என்னுள் யாவும் நீயாக! – 16

அத்தியாயம் – 16

“ஹேய்! இப்படி வந்து நில்லு…” அங்கே பக்கத்தில் யாரோ யாரையோ சொல்லிக் கொண்டிருக்க, அந்தப் பேச்சுச் சப்தத்தில் பிரசன்னா, வசுந்தரா இருவரும் தங்கள் நிலையிலிருந்து கலைந்தனர்.

வேகமாக அவளை விட்டுத் தள்ளி நின்ற பிரசன்னா தலையை அழுத்தமாகக் கோதிக் கொண்டான்.

அவளும் தடுமாற்றத்துடன் பூக்களைப் பார்ப்பது போல் திரும்பி நின்று கொண்டாள்.

தன் தொண்டையைச் செருமி கொண்டவன், “வா, அந்தப் பக்கம் போகலாம்…” என்றான்.

இப்போது முன்னேயும், பின்னேயும் நடக்காமல் இருவரும் இணைந்தே நடந்தனர்.

அதன் பின் ஜாக்கிரதையாகப் புகைப்படம் எடுப்பதைத் தவிர்த்து விட்டனர்.

மீண்டும் மௌனம்!

மதியம் வரை பூங்காவில் சுற்றியவர்கள் மதிய உணவை வெளியே சென்று ஓர் உணவகத்தில் முடித்துக் கொண்டனர்.

“அடுத்து எங்கே போகலாம்?” என்று பிரசன்னா கேட்க,

“எங்கே என்றாலும் ஓகே தான்…” என்றாள்.

“போட்டிங் போகலாம். பெடல் போட்டிங் நல்லா இருக்கும்…” என்ற பிரசன்னா அடுத்ததாக மனைவியை அங்கே அழைத்துச் சென்றான்.

போட்டிங் என்ற போது சம்மதமாகத் தலையசைத்த வசுந்தராவைக் கண்டவன், பெடல் போட்டிங் என்ற போது அவளின் முகம் மாறியதைக் காணாமல் போனான்.

நொடிப் பொழுது முகம் மாறினாலும் அதன் பிறகு எந்த மறுப்பும் சொல்லாமல் அவனுடன் சென்றாள்.

போட்டிங் செல்லும் ஏரி வர, வசுந்தராவை ஓரமாக நிற்க வைத்து விட்டுப் போய் டிக்கெட் வாங்கிக் கொண்டு வந்தான்.

“அங்கே வரிசையில் நிற்கணும்…” என்று அவளுடன் சென்று போட் ஏறும் வரிசையில் நின்றான்.

ஆட்கள் நகர்ந்து அவர்கள் முறையும் வர, இருவருக்கும் லைஃப் ஜாக்கெட் கொடுக்கப்பட்டது.

அதை அணியும் போதே அவளின் கைகள் லேசாக நடுங்க ஆரம்பித்தது. முயன்ற வரை தன் நடுக்கத்தைக் கணவன் பார்த்து விடாமல் மறைத்தாள்.

அவர்களுக்கான போட் வரவும் முதலில் உள்ளே இறங்கிய பிரசன்னா அவள் ஏற அவளின் கைப்பிடித்து உதவினான்.

அப்போது உணர்ந்த அவளின் லேசான கை நடுக்கத்தைக் கூட, தான் அவளின் கையைப் பிடித்ததால் என்று நினைத்துக் கொண்டான்.

போட்டின் ஒரு பக்கம் அவன் அமர்ந்து பெடல் போட ஆரம்பிக்க, மறுபக்கம் அமர்ந்து வசுந்தராவும் அவனுக்கு ஏற்றவாறு காலை பெடலில் அழுத்தினாள்.

போட்டை செலுத்தும் கவனத்துடன் பிரசன்னா இருக்க, அருகில் இருந்த வசுந்தராவின் மனநிலையை அவன் அறியவே இல்லை.

அவளுக்குப் போட்டிங் போகப் பிடிக்கும் தான். ஆனால் அது குடும்பத்துடன் செல்லும் பெரிய போட் தான் பிடிக்கும். அந்தப் போட்டை அனுபவம் வாய்ந்த அங்கே வேலை செய்யும் நபர்கள் ஓட்டுவதால் பயம் இல்லாமல் விரும்பியே போட்டிங் செல்வாள்.

ஆனால் பெடல் போட் அவளுக்கு எப்போதும் பிடிக்காது. அதைத் தாங்களே ஓட்டும் படியாக இருக்கும்.

அது மட்டுமில்லாமல் அந்தப் போட்டில் செல்லும் போது தண்ணீரும் மிக அருகில் இருப்பதால் அவளுக்குப் பயம் அதிகம் உண்டு.

அனுபவம் இல்லாதவர்கள் ஓட்டுவதால் எப்படிப் போட்டை செலுத்துவது என்று தெரியாமல் மற்ற போட்டை இடிக்கப் போவது போல் சென்று அதில் உள்ளவர்களையும் சேர்த்துப் பயமுறுத்துவதும் உண்டு.

அதனாலேயே எப்போதும் பெடல் போட்டை நிராகரித்து விடுவாள்.

இப்போது தன் பயத்தை வெளியே காட்டாமல் இருக்கப் போராடிய படி கணவனுடன் போட்டில் பயணித்தாள்.

பிரசன்னா எந்தத் தடுமாற்றமும் இல்லாமல் நன்றாகவே தான் போட்டை செலுத்தினான். ஆனாலும் பயம் என்னவோ அவளை விட்டுப் போக மறுத்தது.

“போட்டிங் பிடிச்சிருக்கா வசுந்தரா? எஞ்சாய் பண்றயா?” என்று போட்டை கவனமாகச் செலுத்திக் கொண்டே கேட்டான்.

“ம்ம்… பிடிச்சிருக்கு…” என்று முனங்களாகப் பதில் சொன்னாள் வசுந்தரா.

“நீ இங்கே முன்னாடி வந்த போது யார் கூடப் பெடல் போட்ட?” என்று கேட்டான்.

“இல்லை… நான் யார் கூடவும் இதுவரை பெடல் போட்டதில்லை…” என்று பதில் சொன்னாள்.

“ஏன்?” என்று கேட்டவன் அப்போது தான் அவளின் புறம் திரும்பிப் பார்த்தான்.

“ஏய் என்ன? வசு… வசுந்தரா…” என்று பதட்டத்துடன் அழைத்தான்.

அவனுக்குப் பதட்டத்தை வர வைத்தவளோ மொத்த பயத்தையும் உள்வாங்கியவளாகக் கண்களை இறுக மூடி, உதடுகள் துடிக்கக் காண கிடைத்தாள்.

“வசுந்தரா… என்னமா என்னாச்சு? ஏன் இப்படி இருக்க? இங்கே பார்! கண்ணைத் திறந்து என்னைப் பார்…” என்று பதட்டத்துடன் அவளை அழைத்தான் பிரசன்னா.

“ம்கூம்… நான் மாட்டேன். பயமா இருக்கு…” என்று சிறுபிள்ளை போல் கண்களைத் திறக்க மறுத்தாள் வசுந்தரா.

“பயமா?” என்று கேட்டவன் அவளின் மடியில் இருந்த அவளின் கையை மெதுவாகப் பற்றிக்கொண்டான்.

இப்போது அவளின் கை நடுக்கத்தை அவனால் நன்றாக உணர்ந்து கொள்ள முடிந்தது.

“உனக்குப் போட்டிங் போறது பயமா?” என்று கேட்டான்.

‘ஆமாம்’ என்று தலையை வேகமாக அசைத்தாள்.

“முன்னாடியே சொல்லிருக்க வேண்டியது தானே?” என்று அவளின் பயத்தை உணர்ந்து மென்மையாகக் கடிந்து கொண்டான்.

அதற்கு அவள் ஒன்றும் சொல்லாமல் இருக்க, “சரி, பயப்படாதே! கரைக்குப் போயிடலாம்…” என்று அவளுக்குத் தைரியம் சொன்னவன் போட்டை கரையை நோக்கித் திருப்பினான்.

அவளின் கை இன்னும் அவனின் கைக்குள் தான் இருந்தது. அழுத்தமாக பற்றிக் கொண்டான்.

கரைக்கு வந்ததும் தானே கை கொடுத்து அவளைக் கவனமாக இறக்கி விட்டான்.

லைஃப் ஜாக்கெட்டை கழட்டும் இடத்தில் பிரசன்னா முதலில் ஜாக்கெட்டை கழட்டி இருக்க, வசுந்தரா கழட்ட முடியாமல் தடுமாறிக் கொண்டிருந்தாள்.

“என்ன வசு? கழட்ட வரலையா?” என்று கேட்ட படி அவளைப் பார்க்க, அவளின் கைகள் இன்னும் நடுங்கிக் கொண்டிருந்தன. அந்த நடுக்கம் ஜாக்கெட் பட்டனைக் கழட்ட விடாமல் அவளைத் தடுமாற வைத்தது.

அதனைக் கண்டவன் “நீ கையை எடு. நான் கழட்டுறேன்…” என்று அவளின் அருகே நெருங்கிச் சென்றவன் பட்டனுடன் போராடிக் கொண்டிருந்தவளின் கையைத் தானே மெதுவாக எடுத்து விட்டு அவளின் வயிற்றின் அருகிலும், மார்பின் அருகிலும் இருந்த பட்டனை மெல்ல விடுவித்து, கை வழியாகத் தானே லைஃப் ஜாக்கெட்டை கழட்டினான்.

லைஃப் ஜாக்கெட்டை கழற்றும் போது மெல்லிய ஸ்பரிசத் தீண்டல்கள் தன்னிச்சையாக நடந்தன.

இருவரும் அதை உணர்ந்தே இருந்தனர்.

ஆனால் இருவருமே தாங்கள் உணர்ந்த தீண்டலை வெளிக்காட்டாமல் மறைத்தனர்.

அவளின் லைஃப் ஜாக்கெட்டை தானே கழட்டி கொடுத்து விட்டு மீண்டும் அவளின் கையைப் பற்றிக் கொண்டான்.

அப்போது பற்றிய கையை அறைக்கு வரும் வரையிலுமே விடவில்லை பிரசன்னா.

அறைக்கு வந்த போது மாலை ஆகியிருந்தது.

அவளின் கையைப் பற்றிய படியே அறைக்குள் வந்தவன் அங்கிருந்த இருக்கையில் அவளை அமர வைத்த பிறகு தான் கையை விடுவித்துக் கொண்டான்.

அவளின் பயம் அப்போதே குறைந்து விட்டது தான். ஆனால் அவன் பற்றிய கையைத் தானாக விடுவிக்கத் தயங்கிக் கையை விடுவித்துக் கொள்ள முயலவில்லை.

வசுந்தரா அங்கிருந்த இருக்கையில் அமர்ந்திருக்க, பிரசன்னா அவளுக்கு எதிராக இருந்த சுவரில் சாய்ந்து நின்று அவளைத் தீர்க்கமாகப் பார்த்தான்.

கணவனின் பார்வையின் அர்த்தம் புரியாது அவனைப் பார்த்து முழித்துக் கொண்டிருந்தாள் வசுந்தரா.

“பெரிய பெரிய விஷயத்தை எல்லாம் என்கிட்ட அசால்டா சொன்னவளுக்குப் போட்டிங் போறது பயம்னு மட்டும் எப்படி என்கிட்ட சொல்ல முடியாம போச்சு?” என்று கேட்டான் பிரசன்னா.

‘தான் காதலித்ததைச் சொல்லிக் காட்டுகிறான்’ என்று நினைத்தவள் வலியுடன் உதட்டைக் கடித்துக் கொண்டாள்.

‘அசால்டா சொன்னேனா? நானா? இல்லையே… என்னால அசால்டா சொல்ல முடியலையே. அப்படிச் சொல்ல முடிஞ்சிருந்தா பொண்ணு பார்க்க வந்த அன்னைக்கே சொல்லிருப்பேனே?

தயங்கி, தடுமாறி, பயந்து, அடுத்து என்ன நடக்குமோனு புரியாம குழம்பி, சொல்லியே ஆகணும்னு உறுதியைக் கொண்டு வந்து தானே சொன்னேன்’ என்று அவளுக்குள்ளேயே சொல்லிக் கொண்டாள்.

அவளின் மனப்போராட்டம் புரியாமல் “சொல்லு வசுந்தரா. ஏன் சொல்லலை?” என்று கேட்டுக் கொண்டிருந்தான் பிரசன்னா.

“அது… காலையில் நீங்க எனக்குப் பிடிச்ச இடம் எதுன்னு கேட்டு கூட்டிட்டு போனீங்க. மதியம் போட்டிங் போகலாமானு கேட்டப்ப உங்க குரலில் ஒரு சந்தோஷம் தெரிஞ்சது. அப்போ போட்டிங் உங்களுக்கு ரொம்பப் பிடிக்கும்னு நினைச்சேன். பெடல் போட்டிங் போக எனக்குப் பயம்னு சொல்லி உங்க சந்தோஷத்தைக் கெடுக்க மனசில்லை. அதான் சொல்லலை…” என்றாள் விளக்கமாக.

“எனக்காகவா?” என்று கேட்டவனின் குரலில் என்ன இருந்தது? கிஞ்சித்தும் அவளால் புரிந்து கொள்ள முடியவில்லை.

அவனின் பார்வை அவளை மென்மையாக வருடிச் சென்றது போல் இருந்தது.

“சரி, இப்போ பயம் போயிருச்சா?” என்று கேட்டான்.

“ம்ம்… போயிருச்சு…” என்றாள்.

அதற்கு மேல் அவர்களுக்கிடையே பேச வார்த்தைகளே இல்லாதது போல் வாயை இறுக மூடிக் கொண்டனர்.

பிரசன்னாவிற்கு ஏனோ அந்தச் சூழ்நிலை பிடிக்கவே இல்லை.

அவன் கண்ட கனவு என்ன? இப்போது வார்த்தைகள் கூட இருவருக்கும் இடையே பஞ்சமாகிப் போனது என்ன?

இப்படி ஒரு நிலை வரக்கூடாது என்று தானே காலையில் இருந்து வெளியில் சுற்றிக் கொண்டிருக்க முடிவு செய்திருந்தான்.

ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தபடி நான்கு சுவற்றுக்குள் அமைதியாக இருப்பது சகிக்க முடியாததாக இருந்தது.

காலையில் புகைப்படம் எடுக்கும் போதும், லைஃப் ஜாக்கெட்டை கழட்ட உதவிய போதும் இருவருக்குமிடையே இயல்பாக உண்டான ஸ்பரிசத் தீண்டல்கள் அவனின் ஞாபக அடுக்கில் வந்து போனது.

அது ஞாபகத்தில் வரவும் மனைவியின் முகத்தை ஆராய்ச்சியாகப் பார்த்தான்.

அவளோ அப்படி எந்த ஞாபகமும் இல்லாதவள் போலத் தன் கையில் இருந்த வளையல்களை வருடிக் கொண்டு அமைதியாக அமர்ந்திருந்தாள்.

‘இவளுக்கு மட்டும் எந்தப் பாதிப்புமே இல்லையா?’ என்று தோன்ற அவனுக்கு அவளின் நிலையைக் கண்டு எரிச்சல் வந்தது.

அந்தக் குளிர் பிரதேசத்திலும் அனல் மேல் நிற்பது போல் உணர்ந்தான்.

அவளை அப்படிப் பார்த்துக் கொண்டிருப்பது மூச்சும் முட்டும் நிலையை உண்டாக்க, “நான் கொஞ்ச நேரம் வெளியே போய்ட்டு வர்றேன்…” என்று தகவல் சொன்னவன் அதற்கு மேல் ஒரு நொடி கூட அங்கே நிற்காமல் விரைந்து வெளியே சென்றான்.

திடீரென்று அவன் அப்படி வெளியே செல்வது ஏனென்று புரியாமல் விழித்துக் கொண்டு அமர்ந்திருந்தாள் வசுந்தரா.

ஆனாலும் பக்கத்தில் எங்கேயாவது சென்றிருப்பான் வந்துவிடுவான் என்று நினைத்துக் காத்திருந்தாள்.

அறைக்குள்ளேயே சுற்றிச் சுற்றி நடந்து வந்தாள். ஜன்னல் வழியாக வேடிக்கைப் பார்த்தாள்.

நேரம் தான் சென்று கொண்டிருந்ததே தவிர அவன் வரும் வழியைக் காணோம்.

‘என்னாச்சு? எங்கே போனாங்க? இவ்வளவு நேரம் ஆகுமென்றால் என்னையும் கூட்டிட்டு போயிருக்கலாமே? ஏன் இன்னும் காணோம்? போன் பண்ணலாமா? இன்னும் சிறிது நேரம் வெயிட் பண்ணி பார்க்கலாமா?’ என்ற கேள்விகள் அவளின் மனதில் விதவிதமாகத் தோன்ற ஆரம்பித்தன.

நேரம் செல்லச் செல்ல வெளியே ஆட்களின் நடமாட்டம் குறைந்து கொண்டே வந்ததை ஜன்னல் வழியாகக் கண்டு, அதற்கு மேலும் பொறுக்க முடியாமல் கணவனின் அலைபேசிக்கு அழைத்தாள்.

ரிங்டோன் முழுதும் அடித்து ஓய்ந்த பிறகும் அவன் எடுக்காமல் போக, அவளுக்கு மனதில் பயம் அப்பிக்கொண்டது

மீண்டும் அவள் முயற்சி செய்ய, அதே நேரத்தில் அறையின் அழைப்பு மணியும் ஒலி எழுப்பியது.

‘வந்துட்டாங்களா?’ என்று பரபரப்பாக ஓடிச் சென்று கதவைத் திறந்தாள்.

கையில் உணவு பார்சலுடன் நின்று கொண்டிருந்தான் பிரசன்னா.

“நீ போன் போட்டப்ப நான் இங்கே பக்கத்தில் வந்துட்டேன். அதான் போன் எடுக்கலை. நேரமாச்சுன்னு சாப்பாடு வாங்கிட்டு வந்துட்டேன். வா சாப்பிடலாம்…” என்று ஒன்றுமே நடக்காதது போல் சாதாரணமாகப் பேசிக் கொண்டு உள்ளே வந்தவனைக் கலக்கமான முகத்துடன் பார்த்தாள் வசுந்தரா.

ஆனால் பிரசன்னா அவளின் முகத்தை நிமிர்ந்து பார்க்காமல் அங்கிருந்த சிறிய மேஜையின் மீது பார்சலை வைத்தவன், குளியலறைக்குள் புகுந்து கொண்டான்.

அவன் வெளியே வந்த பிறகும் வசுந்தரா அப்படி நின்றிருந்தாள்.

“என்ன நிக்கிற? சாப்பாட்டை எடுத்து வை வசுந்தரா பசிக்குது…” என்று அப்போதும் அவளின் முகம் பார்க்காமலேயே சொன்னான்.

அந்தச் செய்கையே அவன் தன்னை நிராகரிப்பதை எடுத்துச் சொல்ல, அதற்கு மேல் தன் வருத்தத்தை அவனுக்குக் காட்ட விருப்பம் இல்லாமல் “இதோ வந்துடுறேன்…” என்று முனங்கி விட்டுக் குளியலறைக்குள் நுழைந்து முகத்தைக் கழுவி விட்டு வந்தாள்.

அதன் பின் மௌனமாக உண்டு முடித்து எழுந்தனர்.

அன்று மட்டும் அல்ல. அடுத்து ஊட்டியில் இருந்த நாட்கள் முழுவதும் அப்படித்தான் நடந்து கொண்டான். காலையில் கிளம்பி அவளை வெளியே அழைத்துச் சென்று ஊர் சுற்றி விட்டு அறையில் கொண்டு வந்து விடுபவன், மாலையில் அவன் மட்டும் வெளியே போய்விட்டு இரவு நேரம் சென்றே திரும்பி வந்தான்.

கணவனின் நடவடிக்கையைக் கண்டு ‘இனி நம் வாழ்க்கை இப்படித்தான் இருக்கப் போகின்றது’ என்று அவன் தனக்கு உணர வைப்பதாக நினைத்த வசுந்தரா கலங்கித்தான் போனாள்.