என்னுள் யாவும் நீயாக! – 11

அத்தியாயம் – 11

பிரசன்னாவின் முகத்தில் அவ்வளவு இறுக்கத்தை முதல் முறையாகப் பார்க்கின்றாள் வசுந்தரா.

‘அவனின் மலர்ந்த முகத்தில் இறுக்கத்தை வரவைத்தவள் நானே அல்லவா?’ என்று தோன்ற அவளின் மனம் மிகுந்த வேதனை அடைந்தது.

அன்று மருத்துவச் சோதனை பற்றிப் பேசும் போதும் கோபப்பட்டான் தான். ஆனால் அன்று அவனின் முகமாற்றத்தை அவள் காணவில்லையே?

முதல் முதலாகப் பார்த்த அவனின் முக இறுக்கம் அவளை வருந்த வைத்தது. அதுவும் தன்னால் தான் என்ற எண்ணம் அவளின் மனதை ஏதோ செய்தது.

நிமிடங்கள் கரைந்தன. தன் வேதனையை மென்று முழுங்குவது போல் நின்றிருந்த பிரசன்னா பின் அவளின் முகத்தையே கூர்ந்து பார்த்தான்.

அவன் என்ன சொல்வானோ என்று நினைத்துத் தயக்கத்துடனே பார்த்தாலும் தன் பார்வையை விலக்கிக் கொள்ளவில்லை அவள்.

“சோ?” என்றான் ஒற்றை வார்த்தையாக.

‘அதனால் என்று கேட்டால் என்ன சொல்ல?’ என்பது போல அவனை அமைதியாகப் பார்த்தாள் வசுந்தரா.

“ஹ்ம்ம்… சொல்லு தாரா. நீ ஏற்கனவே லவ் பண்ணின. அதனால் என்ன?” என்று கேட்டான்.

அவனின் கேள்வியில் அவளின் விழிகள் விரிந்தன.

‘அதனால் என்ன? என்று கேட்டால் அப்போ தான் காதல் செய்தது அவருக்கு ஒன்றுமே இல்லையா?’ என்று நினைத்தாள்.

“பேச வந்ததைப் பேச ஆரம்பிச்ச பிறகு மௌனமாக இருக்கக் கூடாது தாரா…” என்றான் அழுத்தமாக.

“ம்ம்ம்… என்ன பேச? உங்ககிட்ட என் முன்னால் காதல் விஷயத்தை மறைக்கக் கூடாதுன்னு நினைச்சேன். அதான் சொன்னேன்…” என்று மெதுவான குரலில் சொன்னாள் வசுந்தரா.

“சரி, சொல்லியாச்சு… அப்புறம்?” என்று கேட்டான்.

“அப்புறம்னா? நீங்க என்ன கேட்க வர்றீங்கன்னு எனக்குப் புரியலை…” என்றாள்.

“இன்னும் அந்தக் காதல் இருக்கா?” என்று பட்டென்று கேட்டான்.

“அய்யோ! இல்லை… இப்போ நான் உங்க மனைவி வசுந்தரா மட்டும் தான்…” என்று வேகமாகச் சொன்னாள்.

அவளின் பதிலைக் கேட்டு ஆசுவாசம் அடைந்தானோ?

பிரசன்னா முகத்தில் முன்பு இருந்த இறுக்கம் குறைந்தது. ஆனாலும் மலர்ச்சி என்பது மருந்துக்கும் இல்லை.

“ஓகே, நல்லது! படுத்துத் தூங்கு…” என்று படுக்கையைக் கை நீட்டிக் காட்டியவன், அங்கிருந்த பால்கனியை நோக்கி நடந்தான்.

அவனின் பேச்சும், செய்கையும் புரியாமல் விக்கித்து நின்றாள் வசுந்தரா.

பால்கனி கதவின் தாழ்பாளை இழுத்தவன், கதவைத் திறக்காமல் மெதுவாக அவளின் புறம் திரும்பி, “என் வாழ்க்கையில் கல்யாணம் ஒரு முறை தான். முன்பு நீ எப்படி இருந்தாலும் இப்போ என் மனைவி. இனி இந்தப் பந்தத்தில் இருந்து நீயும் சரி, நானும் சரி விடுபட முடியாது. சோ…” என்று நிறுத்தி “தனித்தனிப் படுக்கை எல்லாம் எதிர்பார்க்காதே…” என்று அழுத்தமாகச் சொல்லிக்கொண்டிருக்கும் போதே,

“இல்லை… அப்படி எந்த எண்ணமும் எனக்கு இல்லை‌…” என்று வேகமாக அவனின் பேச்சில் குறுக்கிட்டாள்.

ஆனால் அவள் குறுக்கே பேசாதது போல் பாவித்து அவளின் கண்களை நேருக்கு நேராகப் பார்த்து “எனக்குக் காதலும் ஒரு முறை தான்!” என்று தீர்க்கமாகச் சொல்லிவிட்டுக் ‘கட்டிலில் போய்ப் படு!’ என்பது போல் கையை அசைத்துவிட்டு பால்கனி கதவைத் திறந்து வெளியே சென்றான் பிரசன்னா.

கதவைத் திறந்து வைத்து விட்டு அதற்கு நேராகப் பால்கனி சுவரைப் பிடித்துக் கொண்டு சாலையைப் பார்த்தபடி நின்றிருந்த கணவனின் முதுகையே வெறித்துப் பார்த்தாள் வசுந்தரா.

தான் உள்ளே வரும் போது அவனிடம் இருந்த உற்சாகத்தைத் தான் வேரோடு பிடுங்கிப் போட்டுவிட்டது போல் கலக்கத்துடன் அவனைப் பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள்.

அதிலும் எனக்குக் காதலும் ஒரு முறை தான் என்று அவன் சொன்ன விதம்?

அவளுக்கு மிகவும் வலித்தது. அவளின் மனவலியை மேலும் கூட்டியிருந்தது. ஆனாலும் அத்தனை வலியிலும் அவளுக்கு இத்தனை நாட்கள் அரித்துக்கொண்டிருந்த குற்றவுணர்வில் இருந்து விடுதலை கிடைத்திருந்தது.

தன் முன்னால் காதல் விஷயத்தை மறைத்த குற்றவுணர்வு!

அவள் நினைத்திருந்தால் அவ்விஷயத்தைக் கணவனிடம் மறைத்திருக்க முடியும். அவள் சொல்லாமல் விட்டிருந்தால் அவனுக்குத் தெரியவரும் வாய்ப்புக் குறைவு தான்.

ஆனால் இனி அவர்களின் உறவு வாழ்நாள் முழுவதும் தொடரப் போகின்ற உறவு. அவ்வுறவை ஒரு விஷயத்தை மறைத்ததில் இருந்து ஆரம்பிக்க அவள் விரும்பவில்லை.

இப்போது கணவனின் மனநிலை எப்படி இருக்கும் என்று அவளால் புரிந்து கொள்ள முடிந்தது.

ஆனாலும் ஒன்றும் செய்ய முடியாத கையறு நிலையில் அவனின் முதுகையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள்.

நொடிகள் நிமிடங்களாகக் கடந்து, நிமிடங்கள் மணி நேரமாக மாறிய பிறகும் பால்கனியில் நின்றிருந்த பிரசன்னாவிடம் எந்த வித மாற்றமும் இல்லை.

வசுந்தராவும் அப்படியே நின்றிருந்தாள்.

கால்களுக்கு ‘அமர்ந்து விடு!’ என்று மூளை உத்தரவிட ஆரம்பிக்கவும், மெதுவாகப் படுக்கையை நோக்கி நடந்தாள்.

ஆனால் படுக்கையில் அமராமல் அவளின் கண்கள் கணவன் இருந்த புறம் திரும்பியது. ‘அவனுக்கும் இப்படித்தானே வலிக்கும்?’ என்று தோன்ற தன் கால்களை அவனை நோக்கித் திருப்பினாள்.

கதவின் அருகில் சென்று நின்றவள், “ஸாரி…” என்றாள் மெதுவாக.

அவளின் குரல் கேட்டு தலையை மட்டும் திருப்பியவன், “நீ இன்னுமா படுக்கலை?” என்று கேட்கும் போதே முன் போல இப்போதும் அவள் உரிமையான எந்த அழைப்பும் இல்லாமல் பேசுவதை உணர்ந்து புருவம் சுருக்கினான்.

“நீங்க படுக்கலையா?” என்று திருப்பிக் கேட்டாள்.

“படுக்கவா? இன்னைக்குத் தூங்கவே கூடாதுனு நினைச்சேன். ஆனா இப்போ… ம்ப்ச்…” என்று தனக்குத் தானே சொல்வது போல் மெதுவாக முனகினான்.

அவனின் முணுமுணுப்பு அவளின் காதுகளையும் சென்றடைய, கணவனை வேதனையுடன் பார்த்தாள்.

முதல் நாளே ஒரு மனைவியாகக் கணவனை வருந்த வைத்துக் கொண்டிருக்கிறோம் என்ற எண்ணம் வாள் கொண்டு அறுக்க, சில நொடிகள் மௌனமாக இருந்தாள்.

பின் மெல்ல அவனின் முகம் பார்த்து, “ஒரு மனைவியா நான் நடந்து கொள்வதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை…” என்றாள்.

அடுத்த நொடி பிரசன்னாவின் முகம் கோபத்தால் சிவந்து போனது.

அவளை எரித்து விடுவதைப் போல் பார்த்தவன், “பேசாம போய்ப் படு! போ!” பல்லைக் கடித்துக் கொண்டு சொன்னவன் மீண்டும் சாலையின் புறம் திரும்பிக் கொண்டான்.

வேகமாக ஏறி இறங்கிய தோள்கள் அவனின் கோபத்தைப் பறைசாற்றின.

நேரம் கடந்த போதும் அவனின் கோபம் சிறிதும் குறையாமல் இருக்க, “உங்களைக் கஷ்டப்படுத்துறேன்னு எனக்கு நல்லாவே புரியுது. ஆனால்…” என்று அவள் மேலும் பேச முயல,

“எந்த ஆனாலையும் கேட்கும் மனநிலையில் நான் இல்லை. இப்போ எனக்குத் தேவை தனிமை…” என்று திரும்பிப் பார்க்காமலேயே அழுத்தமாக உரைத்தான்.

அதில் வசுந்தராவின் கண்கள் லேசாகக் கலங்க ஆரம்பிக்க, அதற்கு மேலும் அங்கே நிற்காமல் படுக்கையில் சென்று படுத்தாள்.

படுத்துவிட்டாலும் தூக்கம் வராமல் அவளுக்கு ஆட்டம் காட்ட பால்கனியில் நின்றிருந்த கணவனின் மீது பார்வை பதித்தபடியே படுத்திருந்தாள்.

வெளியே இருந்த பிரசன்னாவோ எதிலோ தோற்றுப் போன உணர்வில் நின்றிருந்தான்.

‘இப்போது நான் உங்கள் மனைவி மட்டுமே!’ என்று வசுந்தரா சொன்னாள் தான். ஆனாலும் அது மட்டுமே போதாது என்று அவனுக்குத் தோன்றியது.

தனக்கு மனைவியாக வருபவளை மட்டுமே காதலித்து வாழ வேண்டும் என்ற கனவில் இருந்தவன் அவன்.

‘எனக்கு வரும் மனைவியும் அவ்வாறு இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டது பேராசையோ?’ என்று தனக்குத் தானே கேட்டுக் கொண்டான்.

இப்போது அவன் மனைவியாக நடந்து கொள்ளத் தயார் என்று அவள் சொன்னது வேறு அவனுக்குக் கோபத்தை உண்டு பண்ணியிருந்தது.

அதாவது மனைவி என்ற கடமையை மட்டும் நிறைவேற்ற நினைக்கின்றாள்.

‘நான் என்ன கடமையைச் சரிவர ஆற்றும் மனைவியை மட்டுமா எதிர்பார்த்தேன்?’

‘கணவன் மனைவிக்குள் கடமை மட்டும் இருந்தால் போதுமா?’

தனக்குத் தானே கேள்விகள் எழுப்பிக் கொண்டவன், “இல்லை… கண்டிப்பாக இல்லை…” என்று வாய் விட்டே சொல்லிக் கொண்டான்.

யோசனையும், குழப்பமும், வருத்தமும், கோபமுமாக நேரத்தைப் போக்கியவன், மீண்டும் அறைக்குள் வந்த போது அவனைப் பார்த்தபடியே கழுத்தை வைத்துப் படுத்திருந்த வசுந்தரா ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள்.

கழுத்தை அவள் அண்ணாந்து பார்ப்பது போல் வைத்திருக்க, ‘கழுத்து வலிக்குமே’ என்று நினைத்தவன் சரி செய்ய நினைத்துத் தன் கையை அருகே கொண்டு சென்றான்.

ஆனால் அவளின் தலை அருகில் சென்றதும் மீண்டும் கையை இழுத்துக் கொண்டான்.

படுக்கையில் இன்னொரு புறம் சென்று படுத்துக் கொண்டான்.

படுக்கையில் தூவியிருந்த மலர்களும், சுகந்தமான வாசனையை வெளிப்படுத்திக் கொண்டிருந்த அறையின் மணமும், மனைவியின் அருகாமையும் அன்றைய நாளின் முக்கியத்துவத்தைச் சொல்ல “ஹ்ம்ம்…” என்று பெரிதாக மூச்சை இழுத்து விட்டான்.

அருகில் படுத்திருந்த மனைவியைத் திரும்பிப் பார்த்தான்.

அவள் இன்னும் அப்படியே கழுத்தை வைத்துப் படுத்திருக்க, மனம் கேட்காமல் கையை நீட்டி அவளின் தலையை நேராக வைத்து விட்டான்.

தலையில் வைத்த கையை உடனே இழுத்தும் கொண்டான். காலையில் புகைப்படம் எடுக்கும் பொழுதில் ‘நான் உன்னுடையவன்!’ என்று சொல்லி உரிமையுடன் தீண்டியவனுக்கு ஏனோ இப்போது அவளை உரிமையுடன் தீண்ட முடியவில்லை.

தன் மனதில் ஒரு பிரளயத்தையே உண்டாக்கிவிட்டு அமைதியாக உறங்கும் மனைவியைப் பார்த்துக் கொண்டே நித்திரையில் ஆழ்ந்து போனான் பிரசன்னா.

காலையில் முதலில் கண் விழித்தது வசுந்தரா தான்.

கண் விழித்ததும் எதிரே பிரசன்னாவின் முகம் தெரிய, இவ்வளவு நாட்களும் தான் மட்டும் இருந்த அறையில் ஆடவனை உணர்ந்து படுக்கையை விட்டுப் பதறி எழுந்தாள்.

கை எட்டும் தூரத்தில் படுத்திருந்தான் பிரசன்னா. அவ்வளவு அருகில் அவனைப் பார்த்துப் பதறித் தான் போனாள்.

‘இவர் இங்கே எப்படி?’ என்று யோசித்த போதே தங்களுக்குத் திருமணம் நடந்து விட்டதும், இரவில் நடந்து பேச்சுக்களும் ஞாபகத்தில் வர, ஆசுவாசமாக மூச்சு விட்டாள்.

அவனைப் பார்த்துக் கொண்டிருக்கும் போதே அவன் திரும்பிப் படுக்க முயன்றதைக் கண்டவள் வேகமாகப் படுக்கையில் இருந்து எழுந்தாள்.

இரவு அவ்வளவு கோபப்பட்டவன் பகலில் எப்படி நடந்து கொள்வானோ என்று நினைத்தாள். அதோடு அவளின் பெற்றவர்களிடம் எதுவும் சண்டை போடுவானோ? ஏன் வேறு ஒருவனைக் காதலித்தவளை என் தலையில் கட்டினீர்கள் என்று கேட்பானோ? என்று ஏதேதோ நினைத்துக் கலங்கினாள்.

‘எதையும் எதிர் கொள்ளும் முடிவுடன் தானே அவனிடம் உண்மையைச் சொன்னாய். அப்போ என்ன வந்தாலும் சமாளி…’ என்று மனசாட்சி அவளுக்கு எடுத்துரைக்க, ‘சமாளித்துத் தான் ஆகவேண்டும்’ என்று நினைத்தபடி குளியலறைக்குச் சென்று குளித்துத் தயாராகி வந்தாள்.

அப்போதும் பிரசன்னா உறங்கிக் கொண்டிருக்க, அவனை ஒரு பார்வை பார்த்து விட்டு அறைக் கதவைத் திறந்து வெளியே சென்றாள்.

மாடியில் இருந்த இன்னொரு அறையில் அவளின் அக்கா காஞ்சனாவும், அவளின் கணவனும் இருந்தார்கள். அவர்கள் இன்னும் எழாமல் இருக்க, மாடி வெகு அமைதியாக இருந்தது.

மெதுவாகக் கீழே இறங்கிச் செல்ல, வரவேற்பறையிலும் யாரும் இல்லை. சமையலறையில் மட்டும் பேச்சுச் சப்தம் கேட்க அங்கே சென்றாள்.

“பூரி மாவைப் பிசைந்து வைச்சுட்டு குருமாவை வச்சுரு வேணி. நான் குழம்பு வைக்க ஆரம்பிக்கிறேன்…” என்று அவளின் அன்னை கல்பனாவின் குரல் கேட்டது.

“என்னமா இந்நேரமே சமையல் ஆரம்பிச்சுட்டீங்களா?” என்று கேட்டுக் கொண்டு சமையலறை வாசலில் நின்றாள் வசுந்தரா.

திடீரென மகளின் குரல் கேட்டு வேகமாகத் திரும்பிப் பார்த்தார் கல்பனா.

“வசு… நீ என்ன இவ்வளவு சீக்கிரம் எழுந்துட்ட?” என்று கேட்டவர் மகளை ஆராய்ச்சியாகப் பார்த்தார்.

அன்னையின் பார்வைக்கான அர்த்தம் புரிய, அவர் புரிந்து விடக் கூடாது எனத் தயக்கத்துடன் தலையைத் தாழ்த்திக் கொண்டாள்.

மகளின் தலை தாழ்ந்ததை வெட்கமென எடுத்துக் கொண்ட கல்பனா மௌனமாகச் சிரித்துக் கொண்டார்.

“நான் இது எப்பவும் எழுந்திருக்கிற நேரம் தானேமா. காபி குடிக்கணும் போல இருந்தது. அதான் வந்தேன்…” அன்னை வேறு கேட்டு விடும் முன் தானே பேச்சை மாற்ற முயன்றாள்.

அது புரிந்ததும் இன்னும் உதடுகளை விரித்துச் சிரித்த கல்பனா, “காபி தானே? இதோ கலந்து தர்றேன்…” என்று காபியைக் கலக்க ஆரம்பித்தார்.

“இன்னும் யாரும் எழுந்திருக்கலை போல மா?” என்று வீட்டின் அமைதியைக் குறிப்பிட்டு கேட்டாள்.

“கல்யாண அலுப்பு. நானும் இப்போ தான் எழுந்தேன். இனிதான் எல்லா வேலையும் பார்க்கணும். காலை சாப்பாட்டுக்கு மாப்பிள்ளை வீட்டில் இருந்து வருவாங்களே உன்னை அழைச்சுட்டு போக. அதான் பூரி, குருமா, இட்லி, கோழிக்குழம்பு எல்லாம் நானும் வேணியும் ரெடி பண்ணிட்டு இருக்கோம்…” என்று மகளுக்கு விவரம் சொல்லிக் கொண்டே காபியைக் கலந்து அவளிடம் கொடுத்தார்.

“நானும் ஏதாவது வேலை பார்க்கட்டுமா அம்மா?” என்று காஃபியைக் குடித்துக்கொண்டே கேட்டாள் வசுந்தரா.

“இல்ல வசு. நீ இன்னும் கொஞ்ச நேரத்தில் உன் புகுந்த வீட்டுக்குக் கிளம்பணும். அதுவரைக்கும் ஃப்ரீயா இரு…” என்று சொல்லும் போதே கல்பனாவின் கண்கள் கலங்கி விட்டது.

“இனி இந்த வீட்டில் நானும், உன் அப்பாவும் மட்டும்தான் இருப்போம்…” மகள்கள் இனி விருந்தாளிகள் போல் மட்டுமே வந்து செல்வார்கள் என்ற நினைப்பில் கல்பனாவின் அழுகை அதிகரித்தது.

வசுந்தராவிற்கும் அந்த அழுகை தொற்றிக் கொள்ள உதடுகள் அழுகையில் துடிக்க அன்னையைத் தோளோடு அணைத்துக் கொண்டாள்.

“என்னங்கமா இது. பொண்ணு இங்கே பக்கத்தில் தானே வாக்கப்பட்டுப் போகுது. கார்ல ஏறுனா அரைமணி நேரம்…” என்று வேலை செய்யும் பெண்மணி வேணி சொல்ல,

“ஆமாம்மா. நாம நினைச்சா பார்க்கலாம்…” என்று அன்னையின் கண்களைத் துடைத்து விட்டாள் வசுந்தரா.

சிறிது நேரம் அன்னையும், மகளுமாகத் தேற்றிக் கொண்டார்கள்.

“நான் பார் வேலையை விட்டுட்டு அழுதுட்டு இருக்கேன். இந்தா மாப்பிள்ளைக்குக் காபி எடுத்துட்டு போ. அவருக்குப் புது இடம். குளிக்க ஏதாவது தேவையானு பார்…” என்று மகளின் கையில் காஃபி கப்பைக் கொடுத்து விட்டார்.

“சரிமா…” என்று வாங்கிச் சென்ற வசுந்தரா சிறிது தயக்கத்துடனேயே மாடியேறினாள்.

இப்போது என்ன சொல்வானோ என்ற எண்ணம் அவளைத் துரத்த நிதானமாக ஏறினாள்.

எவ்வளவு மெதுவாக ஏறினாலும் அறை வந்து தானே தீரும்!

சாற்றியிருந்த அறைக் கதவைத் திறந்து மெல்ல உள்ளே கணவன் எழுந்து விட்டானா என்று பார்க்க, எழுந்திருந்தான்.

எழுந்து அமர்ந்ததோடு அவனின் பார்வை எதையோ வெறித்துப் பார்க்க ‘என்ன அப்படிப் பார்க்கிறாங்க?’ என்று நினைத்துக் கொண்டே தானும் பார்வையைத் திருப்பினாள்.

இரவு தாவணியில் இருந்த மனைவியின் புகைப்படத்தை ரசித்துப் பார்த்த பிரசன்னா இப்போது உணர்வுகள் அற்று வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.