என்னுள் யாவும் நீயாக! – 14

அத்தியாயம் – 14

தாலாட்டுவது போல் அந்த ரயில் அசைந்தாடி ஓடிக் கொண்டிருந்தது.

ரயிலின் ஆட்டத்திற்கு ஏற்ப லேசாக அசைந்தபடி அந்தக் குளிர்சாதனப் பிரிவில் இருந்த இருக்கையில் ஜன்னல் கண்ணாடியில் தலையைச் சாய்த்துக் கண்களை மூடி அமர்ந்திருந்தாள் வசுந்தரா.

கண்கள் மூடியிருந்தாலும் அவளின் எண்ணங்கள் யாவும் எதிரே அமர்ந்திருக்கும் அவளின் கணவனைச் சுற்றியே சுழன்றுக் கொண்டிருந்தன.

அந்தக் கூபேவில் அவர்கள் இருவர் மட்டுமே இருந்தனர்.

தேனிலவுப் பயணத்திற்காகப் பிரத்யேகமாக அவர்கள் இருவருக்கு மட்டும் அந்தக் கூபே உன் பதிவு செய்யப்பட்டிருந்தது. அதனால் வேறு அந்நிய நபர்கள் யாரும் அவர்கள் அருகில் இல்லை.

அருகருகே அமர்ந்து அவன் தோளில் அவள் சாய்ந்தபடி வர, அவளின் விரலோடு விரல் கோர்த்து, பல இனிய கதைகள் பேசி, அவனின் செல்லச் சீண்டலும், அவளின் வெட்கச் சிணுங்கலுமாக அந்தப் பயணத்தை ரசித்து அனுபவித்து மகிழ வேண்டும் என்ற பல கற்பனைகளுடன் அங்கிருந்த இருக்கைகளைப் பதிவு செய்திருந்தான் பிரசன்னா.

இப்போதோ அவள் ஓர் இருக்கையிலும், அவன் எதிர் இருக்கையிலுமாக அமர்ந்து வர, அவனின் தோள் சாய்ந்திருக்க வேண்டியவளோ ஜன்னலில் தலைச் சாய்த்துக் கொண்டு வந்தாள்.

சென்னையில் இருந்து கோயம்புத்தூர் நோக்கிச் சென்று கொண்டிருந்தார்கள்.

அங்கிருந்து கார் பிடித்து ஊட்டிக்குச் செல்வதாக ஏற்பாடு.

‘சென்னையில் இருந்து காரிலேயே செல்லலாமே?’ என்று கேட்ட தந்தையிடம், ரயில் பயணமே செல்கிறோம் என்று சொன்னவன் அவன் தான்.

ரயில் பயணம் எப்போதும் அவனுக்குப் பிடித்தமான ஒன்று.

மருத்துவன் ஆனப் பிறகு அதிகம் ரயில் பயணம் மேற்கொள்ள முடியாமல் போனதுண்டு. விமானத்திலோ, காரிலேயோ தான் செல்ல நேரும் படியாக இருக்கும்.

இப்போது திருமணத்திற்காகப் பதினைந்து நாட்கள் விடுமுறை எடுத்திருந்ததால் அதில் அவனுக்குப் பிடித்தமான ரயில் பயணத்தையும் வைத்துக் கொண்டான். அதுவும் தன் மனைவியுடன் செல்லும் முதல் நீண்ட தூரப் பயணம் மறக்க முடியாததாக இருக்க வேண்டும் என்று அவ்வளவு ஆசையுடன் ஏற்பாடு செய்திருந்தான்.

ஆனால் இப்போது ஆளுக்கு ஒரு மூலையில் அமர்ந்து கொண்டு வருகிறோம் என்ற நினைப்பில் அவனுக்கு வருத்தமான பெருமூச்சு தான் எழுந்தது.

ஊட்டி செல்ல முடிவெடுத்தவனும் அவன் தான்.

அதுவும் “ஏன் சிம்லா, குலு-மணாலி போல் ஏதாவது ஊருக்குச் செல்ல வேண்டியது தானே?” என்று அவனின் நண்பன் சஞ்சீவ் கேட்ட போது,

“ஹனிமூன் போறது உறவுகள் சுத்தி இல்லாம நான் என் வொய்ப்பை பற்றியும், அவள் என்னைப் பற்றியும் அறிந்து கொள்ளத் தான்டா போறது. ஊரைப் பற்றி அறிந்து கொள்ளப் போகலை.

ஊட்டி நானும், அவளும் ஏற்கனவே தனித்தனியா போய்ச் சுத்திப் பார்த்த ஊர். சோ, ஊரைச் சுத்திப் பார்க்கணும்னு ஆசை வராது. ஊரைச் சுத்திப் பார்ப்பதை விட, எங்களை நாங்களே சுத்திப் பார்க்க தான் விரும்புறேன்…” என்று கடைசி வரியைக் கண்ணைச் சிமிட்டியபடி சொன்னான் பிரசன்னா.

“நீ சரியான கேடிடா… அப்போ ஹனிமூன்ல ஹனிமூன் வேலையை மட்டும் பார்க்கப் போறன்னு சொல்லு. எஞ்ஜாய்டா…” என்று சஞ்சீவ்வும் கேலி செய்து சிரித்தான்.

அன்றைய பேச்சை இன்று நினைத்துப் பார்த்து இப்போது அனைத்தும் நிராசையாக ஆனதில் அவனின் கண்களில் வலியின் சாயல் வந்து அமர்ந்து கொண்டது.

எதிரில் அமர்ந்திருந்தவளை ஏறிட்டுப் பார்த்தான்.

இப்போது அமர்ந்து கொண்டே தூங்கி வழிந்த படி ஜன்னலில் லேசாக முட்டிக் கொண்டிருந்தாள் வசுந்தரா.

‘தூக்கம் வந்தா படுத்துத் தூங்காம இப்போ எதுக்கு இப்படி ஜன்னலில் முட்டிக்கிட்டு இருக்காள்?’ என்று நினைத்தவன், “வசுந்தரா…” என்று அழைத்தான்.

கணவனின் அழைப்பில் பட்டென்று கண்களைத் திறந்து அவனைப் புரியாமல் பார்த்தாள்.

“சீட்டில் நல்லா படுத்துத் தூங்கு…” என்றான்.

‘சரி’ என்று தன்போக்கில் படுக்கப் போனவளுக்கு அப்போது தான் தாங்கள் இன்னும் இரவு உணவை உண்ணாதது ஞாபகத்தில் வந்தது.

இரவு ஆரம்பிக்கும் நேரத்தில் வீட்டில் இருந்து கிளம்பியதால் இரவு உணவைத் தயாரித்து ரயிலில் சாப்பிட்டுக் கொள்ளும் படி பார்சல் செய்து கொடுத்து விட்டிருந்தார் ராதா.

ரயில் கிளம்பி ஒரு மணி நேரம் கடந்திருந்தது. மணி இரவு எட்டரை ஆகியிருந்தது. ‘அதற்குள் அமர்ந்து கொண்டே தூங்கி விட்டேனே…’ என்று நினைத்தவள் நன்றாக எழுந்து அமர்ந்தாள்.

“என்ன படுக்கலையா?” என்று பிரசன்னா கேட்க,

“நீங்க இன்னும் சாப்பிடலையே. சாப்பிடலாமா?” என்று கேட்டாள்.

“ஓகே சாப்பிடலாம். சாப்பிட்டே படு. நான் போய் ஹேண்ட் வாஷ் பண்ணிட்டு வர்றேன்…” என்று எழுந்து சென்றான்.

சென்றவனையே ஆராய்ச்சியாகப் பார்த்தாள் வசுந்தரா.

‘இரண்டு நாட்களுக்கு முன் என் சிரிப்பைப் பறித்தவள் நீ தான்!’ என்று குற்றம் சாட்டியவன் அதன் பிறகு மற்றவர்கள் முன் சாதாரணமாகவே நடந்து கொண்டான்.

தனி அறையிலும் ஒரே படுக்கையில் படுத்தாலும் தள்ளியே இருந்தான்.

ஆனால் ஆரம்பத்தில் இருந்த இறுக்கமான முகம் அவனிடம் இல்லாதது போல் இருந்தது.

அவ்வப்போது அன்று போல் ஏதாவது வெடுக்கென்று சொன்னாலும் அதையும் தாண்டிப் பல சமயங்களில் இயல்பாகவே பேச முயன்றான்.

இப்போதும் இந்தத் தேனிலவுப் பயணம் ஆரம்பித்ததில் இருந்து சாதாரணமாகவே நடந்து கொண்டான்.

கணவனைப் பற்றி யோசித்துக் கொண்டே அவள் அமர்ந்து விட, கையைக் கழுவி விட்டு வந்தவன், “இப்போ நீ போய்ட்டு வா!” என்று அவளை அனுப்பி வைத்தான்.

அவளும் வந்ததும் இருவரும் அமைதியாக உணவை உண்டு முடித்தனர்.

சாப்பிட்டதும் அனைத்தையும் எடுத்து வைத்து விட்டு ஆளுக்கு ஒரு படுக்கையில் மீண்டும் அமர்ந்து விட்டனர்.

பேசற்ற மௌனம் தான் அங்கே ஆட்சி செய்தது.

அவள் படுக்கையில் அமர்ந்ததும், “சாப்பிட்டதும் படுக்கக் கூடாது. கொஞ்ச நேரம் உட்கார்ந்து இரு!” எங்கே அவள் உடனே படுத்து விடுவாளோ என்று நினைத்துச் சொன்னான்.

“இல்லை, தூங்கலை…” என்றவள் ஜன்னல் பக்கமாகச் சாய்ந்து இருக்கையில் காலை நீட்டி அமர்ந்து கொண்டாள்.

அவளுக்கு அவனிடம் ஏதாவது பேச வேண்டும் போல் இருந்தது. ஆனால் என்ன பேச என்றும் தெரியவில்லை.

தான் பேச ஆரம்பித்து எங்கே மீண்டும் இறுக்கமாக மாறி விடுவானோ என்று பயமாக வேறு இருந்தது.

அவள் நினைத்ததை உணர்ந்தது போலத் தானே பேச்சை ஆரம்பித்தான் பிரசன்னா.

அவனும் அவளைப் போலவே ஜன்னலில் சாய்ந்து காலை நீட்டி அமர்ந்தவன், “அடுத்து என்ன செய்வதாக இருக்க வசுந்தரா?” என்று கேட்டான்.

அன்று முதலிரவில் அவள் சொன்ன விஷயத்திற்குப் பிறகு அவளைத் தாரா என்று அழைப்பதையே விட்டிருந்தான் பிரசன்னா.

திருமணம் முடிவு செய்த நாளில் இருந்து அவனின் வாயிலிருந்து தாரா தவிர அவளின் முழுப் பெயர் வந்ததே இல்லை.

ஆனால் இப்போதோ முழுப் பெயர் தவிர வேறு வருவதில்லை.

அதிலேயே தன் மேல் கணவனுக்கு இருக்கும் கோபம் புரிய, வசுந்தராவிற்கு வருத்தமாக இருந்தது.

‘அதற்குக் காரணமும் நான் தானே?’ என்று தன்னையே நிந்தித்துக் கொண்டாள்.

இப்போது அவனின் கேள்விக்கான அர்த்தம் அவளுக்குப் புரியவில்லை.

“எதைப் பத்தி கேட்குறீங்க?” என்று கேட்டாள்.

“உன் வேலை தான். நீ உன் அப்பாவோட ஷோரூமை தானே பார்த்துக் கொண்டு இருந்தாய். அதை இனி அப்படியே தொடரப் போறீயா? இல்லை வேற எதுவும் ஐடியா இருக்கா?” என்று கேட்டான்.

“அப்படியே தொடரலாம்னு தான் எண்ணம் இருக்கு…” என்றாள்.

“ஓ! ஓகே… உனக்கு ஷோரூம் பத்தி எல்லா விவரமும் தெரியுமா?”

“ஆமாம்… நல்லாவே தெரியும். முன்னாடி வேற ஆஃபிஸில் வேலை பார்த்தப்போ கூட நேரம் இருந்தால் ஷோரூமையும் பார்த்துக்கப் போயிருக்கேன்…” என்றாள்.

“நீ ஏன் முன்னாடி பார்த்த வேலையை விட்டாய்?” என்று பிரசன்னா எதார்த்தமாகக் கேட்க, வசுந்தராவின் முகம் வெளிறியது.

அது கிருபாகரனின் நினைவினால் அல்ல!

மீண்டும் அந்தப் பேச்சை எடுத்து கணவனை மேலும் வருந்த வைக்கும் எண்ணமில்லை என்பதே காரணம்.

அதனால் அதைப் பற்றிப் பேசுவதைத் தவிர்க்க நினைத்தாள். ஆனால் அது எப்படி என்று தெரியாமல் தடுமாறிப் போனாள்.

பேசிக் கொண்டே வந்தவள் பழைய வேலையைப் பற்றிக் கேட்டதும் மௌனமாகி விட்டதை உணர்ந்து அவளைப் புரியாமல் பார்த்தவனுக்கு அவளின் முகப்பாவனை அனைத்தையும் புரிய வைத்தது.

“ஓ! அங்கே தான் அவன் இருக்கானா?” என்று கேட்டவனின் குரலில் என்ன பாவம் இருந்தது என்று விளங்கிக் கொள்ள முடியாமல் அவனைப் பயத்துடன் பார்த்தாள் வசுந்தரா.

“அவன் அங்கே இருந்தால் என்ன? நீ ஏன் வெளியே வரணும்? என்ன பயமா?” என்று அவனே தொடர்ந்து கேட்க,

அவன் கேள்வியில் இருந்த சீண்டல் அவளைப் பேச வைத்தது.

“பயமில்லை. அது அசூசை!” என்றவள் முகத்தைச் சுளித்துக் கொண்டாள்.

‘ஏன் அப்படி?’ என்று அவளைப் பார்க்க,

“சிலரை நம்ம வாழ்நாளில் எப்பவும் பார்க்கவே கூடாதுனு ஒரு வெறுப்பு இருக்கும்ல அதான் காரணம். எனக்கு அவனின் நிழல் இருக்கும் இடம் கூட வேணாம்னு தோணுச்சு. அதான் வெளியே வந்துட்டேன்…” என்றாள்.

அவளின் பதிலில் அவனின் கண்கள் ஒளிர்ந்ததோ?

ஆனால் அவள் பார்க்கும் போது சாதாரணமாகவே இருந்தான்.

“சரி, அந்தப் பேச்சை விடு!” என்றான்.

“நான் அப்பா ஷோரூம் போறதைப் பற்றி உங்களுக்கு வேற எதுவும் எண்ணம் இருக்கா ?” என்று கேட்டாள்.

“போ! அதைப் பற்றி எனக்கு ஒன்னும் இல்லை. உனக்குப் பிடிச்சா, டைம் இருந்தால் நம்ம ஷோரூம் கூடப் போ!” என்றான்.

“ம்ம்… சரி…” என்றாள்.

“அப்புறம் இன்னொரு விஷயம்…” என்று அவன் ஆரம்பிக்க,

“சொல்லுங்க…” என்றாள்.

“இப்போ நம்ம கல்யாணத்துக்காகத் தான் பதினைந்து நாள் லீவ் போட்டுருக்கேன். ஆனா இது போலத் திரும்ப லீவ் போடுவதெல்லாம் கஷ்டம். என் வேலை பகல், இரவுன்னு பார்க்காமல் இருக்கும். அதனால் வெளியே போவது, எங்கும் ஊருக்குப் போவது எல்லாம் அரிது தான்.

ஞாயிறு லீவ் தான். ஆனால் அன்னைக்கும் ஏதாவது எமர்ஜென்சி வந்தால் நான் ஹாஸ்பிட்டல் போய்டுவேன். மெடிக்கல் சம்பந்தமாக எதுவும் கான்பிரன்ட்ஸ் இருந்தால் அதுக்கும் போய்ட்டு வருவேன். இதெல்லாம் எதுக்குச் சொல்றேன்னா நீ வேற எதுவும் எதிர்பார்ப்பு வச்சுருந்தால் ஏமாந்து போய்ட கூடாதுன்னு தான்…” என்றான் நீண்ட விளக்கமாக.

“எனக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லை. சூழ்நிலைக்கு ஏற்ப நடப்பதை ஏற்றுக் கொள்வேன்…” என்றாள்.

“எப்படி? இப்போ நம்ம கல்யாணத்தை ஏற்றுக் கொண்டது போலவா?” என்று அவன் தீர்க்கமாகக் கேட்டான்.

இதற்கு என்ன சொல்வது என்று தெரியாமல் மௌனம் சாதித்தாள்.

‘இவ்வளவு நேரம் நல்லாத்தானே பேசினார். அப்படியே பேசினால் என்னவாம். இதென்ன நடுவில் ஒரு கொட்டு?’ என்று நினைத்தவளின் மனம் சுணங்கிப் போனது.

அதுவரை பதிலுக்குப் பதில் பேசிக் கொண்டு வந்தவள் மௌனத்தின் பிள்ளையானாள்.

‘வாழ்நாள் முழுவதும் அவனின் இந்தக் குத்தல் பேச்சுத் தொடருமோ?’ என்று நினைத்தவளுக்கு மனதைப் பிசைந்தது.

ஆனால் அப்போதும் அவனிடம் ‘உண்மையைச் சொல்லாமல் மறைத்தே இருக்கலாம்’ என்று மட்டும் அவளின் எண்ணம் போகவே இல்லை.

உண்மை சில நேரங்களில் மட்டுமல்ல, பல நேரங்களில் வலியைத் தான் கொடுக்கும்.

பொய், ஏமாற்று ஆரம்பத்தில் வேண்டுமானால் ருசிக்கலாம். ஆனால் பொய்யும், ஏமாற்றும் தோல் உரிந்து போகும் போது ஏற்படும் அவமானத்தை விட உண்மையைச் சொல்லி வலியைச் சுமந்து கொள்வதே மேல் என்று நினைத்தாள்.

வசுந்தராவின் இந்த நினைப்பு எப்போதும் தொடருமா?