உறவாய் வந்த நிலவே 1
Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels
காலை பத்தரை மணி அதுவும் வாரத்தின் முதல் நாள் அதனால் பரபரப்பாகவே இயங்கி கொண்டு இருந்தது அந்த சார் பதிவாளர் அலுவலகம்,
வாயிலில் கைகளை பிசைந்தபடி ஒருவித பதட்டத்துடன் நின்று இருந்தாள் தமிழினியா… அவளின் அருகே அவளின் தோழிகளும் தோழர்களும் “என்ன தமிழ் இன்னும் காணோம் என்னாச்சு என்று வினா எழுப்பி அவளின் பதட்டத்தையும் பயத்தையும் அதிகப்படுத்தினர்”…
அதனால் தமிழினியா தன் மொபைலை எடுத்து ஒரு எண்ணை அழுத்தி மொபைலை காதில் வைக்கவும், அவள் அழைத்த எண்ணிற்கு சொந்தக்காரன் அன்பு செழியன் தனது பைக்கில் வந்து இறங்கவும் சரியாக இருந்தது…
அவள் அழைத்து அவன் வராமல் இருப்பானா என்ன? நிச்சயம் வருவான், ஆனால் அவளின் பயத்திற்கும் பதட்டத்திற்கும் காரணம் அதுவல்ல.. அவனை இங்கு அழைத்ததுக்கான காரணம் தெரிந்தால் அவன் என்ன சொல்வானோ, இல்லை கோவப்படுவனோ என்பது தான்,
பைக்கில் இருந்து இறங்கி இவளை நோக்கி வந்த அன்பு செழியன் “ஏண்டி உனக்கு மீட் பண்றதுக்கு வேற இடமே கிடைக்காதா, எப்ப பாரு கூட்டம் நிரம்பி வழியற இடம் தான் கிடைக்குமா என்று சலித்தபடி அவள் அருகில் வந்தவன்”,
அவனை பார்த்து லேசாக சிரித்தாள்… “சிரிக்காதடி இங்க எதுக்கு வர சொன்ன ஏதாவது லேண்ட் ரெஜிஸ்டர் பண்றதுக்கு என் ஹெல்ப் தேவைப்படுதா” என்று கேட்டான் சட்டம் படித்தவன் என்ற முறையில்,
இல்லை என இனியா தலை ஆட்டவும், அப்போது தான் செழியன் கவனித்தான் இனியா புடவை உடுத்தி இருப்பதையும் அதே போல் அவள் தோழிகளும் அலங்காரத்துடன் நிற்பதையும்,
“உன் ஃப்ரெண்ட்ஸிக்கு ரெஜிஸ்டர் மேரேஜ்ஜா சாட்சி கையெழுத்து போடனுமா என்று அவன் கேட்கவும், இனியா “ஆமா ரெஜிஸ்டர் மேரேஜ் தான் ஆனா மேரேஜ் நம்மளுக்கு” என்று சலனமே இல்லாமல் கூற,
ஓ…. என்று முதலில் கவனியாமல் கூறியவன், பின்பு அவள் கூறியது மூளையை எட்ட, ஏதே…… என்று அதிர்ந்து போனான்…
இனியா இந்தா எல்லாம் கரெக்ட்டா இருக்கா பாரு என்று ஒரு கவரை கொடுத்தான் அவளின் நண்பன் வாங்கி பிரித்து பார்த்தாள் மாலை, தாலி எல்லாம் இருந்தது… அதை பார்த்த செழியனுக்கு ஒன்று புரிந்தது… இனியா விளையாடவில்லை என்பது,
இனியா “என்னடி இது எல்லாம் என்று செழியன் கேட்கவும்”,
தாலி என்றாள்…
“ஏண்டி நான் என்ன சின்னதம்பி பிரபுவா இது தாலின்னு கூட தெரியாம இருக்கிறதுக்கு”… “நான் கேட்டது இப்ப எதுக்கு இந்த கெட்டப்பு செட்டப்பு தான்”என்று செழியன் கேட்க,
“கல்யாணத்துக்கு தான் வேற எதுக்கு, பர்ஸ்ட் என் கழுத்தில் இந்த தாலியை கட்டுங்க செழியன் மீதியை அப்புறமா பேசிக்கலாம்” என்றாள்….
அப்புறமா பேசுறதுக்கு நான் உயிரோட இருந்த தானே, இந்த விஷயம் மட்டும் இரண்டு வீட்டுக்கும் தெரிஞ்சா, முதல்ல போக போறது என் உயிர் தானே,
அதான் எல்லாம் ஒன்னும் ஆகாது நான் பார்த்துக்கிறேன் என்ற இனியா விடம்,
எதை என் உயிர் எப்புடி போகுதுங்கறதையா,
செழியன் விளையாடாதீங்க,
நான் ரொம்ப சீரியஸா பேசிட்டு இருக்கேன்… “என்ன நீங்க லவ் பண்றீங்க தானே செழியன்… என்னை தவிர வேற யாரையுமே கல்யாணம் பண்ணிக்க மாட்டேன் சொல்லி இருக்கீங்க தானே, அப்புறம் ஏன் என்னை கல்யாணம் பண்றதுக்கு இவ்வளோ தயங்குறீங்க என்று கேட்டாள்” வந்த அழுகையை உள்ளுடக்கிய குரலில்,
செழியன் “எனக்கு இந்த திருட்டு கல்யாணம் பண்ணிக்க தான்டி தயக்கம், உன்னை கல்யாணம் பண்ணிக்கிறதில் இல்ல.. என்கிட்ட கூட ஒரு வார்த்தை சொல்லமா எதுக்கு இப்புடி ஒரு ஏற்பாடு பண்ணுன நீயும் நானும் என்னை அனாதையா இப்புடி யாரும் இல்லாமா திருட்டு தனமாக கல்யாணம் பண்ண, இப்ப என்ன அவசரம் வந்துச்சு இந்த அவசர கல்யாணத்திற்கு, இரண்டு வீட்டு சம்மத்தோட தானே கல்யாணம் பண்ணனும் சொன்ன என்று கோவமாக கேட்டான் செழியன்…
வேற என்ன பண்ண சொல்றீங்க செழியன்… எனக்கு ரொம்ப பயமா இருக்கு… நம்ம இரண்டு பேர் வீட்லையும் நம்ம கல்யாணத்திற்கு சம்மதிப்பாங்களா சொல்லுங்க பார்க்கலாம்… எனக்கு விவரம் தெரிஞ்ச நாளிலிருந்தே இரண்டு வீடும் இந்தியா பாகிஸ்தான் மாதிரி சண்டை… ஒரு வேளை என் வீட்டில் என் அப்பா ஒத்துப்பாரு ஏன்னா அவருக்கு என் விருப்பம் தான் முக்கியம்… ஆனா உங்க வீட்டுல்ல உங்க அப்பா ஒத்துப்பாரா, அவருக்கு எங்க வீட்டை கண்டாலே ஆகாது… அவருக்கு மட்டும் இல்லை உங்க அம்மா, தாத்தான்னு யாருக்குமே எங்க வீட்டுக்குல இருக்கிற யாரையுமே பிடிக்காது… அப்புறம் எப்புடி நம்ம கல்யாணம் நடக்கும்… பத்தாதக்கு இந்த அத்தை வேற அவங்க பையன் எழில் மாமாவுக்கும் எனக்கும் கல்யாண பேச்சை ஆரம்பிச்சிட்டாங்க…
என்னால் முடியல செழியன் உங்களை தவிர நான் யாரையும் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன் என்று அவள் கண்ணீர் விட, காதல் கொண்ட மனம் அதை தாங்குமா, செழியன் கரைய ஆரம்பித்தான்…
இனியா செழியனிடம் ப்ளீஸ் செழியன் இப்போதைக்கு மேரேஜ் ரெஜிஸ்டர் மட்டும் பண்ணிக்கலாம்… நீங்க உங்க வீட்டுக்கு போங்க… நான் என் வீட்டுக்கு போறேன்.. ப்ராப்ளம் வரும் போது சொல்லிக்கலாம்… வீட்டுல அத்தை வேற எழில் மாமாவுக்கும் எனக்குமான கல்யாண பேச்சை ஆரம்பிச்சுட்டாங்க… ப்ளீஸ் செழியன் என்று பேசி பேசியே செழியனை கரைத்து இருந்தாள்…
அவனும் சரி என்று உள்ளே சென்றான்
அதே நேரம் இவர்களின் அப்பா இருவரும் மதுரை வியாபாரிகள் சங்கம் என்று பெயரிட்டப்பட்டு இருந்த அந்த கட்டத்தில் எதிர் எதிரே அமர்ந்து இருந்தனர்… அன்பு செழியன் தந்தை கதிரேசனோ தனக்கு எதிரே அமர்ந்து இருந்த இனியாவின் தந்தை சரவணனை ஒரு வித கர்வத்துடனும் ஏளனத்துடனும் பார்த்து கொண்டு அமர்ந்து இருக்க… சரவணனனோ அமைதியாக சிநேக புன்னகையுடன் கதிரேசனை பார்த்தார்…
ஆனால் கதிரேசனை எவ்வளவு முடியுமோ அவ்வளவு முறைத்து கொண்டு சரவணின் அருகில் நின்று இருந்தான் எழில் அமுதன் கதையின் நாயகன்…
எழில் எதற்கு எடுத்தாலும் கண்மண் தெரியாது அளவு கோவப்படும் ரகமல்ல… எந்த ஒரு காரியமாக இருந்தாலும் நிதானமாக பொறுமையாக யோசித்து செயல்படுவான்… ஆனால் கதிரேசன் விஷயத்தில் மட்டும் கோவம் வந்து விடுகின்றது… அதுக்கு காரணம் இல்லாமல் இல்லை… ஒவ்வொரு ஆணுக்கும் தனது தந்தை தான் முன்னோடி அனைத்தையும் கற்று கொடுப்பர்… ஆனால் எழிலுக்கோ பதின் பருவத்தை தொடும் வேளை தந்தை தவறி விட தாய்மாமனான சரவணன் தான் எழிலை வளர்த்தது… அவனுக்கு நல்லது கெட்டது படிப்பு தொழில் என்று அனைத்திலும் எழிலை வழி நடத்தியது சரவணன் தான்… சரவணன் எழிலுக்கு தாய் மாமன் மட்டுமல்ல தன் தாயை விட மேலானவர் தான்… அப்படி பட்ட மாமனை இந்த கதிரேசன் வேண்டும் என்றே சீண்டினால் கோவம் வரதா என்ன? இப்பொழுதும் கதிரேசன் மீது கோவம் பொத்து கொண்டு வருகின்றது தான் ஆனால் கதிரேசன் தன்னை விட வயதில் மூத்தவர் என்பதாலும் சரவணன் சொல்லி தந்த நல்ல பண்பாலும் அந்த கோவத்தை எல்லாம் அடக்கி கொண்டு கையை பின்னே கட்டிய படி நின்று இருந்தான்…
இந்த வருஷ வியாபார சங்க தேர்தலில் வெற்றி பெற்றது திரு.கதிரேசன் அவருக்கு தான் பெரும்பாலான வியாபாரிகள் ஓட்டு போட்டு இருக்காங்க என்று அறிவிப்பு வந்ததும் கதிரேசனின் ஆதரவாளர்கள் கை தட்டி ஆர்பரித்தனர்… இப்போதும் கதிரேசன் சரவணனை அதே ஏளனத்துடன் பார்க்க,
சரவணனோ அதே சிரிப்புடன் எழுந்து வாழ்த்துக்கள் கதிர் என்று கை கொடுக்க, அந்த கை அந்தரத்தில் தான் தொங்கியது…
நான் ஜெயிச்சதை பார்த்து இங்க நிறைய பேருக்கு வயிறு எரியும்… ஆனா வெளிய அப்புடியே முகத்தை சிரிச்சா மாதிரி வச்சிக்கிட்டு வாழ்த்து வேற சொல்றானுங்க பாரேன் என்றார் கதிரேசன் தன் அருகில் இருந்த ரத்னவேலிடம்,
ஏதோ நேர்மையா உண்மையா என் மாமா கூட போட்டி போட்டு ஜெயிச்ச மாதிரி பேசுறீங்க… அரசியல்வாதிங்க காசு கொடுத்து ஜெயிக்க மாதிரி நிறைய கோல்மால் வேலை பார்த்து தானே இந்த வெற்றி வந்தது… உங்களை பார்த்தா பொறாமை இல்ல பாவமா தான் தெரியுது என்ற எழிலை முறைத்த கதிரேசன்…
அடேங்கப்பா இந்த கதையை கேட்டியா வேலு டிக்க்ஷனரில்ல நேர்மை உண்மை வாய்மை இதுக்கு எல்லாம் இவங்க மாமா பேர் தான் போட்டு இருக்காமே, இது நமக்கு தெரியாம போயிருச்சு பாரேன்… அப்புடியே அந்த டிக்க்ஷனரியை நல்லா புரட்டி பாரு நம்பிக்கை தூரோகம், ஏமாத்துக்காரன் அப்புடிங்கிறது கூட உன் மாமா பேர் தான்டா போட்டு இருக்கும் என்ற கதிரேசனின் வார்த்தையில் எழிலனின் கோவம் கரையை கடக்க,
ஏய் என்ன சொன்ன என்று சண்டைக்கு பாய்ந்தவனை சரவணன் பிடித்து இழுத்து வெளியே வந்தார்…
என்ன எழில் பெரியவங்க கிட்ட இப்படி தான் நடந்துப்பையா, நான் உன்கிட்ட இதை எதிர்ப்பார்க்கல எழில், கதிர் ஜெயிச்சுத்தில் உனக்கு என்ன பிரச்சினை,
அவர் ஜெயிச்சது பிரச்சினை இல்லை, நீங்க விட்டு கொடுக்கிறது தான் பிரச்சினை, அவர் இப்ப சங்க தலைவர் ஆகிட்டார்… அதனால் பாதிக்கப்பட போறது நம்ம ஊர் வியாபாரிங்க தான்… ஏன்னா அவர் நம்ப மேலே இருக்க கோவத்தை எல்லாம் அவங்க கிட்ட காட்டுனா, சின்ன சின்ன வியாபாரிக்கு இதனால் ரொம்ப பாதிக்கப்படுவாங்க என்று எழில் கூறிட,
கதிர் நீ நினைக்கிற மாதிரி கிடையாது… அவனுக்கு கோவம் என் மேல்ல தான்… அதை நம்ம ஊர் வியாபாரிங்க கிட்ட காட்ட மாட்டான்… ஏன்னா அவன் ரொம்ப நல்லவன் என்று சரவணன் கூறிட, இவங்க இரண்டு பேருக்குள்ளையும் அப்புடி என்ன தான் பிரச்சினையோ என்று மனதில் நினைத்து எழில் வாய் விட்டு கேட்கவில்லை… ஒரு தடவை சரவணனிடம் கேட்டு தன் மாமா எதையும் கூறமால் அமைதியாக அன்று முழுவதும் அந்த பழைய நினைவில் கவலையுடன் இருந்ததை தான் பார்த்தானே, அன்றே முடிவு செய்து விட்டான் அவரே கூறும் வரை எதையும் கேட்க கூடாது என்று,
சரி எழில் வந்து கார் எடு போகலாம் என்று சரவணன் கூறவும் அவனுக்கு ஒரு போன் வரவும் சரியாக இருந்தது… எடுத்து பேசியவன் மாமனை மட்டும் காரில் அனுப்பி விட்டு, மாமாவின் மகள் குடும்ப மானத்தை ரெஜிஸ்டர் ஆபிஸில் ஏலமிடுவதை கேள்வி பட்டு அங்கு விரைந்தான்…