உறவாக அன்பில் வாழ – 4

சாய்சரண் அன்று வெள்ளிக்கிழமை என்பதால் காலை விநாயகர் கோவிலுக்கு சென்று விட்டு சற்று தாமதமாகவே தனது பணிமனைக்கு வந்து சேர்ந்தான்.

உள்ளே நுழையும்போதே சிலரின் கூச்சலும் சண்டையும் காதில் விழ நடையை எட்டிப்போட்டான்.

செந்தில் யாரிடமோ மிகவும் தணிவாக ஏதோ கூற அவரும் அவருடன் இருந்த ஒருவனும் கூச்சலிட்டபடி இருந்தனர்.

கருப்பு நிற காய்சிராயும், வெள்ளை நிற சட்டையும் கண்ணில் குளிர்கண்ணாடியும் அணிந்தபடி அவர்கள் அருகில் வந்த சாய்சரணைக் கண்டதும் செந்தில் பரபரப்பானான். அவனிடம் தென்பட்ட மாற்றத்தை கவனித்த அவைருவரும் சரணை மற்றொரு கஸ்டமர் என்று நினைத்துக்கொண்டு,

“சார் நீங்களும் இங்க தான் வண்டி சர்வீஸ் விட்டீங்களா? இவங்க சரி இல்ல சார்.” என்று கூறியதும் கண்களில் இருந்த கண்ணாடியை கழற்றி தனது சட்டையில் மாட்டிக்கொண்டவன்,
அப்படி என்ன சார் பண்ணிட்டாங்க, கரெக்ட்டா சொல்லிட்டீங்கன்னா நான் மட்டும் இல்ல எனக்கு தெரிஞ்ச யாரையும் இங்க சர்வீஸ் பண்ண விட மாட்டேன் என்று கூற செந்தில் திருதிருவென்று விழிக்கலானான்.

‘மூணு நாள் முன்னாடி ஏ.சி சரியா வேலை செய்யாலன்னு சர்வீஸுக்கு கொடுத்தேன் சார். நேத்து வந்து கேட்டாப்போ சரி பண்ணியாச்சுன்னு சொன்னாங்க. ஆனா இன்னிக்கு மறுபடி ஏ.சி வேலை செய்யல சார்.” என்று குற்றப்பத்திரிகை வாசித்த அவரை உற்று நோக்கியவனுக்கு அவர் பொய் கூறுவது போல தெரியவில்லை.

செந்திலை நோக்கியவன், “என்ன செந்தில் இப்படி சொல்றாங்க. எப்பவும் எல்லாமே சரியா பண்ணுவிங்கன்னு தானே நெனச்சேன்” என்று பொதுப்படையாகக் கேட்க,

“அண்ணா இல்லண்ணா அவங்க கொண்டு வந்து விட்டப்போ ஏ.சி கேஸ் கம்மியா இருந்தது. கூலன்ட் ஆயில் லெவலும் கம்மி தான் அண்ணா. எல்லாத்தையும் சரி பண்ணிட்டு தான் ஹேண்டோவர் பண்ணினோம். ஆனா இப்போ பார்த்தா கம்ப்ரசர் போயிடுச்சு அண்ணா. எங்க மேல தப்பில்லை அண்ணா.” என்றான் பாவமாக.

“அதை ஏன் நீ முதல்ல பார்க்கல?” என்று சரண் சற்றே குற்றம் சாட்டும் குரலில் கேட்க,

“இவங்க ஓவரால் சர்வீஸுக்கு விட்டிருந்தா நானும் பார்த்திருப்பேன் அண்ணா. என்ன பால்ட் சொன்னாங்களா அதை மட்டும் தான் ரிப்பேர் பார்த்தேன். என் மேல தப்பில்ல அண்ணா.” என்று பாவமாக கூற,

“சார் இனிமே இப்படி நடக்காது, கம்ப்ரசர் சரி பண்ணி வைக்க சொல்றேன் ரெண்டு நாள்ல வந்து எடுத்துக்கோங்க சார். இந்த முறை உங்களுக்கு சர்வீஸ் பிரீ.” என்று கூறிவிட்டு தன் அலுவலகம் நோக்கி அவன் நடக்க,

“தம்பி நீதான் ஓனர்னு தெரியாம பேசிட்டேன் பா” என்று கூறிய அந்நபரிடன்,

“நீங்க ஒன்னும் தப்பா சொல்லலயே சார்.” என்று சொல்லிவிட்டு நகர்ந்தான்.

அவர்கள் சென்றதும் உள்ளே வந்த செந்தில், “அண்ணா அந்த ஆளு பார்த்த வேலைக்கே பணம் கொடுக்க அவ்ளோ கிராக்கி பண்ணினார் தெரியுமா? நீங்க இப்போ சும்மா  பண்ணிக் கொடுக்கறேன்னு சொல்லிட்டிங்க. இதை அந்த ஆள் யார் யார் கிட்ட சொல்லப்போறானோ யார் யார் காரை தூக்கிட்டு மறுபடி வரப் போறாங்களோ?” என்று வருத்தம் கொண்டான்.

“இங்க பாரு செந்தில் நாம வேலை செய்யறது பணத்துக்காக தான். ஆனா அதுக்காக எல்லாத்தையும் அதை வச்சே அளக்க கூடாது. இன்னிக்கு வந்தவர் கண்ணுல என்ன டா மறுபடியும் ஏதோ பிரச்சனை, மறுபடி செலவா? ன்னு எரிச்சல் இருந்தது. ஆனா அதே நேரம் நல்ல வேளை வேற பெரிய பிரச்சனை இல்லன்னு சின்னதா ஆறுதலும் இருந்தது. கஸ்டமர் பிரச்சனைன்னு வண்டி கொண்டு வந்தா வாங்கி நிறுத்தாம அவங்களை வச்சுகிட்டே ஒரு தடவை பார்த்துட்டு என்ன பிரச்சனைன்னு சொல்ல சொல்லி இருக்கேன். அடுத்தது மறுபடியும் வேலை செய்யறப்போ செக் பண்ணிட்டு ஏதாவது எக்ஸ்டரா வேலை இருந்தா போன்ல சொல்ல சொல்லி இருக்கேன். இதை நீ செக் பண்ணல செந்தில். இது நம்ம தப்பு. நாம தான் இப்போ செலவு செய்யணும். அடுத்து யார் வந்தாலும் இன்னும் கவனமா ஹேண்டில் பண்ண இந்த அனுபவம் உனக்கு உதவும்.” என்று சொல்லிவிட்டு அன்றைய பர்சேஸ் லிஸ்டை திருப்பிக்கொண்டிருந்தான்.

அப்போது அவனது பணிமனைக்குள் நுழைந்த அவரைக் கண்டதும் அவனுக்கு ஒரு நிமிடம் உடல் விரைத்தது. தன்னையும் அறியாமல் அவன் முகத்தில் கடுமை பரவியது.

அவன் முன்னே வந்தவர், “என்னப்பா எப்படி இருக்க?” என்று கேட்ட கேள்வியில் அவனுக்கு உள்ளே கோபம் பொங்கி வழிந்தது.

“வீட்ல எல்லாரும் சௌக்கியமா?” என்று அவனுக்கு முன்னே இருந்த இருக்கையில் அமர்ந்தவர், “நம்ம கம்பெனில வேலை செய்யற ஜெனரல் மேனேஜர் அப்பறம் பேக்டரி மேனேஜர் ரெண்டு பேருக்கும் செகண்ட் ஹாண்ட்ல நல்லதா ஆளுக்கு ஒரு கார் பாரேன். ஒரே மாதிரி மாடலா இருக்கட்டும். இல்லன்னாலும் விலை ஒரே போல இருக்கட்டும். என்ன?” என்று அடுக்கிக்கொண்டே போனார்.

பழகிவிட்ட காரணத்தால் அமைதி காத்தான் சரண். ஆனாலும் உள்ளே அனலாக கொதித்துக்கொண்டிருந்தது. ‘இந்த மனிதருக்கு இதயமே இல்லையோ?’ என்ற கேள்வி மட்டும் அவனை குடைந்தபடி இருந்தது.

“எல்லாம் தயாரானதும் ஆபிசுக்கு போன் பண்ணு சரண்.” என்று சொல்லிவிட்டு அட்வான்ஸ் என்று சில லட்சங்கள் அடங்கிய செக்கை அவன் முன்னே வைத்துவிட்டு எழுந்து சென்றார்.

அவர் போவதையே பார்த்தவன் மனதினுள், ‘என் வாழ்க்கையை புரட்டி போட்டுட்டு இந்த மனுஷனால எப்படி இவ்ளோ சாதாரணமா என்னோட பேச முடியுது? ச்ச..’ என்று எண்ணிக்கொண்டான்.

மருத்துவமனைக்குள் நுழைந்து தன் வருகையை பதிவு செய்து கொண்டிருந்த ஷான்வியை லேபர் வார்டில் இருந்த நர்ஸ் அவசரமாக அழைத்தார்.

வேகநடையில் அங்கே சென்றவள், ஒரு பெண் வலியில் துடித்துக்கொண்டிருப்பதைக் கண்டதும்,

“என்ன ஆச்சு? பெயின் வந்து இவ்ளோ நேரம் ஆகுது? பேபி பொசிஷன் என்ன?” என்று அவள் கடகடவென்று கேட்டதும்,

“மேம் பெயின் வந்து டென் அவர்ஸ்க்கு மேல ஆகுது. பெல்விஸ் ஆறு சென்டிமீட்டர் வைடென் ஆகி இருக்கு. பேபி ஹெட் பிக்ஸ் ஆயிடுச்சு. ஆனா..” என்று இழுத்தாள்.

“என்ன?” என்று கேட்டபடி அப்பெண்ணின் வயிற்றில் தம்பளர் போன்ற கருவியை வைத்து குழந்தையின் இதயத்துடிப்பை உன்னிப்பாக கவனித்தாள் ஷான்வி.

“பேபி இஸ் குட். இன்னும் கொஞ்ச நேரம் மட்டும் ட்ரை பண்ணி பேபி மூவ் ஆகும்போது நீங்களும் புஷ் பண்ணுங்க. ஒன்னும் இல்ல. சீக்கிரம் உங்க குழந்தையை நீங்க பார்த்துடலாம்.” என்று  அப்பெண்ணுக்கு தேறுதல் கூறிய அவளைக் கண்ட செவிலி,

“டாக்டர்”, என்று தனியே அழைத்து, “அவங்க பேபி கழுத்துல கொடி சுத்தி இருக்குன்னு நேத்து ஸ்கேன்ல பார்த்தோம். பெயின் வந்ததும் மறுபடி அல்ட்ரா சவுண்ட் செக் பண்ணிட்டு ஆபரேஷன் பண்ணிடலாம்ன்னு பெரிய டாக்டர் சொன்னாங்க. ஆனா ரெண்டு மணி நேரமா ட்ரை பண்ணிறோம் டாக்டருக்கு லைன் கிடைக்கல. அவங்க மார்னிங் வேற கேஸ் அட்டெண்ட் பண்ண போனாங்க. இன்னும் வரல.” என்று தயங்கியவர்களிடம்,

“அவங்க இல்லன்னா என்ன? சீனியர் சர்ஜன்ஸ் இருக்காங்க, இல்லன்னாலும் சீப் டாக்டர் இருக்காரு. பெர்மிஷன் வாங்கி அவங்களை ப்ரிப்பேர் பண்ணி இருக்கலாம்ல?” என்று கோபம் கொண்டவள், அவளே அப்பெண்ணிற்கு அல்ட்ரா சவுண்ட் கருவி மூலம் குழந்தையை சோதனை செய்தாள். குழந்தையின் அசைவுகள் வெகுவாக குறைந்திருக்க, கழுத்தில் கொடியின் அளவை கணித்துக் கொண்டிருந்தாள்.

உடனடியாக டீமை தயாராக உத்தரவிட்டவள், கீர்த்தியின் ஜூனியர் டாக்டரை அழைக்க அவரோ, “மேடம் இல்லாம நாங்க தனியா சர்ஜரி பண்ண மாட்டோம்.” என்று தயங்கினார்.

நேராக தந்தை முன் சென்று நின்றவள்,

“அம்மா எங்க? இங்க சர்ஜரி வச்சுக்கிட்டு என்ன பண்ணிட்டு இருக்காங்க?” என்று கோபமாக வினவினாள்.

“அவ டிராபிக்ல மாட்டி இருக்கா. வர ஒரு மணி நேரம் ஆகும். என்ன இப்போ எமர்ஜன்சி” என்று அவரும் சூடாக வினவ, பதிலளித்த மகளை விடுத்து நிர்வாகத்துறையை போனில் கிழிக்க ஆரம்பித்தார்.

“எல்லா ஆப்ரேஷனுக்கும் கீர்த்தியே தான் வரணும்னா, இத்தனை ஜூனியர் டாக்டர், அசிஸ்டண்ட்ஸ் எல்லாருக்கும் தண்டதுக்கா சம்பளம் கொடுக்கறேன். பிரிஸ்கிரிப்ஷன் எழுத மட்டும் இங்கே வேலைக்கு வருவாங்களா?” என்று அவர் போட்ட போட்டில் அடுத்து பத்து நிமிடத்தில் சீனியர் சர்ஜன் ஒருவர், அனஸ்தீஸியனிஸ்ட், இரண்டு ஜூனியர் டாக்டர்கள் குழு சர்ஜரிக்கு தயாரானது.

ஜூனியர்களுக்கு கீர்த்தியின் குணம் நன்றாகவே தெரியும். கைராசியான மருத்துவர் என்று பெயர் எடுத்து வைத்திருந்த கீர்த்திக்கு எந்த சர்ஜரியிலும் தான் இருக்க வேண்டும். எத்தனை மேதாவிகள் கூடி இருந்து தாங்களே அதனை நடத்த முடியும் என்று நிரூபித்தாலும் அது தனது கைராசியால் அப்பெண்ணிற்கு கிட்டியது என்று சொல்லிக்கொள்வதில் கீர்த்திக்கு அத்தனை பெருமை. அப்படி இருக்க அவரில்லாமல் சர்ஜரி ஆரம்பித்தால் என்ன செய்வாரோ என்று பயந்தவர்கள், “ஷான்வி நீங்களும் எங்க கூட வாங்களேன்”  என்று அவளை தங்களுடன் இணைத்துக்கொண்டனர்.

கீர்த்தி திட்டுவதாக இருந்தாலும் மகளைக் கண்டு  கடுமையை குறைத்துக்கொள்வார். இல்லை மகளையும் சேர்த்தே திட்டட்டும். எக்காரணம் கொண்டும் அந்த பெண் சிங்கத்திடம் தனியாக அகப்படுவதில்லை என்று அந்நால்வரும் ஷான்வியை தங்கள் கேடயமாக மாற்றிக்கொண்டனர்.

ஆனால் அவர்கள் அறியாதது, இவர்கள் செயலால் அம்மருத்துவமனையிலும் ஷான்வியின் வாழ்விலும் எப்பேர்ப்பட்ட மாற்றத்தை விதைத்து விட்டனர் என்பதே.

சிங்காரச் சென்னையின் போக்குவரத்து நெரிசலில் சிக்கி ஒருவழியாக கீர்த்தி மருத்துவமனைக்குள் நுழையும் நேரம் அப்பெண்ணிற்கு அறுவை சிகிச்சை முடிந்து அழகிய பெண் குழந்தை பிறந்திருந்தது.

லாபியில் வேகமாக ஆபரேஷன் தியேட்டர் நோக்கி சென்ற கீர்த்தி, வாயிலில் சிகப்பு விளக்கு எரியாததைக் கவனித்து, தனக்காக அனைவரும் காத்திருப்பதாக எண்ணி ஓட்டமாக அங்கே வந்தார்.

ஆனால் அவர் அங்கே நெருங்கும் சமயம், ஷான்வி கையில் சின்னஞ்சிறு குழந்தை ஒன்றை பிங்க் வண்ண டவலில் சுற்றி வைத்தபடி அங்கிருந்த உறவினர்களிடம் காட்டிக்கொண்டிருந்தாள்.

கீர்த்தி அருகே வர, “பேபி வெயிட் நார்மல் தான் மா. ஆனா கொஞ்ச நேரம் போட்டோலைட்ல் வைக்கணும். நான் குட்டியை உங்களுக்கு அலகேட் பண்ணின ரூம்லேயே லைட்ல வைக்க சொல்றேன். உங்க பொண்ணு கண்ணு முழிச்சதும்  ரூமுக்கு மாத்திடுவாங்க.” என்று கூறி செவிலியரிடம் குழந்தையை ஒப்படைத்தாள்.

கீர்த்தி விழி அகற்றாமல் மகளை வலது புறமாக நின்று பார்த்துக்கொண்டிருக்க,
அவள் தன்னைப் போல இதய சிகிச்சை நிபுணராக மாட்டாள் என்று நினைத்த கிருஷ்ணமூர்த்தி இடதுபுறமாக இருந்த லாபியில் இருந்தது அவளை ஒரு முடிவுடன் பார்த்துக்கொண்டிருந்தார்.