உறவாக அன்பில் வாழ – 16
Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels
தன் அறைக்கு திரும்பிய ஷான்விக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை.
திருமணம் என்று சொன்னதில் இருந்தே மூளை மரத்துப் போயிருக்க, சரணின் விஷயம் அவளை முழுவதுமாக சாய்த்து விட்டது.
தந்தையின் அதிரடி முடிவும், தாயின் முகத்திருப்பலும் அவளுக்கு மேலும் வேதனை கொடுக்க, சிவபாலன் சற்று அழுத்திக் கேட்டால் தந்தை திருமணத்தை ஒத்தி வைப்பார் என்று நினைத்து அவனது எண்ணுக்கு அழைப்பு விடுத்தாள்.
“அட படிப்பே தான் என் நெனப்பு ன்னு சாயங்காலம் டயலாக் பேசிட்டு நைட் போன் பண்ணுற ஷான். என்ன மனசுல என் நினைப்பா?” என்று நேரம் காலம் தெரியாமல் டயலாக் பேசி அவளை கடுப்படித்தான்.
“மிஸ்டர் சிவபாலன், அப்பா அடுத்த மாசம் கல்யாணம்ன்னு தேதி முடிவு பண்ணி உங்க அப்பா கிட்ட பேசிட்டாரு. நீங்க இன்னும் கொஞ்சம் அழுத்தி கல்யாணத்தை தள்ளி வைக்க சொல்ல முடியுமா?” என்று பொறுமை காட்டி பேசினாள் ஷான்வி.
“அப்படியா? நான் உங்க அப்பா கிட்ட பேசினப்ப யோசிச்சு சொல்றேன்னு சொன்னார். ஆனா இப்படி முடிவு எடுத்திருக்கார்ன்னா ஏதாவது காரணம் இருக்கும். என்னால இதுக்கு மேல பிரஷர் கொடுக்க முடியாது ஷான்வி.” என்று சாதாரணமாக கூறினான்.
“ஏங்க இது நம்ம லைஃப். நாம எதுவுமே சொல்ல கூடாதா? இப்போவே அவர் என்ன சொன்னாலும் ஓக்கேன்னு சொல்றீங்க நாளைக்கு கல்யாணம் ஆனதும் என்ன பண்ணுவிங்க? அப்பவும் எல்லா முடிவும் அவர் தான் எடுப்பாரா?” என்று கண்மண் தெரியாத கோவத்தில் அவள் வினவ,
“எஸ் அஃப்கோர்ஸ். அவர் தான் முடிவு பண்ணுவாரு. நாம எல்லாரும் ஒண்ணா ஒரே வீட்டுல இருக்கும்போது பெரியவங்களை சங்கடப்படுத்த முடியுமா? அதுவும் இல்லாம இப்போ உங்க அப்பாவுக்கு அடுத்த இடத்துல அவர் என்னை நிறுத்தும்போது நான் அவர் என்ன சொன்னாலும் கேட்டு தான் ஆகணும். கேட்கவும் செய்வேன்.” என்று சிவபாலன் குறிப்பிட,
“என்ன எல்லாரும் ஒரே வீட்லயா? அப்ப கல்யாணம் முடிஞ்சா கோயம்புத்தூர் போகற ஐடியால நீங்க இல்லையா? ஒரேடியா இல்லன்னாலும் உங்க அப்பா அண்ணன் எல்லாரும் இருக்காங்கல்ல.” என்று அவனிடம் கேள்வி எழுப்ப,
“சம்பரதாயத்துக்கு வேணா அங்க போயிட்டு வர முடியும். மத்தபடி நாம எப்பவும் சென்னையில தான். நீ உன் அம்மா அப்பா கூடவே தான் இருக்கப்போறன்னு தெரிஞ்சு சந்தோஷப்படுவன்னு நெனச்சேன். நீ என்ன என் அப்பா அண்ணன்னு பேசிட்டு இருக்க. அவங்க முக்கியம் தான். ஆனா என்னை அவரோட இடத்துல வச்சு அழகு பார்க்க நினைக்கிற கிருஷ்ணமூர்த்தி அங்கிள் தான் ரொம்ப இம்பார்டன்ட்.” என்று சொன்னதும் மொத்தமாக மனதுக்குள் மடிந்திருந்தாள் ஷான்வி
இவன் இப்படி அடிமாடாக வந்திருப்பான் என்று அவள் எண்ணவே இல்லை. சுகந்தி அவனைப்பற்றி நல்ல விதமாக கூற, சரண் அவளுக்கு கிடைக்க வாய்ப்பில்லை என்று நூறு சதவிகிதம் தெரிந்த பின், தன் தாய் தந்தை தங்கள் எண்ணத்தை மாற்றிகொள்ளப்போவது இல்லை என்று தெளிவாக புரிந்த பின், இவனுடனான வாழ்க்கையை ஜீரணித்துக்கொள்ள முடியுமா என்று மனதிற்குள் கேள்விகள் எழுந்த வண்ணம் இருக்க,
அதற்கு சாத்தியமே இல்லை என்ற பதிலை கொடுத்துவிட்டான் சிவபாலன். இத்தனை ஆண்டுகளில் ஒருநாளும் இந்த வீட்டில் ஷான்வி மகிழ்ச்சியோடும் அன்னை தந்தையோடும் இணைந்து இருந்ததில்லை.
உறவென்று யாரும் வருவதும் இல்லை. திருமண பந்ததிலாவது தான் ஒரு அழகான குடும்பத்திற்கு சென்று அன்போடு வாழ அவளுக்கு இருந்த ஆசையில் அவர்கள் மரண அடி அடித்துவிட்டது அவளுக்கு உயிர் வரை வலித்தது.
இனி சிவபாலனுடனான திருமணத்துக்கு வாய்ப்பே இல்லை. வேறு வழி என்று மனம் சிந்திக்க, கடவுள் கைவிட மாட்டான். கண்டிப்பாக தனக்கு ஒரு வழி பிறக்கும் என்று மனதில் நினைத்தபடி படுக்கையில் விழுந்தவளுக்கு உறக்கம் வரவில்லை.
அடுத்து வந்த இரண்டு நாட்கள் அவள் யோசனையோடு சுற்றிக்கொண்டிருந்தாள். சரணை காணக்கூடாது என்பதற்காகவே அந்த பக்கம் செல்லாமல் அவள் கடந்து போக,
அன்று மருத்துவமனையில் ஒரே பரபரப்பு. வேகமாக சத்தம் கேட்ட இடத்துக்கு ஷான்வி வர, அங்கே ஷியாம் சரணுடன் சண்டை போட்டுக்கொண்டிருந்தான்.
“ஏன் மாமா இப்படி பண்ணினீங்க? ஏன்? அக்கா உங்க கூட நல்லா இருக்கான்னு அன்னைக்கு தான் சந்தோஷமா நெனச்சுகிட்டேன். நீங்க வேற யார் கூடவோ ரிலேஷன்ஷிப்ல இருக்கீங்க. எனக்கு தெரியும். இல்லன்னா அக்கா ஏன் இப்படி பண்ண போறா?” என்று அவன் கத்த ஷான்விக்கு மனதிற்குள் அவமானம் பிடுங்கித் தின்றது.
அவன் சொல்வது அவளைத் தானோ என்று நினைக்கவே உடல் கூசியது. ஆனால் அடுத்த நிமிடம் பளார் என்று சத்தம் உணர்ந்து சுற்றுப்புறம் நோக்கினாள் ஷான்வி.
“ரொம்ப வாய் பேசாத ஷியாம். நீ சின்ன பையன். அக்காவை பார்க்கணும்ன்னு அடம் பிடிச்சதால கூட்டிட்டு வந்தேன்” என்று சொன்னது அவனது தந்தை சமரன்.
தாய் சித்ரா வாயில் புடவை தலைப்பை பொத்தியபடி அழுது கொண்டிருக்க,
“அப்போ என் அக்கா எங்க? பெத்த குழந்தையை கூட விட்டுட்டு இப்படி போயிருக்கான்னா இவரு அவளை ஏதோ செஞ்சிருக்கார்ன்னு தானே அர்த்தம்?” என்று சினத்துடன் வினவினான் சிறியவன்.
அவன் கூற்றைக் கேட்ட ஷான்விக்கு ஷிவானி எங்கோ சொல்லாமல் சென்றுவிட்டாள் என்பது மட்டும் புரிந்தது.
“ஏன் அவன் ஒன்னுமே செய்யலன்னு கூட உன் அக்கா போயிருக்கலாம்ல?” என்று கேட்டார் விநாயகம்.
“என்ன பெரிய மாமா இத்தனை நாள் இல்லாம மாமாவுக்கு சப்போர்ட்டுக்கு வர்றீங்களா?” என்று அவன் எகிற,
“ஆமா டா நானும் உன்னை மாதிரி கோவப்பட்டு தான் எல்லாத்தையும் கெடுத்தேன். இப்பவும் அது நடக்க கூடாதுன்னு தான் உன்னை அமைதியா இருக்க சொல்றேன். கொஞ்சம் பொறு.” என்று அவனை அவர் சமாதானம் செய்ய, வேகமாக அங்கே வந்த கீர்த்தி,
‘என்ன சார் இதெல்லாம்? பேஷண்ட் சொல்லாம கொள்ளலாம ஹாஸ்ப்பிடலை விட்டு போயிருக்காங்க. நீங்க இத்தனை பேர் இருக்கீங்க. இப்போ உங்களுக்குள்ள அடிச்சுக்கறீங்க?” என்று கோபம் கொள்ள, சரண் மிகுந்த கோபத்துடன்,
“டாக்டர் உண்மையா நாங்க உங்க மேல கோவப்படணும், ரெண்டு நாளா அப்சர்வேஷன்னு சொல்லி அவளை பார்க்கவே நீங்க விடலை. வெளில சும்மாவே எத்தனை பேர் இருக்கறதுனு எல்லாரையும் வீட்டுக்கு அனுப்பிட்டு நான் மட்டும் தான் இருந்தேன். உங்க நர்ஸ் வந்து ஏதோ இன்ஜெக்ஷன் வாங்கிட்டு வாங்கன்னு சீட்டு கொடுக்கவும் தான் கீழ பார்மசி வரைக்கும் போனேன். வந்து பார்த்தா ஷிவானி பெட்ல இல்ல, அவங்களா வெளில போயிட்டாங்கன்னு உங்க நர்ஸ் சொல்றாங்க. என்ன நெனைச்சுட்டு இருக்கீங்க? நான் மூர்த்தி டாக்டர் மேல உள்ள மரியாதைக்காக அமைதியா இருக்கேன். இல்லன்னா இந்நேரம் போலீசுக்கு போயிருப்பேன்.” என்று சரண் குதிக்க,
அன்னைக்கு உதவ ஷான்வி முன்னே வந்தாள்.
“இங்க பாருங்க சரண், ஷிவானிக்கு ஆபரேஷன் முடிஞ்சு மூணு நாள் ஆகுது. அவங்களை இப்போ நடக்க ட்ரெயின் பண்ணுவாங்க. மே பி அவங்க வெளில நடக்கறதா நர்ஸ் நெனச்சிருக்கலாம். அவங்க பக்கத்துல கோவிலுக்கோ இல்ல அவங்க பேபியை பார்க்க கூட தேடி போயிருக்கலாம்ல. அதுக்குள்ள ஏன் பெரிய வார்த்தையெல்லாம் பேசுறீங்க?” என்று அவனிடம் சமாதானம் பேச,
அவனுக்கு ஷான்வியிடம் கோபம் கொள்ள இயலவில்லை. அவன் சற்று அமைதி காக்க, ஷியாமோ,
“ஹே.. அது நீங்க தானே? மூணு நாள் முன்னாடி பக்கத்துல இருந்த காபி ஷாப்ல இவர் கையை பிடிச்சிட்டு பேசிட்டு இருந்தது. நான் பார்த்தேன். அப்பா நான் சொல்றதை நம்புங்க பா. இவங்க தான் பா அது. மாமாவும் இவங்களுமா ஏதோ டிராமா பண்றாங்க பா. நம்ம அக்கா பா. அவளை என்னவோ பண்ணிட்டாங்க பா.” என்று அவன் அலற, சரணுக்கு வந்த கோவத்துக்கு அளவே இல்லை.
ஓங்கி ஷியாமின் வலது கன்னத்தில் ஒரு அறை விட்டான்.
“இனி ஒரு வார்த்தை பேசினா கொன்னுடுவேன் ராஸ்கல். யார் டா? என்ன டா பண்ணினாங்க உன் அக்காவை? நான் ஷான்வியை காதலிக்கிறேன். அதுனால நாங்க அன்னைக்கு காபி ஷாப்ல பேசிட்டு இருந்தோம். அதுக்கும் உன் அக்கா காணாம போனதுக்கும் என்ன டா சம்மந்தம்?” என்று கேட்க,
வேகமாக அவனை தன் புறம் திருப்பிய சமரன், “என்ன சொல்ற சரண்? நீ இந்த பொண்ணை காதலிக்கிறியா? அப்போ என் பொண்ணோட வாழ்க்கை.” என்று கண்ணீரோடு வினவினார்.
“அதை அவ யார் கிட்ட தொலைச்சாளோ அங்க கேட்டு அவளை வாழ வைக்கலாம் அண்ணா” என்ற கணீர் குரல் அவர்கள் பின்னாலிருந்து கேட்க, அங்கே கையில் ஒரு காகித்துடன் நின்றிருந்தார் முத்துலட்சுமி.
“என் பையனுக்கும் நம்ம ஷிவானிக்கும் கல்யாணம் ஆனதா நாம நெனைச்சுட்டு இருக்கோம். ஆனா அப்படி ஒன்னு நடக்கவே இல்ல” என்று அவர் கூற,
“அப்போ இந்த குழந்தை?” என்று கேட்ட சித்ராவுக்கு மயக்கம் வராத குறை தான்.
முத்துலட்சுமி சரண் அருகில் வந்து, “இந்தா ஷிவானி உனக்கு லெட்டர் எழுதி வச்சிருக்கா. படி” என்று கொடுக்க,
அதை வேகமாக வாங்கினான் ஷியாம்.
“மாமா. நீ எனக்காக நிறைய செஞ்சுட்ட. ஏன் அன்னைக்கு அவ்ளோ அவசரமா எங்கேயோ கிளம்பினேன்னு கேட்டல்ல. நான் அவனைப் பார்க்கத்தான் மாமா கிளம்பினேன். இப்போவும் அவனை பார்க்க தான் போறேன். அவன் செஞ்சது நியாயமானு அவன் முகத்தை பார்த்து கேட்கணும் மாமா. ஆனா அவன் அதுக்குள்ள என்னை போன் பண்ணி தப்பா கேட்டுட்டான் மாமா. அதான் நேர்ல கிளம்பிட்டேன். தப்பு பண்ணின என்னையே உன் கண்ணு மாதிரி பார்த்துக்கிட்ட. நான் வர்ற வரைக்கும் என் குழந்தையை பார்த்துக்க மாட்டியா? நான் சீக்கிரமா வந்துர்றேன் மாமா” என்று அந்த கடிதம் முடிந்திருந்தது.
சரண் தலையில் கைவைத்து அமர்ந்து கொண்டான்.
“பைத்தியக்காரி. பைத்தியக்காரி. நான் படிச்சு படிச்சு சொன்னேன். அவனை தேடி போக வேண்டான்னு. என் பேச்சை மீறி போயிருக்கா.” என்று கோபத்தில் கத்த,
“டேய் என் பொண்ணு யாரை தேடி டா போயிருக்கா? அன்னைக்கு அந்த கோவில்ல என்ன டா நடந்துச்சு? என் பொண்ணு எப்படி டா கர்ப்பமானா? சொல்லு சரண் சொல்லு” என்று சித்ரா அவனைப் பிடித்து உலுக்க,
“அப்பாவும் மாமாவும் பிஸ்னஸ்ல பிசி. எங்கம்மா கோவில் குளம்ன்னு இருக்க, நீங்க மாமாவுக்கு வேண்டியதை பார்த்துட்டு வீட்டுல இருந்தாலும் அதிகம் ஷிவானியை கவனிக்கவே இல்ல. அவளுக்கு நானும் கேரேஜ் ஆரம்பிச்சு பிஸியா ஆனதுல இருந்து அவளோட ஒரே சந்தோஷம் செந்தூரன் மட்டும் தான்.
கிட்டத்தட்ட மூணு வருஷமா ரெண்டு பேரும் லவ் பண்ணிட்டு இருந்திருக்காங்க. அவன் சனி ஞாயிறு வரும்போதெல்லாம் சனிக்கிழமை அவளோட வெளில சுத்திட்டு ஞாயிறு நாங்க மூணு பேரும் போகற மாதிரி பிளான் போட்டு இருந்திருக்கான்.
நான் ஒரு தடவை வண்டி டெலிவரி கொடுக்க மதுரை வரைக்கும் போகற மாதிரி இருந்துச்சு. அந்த வாரம் நானும் இல்லன்னு சனிக்கிழமையே அவளை வண்டில வச்சு ட்ரிப்ன்னு பெங்களூரு கூட்டிட்டு போயிருக்கான்.
எல்லாம் நல்லா தான் இருந்திருக்கு அவங்க ரெண்டுபேரும் பப்புக்கு போகற வரைக்கும்.
அங்க இருந்த அவனோட பிரெண்ட்ஸ் அவங்களுக்கு தெரியாம ஆரஞ்சு ஜூஸுக்கு பதிலா வோட்காவை வைக்க, இன்னொரு பொடி கேஸ் அதுல என்னத்தையோ வேற கலந்துட்டான்.
ரெண்டு பேரும் கொஞ்சம் குடிச்சதும் ஏதோ சரியில்லன்னு புரிஞ்சு அவனோட வீட்டுக்கு போயிட்டாங்க. ஆனா உள்ள போன பிசாசு அவங்களை கொஞ்சம் கொஞ்சமா நிலை இழக்க வச்சிருக்கு. அதுல ஷிவானி தன்னை முழுசா செந்தூரன் கிட்ட இழந்துட்டா. ஆனா அது அவனுக்கு தெரியறதுக்கு முன்னாடியே அவ தெளிஞ்சதுனால நிலைமை புரிஞ்சு அவன்கிட்ட கூட சொல்லாம தானே சென்னை கிளம்பி வந்துட்டா. அதுக்கு அப்பறம் அவனோட வெளிலையும் போகலை.
அடுத்த ரெண்டு மாசத்துல அவ கர்ப்பமா இருக்கிறது தெரிஞ்சதும் அவ வந்து நின்னது என்கிட்ட தான். அப்போ தான் அவங்க காதல், ட்ரிப் எல்லாத்தையும் சொன்னா. எனக்கு செந்தூரனோட அப்பா கிட்ட நல்ல பேர் இருந்தாலும் நம்ம வீட்ல பொண்ணு எடுப்பாரான்னு சந்தேகப்பட்டு செந்தூரன் கிட்ட அவளை கல்யாணம் பண்ணிக்க சொல்லி கேட்டேன். அப்பவும் நாங்க குழந்தையை பத்தி ஒன்னும் சொல்லாம ‘அவசரம். கல்யாணம் நடந்தே ஆகணும்’ னு சொன்னதும் அவனும் சரின்னு சொல்லிட்டான்.
ஏன்னா அவனும் ஷிவானியை அந்த அளவுக்கு விரும்பினான். எல்லாமே நல்லா தான் இருந்தது ராஜராஜன் அங்கிள் கோவிலுக்கு வர்ற வரைக்கும்.
அங்கே மணக்கோலத்துல ஷிவானியையும் செந்தூரனையும் பார்த்தவருக்கு கோவம் வந்துடுச்சு. அவர் கம்பெனியை வளைக்க நம்ம வீட்டு பொண்ணை அவங்க பையனுக்கு காட்டி மடக்கிட்டோம்ன்னு அவர் பேச, நான் கோவப்பட்டு கத்த, அவர் செந்தூரனை கையல பிடிச்சுக்கிட்டு கிளம்பிட்டார்.
ஷிவானிக்கு ‘குழந்தை வயித்துல இருக்கே, இவன் நம்மளை விட்டுட்டு அப்பா பின்னாடி போயிட்டானே’ னு மனசு கலங்கி அழ நான் அவளை சமாதானம் பண்ணிட்டு இருக்கும் போது தான் நீங்க எல்லாரும் கோவிலுக்கு வந்தீங்க.
வந்ததும் என்னையும் ஷிவானியையும் சேர்த்து வச்சு கண்டபடி பேசினீங்க. நாங்க அப்படி செய்வோமா? அதுக்கு ஏதாவது காரணம் இருக்குமான்னு நீங்க யோசிக்கவே இல்ல. எனக்கென்ன புரியலன்னா, அவ்ளோ தூரம் அவளை லவ் பண்ணிட்டு செந்தூரன் அவங்க அப்பா பேச்சு கேட்டு எப்படி லண்டன் ப்ராஜெக்ட் எடுத்துக்கிட்டு அங்க போனான்? போன மாசம் திரும்பி வந்தவன் நேரா என்னை வந்து பார்க்காம, அவங்க அப்பாவை வச்சு என்னை வீட்டுக்கு வர வைக்க ஏன் அவளோ ட்ரை பண்ணினான்.. எனக்கு ஒன்னும் புரியல” என்று சரண் கூற,
“ஐயோ ஐயோ” என்று சமரன் தலையில் அடித்துக்கொண்டு அழ ஆரம்பித்தார். யாருக்கும் அவரின் அழுகைக்கான காரணம் விளங்கவில்லை.
சரண் சொன்னத்தைக் கேட்டு ஷான்வி மனதில் மழை அடித்தது போல ஈரம் பரப்பி இருக்க, பெரியவர் அழும் காரணம் புரியாது திகைத்தாள்.
“நான் தான் மாப்ள இப்படி பண்ணிட்டேன். என்னால தான். அன்னைக்கு அந்த ராஜராஜன் போன் பண்ணி, ‘என்னங்கடா பிஸ்னஸ்ல என்னை தோற்கடிக்காம குறுக்கு வழி தேடுறீங்களா? கோவிலுக்கு போய் பாருங்க உங்க பொண்ணு எப்படி நிக்கிறான்னு உங்க எண்ணம் எல்லாம் மண்ணா போச்சு. சரணுக்கு இதுல சம்மந்தம் இருக்கும் ன்னு நான் நினைக்கவே இல்ல’ ன்னு சொல்லவும் தான் நாங்க எல்லாரும் கிளம்பி கோவிலுக்கு வந்தோம்.
அங்க நீங்க ஒருத்தரை ஒருவர் அணைச்சு நிக்கிறத்தையும் அவளோட பட்டு புடவை உன்னோட வெள்ளை சட்டை எல்லாம் வச்சு உங்களுக்கு கல்யாணம் னு நெனச்சு தான் நாங்க திட்டிட்டு இருந்தோம். மச்சான் உங்களை வீட்டுக்கு வரவேண்டாம்ன்னு சொல்லுவார்ன்னு நானும் எதிர்பார்க்கல. எப்படியோ நீங்க நல்லபடியா வாழ்ந்துக்குவிங்கனு நம்பி தான் நான் என் நண்பன் பின்னாடியே வந்துட்டேன்.
ஆனாலும் ராஜராஜன் எங்களை பேசியதை என்னால பொறுத்துக்க முடியல. அதுனால அவனுக்கு போன் பண்ணி, ‘உன் கம்பெனிக்கு இதுக்கும் என்ன டா சம்மந்தம்? என்ன என் பொண்ணு நிலைமையை பார்க்கணும்? அவ என் மருமகனை ஜாம்ஜாம்ன்னு கல்யாணம் பண்ணிக்கிட்டா டா. நான் அட்சதை போட்டுட்டு தான் வந்தேன். இனிமே எங்க குடும்ப விவகாரத்துல தலையிடாத’ன்னு சொல்லி பேசினேன்.” என்று சமரன் கூற,
“ஓ அதுனால தான் அந்த அங்கிள் எப்பவும் போலவே என்கிட்ட பேசிட்டு இருந்தாரா? அவனும் நான் ஷிவானியை கல்யாணம் பண்ணிக்கிட்டதா நெனச்சு தான் வெளிநாடு போனானா? ஐயோ.. எவ்ளோ குழப்பம்?” என்று தலையில் கைவைத்து அமர,
“விடுங்க சரண். அதான் எல்லாம் இப்போ கிளியரா ஆயிடுச்சே. ஷிவானி இப்போ செந்தூரன் அண்ணாவை தேடி போயிருக்காங்க. அவருக்கு போன் பண்ணினா அவங்க எங்கன்னு தெரிஞ்சுடும். அப்பறம் எல்லாத்தையும் பேசி சால்வ் பண்ணிக்கலாம்.” என்று ஷான்வி அவன் தோளை ஆதரவாக பற்றி கூற,
எழுந்து அவளை தன் பக்கம் இழுத்து இறுக்கமாக அணைத்துக்கொண்டான்.
“எங்க உன்னை மிஸ் பண்ணிடுவேனோனு ரொம்ப பயந்துட்டேன் ஷானுமா. எப்படியாவது செந்தூரனுக்கு எல்லாத்தையும் புரியவச்சு. ராஜராஜன் அங்கிளை சமாதானம் பண்ணிட்டா இந்த பிரச்சினை எல்லாம் முடிஞ்சிரும்.” என்று அவன் கூற,
“இதை முன்னாடியே எங்க கிட்ட நீங்க சொல்லி இருக்கலாம் சரண்.” என்று முத்துலட்சுமி கூற,
“எப்படி மா? அவ ஏற்கனவே கர்ப்பம். தப்பு பண்ணிட்டேன் மாமா, தப்பு பண்ணிட்டேன் மாமான்னு அழுதுகிட்டே இருப்பா. நான் அதுனால தான் யாருக்கும் தெரியாம அவனுக்கு கல்யாணம் பண்ணி வைக்க ஏற்பாடு பண்ணினேன். இப்படியெல்லாம் நடக்கும்ன்னு நான் மட்டும் கனவா கண்டேன். நீங்களும் தான் அன்னைக்கு பொறுமையாவா நடந்துகிட்டீங்க? எங்க மேல துளி நம்பிக்கை இல்லாதவங்க கிட்ட எப்படி நம்பி அவ்ளோ பெரிய விஷயத்தை சொல்றது? ஒருவேளை ராஜராஜன் அங்கிள் ஏதாவது பேசுவார்ன்னு நெனச்சு நீங்க குழந்தையை கலைக்க சொல்லிடுங்களோன்னு அவளுக்கு அவ்ளோ பயம். அதான் உங்களுக்கு தெரியாம செஞ்சேன்.
இப்போவாவது அந்த அங்கிள் கிட்ட பேசுவிங்களா? உங்க பொண்ணு வாழ்க்கை முக்கியமா இல்ல உங்க பிஸ்னஸ் பகை தான் முக்கியமா?” என்று கோபத்துடன் சரண் வினவ,
“கண்டிப்பா நமக்கு ஷிவானி வாழ்க்கை தான் பா முக்கியம்.” என்று நால்வரும் ஒரே குரலில் கூறினார்
அந்த குடும்பத்தில் இருந்த அன்பைக் கண்டு ஷான்வி வியந்தாள். தனக்கும் அந்த கூட்டில் இடம் கிடைக்கப் போகிறது என்று மனதிற்குள் அவள் மகிழ்ந்திருக்க
அவள் கையை பற்றி தரதரவென்று இழுத்துக்கொண்டு தன் அறை நோக்கி சென்றார் கீர்த்தி.
தன் தாய் தந்தை சிவபாலன் அனைவரையும் மறந்து சில நேரத்தில் சரணுடன் அவள் மனதார வாழத் துவங்கி விட அன்னையின் கோபத்தைக் கண்டு உள்ளே நடுங்கியவளாக,
“சரண் சரண்” என்று அவனை துணைக்கு அழைத்தபடி அன்னையின் இழுப்புக்கு எதிர்ப்பு காட்டினாள்.