உறவாக அன்பில் வாழ – 5

ஷான்வி மாலை ஏழு மணி நெருங்குகையில் தனது இருக்கையிலிருந்து எழுந்து கொண்டாள். அன்றைய அவளின் பணி முடிவடைந்து விட்டது. மாலை நேர ஓ.பி கவனித்துக் கொள்ளவதற்கென்று தனியே டாக்டர்கள் இருப்பதால் அவள் கிளம்ப ஆயத்தமானாள்.

அவளது அறையைக் கடந்து வருகையில் காலையில் பிறந்த அந்த குழந்தையை வைத்தபடி அந்த பெண்ணின் அன்னை நின்றிருந்தார். குழந்தையின் முகத்தைத் கண்ட ஷான்வி அதன் சின்ன அதரங்களின் அசைவைக் கண்டு சிரித்தபடி கடக்க, அவள் கட்டியிருந்த காட்டன் புடவையின் மடிப்பை அப்பிஞ்சுக்கரங்கள் அழுத்தமாகப் பற்றிக்கொண்டது.  குழந்தையின் செயலில் சிரித்தபடி அதனை பெற்றுக்கொண்ட அவளுக்கு அதன் மென்மையின் மேல் புதுவித பிரேமை பிறந்தது.

அதன் கன்னங்கள், குட்டிக் கைகளை தன் ஆள் காட்டி விரல் கொண்டு நீண்ட, வெண்ணைகட்டியில் வைத்த விரலாய் அது வழுக்கிக்கொண்டு சென்றது. அந்த சிவந்த தேகம் கொண்ட பிஞ்சுக் குழந்தையின் அருகாமையில் தன் தனிமையை தொலைப்பதாக உணர்ந்தாள் ஷான்வி.

அவளுக்கே தெரியாமல் இன்பத்தில் மூழ்கி இருந்தவளை அவளுக்குப் பின்னால் கேட்ட செறுமல் நினைவுக்கு கொண்டு வந்தது.

குழந்தையை அதன் பாட்டியிடம் கொடுத்தவள்  தன் பின்னால் நின்ற அன்னையைக் கண்டு முதன் முறையாக மலர்ந்து சிரித்தாள்.

ஆனால் அதையெல்லாம் கவனிக்கும் நிலையில் கீர்த்தி இருக்கவில்லை போலும். “என்னோட ரூமுக்கு வா” என்று அழைத்துவிட்டு வேகமாக முன்னே சென்றார்.

இன்னும் தன் கைகளுக்குள் பஞ்சுப்பொதி போன்ற அக்குழந்தை இருப்பதாகத் தோன்றிய தன் எண்ணத்தையே எண்ணி நகைத்தபடி சென்றாள் ஷான்வி.

அறைக்குள் நுழைந்தபின் அன்னையின் கடுமையான முகத்தை கவனித்த அவளுக்கு ஏதோ சரியில்லை என்று தோன்றியது.

“என்னாச்சு?” என்று மொட்டையாக வினவியபடி அன்னைக்கு எதிரில் இருந்த இருக்கையில் அமர்ந்தாள்.

“காலைல நீயே ஆப்ரேஷனுக்கு அரேஞ் பண்ணின போல ஷான்வி. எல்லாரும் உன்னை ரொம்ப பெருமையா பேசினாங்க. எனக்கு சந்தோஷம் தான்.” என்று கூறிய அன்னையின் விழிகளில் ஊடுருவிப் பார்த்த ஷான்வி,

“சந்தோஷம்ன்னு சொல்றீங்க, ஆனா முகத்திலையோ குரல்லையோ அது தெரியலையே?” என்று சாதாரணமாக கூறிவிட்டு அங்கிருந்த மருத்துவ மாத இதழை எடுத்து பக்கங்களை திருப்பினாள்.

“நீ நான் வர்ற வரைக்கும் காத்துட்டு இருந்திருந்தா நானும் சந்தோஷப்பட்டிருப்பேன் ஷான்வி” என்ற அன்னையை ஒரு நொடி நிமிர்ந்து பார்த்தவள் மீண்டும் பத்திரிகையில் கண்களை ஓட்டியபடி,

“நீங்க இருந்திருந்தா நான் அந்த ஆபரேஷன் அட்டெண்ட் பண்ணி இருக்கவே மாட்டேன்” என்று சொல்லிவிட்டு,

“ரெண்டு ஆப்ரேஷனுக்கு நடுல போதுமான நேரம் வச்சுக்கோங்க. இல்ல அவசரத்துக்கு உங்க ஜூனியர்ஸ்ஸ ஆப்ரேட் பண்ண சொல்லுங்க. பேஷண்ட் ஹெல்த்ல ரிஸ்க் எடுக்க வேண்டாமே.” என்று ஆலோசனை போலவும் இல்லாமல் அதே நேரம் சற்றே அழுத்தமாகவும் கூறிவிட்டு,

“இன்னிக்கு இந்த ஆபரேஷன் அட்டெண்ட் பண்ணினதுனால நான் கைனோ எடுப்பேன்னு நினைக்க வேண்டாம். நான் ஏற்கனவே பீடியாட்ரி எடுத்துட்டேன். என்ன.. இன்னிக்கு அந்த பேபியை பார்த்ததும் நியோனேட்டல் டிப்ளமா எடுக்கணும்ன்னு தோணுச்சு. படிப்போம். படிப்புக்கு முடிவு இருக்கா என்ன?” என்று அன்னையை அர்த்தம் பொதிந்த பார்வை பார்த்தவள்,

“நான் வெளில போறேன் மா. பை” என்று கூறி அவர் பதிலளிக்கும் முன் அவ்வறையை விட்டு வெளியேறினாள்.

தந்தை அறையை கடக்கையில் அவரின் ஆழ்ந்த சிந்தனை வயப்பட்ட முகம் அவளுக்கு அவரின் மனநிலையை சொல்லாமல் சொல்லியது. மருத்துவ தம்பதிக்கு ஒற்றைப் பிள்ளையாய் பிறந்தது அவள் தவறில்லையே என்று நினைத்தபடி தனது காரினை எடுத்துக்கொண்டு நிதானமான வேகத்துடன் சாலையில் செலுத்தினாள்.

இத்தனை நேரம் குழந்தையின் அருகாமையில் இருந்த இணக்கமான சூழ்நிலை காணாமல் போய் மீண்டும் பெற்றோருக்கு இடையில் மாட்டிக்கொண்டிருக்கும் கடுமையான மனநிலை திரும்பி இருந்தது. அன்னையின் செயலால் அவரை தான் மிஞ்சி விடக்கூடாது என்ற அவரின் எண்ணம் அவளுக்கு சிரிப்பை வரவழைக்க, தந்தையின் அமைதிக்குப் பின்னால் இருக்கும் பூகம்பம் புரியாமல் சற்றே திணறினாள்.

அவளின் மனநிலை போல இந்திரா நகரை கடக்கையில் அவளது காரும் திணற ஆரம்பித்தது. சாலை ஓரமாக நிறுத்திய அவளுக்கு எத்தனை முறை முயன்றும் அது கிளம்பமாட்டேன் என்று அடம் பிடிக்க செய்வதறியாது திகைத்தாள்.

சாலையில் மனித நடமாட்டம் இருந்தாலும் தெருவிளக்குகள் ஆங்காங்கே மின்னி மின்னி எரிந்தத்தில் முதன்முறையாக தனியே நிற்கும் நிலையை நினைக்கையில் பத்திரிகைகளில் படித்த மோசமான சம்பவங்களே மனதில் வரிசை கட்டியது.

வேகமாக வாகனத்தில் ஏறி தந்தைக்கு அழைத்தாள். விஷயத்தை கூறியதும் அவர் “ம்ம் சர்வீஸுக்கு சொல்றேன்” என்று அழைப்பை துண்டித்ததும் மீண்டும் முதன்முறையாக தந்தையின் அரவணைப்புக்கு ஏங்கியது அவள் மனம்.

ஆனாலும் தந்தையின் குணமும் இன்றைய நிலையும் அறிந்தவளாதலால்  கதவை லாக் செய்தாகிவிட்டதா என்று ஒருமுறை சோதனை செய்துவிட்டு சீட்டில் தலை சாய்த்து அமர்ந்தாள். முயன்று அக்குழந்தையின் ஸ்பரிசத்தை எண்ணிக்கொண்டு தன்னை மறக்க முயற்சித்தாள்.

அரை மணி நேரத்திற்குப் பிறகு அவளின் பக்கம் இருந்த கண்ணாடி தட்டப்பட்டதும் பயந்து எழுந்த அவள் கண்டது, மிகவும் சாந்தமான ஒருவனின் முகத்தை.

அவன் கைகளைக் காட்டி அவளை பயப்பட வேண்டாம் என்று கூறியவன் செல்போனில் அவளின் தந்தையின் எண்ணை காட்டி வாகனத்தில் இருந்து இறங்குமாறு கூறினான்.

அரை இருளில் அவன் முகம் சரியாகத் தெரியவில்லை என்றாலும் அந்த கண்களில் அவளுக்கு ஏதோ ஒரு வித ஈர்ப்பு ஏற்பட்டிருந்தது.

கீழே இறங்கியவள் அவனை பாதம் முதல் கேசம் வரை பார்வையிட்டாள். சந்தன நிற பேண்ட்டும் வெள்ளை நிற சட்டையும் அணிந்திருந்த அவனைக் காண்கையில் கார் சர்வீஸ் செய்பவன் போலத் தோன்றவில்லை.

“நீங்க?” என்று அவள் தயக்கமாக கேட்க,

“ஸ்ரீ சாய் கேரேஜ்ல இருந்து  வர்றேன் மேடம். கிருஷ்ணமூர்த்தி சார் உங்க கார் ரிப்பேர்னு சொன்னாரு. நான் பக்கத்துல தான் இருந்தேன். அதான் வந்தேன்.” என்று விளக்கம் கொடுத்து அவளைக் கடந்து சென்று காரின் உள்ளே ஏதோ பட்டனை அழுத்திவிட்டு வெளியே வர, பான்ட் திறக்க தயாரான நிலையில் இருந்தது.

கையிலிருந்த செல்போன் விளக்கில் உள்ளே சோதனையிட்டவன், “உள்ள கழட்டி தான் மேடம் பார்க்கணும். உங்களுக்கு ஓலா புக் பண்ணி தரவா வீட்டுக்கு போறீங்களா?” என்று கேட்க,

“நான் பீச்சுக்கு போகலாம்ன்னு வந்தேன். நேரமே கிடைக்காது. இன்னிக்கு தான் கொஞ்சம் பிரீயானேன். ம்ச்.. மறுபடி வீட்டுக்கு போகணுமா?” என்று தனக்குள்ளேயே முணுமுணுப்பாகக் கூறினாலும் அவளுக்கு அருகில் நின்ற அவனுக்கு அது தெளிவாகக் கேட்டது.

அவளை அத்தனை நேரமும் உற்று கவனிக்காதவன் அவளின் இந்த முணுமுணுப்பில் இதழில் புன்னகை மலர, “நான் வேணா எலியாட்ஸ்ல டிராப் பண்ணுறேன் மேடம். அப்பறம் நீங்க வீட்டுக்கு ஓலால போங்க” என்று கூறவும் அவள் முகம் சட்டென்று மலர்ந்து பின் வாடியது.

“உங்களுக்கு வேலை இருக்கும். நான் கார் புக் பண்ணிக்கிறேன்.” என்று கூறிவிட்டு அவளது செல்போனில் ஓலா கார் ஒன்றை புக் செய்தாள்.

அவனும் அவளுக்கு அருகே நிற்க, “நீங்க போகலாம். நான் ஒன்னும் சின்ன குழந்தை இல்ல. எனக்கு போக தெரியும்.” என்று சற்றே ரோஷத்துடன் சொன்னவளைக் கண்டு சிரித்து விட்டான் சாய்சரண்.

“இல்லங்க. உங்களுக்காக நான் இங்கே நிற்கல. ஷாப்ல இருந்து வண்டி டோ பண்ணிட்டு போக ஆள் வர சொல்லி இருக்கேன். அவங்க உங்க காரை கேரேஜுக்கு எடுத்துட்டு போயிடுவாங்க. நான் அப்புறம் வீட்டுக்கு போகணும்.” என்று விளக்கினான்.

“ஓ” என்றவள்,

“நீங்க பார்க்க வர்கர் மாதிரி இல்லையே?” என்று கேட்டுவிட்டு தன் அவசரக்குடுக்கைத்தனத்தை எண்ணி நாக்கைக் கடித்துக்கொண்டாள்.

அவன் புன்னகை மாறாமல், “வர்கர் இப்படி ட்ரெஸ் பண்ணக்கூடாதா மேடம்? நீங்க கூடத்தான் வெள்ளைக் கோட் போடல. அதுக்கு நான் உங்களை டாக்டர் இல்லன்னு சொல்ல முடியுமா?” என்று கேட்க,

“நல்லா பேசறீங்க.” என்று சிரித்தாள் ஷான்வி.

“கிருஷ்ணமூர்த்தி சாருக்கு நீங்க என்ன வேணும். தப்பா நினைக்க வேண்டாம். அவர் யாருக்காவும் போன் பண்ணினது இல்ல. கீர்த்தி மேடமுக்காக கூட டாக்டர் போன் பண்ண மாட்டார். அதான் கேட்டேன்” என்று சொல்லிவிட்டு தன் செல்போனில் கேட்ட செய்தியின் ஓசைக்கு செவி சாய்த்து அதனை எடுத்து பார்வையிட்டான்.

“நான் அவரோட டாட்டர்.” என்று சத்தம் குறைவாகவே கூறி முடித்துக்கொண்ட ஷான்வி அவனது செல்போனில் அவன் கவனம் வைத்திருப்பதைக் கண்டு அமைதியானாள்.

உடனே அதில் அழைப்பு வர, “எக்ஸ்கியூஸ் மீ” என்று அவளிடம் கூறிவிட்டு இரண்டு அடிகள் தள்ளி அதனை ஏற்று காதில் பொருத்தினான்.

இரண்டு நிமிடங்கள் நீடித்த அந்த பேச்சில் கடைசியாக, “சரி ஷிவானி நான் வர்றப்போ வாங்கிட்டு வர்றேன். ஒரு கிளைன்ட் கூட இருக்கேன். அப்பறம் பேசவா?” என்று பொறுமையாக கூறி அழைப்பை துண்டித்தான்.

அவனது ஒவ்வொரு செயலையும் உன்னிப்பாக கவனித்த ஷான்வியின் மனதில் அவனது நிதானமான பேச்சு பெரும் மரியாதையை ஏற்படுத்தியது. அழைத்தவரை சட்டென்று துண்டிக்காமல் அதே நேரம் சூழ்நிலையை அழகாக விளக்கி அவன் அதனை கையாண்ட விதத்தில் சில மணி நேரத்துக்கு முன் தன் கையில் ஏற்ற குழந்தையை தான் எத்தனை பத்திரமாக கையாண்டோமோ அதே நேர்த்தி இருப்பதை உணர்ந்தாள்.

அவள் ஏற்பாடு செய்த வாகனத்தின் ஓட்டுநர் அழைக்க, அவனோடான இந்த நொடிகள் சற்றே நீளாதா என்று அவள் மனம் ஏக்கம் கொண்டது.

ஆனால் சில நொடிகளில் தனக்கு ஏற்பட்டிருக்கும் இந்த கிறுக்குத்தனத்தை எண்ணி தன்னையே திட்டிக்கொண்டாள் ஷான்வி.

‘அவரு யாரோ எவரோ? அப்பாவுக்கு தெரிஞ்சதுனால டீசண்டா பேசுறாரோ என்னவோ.. ஏன் என் மூளை வேலை செய்யாம கிறுக்குத்தனமா யோசிக்குது?’ என்று தன்னையே மானசீகமாக குட்டிக்கொண்டு வந்த காரில் ஏற முற்பட்டாள்.

ஆனால் டிரைவரின் பக்கம் சென்ற சாய்சரண், அவரை போகுமாறு சொல்லிவிட்டு, “மேடம் நீங்க வெயிட் பண்ணுங்க. நானே டிராப் பண்ணுறேன்.” என்று சொன்னதும் அவள் புரியாது நோக்கினாள்.

“இல்ல சாரே சொல்லி இருக்கார்ன்னா நீங்க அவருக்கு வேண்டியவரா தான் இருக்கணும். இப்படி நைட் டைம்ல உங்களை தனியா அனுப்ப எனக்கு மனசு வரல.” என்று அவன் கூறியதும், தான் கிருஷணமூர்த்தியின் மகள் என்று சொன்னதை அவன் கவனிக்கவில்லை என்று புரிந்து கொண்டாள்.

வேண்டியவர் என்ற எண்ணத்திற்கே இத்தனை முக்கியத்துவம் எனில் மகளென்று அறிந்தால் வீட்டில் தான் சென்று சேர்ப்பான் என்று எண்ணிக்கொண்டவள்,

“நான் பீச்சுக்கு போகணும், அப்பறம் தான் வீட்டுக்கு போவேன். நீங்க அதுவரைக்கும் எனக்கு எஸ்காட் வேலை பார்ப்பீங்களா?” என்று சிரித்தபடி வினவ, அவனோ,

“டாக்டர் எனக்கு நூத்துல ஒரு கஸ்டமர் இல்ல மேடம். அவர் எனக்கு ஸ்பெஷல். உங்க கார் சர்வீஸ் ஆகி வர்ற வரைக்கும் கூட உங்களுக்கு டிரைவரா இருக்க சொன்னாலும் நான் இருப்பேன்.” என்று சொன்ன அவனிடத்தில் கிஞ்சித்தும் பொய்மை இல்லை என்று உணர்ந்தாள் ஷான்வி.

செந்திலும் வேறு ஒரு பையனும் இழுவை வாகனத்தில் வந்து சரண் அருகில் நின்றனர்.

ஷான்வியின் வாகன சாவியை செந்திலிடம் கொடுத்தவன், “ஷிவானிக்கு மாதுளை ஜூஸ் வேணுமாம் செந்தில். நீ அவளுக்கு வாங்கிக் கொடுத்துட்டு கேரேஜுக்கு போக முடியுமா?” என்று கேட்க,

செந்தில் அவனை வினோதமான பார்வை பார்த்தபடி, “சரிங்க அண்ணா.”என்று கூறிவிட்டு ஷான்வியை ஓரக்கண்ணால் பார்த்தான்.

அவர்கள் கிளம்பிச் சென்றதும், “வாங்க மேடம்” என்று சரண் அவனது ஐ டுவன்டியை நோக்கி அழைக்க,

“என் பேர் ஷான்வி” என்று கூறிய அவளைக் கண்டு முத்துப்பற்கள் தெரிய சிரித்தான் சரண்.

பெசண்ட்நகர் பீச்சில் அவளை இறக்கி விட்டவன், வாகனத்தை நிறுத்திவிட்டு வரும்வரை அவள் அங்கேயே காத்திருப்பதைக் கண்டு புருவமுடிச்சுடன் அவளிடம் சென்றான்.

“நான் சென்னைக்கு வந்து ஆறு மாசம் ஆகுது. ஆனாலும் இன்னும் இடமெல்லாம் சரியா பழகல” என்று கூறிய அவளைக் கண்டு சிரித்தவன், “வாங்க” என்று மணலில் கால் புதைய அவளுக்கு சற்று தள்ளி நடக்கலானான்.

அவள் குழந்தையின் குதூகல மனநிலையுடன் நடப்பதை ஓரக்கண்ணால் கண்டவனுக்கு சிரிப்பு கட்டுக்கடங்காமல் பெருகியது.

அவள் அமைதியாக கடலை ரசித்தபடி பத்து நிமிடம் நின்றவள், “உங்களுக்கும் வேலை இருக்கும்ல? போகலாம்.” என்று மீண்டும் சாலை நோக்கி நடக்க ஆரம்பித்ததும் அவளின் செயல் புரியாது போனாலும் அவள் ஏதோ குழப்பத்தில் இருப்பதாக புரிந்தது சரணுக்கு.

காரில் ஏறியதும் அவளது வீட்டிற்கு வழி சொன்னவள் அமைதியாக அமர்ந்து கொண்டாள்.

காருக்குள் அமைதி நிலவ, அதை உடைக்கும் நோக்குடன் எப். எம்.மை ஆன் செய்தான் சரண்.

:ஓ மனமே ஓ மனமே
உள்ளிருந்து அழுவது ஏன்
ஓ மனமே ஓ மனமே
சில்லுசில்லாய் உடைந்தது ஏன்
மழையைத்தானே யாசித்தோம்
கண்ணீர்த்துளிகளைத் தந்தது யார்
பூக்கள் தானே யாசித்தோம்
கூழாங்கற்களை எறிந்தது யார்?’

பாடல் வரிகள் மது பாலகிருஷ்ணன் குரலில் சோகத்துடன் இழைய, ஷான்வியை திருப்பிப் பார்த்த சரண் திகைத்தான்.

அவளின் விழிகளில் கண்ணீர் கசிந்தபடி இருக்க அவனுக்குள் புரியாத வலி ஒன்று பிறப்பதையும் அதன் காரணத்தை அறிய முடியாமலும் திணறினான்.