உறவுகள் எனும் நந்தவனத்தில்… – அத்தியாயம் 6
Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels
Hi dears!!!
நிறைய பேர் நிறைய விதமா கமென்ட் பண்ணி இருந்தீங்க. காயத்ரி ஏன் அப்படி பண்ணா? விஷ்ணு ஏன் அப்படி பண்ணான்? ஏன் அவங்க அப்படி நடந்துக்கிட்டாங்க? இப்படி நிறைய கேள்விகள் உங்களுக்கு இருக்கும்னு எனக்கு தெரியும். இப்போ தான் கதை ஆரம்பிச்சு இருக்கேன். வரும் அத்தியாயங்களில் கண்டிப்பா எல்லாத்துக்கும் விளக்கம் கொடுப்பேன். கதாப்பாத்திரங்கள் கொஞ்சம் அதிகம் தான். ஆனா இது குடும்ப கதைக்களம். அதுல பல விதமானவங்க இருப்பாங்க. கதையோட நகர்வுக்கு கண்டிப்பா அவசியமானவங்கள மட்டும் தான் நான் கொண்டு வருவேன். முதல் அத்தியாயத்தில் மட்டும் தான் ஒவ்வொருவருக்கும் இடையில் உள்ள உறவுமுறைய விளக்க அவ்வளவு கதாப்பாத்திரங்கள் காட்டினேன். பட் கதையோட நகர்வுல அவ்வளவு பேர் இருக்க மாட்டாங்க. அது இப்பவே உங்களுக்கு புரிஞ்சு இருக்கும்னு நம்புறேன். சில வேலைப்பளு காரணமாக சரியா டி தர முடியல. இனிமே கரெக்டா தரேன். முடிந்த அளவு உங்க குழப்பங்கள சீக்கிரம் தீர்க்குறேன். இனிமே கதை நகரும் விதத்துல உங்க கேள்விகளுக்கும் பதில் கிடைக்கும். நான் நினைச்சது போல கதைய நகர்த்த கண்டிப்பா வாசகர்களாகிய உங்களோட அன்பும் ஆதரவும் எனக்கு அவசியம். ❤️
நன்றியுடன் செங்காந்தள் 🤗
_____________________________________________________
சொக்கலிங்கம் மனையகத்தில் மொத்த குடும்பமும் கண்ணீரும் கம்பளையுமாக அமர்ந்து இருந்தனர்.
விஷ்ணுவின் உடல் கண்ணாடிப் பேழைக்குள் வைத்து நடுக் கூடத்தில் வைக்கப்பட்டிருக்க, அதனைச் சுற்றி அமர்ந்து ஒவ்வொருவரும் கண்ணீர் வடித்தனர்.
“எழுந்திருங்க விஷ்ணு… நம்ம பாப்பாவ பாருங்க… எழுந்திருங்க விஷ்ணு ப்ளீஸ்…” என காயத்ரி கதற, அவளின் மடியில் இருந்த குழந்தையோ தாயைக் கண்டு தானும் அழுதது.
சங்கர் ஒரு மூலையில் இடிந்து அமர்ந்திருக்க, “பெத்த பையன கொன்னுட்டு எப்படி கல்லு மாதிரி உட்கார்ந்து இருக்கான் பாரு…” என அவரின் காது படவே மனைவியிடம் சாடினார் நடேசன்.
“இழவு வீட்டுலயும் வந்து பிரச்சினை பண்ணாதீங்கங்க…” எனக் கோதை கணவனிடம் கூற, “நான் என்ன டி பிரச்சினை பண்ணேன்? எங்களுக்கு இருக்குற பாசம் கூட இந்த ஆளுக்கு இருக்கான்னு பாரு…” என்றார் நடேசன் மேலும்.
ஒரே மகனை இழந்து கதறி அழுது கொண்டிருந்த மகாவிற்கு ஆறுதலாக அமர்ந்து இருந்த பிரியாவோ நடேசனின் குரலில், “என்னாச்சு சித்தி?” எனக் கேட்டாள் கோதையிடம்.
“வந்துட்டா மாமாவுக்கு குடை பிடிக்க…” என நடேசன் முணுமுணுக்க, அதனைக் கண்டு கொள்ளாத பிரியா, “மாமா… என்னாச்சு?” எனக் கேட்டாள் சங்கரிடம்.
சங்கர் பதில் கூறாது அமைதியாக இருக்க, “அந்தாளு என்ன சொல்ல போறான்? சொத்துக்காக பெத்த பையன கொன்னுட்டு சந்தோஷமா தான் இருக்கான்…” என்றார் நடேசன் ஏளனமாக.
நடேசனின் வார்த்தையில் அதிர்ந்த பிரியா, “என்ன சித்தப்பா இப்படி பேசுறீங்க? அவர் எதுக்கு விஷ்ணுவ கொல்ல போறார்?” எனக் கேட்டாள்.
“பின்ன என்ன? விஷ்ணுவிற்கு இப்படி ஒரு பிரச்சினை இருக்குன்னு முன்னாடியே சொல்லி இருந்தா நாம எல்லாரும் சேர்ந்து ஏதாவது பண்ணி அவன பிழைக்க வெச்சிருக்கலாம்ல…” என்றார் தர்மன்.
நடேசன், “ஆனா இந்த ஆளு நம்ம குடும்பத்துல யாருக்கும் எதுவும் தெரியாம மறைச்சி இப்போ கடைசில நாம விஷ்ணுவ பறி கொடுத்துட்டோம்…” என்றார்.
“பெத்த அப்பன விட உங்களுக்கு தான் அவன் மேல பாசமா? மாமா அவன பல தடவ ஹாஸ்பிடல் கூப்பிட்டும் உங்க எல்லாரோட பேச்சைக் கேட்டும் அவன் தானே வராம பிடிவாதம் பிடிச்சான்…” என்றாள் பிரியா சற்று கோபமாக.
மாறி மாறி ஒவ்வொருவரும் பேசவும் வாக்குவாதம் முற்ற, “நிறுத்துங்க எல்லாரும்…” எனக் கத்தினார் பிரபு.
அவரை மதித்து அனைவரும் அமைதியாகி விட, “கொஞ்சம் மனசாட்சி உள்ளவங்களா எல்லாரும் நடந்துக்கோங்க… ஆளாளுக்கு யாருக்கு அவன் மேல பாசம் இருக்குன்னு இப்போ சண்டை போட்டா மட்டும் அவன் என்ன திரும்பி வரவா போறான்? அவன் உயிரோட இருக்கும் போது இந்த அக்கறை இருந்து இருந்தா விஷ்ணுக்கு இன்னைக்கு இந்த நிலமை வந்து இருக்காது… இருக்கும் வரை தான் கஷ்டப்பட்டான்… சாவுல கூட அவனுக்கு நிம்மதிய கொடுக்க மாட்டீங்களா? யாரும் எதுவும் பேசக் கூடாது… அடுத்து ஆக வேண்டிய காரியத்த பாருங்க…” என்றார் பிரபு கோபமாக.
அதேநேரம் தகவல் அறிந்து உடனே இஷானுடன் கிளம்பி வந்த அஹாரா, “மாமா…” என விஷ்ணுவின் உடலின் அருகே அமர்ந்து அழுதாள்.
பின் காயத்ரியின் மடியில் இருந்த குழந்தையை வாங்கிக்கொண்டு நயனிகாவுடன் ஒரு ஓரமாக நின்றாள்.
இப்படி ஒரு நிலையிலா இவர்களின் குடும்பத்தை தான் முதலில் சந்திக்க வேண்டும் என்ற கவலையில் இருந்தான் இஷான்.
சில மணி நேரங்களில் விஷ்ணுவின் உடலை இறுதிக் கிரியைகளுக்காக எடுத்துச் செல்ல, குடும்பமே கண்ணீரில் கரைந்தனர்.
அதிலும் காயத்ரி அழுது ஆர்ப்பாட்டம் செய்ய, அவளைச் சமாதானப்படுத்துவதே சிரமமானது.
விஷ்ணுவின் சிதையை எரிக்கும் போது தலையில் அடித்துக்கொண்டு கதறிய சங்கர், “பெத்த பையன் கொள்ளி வைக்க வேண்டிய வயசுல பெத்த பையனுக்கே கொள்ளி வைக்க வேண்டியதாப் போச்சே… கடவுளே…” என அழுதார்.
சரியாக இரண்டு நாட்கள் கடந்த நிலையில் சோகமே உருவாய் அமர்ந்திருந்த காயத்ரியின் கைப்பேசி ஒலி எழுப்பியது.
கைப்பேசித் திரையில் காட்டிய பெயரைக் கண்டதும் லேசாக அதிர்ந்தவள் கைப்பேசியை எடுத்துக்கொண்டு தன் அறைக்குச் சென்றாள்.
காயத்ரி அழைப்பை ஏற்றதுமே மறுபக்கம், “இன்று அங்கயே என்ன பண்ணிட்டு இருக்க? உனக்கு சேர வேண்டியதை எல்லாம் வாங்கிட்டு கிளம்பி வா…” என்றது ஒரு ஆண் குரல்.
“இப்பவே எப்படி வர முடியும்? அவன் செத்து ரெண்டு நாள் தான் ஆச்சு…” என காயத்ரி கூறவும், “உன்னால முடியாததா? இத்தனை நாள் எந்த சந்தேகமும் வராம இருந்தியே… உனக்கு நான் சொல்லி தரணுமா? இன்னைக்கே அங்கிருந்து கிளம்பி வர வழிய பாரு… நம்ம ப்ளேன்படி எல்லாம் பக்காவா நடக்கணும்… இல்லன்னா நீ என்னை மறந்துட வேண்டி வரும்…” என மிரட்டி விட்டு அழைப்பு துண்டிக்கப்பட்டது.
அழைப்பு துண்டிக்கப்பட்டதும் காயத்ரியின் முகத்தில் வியர்வை பூக்கள் பூக்க, தன் பதட்டத்தை வெளியே காட்டாது மறைத்தவாறு நேராக சங்கரை நோக்கிச் சென்றாள்.
இன்னும் மொத்த குடும்பமும் சொக்கலிங்கம் மனையகத்தில் தான் இருந்தனர். கூடவே காயத்ரியின் குடும்பமும்.
“மாமா… என் புருஷனுக்கு சேர வேண்டியதை எல்லாம் இப்போவே பிரிச்சு கொடுங்க… நான் என் அம்மா வீட்டுக்கு கிளம்புறேன்…” என்றாள் காயத்ரி நேரடியாக.
“என்னம்மா இந்த நிலமைல இப்படி வந்து கேட்குற” எனக் கேட்டார் சங்கர் சற்று ஆதங்கமான குரலில்.
“அஹாரா… நிஜமாவே இவங்க தான் உன் மாமா பொண்டாட்டியா? அவங்க புருஷன் தானே இறந்தாங்க… கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாம இப்படி பேசுறாங்க…” என அஹாராவிடம் கிசுகிசுத்தான் இஷான்.
“ஷ்ஷ்… இஷு அமைதியா இரு…” என அவனை அடக்கினாள் அஹாரா.
“என் பொண்ணு கேட்குறதுல என்ன தப்பு இருக்கு? எங்க மாப்பிள்ளை உயிரோட இருக்கும் வரை அவருக்கு சேர வேண்டிய சொத்த பிரிச்சு கொடுக்காம ஏமாத்தினீங்க… இப்போ மாப்பிள்ளைக்கு சேர வேண்டியது எல்லாம் என் பொண்ணுக்கும் பேத்திக்கும் தானே சேரணும்…” என்றார் காயத்ரியின் தாய்.
மகா, “யாரு இல்லன்னு சொன்னாங்க? எங்க பையனே போய்ட்டான்… இந்த சொத்த மட்டும் வெச்சி நாங்க என்ன செய்யப் போறோம்? மருமகளையும் பேத்திக்கும் தான் எல்லாமே… நாங்க எந்தக் குறையும் இல்லாம நிச்சயம் பார்த்துப்போம்…” என்றார்.
“இந்த பேச்சு ஒன்னும் வேணாம்… இன்னைக்கு வக்கீலை வர சொல்லி எனக்கும் என் பொண்ணுக்கும் சேர வேண்டியதை எல்லாம் பிரிச்சு கொடுத்துடுங்க… நான் என் அம்மா வீட்டுக்கே போறேன்… புருஷனே இல்ல… இனிமே இங்க இருந்து நான் என்ன பண்ண போறேன்?” எனக் கேட்டாள் காயத்ரி கோபமாக.
“போதும் காயத்ரி… செத்து போனவன் அவங்களுக்கு மட்டும் புள்ள இல்ல… உன் புருஷனும் தான்… கொஞ்சமாச்சும் மனசாட்சியோட நடந்துக்கோ…” என்றாள் பிரியா பொறுமை இழந்து.
“அவ கேட்குறதுல என்ன தப்பு இருக்கு பிரியா? விஷ்ணுக்கு அப்புறம் விஷ்ணுவோட பொண்டாட்டிக்கும் புள்ளைக்கும் தானே இதெல்லாம் போய் சேர வேண்டும்…” என எரிகிற நெருப்பில் எண்ணெய்யை ஊற்றி விட்டார் தர்மன்.
“சித்தப்பா என்ன புரிஞ்சிக்காம பேசுறீங்க? இப்போ…” என பிரியா ஏதோ கூற வர, “போதும் நிறுத்துங்க… புருஷனே போய் சேர்ந்துட்டான்… இதுக்கு மேல எதுக்கு இந்த சுமைகளை பார்த்துக்கணும்னு நீங்க எல்லாரும் நினைச்சிட்டீங்க… அப்படி தானே… அதுவும் சரி தான்… நானும் என் புள்ளயும் இனிமே அநாதை தானே…” எனப் பெண்களின் மிகப் பெரிய ஆயுதமான கண்ணீரைக் கையில் எடுத்தாள் காயத்ரி.
மகள் அழுவதைக் கண்டதும் காயத்ரியின் தாயும் மகளுக்கு ஆதரவாக குரல் உயர்த்த, சங்கர் மொத்தமாக மனம் உடைந்து போனார்.
பரிமளம், “இவ்வளவு தூரம் வந்திடுச்சு… இன்னும் எதுக்கு அண்ணா பார்த்துட்டு இருக்கீங்க? சட்டு புட்டுன்னு ஆக வேண்டியதை பாருங்க…” என்றார் வாழைப் பழத்தில் ஊசியை ஏற்றுவது போல்.
“சரிம்மா காயத்ரி… விஷ்ணுக்கு சேர வேண்டியதை எல்லாம் உனக்கே கொடுத்துடுறோம்மா… ஆனா நீங்க இங்கயே இருந்துடுங்கம்மா… எங்க புள்ள தான் போய்ட்டான்… எங்க பேத்தி மட்டும் தான் எங்களுக்கு இருக்குற ஒரே ஆறுதல்…” என்றார் மகா கெஞ்சலாக.
“எதுக்கு? என்னை உங்களுக்கு சம்பளம் இல்லாத வேலைக்காரியா வெச்சிக்கவா? என் பொண்ணு என் கூட தான் இருப்பா…” என்றாள் காயத்ரி அழுத்தமாக.
பிரியா எதுவோ கூற முயல, சந்தோஷ் பார்த்த பார்வையில் அமைதி அடைந்தாள்.
“சரி… நான் இப்பவே வக்கீலை வர சொல்லி எல்லா ஏற்பாட்டையும் பண்ணுறேன்…” என்றவர் காலத்தைக் கடத்தாமல் உடனே வழக்கறிஞரான தன் நண்பன் ஒருவனுக்கு அழைத்து வர வைத்தார்.
அவ் வீட்டைத் தவிர விஷ்ணுவிற்கு என வைத்திருந்த அனைத்தையுமே காயத்ரியின் பெயரிலும் குழந்தையின் பெயரிலும் மாற்றினார்.
மகா குழந்தை விஷாகாவை தன்னோடு அணைத்து கண்ணீர் வடிக்க, அவரின் கரத்தில் இருந்த குழந்தையைப் பறித்துக்கொண்டு தன் தாயுடன் கிளம்பினாள் காயத்ரி.
“என்னங்க… என் விஷ்ணுவோட குழந்தைங்க…” என மகா கதற, சங்கரோ தன் துக்கத்தை வெளியே காட்டாது உள்ளுக்குள் புலுங்கினார்.
“அதான் எல்லாம் முடிஞ்டுச்சே… இன்னும் எதுக்கு இங்கயே இருக்கோம்? கிளம்பு வீட்டுக்கு போலாம்…” என்றார் நடேசன் கோதையிடம்.
சகோதரனையும் குடும்பத்தையும் தயக்கமாக ஏறிட்ட கோதை கணவனின் பேச்சை மீற வழியின்றி நயனிகாவையும் அழைத்துக்கொண்டு கிளம்பினார்.
பாக்கியமும் யாரிடமும் கூறாது தர்மனுடன் கிளம்பி விட, அவரைத் தொடர்ந்து அனைவரும் சென்று விட்டனர்.
அனைவரும் சென்று வீடே அமைதியாக இருக்க, பெருமூச்சுடன் இருக்கையில் அமர்ந்த பிரபு, “இனிமே என்ன ஃபேமிலி கெட்டுகெதர்? மாமா போனதுக்கு அப்புறம் கூட நம்ம குடும்பம் ஒத்துமையா இருக்கணும்னு தான் ஒவ்வொரு வருஷமும் கெட்டுகெதர் வெச்சோம்… ஆனா இப்போ இங்க யாருக்கு இடைலயும் ஒத்துமையும் பாசமுமே இல்ல… எல்லாம் முடிஞ்சு போச்சு…” என்க, பூரணி மௌனமாக கண்ணீர் வடித்தார்.
இஷான் இன்னும் அங்கு தான் இருந்தான்.
அவனிடம் சென்ற பிரியா, “சாரி கண்ணா… இப்படி ஒரு நிலைல நீ நம்ம குடும்பத்த பார்க்க வேண்டியதா போச்சு… நீ அஹாராவ கூட்டிட்டு கிளம்புப்பா… உங்களுக்கு காலேஜ் இருக்குல்ல…” என்றாள்.
“பட் அம்மா…” என அஹாரா மறுப்பாக ஏதோ கூற முயல, “ப்ளீஸ் அஹாரா… தம்பி கூட போ… நானும் அப்பாவும் கொஞ்சம் நாள் இங்க தான் இருக்க போறோம்… இங்க எதுவுமே சரியா இல்ல…” என்றாள் பிரியா வருத்தமாக.
வேறு வழியின்றி அஹாரா இஷானுடன் கிளம்பத் தயாரானாள்.
“தாத்தா… பாட்டி… நான் போய்ட்டு வரேன்…” என அஹாரா சங்கரிடமும் மகாவிடமும் கூற, அவளைக் கட்டி அணைத்த சங்கர், “பாப்பா… போய் நல்லா படிம்மா… இங்க நடந்தது எதைப் பத்தியும் யோசிக்காதே… கொஞ்சம் நாள்ல எல்லாம் சரி ஆகிடும்…” என்றார் கசந்த புன்னகையுடன்.
அஹாரா இஷானுடன் கிளம்பிச் செல்ல, சோர்ந்து போய் அமர்ந்த சங்கரிடம் சென்ற பிரியா, “ஏன் மாமா அவ கேட்டதும் எல்லாத்தையும் அவ பெயர்ல எழுதி வெச்சிட்டீங்க? உங்களுக்குன்னு இப்போ இந்த வீட்டைத் தவிர எதுவும் இல்லயே…” எனக் கேட்டாள் பிரியா ஆதங்கமாய்.
“என் ஒரே புள்ளயே போய்ட்டான்… இதுக்கு மேல இந்த சொத்தெல்லாம் இருந்து நான் என்ன பண்ணுறதும்மா?” என்ற சங்கரின் கேள்வியில் வலி நிரம்பி இருந்தது.
“அதுக்காக உங்களுக்கும் அத்தைக்கும் கூட ஒன்னும் இல்லாமயா கொடுப்பீங்க?” எனக் கேட்டான் லக்ஷ்மன்.
“இந்த மாமாவ நீங்க ரெண்டு பேரும் கூட இன்னும் புரிஞ்சிக்கலயாப்பா? என் புள்ள ஆத்மா சாந்தி அடையணும்… ஆனா அவங்க கூட நானும் ஒன்னுக்கு ஒன்னுன்னு நின்னா அவன் ஆத்மா நிம்மதியா இருக்காது…” என்றார்.
இங்கோ வீட்டுக்கு வந்த இஷான் ஆத்விக்கிடம் சொக்கலிங்கம் மனையகத்தில் நடந்த களேபரங்களை ஒன்று விடாது ஒப்பிக்க, யாருக்கு வந்த விருந்தோ என்பது போல் அதனைக் கேட்ட ஆத்விக், “அது அவங்க குடும்பப் பிரச்சினை… நமக்கு என்ன வந்தது இஷான்? அதுவும் இல்லாம நீ தான் உன் ஃப்ரெண்ட்… அதான்… அவ பெயர் கூட… ஆஹ்… ஆரா… அவ ஃபேமிலி அப்படி… இப்படின்னு புகழ்ந்த… ஆனா பார்த்தேல்ல… ரிலேட்டிவ்ஸ்னாவே இப்படி தான்… எல்லாரும் சுயநலத்துக்காக தான் பழகுவாங்க… அதனால தான் நாம கூட எல்லாரையும் விட்டு தள்ளி வந்து தனியா இருக்கோம்… நீ கண்டவங்கள பத்தி யோசிக்கிறத விட்டுட்டு உன் ஸ்டடீஸ பாரு…” என்று விட்டு அங்கிருந்து சென்றான்.
ஆனால் அப்போது அவன் அறியவில்லை யாரின் குடும்பத்தை இன்று வேற்று மனிதர்கள் என்று கூறினானோ, அவளின் குடும்பத்தையே தன் குடும்பமாக எண்ணி தானே அவர்களை சேர்த்து வைக்க எல்லா முயற்சியும் எடுப்போம் என்று.
_____________________________________________________
சாரி சாரி சாரி சாரி… எக்ஸ்ட்ரீம்லி ரியலி சாரி… ரொம்பவே லேட் பண்ணிட்டேன்… ரொம்ப பிஸியாக இருந்தேன்… ஸ்டோரி டைப் பண்ணவே மனசு வரல… எல்லாம் ப்ளேன்க்கா இருந்தது… முடிஞ்ச அளவு சீக்கிரமா யூடி தந்து கதைய முடிக்கிறேன்…
நன்றியுடன் செங்காந்தள் 🤗