உறவுகள் எனும் நந்தவனத்தில்… – அத்தியாயம் 3
Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels
“இஷான்… என்ன பண்ணிட்டு இருக்க? எப்பப் பாரு வீடியோ கேமா? காலேஜ் ஃபைனல் இயர் படிச்சிட்டு இருக்க… கொஞ்சம் விளையாட்டுத்தனத்த விட்டுட்டு படிக்கிற வேலைய பாரு… அப்போ தான் ஃபியூச்சர்ல நம்ம பிஸ்னஸை ரன் பண்ண முடியும்…” என கல்லூரியில் இருந்து வந்ததில் இருந்தே வீடியோ கேம் விளையாடிக்கொண்டிருந்த தம்பியைக் கடிந்து கொண்டான் ஆத்விக்.
“ப்ச்… நான் வேற என்ன தான் அண்ணா பண்ணுறது? நீ ஆஃபீஸ் கிளம்பி போயிடுற… இவ்வளவு பெரிய வீட்டுல நான் மட்டும் தனியா இருக்கேன்… ஃப்ரெண்ட்ஸ் கூட சுத்தினாலும் திட்டுற… அதனால எனக்கு ஃப்ரெண்ட்ஸே இல்ல… அஹாரா மட்டும் இல்லன்னா பைத்தியம் பிடிச்சிருப்பேன்… எனக்கு வீட்டுக்கு வரவே பிடிக்கலண்ணா…” என்றான் இஷான் ஆதங்கமாய்.
பெருமூச்சு விட்ட ஆத்விக் தன் தம்பியின் அருகில் அமர்ந்து, “சாரி டா… வர்க் வர்க்னு ஓடி உன்னை கவனிக்காம விட்டுட்டேன்… சரி நீயே சொல்லு என்ன பண்ணலாம்னு… ஆமா யாரு அஹாரா? உன் ஆளா?” எனக் கேட்டான் நக்கலாக.
இஷான், “அந்த வாயாடி என் ஆளா? ஹஹஹா… என்னால எல்லாம் அவள சமாளிக்க முடியாதுண்ணா… அவ எங்க க்ளாஸ் தான்… என்னோட க்ளோஸ் ஃப்ரெண்ட்… நான் அப்பா அம்மா ஞாபகத்துல மூட் அவுட்டா இருக்குறப்போ எல்லாம் ஏதாவது பண்ணி என்னை சிரிக்க வெச்சிடுவா… ரொம்ப கேரிங்கா இருப்பா… நம்மள போல இல்லண்ணா அவ… அவ ஃபேமிலி ரொம்ப பெரிசு… எல்லாரும் செம்ம ஜாலியா இருப்பாங்க… அவங்க அம்மா கூட எத்தனையோ தடவை என்னை அவங்க வீட்டுக்கு வர சொல்லி கூப்பிட்டு இருக்காங்க… நான் தான் போனதே இல்ல… உனக்கு தான் அதெல்லாம் பிடிக்காதே…” என தொடக்கத்தில் மகிழ்ச்சியாக பேச ஆரம்பித்தவன் இறுதியில் சலிப்பாக முடித்தான்.
தனக்கு எல்லாமுமாய் இருக்கும் தம்பிக்கு தன்னை விட அவளின் தோழியைப் பற்றி பேசும் போது ஏற்படும் முக மலர்ச்சியில் இதுவரை கண்டிராத அந்தத் தோழியின் மீது காரணமே இல்லாமல் ஆத்விக்கிற்கு பொறாமை ஏற்பட்டது.
ஆத்விக், “ஹ்ம்ம்… அப்போ உனக்கு உங்க அண்ணனை விட உன் ஃப்ரெண்டை தான் பிடிக்குமா?” எனப் புருவம் சுருக்கிக் கேட்டான்.
“ச்சே ச்சே… அப்படி இல்லண்ணா… அது எப்படி எனக்கு உன்ன பிடிக்காம போகும்… என்னோட பத்து வயசுலயே அம்மா அப்பாவ ஆக்சிடன்ட்ல இழந்ததுல இருந்து வெறும் பதினாறு வயசான நீ தானே எனக்கு எல்லாமுமா இருந்த… உனக்கு அப்புறம் தான்ணா எனக்கு எல்லாருமே… அஹாராவ எனக்கு பிடிக்க காரணமே அவ ஃபேமிலி தான்… அவள விட அவ ஃபேமிலிய தான் எனக்கு ரொம்ப பிடிக்கும்… அப்படி ஒரு ஃபேமிலி நமக்கு இல்லயேன்னு பல தடவை ஏங்கி இருக்கேன்ணா…” என்ற இஷானின் கண்களில் கண்ணீர் துளிர் விட்டது.
ஆத்விக் அதனை வருத்தத்துடன் பார்த்துக் கொண்டிருக்கும் போதே மேலும் தொடர்ந்த இஷான், “நான் ஃபேமிலிய நினைச்சி ஃபீல் பண்ணும் போதெல்லாம் அஹாரா சொல்லுவா ‘என் ஃபேமிலியும் உன் ஃபேமிலி போல தான்… உனக்கு நினைச்ச நேரம் அங்க வரலாம்… அங்க உனக்கு நிறைய தாத்தா, பாட்டி, அத்தை, மாமா, சித்தப்பா, சித்தி எல்லாரும் இருக்காங்க’னு… அப்போ எல்லாம் எனக்கு ரொம்ப ஹேப்பியா இருக்கும்ணா…” என்றான் வருத்தமாக.
“உனக்கு பிடிச்சிருக்குன்னா கொஞ்சம் நாள் அங்க போய் தங்கிட்டு வா இஷான்… எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்ல… உன் சந்தோஷம் தான் எனக்கு முக்கியம்…” என்றான் ஆத்விக் நல்ல சகோதரனாய்.
இஷான், “இல்லண்ணா… நீ வேணாம்னு சொன்னதால மட்டும் இல்ல நான் அங்க போய் தங்கல… உன் கூடயே இருந்துட்டு எங்கேயும் தனியா போய் தங்க பிடிக்கல… அதான் நீ இருக்கியே எனக்கு… ஐம் ஓக்கேண்ணா…” என்றான் போலிப் புன்னகையுடன்.
ஆத்விக், “சரி ஓக்கே… அப்போ ஒன்னு பண்ணலாம்… எனக்கு இந்த கொஞ்சம் நாளா ஆஃபீஸ்ல ஒரு இம்பார்டன்ட் ப்ராஜெக்ட் போய்ட்டு இருக்கு… அது முடிஞ்சதும் நாம ரெண்டு பேரும் சேர்ந்து உன்னோட அந்த க்ளோ….ஸ் ஃப்ரெண்ட் ஆரா இருக்காளே…” என வேண்டும் என்ற அஹாராவைப் பற்றி பேசும் போது நக்கல் தொனியில் இழுக்க,
குறுக்கிட்ட இஷான், “ஆரா இல்லண்ணா… அஹாரா… அவ பெயரை ஒழுங்கா சொல்லலன்னா மேடமுக்கு செம்ம கோவம் வரும்…” எனக் கூறிச் சிரித்தான்.
“ஹா… ஹா… ஏதோ ஒன்னு… எனக்கு ஆரான்னு தான் வருது… அந்த மேடம் கோவப்பட்டா எனக்கு என்ன வந்தது? இந்த ஆத்விக் கிட்டயே சண்டைக்கு வருவாளா அவ? அதையும் பார்க்கலாம்… சரி அதை விடு… நான் ஃப்ரீ ஆனதும் நாம ரெண்டு பேரும் சேர்ந்து அவ வீட்டுக்கு போய் அவ ஃபேமிலில இருக்குற எல்லாரையும் மீட் பண்ணலாம்… அவங்களுக்கு ஓக்கேன்னா ரெண்டு நாள் அங்க தங்கலாம்… ஆர் யூ ஹேப்பி நவ்?” எனப் புன்னகையுடன் கேட்டான் ஆத்விக்.
ஆத்விக்கைப் பாய்ந்து அணைத்துக்கொண்ட அவனின் தம்பி இஷான், “தேங்க் யூண்ணா… எனக்கு ரொம்ப ஹேப்பியா இருக்கு… லவ் யூ சோ மச்… நான் இப்பவே இதைப் போய் அஹாரா கிட்ட சொல்லிட்டு வரேன்… ஒரு வாரமா அவ காலேஜ் வேற வரல…” என்றவன் தன் கைப்பேசியை எடுத்துக்கொண்டு வெளியே ஓடினான்.
இஷான் சென்றதும் இருக்கையில் சாய்ந்து அமர்ந்து கொண்ட ஆத்விக், “ஹ்ம்ம்ம்… ஆரா… சம்திங் இருக்கு உன் கிட்ட… என் தம்பி இவ்வளவு ஹேப்பியா இருந்து நான் பார்த்ததே இல்ல… ஈகர்லி வெய்ட்டிங் டு மீட் யூ…” என்றான் புன்னகையுடன்.
ஆனால் ஆத்விக் காண ஆசைப்பட்டவளோ கண்களில் இருந்து கண்ணீர் ஆறாய் பெருக்கெடுக்க, இதுவரை கோபப்பட்டு பார்த்திராத தன் சங்கர் தாத்தா கோபத்துடன் இருப்பதையே கவலையுடன் பார்த்துக் கொண்டிருந்தாள்.
“அவங்க யாரு என் பையனுக்கு மருந்து கொடுக்க? பெத்த அப்பா அம்மா நாங்க இங்க குத்துக்கல்லாட்டம் இருக்கும் போது எங்களுக்கே தெரியாம அவங்க இஷ்டத்துக்கு ஏதேதோ பண்ணுறாங்க… அப்போ நாங்க ரெண்டு பேரும் எதுக்கு இருக்கோம்? ஒரேயடியா அவன் எங்களை தலைமுழுகியாச்சா?” எனக் கேட்டார் ஆவேசமாய்.
“மாமா… நீங்க கோவப்பட்டீங்கன்னு எதுவும் ஆகப் போறதில்ல… அவங்களும் விஷ்ணு நல்லா இருக்கணும்னு தானே பண்ணுறாங்க…” என்றாள் பிரியா அவரை சமாதானப்படுத்தும் விதமாக.
சங்கர், “எது பிரியா அவனுக்கு நல்லது? குடும்பத்துல மூத்த வாரிசுன்னு இந்த ராமுக்கு ரொம்ப தான் இடம் கொடுத்துட்டோம்… அதான் என் கிட்ட கூட கேட்கணும்னு தெரியாம அவன் இஷ்டப்படி பண்ணுறான்… நல்ல ஹாஸ்பிடலா பார்த்து என் பையனுக்கு ட்ரீட்மென்ட் பார்க்கலாம்னு பார்த்தா படிச்ச முட்டாள் மாதிரி இந்த ராம் அந்த சுவாமி கொடுத்தார் இந்த சுவாமி கொடுத்தார்னு ஏதோ கசாயம், உருண்டை எல்லாம் விஷ்ணுவுக்கு கொடுத்துட்டு இருக்கான்… இதுக்கு உன் தங்கச்சி ஜெயா வேற சப்போர்ட்டு… என் கூடப் பிறந்ததுங்களே என் மேல உள்ள கோவத்துல எனக்கு எதிரா நடக்கணும்ங்குற ஒரே காரணத்துக்காக அவங்க பண்ணுற எல்லாத்துக்கும் சப்போர்ட் பண்ணுறாங்க… அவங்க சொல்றபடி தான் எனக்கு வாய்ச்ச மருமகளும் கேட்குறா… எல்லாரும் ஒன்னு சேர்ந்து எங்கள எங்க பையன் கிட்ட இருந்து பிரிச்சிட்டாங்க… இவ்வளவு சொத்து இருந்தும் என் புள்ளைக்கு ட்ரீட்மெண்ட் பார்க்க வக்கில்லாதவனா இருக்கேனா?” என்றவருக்கு ஆதங்கம் தாளவில்லை.
விஷ்ணு சொக்கலிங்கம் மனையகத்தில் இருந்து சென்றவன் தன் மனைவியின் வீட்டில் தங்கி விட, அவனுக்கு கேன்சர் இருப்பது காயத்ரி மூலம் குடும்பத்தில் அனைவருக்கும் தெரிய வந்து விட்டது.
மருத்துவமனை சென்றால் செலவு அதிகமாகும் என கணவனின் உடல்நலத்தைக் கூட கருத்திற் கொள்ளாது காயத்ரி தயங்கினாள்.
அதனால் ராம் ஏதோ சுவாமியைப் பார்த்து அவர் கூறியவாறு ஏதேதோ விஷ்ணுவிற்கு கொடுக்கின்றனர்.
அது தெரிய வந்து தான் சங்கர் கோபம் கொண்டிருப்பது.
வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த லக்ஷ்மன் விடுமுறை முடிந்து மீண்டும் கிளம்பி இருக்க, பூரணியும் பிரபுவும் லக்ஷ்மனின் மனைவி பிள்ளைகளுடன் தங்கி இருக்கின்றனர்.
அன்னலட்சுமியின் மரணம் நடந்ததால் பூரணியின் குடும்பம் இன்னும் சொக்கலிங்கம் மனையகத்தை விட்டுக் கிளம்பவில்லை.
பூரணிக்கும் இந் நிலையில் தன் சகோதரனை தனியே விட்டு செல்ல மனமில்லை.
பிரியாவும் கணவன் மற்றும் மகளுடன் அங்கேயே சில நாட்களுக்கு தங்க முடிவு செய்திருந்தாள்.
“சரி மாமா… கொஞ்சம் அமைதியா இருங்க… நானும் அஹாரா அப்பாவும் காயத்ரி வீட்டுக்கு போய் விஷ்ணு கூட பேசுறோம்… நிச்சயம் அவன் நான் சொல்றதைக் கேட்பான்…” என்ற பிரியா உடனே சந்தோஷை அழைத்துக்கொண்டு காயத்ரியின் வீட்டிற்கு கிளம்பினாள்.
ஆனால் அங்கு அவள் எதிர்ப்பார்த்துச் சென்றதற்கு மாறாக அனைத்தும் நடந்தன.
பிரியாவை அங்கு கண்டதும் விஷ்ணு ஆத்திரத்தில் குதிக்கத் தொடங்கி விட்டான்.
“எதுக்காக இங்க வந்திருக்க? அதான் அன்னைக்கு அடிச்சி வீட்டை விட்டே துரத்திட்டீங்களே…” எனக் கத்தினான் விஷ்ணு.
பிரியா, “விஷ்ணு… எதுக்கு இப்போ கோபப்படுற? உன்னைப் பார்க்க தான் வந்தோம்… நீ எப்படி இருக்க? யாரு உன்ன துரத்தினாங்க? நீயா தான் கிளம்பி போன… மாமாவும் அத்தையும் பாவம்… நீ இல்லாம ரொம்ப வருத்தப்படுறாங்க…” என்றாள்.
“எதுக்கு இந்த ட்ராமா? நான் இருந்தா என்ன? செத்தா என்ன? அந்த ஆளுக்கு அவரோட சொத்து தானே வேணும்… பெத்த புள்ளைக்கு இல்லாம அதை வெச்சிக்கிட்டு அவர் என்ன பண்ண போறார்? வந்துட்டாங்க சமாதானம் பேச பெரிய இவ மாதிரி…” என விஷ்ணு பிரியாவையும் வசை பாடினான்.
மனைவியைக் குறை கூறுவது பிடிக்காத சந்தோஷ், “அவ என்ன பண்ணா விஷ்ணு? உனக்காக தானே வந்திருக்கா… வீடு தேடி வந்தவங்கள இப்படி தான் நடத்துவியா?” எனக் கேட்டான் கோபமாக.
“நீ யாருயா இடைல? வந்துட்டாங்க எல்லாரும் உத்தமர் போல பேசிக்கிட்டு… உனக்கு பிஸ்னஸ் ஆரம்பிக்க பணம் தேவைப்பட்ட போது கூட எங்க அப்பா கிட்ட தானே கேட்டு வாங்கின… இப்போ இந்த சொத்தை எனக்கு கிடைக்க விடாம பண்ணா எல்லாத்தையும் நீங்களே அனுபவிக்கலாம்னு பார்க்குறீங்களா? அதுக்கு தானே மாமா மாமான்னு நீயும் உன் பொண்டாட்டியும் அங்கேயே இருக்கீங்க…” என நிதானம் இழந்து என்ன பேசுகிறோம் என்றே தெரியாமல் விஷ்ணுவின் வார்த்தைகள் வரம்பு மீறின.
“மாமா…” எனச் சிறு வயதில் இருந்தே தன்னை பாசத்துடன் அழைப்பவன் இன்று தன்னையே மரியாதை குறைவாகப் பேசவும் சந்தோஷ் அதிர, பிரியாவோ ஆத்திரம் மேலோங்கி விஷ்ணுவின் கன்னத்தைப் பதம் பார்த்தாள்.
“ச்சீ… யாரோ சொல்றத கேட்டுக்கிட்டு என்னையும் என் புருஷனையுமே தப்பா பேசுறியா நீ? அது சரி… பெத்த அப்பனையே அடிக்க கை ஓங்கினவன் தானே நீ… உனக்கு பட்டா மட்டும் தான் அறிவு வரும் விஷ்ணு… அன்னைக்கு இந்த அக்கா சொன்னதோட அர்த்தம் புரியும் உனக்கு…” என்ற பிரியா கணவனையும் அழைத்துக்கொண்டு அங்கிருந்து கிளம்பி மீண்டும் சொக்கலிங்கம் மனையகத்துக்கே வந்தாள்.
பிரியா அங்கு நடந்ததைக் கூறவும் அனைவருமே விஷ்ணுவின் நடவடிக்கையில் ஆத்திரமுற்றனர்.
காயத்ரியின் வீட்டில் இருந்து வந்ததிலிருந்து அமைதியாக இருந்த சந்தோஷ் திடீரென, “பிரியா… அஹாரா… நம்ம திங்க்ஸ் எல்லாம் உடனே பேக் பண்ணுங்க… நாம இப்பவே நம்ம வீட்டுக்கு கிளம்பலாம்…” என உத்தரவிட்டான்.
“என்னங்க… இந்த நேரத்துல எப்படிங்க?” எனப் பிரியா தயங்க, “உனக்கு உன் புருஷன் வேணும்னா இந்த நிமிஷமே கிளம்பி என் கூட வர… இல்லன்னா என்னை மறந்துடு… நான் என் பொண்ண கூட்டிட்டு போயிடுறேன்…” என்றான் சந்தோஷ் அழுத்தமாக.
பிரியா மீண்டும் ஏதோ கூற வரவும் பிரபு மறுப்பாகத் தலையசைக்க, அத்துடன் எதுவும் பேசாமல் அங்கிருந்து கிளம்ப ஆயத்தமானாள் பிரியா.
அஹாரா இன்னும் அழுது கொண்டிருக்க, சந்தோஷிடம் சென்ற சங்கர் அவன் முன் கையேந்தி, “விஷ்ணு உங்க கிட்ட நடந்துக்கிட்ட முறைக்கு நான் உங்க கிட்ட மன்னிப்பு கேட்குறேன் மாப்பிள்ளை… பிரியா பாவம்… அவ எல்லாருக்கும் நல்லது தான் நினைப்பா… விஷ்ணு மேல உள்ள கோவத்துல அவளைக் கஷ்டப்படுத்திறாதீங்க…” எனக் கண் கலங்கினார்.
“ஐயோ மாமா…” என அவரின் கரத்தை அவசரமாகக் கீழே இறக்கி விட்ட சந்தோஷ், “நீங்க எதுக்கு மாமா மன்னிப்பு எல்லாம் கேட்டுக்கிட்டு? விஷ்ணு மேல தான் எனக்கு கோவம்… நானும் மானம் ரோஷம் உள்ள மனுஷன் தான் மாமா… அவன் அவ்வளவு பேசினதுக்கு அப்புறமும் என்னால ஒரு நிமிஷம் கூட இங்க இருக்க முடியாது… என்னை மன்னிச்சிடுங்க… உங்க அக்கா மகளை பார்க்க நீங்க எப்போ வேணாலும் எங்க வீட்டுக்கு வரலாம்… ஆனா இனிமே என்னால இங்க வர முடியாது…” என்றான் அழுத்தமாக.
பிரியாவும் அஹாராவும் தம் உடைமைகளுடன் வரவும் உடனே தன் மனைவி மற்றும் மகளை அழைத்துக்கொண்டு அங்கிருந்து கிளம்பினான் சந்தோஷ்.
அனைவரும் சென்றதும் கண் மூடி இருக்கையில் சாய்ந்த பூரணி, ‘அப்பா… நீங்க கட்டிக் காத்த குடும்பம் இன்னைக்கு ஒவ்வொரு திசைக்கும் சிதறி போயிடுச்சுப்பா… திரும்ப எப்போ நம்ம குடும்பம் பழையபடி மாறும்?’ என மனதில் சொக்கலிங்கத்திடம் கேட்டவரின் மூடி இருந்த இமைகளைத் தாண்டி கண்ணீர் கசிந்தது.