உறவுகள் எனும் நந்தவனத்தில்… – அத்தியாயம் 1

சென்னையில் இருந்து சில கிலோமீட்டர் தொலைவில் இருந்த கொடிக்காமம் என்ற ஊரில் “சொக்கலிங்கம் மனையகம்” என கேட்டில் பெரிதாக போர்ட் மாட்டப்பட்டிருக்க, அதன் முன்னே வேகமாக வந்து நின்றது ஒரு டாக்சி.

ஒரு கையில் தன் உடைமைகள் அடங்கிய பையுடன் மறு கையால் தான் அணிந்திருந்த குர்த்தியின் துப்பட்டாவை சரி செய்தபடி அதிலிருந்து இறங்கினாள் இருபதுகளின் தொடக்கத்தில் இருந்த அஹாரா.

மாநிறத்தை விட சற்று வெண்மையான நிறம், கொஞ்சமாய் பூசிய உடல்வாகு, சிரித்தால் குழி விழும் கன்னம், வில் போல் வளைந்த புருவங்களுக்கு கீழே மை தீட்டிய கூர் விழிகள், கூர் நாசி, உதட்டுச்சாயம் எதுவும் பூசாமலே சிவந்த இதழ்கள், இடுப்பு வரை நீண்டிருந்த கூந்தல் ஃபிஷ் டேல் பிண்ணலிடப்பட்டு தோளில் புரள ஒரு முறையாவது திரும்பிப் பார்க்க வைக்கும் அழகி.

அஹாரா இறங்கி பணம் கொடுத்ததுமே டாக்சி அங்கிருந்து கிளம்பி விட, கேட்டில் இருந்த பெயர்ப் பலகையை கண்களில் நிரப்பிக் கொண்டவளின் இதழ்கள் புன்முறுவல் பூத்தன‌.

பல நாட்கள் கழித்து தன் இருப்பிடம் வந்து சேர்ந்த திருப்தி மனதில் எழ, மெதுவாக கேட்டைத் திறந்து கொண்டு பிரமாண்டமாகக் காட்சி அளித்த அப் பழைய கால வீட்டின் முற்றத்தில் காலடி எடுத்து வைத்தாள் அஹாரா.

விடுதியில் தங்கி கல்லூரிப் படிப்பை தொடர்ந்து கொண்டிருந்தவள் பல நாட்கள் கழித்து குடும்பத்தினரைக் காண ஆவலாக வந்திருக்கிறாள்.

கேட்டில் இருந்து சில அடி தூரத்தில் பண்டைய முறையில் கட்டப்பட்டு நான்கு தலைமுறைகளைத் தாண்டியும் தன் பலம் குறையாது ஒவ்வொரு தலைமுறைக்கும் காலத்துக்கு ஏற்ப பாரம்பரியம் மாறாமல் சீரமைக்கப்பட்டு எழில் மாறாது வீற்றிருந்த சொக்கலிங்கம் மனையகம் விழாக்கோலம் பூண்டிருந்தது.

அஹாரா கேட்டைத் திறந்துகொண்டு உள் நுழைந்ததுமே, “அஹாரா வந்துட்டா…” எனக் குரல் கொடுத்தபடி ஓடி வந்து அவளை அணைத்துக் கொண்டாள் நயனிகா.

அஹாராவிற்கு சித்தி முறையானவள். ஆனால் இருவருமே ஒரே வயது என்பதால் தோழிகள் போலவே பழகுவர்.

“எப்படி இருக்க சித்தி?” எனக் கண்களில் குறும்பு மின்னக் கேட்ட அஹாராவின் தோளில் போலி முறைப்புடன் அடித்த நயனிகா, “எத்தனை தடவ சொல்றது உனக்கு என்னை சித்தின்னு கூப்பிடாதேன்னு… ஏதோ வயசான ஃபீல் வருது…” என சிலுப்பிக் கொண்டாள்.

நயனிகாவின் போலிக் கோபத்தைப் பார்த்து அஹாரா வாய் விட்டு சிரிக்க, “அஹாரா… ஏன் லேட்? எல்லாரும் முன்னாடியே வந்துட்டாங்க… நீ மட்டும் தான் லேட்… வா உள்ள போலாம்… நயனி… உன்ன உங்க அப்பா தேடிட்டு இருந்தார்… போய் என்னன்னு கேளு…” என்றவாறு அங்கு வந்தார் அஹாராவின் தாய் பிரியா.

“சரிக்கா…” என்று விட்டு நயனிகா சென்று விட, தாயுடன் வீட்டினுள் நுழைந்தாள் அஹாரா.

அஹாராவின் கொள்ளுத் தாத்தாவான சொக்கலிங்கம் தான் அவ் வீட்டைக் கட்டியது.

அந்தக் காலத்திலேயே கொடிக்காமத்தின் சேர்மனாக இருந்தவர். இன்றளவிலும் அவரின் பெயரைக் கூறினால் தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள்.

அதனாலேயே அவ் வீட்டிற்கென ஊரில் தனி மரியாதை இருந்தது.

சொக்கலிங்கத்திற்கு இரண்டு மனைவியர். அந்தக் காலத்தில் இரண்டு மனைவிகள் இருப்பது சாதாரணமாக இருந்தது.

மூத்த தாரம் மீனாட்சியம்மாள். இரண்டாம் தாரம் அன்னலட்சுமி.

மனைவியருக்கு இடையில் எந்தப் பாரபட்சமும் காட்டாது சரிசமமாக தன் அன்பைக் காட்டிய சொக்கலிங்கத்தின் மேல் அதே அளவு அன்பை அவரின் துணைவியரும் வைத்திருந்தனர்.

ஓரகத்திகள் ஒருவருக்கொருவர் இவ்வளவு அன்பாக இருப்பார்களா என ஊரே ஆச்சரியப்படும் அளவுக்கு அக்கா, தங்கை என பாசமாக இருந்தனர்.

சொக்கலிங்கத்திற்கும் மீனாட்சியம்மாளிற்கும் மூன்று பிள்ளைகள். மூத்தவர் சரஸ்வதி, அடுத்து பூரணி, இளையவர் சங்கர்.

சொக்கலிங்கத்திற்கும் அன்னலட்சுமிக்கும் மூன்று பிள்ளைகள். கமலா, பாக்கியம், கோதை.

இவர்களோடு சேர்த்து சிறு குழந்தையாக இருக்கும் போதே பெற்றோரால் கை விடப்பட்டு சொக்கலிங்கத்தின் வீட்டு வாசலில் போட்டுச் செல்லப்பட்டிருந்த பரிமளத்தையும் தன் குழந்தைகளுடன் சேர்த்து தத்தெடுத்து வளர்த்தார்.

மீனாட்சியம்மாள், அன்னலட்சுமி இருவரையுமே குழந்தைகள் அம்மா என்றே அழைப்பர்.

பெற்றோரைப் போலவே ஏழு பிள்ளைகளும் எந்தவொரு பிரச்சினையும் இன்றி ஒருவருக்கொருவர் அன்புடன் வளர்ந்தனர்.

அதிலும் அனைவரிலும் மூத்தவரான சரஸ்வதியின் மீதும் அடுத்து பிறந்த பூரணியின் மீதும் பிள்ளைகள் அனைவரும் அக்கா அக்கா என உயிரையே வைத்திருந்தனர்.

சரஸ்வதியும் பூரணியும் கூட தம் தம்பிக்கும் தங்கைகளுக்கும் இன்னொரு தாயாகவே இருந்தனர்.

சங்கர் பிறந்து ஐந்து வருடங்கள் கழித்தே கமலா பிறந்தார். அதன் பின் பரிமளத்தையும் தத்தெடுத்து வளர்க்க, பூரணியின் பதினைந்து வயதில் தான் ஆக இளையவரான கோதை பிறந்தார்.

மூத்தவரான சரஸ்வதிக்கு ஊரே மெச்சும் அளவிற்கு ஜாம் ஜாம் எனத் திருமணத்தை நடத்தினார் சொக்கலிங்கம்.

சரஸ்வதி – சிவம் ஜோடிக்கு ராம் என்ற குழந்தை பிறந்தது.

அடுத்த பிள்ளையான பூரணிக்கும் மூன்று வருடங்கள் கழித்து சிவத்தின் நண்பனான பிரபுவையே மணமுடித்து வைக்க அவர்களுக்கு லக்ஷ்மனும் பிரியாவும் பிறந்தனர்.

பிரியாவிற்கு இரண்டு வயதாக இருக்கும் போது சொக்கலிங்கம் மாரடைப்பு ஏற்பட்டு இறைவனடி சேர்ந்தார்.

அப்போது இளையவரான கோதைக்கு வெறும் ஏழு வயது தான்.

அடுத்த ஒரு வருடத்திலேயே கணவனை இழந்த துக்கத்தில் மீனாட்சியம்மாளும் இறைவனடி சேர்ந்து விட, மொத்தக் குடும்பத்தையும் கட்டிக் காக்கும் பொறுப்பு அன்னலட்சுமியை வந்தடைந்தது.

சிறு பிள்ளைகளை வைத்துக்கொண்டு அவர் தனியாகத் தடுமாற, அவ் வீட்டு மூத்த மருமகன்களான சிவமும் பிரபுவும் தம் துணைவியரின் தங்கைகளை தம் பிள்ளைகளாக பாவித்து படிக்க வைத்தனர்.

தம் மூத்த சகோதரிகளையே தாய் ஸ்தானத்தில் பார்த்த தங்கைகள் இப்போது அவர்களின் கணவர்களையும் தந்தை ஸ்தானத்தில் பார்த்தனர்.

ஒவ்வொருவராக படிக்க வைத்து அவர்களுக்கு சரியான துணைகளையும் தேர்ந்தெடுத்து திருமணமும் முடித்து வைத்தனர்.

பிள்ளைகள் அனைவரின் திருமணமும் முடிந்த பின் அவர்களுக்கு இடையில் இனிவரும் நாட்களில் கூட சொத்தின் மூலம் எந்தப் பிரச்சினையும் வராமல் இருக்க வேண்டி சொக்கலிங்கத்தின் மொத்த சொத்தையும் சரி சமமாக அனைவருக்கும் பிரித்துக் கொடுத்தார் அன்னலட்சுமி.

திருமணம் முடிந்ததும் ஒவ்வொருவராக புகுந்த வீடுகளுக்கு சென்று விட ஆண் வாரிசான சங்கருக்கு அந்த வீட்டை எழுதி வைத்தனர்.

அன்னலட்சுமியும் தன் கணவன் வாழ்ந்த வீட்டைப் பிரிய மனமின்றி சங்கருடனே தங்கி விட்டார்.

சொத்தைப் பிரித்துக் கொடுத்ததால் அவர்கள் ஒருவருக்கொருவர் வைத்த அன்பில் எந்த மாற்றமும் ஏற்பட்டு விடவில்லை. அதே அளவு அன்புடன் ஒருவருக்கொருவர் பழகினர்.

இடையிடையே சிவம், பிரபு தவிர்ந்த வீட்டுக்கு வந்த மற்ற மருமகன்களால் சின்ன சின்ன மனஸ்தாபங்கள் ஏற்பட்டாலும் சகோதரர்கள் ஒருவருக்கொருவர் மீது வைத்திருந்த அன்பு அதனை பெரிதுபடுத்த விடவில்லை.

சங்கர் – மகா ஜோடிக்கு விஷ்ணு என்ற மகனும் கமலா – பிரகாஷ் ஜோடிக்கு ஜெயா என்ற மகளும் பாக்கியம் – தர்மன் ஜோடிக்கு மாலதி மற்றும் ரக்ஷன் என்பவர்களும் பரிமளம் – ராஜேஷ் ஜோடிக்கு ரேவதி என்ற மகளும் கோதை – நடேசன் ஜோடிக்கு நயனிகா என்ற மகளும் பிறந்தனர்.

ராம் மற்றும் பிரியா இருவரின் திருமணம் முடிந்து சில வருடங்களில் இரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார் சரஸ்வதி.

புற்றுநோயின் இறுதித் தருவாயில் தான் அதைப் பற்றி அறிந்ததால் சில நாட்களிலேயே இறைவனடி சேர்ந்தார் சரஸ்வதி.

பரிமளத்தின் கணவன் ராஜேஷும் ஒரு விபத்தில் இறந்து விட, ஒரே மகளை வைத்து தனித்திருந்த பரிமளத்திற்கு ஊர் சனங்களின் வாயிலாக தான் சொக்கலிங்கத்தின் சொந்த மகள் இல்லை என்பது தெரிய வர, மனதில் இனம் புரியா ஒரு வலி.

ஆனால் சகோதரர்களின் கள்ளங்கபடமில்லா அன்பில் அதனைப் புறம் தள்ளினார்.

கோதைக்கு நயனிகா பிறந்து ஒரு மாதத்தில் பிரியாவிற்கு அஹாரா பிறந்தாள்.

ராமின் மகன் ராஜும் இப்போது தான் ஐந்தாம் வகுப்பு படிக்கிறான். லக்ஷ்மனின் மகன் நான்காம் வகுப்பு படிக்கிறான். விஷ்ணுவிற்கு இரண்டு மாதத்தில் ஒரு குழந்தை உள்ளது. ஜெயாவிற்கு திருமணம் முடிந்து வருடங்கள் கடந்தும் இன்னும் குழந்தை பிறக்கவில்லை. ரேவதிக்கு மூன்று வயதில் ஒரு மகள் இருக்கிறாள். மாலதி மற்றும் ரக்ஷனின் பெண் குழந்தைகள் இருவரும் இரண்டு வயதுடையனர்‌.

வருடத்தில் ஒரு தடவையாவது அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு வருடமும் ஏதாவது பெரிய சுற்றுலாத் தளத்தில் ஒன்று கூடி மூன்று நாட்கள் கெட்டுகெதர் வைத்து மகிழ்ச்சியாக இருப்பார்கள்.

தினமும் ஓய்வில்லாமல் பரபரப்பாக நாட்களைக் கழிப்பவர்களுக்கு இந்த மூன்று நாட்களும் சொர்க்கம் போல.

தம் கஷ்டங்கள், கவலைகள் அனைத்தையும் மறந்து குடும்பத்தினர் அனைவரும் சேர்ந்து மனம் விட்டுப் பேசி பழைய நினைவுகளை மீட்டுவர்.

ஒவ்வொரு வருடமும் இந்த மூன்று நாட்களுக்காகவும் அனைவருமே ஆவலாகக் காத்திருப்பர்.

அத் தினங்களில் எல்லாம் “எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை…” எனப் பாட்டு படிக்காத குறையாக அவ்வளவு மகிழ்ச்சியாக இருப்பர்.

இம் முறை அவ் வீட்டின் மூத்த பெண்மணியின் கட்டளையின் பெயரில் சொந்த வீட்டிலேயே குடும்ப ஒன்றுகூடலை ஏற்பாடு செய்திருந்தனர்.

அதனால் “சொக்கலிங்கம் மனையகம்” நான்கு தலைமுறைகளும் சேர்ந்து களை கட்டியது.

வீட்டுக்கு பின்னே இருந்த பெரிய தோட்டத்தில் நிகழ்ச்சிகள் நடக்க ஏற்பாடு செய்யப்பட்டிருக்க, அன்னலட்சுமி சக்கர நாற்காலியில் அமர்ந்து தன் வாரிசுகள் சந்தோசமாக நேரம் கழிப்பதை கண் குளிரப் பார்த்திருந்தார்.

இரண்டாம் தலைமுறை சகோதரிகள் அனைவரும் ஓரிடத்தில் அமர்ந்து தம் சிறு வயது நினைவுகளை மீட்டிக் கொண்டிருக்க, மூன்றாம் தலைமுறையினரோ தம் பிள்ளைச் செல்வங்களுடன் சேர்ந்து சின்ன சின்ன விளையாட்டுகளில் ஈடுபட்டிருந்தனர்.

ஒரு பக்கம் அஹாரா நயனிகாவிடம் தன் கல்லூரியில் நடந்த கூத்துகளைக் கூறிக் கொண்டிருந்தாள்.

“மாமா… ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க? ஏதாவது பிரச்சினையா? அத்தையோட முகமும் வாடி போய் இருக்கு…” என எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளாது எங்கோ வெறித்தபடி அமர்ந்திருந்த சங்கரிடம் கேட்டாள் பிரியா.

தன் இரண்டு மாதக் குழந்தையைக் கையில் வைத்துக் கொண்டு காதல் மனைவி காயத்ரியுடன் முகம் கொள்ளாப் புன்னகையுடன் பேசிக்கொண்டிருந்த விஷ்ணுவைப் பார்த்தபடியே, “விஷ்ணு கிட்ட உனக்கு ஒரு மாறுதலும் தெரியலயா பிரியா?” என வருத்தமாக கேட்டார் சங்கர்.

குழப்பத்தில் புருவம் சுருக்கியபடி விஷ்ணுவைத் திரும்பிப் பார்த்த பிரியா, “அவனுக்கு என்ன மாமா? நல்லா சந்தோஷமா தானே இருக்கான்…” என்றாள்.

“ஹ்ம்ம்…” எனப் பெருமூச்சு விட்ட சங்கர், “என் கிட்ட அவன் சரியா பேசியே ரொம்ப நாளாச்சு… மகா கிட்டயும் தேவைக்கு மட்டும் தான் பேசுறான்…” என்றார் கசந்த புன்னகையுடன்.

அவரின் பேச்சில் அதிர்ந்த பிரியா, “என்ன மாமா சொல்றீங்க? உங்க கூட நல்லா தானே இருந்தான் அவன்… ஒருவேளை காயத்ரியால ஏதாவது பிரச்சினையா?” எனக் கேட்டாள்.

“இப்போல்லாம் பேசினாவே சண்டை தான் வருது… வீட்டுல இருக்குற பொருளை எல்லாம் கோவத்துல தூக்கி போட்டு உடைக்கிறான்… கோவம் வந்தா என்ன பேசுறோம்னே புரியாம அப்பான்னு கூட பார்க்காம வார்த்தைகள விடுவான்…” எனக் கண் கலங்கினார் சங்கர்.

பிரியா, “தெரியாம பேசி இருப்பான் மாமா… நீங்க கவலைப்படாதீங்க… நான் அவன் கூட பேசி எதுவா இருந்தாலும் புரிய வைக்கிறேன்…” என தன் தாய்மாமனை சமாதானப்படுத்தினாள்.

“வேணாம்மா… அப்புறம் அவன் உன் கூடவும் சண்டை போடுவான்… மருமகளுக்கும் எங்கள பிடிக்கல… கொஞ்சம் நாளா சொத்த எழுதி கேட்டுட்டு இருக்கான்… என் மொத்த சொத்தும் அவனுக்கு தான்… அதைக் கொடுக்குறதுல எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்ல… ஆனா இந்த வீடு… பல தலைமுறைகளோட நினைவுகள் இருக்குற வீடு இது… விஷ்ணு இப்போ இருக்குற நிலமைல இந்த வீட்ட அவன் பெயர்ல எழுதி வெச்சா நிச்சயமா உங்க யாராலயும் திரும்ப இந்த வீட்டுக்கு வந்த இப்போ போல சந்தோஷமா இருக்க முடியாது… விடு பிரியா… வரது வரட்டும்… பார்த்துக்கலாம்…” என்றார் சங்கர் சலிப்பாக.

அதே நேரம், “தாத்தா…” எனக் கத்திக்கொண்டு ஓடி வந்து அவர் கழுத்தில் கரங்களை மாலையாகக் கோர்த்துக் கொண்டாள் அஹாரா.

“அஹாரா பாப்பா…” என முகம் முழுவதும் புன்னகையுடன் சங்கர் அவளின் தலையை வருட, “மாமா… அவளும் என் வயசு தான்… அது என்ன காலேஜ் போற பொண்ண பாப்பான்னு சொல்றீங்க? அவ வேற உங்களுக்கு அவ மேல தான் ரொம்பப் பாசம்னு சொல்றா…” எனச் செல்லமாகக் கோபித்துக் கொண்டாள் நயனிகா.

நயனிகாவின் தலையை மறு கரத்தால் வருடிய சங்கர், “நீயும் பாப்பா தான் டா… என்னைத் தாத்தான்னு பாசமா கூப்பிட்ட முதல் பேத்தி அவ… அதனால தான் டா அவ மேல கொஞ்சம் பாசம் ஜாஸ்தி… அதுக்காக உன் மேல பாசம் இல்லன்னு இல்லடா…” என மருமகளையும் சமாதானப்படுத்த, அங்கு ஒரு பாசப் போராட்டமே அரங்கேறியது.

மெதுவாக அங்கிருந்து நகர்ந்து விஷ்ணுவிடம் வந்தாள் பிரியா.

காயத்ரி குழந்தையை உறங்க வைப்பதற்காக உள்ளே சென்றிருக்க, தனியே அமர்ந்திருந்த விஷ்ணுவிடம் வந்த பிரியா, “விஷ்ணு… உனக்கு ஏதாவது பிரச்சினையாடா?” எனக் கேட்டாள் வருத்தமாக.

“அந்த ஆளு ஏதாவது போட்டுக் கொடுத்தாரா?” எனக் கைப்பேசியில் பார்வையைப் பதித்தவாறே கேட்டான் விஷ்ணு.

அவனை அதிர்ச்சியாக நோக்கிய பிரியா, “பெத்த அப்பாவ இப்படி தான் பேசுவியா விஷ்ணு? என்ன இது புதுப் பழக்கம்?” எனக் கடிந்து கொண்டாள்.

“ப்ச்… அவரைப் பத்தி பேசுறதா இருந்தா தயவு செஞ்சி இங்க இருந்து போயிடுக்கா…” என்றான் விஷ்ணு அழுத்தமாக.

அவனிடம் இப்போது எதுவும் பேசுவது முடியாத காரியம் என்பதால் அமைதியாக அவ்விடம் விட்டு அகன்றாள் பிரியா.

“ஐஸ் கிரீம்… ஐஸ் கிரீம்… யாருக்கு வேணும் ஐஸ் கிரீம்?” எனக் கூவியபடி ஒரு ஐஸ் கிரீம் வண்டியைத் தள்ளியபடி தோட்டத்திற்கு வந்தான் ராம்.

ஹாலோவீன் காஸ்டியூம் அணிந்து ஐஸ் கிரீம் பரிமாறுபவனைக் கண்டதும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே தம் வயதை மறந்து அனைவரும் குழந்தைகளோடு குழந்தைகளாகி ஐஸ் கிரீமிற்கு சண்டை பிடித்தும் மல்லுக் கட்டியும் பறித்தும் சாப்பிட்டனர்.

முதல் இரண்டு நாட்களுமே சின்ன சின்ன விளையாட்டுப் போட்டிகள் வைத்தும் ஆடியும் பாடியும் பொழுதைக் கழித்தனர் அனைவரும்.

மூன்றாவது நாள் விடிந்ததுமே மீண்டும் பழையபடி இங்கிருந்து ஒவ்வொருவரும் ஒவ்வொரு இடத்திற்கும் பிரிந்து சென்று படிப்பு, வேலை, குடும்பம் என நாட்கள் கழியும் என்பதால் அனைவரும் உற்சாகம் இழந்து காணப்பட்டனர்.

அதனைப் போக்கும் விதமாக அஹாராவும் நயனிகாவும் சேர்ந்து நடந்து முடிந்த போட்டி நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்றவர்களுக்காக பரிசுகள் கொடுத்து மகிழ்வித்தனர்.

இறுதியாக அனைத்தும் முடிந்ததும் ஒவ்வொரு வருடமும் செய்வது போலவே அந்த வருடத்திற்கான நினைவுச் சின்னத்தை ராமும் லக்ஷ்மனும் சேர்ந்து ஒவ்வொரு குடும்பத்துக்கும் வழங்கினர்.

அன்றைய நாள் முழுவதையும் முடிந்தளவு அனைவரும் ஒன்றாகக் கூடி சந்தோஷமாகக் கழித்தவர்கள் இரவானதும் மனமே இன்றி ஒவ்வொருவராக விடை பெற்றனர்.

அன்னலட்சுமிக்கோ தன் வாரிசுகள் அனைவரையும் பழையபடியே தன் கணவன் வாழ்ந்த வீட்டில் ஒன்றாகப் பார்த்ததில் ஏகபோக மகிழ்ச்சி.

இதே ஒற்றுமையும் மகிழ்ச்சியும் என்றென்றும் இவர்களுக்கிடையில் காணப்பட வேண்டும் எனக் கடவுளிடம் வேண்டுதல் வைத்தார்.

உறவுகள் மலரும்…

_____________________________________________________

நிறைய கதாப்பாத்திரங்கள் இருக்குன்னு குழப்பமா இருக்கா? கவலைப்படாதீங்க. இந்த ஒரு அத்தியாயத்தில் மட்டும் தான் இப்படி. சரியான உறவுமுறைகளை விளக்கவே இந்த அத்தியாயம். கதையின் போக்கில் தேவைப்படும். அதனால தான். அடுத்து வரும் அத்தியாயங்களில் இப்படி இருக்காது. நன்றி. தொடர்ந்து ஆதரவு அளியுங்கள். 🤗