உறவாக அன்பில் வாழ – 10

சரண் கைதாங்கலாக ஷிவானியை அழைத்துக்கொண்டு வீட்டினுள் நுழைந்தான். அவளுக்கு நீர் சத்தில் குறைபாடு இருந்ததோடு, நீர் வெளியேறாமல் உடலில் தேங்க, கீர்த்தியின் மருத்துவத்திலும், செவிலியர்களின் கவனிப்பிலும் சற்று உடல் தேறி இருந்தாள்.

வந்ததும் சரண் கங்கம்மாவை அலைபேசியில் அழைத்து வீட்டிற்கு வரச்சொன்னான்.

அவர் வேகமாக வீட்டினுள் நுழைந்து ஷிவானியின் கையைப் பற்றிக்கொண்டார்.

“என்ன பாப்பா நீ? நான் சமைச்சு வச்சாலும், ஜூஸ் கலந்து கொடுத்தாலும் அதை நீ சாப்பிட்டா தானே உன் உடம்புல சேரும். இப்படி ஒழுங்கா நீராகாரம் எடுக்காம ஆஸ்பத்திரி வரைக்கும் போகற மாதிரி ஆயிடுச்சே!” என்று வருந்த,

“அதுக்கு தான் உங்களை வரசொன்னேன் அக்கா. இனிமே காலைல இருந்து சாயங்காலம் வரைக்கும் இவளுக்கு வீட்டுல நீங்க தான் துணை இருக்கணும். மாசம் எட்டு ஆரம்பிக்க போகுதாம். டாக்டர் கவனமா இருக்க சொல்றாங்க.” என்று அவன் கூற,

“அப்போ வளைகாப்பு ஒன்பதாம் மாசம் போடுறதா தம்பி°” என்று கேட்க,

“இல்லக்கா வர்ற ஞாயிறு வீட்ல வச்சு வளைகாப்பு போட்டுக்கலாம்.” என்று கூறிவிட்டு ஷிவானியின் அருகிலிருந்து எழுந்து கொண்டான்.

அவளோ கண்ணீருடன், “மாமா வேண்டாம் மாமா.. எனக்கு வளைகாப்பெல்லாம் வேண்டாம்.. ப்ளீஸ்.” என்று அவன் கைகளை பற்றிக்கொள்ள,

“ஏன் பாப்பா இப்படி பேசுற? வயித்துல உள்ள பிள்ளையை கொண்டாட தானே இந்த வளைகாப்பு வைக்கிறது? உன் பிள்ளையை கொண்டாட வேண்டாமா?” என்று கங்கம்மா உரிமையோடு வினவினார்.

“ஆசைப் படக்கூட தகுதி வேணும் அக்கா.. நான் அந்த தகுதியை இழந்துட்டேன்.” என்று அவள் சொன்னதும் மெல்ல அவள் கைகளுக்குள் இருந்த தன் கையை உருவிக்கொண்டவன்,

“என்ன தகுதி இல்லாம போச்சு? நானா ஒன்னும் உனக்கு வளைகாப்பு வைக்க நாள் பார்க்கல. என் அம்மா.. அதான் உன் அத்தை தான் ஹாஸ்பிடல்ல வந்து சொல்லிட்டு போனாங்க. ஏற்கனவே உங்கம்மா உனக்கு வளைகாப்பு நடத்த ரொம்ப ஆசையா இருந்தாங்க. அதுனால கண்டதை யோசிக்காம மனசை ரிலாக்ஸ்டா வச்சுக்கோ. இன்னிக்கு இருக்கற பிரச்சனை நாளைக்கு இருக்காது. ஆனா அதுக்காக நீ மனசை கஷ்டப்படுத்திக்கிட்டா அது குழந்தையை பாதிக்கும். நாளைக்கு பிரச்சனை தீரலாம், குழந்தைக்கு பாதிப்பு ஏற்பட்டா அதை தீர்க்க முடியுமா?” என்று சற்று கடுமையாக உரைக்க,

“பாப்பாவையும் நான் கஷ்டப்படுத்துறேன்ல மாமா?” என்று மேடிட்ட தான் வயிற்றை தடவினாள். அவள் கைகளின் மேல் தன் கையை வைத்தவன்,

“பாப்பாவுக்கு தெரியும், நான் அதை கஷ்டப்பட விட மாட்டேன்னு. உனக்கு தான் புரியல” என்று செல்லமாக அவள் தலையில் குட்டி, கங்கம்மாவிடம் பார்த்துக்கொள்ள சொல்லி விட்டு வீட்டை விட்டு வெளியே வந்தான்.

சரணுக்கு மூச்சை அடைப்பது போல இருந்தது. இரண்டு நாட்களாக முழுமையான மருத்துவமனை வாசம். அவளுக்கான உணவை மருத்துவமனை வழங்கிவிட, பக்கத்தில் இருந்த உணவகத்தில் தன் உணவை கவனித்துக்கொண்டான்.  மருத்துவமனையில் அவனும் அங்கும் இங்கும் ஷான்வியை தேடினான். அவள் தான் அவன் கண்களுக்கு புலப்படவே இல்லை. அழைத்தாலும் அழைப்புகள் ஏற்கப்படாமல் போக, இவனுக்கு குழப்பமும், வருத்தமும் சூழ்ந்தது.

அன்று ஏன் ஒட்டாமல் பேசினாள் என்றும் புரியவில்லை. பின் ஏன் தன்னை தவிர்க்கிறாள் என்றும் விளங்கவில்லை. அவள் யாரென்று தெரிந்த பின் தன் முடிவை எப்படி எடுப்பது என்றும் தெரியவில்லை. ஏதேதோ யோசனையில் காரில் சாய்ந்து நின்றிருந்தான்.

“ஏன் தம்பி அம்மா உங்களை வந்து பார்த்தாங்களா? “என்று அவனிடம் வந்து நின்றார் கங்கம்மா.

உள்ளே பார்வையை அவன் செலுத்த, “பாப்பா தூங்கிடுச்சு பா” என்று சொன்னதும் ஒரு பெருமூச்சோடு மீண்டும் சாய்ந்து நின்றான்.

“என்னாச்சு பா? ரொம்ப ஓஞ்சு தெரியுதே உன் முகம்.” என்று அக்கறையாக வினவினார்.

“என்ன சொல்ல அக்கா.. என்னால முடியல. அம்மாவும் வரல, அத்தையும் வரல. நான் தான் சும்மா அவகிட்ட சொல்லி வச்சிருக்கேன். இல்லன்னா அவ இந்த ஃபங்க்ஷனுக்கு ஒத்துக்க மாட்டா.” என்று கூறி முகத்தை அழுந்தத் துடைத்துக்கொண்டான்.

“என்னப்பா சொல்ற? பாவம் பிள்ளைத்தாச்சி பொண்ணு. அவங்க அம்மா இப்படி வராம இருக்கிறது கொஞ்சமும் நல்லா இல்ல.” என்று வருத்தத்தை வெளியிட,

“நான் போயி எல்லாத்தையும் சொன்னா கண்டிப்பா வருவாங்க அக்கா. ஆனா எனக்கு தான் அதுல விருப்பம் இல்ல. நம்பிக்கை இல்லாத உறவுகள் நம்ம பெத்தவங்களா இருந்தாலும் அதுல ஒரு ஒதுக்கம் வந்திடுது இல்லையா?” என்றான் வெறுத்த குரலில்.

“ஆனா பிள்ளை பிறந்தா அதுக்கப்பறம் உள்ளதை நீ யோசிக்கணும் இல்லையா பா?” என்று அவனது பார்வையை அவர் கேள்வி மூலம் விசாலப்படுத்தினார்.

“ம்ம்.. பண்ணுவோம் அக்கா. எப்படியும் ஷிவானிக்கும் குழந்தைக்கும் நான் இருக்கேன்ல” என்று அவன் வானத்தை பார்த்தபடி கூற,

“தம்பி.. உன் வாழ்க்கை.. ” என்று தயங்கினார்.

கங்கம்மா இன்று நேற்று சரணுக்கு பழக்கமானவர் அல்ல. கேரேஜ் துவங்கியது முதலே, மதிய சாப்பாடு, கேரேஜை சுத்தம் செய்வது என்று வேலைக்கு வந்தவர் அவனது அன்பில் வேறு வேலைகளுக்கு போகாமல் அங்கேயே நிறந்தரமாகிக்கொண்டார்.

திடீரென்று ஒரு நாள் சரண் தனக்கு கேரேஜுக்கு சுற்றி உள்ள பகுதிகளில் வீடு அவசரமாக தேவை என்று போன் செய்ய, அந்த பகுதியில் புதிதாக கட்டிய கட்டிட உரிமையாளரிடம் பேசி உடனே சாவி வாங்கிக்கொடுத்தார்.

ஷிவானியோடு அவன் வந்தபோது அவர் எதுவும் கேட்கவில்லை. சில நாட்களில் ஷிவானி மசக்கை கொண்டு அவதிப்பட,அன்றில் இருந்தே ஷிவானியை அவர் தான் கவனித்துக்கொள்கிறார். அவர்களின் நடவடிக்கை வைத்தே சரணுக்கும் ஷிவானியின் கர்பத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று அவர் புரிந்து கொண்டார். ஆனாலும் இன்று வரை அவர் சரணிடம் இது பற்றி பேசியதே இல்லை.

அந்த ஒரு காரணமே கங்கம்மா மீது சரணுக்கு அன்பு அதிகரிக்க காரணமானது. இப்பொழுது அவர் கேட்ட கேள்வியில் அவன் மேல் அவர் கொண்டிருந்த நம்பிக்கை பளிச்சிட அவன் கண்கள் பனித்தது.

தன்னிடம் வேலை பார்க்கும் ஒரு பெண்ணுக்கு இருக்கும் புரித்தல் கூட தன் வீட்டாருக்கு இல்லை என்று நினைக்கையில் அவனது வெறுப்பாக இருந்தது.

“ஷிவானி யாருக்கா? என்னோட குட்டி பாப்பா கா. இப்போ அவளுக்கு ஒரு பாப்பா.. ரெண்டும் என்னோட சொத்து கா. நான் பார்த்துப்பேன். என்ன பெரிய வாழ்க்கை? அதெல்லாம் பார்த்துக்கலாம்.” என்று சொல்லிவிட்டு,

“அக்கா நான் போய் அவளுக்கு சேலை எடுத்துட்டு சாப்பாடு, மாலை, வளையல் எல்லாம் ஆர்டர் கொடுத்துட்டு வர்றேன். நீங்க கண்ணாடி வளையலும் அவளுக்கு மத்த துணி எல்லாம் மட்டும் வாங்கி வச்சிடுங்க.” என்று பர்ஸில் இருந்து பணத்தை உருவி நீட்டினான்.

அவனை வருத்தமாக பார்த்தபடி வாங்கிக்கொண்டார்.

‘இரண்டும் தங்கமான பிள்ளைங்க. என்ன பிரச்சனைன்னு அவங்க வீட்ல கேட்டு சரி பண்ணினா ரெண்டும் நல்லா இருக்குமே!’ என்று அவனுக்காக துடித்தது அவர் மனம்.

இங்கு ஷான்வி நிலையோ பரிதாபமாக இருந்தது. தந்தையிடம் தனக்கு இத்திருமணத்தில் விருப்பம் இல்லை என்று சொல்ல அவளும் முயற்சிக்கிறாள், அவர்கள் இருவரும் அவள் கண்களில் படாமல் கண்ணாமூச்சி ஆடிக்கொண்டிருக்கிறார்கள்.

இதில் சரண் வேறு சில முறை அழைப்பு விடுத்திருந்தான். முதலில் பேசி முடிவெடுக்க இருந்த அவள் மனம் தந்தையின் அதிரடிக்குப் பின் அப்படி செய்வது ஏதோ சந்தர்ப்ப வசத்தால் செய்வது போல பின்னாளில் தோன்றி விடும் என்று பயந்தாள். அவனுக்கு விருப்பம் இல்லாவிட்டாலும் தன் நிலையை முன்னிறுத்தி அவனை கட்டாயப்படுத்தி விட்டால் அவனது வாழ்க்கையும் கேள்விக்குறி ஆகுமே என்று அவள் மனம் ஏதேதோ சிந்தித்து தவித்தது.

சரணை மறந்து வேறு ஒருவனை மணக்க முடியுமா என்று அவள் மனதிடம் வினவ, அதுவோ வாய்ப்பில்லை என்றது. அவனது அன்பும் அக்கறையும் வேறு யாராவது செலுத்தினாலும் அவன் ஏற்படுத்திய பாதிப்பை மற்றொருவர் ஏற்படுத்துவாரா என்பது சந்தேகமே!

அப்பா சொன்ன அந்த ஒருவன்.. அவன் யாரோ? அவனை எப்படி தன்னால் கணவனாக நினைக்க முடியும்? ஒருவேளை சரணுக்கு ஏற்கனவே திருமணம் நிகழ்ந்திருந்தாலும் தான் தந்தை சொல்லும் திருமணத்துக்கு ஒத்துக்கொள்ளப் போவதில்லை என்று திட்டவட்டமாக முடிவு செய்துகொண்டாள்.

இதையெல்லாம் அவள் எண்ணி முடிவுக்கு வரவே இரண்டு நாட்கள் கடந்து போயிருந்தது. அன்று காலை மருத்துவமனைக்குள் அவள் நுழைய அனைவரும் அவளுக்கு வாழ்த்து தெரிவிக்க புரியாமல் விழித்தாள்.

நேராக அவள் சென்று நின்ற இடம் செவிலியர் ஓய்வறை. சுகந்தி அம்மாவை அழைத்து வர அங்கிருந்த செவிலியை அனுப்பியவள், அவள் கூறிய வாழ்த்துக்கு அவளை மூக்கு முட்ட முறைத்து அனுப்பினாள்.

சுகந்தி தன்னை ஷான்வி அழைப்பதாக கேள்விப்பட்டதும் பார்த்துக்கொண்டிருந்த நோயாளியின் ஊசியை தனக்கு அடுத்த நிலை செவிலியரிடம் ஒப்படைத்து விட்டு வேகமாக ஓய்வறைக்கு வந்தார்.

அவர் வந்ததும் தாவிச் சென்று அணைத்த ஷான்வி, “சுகந்திம்மா.. அப்பா அவசரமா யாரோ ஒரு பையனை கல்யாணம் பண்ணிக்க சொல்றாரு. அவரோட பிரெண்ட் பையனாம். எனக்கு பிடிக்கல. சொல்லலாம்னு பார்த்தா, என்னை அம்மாவும் அப்பாவும் அவாய்ட் பண்றாங்க.” என்று கண்ணீரோடு கூறினாள்.

அவர் கூற்றைக் கேட்ட சுகந்திக்கு அவள் மீது இரக்கம் தான் பிறந்தது. “ஷான்வி மா, உனக்கு எல்லாரும் வாழ்த்து சொல்லி இருப்பாங்களே?” என்று கேட்க, அவளும்

“ஆமா மா எதுக்கு?” என்று கேட்டதும்,

“உன் கல்யாண விஷயத்தை உங்கம்மாவும் அப்பாவும் அனவுன்ஸ் பண்ணிட்டாங்க. அது மட்டும் இல்ல. உனக்கு பார்த்த மாப்பிள்ளை டாக்டர் சிவபாலன் நேத்தே வந்து ஜாயின் பண்ணிட்டாரு.” என்று கூறி அவள் தலையை மென்மையாக கோதி விட்டார்.

ஷான்விக்கு தலை சுற்றியது. இதென்ன தன்னிடம் அபிப்பிராயம் கேட்கவில்லை. தன் மறுப்பை காதில் வாங்க அவகாசம் கூட இல்லாமல் இப்படி அவசரப்பட காரணம் என்ன? என்று குழம்பியவள், சுகாந்தியின் மடியில் தலை வைத்து படுத்துக்கொண்டாள்.

அவளுக்கு அன்னை மடி தேவையாக இருந்தது. அவரும் அவளுக்கு தலையை வருடியபடி, “நானே உன்னை பார்க்கணும்ன்னு நெனச்சேன் ஷான்வி மா. அந்த டாக்டர் சிவபாலன் ரொம்ப தன்மையா பேசுறார். எனக்கு பார்க்க ரெண்டு நாள் முன்ன ஒருத்தர் அவர் மனைவியை இங்க அட்மிட் பண்ணி இருந்தார். அவரைப்போலவே இருந்தது.” என்று கூற,

“என்னவாம் அவருக்கு? எப்படி இருந்தாலும் எனக்கு இந்த கல்யாணம் வேண்டாம்.” என்று வேகமாக அவள் கூற,

“சரி சரி நான் ஒன்னும் சொல்லல. நீ இன்னும் அவரை பார்க்கல தானே? பார்த்துட்டு சொல்லு. அம்மா அப்பா உனக்கு கெடுதல் செய்வாங்களா?” என்று கேட்க,

“இப்படி சொல்லி தானே என்னை லண்டனுக்கு அனுப்பி வச்சிங்க. மறுபடியுமா? அவங்க எனக்கு கெடுதல் செய்ய மாட்டாங்க. ஆனா அதே நேரம் இதுல அவங்களுக்கு தான் நிறைய நல்லது இருக்கும். எனக்கு இல்ல”. என்று கோபமாக கூறியவளை புன்சிரிப்புடன் வருடினார்.

மூக்கை உறிஞ்சி சிறுபிள்ளை போல சில நிமிடங்கள் பெற்றோரைப் பற்றி குற்றப்பத்திரிகை வாசித்தவள் இரன்டு நாட்கள் சரியாக உறங்காததால் தண்னையும் அறியாமல் உறங்கிப்போனாள்.

சுகந்தியை தேடி ஓய்வறை வாயில் வரை வந்த சிவபாலன் கதவை தட்டி விட்டு காத்திருக்க, “உள்ள வாங்க” என்று குரல் கொடுத்த சுகாந்தியின் குரலை அடையாளம் கண்டு வந்தவன்,அங்கே சிறுப்பிள்ளையாய் உறங்கும் ஷான்வியைக் கண்டு சிரித்தான்.

“என்னாச்சு?” என்று கேட்க,

“அவங்களுக்கு மனசு சரி இல்லன்னா இப்படித்தான் என்கிட்ட வந்திடுவாங்க டாக்டர். எழுப்பணுமா?” என்று சுகந்தி வினவ,

புருவ முடிச்சுடன், “இல்ல உங்களை தான் தேடி வந்தேன். இன்னிக்கு ஃபர்ஸ்ட் சர்ஜரி இருக்கு. நீங்க தான் சீஃப் நர்ஸ்ஸா ஹெல்ப்புக்கு வருவீங்கன்னு மூர்த்தி டாக்டர் சொன்னாரு.” என்று கூற,

“இதோ டாக்டர். அவங்களை பெட்ல படுக்க வச்சிட்டு வந்திடுறேன்.” என்று கூறி அவனை அனுப்பி வைத்தார்.

அவனுடைய பேச்சில இருந்த கனிவு சுகந்திக்கு மிகவும் பிடித்திருந்தது. அவனை மணந்தால் ஷான்விக்கு நல்ல எதிர்காலம் கிடைக்கும் என்று நம்பினார்.

அவன் வந்ததோ தன்னை பார்த்ததோ ஏதும் தெரியாமல் குழந்தையாய் உறங்கிக்கொண்டிருந்தாள் ஷான்வி.