என்னுள் யாவும் நீயாக! – 17

Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels

அத்தியாயம் ‌- 17

“ஊட்டி ட்ரிப் எப்படி இருந்தது வசு?” என்று கேட்ட மாமியாரைப் பார்த்து மென்னகை புரிந்தாள் வசுந்தரா.

“நல்லா இருந்தது அத்தை. நிறைய இடத்துக்குக் கூட்டிட்டு போனாங்க. எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது…” என்று தன் மனவருத்தத்தைச் சிறிதும் வெளியே காட்டிக் கொள்ளாமல் பதில் சொன்னாள்.

“சரிமா, இப்போதானே ஊட்டியிலிருந்து வந்தீங்க. நீயும் மேலே போய்ப் பிரசன்னா கூட ரெஸ்ட் எடு. நாம அப்புறம் பேசலாம்…” என்றார் ராதா.

“காலை சாப்பாட்டு வேலை ஆரம்பிச்சுட்டீங்களே அத்தை. நானும் கூட இருந்து ஹெல்ப் பண்றேன்…” என்றாள்.

“இல்லைமா, அதை நானும், சமையல் அம்மாவும் பார்த்துப்போம். நீ போய் ரெஸ்ட் எடு. இன்னும் கொஞ்ச நாள் மறுவீட்டு விருந்து, சொந்தக்காரங்க வீட்டு விருந்துன்னு இருக்கும். அது எல்லாம் முதலில் முடியட்டும். அப்புறம் கொஞ்ச கொஞ்சமா இந்த வீட்டு வேலையில் இறங்கலாம்…” என்றார்.

“விருந்து ஒரு பக்கம் நடக்கட்டும் அத்தை. மீதி நேரம் நான் சும்மா தானே இருப்பேன். அப்போ உங்களுக்கு ஹெல்ப் பண்றேன்…” என்றாள் வசுந்தரா.

“ஒன்னும் அவசரம் இல்லை வசு. பிரசன்னா திரும்ப வேலைக்குப் போக ஆரம்பிச்சிட்டா அவன் வீட்டில் இருக்கும் நேரம் ரொம்பக் குறைவு தான். அதனால் அவன் வீட்டில் இருக்குறப்ப அவன் கூட நேரம் ஸ்பென்ட் பண்ணு…” என்று அவளை அங்கிருந்து கிளப்பி விட்டார் ராதா.

‘உங்கள் மகனுக்கு நான் அவருடன் ஒரே அறையில் இருப்பது பிடித்தம் இல்லை அத்தை. அதனால் தானே நான் உங்களுடன் ஒட்டிக் கொள்ள நினைத்தேன். அது புரியாமல் உங்கள் மகனுடன் என்னை நேரம் செலவழிக்கச் சொல்கிறீர்களே’ என்று நினைத்துக் கொண்டே தயக்கத்துடன் மீண்டும் மாடி ஏறினாள்.

ஊட்டியில் இருந்து சற்று நேரத்திற்கு முன்பு தான் வந்திருந்தார்கள். பிரசன்னா பெற்றவர்களுடன் சிறிது நேரம் பேசி விட்டு மாடிக்குச் சென்றிருந்தான்.

வசுந்தராவும் அவனுடன் சென்றவள் குளித்து விட்டு அதற்கு மேல் சிறிது நேரம் கூட அறையில் தங்காமல் கீழே இறங்கி வந்து விட்டாள்.

ஊட்டியில் இருக்கும் போது இருவரும் ஒரே அறைக்குள் இருப்பதை அவன் தவிர்த்ததை நன்றாகப் புரிந்து கொண்டிருந்தாள்.

இரவில் ஒரே படுக்கையில் படுத்தாலும் அவளை விட்டு எவ்வளவு விலகி இருக்க முடியுமோ அவ்வளவு விலகி இருந்தான்.

அது மட்டுமில்லாமல் அறைக்குள் இருக்கும் போது அவளின் முகத்தைப் பார்ப்பதையே தவிர்த்து விடுவான். இரவிலும் என்னவோ அடித்துப் போட்டது போல் நன்றாக உறங்கவும் செய்தான்.

Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!

கணவனின் விலகலைப் புரிந்து கொண்டவள் அதன் பிறகு கவனமாக இருந்து கொண்டாள். அவனின் செய்கை அவளை வருத்தியது தான்.

ஆனால் அவனின் மனநிலையும் புரிந்ததால் முடிந்தவரை அவனுக்குத் தொந்தரவு இல்லாமல் இருந்து கொண்டாள். ஆனால் அவள் அப்படி இருந்ததே இன்னும் அவனைக் கோபப்படுத்தியதை அறியாமல் போனாள்.

இப்போது அறைக்குச் சென்றால் என்ன சொல்வானோ என்ற தயக்கத்துடன் வசுந்தரா மாடி ஏற, மாடியில் இருந்த இன்னொரு அறையில் இருந்து அப்போது தான் தூங்கி எழுந்து வந்த யாதவ் “ஹாய் அண்ணி! ஊரில் இருந்து வந்தாச்சா? எப்போ வந்தீங்க?” என்று விசாரித்தான்.

“கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் வந்தோம் தம்பி…” என்று அவனிடம் சிரித்த முகத்துடன் பதில் சொன்னாள்.

இவர்களின் பேச்சுச் சப்தம் கேட்டு வெளியே வந்த பிரசன்னா, கலைந்த தலையும், இன்னும் தூக்கம் சொக்கிய விழிகளுடனும் நின்றிருந்த தம்பியைப் பார்த்து “என்னடா இப்போ தான் எழுந்தியா? நீயெல்லாம் ஒரு வக்கீலு… இப்படித் தூங்கி வழிஞ்சு சட்டம் ஒழுங்கைக் காப்பாத்தின மாறி தான்…” என்று தம்பியைக் கிண்டல் செய்தான்.

“என்னை நக்கல் பண்றதே முழு நேர வேலையா வச்சுருக்கிற டாக்டரே… போங்க! போய் உங்க வேலையைப் பாருங்க. நானே இரண்டு மணி வரைக்கும் கேஸ் கட்டைப் பார்த்துட்டு படுத்து, அதுக்குப் பிறகும் என் கனவிலும் கேஸ் கட்டு டான்ஸ் ஆடின ஆட்டத்தில் ஆடிப் போய் எழுந்து வந்திருக்கேன். டாக்டரய்யா ஜாலியா ஊர் சுத்திட்டு வந்துட்டு என்னைய நக்கல் அடிக்க வந்துட்டார்…” என்று அலுப்பாகச் சொன்னவன் அங்கிருந்த சோஃபாவில் தொப்பென்று அமர்ந்தான்.

‘ஜாலியாவா? நானா? போடா டேய்…’ என்று தம்பியை உள்ளுக்குள் திட்டிக் கொண்டான் பிரசன்னா.

தன் சொந்த பிரச்சனையையும் தாண்டி தம்பியின் அலுப்புக் கருத்தில் பட, தானும் அவனின் அருகில் சென்று அமர்ந்தான்.

“என்னாச்சு யாதவ்? எதுவும் பிரச்சனையா? ஏன் இவ்வளவு டயர்டா ஃபீல் பண்ற?” என்று தம்பியிடம் விசாரித்தான்.

“ஒரு கேஸ் பாடா படுத்துது அண்ணா. என் சீனியர் இந்தக் கேஸின் முழு டீடைல்ஸையும் என்னைப் பார்க்கச் சொல்லியிருக்கார். அது என்னென்னா என்னை வச்சு செய்யுது…” என்று சொல்லி உதட்டைப் பிதுக்கினான்.

“சியர் அப் யாதவ்! உன்னால் முடியும்! அதுலயே போட்டு உலட்டிக்காம கொஞ்ச நேரம் மைண்டை ஃப்ரீயா வச்சுக்கோ. உனக்குப் பிடிச்ச வேற ஏதாவது விஷயத்தில் மைண்டை டைவர்ட் பண்ணு. மைண்ட் ரிலாக்ஸ் ஆனாலே பிடிபடாதப் பல விஷயங்களும் பிடிபடும்…” என்று தம்பியை ஊக்கப்படுத்தினான் பிரசன்னா.

“ஓகே அண்ணா. ட்ரை பண்றேன். சரி என்னை விடு. ஊட்டி ட்ரிப் எப்படி?” என்று கேட்டான்.

“யா… இட்ஸ் ஃபைன் டா. நெக்ஸ்ட் டைம் நம்ம எல்லாரும் ஒரு பேமிலி ட்ரிப் போகலாம். தீபா மாப்பிள்ளை எல்லாம் சேர்ந்து…” என்றான்.

“யெஸ் அண்ணா, கண்டிப்பா போகணும். வேலை வேலைன்னு எல்லோரும் ஓடிட்டு இருக்கோம். அப்பப்போ ஏதாவது ட்ரிப் போய் மைண்டை ரிலாக்ஸாக வச்சுக்கணும்…” என்றான் யாதவ்.

“போகலாம்டா…” என்று அவனின் தோளில் தட்டினான் பிரசன்னா.

“ஓகே, நான் போய் அம்மா கையால் ஒரு காஃபி குடிச்சுட்டு வர்றேன். மூளை எல்லாம் சூடானது போல இருக்கு…” என்று யாதவ் இருக்கையில் இருந்து எழும் போதே அவனின் முன் காஃபி கப் நீட்டப்பட்டது.

“அட!” என்று ஆச்சரியமாக நிமிர்ந்து பார்த்தான் யாதவ்.

“காஃபி எடுத்துக்கோங்க தம்பி. உங்க முகத்தைப் பார்த்தே ரொம்பச் சோர்வா இருக்குறது தெரிஞ்சது. அதான் நீங்க பேசிட்டு இருக்கும் போது கீழே போய் அத்தைகிட்ட காஃபி வாங்கிட்டு வந்தேன்…” என்று புன்னகையுடன் காஃபியை நீட்டிக் கொண்டிருந்தாள் வசுந்தரா.

“வாவ்! நீங்களே கொண்டு வந்துட்டீங்களா? தேங்க்ஸ் அண்ணி…” என்று காஃபியை வாங்கிப் பருக ஆரம்பித்தான்.

தம்பி காஃபியை ருசித்துப் பருக, அண்ணனோ தன் மனைவியை ரசித்துப் பருகிக் கொண்டிருந்தான் பார்வையால்!

கணவனின் பார்வையை உணர்ந்தது போல் அவனின் புறம் திரும்பிப் பார்த்தாள் வசுந்தரா.

அவனின் பார்வையில் தெரிந்த மாற்றம் அவளை வியக்க வைத்தது.

நேற்று வரை பாராமுகம் காட்டிய கணவன் ஆகிற்றே! திடீரென இன்று ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தால் அவளும் வியக்காமல் என்ன செய்வாள்?

“எனக்குக் காஃபி இல்லையா வசு?” என்று மென்னகையுடன் கேட்டான்.

Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!

கணவனின் மென்னகை இன்னும் அவளுக்கு வியப்பைத் தான் தந்தது.

“ஓ! இல்லையா?” மனைவியின் வியப்புப் புரிந்தாலும் அவளின் அமைதியைப் பார்த்துக் கிண்டலாகக் கேட்டான் பிரசன்னா.

“இதோ… இதோ கொண்டு வர்றேன்…” தடுமாற்றத்துடன் சொல்லிவிட்டு வியப்பு மாறாமலேயே கீழே இறங்கிச் சென்றாள்.

“அண்ணாரே… நானும் இங்க தான் இருக்கேன்…” என்று காஃபியை ரசித்துக் குடித்துக்கொண்டே அண்ணனைக் கேலி செய்தான் யாதவ்.

“நீ இன்னுமா இங்க இருக்க? உன் கேஸ் கட்டு கூட டூயட் பாடப் போயிருப்பனுல நினைச்சேன்…” என்று இப்போது மனைவியின் வியப்பைத் தான் கடன் வாங்கியவனாகத் தம்பியைப் பார்த்துச் சொன்னான் பிரசன்னா.

“சரிதான்… என் ஜொள்ளை வேடிக்கை பார்க்காம போய் உன் கேஸ் கட்டைப் பாருன்னு என்னை விரட்டுற?” என்று காஃபி குடித்த கப்பைக் கீழே வைத்த படி கேட்டான்.

“புரிஞ்சா சரி…” கொஞ்சம் கூட‌த் தயக்கமே இல்லாமல் சொன்னான் பிரசன்னா.

“நல்லா வழியுற அண்ணா…” என்று கிண்டலாகச் சொல்லிக் கொண்டே எழுந்த யாதவ் “யாதவா… உனக்குன்னு ஒருத்தி வர நாளாகும். அதுவரைக்கும் நீ கேஸ் கட்டு கூடத் தான்டா குடும்பம் நடத்த முடியும்…” என்று தன் முகத்திற்கு நேராகச் சுட்டு விரலை நீட்டி தன்னைத் தானே சொல்லிக் கொண்டே அங்கிருந்து சென்றான்.

“ஹா…ஹா…” என்று தம்பியின் செய்கையில் வாய் விட்டுச் சிரித்தான் பிரசன்னா.

கணவனின் மலர்ந்த சிரிப்பைப் பார்த்துக் கொண்டே அவனுக்குக் காஃபியை நீட்டினாள் வசுந்தரா.

“நீ குடிச்சியா வசு?” அதே சிரித்த முகம் மாறாமல் காஃபியை எடுத்துக் கொண்டே கேட்டான்.

‘நிஜமாகவே என்னிடமா‌ கேட்டார்?’ என்ற பாவனைத் தான் ‌காட்டி நின்றாள் வசுந்தரா.

“உன்கிட்ட‌‌ தான் கேட்குறேன். நீ தானே வசு?” அவளின் பார்வையின் அர்த்தத்தைப் படித்தவன் போல இலகுவாகவே கேட்டான் பிரசன்னா.

‘திடீரென நீங்க இப்படி இலகுவா என்கிட்ட பேசுவீங்கனு கனவா கண்டேன்…’ என்று நினைத்தவள் ‘குடித்துவிட்டேன்’ என்பது போல் தலையை மட்டும் அசைத்தாள்.

நன்றாகப் பேசிக் கொண்டிருந்தவன் முகம் அப்படியே மாறியது.

புன்னகையைத் தொலைத்து எழுந்தவன், “உள்ளே வா!” என்று அழைத்து விட்டு நிற்காமல் அறைக்குள் சென்றான்.

‘இப்போ என்ன ஆச்சுன்னு இப்படிப் போறார்?’ என்று குழம்பிப் போய் அவனின் பின் சென்றாள் வசுந்தரா.

ஆனாலும் அவளின் மனதில் கேள்விகள் குடைந்து கொண்டிருந்தன.

ஊட்டியில் இருந்த வரை தன் முகம் பார்த்துப் பேச மறுத்த கணவன், தேவைக்கு மேல் அதிகம் பேசாதக் கணவன், அவ்வப்போது குத்தலாய்ப் பேசிய கணவன்!

இப்போது இங்கே வீட்டிற்கு வந்த பிறகு தம்பியின் முன்னிலையில் சகஜமாகச் சிரித்துப் பேசினார் என்றால் தங்கள் ஊடல் குடும்பத்திற்குத் தெரியக்கூடாது என்று தானே அப்படிப் பேசிச் சிரித்திருக்க வேண்டும்?

இல்லை வேறு ஏதாவது காரணம் உண்டா?

ஒருவேளை என் மேல் உள்ள கோபம் குறைந்து விட்டதா?

இல்லையே கோபம் குறைந்திருந்தால் இப்போது அவர் தம்பி உள்ளே சென்றதும் ஏன் முகம் மாற வேண்டும்? கோபமாகத் தன்னை அறைக்குள் அழைக்க வேண்டும்?

இல்லை… அவரின் கோபம் மாறவில்லை. மாறியிருந்தால் பழைய படி ‘தாரா’ என்றல்லவா அழைத்திருக்க வேண்டும்?

அதை விடுத்து எல்லோரையும் போல் வசு, வசுந்தரா என்று தானே அழைக்கிறார். இந்த அழைப்பு ஒன்றே அவரின் கோபத்தைப் பறைசாற்றுகின்றதே? என்று பலவிதமாகத் தனக்குள் கேட்டுக் கொண்டே குழம்பிய மனதுடன் அறைக்குள் சென்றாள் வசுந்தரா.

நேற்றைக்கும், இன்றைக்கும் என்று மாறி மாறி பிரசன்னா காட்டிய முக மாற்றங்கள் அவளைக் குழப்பத்தில் தள்ளவில்லை என்றால் தான் அதிசயம்!

உள்ளே சென்று அங்குமிங்கும் நடை பயின்ற பிரசன்னா “உட்கார்!” என்று படுக்கையைக் காட்டினான்.

அவள் அமர்ந்ததும் அறைக் கதவைத் தாழிட்டு வந்தவன் தானும் படுக்கையில் சிறிது இடைவெளி விட்டு அமர்ந்த பிரசன்னா மனைவியையே முறைத்துப் பார்த்தான்.

அவனின் கோபம் ஏனென்று புரியாமல் அவனைக் கேள்வியுடன் அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தாள் வசுந்தரா.

“நான் ஒரு டாக்டர்னு உனக்குத் தெரியுமா தெரியாதா?” என்று கோபம் குறையாமலேயே கேட்டான்.

‘என்ன கேள்வி இது?’ என்பது போல் பார்த்த வசுந்தரா ‘தெரியும்’ என்று தலையை ஆட்டினாள்.

அதில் இன்னும் அதிகமாக அவளை முறைத்தவன், “வெறும் டாக்டர் மட்டுமில்ல. நான் ஒரு சர்ஜனும் கூட…” என்று மேலும் சொன்னான்.

‘என்னடா இது?’ என்ற பாவனையுடன் அதற்கும் ‘தெரியும்’ என்று தலையை ஆட்டினாள் வசுந்தரா.

“ஆமா, நீ எப்போ ஊமையானாய்?” என்று கடுப்புடன் கேட்டான் பிரசன்னா.

“ஊமையா? என்ன சொல்றீங்க?” என்று குழப்பத்துடன் கேட்டாள் வசுந்தரா.

“ஹப்பா! பேச்சு வந்துருச்சா?” என்று நக்கலாகக் கேட்டான்.

“நீங்க என்ன பேசறீங்கனே எனக்குப் புரியலை. எதுக்கு இப்போ இந்தக் கேள்விக் கேட்குறீங்க?” என்று கேட்டாள்.

“நான் என்ன பேசினாலும் தலையைத் தலையை ஆட்டியது யாரு? நீ தானே?” என்று கேட்டான்.

‘ஓ! அதுக்குத் தான் கோபமா?’ என்பது போல் பார்த்தாள்.

“முதலில் இப்படிக் கண்ணாலே பேசுறதை விடு வசு…” என்று கடுப்பாகச் சொன்னவன் “நான் என்ன கேள்விக் கேட்டாலும் வாயைத் திறந்து பதில் சொல்லிப் பழகு!” என்று கண்டிப்பாய் மொழிந்தான்.

“இல்லை… ஏற்கெனவே நான் ரொம்பப் பேசிட்டேன். இனி நான் பேச்சில் கவனமா இருந்துக்கணும்னு தான்…” என்று வசுந்தரா தயக்கத்துடன் சொல்ல,

“இதுவரை பேசியது, பேசாம போனதை எல்லாம் விட்டுடு வசு. ஆனா இனி நான் என்ன கேட்டாலும் ஒழுங்கா பதில் சொல்லிப் பழகு. என்னோட வைத்திய தொழிலுக்கு நான் இவ்வளவு கோபமும், டென்ஷனுமே படக்கூடாது வசு.

எவ்வளவு டென்ஷனா இருந்தாலும் நான் என்னை ரிலாக்ஸாக வச்சுக்கத் தான் முயலுவேன். ஆனா கல்யாணம் ஆனப் பிறகு என்னை அப்படி ரிலாக்ஸ் பண்ணிக்க முடியலை. அதுக்குக் காரணம் நீ!” என்று வசுந்தராவைச் சுட்டிக் காட்டிக் குற்றம் சாட்டினான் பிரசன்னா.

அதில் வசுந்தராவின் முகம் வாட்டத்தைப் பிரதிபலித்தது.

அவனிடம் சரியாகப் பேசக்கூடாது என்று அவளுக்கு வேண்டுதலா என்ன? முன் போல அவளால் பேச முடியவில்லையே என்ன செய்வாள்?

அவள் உண்மையை அனைத்தையும் கொட்டி விட்ட பிறகு கணவன் காட்டிய கோபம், பாராமுகம், வருத்தம் அனைத்தையும் கண்டு அவளுக்கு ஏனோ இப்போதெல்லாம் சகஜமாகப் பேசவே முடிவதில்லை.

அதுவும் பேசிக்கொண்டிருக்கும் போதே சுருக்கென்று கணவன் ஏதாவது பேசி விடுவதில் அவளின் மனது சுணங்கிக் கொள்கின்றது.

இப்படியெல்லாம் நடக்கும் என்று எதிர்பார்த்து தான் அவனிடம் உண்மையைச் சொன்னாள். ஆனாலும் இளகிய மனம் கொண்ட பெண் மனம் அல்லவா!

உள்ளுக்குள் இருந்து அவளை உறுத்திக் கொண்டிருக்கும் வலி அவளை அவ்வப்போது மெளனியாக்கி விடுகிறது.

அவளின் வாடிய முகத்தைக் கண்டவன் “இதை உன்னைக் குத்திக் காட்ட சொல்லலை. இனி என் சூழ்நிலையைப் புரிந்து நீ நடந்துக்கணும் என்பதற்காகத் தான் சொல்றேன்…” என்றான்.

வசுந்தரா ‘புரிந்தது’ என்று மீண்டும் தலையை அசைக்க, அவளின் உச்சந்தலையில் கை வைத்து அழுத்திப் பிடித்தான்.

“இப்படித் தலையை ஆட்டாதேன்னு தான் சொல்லிட்டு இருக்கேன்…” என்று கடிந்து கொண்டான் பிரசன்னா.