உறவுகள் எனும் நந்தவனத்தில்… – அத்தியாயம் 2
Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels
ஃபேமிலி கெட்டுகெதர் முடிந்து சரியாக ஒரு மாதத்தில் வார இறுதி விடுமுறையில் தன் வீட்டிற்கு வந்திருந்தாள் அஹாரா.
ஹாஸ்டலில் தங்கிப் படிப்பவளுக்கு வீட்டிற்கு வந்தாள் ராஜ மரியாதை தான்.
அவளுக்கு பிடித்த அனைத்தையும் சமைத்துப் போடுவாள் பிரியா.
தந்தை சந்தோஷ் அதற்கும் ஒருபடி மேலே சென்று தலையில் தூக்கி வைத்து தாங்குவார்.
இவ்வாறிருக்கையில் தான் வீட்டுத் தொலைபேசி மணி அடிக்கவும் அஹாரா சென்று அழைப்பை ஏற்க, எதிர் முனையில் கூறப்பட்ட செய்தியில் அவளின் கண்கள் சட்டெனக் கலங்கி விட்டன.
“என்னாச்சு அஹாரா? யாரு லைன்ல? ஏன் உன் கண்ணு கலங்கி இருக்கு?” எனக் கேட்டாள் அங்கு வந்த பிரியா.
அழைப்பைத் துண்டித்து விட்டு தாயின் பக்கம் திரும்பிய அஹாரா, “பெரிய பாட்டி இறந்துட்டாங்களாம்மா…” எனத் தாயை அணைத்துக் கொண்டாள் கண்ணீருடன்.
பிரியாவிற்கும் தன் பாட்டியின் மரணம் மிகுந்த வேதனையாய் இருந்தது.
லக்ஷ்மனுக்கும் தகவல் தெரிவித்து விட்டு மூவரும் உடனே கிளம்பினர்.
இறுதியாக மகிழ்ச்சியும் கொண்டாட்டமுமாக இருந்த வீட்டில் இப்போது அனைவரும் வேதனையுடன் ஒன்று கூடினர்.
அஹாரா தன் குடும்பத்துடன் சங்கரின் வீட்டை அடையும் போது ஏற்கனவே அவளின் தாத்தா பிரபு, பாட்டி பூரணி மற்றும் லக்ஷ்மனின் குடும்பம் அங்கு வந்திருந்தனர்.
அன்னலட்சுமியின் உடலைச் சுற்றி அவரின் பிள்ளைகள் அனைவரும் கண்ணீர் மல்க அமர்ந்திருந்தனர்.
பூரணி ஒரு ஓரமாக வேதனையுடன் அமர்ந்திருக்கவும் அவரின் அருகில் சென்று அமர்ந்து கொண்டாள் அஹாரா.
“பாட்டி…” என அஹாரா கையைப் பிடிக்கவும் கசந்த புன்னகையுடன் அவளின் தலையைத் தடவி விட்டார் பூரணி.
பிரியாவும் வந்து தாயின் பக்கத்தில் அமர்ந்துகொள்ள, “நம்ம குடும்பத்துல இத்தனை வருஷமா இருந்த ஒற்றுமை கொஞ்சம் கொஞ்சமாக குறையுது பிரியா…” என்றார் பூரணி வேதனையாக.
“என்னாச்சு மா?” எனப் பிரியா கேட்கவும், “நீங்க வர முன்னாடி உன்னோட பாக்கியம் சித்தி பெரிய கலாட்டாவே பண்ணிட்டா…” என்றார் பிரபு வேதனையாக.
பிரியாவும் அஹாராவும் அவரைப் புரியாமல் பார்க்க, “அத்தை ரொம்ப காலமாவே உடம்பு முடியாம இருந்தாங்க… அவரால நினைச்ச நேரம் எங்கேயும் போக முடியாது… அதுவும் இது மாமாவும் பெரிய அத்தையும் வாழ்ந்த வீடு… இதை விட்டு போக மனசில்லாம தான் சங்கர் மச்சான் கூடவே இருக்குறதா சொன்னாங்க… பூரணில இருந்து உன் சித்திங்க எல்லாருமே இதுக்கு சம்மதிச்சாங்க தானே… ஆனா இப்போ பாக்கியம் வந்து சொல்றா அவ அத்தைய பல தடவ அவங்க வீட்டுக்கு கூப்பிட்டாளாம்… அங்க வந்து தங்க சொல்லி… அத்த இந்த வீட்ட விட்டு வர முடியாதுன்னு மறுத்து இருக்காங்க போல… ஆனா இந்த தர்மன் பயலு சங்கர் தான் ஏதாவது சொல்லி அத்தைய விட்டு இருக்க மாட்டான்னு பாக்கியத்தை ஏத்தி விட்டிருக்கான் போல… அவ கொஞ்சம் முன் கோபக்காரி வேற… நேரா வந்து சங்கர் கூட சண்டை போடுறா அம்மாவ அவ கூட வெச்சிக்க விடலன்னு… இதுல கோதை புருஷன் நடேசனுக்கு வேற சங்கரை சுத்தமா பிடிக்காது… அவனும் சேர்ந்துக்கிட்டு சின்ன பிரச்சினைய ஊதிப் பெரிசு பண்ணிட்டான்… இது எங்க போய் முடிய போகுதோ தெரியல…” என்றார் பிரபு வருத்தமாக.
தாம் வளர்த்து திருமணம் வரை எல்லாம் பார்த்து செய்தவர்கள் இப்போது தமக்குள் சண்டை இடுவதை அந்த வயதானவர்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.
பிரியா எதுவும் பேசவில்லை. ஆனால் தாய் கூறியது போல் ஏதாவது நடந்து விடுமோ என்ற பயம் மனதில் முளைக்க ஆரம்பித்தது.
அப் பிரச்சினையில் சகோதரிகள் அனைவரும் பாக்கியத்தின் பக்கம் நிற்க, தனித்து விடப்பட்டிருந்த சங்கருக்கு பூரணியும் பிரபுவும் சிவமும் துணையாக இருந்தனர்.
சங்கர் மீது நிச்சயம் எந்தத் தவறும் இருக்காது எனப் புரிந்து வைத்திருந்த பிரியாவும் தன் தாய்மாமனின் பக்கம் நிற்க, அவளின் சித்திகளுக்கோ அது பெரிய மனத்தாங்கலாக அமைந்து விட்டது.
சங்கர் மீது எவ்வளவு தான் கோபம் இருந்தாலும் தம் தாய் தந்தை போல் வளர்த்த பூரணியையும் பிரபுவையும் சகோதரிகள் வெறுக்கவில்லை.
அன்றே அன்னலட்சுமியின் இறுதிக் கிரியைகளை முடித்து அவரின் உடலை நல்ல முறையில் அடக்கம் செய்தனர்.
அனைத்து சடங்குகளும் முடிந்து சில மணி நேரத்திலேயே சொக்கலிங்கம் மனையகத்தில் பிரளயமே வெடித்தது.
“ஒழுங்கா எனக்கு சேர வேண்டிய சொத்த இப்போவே எனக்கு எழுதி வைங்க…” என ஆரம்பித்தான் விஷ்ணு.
லக்ஷ்மன், “என்ன விஷ்ணு இது? இன்னைக்கே இதைப் பத்தி எல்லாம் பேசணுமா?” எனக் கடிந்து கொண்டான்.
காயத்ரி, “இந்த சொத்தெல்லாம் அவருக்கு வர வேண்டியது தானே… அதை எழுதி கொடுத்தா தான் என்ன? வயசான காலத்துல சொத்தை எல்லாம் வெச்சிக்கிட்டு அவர் என்ன பண்ண போறார்?” என மாமனார் என்றும் பாராமல் சங்கரை மட்டம் தட்டிப் பேசினாள்.
சங்கர், “இது எனக்கும் என் பையனுக்கும் இடைல நடக்குற பிரச்சினை… இதுல நீ தலையிடாதேம்மா…” என்றார் காயத்ரியிடம் அமைதியாக.
ஆனால் காயத்ரியோ உடனே கண்ணைக் கசக்கிக்கொண்டு விஷ்ணுவிடம், “பாருங்க விஷ்ணு… யாரோ மூணாம் மனுஷி மாதிரி உங்கப்பா என்னை ட்ரீட் பண்ணுறார்… நான் உங்களுக்காக தானே பேசினேன்… அவருக்கு ஆரம்பத்துல இருந்தே நாம காதலிச்சு கல்யாணம் பண்ணதால என்னை சுத்தமா பிடிக்கல…” என மூக்கை உறிஞ்சினாள்.
உடனே விஷ்ணு தன் தந்தையிடம் சண்டைக்குச் சென்றான்.
“என் பொண்டாட்டிய நீங்க எப்படி அப்படி பேசலாம்? இந்த சொத்துல அவளுக்கும் தான் உரிமை இருக்கு… நானும் பொறுத்து பொறுத்து பார்த்தா நீங்க ஓவரா தான் போறீங்க… இன்னைக்கே இதுக்கு ஒரு முடிவு தெரிஞ்சாகணும்…” என்றான் விஷ்ணு ஆவேசமாக.
பூரணியோ கலக்கமாக ஒரு மூலையில் அமர்ந்திருக்க, அவருக்கு துணையாக அஹாராவும் நயனிகாவும் நின்றனர்.
விஷ்ணு சொத்தை எழுதிக் கேட்டு சண்டை பிடிக்க, காயத்ரியும் அவனை ஏற்றி விட்டாள்.
போதாக்குறைக்கு காயத்ரியின் பெற்றோரும் மகளுக்கு ஆதரவாகப் பேச, பிரச்சினை வளர்ந்து அனைவரின் பார்வைக்கும் வந்தது.
ஏற்கனவே சங்கருடன் கோபத்தில் இருந்த பாக்கியமும் விஷ்ணுவிற்கு ஆதரவாகப் பேச, தர்மனும் சங்கரை தரக் குறைவாகப் பேச ஆரம்பித்தார்.
பிரியாவும் லக்ஷ்மனும் சங்கருக்கு ஆதரவாகப் பேசினர்.
ஒரு கட்டத்தில் வாய்த் தாக்கம் முற்றி விஷ்ணு சங்கரின் சட்டையைப் பிடித்து தந்தை என்றும் பாராது அவரை அறையக் கை ஓங்க, விஷ்ணுவின் கன்னத்தில் ஓங்கி அடித்தாள் பிரியா.
“பெத்த அப்பா மேலயே கை வைக்கிறியா நீ? உன்ன பெத்து வளர்த்து ஆளாக்கி நல்ல நிலைக்கு கொண்டு வந்ததுக்கு இது தான் நீ அவருக்கு கொடுக்குற மரியாதையா?” எனக் கேட்டாள் பிரியா ஆத்திரமாக.
விஷ்ணு கன்னத்தில் கை வைத்து கோபத்துடன் நிற்க, “நீங்க எப்படி என் புருஷனை அறையலாம்?” எனக் கேட்டாள் காயத்ரி கோபமாக.
பிரியா, “சின்ன வயசுல நான் தானே அவனை தூக்கி வளர்த்தேன்… அவன் தப்பு பண்ணா நான் அடிச்சாவது கண்டிப்பா திருத்துவேன்… புருஷன் தப்பு பண்ணா அவனுக்கு சரியானதை சொல்லி புரிய வெச்சி திருத்துறது தான் பொண்டாட்டிக்கு அழகு… அதை விட்டுட்டு அவனை இன்னும் ஏத்தி விட்டு சண்டைய பெரிசு பண்ணுறதுல இல்ல…” என்றாள் அதே கோபத்துடன்.
விஷ்ணுவோ மறு நொடியே தன் மனைவியையும் குழந்தையையும் அழைத்துக்கொண்டு அங்கிருந்து சென்றிருந்தான்.
பிரியா அடித்ததால் தான் விஷ்ணு சென்று விட்டதாக அனைவரும் அவளை சாடினர்.
“பாட்டி இறந்து ஒரு நாள் கூட முடியல… அதுக்குள்ள அவன் சொத்துக்காக சண்டை போடுறான்… அதுவும் பெத்த அப்பாவையே கை நீட்டுறான்… நீங்க எல்லாரும் அதைத் தடுக்காம வேடிக்கை பார்க்குறீங்க… அவனைத் தடுக்குறதுக்காக நான் கை நீட்டினது தான் இப்போ தப்பு… அப்படி தானே…” எனக் கேட்டாள் பிரியா வருத்தமாக.
“விஷ்ணு கேட்குறதுல என்ன தப்பு இருக்கு பிரியா? நாங்க வளர்ந்து கல்யாணம் பண்ணதும் அம்மா எங்களுக்கு சொத்தைப் பிரிச்சு தந்தாங்க… இப்போ விஷ்ணுவுக்கு கல்யாணம் ஆகி குழந்தையே இருக்கு… அப்போ அண்ணன் அவனுக்கு சேர வேண்டியதை கொடுத்து தானே ஆகணும்…” என்றார் பரிமளம் வாழைப்பழத்தில் ஊசியை ஏற்றுவது போல்.
பிரியா, “ஆனா சித்தி அவன்…” என ஏதோ கூற முயல, “பிரியா… விடும்மா… அவங்க எப்படியும் எதையும் புரிஞ்சிக்க மாட்டாங்க…” என்றார் சங்கர் உடைந்து போய்.
“ஆமா… பிரியாவுக்கு அவ மாமன் தானே எப்பவும் பெரிசு… அதான் எங்க யாரையும் மதிக்காம அவருக்கே சப்போர்ட் பண்ணுறா…” என்றார் நடேசன் எள்ளலாக.
“பிரியா… போதும்… இதுக்கு மேல எதுவும் பேசாதே… போய் அம்மா கூட இரு…” என தங்கையை அனைவரும் குற்றம் சுமத்துவதைப் பொறுக்க முடியாமல் லக்ஷ்மன் சற்று குரலை உயர்த்தவும் அமைதி ஆகினாள் பிரியா.
“அம்மாவே இல்லன்னு ஆகிடுச்சு… இதுக்கு மேல நாம இங்க இருந்து என்ன பண்ணுறது? எல்லாரும் கிளம்ப வேண்டியது தான்…” எனத் தன் உடைமைகளை எடுத்து வைத்தார் பாக்கியம்.
அவரைத் தொடர்ந்து சகோதரிகள் அனைவரும் தம் குடும்பம் சகிதம் கிளம்பத் தயாராக, நடப்பவை அனைத்தையும் கையாலாகாத்தனத்துடன் பூரணியும் பிரபுவும் பார்த்துக் கொண்டிருந்தனர்.
மகாவும் சங்கரும் தம் மகன் குடும்பத்துடன் வீட்டை விட்டு சென்றதில் மனம் உடைந்து அமர்ந்திருந்தனர்.
குடும்பத்தினர் அனைவருமே சென்று விட, பூரணி – பிரபு குடும்பத்துடன் சங்கர் மற்றும் மகா மட்டுமே எஞ்சினர்.
“தாத்தா…” என அஹாரா சங்கரை அணைத்துக்கொள்ள, போலிப் புன்னகை ஒன்றை உதிர்த்தவர், “அவனுக்கு உடம்பு சரி இல்ல பாப்பா…” என்றார் சங்கர் கண்ணீருடன்.
“என்ன மாமா சொல்றீங்க?” எனக் கேட்டான் லக்ஷ்மன் குழப்பமாக.
இவ்வளவு நேரமும் அமைதியாக இருந்த மகா மெதுவாக வாய் திறந்தார்.
“விஷ்ணுவுக்கு ப்ளட் கேன்சர்…” எனக் கண்ணீருடன் கூறவும் அங்கிருந்த அனைவருமே அதிர்ந்தனர்.
அப்போது தான் விஷ்ணுவின் உடல் எடை கூட வழமையை விட மிகவும் குறைந்து இருந்தது நினைவுக்கு வந்தது.
“சாஃப்ட் ட்ரிங்க்ஸ் அதிகமா குடிச்சதால கேன்சர் வந்து இருக்குறதா டாக்டர்ஸ் சொல்றாங்க… கழுத்துல கூட ஏதோ கட்டி இருக்குதாம்…” எனக் கதறினார் மகா.
“சொத்த எழுதி கொடுத்தா மொத்தமா அவன் பொண்டாட்டி கூட போயிடுவான்… அது கூட எனக்கு பிரச்சினை இல்ல… ஆனா இன்னுமே ட்ரீட்மெண்ட் எடுக்க சம்மதிக்கல… மருமகளுக்கும் அவ குடும்பத்துக்கும் பணம் இருந்தா போதும்… விஷ்ணுவுக்கு இப்படி ஒரு பிரச்சினை இருக்குறதை அவங்க பெரிசா எடுத்துக்கவே இல்ல… இந்த சொத்த எப்படி எழுதி வாங்கலாம்னு இருக்காங்க…” என்றார் சங்கர் வருத்தமாக.
பிரபு, “ஏன் சங்கரா இதைப் பத்தி எங்க கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லல?” எனக் கேட்டார் வருத்தமாக.
ஆனால் சங்கரிடமோ அதற்குப் பதில் இல்லை.
“கேன்சர் வரது ஒன்னும் தப்பான விஷயம் இல்லயே தாத்தா… இதுல வெட்கப்பட என்ன இருக்கு? உங்கள போல தான் நிறைய பேர் கேன்சர்னு தெரிஞ்சதும் யாருக்கும் தெரியாம மறைக்கிறாங்க… அதுல மறைக்க ஒன்னும் இல்ல தாத்தா… நமக்கு எப்படி காய்ச்சல் தலைவலின்னு நோய் வருமோ அது போல தான் கேன்சரும்… மறைச்சா எப்படி ட்ரீட்மெண்ட் பார்க்க முடியும்? அதான் இப்போ மெடிக்கல் ஃபீல்ட் ரொம்ப வளர்ந்திடுச்சுல்ல… நிச்சயமாக விஷ்ணு மாமாவ குணப்படுத்தலாம்…” என்றாள் அஹாரா ஆறுதலாய்.
“அஹாரா சொல்றது கரெக்ட் தான் மாமா… எவ்வளவு செலவானாலும் பரவால்ல… விஷ்ணுவை நாம எல்லாரும் சேர்ந்து சீக்கிரம் குணப்படுத்தலாம்… உங்க பையன் உங்களுக்கு பழையபடியே கிடைப்பான்…” என்றான் லக்ஷ்மன்.
பூரணி மட்டும் எதுவுமே பேசாமல் அமைதியாக இருந்தார்.
“அக்கா… நீங்களும் என்னால தான் எல்லா பிரச்சினையும்னு நினைக்கிறீங்களா?” எனக் கேட்டார் சங்கர் வருத்தம் தோய்ந்த குரலில்.
“உன் மேல ஒரு தப்பும் இல்லப்பா… ஆனா மனசுக்கு ரொம்ப வருத்தமா இருக்கு… நானும் அக்காவும் உங்க எல்லாரையும் எங்க பசங்கள போல வளர்த்தோம்… அக்கா போறதுக்கு அப்புறம் இவரும் நானும் மாமாவும் தான் உங்கள வளர்த்தோம்… இப்போ எங்க பசங்களே சண்டை போட்டு பிரிஞ்சி போறது கஷ்டமா இருக்கு… நல்ல வேளை அம்மா இதெல்லாம் பார்க்க முன்னாடி போய் சேர்ந்துட்டாங்க…” எனக் கண் கலங்கினார் பூரணி.
அவரின் கையைப் பற்றி எல்லாம் சரி ஆகிடும் என ஆறுதல் அளித்தார் பிரபு.
ஆனால் அந்த வயதான தம்பதிகளுக்குத் தெரியவில்லை பிரச்சினை இனி தான் வளரப் போவது.
உறவுகள் மலரும்…