உறவுகள் எனும் நந்தவனத்தில்… – அத்தியாயம் 4

Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels

தன் நான்கு மாத மகள் விஷாகாவை மடியில் வைத்துக் கொஞ்சிக் கொண்டிருந்த விஷ்ணுவிற்கு திடீரென வாந்தி வருவது போல் இருக்கவும் குழந்தையைக் கீழே வைத்து விட்டு குளியலறைக்கு ஓடினான்.

என்னவோ ஏதோவென அவன் பின்னே ஓடிய காயத்ரி கண்டது இரத்த வாந்தி எடுத்துக் கொண்டிருந்த கணவனைத் தான்.

“விஷ்ணு… என்னாச்சு?” எனக் கேட்டாள் காயத்ரி பதட்டமாக.

“ஒன்னும் இல்ல காயு… ஐம் ஓக்கே நவ்…” என்ற விஷ்ணுவிற்கு உடல் அடித்துப் போட்டது போல் வலித்தது.

விஷ்ணுவின் கைப் பிடித்து வெளியே அழைத்துச் சென்ற காயத்ரி, “ஹாஸ்பிடல் போலாமாங்க? எனக்குப் பயமா இருக்கு…” என்றாள் வருத்தமாக.

விஷ்ணு ஏதோ கூற வாயெடுக்க, அதற்குள் அங்கு வந்த காயத்ரியின் தாய், “ஹாஸ்பிடல் எல்லாம் எதுக்கு? அங்க போனா தண்டத்துக்கு செலவாகும்… சும்மா சும்மா காசை கொள்ளை அடிப்பாங்க… அதான் ராம் தம்பி ஏதோ சித்த மருத்துவர் தந்தார்னு கசாயம் ஏதோ எடுத்துட்டு வந்தாரே… மாப்பிள்ளைக்கு அதைப் பண்ணி கொடு…” என்கவும் சரி எனத் தலையசைத்தாள் காயத்ரி.

தன் மாமியாரை அடிபட்ட பார்வை பார்த்த விஷ்ணு, “காயு… எனக்கு கொஞ்சம் டயர்டா இருக்கு… என்னை ரூம்ல விடுறியா?” எனக் கேட்டான்.

காயத்ரி விஷ்ணுவை அறையில் படுக்க வைத்து விட்டு வெளியே சென்றதும் வெகுநேரம் ஏதோ யோசனையில் இருந்தவன் தன் கைப்பேசியை எடுத்து தந்தையின் எண்ணைப் பதித்தான்.

நிமிடங்கள் கடந்தும் சங்கருக்கு அழைக்காதவன் அவரின் எண்ணை அழித்து விட்டு வேறு யாருக்கோ அழைப்பு விடுத்தான்.

இங்கு பிரியாவின் வீட்டிலோ, “மாமா வீட்டுக்கு போய் மூணு மாசம் மேல ஆகுது… விஷ்ணு பேசினதுக்கு அவர் என்ன பண்ணுவார்?” எனக் கண் கலங்கினாள் பிரியா.

“இங்க பாரு பிரியா… அவன் அவ்வளவு பேசினதுக்கு அப்புறமும் என்னால அந்த வீட்டுல காலடி எடுத்து வைக்க முடியாது… உனக்கு வேணும்னா நீ தனியா போ… ஆனா நானும் என் பொண்ணும் அங்க வர மாட்டோம்…” என்றான் சந்தோஷ் உறுதியாக.

பிரியா, “ஆமா… நீங்க இல்லாம நான் எங்க தனியா போய் இருக்கேன்? நீங்க வேணா பாருங்க… இதுக்கெல்லாம் சேர்த்து பின்னாடி நீங்க ரொம்ப ஃபீல் பண்ணுவீங்க…” என்றாள் கோபமாக.

சந்தோஷ், “ஆஹா… பார்க்கலாம் பார்க்கலாம்…” என நக்கலாகக் கூறும் போதே பிரியாவின் கைப்பேசி ஒலி எழுப்பியது.

திரையில் வந்த பெயரைப் பார்த்ததும் கணவனைத் தயக்கமாக ஏறிட, “யாரு?” எனக் கேட்டான் சந்தோஷ் புருவம் சுருக்கி.

Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!

பிரியா தயங்க, “விஷ்ணுவா?” என சந்தோஷ் கடுமையான குரலில் கேட்கவும் பிரியா ஆம் எனத் தலையசைத்தாள்.

“ப்ளீஸ்ங்க… அவனா கால் பண்ணி இருக்கான்… என்னன்னு மட்டும் கேட்டுட்டு வெச்சிடுறேன்… உடம்பு வேற சரி இல்ல அவனுக்கு…” எனப் பிரியா கெஞ்சவும், “என்னை அவ்வளவு அவமானப்படுத்தினவன் கூட உனக்கு என்ன உறவு வேண்டி இருக்கு? இது தான் நீ அவன் கூட பேசுற கடைசி தடவையா இருக்கணும்… இல்லன்னா என்னை வேற மாதிரி பார்க்க வேண்டி வரும்…” எனக் கட்டளை இட்டான் சந்தோஷ்.

பிரியா அழைப்பை ஏற்கவும் மறுபக்கம் அமைதி.

நெடு நேரம் நீடித்த அமைதியைக் கலைத்த பிரியா, “விஷ்ணு…” எனப் பாசமாக அழைக்கவும், “அக்கா…” என்றான் விஷ்ணு அழு குரலில்.

விஷ்ணுவின் கலங்கிய குரலில் பதட்டம் அடைந்த பிரியா, “விஷ்ணு… என்னாச்சு உனக்கு? ஏன் அழுற? உன் உடம்புக்கு ஒன்னும் இல்லல்ல…” எனக் கேட்டாள்.

“அக்கா… எனக்கு ஏதோ பண்ணுது கா… பயமா இருக்கு… நான் சாக போறேனா? ப்ளட் வாமிட் எல்லாம் வருது…” என அழுதான் விஷ்ணு.

அவன் கூறியதைக் கேட்டு அதிர்ச்சியில் உறைந்த பிரியா, “என்ன விஷ்ணு சொல்ற? அப்படி எல்லாம் ஒன்னும் ஆகாது… ஹாஸ்பிடல் போகலயா?” எனக் கேட்கவும்,

“ஹாஸ்பிடல் போக பயமா இருக்கு கா… அங்க போனா கீமாதெரபி எல்லாம் பண்ணுவாங்க… நான் அதைப் பத்தி சேர்ச் பண்ணி பார்த்தேன்… என்ன என்னவோ போட்டிருந்தாங்க… ரொம்ப வலிக்கும்… முடி எல்லாம் கொட்டிடும்…” என அழு குரலில் பதிலளித்தான்.

“விஷ்ணு… என்ன இது சின்ன புள்ள மாதிரி? நெட்ல அப்படி தான் ஆயிரம் பேர் ஆயிரம் விதமா போட்டு இருப்பாங்க… அதை எல்லாம் நம்பிட்டு இருக்க முடியுமா? அப்போ டாக்டர்ஸ் எதுக்கு இருக்காங்க? கண்டதையும் பார்த்தும் கேட்டும் பயந்து உயிர் விஷயத்துல ரிஸ்க் எடுக்காதே… நீ முதல்ல ஹாஸ்பிடல் கிளம்புற வழிய பாரு… நான் எப்படியாவது உங்க மாமாவ சமாதானம் பண்ணி கூட்டி வரேன்…” எனத் தன் தம்பியை சமாதானப்படுத்தினாள் பிரியா.

விஷ்ணுவிடம் சிறிது நேரம் பேசி விட்டு மனமே இன்றி அழைப்பைத் துண்டித்தவள் உடனே கணவனைத் தேடிச் சென்றாள்.

இரண்டு நாட்கள் முன்பு தான் வார இறுதி விடுமுறைக்கு வந்து விட்டு மீண்டும் ஹாஸ்டல் கிளம்பி இருந்தாள் அஹாரா.

சந்தோஷ் அஹாராவுடன் பேசிக் கொண்டிருக்க, கைப்பேசியை வாங்கி மகளுடன் தானும் இரண்டு வார்த்தை பேசி விட்டு அழைப்பைத் துண்டித்த பிரியா கணவனின் முகத்தை தயக்கமாக ஏறிட்டாள்.

“இங்க பாரு பிரியா… என்னை கோவப்படுத்துற மாதிரி எதையும் சொல்லாதே… சொல்லிட்டேன்…” என்றான் சந்தோஷ் அழுத்தமாக.

கணவனின் சொல்லில் பிரியா முகம் வாடி தலை குனிய, “என்னவாம்?” எனக் கேட்டான் சந்தோஷ் எங்கோ பார்த்தபடி.

அதில் முகம் மலர்ந்தவள்‌ மறு நொடியே விஷ்ணு பேசியது நினைவு வந்து, “அவனுக்கு ரொம்ப முடியல போலங்க… கால் பண்ணி அழுறான்… ஏதேதோ சொல்றான்… அவன இப்படி பார்க்க முடியல என்னால…” எனக் கண்ணீர் வடித்தாள் பிரியா.

மனைவியின் கண்ணீர் சந்தோஷின் மனதை வருத்த, “சரி சரி ஒரு தடவை போய் பார்த்துட்டு வந்துடலாம்… ஆனா திரும்ப ஒரு தடவை அவன் என்னையோ உன்னையோ தப்பா பேசினா நீ உன் குடும்பத்தை மொத்தமா மறந்துட வேண்டியது தான்…” என்றான் அழுத்தமாக.

இந்தளவு மாற்றமே பிரியாவிற்கு போதுமானதாக இருக்க, உடனே விஷ்ணுவைக் காண சந்தோஷுடன் கிளம்பினாள்.

பிரியாவும் சந்தோஷும் காயத்ரியின் வீட்டினுள் நுழையும் போதே, “உங்களுக்கு எல்லாம் வெட்கமாவே இல்லையா? அவ்வளவு திட்டியும் திரும்ப வந்திருக்கீங்க…” எனக் கத்தினாள் காயத்ரி.

சந்தோஷ் ஆத்திரத்தில் பல்லைக் கடிக்க, பிரியாவிற்கோ ஒன்றும் செய்ய இயலாது நிலை.

ஆனால் சத்தம் கேட்டு தன் அறையில் இருந்து வெளியே வந்த விஷ்ணு, “காயு… அமைதியா இரு… நான் தான் அவங்கள வர சொன்னேன்…” எனக் குரலை உயர்த்தவும் அமைதியாகினாள் காயத்ரி.

மூன்று மாதத்தில் பாதி எடை குறைந்திருந்த விஷ்ணுவைக் காணும் போது மனம் வலித்தது பிரியாவிற்கு.

அப்படி என்ன மருத்துவமனை செல்ல இயலாத அளவிற்கு பிடிவாதம் என காயத்ரியின் மீதும் அவளின் குடும்பத்தின் மீதும் ஆத்திரம் ஆத்திரமாக வந்தது‌.

சந்தோஷிற்கும் விஷ்ணுவை அவ்வாறு காண ஏதோ போல் இருந்தது.

“அக்கா…” என தன்னை அணைத்துக் கொண்டவனைக் கண்ணீருடன் அணைத்துக் கொண்ட பிரியா, “என்ன விஷ்ணு இது? ஏன் இப்படி இருக்க? வா நாம உடனே ஹாஸ்பிடல் போலாம்…” என்றாள்.

Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!

“அதான் மாப்பிள்ளையே வேண்டாம்னு சொல்லிட்டாருல… உங்களுக்கு என்ன வந்தது?” எனக் கேட்ட காயத்ரியின் தாயை கோபத்துடன் நோக்கிய பிரியா, “விஷ்ணு… ஒழுங்கா ஹாஸ்பிடல் வர வழிய பாரு…” என்றாள் அழுத்தமாக.

விஷ்ணு, “ஹாஸ்பிடல் அப்புறம் போலாம் கா… நான் உங்க கூட பேசணும் முதல்ல… ப்ளீஸ்…” என்கவும் வேறு வழியின்றி சந்தோஷும் பிரியாவும் அவனுடன் சென்றனர்.

அவர்களைத் தொடர்ந்து அறைக்குள் நுழையப் போன காயத்ரியைத் தடுத்தான் விஷ்ணு.

யாரும் வராமல் இருக்க கதவைத் தாழ்ப்பாள் இட்டவன் மறு நொடியே பிரியாவை அணைத்துக் கொண்டு கதறி அழுதான்.

பிரியா, “விஷ்ணு…” எனக் கண்ணீருடன் அழைக்க, “சாரிக்கா… நான் உங்க கிட்டயும் மாமா கிட்டயும் ரொம்ப மோசமா நடந்துக்கிட்டேன்… எனக்கு எதுவுமே பிடிக்கலக்கா… சின்ன சின்ன விஷயத்துக்கும் ரொம்ப கோவம் வருது… முடியல… உடம்பெல்லாம் யாரோ அடிச்சி போட்ட மாதிரி வலிக்கிது… நான் செத்துடுவேனாக்கா? நான் செத்தா பாப்பாவையும் காயுவையும் யாரு பார்த்துப்பாங்க?” எனக் கண்ணீர் வடித்தான் விஷ்ணு.

விஷ்ணுவின் தோளில் தட்டிக் கொடுத்த சந்தோஷ், “நீ உன் தப்ப உணர்ந்துட்டேல்ல… அதுவே போதும் டா எங்களுக்கு…” என்கவும் அவனையும் அணைத்துக்கொண்ட விஷ்ணு, “சாரி மாமா… உங்கள ரொம்ப தரக் குறைவா பேசிட்டேன்… எனக்கு ஏதோ ஆகிடுச்சு… ஒருவேளை நான் பைத்தியம் ஆகிட்டேனா? கேன்சர் வந்தா பைத்தியம் பிடிக்குமா?” என ஏதேதோ உளறினான்.

“என்ன விஷ்ணு இது? உனக்கு இந்த நோய்ல விழுந்தெல்லாம் பழக்கம் இல்லல்ல… அதை ஏத்துக்க முடியாம தான் நீ எல்லார் மேலயும் கோவப்பட்டுட்ட… எங்க யாருக்குமே உன் மேல கோவம் இல்ல டா… மாமா கிட்ட சொன்னா ரொம்ப சந்தோஷப்படுவார்…” என்ற பிரியா சங்கருக்கு அழைக்க தன் கைப்பேசியை எடுக்க,

“வேணாம் கா… அப்பாவ அவ்வளவு கேவலமா பேசிட்டு அவர் முகத்துல நான் எப்படி முழிக்க முடியும்? அதுவும் இல்லாம இங்க எல்லாருக்கும் என்னை விட என் சொத்து தான் முக்கியமா போயிடுச்சு… அவங்க சொல்றதைக் கேட்டுட்டு காயு என் கூட சண்டை போட்டா… நிம்மதியே இல்லாம போய் தான் அப்பா கிட்ட சொத்தை எழுதி கேட்டேன்… அவரும் முடியாதுன்னு சொல்லவும் எல்லாருக்குமே என்னை விட சொத்து தான் முக்கியமா போயிடுச்சான்னு கோவம்… அதனால தான் அப்படி எல்லாம் நடந்துக்கிட்டேன்…” எனக் குற்ற உணர்வில் தலை குனிந்தான் விஷ்ணு.

திடீரென தலையை அழுத்திப் பிடித்தவனைக் கண்டு பிரியாவும் சந்தோஷும் பதட்டம் அடைய, விஷ்ணுவிற்கு இருமல் வந்து வாயிலிருந்து இரத்தம் வழிந்தது.

_____________________________________________________

“ஹேய் வாயாடி? என்ன யோசனை? க்ளாஸ்ல கூட சைலன்ட்டாவே இருந்த…” என இடைவேளையின் போது மரத்தடியில் அமர்ந்திருந்த அஹாராவிடம் கேட்டான் இஷான்.

“அப்பா கால் பண்ணி இருந்தாங்க… விஷ்ணு மாமாவ ஹாஸ்பிடல்ல சேர்த்து இருக்காங்களாம்…” என்றாள் அஹாரா வருத்தமாக.

சில நொடிகள் அமைதி காத்த இஷான், “உன் விஷ்ணு மாமா சீக்கிரம் குணமாகி வருவார்… உனக்கொரு விஷயம் தெரியுமா அஹாரா? உங்க அம்மா என்னை உங்க வீட்டுல தங்க கூப்பிட்டுட்டே இருந்தாங்க தானே… எங்க அண்ணா கூட உங்க வீட்டுல வந்து ரெண்டு நாள் தங்க ஓக்கே சொல்லிட்டார்…” என்றான் கண்கள் பளிச்சிட.

வேறு நேரமாக இருந்திருந்தால் இஷான் கூறியதைக் கேட்டு துள்ளிக் குதித்திருப்பாள் அஹாரா.

ஆனால் தற்போது அவளின் குடும்பம் இருக்கும் சூழ்நிலையில் அவளின் மனம் எதிலுமே லயிக்கவில்லை.

தோழியின் வருத்தம் தோய்ந்த முகத்தைப் பார்த்து கவலை கொண்ட இஷான் அவளின் மனதைத் திசை திருப்பும் விதமாக, “அஹாரா… எங்க அண்ணாவுக்கு உன் பெயரே வாய்ல வரல… அவன் உன்ன எப்படி கூப்பிடுறான் தெரியுமா?” எனக் கேட்டான்.

“என்ன?” என சலிப்பாகக் கேட்டவளிடம் “ஆரா” என இஷான் கூறவும் இடுப்பில் கை வைத்து அவனை முறைத்த அஹாரா, “அதென்ன ஆறா குளமான்னுட்டு… எங்க தாத்தா எனக்கு எவ்வளவு அழகா அஹாரா னு பெயர் வெச்சிருக்கார்… உங்க அண்ணன் பெரிய இவர் போல என் பெயரை கண்ட மேனிக்கும் சுருக்குறார்… முதல்ல அவர் எதுக்கு என் பெயரை சொல்லணும்?” என சண்டைக்கு போனாள்.

அவளின் கோபத்தில் வயிற்றைப் பிடித்துக்கொண்டு சிரித்த இஷான், “உனக்கு இப்படி தான் கோவம் வரும்னு அவன் கிட்ட சொன்னேன் அஹாரா… ஆனா அவனும் உன்ன போலவே முடிஞ்சா அவன் கூட சண்டைக்கு வந்து பார்க்கட்டும்னு சொல்றான்…” எனத் தோழியை மேலும் ஏற்றி விட்டான்.

அஹாரா, “எங்க இருக்கான் உன் நொண்ணன்? வர சொல்லு அந்த தடிமாட்ட… அவனா நானான்னு ஒரு கை பார்த்துடலாம்…” என இஷானிடம் எகிறிக் கொண்டிருக்கும் போதே கல்லூரி வாசலில் ஆத்விக்கின் கார் வந்து பிரேக் போட்டது.

_____________________________________________________

“கேன்சர்னு உங்களுக்கு தெரிஞ்சி எத்தனை மாசமாச்சு… இப்பவா அவரை ஹாஸ்பிடல் கூட்டிட்டு வரணும்னு உங்களுக்கு தோணிச்சு? கேன்சர் இப்போ அவரோட உடம்பு முழுசா பரவிடுச்சு… அவசரமா ட்ரீட்மெண்ட் ஆரம்பிக்கணும்… இல்லன்னா அவரோட உயிருக்கே ஆபத்து…” என மருத்துவர் கூறி விட்டுச் செல்லவும் மொத்த குடும்பத்தின் தலையிலும் இடி விழுந்தது போல் இருந்தது.

சொக்கலிங்கம் குடும்பம் மொத்தமுமே விஷ்ணுவின் நிலை அறிந்து மருத்துவமனையில் கூடி இருந்தனர்.

இடிந்து போய் இருக்கையில் அமர்ந்த சங்கரை பிரபுவும் சந்தோஷும் ஆறுதல் படுத்த முயன்றார்.

பிரியாவும் பூரணியும் மகாவிற்கு ஆறுதலாக இருக்க, மற்றவர்கள் ஒரு ஓரமாக நின்று வேடிக்கை பார்த்தனர்.

திடீரென ஆவேசமாக எழுந்த சங்கர் அனைவரின் முன்பும் சென்று, “போதுமா? இப்போ எல்லாருக்கும் சந்தோஷமா? என் பையனுக்கு சேன்சர்னு தெரிஞ்சதும் அவனை ஹாஸ்பிடல்ல சேர்த்து ட்ரீட்மெண்ட் பார்க்க வைக்க எவ்வளவு ட்ரை பண்ணேன் நான்… ஆனா நீங்க எல்லாரும் அதைப் பண்ணி குணப்படுத்துறேன்… இதைப் பண்ணி குணப்படுத்துறேன்னு இன்னைக்கு என் பையன இந்த நிலமைக்கு கொண்டு வந்து நிறுத்திட்டீங்க… இதுக்கு என்ன பதில் சொல்ல போறீங்க? சொல்லுங்க…” எனக் கேட்டார் கண்ணீருடன்.

யாருமே எதுவும் பேசவில்லை. கோதைக்கு தன் சகோதரனை இந்த நிலையில் காண வருத்தமாக இருந்தது. ஆனால் கணவனின் முன்னால் அண்ணனுக்கு சாதகமாகப் பேசப் பயமாக இருந்தது.

காயத்ரி ஒரு பக்கம் குழந்தையை வைத்துக்கொண்டு அழுது கொண்டிருந்தாள்.

சந்தோஷ் தான் நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து மருத்துவரிடம் பேசி சிகிச்சைகளை தொடங்க வைத்தான்.

உறவுகள் மலரும்…