உறவாக அன்பில் வாழ – 2

முகில்கள் வெண்ணிலவுடன் விளையாடிக்கொண்டிருந்த அந்த இரவு வேளையை, தென்றல் வந்து முல்லைக் கொடியை உரசி அவள் வைத்திருந்த மொட்டினை அவிழச் செய்த பொழுதினில் அதன் மணம் பரப்பிக் கிடந்த அந்த பால்கனியில் தன் மடிகணினியை வைத்தபடி அமர்ந்து அந்நறுமணத்தை தன் நாசியில் நிறைத்துக் கொண்டிருந்தாள் ஷான்வி.

அவளது அறையின் கதவு தட்டப்பட,  பால்கனி திரைச்சீலை நகர்த்தி எட்டிப்பார்த்தாள்.

அவளின் அன்னை அங்கே தனது செல்போனைப் பார்த்தபடி நின்றிருப்பதைக் கண்டவள், மடிக்கணினியை டீப்பாயில் வைத்துவிட்டு தன் கால்களை உதறி எழுந்து நின்றாள்.

ஒருமணிநேராக அதே இடத்தில். அமர்ந்திருந்ததால் அவள் கால்கள் அவள் சொல்பேச்சுக் கேட்க மறுத்து மரத்துப் போயிருந்தது.

மெல்ல அவள் அறைக்குள் நுழைய, அவளின் அன்னையின் பார்வை  கைபேசியிலிருந்து மகளிடம் மாறியது.

“வேணும்னே பண்ற தானே ஷான்வி நீ?” என்று எடுத்தவுடன் கோபத்தில் மகளிடம் கேள்வி எழுப்பியவரை அவள் நிமிர்ந்தும் பார்க்கவில்லை.

“ஷான்வி லுக் அட் மீ. கொஞ்சமாவது உனக்கு அம்மா மேல மரியாதை இருந்திருந்தா அட்லீஸ்ட் வரலன்னு நான் காலைல இருந்து அனுப்பின அசிஸ்டண்ட் டாக்டர்ஸ் யார்கிட்டயாவது சொல்லி அனுப்பி இருக்கலாம்ல.” என்று அவள் முன்னே வந்து நின்று அவள் முகத்தை நிமிர்த்தினார்.

“சொல்லி இருந்தா என்ன செஞ்சிருப்பீங்க?” என்று வெறுமையாக எழுந்த மகளின் கேள்வியில் கோவத்தின் உச்சத்துக்குச் சென்றவர்,

“உனக்கு உங்க அப்பா தான் பெருசு, நானெல்லாம் ஒரு ஆளே இல்லன்னு முதல்லயே சொல்லி விட்டிருந்தா வேற எந்த அசிஸ்டண்ட்டையும் அனுப்பி அவங்க வேலையையும் கெடுத்திருக்க மாட்டேன்.” என்று மகளிடம் ஏற்பட்ட ஆதங்கத்தையும் கோபத்தையும் மறைக்காது வெளிக்காட்டினார் கீர்த்தி.

ஆனால் அன்னையின் குணத்தை நன்கறிந்த ஷான்வி, “இப்போவும் ஒன்னும் கெட்டுப்போகல அதே போல நெனச்சு நிம்மதியா போய் ரெஸ்ட் எடுங்க மா” என்று சொல்லிவிட்டு மீண்டும் பால்கனி பக்கமாக நகர்ந்தாள்.

“ஹவ் டேர் யூ ஷான்வி? உங்க அப்பா உன்னை இந்தியால இருக்கற மெடிக்கல் இன்ஸ்டிடியூஷன்லேயே சேர்க்கலாம்ன்னு சொன்னாரு. உனக்கு பீஸ் கட்ட அவ்வளவு கணக்கு பார்த்தாரு. நான் தான் அவர்கிட்ட சண்டை போட்டு உன்னை லண்டனுக்கு அனுப்பி வச்சேன். இங்க வந்ததும் மாஸ்டர்ஸ்ல கைனோ எடுப்பன்னு எவ்வளவு ஆர்வமா இருந்தேன்.ஆனா நீ என்னடான்னா வந்ததும் ஆறுமாசம் ஹாஸ்ப்பிடல்ல வேலை பாக்கறேன்னு சொல்லிட்ட. அதான் ஆறு மாசம் முடிஞ்சு போச்சேன்னு நானும் ஒரு வாரமா உன்கிட்ட பேசிட்டு இருக்கேன். நீ இன்னிக்கு என்னோட வந்து ஆபரேஷன் தியேட்டர்ல எல்லாம் கத்துப்பன்னு நெனச்சேன். அடுத்த செமெஸ்டர்ல உன்னை கைனோக்கு அஃப்ளை பண்ண சொல்லாம்னு இருந்தேன். இப்படி நீ உன் அப்பா பின்னாடி போவன்னு நினைக்கவே இல்ல.” என்று ஒரே மூச்சாக மகள் மேல் இருந்த கோபத்தை இறக்கி வைத்தார் கீர்த்தி.

அவரை தலை முதல் கால்வரை நிதானமாகக் கண்ட ஷான்வியின் மனதில், ‘நீ தானா என்னை வெளிநாட்டுக்கு விரட்டுவிட்ட மாஸ்டர்மைண்ட். இது தெரியாம இத்தனை நாளா நான் அப்பாவை திட்டிட்டு இருந்திருக்கேன்.’  என்று நினைத்தவளாக அன்னைக்கு பதிலளிக்க வாய் திறந்தவள் வேகமாக அறைக்கதவை ஒரு சம்பிரதாயம் போல தட்டிவிட்டு உள்ளே நுழைந்த தந்தையைக் கண்டதும் அமைதியானாள்.

கிருஷ்ணமூர்த்தி மகளையும் மனைவியையும் நோக்கியவர் சற்றே கடினமான குரலில் மகளிடம், “உனக்கு என்னோட சேர்ந்து சர்ஜரி அட்டெண்ட் பண்ண பிடிக்கலன்னா நேரா என்கிட்ட வந்து சொல்ல வேண்டியது தானே? அதென்ன அசிஸ்டண்ட் டாக்டர்ஸ் கிட்ட வேற வேலை இருக்குன்னு சொல்லி விடுற? ஹாஸ்ப்பிடலோட எம்.டி. உன்னோட அப்பா நான் சொன்ன வேலையை நீயே இவ்வளவு அலட்சியமா அசிஸ்டண்ட்ஸ் கிட்ட சொல்லிவிட்டா நாளைக்கு அவங்க எப்படி மரியாதையா நடந்துக்குவாங்க? ஹாஸ்பிடல் நடத்த டாக்டரா இருந்தா மட்டும் போதாது, எல்லாத்தையும் மேனேஜ் பண்ணவும், யார் கிட்ட என்ன பேசணும், யார் கிட்ட எதை சொல்லணும்னு தெரிஞ்சிருக்கணும் ஷான்வி.” என்றவர்  பின் குரலை தணித்துக்கொண்டு,

“எனிவே எல்லாமே லெசன்ஸ் தான். இனிமே இப்படி நடக்காம பார்த்துக்கோ. நாளைக்கு மயிலாப்பூர் ஹாஸ்பிடல்ல மேஜர் ஹார்ட் சர்ஜரி இருக்கு. நீ என்னோட அசிஸ்டண்ட் சர்ஜனா வர்ற.” என்று சொன்னவர் சிரிப்புடன் மகளின் கன்னத்தில் தட்டிக்கொடுத்துவிட்டு அவள் பதிலைக் கூட எதிர்பார்க்காமல் அறையை விட்டு வெளியேறினார்.

அங்கு நடந்ததை பார்வையாளராக இருந்து கவனித்த கீர்த்தி, “அப்போ நீ உன் அப்பா கூப்பிட்டதுக்கும் போகலையா..? எனக்கு தெரியாது. அதான் கொஞ்சம் கோவமா பேசிட்டேன். சரி விடு நாளைக்கு நம்ம மெயின் ஹாஸ்பிட்டல்லயே ரெண்டு கிரிட்டிகல் டெலிவரி கேஸ் இருக்கு.நான் உன்னை உங்க அப்பா மாதிரி எடுத்ததும் வந்து என்னோட நில்லுன்னு சொல்ல மாட்டேன் ஷான்வி. நீ ஜஸ்ட் வந்து என்ன நடக்குதுன்னு பாரு” என்று கூற,

“அம்மா நான் லேபர் ரூம்ல வர்க் பண்ணி இருக்கேன் மா. ஐ நோ இட்.” என்றவள்,

“நான் நாளைக்கு ஹாஸ்பிடல் வர மாட்டேன். ஐ ஹாவ் மை செமினார் அட் எம்.எம்.சி. சோ..” என்றவள் அன்னையை அரை வாயிலை நோக்கி கையைக் காட்ட,

“இவ்ளோ பெரிய ஹாஸ்ப்பிடல் செயின் உருவாக்கறது அவ்வளவு சுலபம் இல்ல ஷான்வி. எங்களுக்கு இருக்கிறது நீ ஒரே பொண்ணு.” என்று அன்னை வேகமாக ஏதோ கூற முனைய,

“போதும். இதையே சொல்லி தான் இன்ஜினியரிங் போக இருந்தவளை டாக்டருக்கு படிக்க அனுப்பினீங்க. ஐ ஆம் நாட் பையிங் இட் ஒன் மோர் டைம்.” என்றவள்,

“என் கரியர் என்னோட இஷ்டம். இனிமே நான் என்ன செய்யணும்ன்னு நீங்க சொல்லாதீங்க. ப்ளீஸ் இப்படி சொன்னேன்னு கொஞ்சநேரத்துக்கு முன்னாடி இந்த ரூமுக்கு வந்து அனவுன்ஸ்மெண்ட் கொடுத்துட்டு போனாரே டாக்டர் கிருஷ்ணமூர்த்தி எக்ஸ்பிரஸ் ட்ரெயின் கிட்டயும் சொல்லிடுங்க.” என்றவள் நிற்காமல் பால்கனிக்கு நடக்கலானாள்.

கீர்த்திக்கு எதையும் ஒரே ஒருமுறை தான் அடுத்தவர் விருப்பத்துக்கு விடுவது போல காட்டிக்கொள்ளப் பிடிக்கும். அதிலேயே தனது விருப்பத்தை அவர் நிராகரிக்க முடியாதபடி திணித்துவிடுவார். மகளிடம் மட்டும் அதை சற்றே தளர்த்தி இருந்தவர் இன்று அவள் பேசிய விதத்தில் அவர் எப்பொழுதும் இரண்டாவது முறைக்கு எப்படி கையாளுவாரோ அப்படி நடந்துக்கொள்ள முடிவெடுத்தவராக அவ்வறையை விட்டு வெளியேறினார் கீர்த்தி.

அன்னையின் தந்திரமோ, தந்தையின் கட்டாயமோ ஷான்வியின் எண்ணத்தை மாற்றாது என்று அவர்கள் இருவருமே அறிந்திருக்கவில்லை.

அன்றைய இரவு உணவாக கங்கம்மா வைத்திருந்த சப்பாத்தியையும் காய்கறி கூட்டையும் தட்டில் வைத்து தன் முன்னே கோபமாக அமர்ந்திருந்த சாய்சரண் முன் நீட்டினாள் ஷிவானி.

அவள் கொடுத்த தட்டை வாங்காமல் முறைத்த அவனிடம் தயக்கமான பார்வை பார்த்தவள், “மாமா உங்களுக்கு என்ன கோவமா இருந்தாலும் என்கிட்ட காட்டுங்க. ப்ளீஸ் சாப்பிடாம இருக்காதீங்க” என்று  தரையைப் பார்த்தபடி கூறினாள்.

“என்ன கோவமா? அதை உன்கிட்ட காட்டணுமா?” என்று நிதானமாக கேட்டவன்,

“ஒருநேரம் சாப்பிடலன்னா எனக்கு ஒன்னும் ஆகாது ஷிவானி. ஆனா அது உனக்கு கஷ்டமா இருக்குல்ல. அதே போல தான் எனக்கு தெரியாம நீ மட்டும் ஹாஸ்பிடல் போய்ட்டு வந்தா எனக்கும் கஷ்டமா இருக்கும். என்னை இன்னிக்கு கஷ்டப்படுத்தின தானே நீ, ஒரு தடவை நீயும் கஷ்டத்தை அனுபவி” என்று சொல்லிவிட்டு படுக்கை அறைக்குள் நுழைந்து கொண்டான்.

அவன் போவதை இயலாமையோடு பார்த்தவள், அவன் பின்னே சென்று அவனுக்கு முன்னால் நின்றாள்.

“மாமா உங்களுக்கு இன்னிக்கு பேங்க் வேலை இருந்ததுன்னு எனக்கு தெரியும் மாமா. உங்க வேலையை கெடுக்க வேண்டாம்ன்னு தான் நானே இன்னிக்கு செக்கப்புக்கு போயிட்டு வந்தேன். அடுத்த மாசம் கண்டிப்பா நீங்களே கூட்டிட்டு போங்க.”என்று கூறியவளை முறைக்க மட்டுமே சாய்சரணால் முடிந்தது.

“இனிமே இப்படி தனியா போனா உன்னை என்ன பண்ணுவேன்னு தெரியாது ஷிவானி.” என்று கண்டிக்கும் குரலில் கூறினாலும் அதில் பாசமே நிறைந்திருந்தது.

“டாக்டர் என்ன சொன்னாங்க. பேபி கிரோத் நல்லா இருக்கு தானே? உன்னோட உடம்புல உனக்கு தேவையான சத்தெல்லாம் இருக்கா? லேப்ல டெஸ்ட்க்கு கொடுத்துட்டு வந்தியா? எப்போ ரிப்போர்ட் கொடுப்பாங்க?” என்று அக்கறையாக வினவினான்.

அவனை கண்ணெடுக்காமல் கண்டவள், “மாமா எல்லாமே நல்லா தான் இருக்கு. நீங்க முதல்ல வந்து சாப்பிடுங்க” என்று அவனை கைபிடித்து ஹாலுக்கு அழைத்து வந்தாள்.

அவனும் அவள் கொடுத்த தட்டை பெற்றுக்கொண்டு அவள் வாயில் சப்பாத்தியை பிட்டு வைத்தான். கண்களில் நீர் சேர அதை வாங்கிக் கொண்டவள், அவன் அருகில் அமர்ந்து அவன் தோளில் சாய்ந்து கொண்டாள்.

“ஏன் மாமா உங்களுக்கு என் மேல கோவமே இல்லயா?” என்று கேட்க,

“உன்கிட்ட நான் ஏன் கோவிக்க போறேன்?” என்று தன் கன்னம் கொண்டு அவன் தலையில் இடித்தவன் அவள் நிமிர்ந்ததும் மீண்டும் அவள் வாயில் உணவினை வைக்க,

“அத்தை உங்களுக்கு இப்படி தானே மாமா ஊட்டி விடுவாங்க? அப்படிப்பட்ட அத்தை உங்ககிட்ட பேசாம இருக்க நான் தானே காரணம்? அப்போ கூட உங்களுக்கு என் மேல கோவம் இல்லையா?” என்று கேட்டுவிட்டு அவன் பதிலை எதிர்பார்த்தாள்.

“இங்க பாரு ஷிவானி நான் ஏற்கனவே இதுக்கு பலதடவை பதில் சொல்லிட்டேன். நான் நம்ம குடும்பத்துக்கு விளக்கம் கொடுக்க தயாரா தான் இருந்தேன். ஆனா யாரும் நான் சொல்றதை காதுல வாங்க கூட தயாரா இல்ல. அட்லீஸ்ட் அம்மாவாவது கல்யாணத்துக்கு  கோவிக்காம நம்ம கிட்ட பேசுவாங்கனு நினைச்சேன். ஆனா அவங்களும் அவங்க வீட்டுக்காரர் தான் என்னை விட முக்கியம்ன்னு சொல்லி பேசாம போயிட்டாங்க. அவங்களோட வரட்டு பிடிவாதத்துக்கு நீ எப்படி காரணமாக முடியும் ஷிவானி?” என்று உணவை விழுங்கியபடியே பேசினான்.

“மாமா மெதுவா சாப்பிடுங்க” என்று தண்ணீரை அவனிடம் கொடுத்துவிட்டு,

“நான் அன்னைக்கு சூப்பர் மார்க்கெட் போனப்போ அத்தையையும் எங்க அம்மாவையும் பார்த்தேன். எப்படியாவது பேசி புரிய வைக்கலாம்ன்னு நெனச்சா என்னைப் பார்த்தத்தும் எடுத்த பொருளைக்கூட வாங்காம அப்படியே ட்ராலில விட்டுட்டு வெளில போயிட்டாங்க. ஏன் மாமா காதலிக்கிறது அவ்ளோ பெரிய தப்பா?” என்று கேட்டவள் கண்கள் தேக்கி வைத்திருந்த குளத்தை உடைத்துக்கொண்டு கன்னத்தில் ஆறாக இறங்கியது.

சட்டென்று தட்டை மேசையில் வைத்தவன் அவளிடம் கோபத்துடன், “சும்மா அழுகாத குழந்தைக்கு நல்லது இல்லன்னு சொல்றேன். அழுதுகிட்டே இருக்க? இப்ப அவங்க பேசாததுனால நமக்கு ஏதாவது குறைஞ்சு போச்சா? இன்னிக்கு நேத்தா உன் மாமாவும் அத்தையும் என் மேல கோவமா இருக்காங்க? அவங்க சொன்னபடி நான் படிப்பை தேர்ந்தெடுக்கலன்னு நான் காலேஜ் போன காலத்துல இருந்து, தனியா பிசினஸ் பண்ணுவேன்னு அடம் பிடிச்சு கேரேஜ் வச்ச வரைக்கும் எதுல அவங்களுக்கு என் மேல கோவமில்ல?” என்று கேட்டு அவள் கண்களை துடைத்துவிட்டான்.

“மாமா அப்போ உன் மேல அவங்களுக்கு கோவத்தை விட வருத்தம் தான் இருந்தது. ஆனா இந்த கல்யாணத்துனால அவங்க உன் மேல கோவப்பட்டது மட்டும் இல்லாம உன்னையும் என்னையும் முழுசா வெறுத்துட்டாங்க மாமா” என்று அவளையும் மீறி விம்மியபடி கூறினாள்.

“ஹே ஷிவானி.. ப்ளீஸ் டா அழாத. ஆமா உன்னை நான் சரியா கவனிக்கலையா? நார்மலா ப்ரெக்னன்ட் பொண்ணுங்களுக்கு அம்மா கூட இருக்கணும்ன்னு ஆசை இருக்கும்ன்னு கங்கம்மா சொன்னாங்க. ஒருவேளை உனக்கு அத்தை உன்னை கவனிச்சுக்கணும்னு தோணுதா?” என்று  கரிசனமாக அவள் தலையை தடவிக் கொடுத்தான்.

“ம்ம்” என்று கண்ணீருடன் தலையசைத்தவள், “நீங்க என்னை நல்லா தான் மாமா பார்த்துக்கறீங்க. ஆனாலும் எனக்கு.. எனக்கு அம்மா மடில படுத்துக்கணும் போல இருக்கு” என்று கூறியவள் முகத்தை ஊன்றி கவனித்தான் சரண்.

மெல்ல ஷிவானியை தன் மடியில் தலைவைத்து படுக்க வைத்தவன் அவளது  கன்னத்தில் மிருதுவாக தட்டிக்கொடுக்க, தன்னை அறியாது உறங்கிப்போனாள் ஷிவானி.

எப்பொழுதும் அத்தையுடன் சண்டைக்கு நிற்கும் ஷிவானியைப் பார்த்துப் பழகிய அவனுக்கு, இப்பொழுது அன்னையின் மடிக்காக குழந்தை போல ஏங்கும் ஷிவானி புதியவளாகத் தோன்றினாள்.

தான் அவளை வீட்டை விட்டு அழைத்து வந்தபோது கூட வீட்டினர் யாரையும் எதற்கும் எண்ணாது இருந்தவள் பிரசவ நேரம் நெருங்க அவள் அன்னைக்காக ஏங்குவதை கண்டவன் மனம் அவளுக்கு உதவ முடியாத தன் நிலையை எண்ணி உள்ளே நொந்தது.

ஏற்கனவே ஒருமுறை அவர்களிடம் விளக்கச் சென்றவனை வாயிலில் நிறுத்தி தந்தையும் மாமாவும் பேசிய பேச்சுக்கள் அவனது வாழ்நாளில் மறக்காது. மறுபடி ஷிவானிக்காகவே என்றாலும் அவனால் அவர்கள் முன் சென்று நிற்க முடியாது என்று அவன் மனம் உறுதியாக நினைத்தது.