என்னுள் யாவும் நீயாக! – 18

அத்தியாயம் – 18

‘என்னாச்சு வசுந்தரா உனக்கு? இது உன் இயல்பே இல்லையே? ஒருவர் திரும்பத் திரும்பச் சொல்லும் படியாகவா நடந்து கொள்வது?’ என்று தன்னையே மானசீகமாகக் கொட்டிக் கொண்டவள், “சாரி… இனி புரிந்து நடந்து கொள்கிறேன்…” என்றாள்.

“தட்ஸ் குட்!” என்ற பிரசன்னா இன்னும் அவளின் தலையில் வைத்த கையை எடுக்காமல் இருந்தான். அவனின் அந்த உரிமையான தொடுகை வசுந்தராவின் உச்சந்தலையைக் குளிர்ச்சியாக மாற்றியது போல் இருந்தது.

“எனக்கு மன அமைதி ரொம்ப முக்கியம் வசு. உயிரை காப்பாற்றும் வேலையில் இருக்கேன். நான் குழப்பத்தோட போய் என்னை நம்பி வர்றவங்களுக்கு வைத்தியம் பார்க்க முடியாது. நான் என் வேலையை சரியா செய்யாம யார் உயிருக்காவது ஆபத்து வந்தால் நான் ஒரு வைத்தியனா இருப்பதற்கு லாயக்கில்லாதவனாக ஆகிடுவேன். அதனால் எனக்கு வீட்டில் மன அமைதி தருவதில் பெரும் பங்கு இனி உனக்குத் தான் இருக்கு. உன் முக வாட்டமும், மௌனமும் கூட என்னை டிஸ்டர்ப் பண்ணுது. என்ன நான் சொல்ல வருவது உனக்குப் புரியுது தானே?” என்று கேட்டான்.

“ம்ம் புரியுது. இனி என்னால் உங்களுக்கு மன சஞ்சலங்கள் வராமல் பார்த்துக்கிறேன்…” என்றாள் வசுந்தரா.

“ம்ம் ஓகே…” என்ற பிரசன்னா அவளின் தலையில் இருந்த கையை மெதுவாகக் கீழே இறக்கி அவளின் கன்னத்தை ஒற்றை விரலால் வருடினான்.

அவனின் வருடலில் வசுந்தராவிற்குள் ஏதோ தடம் புரண்ட உணர்வு!

அவள் விழிகளைப் பார்த்துக் கொண்டே கன்னத்தைச் சில நொடிகள் வருடியவன், மனமே இல்லாதவன் போல் மெல்ல தன் கையை விலக்கிக் கொண்டு காஃபி கப்பைக் கையில் எடுத்தான்.

லேசாகச் சூடு ஆறியிருந்தது. ஆனாலும் ரசித்தே பருக ஆரம்பித்தான். கூடவே மனைவியையும் கண்களால் பருகிக் கொண்டான்.

கணவனின் பார்வையைக் கண்டவள் தலையைத் தழைத்துக் கொள்ள, அவளின் முன் நீண்டது காஃபி கப்.

என்ன என்பது போல் அவள் தலையை நிமிர்த்திப் பார்க்க, “ம்ம் குடி வசு…” என்று மென்மையான குரலில் சொல்லிக் கொண்டிருந்தான் பிரசன்னா.

“எனக்கா? நீங்க தானே காஃபி கேட்டீங்க?”

“இன்னைக்கு இருந்து நமக்குள் ஒரு புதுப் பழக்கம் ஆரம்பிக்கப் போகுது. இனி நாம இரண்டு பேரும் என்ன சாப்பிட்டாலும் ஒரு வாயாவது பகிர்ந்து தான் சாப்பிட்டுக்கப் போறோம். அதுக்கு ட்ரையல் தான் இது. ம்ம் குடி…” என்று காஃபியை அவளின் உதட்டின் அருகில் கொண்டு சென்றான்.

அவனிடமிருந்து இப்படி ஒரு செய்கையை எதிர்பாராத வசுந்தராவின் விழிகள் விரிந்தாலும் உதடுகள் லேசாகப் பிரிந்து கணவன் கொடுத்த காஃபியைப் பருக ஆரம்பித்தன.

அவள் இரண்டு மிடறு பருக, தானும் பருகி, மீண்டும் அவளையும் பருக வைத்தான்.

ஒரு கப் காஃபியையும் இருவரும் மாறி மாறிக் குடித்து முடித்தனர்.

“குட்! அடுத்து சாப்பிடும் போதும் இது தொடரும்…” என்று புன்னகையுடன் சொன்னவன் எழுந்து குளிக்கச் செல்ல, ‘இவருக்கு என்னாச்சு?’ என்று முழித்துக் கொண்டிருந்தாள் வசுந்தரா.

ஆனாலும் இது புது வித அனுபவமாக அவளுக்கு இருந்தது. ‘தன் எச்சில் பட்ட காஃபியைச் சிறிதும் தயக்கம் காட்டாமல் குடித்தாரே’ என்று நினைத்தவளுக்கு உடலும், உள்ளமும் பரவசமாக இருப்பது போல் இருந்தது.

பிரசன்னா குளித்து விட்டு வரும் வரையில் அதே உணர்வை உள்வாங்கியவளாக அமர்ந்திருந்தாள் வசுந்தரா.

அவளின் முகத்தில் வந்து போன உணர்வுகளை ஓரப் பார்வையில் பார்த்துப் புன்னகைத்துக் கொண்டான் பிரசன்னா.

“கீழே போகலையா வசு?” என்று கேட்டு அவளின் மோன நிலையைக் கலைத்துக் கொண்டே கண்ணாடி முன் சென்று நின்றான்.

அவனின் பேச்சுச் சப்தத்தில் நிமிர்ந்து பார்த்தவள் அவன் இருந்த நிலையைப் பார்த்து மீண்டும் வேகமாகத் தன் பார்வையைத் தாழ்த்திக் கொண்டாள்.

ஈரத்துளிகள் முத்துக்களாக மார்பு ரோமங்களில் மின்ன வெறும் துவாலையை மட்டும் கட்டிக் கொண்டு நின்றிருந்தான்.

ஊட்டியிலும் அது போல் வந்து நின்றிருக்கிறான் தான். ஆனால் அப்போது அவனை எந்தச் சலனமும் இல்லாமல் அவளால் எதிர்கொள்ள முடிந்தது. ஆனால் இப்போது ஏதோ ஒரு தடுமாற்றம் வருவது போல் இருந்தது.

‘அன்னைக்கு உங்களை இப்படிப் பார்த்து எந்த வித்தியாசமும் தெரியலைன்னு சொல்லிட்டு இப்போ மட்டும் எனக்கு ஏன் இந்தத் தடுமாற்றம்?’ என்று தன்னையே கேட்டுக் கொண்டாள்.

‘அப்போ நீ என்னை ஒரு சாதாரண மனுஷனா பார்த்தாய் வசு. ஆனால் என்னை இப்போ உரிமையுடைவனாய் உன் மனம் நினைப்பதை நீயே அறியவில்லை. உரியவனின் உருவம் தானே ஒரு பெண்ணைத் தடுமாற வைக்கும்’ என்று அவளின் மனநிலை புரிந்தவன் போல் தனக்குள்ளேயே நினைத்துக் கொண்டு கண்களில் குறும்பும், உதட்டில் புன்னகையுமாக அவளைப் பார்த்தான் பிரசன்னா.

“கேட்டேனே?” அவளின் தடுமாற்றம் புரிந்தாலும் கள்ளனாய் வம்பிழுத்தான் பிரசன்னா.

“நீங்க வேலைக்குப் போற வரை உங்க கூட டைம் ஸ்பென்ட் பண்ணச் சொல்லி அத்தை என்னைப் போகச் சொல்லிட்டாங்க…” என்றாள்.

“வாவ்! அம்மா கிரேட்…” என்று உற்சாகமாகக் கூவியவன் ஏதோ ஒரு பாடலை விசில் அடிக்க ஆரம்பித்தான்.

அவன் விசில் அடித்த பாடல் இன்னும் அவளைத் தடுமாற வைத்தது.

“தொடத் தொட மலர்ந்ததென்ன ,
பூவே தொட்டவனை மறந்ததென்ன

பார்வைகள் புதிதா
ஸ்பரிசங்கள் புதிதா
மழை வர பூமி மறுப்பதென்ன”

முதலில் விசிலாக ஆரம்பித்த பிரசன்னா பின் அப்படியே பாடல் வரிகளைப் போட்டுப் பாட ஆரம்பித்தான்.

“காதலன் தீண்டாத பூக்களில் தேனில்லை
இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை”

என்று பாடிய போது அவனின் புருவத்தை ஏற்றி இறக்கி வசுந்தராவிடம் தன் நிலையைச் சொல்ல முயன்றான்.

“பசித்தவன் அமுதம் பருகிடத் தானே
பதினேழு வசந்தங்கள் இதழ் வளர்த்தேன்
இலை மூடும் மலராக இதயத்தை மறைக்காதே
மலர் கொல்லும் காற்றாக இதயத்தை உலுக்காதே”

என்று கடைசி வார்த்தையைப் பாடும் போது தன் கையால் இதயப் பகுதியைத் தொட்டுக் காட்டினான்.

கணவனின் பாவனைகளும், பாடல் வரிகளும் உணர்த்திய செய்தி மட்டும் இல்லாது, அவனின் குரலில் இருந்த இனிமையும், பாடலை அவன் உருகிப் பாடிய விதமும் சேர்ந்து வசுந்தராவை உருக்கியது.

அவன் பாடி முடித்ததும் “நீங்க ரொம்ப நல்லா பாடுறீங்க! இவ்வளவு நல்லா பாடுவீங்கன்னு நான் எதிர்பார்க்கவே இல்லை…” என்றாள்.

‘நான் எப்படிப் பாடுவேன்னு காட்டுறதுக்காகவா இப்போ பாட்டுப் பாடினேன்?’ என்று உள்ளுக்குள் கடுகடுத்துக் கொண்டவன், “ஸ்கூல் டேஸ்ல பாட்டுக் கத்துக்கிட்டேன்…” என்று கடிந்த பற்களுக்குள் இருந்து வார்த்தைகளை வெளியிட்டான்.

“ஓ… சுப்பர்!” அவனின் கோபம் புரியாமல் பாராட்டினாள்.

அதற்கு மேல் அவளிடம் பேசாமல் உடையை எடுத்து அணிய ஆரம்பித்தான்.

அவன் உடை மாற்றிக் கிளம்பி நின்றதும் கீழே இருந்து இருவரையும் சாப்பிட வருமாறு ராதா அழைத்தார்.

“வா சாப்பிட்டு வருவோம்…” என்றவன் கட்டிலில் அமர்ந்திருந்தவளின் கையைப் பற்றி எழுப்பிக் கையை விடாமல் கீழே அழைத்துச் சென்றான்.

கைகளைப் பிடித்த படி வந்த இருவரையும் பார்த்துப் பெரியவர்கள் இருவரும் காணாதது போல இருந்து கொள்ள, அங்கே அமர்ந்திருந்த யாதவ் “அட! அட!” என்று ராகமாக இழுத்தான்.

“யாதவ் பேசாம இரு!” என்று மகனை ராதா அடக்க,

வசுந்தரா சங்கடத்துடன் கையை இழுத்துக் கொள்ள முயன்றாள்.

“ஷ்ஷ்… பேசாம இரு. நானே விடுவேன். ரொம்ப வம்பு பண்ணினா அப்புறம் உன் தோளில் கையைப் போட்டு தான் கூட்டிட்டு போவேன்…” என்று மெல்லிய குரலில் அவளை அதட்டினான்.

‘யார் வம்பு பண்றா? நானா? இவரா?’ என்று நினைத்தவள், “வயசு பையன் இருக்குறப்ப வேண்டாம். ப்ளீஸ்…” என்று மெதுவாக மறுத்தாள்.

அவளைத் திரும்பி ஒரு பார்வை பார்த்தவன் கையை விட்டுவிட்டான்.

ஆனால் மெதுவாக அவளின் புறம் சாய்ந்தவன் “நானும் இன்னும் வயசு பையன் தான்…” என்று சொல்லிவிட்டுக் குறும்பாகக் கண்சிமிட்டினான்.

‘ஹான்… என்ன இது?’ என்று நொடியில் அதிர்ந்து நின்று விட்டாள் வசுந்தரா.

‘அச்சோ! என்னதிது இப்படி எல்லாம் பேசுறார்?’ என்று நினைத்தவளுக்குப் படபடப்பாக இருந்தது.

“உன் ஹஸ்பென்ட் இதுக்கு மேலும் பேசுவான்…” என்று அவள் மனதில் நினைத்ததை அறிந்தது போல் சொல்லி விட்டு நல்ல பிள்ளையாகச் சாப்பிட அமர்ந்தான்.

‘நிஜமாவே இவருக்கு என்னமோ ஆச்சு. இவர் கோபமா இருந்தப்ப கூடச் சமாளிச்சுட்டேன். இப்போ சமாளிக்க முடியாது போலயே…’ என்று உள்ளுக்குள் புலம்பிக் கொண்டே அவளும் அவனின் அருகில் சென்று அமர்ந்தாள்.

ராதா பரிமாற ஆரம்பிக்க, “நீங்களும் உட்காருங்கமா. நாம எல்லாம் சேர்ந்தே சாப்பிடலாம்…” என்றான்.

“ஆமா ராது, நீயும் எங்களோடு சாப்பிடு…” என்று கிருஷ்ணனும் சொல்ல, ராதாவும் அமர்ந்தார்.

அவர்களே தங்களுக்குத் தேவையானதை எடுத்து வைத்துக் கொள்ள, பிரசன்னாவிற்குத் தானே எடுத்து வைத்தாள் வசுந்தரா.

அவள் தனக்கும் பரிமாறிக் கொண்டு சாப்பிட முதல் வாய் எடுத்து வாயில் வைக்கப் போக, மேஜைக்கு அடியில் இருந்து அவளின் கையைப் பிடித்து இழுத்தான் பிரசன்னா.

எதற்கு அப்படிச் செய்கின்றான் என்று அவள் திரும்பிப் பார்க்க, “நாம பகிர்ந்து தான் சாப்பிடணும்னு சொன்னேனா இல்லையா?” என்று அவளுக்கு மட்டும் கேட்கும் வண்ணம் முணுமுணுத்தான்.

அப்போது தான் காஃபி குடிக்கும் போது அவன் சொன்னது ஞாபகம் வர ‘ஷ்ஷ்’ என்று நாக்கைக் கடித்துக் கொண்டாள் வசுந்தரா.

ஆனாலும் “எல்லாரும் இருக்காங்க. இப்போ எப்படி?” என்று தானும் பதிலுக்கு முணுமுணுத்த வசுந்தரா தயங்கினாள்.

“நீ கையில் எடுத்ததை அப்படியே என் தட்டில் வை…” என்றான்.

அவள் தயக்கத்துடன் மாமியார், மாமனார், கொழுந்தனை ஒரு பார்வை பார்த்தாள். புதுமண தம்பதிகளைக் கண்டு கொள்ளக் கூடாது என்று முன்பே முடிவெடுத்து வைத்தது போல் அவர்கள் யாரும் இவர்களின் புறமே திரும்பவில்லை.

அதனால் தைரியத்தை வர வைத்துக் கொண்டு வேகமாகத் தன் கையில் எடுத்த உணவைக் கணவனின் தட்டில் வைத்தாள்.

பிரசன்னா மனைவி போல் அவசரம் இல்லாமல் நிதானமாகவே தன் உணவில் இருந்து எடுத்து அவளின் தட்டில் வைத்து விட்டு, அவள் தன் தட்டில் வைத்த உணவை எடுத்து ரசித்து உண்ண ஆரம்பித்தான்.

வசுந்தராவோ மற்றவர்கள் தங்களின் செய்கையைப் பார்த்து விட்டார்களோ என்று மீண்டும் கவனித்து விட்டு அவர்கள் யாரும் தங்களைப் பார்க்கவில்லை என்பதை உறுதி படுத்தி விட்டுக் கணவன் கொடுத்த உணவை உண்ண ஆரம்பித்தாள்.

ஏனோ கணவன் கொடுத்த உணவு மிகவும் ருசியாக இருந்தது போல் அவளுக்குத் தோன்றியது.

காலை உணவு பிரசன்னாவின் சின்னக் கலாட்டாக்களுடன் முடிந்தது.

கையைக் கழுவ பிரசன்னா எழுந்து சென்ற போது தானும் பின்னால் சென்ற யாதவ் “அண்ணாரே… உனக்குள்ள இப்படி ஒரு ரொமாண்டிக் ஹீரோ ஒளிஞ்சு இருக்கார்னு எனக்கு இத்தனை நாள் தெரியாம போயிருச்சே. பாட்டும், சாப்பாடும்… ம்ம்… ம்ம்… நீ கலக்கு…” என்று கேலி செய்தான்.

“இன்னும் கொஞ்ச நாளில் உனக்குள் ஒளிஞ்சி இருக்குற ரொமாண்டிக் மன்னனை நானும் பார்க்கத் தான் போறேன் தம்பியாரே. அதனால் என்னை ரொம்ப ஓட்டாதீங்க. போ… போய் உன் கேஸ் கட்டைத் தூக்கிட்டு கோர்ட்டுக்கு ஓடு…” என்று தம்பியின் கேலியைத் தூசு போல் தட்டி விட்டவன் சிரித்துக் கொண்டே அங்கிருந்து நகர்ந்தான்.

மதிய உணவும் இருவரும் முதல் வாய் உணவைப் பகிர்ந்தே உண்டனர்.

மனைவியைத் தொட்டுப் பேசுவதும், அவளின் கையை இயல்பாகப் பிடித்துக் கொள்வதும் என்று வசுந்தராவுடன் அன்று முழுவதும் நன்றாகவே பழகினான்.

இரவு உணவை முடித்து விட்டு அறைக்குள் வந்ததும், வசுந்தரா குளியலறை சென்று இரவு உடையை மாற்றி விட்டு வந்து படுக்கையில் அமர்ந்தவளுக்குப் படுக்க முடியவில்லை.

காலையில் இருந்து கணவன் காட்டிய பல்வேறு பரிமாணங்கள் அவளைப் படுக்க விடாமல் அமர வைத்தது. ஏதோ யோசனையுடனே அப்படியே அமர்ந்து விட்டாள்.

சற்று நேரத்தில் கீழே தந்தையிடம் பேசி விட்டு மேலே வந்த பிரசன்னா படுக்கையில் அமர்ந்திருந்த மனைவியைப் பார்த்து, “என்ன வசு இன்னும் படுக்கலையா?” என்று கேட்டான்.

“இதோ… இதோ படுக்கிறேன்…” என்றாளே தவிர அமர்ந்தே இருந்தாள்.

குளியலறைக்குள் சென்று விட்டு வந்த பிரசன்னா அப்போதும் மனைவி அப்படியே அமர்ந்திருப்பதைப் பார்த்து அருகில் வந்தவன், அவளின் இருபக்கத் தோளின் மீதும் கையை வைத்து, “நேரமாச்சு படுத்துத் தூங்கு வசு. நாளைக்கு உங்க வீட்டுக்குப் போகணும்ல…” என்று சொல்லிக் கொண்டே அப்படியே அவளைச் சாய்த்துப் படுக்க வைத்துவிட்டுப் போர்வையை எடுத்து அவளுக்குப் போர்த்தி விட்டான்.

பின்பு விளக்கை அணைத்து சிறிய விடிவிளக்கை எரிய விட்டுத் தானும் மனைவிக்கு அந்தப் பக்கம் சென்று சிறு இடைவெளி விட்டுப் படுத்து, “குட்நைட் வசு…” என்றவன் அடுத்தச் சில நிமிடங்களில் உறங்கியும் விட்டான்.

பதிலுக்கு “குட்நைட்…” சொன்ன வசுந்தராவோ தூக்கத்தைத் துறந்து அருகில் படுத்து ஆழ்ந்த உறக்கத்திற்குச் சென்ற கணவனையே குழம்பிப் போன மனதுடன் பார்த்துக் கொண்டிருந்தாள்.

காலையில் இருந்து கணவன் காட்டிய திடீர் நெருக்கத்தால் ஏற்பட்ட குழப்பத்தில் குழம்பித் தவித்தவள், இரவில் அவனின் விலகலில் குழப்பத்தின் தத்துப்பிள்ளையானாள்.