என்னுள் யாவும் நீயாக! – 10

அத்தியாயம் – 10

காலை ஏழு மணி.

திருமண மண்டபமே ஆரவாரத்தில் ஆட்டம் கண்டது போல் கலகலத்துக் கொண்டிருந்தது.

எட்டு மணிக்கு முகூர்த்தம் குறிக்கப்பட்டிருந்ததால் அனைவரும் திருமணத்திற்குக் கிளம்பிக் கொண்டிருந்தனர்.

மணமகன் அறையில் பிரசன்னா கிளம்பிக் கொண்டிருக்க, மணமகள் அறையில் வசுந்தரா கிளம்பிக் கொண்டிருந்தாள்.

மணப்பெண்ணை அலங்கரிக்க அழகு நிலையப் பெண் வரவைக்கப் பட்டிருந்ததால் அப்பெண் வசுந்தராவை அலங்கரித்துக் கொண்டிருந்தார்.

தலை அலங்காரம் செய்யத் தலையைக் கொடுத்துக் கொண்டிருந்தாலும் அவளின் நினைவுகள் எல்லாம் நேற்று நடந்த நிச்சயதார்த்த நிகழ்வின் மீதே இருந்தது.

பிரசன்னாவிடமிருந்து அப்படி ஒரு செய்கையை அவள் நிச்சயம் எதிர்பார்க்கவே இல்லை.

அதுவும் அத்தனை பேரின் முன் காதலைச் சொல்லி மோதிரம் அணிவித்ததை இப்போது நினைத்தாலும், அவளின் உடலில் சிலிர்ப்பு ஓடி மறைந்தது.

அதை விட ‘அவனின் காதலுக்குத் தான் தகுதியானவள் தானா?’ என்ற குற்றக் குறுகுறுப்பு அவளைப் பாடாய் படுத்திக் கொண்டிருந்தது.

ஏற்கனவே தன் முடிவின் படி இன்னும் தன் முன்னால் காதலைப் பற்றி அவனிடம் சொல்லாமல் இருப்பது வேறு ‘நீ அவனை ஏமாற்றிக் கொண்டிருக்கிறாய்’ என்று அவளின் மனமே அவளைக் குற்றம் சாட்டுவது போல் உள்ளுக்குள் துடித்துக் கொண்டிருந்தாள்.

முன்னால் காதல் ஏற்படுத்திய வலியையும் தாங்க முடியாமல், இப்போது தன் கணவனாகப் போகின்றவன் மீது காதல் என்ற உணர்வு இல்லாமல் திருமணம் செய்வது அவனுக்குத் தான் இழைக்கும் அநீதியாகவே நினைத்தாள்.

அதுவும் அவன் காதல் சொல்லும் நிலைக்கு வந்த பின்னும் தான் அவனைப் பெற்றோர் நிம்மதிக்காக மட்டுமே திருமணம் செய்வது தான் பிரசன்னாவிற்குச் செய்யும் நியாயம் ஆகாது என்று உறுதியாக நம்பினாள்.

நேற்று அவன் கண்களில் பொங்கிய காதலுடன் தனக்கு மோதிரம் அணிவிக்க, தானோ கடமைக்கு அவனுக்கு மோதிரம் அணிவித்து, செயற்கையாகப் புன்னகைத்துச் சாதாரணமாக இருப்பது போல் காட்டிக் கொண்டு என்று தன்னுடைய ஒவ்வொரு செய்கையும் ‘நீ தவறு செய்கிறாய்! நீ தவறு செய்கிறாய்!’ என்று முரசு கொட்டி அறிவிப்பது போல் அவளின் மனம் அதிர்ந்து அறிவித்துக் கொண்டிருந்தது.

‘இதுவரை எப்படியோ? ஆனால் இனியும் தான் கடமையாக மட்டுமே தன் உணர்வுகளைப் பிரதிபலித்தால் காலத்திற்கும் அது தன்னைத் துரத்தும் சாத்தான் போல் ஆகிவிடும்’ என்று நினைத்தவள் கண்களை இறுக மூடிச் சில நிமிடங்கள் அமர்ந்திருந்தாள்.

மீண்டும் வசுந்தரா கண்களைத் திறந்த போது அவளின் முகம் தெளிவுடன் பிரகாசித்தது. அதன் பிறகு திருமண நிகழ்வில் முழு மனதுடன் கலந்து கொள்ள ஆரம்பித்தாள்.

சிறிது நேரத்தில் பெண்ணை அழைக்க, எவ்வித குழப்பமும் இல்லாத மனதுடன் மணமேடை ஏறினாள்.

மணக்கோலத்தில் அமர்ந்திருந்த பிரசன்னா அவளின் வருகையைக் கண்டு திரும்பி அவளை ரசனையுடன் பார்த்து வசீகரமாகச் சிரிக்க, அவனின் அந்தச் சிரிப்பைப் பார்த்தவளின் முகம் மலர்ந்து இதழ்கள் சிரிப்பை அவனுக்குப் பதிலாகக் கொடுக்க ஆரம்பித்தன.

நிச்சயமாக அச்சிரிப்பில் செயற்கை இல்லை என்பதை இதழ்களுடன் அவளின் கண்களும் சேர்ந்து சிரித்துப் பட்டியம் கூறி உறுதி செய்தன.

பட்டு வேட்டி சட்டையில் கம்பீரமாகத் தனி அழகுடன் அமர்ந்திருந்தான் பிரசன்னா.

அவனுக்குச் சற்றும் குறையாத அழகுடன் மிளிர்ந்த வசுந்தரா அவனின் அருகில் அமர்ந்தாள்.

திருமணச் சடங்குகள் நடந்தேற, சற்று நேரத்தில் பிரசன்னாவின் கைக்கு மாங்கல்யம் வந்து சேர்ந்தது.

மங்கலநாணைக் கையில் வைத்துக் கொண்டு அருகில் இருந்த வசுந்தராவைப் பார்த்தான்.

‘இன்னும் ஏன் தாமதம்?’ என்பது போல் வசுந்தரா தலையை நிமிர்ந்து அவனைப் பார்க்க, அவளின் கண்ணோடு கண்கள் பார்வையைக் கலக்க விட்டு, பூரித்த மனதுடன் மாங்கல்யத்தை அவளின் கழுத்தில் கட்டி தன் மணவாட்டியாக மாற்றிக் கொண்டான் பிரசன்னா.

அந்த நொடி வசுந்தராவின் மனமும் நிறைந்தது போல் இருந்தது.

சொந்த பந்தங்கள் மகிழ்வுடன் அட்சதை தூவ, பிரசன்னா, வசுந்தராவின் திருமணம் இனிதாக நடந்தேறியது.

மற்ற சடங்குகள் அடுத்தடுத்து நடக்க, வசுந்தராவும், பிரசன்னாவும் தம்பதிகளாக மகிழ்ச்சியுடன் செய்தனர்.

அவர்களைக் கண்டு மனம் பூரித்து நின்றனர் எத்திராஜும், கல்பனாவும். ‘எங்கே மகள் பழைய காதலைப் பற்றிப் பேசி எதுவும் குழப்பத்தை இழுத்து விட்டுக் கொள்வாளோ?’ என்ற தங்கள் பயத்தை எல்லாம் மகள் ஒன்றும் இல்லாமல் ஆக்கிவிட்டதில் நிம்மதியாக உணர்ந்தனர்.

ஆனால் மகள் ஒரு முடிவு எடுத்து விட்டுத்தான் திருப்தியுடன் திருமதி ஆனாள் என்று அவர்கள் அறியாமல் போனார்கள்.

இனியும் தெரியப் போவதில்லை. இனி அவளின் முன்னால் காதல் விஷயம் கணவன், மனைவியின் அந்தரங்கப் போராட்டமாக வெடிக்கப் போகின்றது. அப்போராட்டத்தை ஆரம்பித்து வைக்கப் போகின்றவளே அவர்களின் மகள் தான் என்று அந்தப் பெற்றோருக்குத் தெரியாமல் போனது.

திருமணச் சடங்குகள் முடிய, உறவினர்களும் நண்பர்களும் வாழ்த்துத் தெரிவிக்க ஆரம்பித்தனர்.

சிறிது நேரத்தில் பிரசன்னாவின் நண்பர்கள் மேடை ஏறி வந்தனர்.

அவர்களை வசுந்தராவிற்கு இரவு வரவேற்பின் போதே அறிமுகப்படுத்தி வைத்திருந்தான் பிரசன்னா.

மணமக்களுக்கு வாழ்த்துத் தெரிவித்துப் பரிசைக் கொடுத்த சஞ்சீவ், “டேய் விக்கி…” என்று நண்பனை அழைத்தான்.

“சொல்லு சஞ்சீ…”

“நம்ம பிரசன்னாக்குள்ள ஒரு ரொமாண்டிக் ஹீரோ ஒளிஞ்சுகிட்டு இருந்தது உனக்கு இதுக்கு முன்னாடி தெரியுமாடா?” என்று கேலியாகக் கேட்டான்.

“இல்லையேடா இல்லையே… இந்தப் பயபுள்ள பச்சைபுள்ள போல இல்ல பாவ்லா காட்டுச்சு…” என்று போலியாகக் கண்ணீர் வடித்தான் விக்னேஷ்.

“நான் கூட நம்ம பிரசன்னா சம்சார வாழ்க்கையை வெறுக்கும் சாமியாரா போயிருவானோனு கவலைப்பட்டுருக்கேன்டா. ஆனா இப்போ சம்சாரம் என்பது வீணைனு பாட்டே பாடுவான் போல…” என்று சிவா கேலி செய்ய,

“பாட்டு மட்டுமா? விட்டா டூயட்டே பாடுவான்…” என்றான் ராஜீவ்.

ஆளுக்கு ஒன்று சொல்லிக் கேலி செய்த நண்பர்களை விரிந்த புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்தான் பிரசன்னா.

அந்த நண்பர்களின் கலாட்டாவை உதட்டுடன் ஒட்ட வைத்த சிறு புன்னகையுடன் கேட்டுக் கொண்டிருந்தாள் வசுந்தரா.

“என்னடா ராம் நீ எதுவும் சொல்லலையா?” ராம் மட்டும் அமைதியாக இருப்பதைப் பார்த்துக் கேட்டான் பிரசன்னா.

“நான் நேற்றிலிருந்து எங்க பிரசன்னாவைத் தேடிட்டு இருக்கேன்டா. இங்கே ஒரு ரொமாண்டிக் ஹீரோ தான் இருக்கான். நீ பிரசன்னாவை எங்கேயாவது பார்த்தால் கண்டுபிடிச்சு சொல்லு…” என்றான் கிண்டலுடன்.

“ஆமாடா, நாங்களும் அவனைத் தான் தேடிட்டு இருக்கோம்…” என்று கோரஸாகச் சொன்ன நண்பர்களைப் பார்த்து வாய் விட்டுச் சிரித்தான் பிரசன்னா.

“அது எப்படிடா ரோஸ் கொடுத்து ப்ரொபோஸ் பண்ண சொன்னப்ப எங்க மூக்கை உடைச்சுட்டு மோதிரம் போட்டப்ப பண்ணின? ஏற்கனவே முடிவு பண்ணி வச்சிருந்தியா?” என்று கேட்டான் ராம்.

“இல்லடா, நான் எதுவுமே முடிவு பண்ணலை. நீங்க ரோஸ் கொடுத்து ப்ரொபோஸ் பண்ண சொன்ன போது தான் தோணுச்சு. பாதையில் வச்சு அதுவும் வெறும் ரோஸ் கொடுத்து லவ்வை சொல்லணுமானு தோணுச்சு. அப்போ தான் மோதிரம் போடுறப்ப சொன்னா அதை விடப் பெரிய ஸ்வீட் மெமரிஸ் இருக்க முடியுமா என்னனு தோன்றவும் மேடையில் வச்சு ப்ரொபோஸ் பண்ணினேன்…” என்றான்.

“கேடிடா நீ. எப்படியெல்லம் யோசிச்சுருக்க…” என்றான் ராஜீவ்.

“இன்னைக்குக் கூட இவன் ஏதாவது செய்வானான்னு காத்திருந்தேன்டா ராஜீவ். நான் நினைச்ச மாதிரியே கரெக்டா செய்தானே நம்ம பிரசன்னா. நீ பார்த்தியா?” என்று கேட்டான் விக்னேஷ்.

“ஆஹா! அதுதானே கண்கொள்ளாக் காட்சி! தாலியைச் சிஸ்டர் கண்ணைப் பார்த்துட்டேல கட்டினான்…” என்று சொல்லி ஆர்ப்பாட்டமாகச் சிரித்தான் சஞ்சீவ்.

அவர்கள் பேசியதைக் கேட்டு வசுந்தராவின் கன்னம் சிவந்தது.

அதைக் கண்ட பிரசன்னா அவளை ரசனையுடன் பார்த்துவிட்டு நண்பர்கள் புறம் திரும்பி “டேய் போதும்! கிண்டல் வண்டி ரொம்பத் தூரம் ஓடிருச்சு. பிடிச்சு நிறுத்துங்க!” என்றான் சிரிப்புடன்.

“நீ ரொம்ப ஸ்பீடா இருக்கியேடா. உன் ஸ்பீடுக்கு நாங்களும் வரணும்ல…” என்று கிண்டல் செய்து கொண்டே வாழ்த்தி விட்டுக் கீழே இறங்கிச் சென்றனர்.

அனைவரும் புகைப்படம் எடுத்து முடித்ததும் உணவை உண்டு விட்டு மாப்பிள்ளையையும், பெண்ணையும் தனியாக நிற்க வைத்துப் புகைப்படம் எடுக்கப் போட்டோகிராபர் அழைக்கவும் மணமகன் அறைக்குள் இருவரும் சென்றனர்.

அவர்கள் இருவரைத் தவிர அந்த அறையில் புகைப்படம் எடுப்பவரும், வீடியோ எடுப்பவரும் மட்டுமே இருந்தனர்.

முதலில் இருவரையும் அருகருகில் நிற்க வைத்து எடுத்தவர்கள், பின்பு தோளில் கை போட சொல்லி எடுத்தனர்.

அதுவரை இயல்பாக இருந்த வசுந்தரா அடுத்தப் புகைப்படம் எடுக்க நிற்கச் சொன்ன நிலையில் சங்கடத்துடன் முழித்தாள்.

வசுந்தரா முன்னால் நிற்க, அவளின் பின்னால் நின்று ஒரு கையை அவளின் தோளிலும், இன்னொரு கையை முன்னால் கொண்டு வந்து அவளை அணைப்பது போலப் பிரசன்னாவை நிற்கச் சொன்னதில் தடுமாறிப் போனாள்.

அவளுக்கு முற்றிலும் மாறாக வெகு இயல்பாக ஆர்வத்துடனே அப்புகைப்படத்திற்குத் தயாரானான் பிரசன்னா.

ஆனால் இடுப்பில் பாதியும், வயிற்றில் மீதியுமாகக் கணவனின் கை தன்னைச் சுற்றி வளைக்கச் சங்கடத்துடன் நெளிய ஆரம்பித்தாள் வசுந்தரா.

அவளை உணர்ந்த பிரசன்னா மெதுவாக அவளின் புறம் குனிந்து “நான் உன்னுடையவன் தாரா! என்னிடம் ஏன் தயக்கம்? இயல்பாக இருக்க முயற்சி செய்யேன்…” என்று காதில் கிசுகிசுத்தான்.

அவனின் ‘நான் உன்னுடையவன்’ என்ற வார்த்தை ஆழமாக அவளின் மனதில் சென்று அடைக்கலமானது.

அவ்வார்த்தையில் மனது உடலை இளக்கமாக வைக்கக் கட்டளை தர, உடல் கீழ்படிய ஆரம்பித்தது.

அடுத்தச் சில புகைப்படங்கள் எடுப்பதற்கும் அவனின் அந்த வார்த்தையை மட்டும் பற்றுக்கோலாக பற்றிக் கொண்டு இயல்பாக இருக்க முயன்றாள்.

ஒரு வழியாகப் புகைப்படம் எடுத்து முடித்து, மணமக்களை மாப்பிள்ளையின் வீட்டிற்கு அழைத்துச் சென்றனர்.

பிரசன்னாவின் இல்லத்தில் செய்ய வேண்டிய சடங்குகளை முடித்து, அடுத்து பெண்ணின் வீட்டிற்குச் சென்றனர்.

அவர்களின் வழக்கப்படி பெண்ணின் வீட்டில் தான் மற்ற சடங்குகள் நடக்கும் என்பதால் பிரசன்னா மட்டும் அங்கே தங்கினான்.

இரவு உணவு முடிந்து புதுமண தம்பதிகளுக்கான தனிமையான நேரமும் வந்து சேர்ந்தது.

வசுந்தராவின் அறையில் தான் இரவுக்காக அலங்கரிக்கப்பட்டிருந்தது.

பிரசன்னா ஏற்கனவே அங்கே காத்திருந்தான். மனைவியை எதிர்பார்த்து ஆவலுடன் மணித் துளிகளை நெட்டித் தள்ளிக் கொண்டிருந்தான்.

அதுவரை அவனின் பார்வை அவளின் அறையை வட்டமிட்டுக் கொண்டிருந்தது.

வட்டமிட்டவனின் விழிகள் மேஜையின் மீதிருந்த அவளின் ஒரு புகைப்படத்தில் நிலைத்து நின்றது.

அப்புகைப்படத்தில் பாவாடை, தாவணியில் லேசாகத் தலையைச் சாய்த்து வசீகரமாகச் சிரித்தபடி நின்றிருந்தாள் வசுந்தரா. சற்று இள வயதில் எடுத்திருந்த புகைப்படம் போலும். தற்போது விட இன்னும் இளமையாக அதில் தெரிந்தாள்.

அப்படம் பிரசன்னாவை வசீகரிக்க, “வாவ்! லவ்லி!” ரசனையுடன் அவனின் உதடுகள் முணுமுணுத்தன.

அப்போது கதவைத் திறந்து வசுந்தரா உள்ளே வர, அதே ரசனையுடன் அவளைத் திரும்பிப் பார்த்தான்.

அன்றைய இரவுக்காக லேசாக அலங்கரித்துப் புதுமலராக வந்து நின்ற தன் புத்தம் புது மனைவியை மனம் மயங்கப் பார்த்தான் பிரசன்னா.

“வா தாரா…” தனது வலது கையை அவள் புறம் நீட்டி அழைத்தான்.

அவனின் கையைப் பற்றாமல் தன் கையில் இருந்த பால் டம்ளரை நீட்டினாள் வசுந்தரா.

டம்ளரை வாங்கி அங்கிருந்த மேஜையின் மீது வைத்தவன், மீண்டும் தன் கையை அவளின் புறம் நீட்டினான்.

ஆனால் அவனின் கையைக் காணாதவள் போல் அங்கிருந்த சுவற்றின் மீது சாய்ந்து நின்றாள்.

அவளை யோசனையுடன் பார்த்தவன், “தாரா?” என்றான் கேள்வியாக.

காலையில் இருந்து இதுவரை இல்லாத வகையில் வசுந்தராவின் முகம் இறுகிப் போயிருந்தது.

தங்களின் தனிமையைக் கண்டு தயங்குகின்றாளோ என்று தோன்ற, இதழ்களில் மெல்லிய சிரிப்பைக் கசிய விட்டவன் “என்ன தாரா வெட்கமா?” என்று கேட்டான்.

“உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்…” அவனின் கேள்வியைப் புறம் தள்ளியவள் நேராக விஷயத்திற்கு வந்தாள்.

“என்ன பேசணும்?” அவளின் குரலில் தெரிந்த இறுக்கம் அவனை யோசனையுடன் பார்க்க வைத்தது.

“அது…” பேச வேண்டும் என்று முடிவெடுத்து விட்டாலும் அவள் பேச நினைத்த விஷயம் அவளுக்குத் தயக்கத்தைக் கொடுத்தது.

“நீ என்ன பேச நினைத்தாலும் பேசலாம் தாரா. என்கிட்ட தயக்கம் தேவையில்லை. ஆனா அதுக்கு முன்னாடி இங்கே வா. இப்படி உட்கார்ந்து பேசு…” என்று கட்டிலைக் காட்டினான் பிரசன்னா.

“இல்லை, வேண்டாம். நான் இங்கே நின்றே பேசுறேன்…” என்ற வசுந்தரா அந்த இடத்தை விட்டு நகர மறுத்தாள்.

“எதுக்கு இப்போ இவ்வளவு பிடிவாதம் தாரா? அப்படி என்கிட்ட என்ன பேசணும்?” என்று யோசனையுடன் கேட்டான்.

“என்னோட இந்தப் பிடிவாதம் இப்போ தேவையான ஒன்னு தான். ஏன்னு நான் சொல்லப் போற விஷயமே உங்களுக்குப் புரிய வைக்கும்…” என்று பூடகமாகப் பேசியவளை இப்போது பெரும் குழப்பத்துடன் பார்த்தான் பிரசன்னா.

“நான் இப்போ வந்து இந்த விஷயத்தைப் பேசுவதே லேட் தான். முன்னாடியே நான் சொல்லியிருக்கணும்…” என்று வருத்தத்துடன் பேசிக் கொண்டே போக,

“என்ன விஷயம்னு பட்டுனு சொல்லிடு தாரா…” என்றான் பிரசன்னா.

அவன் அப்படிக் கேட்டதும் மீண்டும் தயக்கம் வர, “நா… நான்…” என்று தயங்கினாள்.

“நீ?” புருவம் சுருங்கக் கேட்டான்.

“நான் ஒருத்தரை முன்னாடி லவ் பண்ணினேன்…” என்று வேகமாகச் சொல்லி முடித்துவிட்டுத் தயக்கத்துடன் அவனின் முகம் பார்த்தாள்.

அவள் பார்க்கும் போதெல்லாம் மலர்ச்சியுடன் இருந்த அவனின் முகம் அவள் சொன்னதைக் கேட்டு அப்படியே இறுகிப் போனது.

மலர்ச்சியைத் துறந்த அவனின் முகத்தைப் பார்த்து அந்த நிமிடம் வசுந்தராவிற்குத் தோன்றியது ஒன்றே ஒன்று தான்!

‘தனக்கு ஏன் காதல் வந்தது?’