமையோடு அழைத்தும் இருந்தாள்.
கணவன் தன் மனதில் தடம் பதிக்க ஆரம்பித்து விட்டான் என்று உணராமல் அவனின் அருகில் படுத்து நிம்மதியுடன் உறங்கிப் போனாள் வசுந்தரா.
சிறிது நேரம் ஓய்வு எடுத்தவர்கள் மாலை ஆரம்பித்த நேரத்தில் வெளியே கிளம்பிச் சென்றனர்.
முதலில் ஒரு கோவிலுக்குச் சென்றவர்கள், பின் கடற்கரைக்குச் சென்றனர்.
அனைவரும் ஒரே குடும்பமாக வெளியே சென்றது அனைவருக்கும் உற்சாகத்தைத் தந்தது.
கடற்கரைக்குச் சென்றதும் பெரியவர்கள் கால்களை மட்டும் நனைத்து விட்டுக் கரையில் ஒரு ஓரமாக அமர்ந்து கொண்டனர்.
காஞ்சனாவும் அவர்களுடன் அமர்ந்து கொள்ள, கமலேஷும் மனைவியின் அருகில் அமர்ந்து கொண்டான்.
அங்கே ஒரு பந்தை வாங்கி யாதவ் மயூரியுடன் விளையாடிக் கொண்டிருந்தான். சரணும், தீபாவும் அவனுடன் சேர்ந்து தங்கள் குழந்தையுடன் விளையாடிக் கொண்டிருந்தனர்.
புதுமண தம்பதிகளுக்குத் தனிமை கொடுக்க நினைத்து மற்றவர்கள் விலகிக் கொள்ள, பிரசன்னாவும், வசுந்தராவும் கடலில் கால்களை நனைத்தபடி நின்றிருந்தனர்.
அவ்வளவு நேரம் அனைவரும் கூட இருந்ததால் தன் யோசனையில் இருந்து விலகி வந்திருந்த வசுந்தரா, இப்போது சற்றுத் தனிமை கிடைக்கவும் அவளின் மனம் சஞ்சலமடைய ஆரம்பித்தது.
மெதுவாகத் தன் அருகில் சிறிது இடைவெளி விட்டு நின்றிருந்த கணவனைப் பார்க்க, அவன் கடல் அலைகளை இலக்கில்லாமல் வெறித்தபடி நின்றிருந்தான்.
அப்போது அவனின் கண்களில் தெரிந்த வெறுமையைக் கண்ட வசுந்தராவிற்கு மனம் வலித்தது.
‘எவ்வளவு ஆசைகள், எதிர்பார்ப்புகளுடன் திருமணத்திற்குத் தயாராகியிருப்பான். ஆனால் அவனின் ஆசைகளையும், எதிர்பார்ப்பையும் அழித்து விட்டேனோ? நான் அவனைத் திருமணமே செய்திருக்கக் கூடாதோ?’ என்று ஏதேதோ நினைத்துக் குழம்பிக் கொண்டாள் வசுந்தரா.
ஏனோ கணவனின் கண்களில் தெரிந்த வெறுமையை அவளால் கண் கொண்டு பார்க்க முடியவில்லை.
மனைவியின் பார்வை தன் மேல் இருப்பதை உணர்ந்தவன் போலச் சட்டென்று அவளின் புறம் திரும்பினான் பிரசன்னா.
அவன் பார்த்து விட்டதைக் கண்டு அவள் சுதாரிக்கும் முன், “என்ன?” என்று கேட்டான்.
என்ன சொல்லுவாள்? தான் நினைத்ததைச் சொல்ல முடியாமல் ‘ஒன்றுமில்லை’ என்று தலையை அசைத்தாள்.
அவளை அழுத்தமாகப் பார்த்தான் பிரசன்னா. அவனின் பார்வையை எதிர்கொள்ள முடியாமல் முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.
அவளையே சில நொடிகள் பார்த்த பிரசன்னா பின் மெல்ல அவளை நெருங்கி நின்று அவளின் கையை மென்மையாக பற்றிக் கொண்டான்.
திடீரெனக் கணவனின் கை ஸ்பரிசத்தை உணர்ந்து திடுக்கிட்டு அவனைப் பார்த்தாள்.
கையைப் பற்றிக் கொண்டவன் அதில் சிறு அழுத்தம் கொடுத்து “வா… கொஞ்ச நேரம் நாமும் மயூ கூட விளையாடலாம்…” என்று அழைத்து முன் நடக்க ஆரம்பிக்க, பிணைந்த கைகளில் இருந்த அழுத்தத்தில் தானும் அவனுக்கு இணையாக நடக்க ஆரம்பித்தாள்.
அன்றைக்கு ஊட்டியில் அவள் பயந்த போது மட்டும் தான் இப்படிக் கையைப் பிடித்திருந்தான். அவளும் அன்று பயத்தில் இருந்ததால் எதுவும் வித்தியாசம் உணரவில்லை.
இன்றோ அவனின் கைகளில் இருந்த வெட்பம் தன் கையின் வழியாக நுழைந்து தன்னுள்ளே ஊடுருவியது போல் உணர்ந்தாள்.
அந்த உணர்ச்சியைத் தாங்க முடியாமல் கையை விடுவித்துக் கொள்வோமா? என்று நினைத்தாள்.
ஆனால் அது அவனைக் காயப்படுத்தி விடுமோ என்று நினைத்தவள் அந்த முயற்சியைக் கைவிட்டாள்.
அதற்குள் குழந்தை விளையாடி கொண்டிருந்த இடம் வர, “மயூ குட்டி வாங்க மாமா, அத்தை கூட விளையாடலாம்…” என்று மனைவியின் கையை விட்டு குழந்தையைக் கைகளில் அள்ளிக் கொண்டான்.
அவ்வளவு நேரம் கையை விலக்கிக் கொள்ளலாமா என்று நினைத்த வசுந்தரா, இப்போது அவனே கையை விடவும் ஏமாற்றமாக உணர்ந்தாள்.
“யாதவ் நீ எல்லாருக்கும் சாப்பிட எதுவும் வேணுமானு கேட்டு வாங்கிக் கொடு. நீங்களும், தீபாவும் கொஞ்ச நேரம் உட்காருங்க மாப்பிள்ளை. மயூ பேபியை நாங்க பார்த்துக்கிறோம்…” என்று அவர்களை அனுப்பி வைத்தவன் மனைவியின் புறம் திரும்பினான்.
“அந்தப் பாலை எடுத்துப் போடு வசு. நானும் பேபியும் சூப்பரா கேட்ச் பிடிப்போம். என்னடா பேபி?” என்று குழந்தையைக் கொஞ்சிக் கொண்டே விளையாட தயாரானான்.
வசுந்தராவும் பந்தை எடுத்துப் போட, பிரசன்னாவும் குழந்தையுடன் கேட்ச் பிடித்தான்.
சிறிது நேரம் ஆட்டம் சுவாரசியமாகச் செல்ல, குழந்தையின் குதூகலம், பிரசன்னாவின் சிரிப்பு, இரண்டு பேரும் சேர்ந்து பந்தைப் பிடிக்கிறோம் என்று அவர்கள் செய்த ஆரவாரம் அனைத்தும் வசுந்தராவிடமும் உற்சாகத்தை வர வைத்திருந்தது.
அவளும் அவர்களுக்குச் சமமாக விளையாட ஆரம்பிக்க, அவளின் மனதின் சஞ்சலங்கள் எல்லாம் அப்போதைக்கு அவளை விட்டு விலகி நின்றன.
அவர் விளையாடிக் கொண்டிருக்கும் போதே அங்கே வந்த யாதவ், “அண்ணா நீ எப்பயும் சுண்டல் தானே சாப்பிடுவனு உனக்குச் சுண்டல் வாங்கிட்டு வந்திருக்கேன். சாப்பிடு…” என்று சுண்டலை நீட்டினான்.
“இருடா, கை கழுவிக்கிறோம்…” என்றவன் அவர்கள் கொண்டு வந்திருந்த தண்ணீரில் கை கழுவி விட்டு குழந்தைக்கும் கழுவி விட்டான்.
வசுந்தராவும் கை கழுவி விட்டு வர, “உங்களுக்கு என்ன வாங்கட்டும் அண்ணி?” என்று வசுந்தராவிடம் கேட்டான்.
“எனக்கு மிளகாய் பஜ்ஜி…”
“மிளகாய் பஜ்ஜி ஏற்கனவே நிறைய வாங்கியிருக்கேன் அண்ணி. இருங்க எடுத்துட்டு வர்றேன்…” என்றவன் அன்னையிடம் கொடுத்து வைத்திருந்ததில் இருந்து வாங்கிக் கொண்டு வந்து அவளிடம் கொடுத்து விட்டுச் சென்றான்.
அனைவரும் சிறிது தள்ளி அமர்ந்திருக்கப் பிரசன்னாவும், வசுந்தராவும் குழந்தையுடன் அங்கேயே அமர்ந்து கொண்டனர்.
அமர்ந்ததும் வசுந்தரா பஜ்ஜியை உண்ணப் போக, “என்ன பண்ற நீ?” என்று அதட்டினான் பிரசன்னா.