உறவாக அன்பில் வாழ – 6
கேரேஜ் வாசலில் பதற்றத்துடன் நின்றிருந்த செந்திலைக் கண்டு யோசனையோடு உள்ளே நுழைந்த சாய்சரண் அங்கே வரவேற்பில் அமர்ந்திருந்த தனது அத்தையைக் கண்டு திகைத்தான்.
“அத்தை” என்று வாய் நிறைய அழைத்தபடி வந்த மருமகனைக் கண்டு முயன்று புன்னகைத்தார் சித்ரா.
“என்னங்க அத்தை இவ்ளோ தூரம்? போன் பண்ணி இருந்தா நான் வந்திருப்பேன்ல?” என்ற மருமகனைக் காண்கையில் தொண்டை அடைத்தது சித்ராவுக்கு.
‘இத்தனை நல்ல பிள்ளையைத் தான் அண்ணன் வேண்டாம் என்கிறார்’ என்று நினைக்க நினைக்க அண்ணன் மேல் கட்டுக்கடங்காத கோபம் உண்டானது.
கணவரின் எச்சரிகையையும் மீறி அண்ணனிடம் மகளின் வளைகாப்பு பற்றி பேசிய அவருக்கு தன் அண்ணனின் உண்மைக்கோபம் யாதென்று அன்று தான் புலப்பட்டது.
அவர் இங்கு வரும் முன் நிகழ்ந்தவையை எண்ணினார் சித்ரா.
அண்ணன் நல்ல மனநிலையில் இருப்பதை உறுதி செய்து கொண்டு தான் அவரது அறைக்குள் நுழைந்தார். ஆரம்பமெல்லாம் அமர்க்களமாக அண்ணன் தங்கை பாசத்துடன் தான் துவங்கியது.
ஆனால் ஷிவானி என்ற பெயரை எடுத்ததும், “இங்க பாரு சித்ரா, நான் அவங்க ரெண்டு பேரும் வேண்டாம்ன்னு உறுதியா இருக்கேன். இனி அவங்க பேச்சை எடுக்காத.” என்று அழுத்தமாகச் சொன்ன அண்ணனின் கோபம் புரியாமல்,
“அண்ணா அவங்க எப்படியும் முறையுள்ள பிள்ளைங்க தானே? என்ன.. நம்ம கிட்ட சொல்லியிருந்தா நாமளே கல்யாணம் பண்ணி வச்சிருப்போம். அன்னைக்கு கூட சரண் என்னவோ சொல்ல வந்தான். நீங்க தான் கோவத்துல கேட்காம விட்டுட்டீங்க.” என்று அவரை சமாதானம் செய்வதாக நினைத்து எரியும் நெருப்பில் எண்ணெயை வார்த்தார் சித்ரா.
“இப்ப என்ன சொல்ல வர்ற? அவங்க செஞ்சது தப்பில்லை. நான் கோவப்படுறது தான் தப்பு. அதானே? உனக்கு உன் பொண்ணு தான் வேணும்ன்னா நீயும் அவங்க கூடவே போயிடலாம் சித்ரா. யாரும் உன்னை தடுக்கல.” என்று சொன்ன அண்ணனை விக்கித்து நோக்கினார் சித்ரா.
“இல்லன்னா. வாயும் வயிறுமா இருக்கிற பிள்ளை. அது யாரோட வாரிசு? நம்ம வீட்டு வாரிசு தானே? நம்ம ரத்ததுக்குள்ள என்ன அண்ணா கோபம்?” என்று மீண்டும் தழைந்து அண்ணனிடம் அவர் பேச,
“ஓ, அவ்ளோ தூரம் போயிடுச்சா? கர்ப்பமா இருந்தா மறுபடி அவங்களை சேர்த்துக்கணுமா? அவனால போன என்னோட மானம் அவங்களுக்கு ஒரு குழந்தை பிறந்ததும் குரியர்ல வந்து சேர்ந்திடுமா? ஆமா நீ இப்படி என்கிட்ட பேசுறது சமரனுக்கு தெரியுமா? உனக்கு உன்னோட அண்ணனை தெரிஞ்சதை விட அவனுக்கு இந்த விநாயகத்தை நல்லா தெரியும்.” என்று கர்ஜனையாக அவர் கூற சித்ரா நடுங்கிப்போனார்.
கணவரின் சொல்லின் பின்னே இருந்த காரணத்தை முழுமையாக அறியப்பெற்றவர் அந்த கேள்விக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் விழிக்க,
“சமரன்கிட்ட நீ சொல்லி இருக்க, அவன் என்கிட்ட இதைப்பத்தி வேண்டாம்ன்னு சொல்லி இருக்கான் அப்படித்தானே.. அதையும் மீறி என்கிட்ட பேசுறன்னா..உனக்கு பிள்ளை பாசம், பேரக்குழந்தை பாசம் பொங்கி வந்திருக்குல்ல சித்ரா. ஒன்னும் பிரச்சனை இல்ல. நீ உன் மகளை பார்க்க போகலாம். என்ன வேணாலும் செய்யலாம். ஆனா இனிமே நீ நம்ம வீட்டுக்கு திரும்பி வரவேண்டிய தேவை இருக்காது. உன் மகளோடவே இருந்துக்கலாம்.” என்று கொஞ்சமும் இளக்கம் இல்லாமல் நிர்தாட்சண்யமாக கூறிய அண்ணனின் இந்த முகம் சித்ராவுக்கு மிகவும் புதிது.
பெண்களுக்கு தாய் வீட்டு உறவென்பது என்ன நடந்தாலும் தாங்கிப் பிடிக்கும் ஓர் உறவு. அப்படித்தான் மாணிக்க விநாயகமும் இத்தனை ஆண்டுகள் சித்ராவை தாங்கினார். ஆனால் தனது தன்மானமா தங்கை பாசமா என்று வரும்போது கொஞ்சமும் யோசிக்காமல் விநாயகம் தன் தன்மானத்தில் தெளிவாய் நின்றிட சித்ரா அடிபட்டுப் போனார்.
அன்பை வாங்கிப் பழகிய உறவுக்கு என்றேனும் கிடைக்கும் இப்படியான ஓர் அடி அவர்களை முழுவதுமாக புரட்டிப் போட்டுவிடும். சித்ராவின் மனதும் தடம் புரண்டு போனது தனது தமையனின் பேச்சில்.
“நான்… யாரையும் தேடி போகலைங்க அண்ணா.” என்று குரல் உடையக் கூறியவரின் இதயம் ஏற்கனவே சில்லுசில்லாக உடைந்திருந்தது.
மனம் வெதும்பியவராக கோவிலுக்கு வந்து அமர்ந்தவருக்கு அண்ணியின் வார்த்தைகள் நினைவுக்கு வந்தது. ஏனோ முதல் முறையாக முத்துலட்சுமியைப் பற்றி சிந்திக்கலானார் சித்ரா.
அவர் அண்ணனோடு அதே வீட்டில வாழ்ந்தாலும் என்றும் அண்ணன் அண்ணியிடம் சிரித்துப் பேசி அவர் கண்டதில்லை. தானும் கணவரும் குழந்தைகளும் என்று சித்ரா வட்டத்தை சுருக்கிக் கொண்டு அதிகம் முத்துலட்சுமியைப் பற்றி எண்ணியதே இல்லை. அண்ணன் தன்னிடம் அன்பாக பேசுவது போலவே அவர்கள் இருவரது அந்தரங்க வாழ்வும் இருக்கும் என்று தானே முடிவு செய்து கொண்டார். ஆனால் அண்ணனின் உண்மையான கோப முகத்தைக் கண்டதும் அவரை அண்ணனாக அல்லாமல் முதல் முறையாக ஒரு ஆண்மகனாக எண்ணினார்.
‘என்ன கோபம் இருந்தாலும் இப்படி நிஷ்டூரமாக ஒருவரை ஒதுக்கி விட முடியுமா? அதுவும் தான் பெற்ற ஒற்றை மகனை? என்ன மனிதர் இவர்?’ என்ற எண்ணம் அவரையும் அறியாமல் தலையெடுக்கத் துவங்க,
இனி மகளை அண்ணனை மீறி சென்று பார்ப்பதெல்லாம் நடக்கும் காரியம் இல்லை என்று உணர்ந்து கொண்டு, மருமகனிடம் தனக்காக தன் மகளை பார்த்துக்கொள்ளச் சொல்லி முதலும் கடைசியுமாக கேட்டுக்கொள்ள எண்ணி சரணின் பணிமனைக்கு வந்து சேர்ந்தார் சித்ரா.
இதோ அன்பும் பரிவுமாகப் பேசும் மருமகனைக் கண்டதும் மகள் எப்படியும் பிழைத்துக்கொள்வாள் என்ற நம்பிக்கை வரப்பெற்றவராக,
“ஒன்னும் இல்ல சரண், இது அவளுக்கு எத்தனை மாசம்? வளைகாப்பு போடணும்னு ஆசையா இருந்தது. ஆனா.. சூழ்நிலை சரி இல்ல. அதான் எனக்காக என் மகளை நல்லா பார்த்துக்கோன்னு சொல்லிட்டு போக வந்தேன்.” என்று கடகடவென்று பேசிய தன் அத்தையை அன்புடன் நோக்கினான் சரண்.
“அத்தை அன்னைக்கு நான் சொல்ல வந்ததை யாருமே கேட்கலை. இப்பவும் நீங்க நினைச்சது நடக்கலன்னு மனப்பாடம் பண்ணிட்டு வந்ததை என்கிட்ட ஒப்பிச்சிட்டு இருக்கீங்க. நீங்க சொல்லி ஒன்னும் எனக்கு ஷிவானி அறிமுகமாகல. நீங்க பார்க்கறதுக்கு முன்னவே இது தான் நம்ம வீட்டுக்கு வந்திருக்கிற குட்டிப்பாப்பான்னு எங்கம்மா எனக்கு காட்டினாங்க. அன்னைக்கே இவளோட பாதுகாப்புக்கு நீ தான் பொறுப்புன்னு எங்கம்மா எனக்கு சொன்னாங்க. அன்னைல இருந்து இன்னிக்கு வரைக்கும் நான் அதை சரியா தான் செய்துட்டு இருக்கேன். நீங்க சொல்லி நான் ஷிவானியை பார்த்துக்க தேவையில்ல அத்தை. உங்க அண்ணன் சொல்றபடி கேளுங்க. ஏன்னா அவரோட கோபத்தை தாங்கற சக்தி உங்களுக்கு இல்ல.” என்று சொன்னவன் அவரை சுற்றிக்கொண்டு தன் இருக்கைக்குச் சென்றான்.
அங்கிருந்த மேஜை இழுப்பறையைத் திறந்தவன், அதிலிருந்த ஷிவானியின் சமீபத்திய புகைப்படத்தை எடுத்து, “எப்பவாவது நீங்க அன்போட ஷிவானியைத் தேடி வருவீங்கன்னு வாரவாரம் அவளை போட்டோ எடுத்து இங்கேயே வச்சிருப்பேன். இந்தாங்க.” என்று அவரின் கரத்தில் திணித்தவன்,
“உங்க அண்ணன் கண்ணுல படாம வச்சுக்கோங்க அத்தை” என்று சொல்லிவிட்டு,
“செந்தில் அத்தையை நம்ம வீட்டுக்கு பக்கத்துல உள்ள பிள்ளையார் கோவில்ல விட்டுட்டு வா” என்று பணித்தான்.
மருமகன் கொடுத்ததை வாங்கிக்கொண்ட சித்ராவுக்கு மனம் கனத்துப்போனது.
அமைதியாக ஏதும் பேசாமல் செந்திலின் பின்னே சென்றார்.
அன்று முதல் சரணுக்கு ஷிவானியின் மேல் இன்னும் கரிசனையும் அன்பும் கூடியது. அவளது வளைகாப்பினை நன்றாக நடத்த வேண்டும் என்று எண்ணிக்கொண்டான்.
இரண்டு நாட்கள் கடந்து செல்ல, ஷான்வியின் வாகனம் பழுது பார்க்கப்பட்டு அவளிடம் ஒப்படைக்கத் தயாரான நிலையில் இருந்தது.
செந்தில் சென்று கொடுத்து வருகிறேன் என்று சரணிடம் தெரிவிக்க, ஏனோ அன்று அப்பாடலுக்கு கண்ணீரில் கரைந்த அவளின் பால் வண்ண முகம் அவனது மனதை இம்சித்தது.
“இல்ல செந்தில் நான் அந்த பக்கமா தான் போறேன். கொடுத்துட்டு வர்றப்ப ஆட்டோல வந்துடறேன்.”என்று சாவியினை பெற்றுக்கொண்டான்.
“எதுக்கு அண்ணா? நான் பின்னாடி டூ வீலர்ல வர்றேன். என்னோட திரும்பி வந்திடுங்க.” என்று கூறிய செந்திலை முறைத்த சரண்,
“ஏன் செந்தில் இங்க நிக்கிற இந்த வண்டி, அப்பறம் ஒருத்தருக்கு பழைய சாண்ட்ரோ காரை ரீமாடல் பண்ணி தர்றோம்னு சொன்னோமே அதெல்லாம் யார் நின்னு கவனிக்கிறது? கொஞ்சமாவது இந்த ஷாப்புக்கு மேனேஜர் மாதிரி நடந்துக்க செந்தில். இன்னும் மெக்கேனிக் மனநிலையிலேயே இருக்காத.” என்று அவன் தலையில் செல்லமாக அடித்துச் சென்றான் சரண்.
அவனது இந்த முகம் செந்திலுக்கு புதிது. அவனை விசித்திரமான பார்வை பார்த்துவிட்டு தன் வேலைக்கு திரும்பினான் செந்தில்.
காரினை மருத்துவமனை வளாகம் வரை கொண்டு சென்ற சரண் ஷான்விக்கு கைபேசியில் அழைப்பு விடுத்தான்.
முதலில் அசட்டையாக அழைப்பை ஏற்ற ஷான்வி அது சரணின் அழைப்பென்றதும் சற்றே குதூகலமாக மனநிலையில், “நீங்க கீழ வெயிட் பண்ணுங்க சரண். நானே வந்து செக் பண்ணி வாங்கிக்கிறேன்.” என்று கூறினாள்.
சரணுக்கு அவளின் பேச்சில் இருந்த வேற்றுமை புரிந்தாலும் அவளது மகிழ்ச்சி அவனுக்கும் மகிழ்வைக் கொடுத்தது தான் ஆச்சரியமாக உணர்ந்தான்.
அவள் வந்து பக்கத்தில் இருக்கும் காபி ஷாப்பில் பேசிக்கொண்டே ஒரு காபி ஆர்டர் செய்தவள், அவனுக்கு என்ன வேண்டும் என்று கேட்க, அவனும் ஒரு காபியை ஆர்டர் செய்தான்.
“ரெண்டு நாளா கால் டேக்சி புக் பண்ணி வர கடுப்பா இருந்தது சரண், நீங்க வேற வண்டி தர்ற வரைக்கும் டிரைவரா இருக்கேன்னு சொன்னிங்களா?, பேசாம கூப்பிடலாமான்னு நினைச்சேன். அப்பறம் தான் உங்க ஓனர் திட்டுவாரோன்னு விட்டுட்டேன்” என்று வளவளத்த அவளை இமைக்காது நோக்கினான் சரண்.
பின் என்ன நினைத்தாளோ ஷான்வி அமைதியாக காபியை அருந்திவிட்டு கிளம்பிவிட்டாள். அவள் தன்னை மெக்கானிக் என்று எண்ணி இருக்கிறாள் என்று நினைக்க சரணுக்கு சிரிப்பாக இருந்தது. நீ என்ன செய்கிறாய் என்று கேட்க கூட அவள் விரும்பவில்லை. அவனிடம் பேசிய அந்த நொடிகள் அவள் முகத்தில் ஆயிரம் சூரியனின் பிரகாசம் தெரிந்ததை கவனித்தான் சரண். அவன் மனதிற்குள் என்னவோ அசைந்தது.
தன் பணிக்கு திரும்பியவனுக்கு மனமெல்லாம் அவள் வசமே!
மருத்துவமனையில் ஜன்னல் கம்பியை பிடித்தபடி நின்ற ஷான்விக்கும் தன்னை நினைத்தே ஒரே யோசனை. அவள் இப்படி யாரிடமும் சென்று பழகும் குணம் உள்ளவள் இல்லையே. அப்படி இருக்க, அவன் அந்த சாய் கேரெஜில் என்னவாக இருக்கிறான் என்று கூட தெரியாமல் காரைக் கொடுக்க வந்தவனுடன் காபி அருந்தி புதிதாக வளவளத்த தன்னை நினைத்தே குழப்பம் கொண்டாள்.
ஆனால் அவனுடன் கழித்த நிமிடங்கள் எல்லாமே ஒளிபெற்றதைப் போல உணர்ந்த அவளின் இதயம் அதற்குப்பின் மூளையை வேலை செய்ய அனுமதிக்கவில்லை. அதன் பின்னான ஒரு வாரம் ஷான்வியின் செயல்கள் எல்லாமே அவளுக்கே புதியவை.
அப்படித்தான் என்று மருத்துவமனை வரும் வழியில் நின்றுகொண்டு வாகனம் பழுதென்று சரணுக்கு அழைத்தாள். அவன் வரும் திசை நோக்கி ஆவலாக நின்றவளுக்கு தொலைவில் இருசக்கர வாகனத்தில் செந்தில் தெரிய, உடனே காரில் ஏறி அங்கிருந்து கிளம்பியும் விட்டாள்.
செந்தில் சரணுக்கு போன் செய்து,” அண்ணா அவங்க இங்க இல்லையே.. இந்த இடம் தான் சொன்னாங்களா அண்ணா” என்று கேட்க சரணுக்கு குழப்பம் மிகுந்தது.
“கொஞ்சம் இரு செந்தில் நான் அவங்க கிட்ட கேட்டுட்டு சொல்றேன்” என்று அழைப்பை துண்டித்தவன், ஷான்விக்கு அழைக்க,
“சொல்லுங்க மிஸ்டர்.சாய் சரண்” என்ற குரலில் பெரிய வித்தியாசம் இருப்பதை உணர்ந்தான்.
“நீங்க சொன்ன இடம் செந்திலுக்கு சரியா தெரியல போல ஷான்வி மேடம். நீங்க எனக்கு லொகேஷன் ஷேர் பண்ணுங்க நானே நேர்ல வர்றேன்.” என்று கூற,
“அப்ப நீங்க நேர்ல வரல. வேற யாரையோ தான் அனுப்பினீங்களா?” என்ற அவளிடம் என்ன பதிலுரைப்பது என்று சரணுக்கு விளங்கவில்லை.
இது ஷான்வி அவனிடம் இப்படி நடந்து கொள்ளும் மூன்றாவது முறை. காரில் எந்த பிரச்சனையும் இல்லாமலே இரண்டு முறை இவனை அழைத்து பின் அவனுடன் பேசியபின் அனுப்பினாள். அதனால் தான் இம்முறை அவன் செந்திலை அனுப்பியது. இப்போது அவள் பேசும் விதம் அவனுக்குள் குழப்பத்தை விதைத்து விட்டது..