உறவாக அன்பில் வாழ – 8

கிழக்குக் கடற்கரை சாலையில் வேகமாக வாகனத்தை செலுத்திக்கொண்டிருந்த சாய்சரணுக்கு எப்பொழுது ஷான்வியைக் காண்போம் என்று தவிப்பாய் இருந்தது.

அவன் அவளிடம் அப்படி பேசவேண்டும் என்று நினைக்கவில்லை. ஆனால் அவன் இருந்த சூழலும், ஷான்வி மேல் தனக்கு எழுந்த நேசமும் அவளும் தன்னிடம் காட்டும் ஆர்வமும் அவனை சிந்திக்க வைத்திருந்தது.

இதெல்லாம் சரி வராது என்று மூளை அவனுக்கு அபாய மணி அடித்து அறிவுறுத்தியபடியே இருந்ததால், ஷான்வி அவனை உதவிக்கு அழைத்ததும் அவனுக்கு அவனையும் மீறி வார்த்தைகள் வெளிவந்துவிட்டது.

தொலைவில் ஷான்வியின் கார் நிற்பதைக் கண்டு வேகத்தை இன்னும் கூட்டினான் சாய்.

அந்த காரை நெருங்க நெருங்க, ஓட்டுநர் இருக்கையில் முகத்தை கவிழ்த்தி அமர்ந்திருந்த ஷான்வியைக் கண்ட பின்பு தான் அவன் இதயம் நிம்மதி அடைந்தது.

அவனது ஐ டுவன்டியை அவளது ஹோண்டா சிட்டி முன்பு நிறுத்தி இறங்கிச் சென்றான்.

அவன் ஜன்னலைத் தட்ட, நிமிர்ந்து பார்த்த ஷான்வி அவனைக் கண்டதும் மீண்டும் தலையை ஸ்டியரிங்கில் வைத்து குனிந்து கொண்டாள்.

அவள் கன்னங்களில் இருந்த ஈரம் அவளுடைய நிலையை அவனுக்கு விளக்க, தன்னையே கடிந்து கொண்டு, மீண்டும் ஜன்னலைத் தட்டினான் சாய் சரண்.

அவள் ஜன்னலை இறக்கி, “யார் சார் நீங்க? எதுக்கு தட்டிட்டு இருக்கீங்க?” என்று அந்நியத்தனமாக கேள்வி கேட்க,

“ஷான்வி மேடம்.. ப்ளீஸ்.. வெளில வாங்க.” என்று பொறுமையோடு அழைத்தான்.

“நான் எதுக்கு வரணும்? நான் உங்களை இதுக்கு முன்ன நாலு தடவை பார்த்திருப்பேனா? எப்படி நம்பி இறங்கி வந்து பேசுறது?” என்று அவன் வார்த்தைகளில் அவனுக்கு கிடுக்குப்பிடி போட்டாள்.

பெருமூச்சு விட்ட சரண், “ப்ளீஸ் ஷான்வி. இறங்கி வா” என்று அவளை மேடம் என்று மரியாதையாக விளித்த விதத்தைக் கைவிட்டு உரிமையுடன் அழைத்தான்.

“என்ன? அதெல்லாம் முடியாது” என்று சிறுபிள்ளையாக முகத்தைத் திருப்பிக்கொண்டாள்.

ஜன்னல் உயரத்துக்கு குனிந்து அவள் தாடையைப் பற்றி அவன் புறம் திருப்பியவன்,

“சாரி ஷான்வி, யார் மேலயோ உள்ள கோபம். அதே இடத்துல நீ இருக்கவும்.. ம்ச்.. என்ன சொன்னாலும் நான் அப்படி ஒரு சூழல்ல அந்த மாதிரி பேசினது தப்பு தான். மன்னிச்சிடேன் ப்ளீஸ்.” என்று கேட்க,

ஜன்னலை பவர் பட்டன் கொண்டு மூடினாள். ஐயோ இன்னும் கோபமா என்று அவன் திகைத்து விழிக்க,

கதவைத் திறந்து கொண்டு இறங்கி வந்தாள். அவனுக்கு நெருக்கமாக நின்றவள்,

“சுத்தி பாரு சரண்.. எப்படி இருக்கு?” என்றாள் குற்றம் சாட்டும் குரலில்.

அது தரைப்பாலம் போல இருக்க இரண்டு பக்கத்திலும் ஏரி போல நீர் மற்றும் நீர்செடிகள் மண்டி இருந்தது.

“யாராவது வந்தா, என்னைத் துரத்தினா தப்பிக்க கூட வழி இல்லாத இடம் சரண். இங்க நின்னப்போ எனக்கு யார் நினைவும் வரல. ஏன் என் அப்பா ஞாபகம் கூட வரல. சரணுக்கு கூப்பிடுவோம். அவர் வருவார்ன்னு நெனச்சேன். நான் அப்படி நினைக்க நீ தானே சரண் காரணம். அன்னைக்கு ஓலா வந்தும், என் பாதுகாப்புக்காக தானே அதை அனுப்பிட்டு நீ என்னை கூட்டிட்டு போன. என்னை தப்பா ஒரு பார்வை பார்த்தியா? அந்த பீச்ல யாருமே நம்மளை கவனிக்கல. நீ நெனச்சிருந்தா என்ன வேணா செஞ்சிருக்கலாம். நீ என்னை கூட்டிட்டு போனது யாருக்குமே தெரியாது. ஆனா நீ அப்படி எதுவும் செஞ்சியா? பொண்ணுங்க ஒன்னும் எல்லாரையும் நம்ப மாட்டோம். உண்மையிலேயே எங்களுக்கு பாதுகாப்புன்னு நம்பறவங்க கூட தான் போவோம். என்ன சில நாய்கள் அப்போ நடிச்சிட்டு எங்க நம்பிக்கையை சம்பாதிச்ச பின்னாடி அதுங்க வெறியை காட்டிருது. அதுக்கு நாங்க என்ன செய்யறது?” என்று கோபத்தில் கத்தினாள்.

அவள் கரத்தைப் பற்றிக்கொண்ட சரண், “சாரி ஷான்வி மா.” என்று சொல்ல,

அவன் குரலில் இருந்த அன்பும் கனிவும் ஷான்வியை அசைத்தது. சூழ்நிலையை இலகுவாக்க எண்ணியவள், “இந்த வண்டிக்கு என்ன தான் ஆகும்? ஏன் அடிக்கடி ரிப்பேர் ஆகுது?” என்று கேட்க,

சாவியை வாங்கி காரை கிளப்ப முயற்சித்தான். பின் பானட்டை திறக்க கீழே உள்ள பட்டனை தேடக் குனிந்தவன், கடுப்புடன் கீழே இறங்கி வந்தான்.

“உங்களை திட்ட கூடாதுன்னு தான் நானும் நினைக்கிறேன் ஷான்வி மேடம். ஆனா பாருங்க நீங்க செய்யற வேலை..” என்று பல்லைக் கடித்தான்.

அவள் புரியாது விழிக்க, “காருக்கு பெட்ரோல் போட்டா தான் ஓடும். வெறும் பெட்ரோல் டேங்க்ல தானே பெட்ரோல் சுரக்குமா என்ன?” என்று முறைக்க, அசடு வழிந்தாள் ஷான்வி.

“சாரி பா. நான் பார்க்கப் போன என் பிரெண்ட் நைட் பார்ட்டில குடிச்சிட்டு நிதானம் இல்லாம இருக்கவும் கோவத்துல அப்படியே கிளம்பிட்டேன். பெட்ரோல் செக் பண்ண மறந்தே போயிட்டேன்” என்று பதில் சொல்லிவிட்டு,

“ஹலோ.. என்ன இவ்ளோ நேரம் ஷான்வி, மா ன்னு சொல்லிட்டு இப்போ மறுபடி மேடத்துக்கு தாவுறீங்க. செல்லாது செல்லாது” என்று சொல்ல சரண் சிரித்து விட்டான்.

“நல்லா சமாளிங்க.” என்று சொல்லிவிட்டு, “நான் பசங்களை விட்டு பெட்ரோல் வாங்கிட்டு வர சொல்றேன். எப்படி வெயிட் பண்றீங்களா இல்ல என்னோட வர்றீங்களா?” என்றான்.

“நான் உங்க கூடவே வர்றேன். எனக்கு உங்க கூட கொஞ்சம் பேசணும்.” என்று யோசனையாகக் கூறினாள்.

“ம்ம் நானும் சில விஷயங்களை உங்களுக்கு தெளிவு படுத்தணும்.” என்று சொல்ல, அவள் தலையசைத்து அவன் வாகனத்தில் ஏறிக்கொண்டாள்.

அவன் ஊழியர்களுக்கு தகவல் சொல்லிவிட்டு காரை அரை வட்டமடித்து திருப்பினான்.

அவள் ஆர்வமாக அவன் முகம் பார்த்தபடி வர,

“என்ன பார்வை? ஏதோ சொல்லணும்னு சொன்னிங்க.” என்று அவனே அவளை பேச வைக்க,

அவள் தயக்கத்துடன், “நான்.. எப்படி சொல்றது? இப்படி இதுக்கு முன்னாடி நான் பீல் பண்ணினது இல்ல. இதை எப்படி சொல்றதுன்னும் தெரில. ஆனா இதுக்கு மேல மனசுல வச்சுக்க முடியாது.” என்று சொல்ல ஆரம்பித்தாள்.

அவள் என்ன சொல்ல வருகிறாள் என்று ஓரளவு அவளது செய்கைகைகள் மூலம் ஊகித்து விட்டவனுக்கு அவள் சொல்வதை முழுமையாக கேட்போம் என்ற எண்ணம் வர, அமைதியாக கவனிக்கலானான்.

“படிச்சது எல்லாமே ஹை லெவல் ஸ்கூல், காலேஜ். அதுனால பழக சரியான, என் குணத்துக்கு தகுந்த நண்பர் வட்டம் அமையல. எல்லாம் படிப்பு விஷயமான பேச்சுக்கு மட்டும் தான்.வீட்ல பேரெண்ட்ஸ் நிற்க நேரம் இல்லாதவங்க. எனக்கு அன்பை கூட காஸ்ட்லி கிப்ட் மூலமா அனுப்பி தான் வைப்பாங்க. அதை கொடுக்க கூட அவங்களுக்கு நேரம் இருக்காது. சொந்தம்ன்னு பெருசா யாரும் வீட்டுக்கு வந்ததும் இல்ல. எல்லா நேரமும் தனியாவே இருந்தேனான்னு கேட்டா.. அப்படி கிடையாது. வீட்ல வேலை செய்யற வாசுகி அக்கா, ஹாஸ்பிட்டல்ல சுகந்தி அம்மா, காலேஜ் கேன்டீன்ல இருந்த நீக்ரோ பையன் லேதம் இப்படி சிலர் தான் எனக்கு நெருக்கமானவங்க. அப்படி இருந்த எனக்கு உங்க அக்கறையும் கரிசனையும் ரொம்ப பிடிச்சது அதுவும் முதல் சந்திப்புலேயே. எனக்குள்ள என்னவோ புதுசா ஒரு குறுகுறுப்பு. அதான் சும்மாவே ரெண்டு தடவை உங்களை கூப்பிட்டு கொஞ்ச நேரம் பேசினேன். என்னை நானே செக் பண்ணின வரைக்கும்..” என்று இழுத்தவள்,

“என் மனசு உங்க பக்கம் வந்துடுச்சுன்னு ரிப்போர்ட் சொல்லுது. அதுக்கான ஒரே ட்ரீட்மெண்ட் நீங்க தான்னு நானும் கண்டுபிடிச்சுட்டேன். அதை எப்படி உங்க கிட்ட சொல்றதுன்னு தெரியல.” என்று வெளியே பார்வையை பதித்தபடி கூற,

“அதான் சொல்லியாச்சே ஷான்வி. டாக்டர் ஷான்விக்கு காதல் நோய் வந்திருக்கு. அதானே!” என்றவன்,

“நான் உங்க கிட்ட பேசணும்ன்னு சொன்னது என் குடும்ப நிலவரத்தைப் பத்தி” என்று ஆரம்பித்தவன்,

தான் தொழில் தொடங்கியது, தனக்கும் தந்தைக்கும் ஏற்பட்ட கசப்பு, தாயின் இருதலைக்கொள்ளி நிலை எல்லாம் சொல்லிகொண்டே வர, அவனது கைபேசி சிணுங்கியது.

அதில் தெரிந்த எண்ணைக் கண்டதும் அவன் முகம் கடினமுற்றது.

அவனையே ஆர்வமாகப் பார்த்துக்கொண்டிருந்த ஷான்விக்கு அவனது மாற்றம் புரியாது போக, அவன் அழைப்பை ஏற்று பேசுவதை கவனிக்க ஆரம்பித்தாள்.

“ம்ம் சொல்லுங்க” என்று அழுத்தத்துடன் வெளிவந்த குரல் இதுவரை ஷான்வி சரணிடம் கேட்டிடாத கடினத்துடன் இருந்தது.

“நேத்து உங்க ஆபிஸ்ல இருந்து நாலு கார் டீடெயில்ஸ் அனுப்பி வச்சாங்க பா. அதுல ரெண்டு வண்டி நல்லா இருக்கு. முடிச்சிடலாம்னு சொல்ல தான் கூப்பிட்டேன்.” என்று அன்று அந்த மனிதர் பேச,

“சரி நான் செந்திலை வர சொல்றேன். நீங்க அவன் கிட்ட பேசிக்கோங்க.” என்று சொல்ல,

“ஏன் நீ வர மாட்டியா சரண்? உனக்குச் செந்தூரனை பார்க்க வேண்டாமா?” என்று கேட்டார்.

அதுவரை இருந்த பொறுமை பறந்தவனாக வாகனத்தை சாலை ஓரத்தில் நிறுத்திவிட்டு,

“அங்கிள்..” என்று கோபத்தில் கொதித்துவிட்டான்.

“என்ன சரண் கோபப்படுற? நான் ஒன்னும் உன் விரோதி இல்ல சரண். கேரேஜ் ஆரம்பிச்ச புதுசுல நான் உனக்கு எத்தனை ஆர்டர் கொடுத்தேன். நீயும் சின்ன வயசுல இருந்து அங்கிள் அங்கிள்ன்னு என்னை அன்பா தானே கூப்பிட்டுட்டு இருந்த? ஒரே ஒரு விஷயத்துல நான் உனக்கு வில்லனா போயிட்டேனா சரண்?” என்று அவர் கேள்வி கேட்க,

“நீங்க செஞ்ச எதையும் எனக்கு நினைவு படுத்தியாகனும்னு அவசியம் இல்லை அங்கிள். நான் சாகற வரைக்குமே உங்க உதவிகளை மறக்க மாட்டேன். ஆனா அதுக்காக நீங்க செஞ்ச அந்த செயல் சரியா போய்டுமா? யாருக்காக இல்லன்னாலும் நீங்க எனக்காக யோசிச்சிருக்கலாம்ல அங்கிள்? நானும் செந்தூரனும் வேற வேற இல்லன்னு சொல்ற நீங்களே என்னை தள்ளி வச்சு பார்த்த பின்னாடி, நான் சொன்னதை ஏத்துக்காதத்துக்கு அப்பறம் நான் எப்படி உங்க கிட்ட நல்லா பேசுவேன்னு நினைக்கிறீங்க? அதை விட என்னோட இந்த நிலைமைக்கு முழுக்க முழுக்க நீங்க தான் அங்கிள் காரணம். உங்களுக்கு சொல்லி புரியவைக்க எனக்கு விருப்பம் இல்லை அங்கிள். புரியற மனுஷனா இருந்திருந்தா கல்யாணதன்னைக்கு அப்படி செஞ்சிருப்பீங்களா?” என்று கோபத்தில் ஆரம்பித்து ஆற்றாமையில் முடிக்க,

அதுவரை அவன் என்ன பேசுகிறான் என்று புரியாத ஷான்விக்கு ‘கல்யாணத்தனைக்கு’ என்ற அவன் வார்த்தையில் உலகம் ஸ்தம்பித்தது.

அவன் என்ன வேலையாக இருக்கிறான் என்று தெரியாமல் காதலித்தது அவளுக்கு அப்போது தவறாகத் தெரியவில்லை. ஆனால் அவனது இந்த வார்த்தைக்குப் பிறகு, அவன் திருமணமானவனா என்று தெரியாமல் காதலித்த தன் மடத்தனத்தை நொந்து கொள்ளாமல் இருக்க இயலவில்லை.

அவனை வெறித்த பார்வை பார்த்தபடி அமர்ந்திருந்தாள்.

அந்த பக்கம் உள்ள மனிதர் என்ன பதிலளித்தாரோ தெரியாது. ஆனால் இவன், “எனக்கு செந்தூரனை பார்க்க விருப்பம் இல்லை அங்கிள். உங்களுக்கு தேவை கார் தானே, செந்தில் வருவான் பேசிக்கோங்க.” என்று சொல்லி அலைபேசியை அணைத்துவிட்டு,

“ஷான்வி நான் மத்ததை அப்பறமா சொல்றேன். உன் வீட்டு அட்ரஸ் சொல்லு.” என்று உரிமையோடு அவன் கேட்க,

அவள் விலாசத்தைக் கூறிவிட்டு வெளியே பார்வையை பதித்து அமைதியாக பயணித்தாள்.

சரணுக்கு உள்ளே எரிமலையாக மனம் குமுறிகொண்டிருந்தது. செய்வதை எல்லாம் செய்துவிட்டு இன்று தான் பேசவில்லை என்று வருந்துவதைப் போல பேசும் அம்மனிதரை நினைக்க நினைக்க எரிச்சல் கூடியது.

அவரை விட அவரது தவப்புதல்வன் தனது ஆருயிர் நண்பன் செந்தூரனை நினைக்க உள்ளே கிளம்பிய ஆத்திரத்துக்கு அளவே இல்லை.

அவ்விருவரின் சிந்தனையில் இருந்த சரண் ஷான்வியின் முகத்திலிருந்த கவலையையும் அவள் யோசனை வயப்பட்டிருப்பதையும் கவனிக்க மறந்தான்.

அவள் சொன்ன இடத்தில் காரை நிறுத்தியவன், அவள் ஏதும் சொல்லாமல் இறங்கிச் செல்வதை கவனித்து, “ஷான்வி காரை சீக்கிரம் கொண்டு வந்து கொடுக்க சொல்றேன். நாளைக்கு மீட் பண்ணலாம்.” என்று கூற,

“இல்ல மிஸ்டர். சாய்சரண் நாளைக்கு எனக்கு முக்கியமான சர்ஜரி இருக்கு.” என்று ஒட்டாத குரலில் பதில் வர, திகைத்தான்.

இவளுக்கு என்னவானது? காதலிப்பதாக இப்பொழுது தானே கூறினாள்? அதற்குள் என்ன கோபம்? அவளுக்கு இன்னும் தான் பதில் சொல்லாததால் இருக்குமோ? என்று யோசித்தபடி அவன் காரில் அமர்ந்திருக்க, வீட்டின் கேட்டை திறந்து விட்டான் காவலாளி. அமைதியாக உள் நுழைந்தாள் ஷான்வி.

கேட்டின் வலது புறம் கிரானைட் கல்லில் தங்க நிற பெயிட் அடிக்கப்பட்டு தகதகத்த எழுத்தில் ‘கிருஷ்ணகீர்த்தி’ என்று இருக்க அது டாக்டர் கிருஷ்ணமூர்த்தியின் இல்லம் என்று உணர்ந்தான் சரண்.

‘ஷான்வி ஏன் கிருஷ்ணமூர்த்தி சார் வீட்டுக்கு போறா?’ என்று யோசித்தபடி காரை நகர்த்தியவன் நினைவுக்கு செக்யூரிட்டி அவளுக்கு சல்யூட் அடித்தது வந்து போக, காரை சடன் பிரேக் போட்டு நிறுத்தினான்.

“என்ன?? ஷான்வி கிருஷ்ணமூர்த்தி சார் பொண்ணா?” என்று யோசித்தவன் மூளை வேலை நிறுத்தம் செய்தது.