உறவாக அன்பில் வாழ – 9

வீட்டுக்குள் நுழைந்த ஷான்விக்கு தன்னை நினைத்தே அவமானமாக இருந்தது. அவனை காதலிக்கிறேன் என்று தெளிவாக கூறவில்லை என்றாலும் அதை அவனே கண்டு சொன்னபோது அமோதிப்பாக இருந்ததில் அவனுக்கு உறுதியாகி இருக்குமே!

திருமணமான என்னை காதலிக்கிறாளே என்று உள்ளே சிரித்திருப்பானோ? நான் சொன்ன பின்னும் பதில் சொல்லாமல் குடும்பத்தை பற்றி சொல்ல வந்தானே! தொழில் தொடங்கியது வரை சொன்னான், ஒருவேளை அப்பொழுது அவனுக்கு உதவிய பெண்ணை காதலித்து மணந்திருப்பனோ? அதை தான் எனக்கு பக்குவமாகக் கூற முயல்கிறானோ?

பைத்தியம் பிடித்துவிடும் போல இருந்தது ஷான்விக்கு. தலையை பற்றிக்கொண்டு கட்டிலில் கவிழ்ந்தவள் உலகம் தலைகீழாக சுற்றிக்கொண்டிருந்தது.

அவன் அன்பையும் மென்மையையும் அக்கறையையும் கண்டு பிரமித்து, அவனது கண்ணியத்தையும் பேச்சையும் கண்டு காதலில் விழுந்த தன் மனதிற்கு அவன் உறவுநிலை என்னவென்று கேட்கத் தோன்றாத தன்னை அறிவீலி என்று நொந்து அப்படியே உறங்கியும் போனாள்.

அவளை இறக்கி விட்டுச் சென்ற சரணின் நிலையோ முற்றிலும் வேறாக இருந்தது. தன்  தொழில் வளர்ச்சிக்கு உதவிய டாக்டர் கிருஷ்ணமூர்த்தியின் மகளையா இத்தனை நாட்களும் நெஞ்சத்தில் வைத்து நேசம் வளர்த்தோம் என்று நினைக்க மூச்சு முட்டியது.

அவருக்குத் தெரிந்தால் தன்னைப் பற்றி என்ன நினைப்பார். இதில் ஷான்வி வேறு காதலிப்பதாக வெளிப்படையாகவே கூறிவிட்ட நிலையில் இதை எப்படி கையாள்வது? வீட்டினருடன் உள்ள பிரச்சனையே அவனுக்கு கழுத்தளவுக்கு இருக்க, ஷான்வியை பற்றி அறிந்தால் தன் நிலை என்ன என்று சிந்திக்க சற்று திகைப்பாக இருந்தது.

ஆனாலும் இதனையெல்லாம் உடைத்துக்கொண்டு எண்ணத்தில் நின்றது ராஜராஜன் அங்கிள். செந்தூரனின் தந்தை.

அவருக்கும் அவனுக்குமான அன்பு செந்தூரனை நண்பனாக அடைந்தத்தில் இருந்தே உள்ளது.  அவன் தொழில் தொடங்க ஆரம்பத்தில் திணறிய போது அவன் தந்தை அதனை ஏளனம் செய்த போதிலும் அவனுக்கு தோள் கொடுத்தவர் ராஜராஜன் அங்கிள்.

ஆனால் அவர் செய்த ஒரே காரியத்தால் அத்தனையையும் தூக்கிப்போட்டவிட்டு அவரை பல்லைக் கடித்து பொறுத்துக்கொள்ளும் நிலை வரும் என்றுஉ அவன் எண்ணியதே இல்லை. ஆனால் இன்று அவனை அப்படித்தான் நிறுத்திவிட்டார்.

தன் குடும்பம் முன் அவன் அவமானப்படும்படியும், அவர்களோடு சேர்ந்து வாழமுடியாத நிலையையும் உருவாக்கி விட்டார். நினைக்க நினைக்க நெஞ்சு துடித்தது சரணுக்கு.

ஆனால் அதை தொடர்ந்து நினைக்க விடாமல் கங்கமாளிடமிருந்து வந்த அழைப்பு அவனை வீட்டை நோக்கி ஓட வைத்தது.

அவன் அவசரமாக காரை வெளியிலேயே நிறுத்துவிட்டு வீட்டிற்குள் ஓடிவர, ஷிவானி துவண்டு போய் சோபாவில் சாய்ந்து அமர்ந்திருந்தாள்.

அவனைக் கண்டதும் மாமா என்று அவள் அழ, அவனால் அவள் வலியை உணர முடிந்தது.

“என்னாச்சு டா? எங்க வலிக்குது?” என்று கேட்க,

“இடுப்பு வலிக்குது மாமா. கால் வேற..” என்று அவள் கை காட்ட, கால் நன்றாக வீங்கி இருந்தது.

“ஏன் இப்படி இருக்கு? சுடுதண்ணி வச்சு ஒத்தடம் கொடுக்க வேண்டியது தானே?’ என்று பதறிக்கொண்டு எழ,

“தம்பி எல்லாம் செஞ்சுட்டேன் பா. ஆனா கால் வீக்கம் குறையல. இடுப்பு வேற வலிக்குதுன்னு பாப்பா சொல்லுது. பேசாம ஆஸ்பத்திரியில காட்டு பா.” என்று கங்கம்மா கூற, அவள் எப்பொழுதும் பார்க்கும் மருத்துவமனைக்கு அழைப்பு விடுத்தான்.

மருத்துவர் விடுமுறையில் இருப்பதாக வரவேற்புப் பெண் குறிப்பிட, அடுத்து அவன் நினைவுக்கு வந்தது கீர்த்தி மட்டுமே.

“வா” என்று கைதாங்கலாக ஷிவானியை அழைத்துக்கொண்டு காரில் ஏற்றினான்.

கங்கம்மாவை அனுப்பிவிட்டு, வீட்டை பூட்டிக்கொண்டு காரை கிளப்ப, மெல்ல அவன் தோளில் சாய்ந்து கொண்டாள் ஷிவானி.

“ஏன் மா எனக்கு மட்டும் இப்படி நடக்குது?” என்று எப்பொழுதும் போல அவள் கேட்டு வைக்க,

ஏற்கனவே பல வித மனவுளைச்சலில் இருக்கும் சரணுக்கு அவளை இப்பொழுது தேற்றும் மனநிலை இல்லை. தேற்றுவது என்பதை விட, இனியொரு வார்த்தை அவன் பேசினாலும் அது வாளாய் அவளை குத்தி விடும் என்று அறிந்து அமைதியாகவே வாகனத்தை செலுத்தி வந்தான்.

இடையில் கிருஷ்ணா க்ரூப்ஸ் மருத்துவமனைக்கு அழைத்து கீர்த்தி டாக்டரிடம் அபாயின்மெண்ட் வேண்டும் என்று கேட்க, அவர்களும் உடனே வரச்சொல்லி விட்டனர்.

அவளை மறுத்துவனைக்கு அழைத்துச் சென்றபின் தான் அவளுடைய மருத்துவ அறிக்கை எதையும் கொண்டுவரவில்லை என்று அவனுக்கு உறைத்தது.

ஆனாலும் கீர்த்தியின் அழைப்புக்காகக் காத்திருந்தான். அவரிடம் அவள் நிலையை விளக்க,

“நீர்ல ஏதோ ப்ராப்ளம் போல சரண். ரிபோர்ட்ஸ் கொடுங்க.” என்று அவர் கேட்க, அவன் “இல்லை” என்று பதிலளிக்க,

“ஓகே அப்போ இன்னிக்கு அட்மிட் பண்ணுங்க, எல்லா டெஸ்டும் எடுத்து ரிபோர்ட்ஸ் பார்த்துட்டு நான் சொல்றேன்.” என்று அனுப்பி வைத்தார்.

அவளை அனுமதிக்க பார்ம் தரப்படும் வரையில் எல்லாம் சாதாரணமாகவே இருந்தது சரணுக்கு.

ஆனால் கொடுக்கப்பட்ட விண்ணப்பத்தில் கணவன் என்று காலியிடத்தை நிரப்ப கொடுத்திருந்த இடைவெளியில் அவன் மனம் சுக்கல் சுக்கலாக நொறுங்கியது.

ஷான்வி தன்னிடம் கூறிய காதலையும், அவள் கிருஷ்ணமூர்த்தி, கீர்த்தியின் மகள் என்ற எண்ணத்தையும் மனதில் கொண்டு வந்து கண்களுக்குள் தேங்கி நின்ற கண்ணீரை ஷிவானிக்கு தெரியாமல் உள்ளே இழுத்துக்கொண்டு, மனதை இரும்பாக்கி அவ்விடத்தில் சாய் சரண் என்று எழுதி முடித்தான்.

அவன் அதனை கொடுக்க முன்னே செல்ல, அவன் முகத்தில் இருந்த கடினத்தைக் கண்டு ஷிவானிக்கு மனமெல்லாம் வலித்தது. உடல்வலியை மீறி அவனை இந்த நிலைக்கு ஆளாக்கி விட்டோமே என்று தன்னையே வெறுத்தவள் கண்ணீர் விட, அவளையும் அவனையும் பார்த்தபடி அந்த விண்ணப்பத்தை பெற்றுக்கொண்டு அவளுக்கான அறையை ஒதுக்கிக் கொடுத்தார் தலைமை செவிலியரான சுகந்தி.

அவன் அடுத்த இரண்டு நாட்கள் அவளை விட்டு நகராமல் அவளை கவனித்த விதத்தில் சுகந்திக்கு அவன் மேல் மரியாதை பிறந்திருந்தது. அவள் வாந்தி எடுத்தாலும் செவிலியரை அழைக்காமல் அவனே அவளுக்கு உதவி செய்வது பார்த்து உண்மையில் அவ்வளவு அன்பும் கனிவும் கொண்ட கணவன் கிடைக்க அந்த பெண் பாக்கியம் செய்திருக்க வேண்டும் என்று எண்ணிக்கொண்டாலும் அவள் கண்களில் தெரியும் சோகமும், கண்ணீரும் அவனது செயல்களுக்கு எதிராக இருப்பது வேறு புதிராக இருந்தது.

ஷான்வி இரண்டு நாட்கள் மருத்துவமனைக்கு விடுப்பு சொல்லிவிட்டு அறைக்குள் முடங்கிக் கிடந்தாள். அவளுக்கு சரணிடம் அனைத்தையும் விபரமாக கேட்டுவிட்டால் என்ன என்று தோன்றி இம்சித்துக்கொண்டிருந்தது.

இந்திய நாட்டில் ஒரு ஆண் திருமணமானவன் என்று பார்த்ததும் அறிந்துகொள்ளும் எந்த அடையாளமும் இல்லையே என்று எண்ணி அவளை அவளே சமாதானம் செய்துகொண்டு, அவனிடம் விளக்கம் பெற்று ஒரு நல்ல நட்பையாவது பெற்றுக்கொள்ளலாம் என்று தெளிவு முதல் நாளில் பிறந்து விட்டது. அப்பொழுது தான் அவன் தன்னை சந்திக்கக் கேட்டதும் அவள் மறுத்ததும் நினைவிலாடியது.

உடனே அவனை அழைத்தாள். இருமுறை அவன் அழைப்பை ஏற்காமல் போக, சோர்வுடன் கடைசி முறை முயற்சிக்க இப்பொழுது அழைப்பு ஏற்கப்பட்டிருந்தது.

ஆனால் அதனை ஏற்றதும் பேசியதும் ஒரு பெண். ஷான்விக்கு நாவு மேலன்னத்தில் ஒட்டிக்கொண்டு பேச்சே வரவில்லை.

இந்த பக்கம் ஷிவானி சரணின் கைபேசி தொடர்ந்து அடிப்பதைக் கண்டு அதை எடுத்துப் பார்க்க, அதில் ஷான்வி மேடம் என்று வந்து கொண்டிருந்தது. யாரோ கஸ்டமர் என்று நினைத்து அழைப்பை ஏற்ற ஷிவானி,

“ஹலோ ஷான்வி மேடம், சரண் மாமா போனை வச்சிட்டு வெளில போயிருக்காரு. அவர் வந்ததும் கூப்பிட சொல்றேன்.” என்று கூற,

ஷான்வி அப்படியே அழைப்பை துண்டித்தாள். ஷிவானியின் ‘மாமா’ என்ற அழைப்பில் இருந்த உரிமை, அவள் அவனது கைபேசியை எடுத்துப் பேசும் உரிமை என்று ஏதேதோ சிந்தித்து குழம்பிக்கொண்டு இருந்த அவள் இதயத்துக்கு அவளது பால்கனி கூடை நாற்காலியோ, அங்கே வீசிய இளம் காற்றோ, சந்தன முல்லை மலரின் நறுமணமோ கூட ஆறுதல் தரவில்லை.

மணி இரவு ஏழை கடந்திருக்க, இந்நேரத்தில் ஒரு ஆண் எங்கே இருப்பான்? வீட்டில்.. அங்கே உரிமையாக மாமா என்று அழைத்துப் பேசும் பெண் யாராக இருக்க முடியும் என்று சிந்தித்த ஷான்வி, சரண் திருமணமானவன் என்று உறுதியே செய்து கொண்டாள்.

அவள் மனம் வெறுத்துப் போனது. இனி விளக்கம் கேட்டு என்ன பயன் என்று எண்ணியவள், இனி நட்போடு பழக முடியுமா என்று யோசித்தபடி அமர்ந்திருக்க, அவளது அறையில் இருந்த இன்டர்காம் வீல் என்று அலறியது.

இந்த நேரத்தில் யார் இன்டர்காமில் அழைப்பது? பெற்றோர் வீடு வந்தாயிற்றா என்று சிந்தித்தபடி அதனை ஏற்றாள்.

“கொஞ்சம் டைனிங் டேபிளுக்கு வா.” ஷான்வி என்று தந்தை கட்டளையிட,

‘வந்துட்டாரா? அதிசயம் தான்.’ என்று யோசித்தபடி கீழே இறங்கிச் சென்றாள்.

டைனிங் டேபிளில் ஒரு மூலையில் தந்தையும் மற்றொரு மூலையில் தாயும் அமர்ந்திருக்க, தாயின் முகத்தில் கடுகைப் போட்டால் பொரிந்து விடும் அளவுக்கு கொதிப்பு தெரிந்தது.

ஏற்கனவே மனசோர்வில் இருப்பவள், இவர்கள் சண்டையை வேறு சமாளிக்க வேண்டுமா என்று சிந்தித்தபடி இருவருக்கும் பொதுவாக நடுவில் இருந்த இருக்கையில் அமர்ந்தாள்.

‘ஹாய் பா, ஹாய் மா.’ என்று அவள் வரவேற்பாக கூற,

கீர்த்தி, அவளைக் கண்டு, “ஏன் இன்னிக்கு ஹாஸ்பிடல் போகல. நாளைக்கும் லீவ் சொல்லி இருக்கியாம்?” என்று கேள்வி எழுப்பினார்.

“கொஞ்சம் டையர்டா இருந்தது மா. அதான் டூ டேஸ் ரெஸ்ட் வேணும்ன்னு லீவ் போட்டேன்.” என்று சொல்ல,

“நீங்க சொன்னப்போ எனக்கு புரியல கிருஷ். ஆனா இப்போ புரியுது. இவளுக்கு பொறுப்பு பத்தல. உங்க முடிவு தான் சரி.” என்று ஒரு பெருமூச்சு விட்டார். அதில் அவர் கனவு கலைந்து போன கவலை அப்பட்டமாகத் தெரிந்தது.

அவர் கூற்று புரியாத ஷான்வி, “என்ன சொல்றீங்க? யாருக்கு பொறுப்பு பத்தல?” என்று பொறுமையை இழுத்து வைத்து வினவினாள்.

“உனக்கு தான் ஷான்வி. இந்த ஹாஸ்பிடல் செயின் உருவாக்க நாங்க எங்க ஒவ்வொரு நிமிஷத்தையும் அர்ப்பிணிச்சிருக்கோம். இந்த முப்பது வருஷத்துல நாங்க ஒருநாள் கூட எங்களுக்காக லீவ் எடுத்தது கிடையாது.” என்று அவர் பெருமையாக சொல்ல,

கோபம் தலைக்கேறிய ஷான்வி, “ஆமா லீவ் எடுக்க மாட்டிங்க, என் கூட டைம் ஸ்பெண்ட் பண்ண மாட்டிங்க, என் ஸ்கூல், காலேஜ் எந்த பங்ஷனுக்கும் நீங்க வர மாட்டிங்க, பேரெண்ட்ஸ் மீட்டிங் கூட என் டீச்சர் உங்க கிட்ட செக்கப் பண்ண வரும்போது முடிச்சிடுவீங்க. இதுவரைக்கும் கான்பிரன்ஸ், மீட்டிங் தவிர எதுக்கும் வெளிநாட்டுக்கோ வெளியூருக்கோ கூட போய் ஒருநாளும் என்ஜாய் பண்ணாத, என்னை கூட்டுட்டு போகணும்ன்னு கூட தோணாத அளவுக்கு அர்ப்பணிச்சு தான் இந்த சாம்ராஜ்யத்தை உருவாக்கி இருக்கீங்க. ஐ நோ இட். டேம்.. ஐ நோ இட்.” என்று கத்திவிட்டு நகர முயன்றாள்.

ஆனால் அவளின் கரத்தை இரும்பாகப் பற்றிக்கொண்ட கிருஷ்ணமூர்த்தி, “எஸ் யூ ஆர் ரைட்.  அப்படித்தான் இந்த சாம்ராஜ்யம் உருவாச்சு. அதை உன்னோட பொறுப்பில்லாத நடவடிக்கையால சரிய விட முடியுமா? அதான் நான் ஒரு முடிவு எடுத்துட்டேன்.” என்று சொல்லி அவளை இருக்கையில் அமருமாறு சைகை செய்தார்.

அவல் பல்லைக் கடித்துக்கொண்டு அமரவும்,  “கோயம்பத்தூர்ல இருக்கிற சுடர் ஹாஸ்பிடல்ஸ் பத்தி தெரியுமா?” என்றார்.

‘இல்லை’ என்று அவள் தலையசைக்க,

“ம்ம்.. சுடர் க்ரூப்ஸ் சீப் டாக்டர் மாசிலாமணி என்னோட காலேஜ் மேட். அவன் ஜெனரல் மெடிஸின்ல தான் ஹாஸ்பிடல் ரன் பண்றான். அவனுக்கு ரெண்டு பையன். பெரியவன் ஆர்த்தோ முடிச்சிட்டு அவங்க ஹாஸ்பிடல்ல தான் ப்ராக்டிஸ் பண்றான். அவங்க ஹாஸ்பிடல் இப்போ ஆர்த்தோக்கு பேர் வாங்கிடுச்சு.” என்றதும்,

‘எவன் என்ன செஞ்சா எனக்கென்ன?’ என்று அமர்ந்திருந்தாள் ஷான்வி.

“அவனோட ரெண்டாவது பையன் ஒரு ஹார்ட் சர்ஜன். அவனுக்கு அங்க விட சென்னையில ப்ராக்டிஸ் பண்ண தான் விருப்பம்.” என்று சொல்ல,

“நம்ம ஹாஸ்பிடல்ல பண்ண சொல்லுங்க.” என்று இயல்பாகக் கூறினாள் ஷான்வி.

“எஸ். கண்டிப்பா அவன் இங்க தான் ப்ராக்டிஸ் பண்ண வர்றான். கூடவே உன்னை கல்யாணம் பண்ணிக்கவும்.” என்று சொன்னவர், செய்தி முடிந்தது என்பது போல ஹாலை கடந்து செல்ல, அவரைப்போலவே தாய் கீர்த்தியும் கிளம்பினார்.

அவர் சொன்ன செய்தியில் மூளை மரத்துப் போனவளாக அமர்ந்திருந்தாள் ஷான்வி. அவள் அறையில் இருந்த கைபேசியில் மூன்றாம் முறை அழைத்து எடுக்கப்படாமல் போனதில் அவள் ஏன் அழைத்தாள் என்ற காரணம் புரியாமல் தவிக்கலானான் சரண்.