என்னுள் யாவும் நீயாக! – 2

அத்தியாயம் – 2

காலை ஏழு மணிக்கே பரபரப்பாகக் கிளம்பிக் கொண்டிருந்தாள் வசுந்தரா.

“இப்பத்தான் ஏழு மணி ஆகுது. அதுக்குள்ள ஏன் இவ்வளவு அவசரமா கிளம்பிப் போற வசு?” என்று சலித்துக்கொண்டே மகளுக்குத் தேவையானதைச் செய்து கொண்டிருந்தார் அவளின் அன்னை கல்பனா.

“கொஞ்சம் வேலை இருக்குமா. ஈவ்னிங்கும் லேட்டாத்தான் வருவேன்…” என்று அன்னையின் கண்களைச் சந்திக்காமல் குனிந்து கொண்டே அவருக்குப் பதிலுரைத்தாள்.

‘கூடிய சீக்கிரம் இப்படிப் பொய் சொல்றதுக்கு ஒரு முடிவு கட்டணும்…’ என்ற எண்ணம் அவளின் மனதில் ஓடிக்கொண்டிருந்தது.

அதே நேரம் கிருபாகரனின் நினைவும் அவளின் மனதின் ஓரம் குறுகுறுத்தது. அவனை நினைத்ததும் ஏதோ ஒரு வித உறுத்தல் மனதில் ஒட்டிக் கொண்டது.

அவன் முன்பு போல் இல்லை. அவனிடம் ஏதோ ஒரு மாற்றத்தை உணர்ந்திருந்தாள் வசுந்தரா. இருவரும் சேர்ந்து வெளியே சென்று வந்து ஒரு மாதம் கடந்திருந்தது.

சென்ற முறை வெளியே சந்தித்துக் கொண்டதற்குப் பின்னர்… அடுத்தச் சில நாட்கள் வழக்கம் போல அவளிடம் பேசிக் கொண்டிருந்தவன். அடுத்து வந்த நாட்களில் ஒரு விதமான இறுக்கத்துடன் நடமாடிக் கொண்டிருப்பதைக் கவனித்தாள்.

‘ஏன் அவன் அப்படிக் இருக்கின்றான்?’ என்ற கேள்வி அவளின் மனதைக் குடைந்து கொண்டிருந்தது.

கண்டிப்பாக வேலை விஷயமாக அப்படியிருக்க வாய்ப்பில்லை என்று அவளுக்கு நன்றாகத் தெரியும்.

‘அப்படியென்றால் தங்கள் காதல் விஷயம் தானோ?’ என்று தோன்ற அதையும் அவனிடமே நேரடியாகக் கேட்டு விட்டிருந்தாள்.

ஆனால் அதற்குச் சரியான பதில் சொல்லாமல் மழுப்பிக் கொண்டிருந்தான்.

இந்த நிலையில் நேற்றும், அதற்கு முந்தைய நாளும் விடுமுறை எடுத்துக் கொண்டிருந்தவன் இன்று அவளிடம் தனியாகப் பேசவேண்டும் என்று தாங்கள் வழக்கமாகச் சந்திக்கும் பூங்காவிற்கு மாலை அளவில் வரச் சொல்லியிருந்தான்.

இன்று கூட அவன் விடுமுறையில் தான் இருந்தான். ஆனால் அவளைச் சந்திக்க மட்டுமே மாலை வருவதாகச் சொல்லியிருந்தான்.

அவன் அலுவலகம் வராததால் அவளுக்கு வேலைகள் சற்றுக் கூடி இருக்க, அதைச் செய்து முடிக்கவே அவள் வேகமாக வேலைக்குச் செல்ல வேண்டியதாக இருந்தது.

எப்போதும் கிருபாவை சந்திக்கச் சந்தோசத்துடனேயே தான் செல்வாள். ஆனால் இன்றோ காலையில் இருந்தே சிறிது படபடப்பு அவளை ஆட்கொண்டிருந்தது.

‘கடவுளே! எதுவும் தப்பா இல்லாமல் எல்லாம் சரியா நடக்கணும்’ என்று மனதிற்குள் வேண்டுதல் வைத்துக் கொண்டாள்.

“நீ பேசாம அப்பாகிட்டயே வேலைக்குப் போயிருக்கலாம். உனக்கென்ன இப்படி ஓடி ஓடி வேலை பார்க்கணும்னு தலையெழுத்தா?” என்று மகளை மேலும் சிந்தனையில் சுழலவிடாமல் நிகழ்விற்கு இழுத்து வந்திருந்தார் கல்பனா.

“தனியா வேலைக்குப் போய் எக்ஸ்பீரியன்ஸ் வரணும்னு தானே அம்மா நான் வெளியில் வேலைக்குப் போறேன். அப்பா கிட்ட போனா வெளியுலக எக்ஸ்பீரியன்ஸ் எனக்கு வராதுன்னு தோணுச்சு. அதனால்தான்… புரிஞ்சுக்கோங்கமா…” என்றாள்.

“அதுதான் உன் ஆசைப்படி ஒரு வருஷம் வெளியில் வேலை பார்த்திருக்கியே. இனிமேலாவது அப்பா கிட்ட வேலைக்குப் போகலாம் தானே?” என்று கேட்டார்.

“அம்மா இப்போ எனக்கு டைம் ஆச்சு. இதைப் பத்தி இன்னொரு நாள் பேசுவோம்…” என்று அன்னையின் பேச்சில் இருந்து தப்பித்தவள் வேகமாக வெளியே சென்றாள்.

“இன்னைக்கு ஸ்கூட்டியில் தானே போற?” அவளின் பின்னால் வந்த கல்பனா கேட்க,

“ஆமாம்மா…” என்று பதில் சொல்லிக்கொண்டே தன் ஸ்கூட்டியில் ஏறி அமர்ந்தாள்.

“எங்க பஸ்ல போற எக்ஸ்பீரியன்ஸ் வேணும்னு இன்னைக்கும் பஸ்ல போவியோனு நினைச்சேன்…” என்றார்.

“அது மாசத்துக்கு ஒரு முறை மட்டும் தான் மா பஸ்…” என்று கண்சிமிட்டிச் சிரித்தாள்.

“பைமா… அப்பாகிட்ட சொல்லிருங்க…” என்று அன்னையிடம் விடைபெற,

“சரி, பார்த்துப் போயிட்டு வா…” என்று மீண்டும் அவர் வீட்டிற்குள் செல்ல, வசுந்தரா அலுவலகம் சென்றாள்.

மாலையில் சீக்கிரமே வேலையை முடித்தவள், கிருபாகரனை சந்திக்கப் பூங்காவிற்குக் கிளம்பிச் சென்றாள்.

அவள் வண்டியை நிறுத்தி விட்டு உள்ளே செல்லும் போதே கிருபாகரன் ஓர் இருக்கையில் அமர்ந்திருப்பதைக் கண்டு அவளின் முகம் மலர்ந்தது.

‘அவனைப் பார்த்து மூன்று நாட்கள் ஆகி விட்டதே!’ என்று நினைத்துக் கொண்டே அவனின் அருகில் செல்ல, அப்போது அவனும் அவளைத் தான் பார்த்துக் கொண்டிருந்தான்.

அவனின் பார்வையைச் சந்தித்ததும் வசுந்தரா மலர்ந்து புன்னகை புரிய, கிருபாகரனோ சோபையாக உதட்டைச் சிரிப்பது போல் இழுத்தான்.

அவனின் புன்னகையில் உயிரில்லாததைக் கண்டவள் யோசனையுடன் பார்த்துக் கொண்டே அருகில் சென்று, “என்ன கிருபா வந்து ரொம்ப நேரம் ஆச்சா?” என்று கேட்டாள்.

“ஜஸ்ட் பைவ் மினிட்ஸ்…” என்று சுருக்கமாகச் சொன்னான்.

அவன் அமர்ந்திருந்த இருக்கையில் சிறிது இடைவெளி விட்டு அமர்ந்தவள், “என்னாச்சு கிருபா, ஏன் ஒரு மாதிரி டல்லா பேசுறீங்க?” யோசனையுடன் கேட்டாள்.

கிருபாகரனோ அவளின் கேள்விக்குப் பதில் சொல்லாமல் தலையைக் குனிந்து கைகளில் முகத்தைத் தாங்கிய படி அமர்ந்தான்.

அவனின் அந்த நிலை அவளைப் பதட்டமடைய வைக்க, “என்னாச்சு கிருபா? உடம்பு சரியில்லையா? அதனால் தான் லீவ்ல இருக்கீங்களா?” என்று பதறி அவனின் நெற்றியில் கையை வைத்துப் பார்க்கப் போக, வேகமாகத் தன் தலையைப் பின்னால் இழுத்துக் கொண்டான் கிருபாகரன்.

அவன் அப்படிச் செய்த உடன் விழிகளை விரித்துப் பார்த்தாள். அவளாக எப்போதாவது தொட்டுப் பேசினாலே மகிழ்ந்து போகின்றவன் இப்போது பின்னடைகின்றான் என்றால் இதற்கு என்ன அர்த்தம்? வந்ததில் இருந்து அவனிடம் இருக்கும் வித்தியாசமான செய்கை அவளைக் குழப்பியது.

தன் குழப்பத்தைத் தலையைக் குலுக்கி உதறித் தள்ளியவள், ஆழ்ந்த மூச்சை இழுத்து விட்டு, “நம்ம விஷயத்தை உங்க வீட்டில் சொல்லிட்டீங்களா கிருபா? அவங்க சம்மதிக்கலையா?” என்று நிதானமாகக் கேட்டாள்.

அவளின் கேள்வியில் தலையைக் குனிந்து கொண்டே ‘ஆமாம்’ என்று தலையை அசைத்தான்.

“ஓ!” என்றவள் வருத்தத்துடன் சில நொடிகள் அமைதியாக இருந்தாள்.

பின்பு நிமிர்ந்து அமர்ந்தவள், “அப்பா, அம்மானா காதலுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கத் தான் செய்வாங்க கிருபா. நாம அவங்களுக்குப் புரிய வைக்கலாம். எப்படி அவங்களுக்குப் புரியவைக்கலாம்னு யோசிக்கிறதை விட்டுட்டு, இப்படிச் சோகமா இருக்கிறது என் கிருபாவுக்கு நல்லாவே இல்லை…” என்று முயன்று வருவித்த குரலில் இலகுவாகச் சொல்ல முயன்றாள்.

ஆனாலும் மனம் அடைந்த ஏமாற்றத்தில் குரல் கரகரத்தே ஒலித்தது.

அவளின் சமாதான முயற்சியில் நிமிர்ந்தவன் தன் கையால் முகத்தை அழுந்த துடைத்துக் கொண்டு, மூச்சை இழுத்து விட்டு, “ஸாரி வசுந்தரா…” என்றான்.

“ஸாரியா? எதுக்கு?” என்று வேகமாகக் கேட்டவளுக்கு அப்போதுதான் அவன் ‘வசு’ என்று இல்லாமல் ‘வசுந்தரா’ என்று அழைத்ததைக் கவனித்து அதிர்ந்தவள், “என்ன கிருபா, உங்க பேச்சே சரியில்லையே… என்ன விஷயமாக இருந்தாலும் தைரியமாகச் சொல்லுங்க…” என்று அழுத்தமாகச் சொன்னாள்.

வெளியே பேசிய அழுத்தத்திற்கு நேர்மாறாக, அவளின் உள்ளம் உள்ளே பதறிக் கொண்டிருந்தது.

ஏதோ விரும்பத் தகாதது நடக்கப் போவது போல் மனம் படபடத்தது.

“சொல்றேன் வசுந்தரா. முதலில் நான் கேட்க வேண்டியது ஸாரி தான். இந்த ஸாரி நான் உன் மனதை சலனப்படுத்தியதற்காக…” என்றான்.

“அப்படினா?” என்று மட்டும் திருப்பிக் கேட்டாள். ‘நீயே சொல்ல வந்ததைச் சொல்லி முடித்து விடு’ என்ற பாவனையில்.

அவன் சொல்லவருவது அவளுக்கு நன்றாகவே புரிந்து போனது. அதில் உள்ளம் வலிக்க, அவனின் வாயிலிருந்தே அனைத்தையும் வர வைக்க நிதானமாக இருப்பது போல் திருப்பிக் கேள்விக் கேட்டாள்.

“நம்ம காதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நேரம் வந்துவிட்டது வசுந்தரா…” என்று இப்போது சிறு தயக்கத்துடனேயே என்றாலும் தான் சொல்ல வந்ததைச் சொல்லிவிட்டான் கிருபாகரன்.

‘சொல்லிவிட்டான்! சொல்லியே விட்டான்!’ என்று உள்ளம் பதற, அதை அடக்கி வைத்தவள் “ஏன்?” என்று ஒற்றை வார்த்தை மட்டும் கேட்டாள்.

“ஏன்னா? எனக்குக் கல்யாணம் ஆகிடுச்சு…” என்று அவளின் முகத்தைப் பார்க்காமல் எங்கோ பார்த்த படி விஷயத்தைப் பட்டென்று போட்டு உடைக்க, சட்டென்று வசுந்தராவின் இதயம் நொறுங்கியது போல் இருந்தது.

‘வீட்டில் தங்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து இருப்பார்கள். அதனால் பிரிந்து விடுவோம் என்று ஏதாவது உளறுவான். அதைச் சொல்லத்தான் இவ்வளவு தடுமாறுகின்றான்’ என்றுதான் அவள் நினைத்தாள்.

அவள் எதை எதிர்பார்த்தாலும் இதைக் கண்டிப்பாக எதிர்பார்க்கவே இல்லை.

கல்யாணமே முடிந்துவிட்டது என்பதை அவளால் நம்பக் கூட முடியவில்லை. அதிர்ச்சியில் விழிகள் விரிய, அவளின் கை தன்னிச்சையாக நெஞ்சை பிடித்து அழுத்தியது.

கண்களும் சட்டென்று கலங்கிப் போக, அதை வெளியே வரவிடாமல் தடுத்து நிறுத்த போராடினாள்.

அவளின் நிலையைப் பார்க்க முடியாதவன் போலக் கிருபாகரன் அவளின் பக்கமே திரும்பவில்லை. ஆனால் அவனின் கண்களும் கலங்கித்தான் போயிருந்தன.

வீட்டில் தங்கள் காதலை தெரிவிக்கச் சென்றவன் இந்த ஒரு மாதத்திற்குள் கல்யாணத்தையே முடித்து விட்டானா? என்ற அதிர்ச்சியுடன் கிருபாகரனை வெறித்துப் பார்த்தாள் வசுந்தரா.

‘அது எப்படி முடியும்? ஒருவேளை தன்னிடம் பொய் சொல்கின்றானோ? தன்னிடம் விளையாடுகின்றானோ?’ என்றும் தோன்ற, “சும்மா என்னை டீஸ் பண்ணனும்னு தானே சொல்றீங்க கிருபா?” என்று அடைத்த தொண்டையைச் சரி செய்து கொண்டே கேட்டாள்.

‘இல்லை’ என்று அவனின் தலை மறுப்பாக அசைந்தது.

அதில் இன்னும் உடைந்து போனவளுக்கு ஆத்திரத்துடன் கோபமும் துளிர்த்தது.

“இந்தப் பக்கம் திரும்பி என்னைப் பாருங்க கிருபாகரன்…” என்று அதட்டலாக அழைத்தாள்.

“இது எப்படி? எப்படி முடியும்? காதலை வீட்டில் சொல்லப்போறேன்னு போனவருக்கு அதற்குள் எப்படிக் கல்யாணம் முடிஞ்சிருக்க முடியும்? இல்லை நான் நம்பமாட்டேன்… நம்பவே மாட்டேன்…”

அவளை வேதனையுடன் பார்த்தவன் “நீ நம்பித்தான் ஆகணும் வசுந்தரா…” என்றவனைச் சந்தேகத்துடன் பார்த்தாள் வசுந்தரா.

அவளின் சந்தேகத்திற்கும் காரணம் இருந்தது. அவளை விட அதிகம் தன்னை விரும்பியது அவனாகத்தான் இருக்கும் என்று நன்றாக அறிந்திருந்தவள் அவள்!

அப்படியிருக்க எப்படி அவனால் சாதாரணமாகக் கல்யாணம் ஆகிவிட்டது என்று சொல்ல முடிகிறது?

அவளின் சந்தேகப் பார்வையைக் கண்டவன் தன் கைபேசியை எடுத்து ஏதோ செய்தான்.

உடனே வசுந்தராவின் கைபேசிக்கு ஒரு குறுந்தகவல் வர, அவனைக் கேள்வியுடன் பார்த்தாள்.

“எடுத்துப் பார் வசுந்தரா…” என்று சொல்லவும், கைகள் நடுங்க தன் கைபேசியை எடுத்து அவன் அனுப்பிய செய்தியைப் பார்த்த அடுத்த நிமிடம் தன் கைபேசியைத் தவறவிட்டாள்.

அவள் தவறவிட்ட கைபேசி அவளின் காலடியில் சென்று விழுந்தது.

உடம்பெல்லாம் லேசாக உதற, கண்கள் கலங்கிப் போகக் கீழே விழுந்த கைபேசியை வெறித்தாள்.

அதில் கிருபாகரன் மணக்கோலத்தில் நின்றிருந்த புகைப்படம் இருக்க, அதையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவனின் அருகில் பதுமையென மணப்பெண் நின்று கொண்டிருந்தாள்.

அப்படத்தைப் பார்த்த வசுந்தராவிற்கு உச்சியில் அடித்தது போல் உண்மை உறைக்க அப்படியே சமைந்து போனாள்.

தானும் அப்புகைப்படத்தை வெறித்த கிருபாகரன், “நாம வெளியே போய்விட்டு வந்த‌ சில நாட்களிலேயே நம்ம காதல் விஷயத்தை நான் என் அப்பா, அம்மாகிட்ட சொன்னேன். ஆனா அவங்க உடனே மறுப்பு சொன்னாங்க. ஆனாலும் முதல் நாள் அதிர்ச்சியில் அப்படிச் சொல்றாங்க. திரும்பப் பேசி சமாதானம் செய்யலாம்னு இரண்டு நாள் வெயிட் பண்ணினேன்.

ஆனால் அந்த இரண்டு நாளில் அவங்க சொந்தக்கார பொண்ணைத் தேர்ந்தெடுத்து கல்யாணமே ஃபிக்ஸ் பண்ணிட்டாங்க. பேசிப்பார்த்தேன். சண்டை போட்டேன். எல்லாமே செய்தேன். ஆனால் என் பேச்சை மீறினால் அவங்க ரெண்டு பேருமே தற்கொலை பண்ணிப்பேன்னு மிரட்டினாங்க.

சும்மாதான் மிரட்டுறாங்க. அவங்களால ஒன்னும் செய்ய முடியாதுனு கொஞ்சம் அசால்டா தான் இருந்தேன். ஆனா அடுத்த நாளே விஷப் பாட்டிலைக் காட்டி, குடிக்கப் போறோம்னு மிரட்டி, நாங்க சொல்ற பொண்ண தான் கல்யாணம் பண்ணனும்னு பெரிய பிரச்சனையே பண்ணிட்டாங்க.

என்னால அதுக்கு மேல சமாளிக்க முடியலை. என்னால் முடிந்தவரை போராடிப் பார்த்துவிட்டு முடியாமல் தான் அவங்க சொன்ன பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்.

கல்யாணத்துக்கு முன்னாடியே உன்கிட்ட எப்படியாவது சொல்லிடணும்னு மனசுக்குள் போராடினேன். ஆனா என்னால் முடியல. நீயும் சாகுறேன்னு பிளாக்மெயில் பண்ணினா நான் எங்க அப்பா, அம்மா பக்கம் நிற்பேனா? இல்ல உன் பக்கம் நிற்பேனா? என்ன பண்ணுவேன் நான்?

கண்டிப்பா எனக்கு வேற வழி தெரியல. பிரச்சனை நடந்த போது வீட்டில் அவங்களைச் சரி பண்ணிட்டு உன்கிட்ட சொல்லுவோம் உன்னையும் டென்ஷன் பண்ண வேண்டாம்னு பார்த்தேன். நானே எப்படியாவது போராடி அவங்களைச் சம்மதிக்க வச்சுடலாம்னு நினைச்சேன். ஆனா என் பெத்தவங்களை என்னால் சமாளிக்க முடியலை. காதலிச்ச பொண்ணுக்கு தான் உண்மையா இல்லாம போயிட்டேன். பெத்தவங்களுக்கு மட்டுமாவது உண்மையா இருப்போம்னு அவங்க இஷ்டத்துக்கு என்னை விட்டுட்டேன்.

அதுக்கு மேல எனக்கு நிஜமா என்ன செய்றதுனே தெரியல. ஸாரி வசுந்தரா! நான் தான் உன்கிட்ட வந்து முதலில் காதல் சொன்னேன். ஆனால் நானே உன்னை வேதனையில் தள்ளுவேன்னு கொஞ்சம் கூட நான் எதிர்பார்க்கல. மன்னிச்சுடுன்னு சொல்வதைத் தவிர இனி என் கிட்ட வேற வார்த்தை இல்லை…” என்று தன் மனதில் இருந்ததை எல்லாம் கொட்டியவன் மீண்டும் முகத்தை மூடிக்கொண்டு அமர்ந்தான்.

அனைத்தையும் தன் கைபேசியை வெறித்தபடியே கேட்டுக் கொண்டவள் மெல்ல அவனின் புறம் திரும்பி “சோ… உங்களோட பெத்தவங்க சாகக்கூடாதுனு என்னை உயிரோடு கொன்னுட்டீங்க…” என்று சொல்லி விரக்தியுடன் சிரித்தாள்.