உறவாக அன்பில் வாழ – 13

பூங்குவியல் போல அள்ளி எடுக்க வேண்டிய அந்த புது உயிரை மிகவும் சிரமப்பட்டு காப்பாற்றினார்கள் கீர்த்தியும் அவரது இளநிலை மருத்துவர்களும்.

குழந்தையை துடைத்து எடுத்த சுகந்தி முதலில் எப்பொழுதும் கீர்த்தியிடம் தான் கொடுப்பார். அதற்காக அவர் எடுத்துவர, அன்னைக்கு முன்னே ஓடிச்சென்று அப்பெண்குழந்தையை கையில் வாங்கி இருந்தாள் ஷான்வி.

குழந்தையை ஏந்தியதும் அவள் உள்ளமெல்லாம் சொல்லத்தெரியாத பரவசம். அவள் சரணிடம் உணரும் அதிர்வை அக்குழந்தையிடம் அவளால் உணரமுடியவில்லை. உள்ளுணர்வு இது அவன் குழந்தை இல்லை என்று அடித்துச் சொல்லியது. காதல் கொண்ட மனம் சரணிடம் குழந்தையை காட்டி அவன் வருத்ததைப் போக்க நினைத்தது.

ஆனால் கீர்த்தி அவள் குழந்தையை வாங்கியதும் யோசனையாகப் பார்த்தவர், “சுகந்தி இந்த பொண்ணோட ஹஸ்பண்ட் எல்லா பேப்பர்லயும் சைன் பண்ணிட்டாரு தானே? குழந்தை அண்டர் வெயிட். இன்குபேட்டர்ல வைக்கணும்.” என்று சொல்லிக்கொண்டிருக்க,

பக்கத்தில் இருந்த கோப்பில் சரண் கையெழுத்து போட்ட காகிதத்தை சரி பார்த்த சுகந்தி, “இதோ மேடம். எல்லாமே வாங்கியாச்சு. அதுவுமில்லாம அந்த பொண்ணு கீழ வேற விழுந்துடுச்சு இல்லையா சோ சேஃப்டிக்கு எல்லா டாகுமெண்ட்லயும் சைன் வாங்கிட்டேன் டாக்டர்.” என்று கூற,

குழந்தையை அன்னை கையில் கொடுத்த ஷான்வி வேகமாக சுகந்தி கையில் இருந்த கோப்பை பிடுங்கி பார்வையை அதில் ஓடவிட்டாள்.

அவள் உலகம் அப்படியே நின்று போனது. அவள் தலையின் மீதிருந்த வானம் இடிந்து அவள் மேல் விழுந்தது போல பிரமை ஏற்பட்டது அவளுக்கு. சரண் எல்லா இடத்திலும் கணவர் என்ற இடத்தில் கையெழுத்து போட்டிருந்தான்.

மெல்ல கோப்பை சுகந்தி கையில் கொடுத்தவள் உணர்வுகளை இழந்தவளாக அறுவை சிகிச்சை அறையை விட்டு வெளியே வந்தாள்.

நேராக தன் அறைக்கு சென்றவள் கண்களில் இருந்த கண்ணீரை மறைக்க படாதபாடு பட்டுப்போனாள்.

குழந்தையை வாங்கிய போது கூட அவனை நம்பினாள். ஆனால் அந்த கையெழுத்துக்களை பார்த்ததும் இனி அவளுக்கு நம்பிக்கை இருந்தால் உலகம் அவளைக் கண்டு சிரித்துவிடும். அவளது டெஸ்கில் தலையை கவிழ்த்தி அமர்ந்தவளுக்கு இனி என்ன? என்ற கேள்வி முன் வந்து நிற்க யோசிக்க இயலாதவளாக கண்களை மூடிக்கொண்டு இருந்தாள்.

அவளது அறைக்கதவு தட்டப்பட, எழுந்து பார்க்க பிடிக்காதவளாக அப்படியே இருந்தாள்.

பதில் வராததால் அவள் இல்லை என்று நினைத்து அவளிடம் கொடுக்க வேண்டிய
ரிபோர்டை உள்ளே வைக்க வந்தான் சிவபாலன்.

அவளைக் கண்டதும் அவள் அமர்ந்த நிலையில் உறங்குவதாக நினைத்தவன்,

“என்ன எப்பார்த்ததாலும் தூங்கிட்டே இருக்காங்க?” என்று வாய்விட்டு கூறிவிட, கண்ணீரை துடைத்துக்கொண்டு எழுந்தவள்,

“ஹூ ஆர் யூ?” என்றாள் கடுமையாக.

எப்பொழுதும் கடுமையாக பேசிப்பழகாத ஷான்விக்கு தன் காதல் கேலிக்கூத்தாகிப் போன கோபம் அவளை அந்த நிமிடம் கடுமையாக்கி இருந்தது.

“சாரி நான் ரிபோர்டை வைக்க வந்தேன். நீங்க தூங்கறீங்கன்னு நெனச்சுட்டேன்.” என்று நிதானமாக பதில் கூறிய சிவபாலனை கூர்ந்து பார்த்தவள் அவனது ஐ.டி கார்டில் இருந்த பெயரைக் கண்டதும் அவளது நிலை பொட்டில் அறைந்தது போல புரிந்தது.

“வச்சாச்சா? கிளம்புங்க” என்று சொல்லிவிட்டு தன் மேஜையை குடைய ஆரம்பித்தாள்.

ஆனால் சிவபாலனுக்கு அவளுடன் பேசும் ஆர்வம் இருக்க, “நான் உங்களை மீட் பண்ண ரெண்டு நாளா ட்ரை பண்ணிட்டு இருக்கேன்” என்று பேச்சை வளர்க்க,

“எக்ஸ்கியூஸ் மீ.. இது வேலை நேரம். போய் ஏதாவது வேலை இருந்தா பாருங்க. உங்களுக்கு இல்லன்னாலும் எனக்கு இருக்கு” என்று ஏதோ ஒரு மருத்துவ அறிக்கையை எடுத்து வைத்து அவள் காட்ட, சிவபாலன் ஒரு தோள் குலுக்கலுடன் அங்கிருந்து அகன்றான்.

அவன் அந்த இடத்தில் இருந்து கிளம்பியதும் தான் ஷான்விக்கு நிம்மதியாக மூச்சு விட முடிந்தது. மீண்டும் தொய்வாக அமர்ந்தாள்.

கீழே சரணின் நிலையோ ஷான்வியைப் பற்றியே சிந்தனையே இல்லாமல் ஷிவானியின் நிலை மட்டுமே கவனத்தில் இருந்தது. வீட்டிற்கு அழைத்து சொல்லக்கூட தோன்றாதவனாக அமர்ந்திருக்க, கங்கம்மா அவனிடம் சொல்லிவிட்டு வீட்டிற்கு சென்று ஷிவானிக்கும் குழந்தைக்கும் தேவைப்படும் பொருட்களை எடுத்து வர சென்றிருந்தார்.

செந்தில் வேகமாக மருத்துவமனைக்குள் நுழைந்தவன், சரண் அமர்ந்திருப்பதைக் கண்டு அவனிடம் ஓடி வந்தான்.

“அண்ணா என்னாச்சு? குழந்தை பிறந்துடுச்சா?” என்று கேட்க,

இன்னும் அவனிடம் கீர்த்தி எதுவும் தெரிவிக்காததால் தவிப்புடன் அமர்ந்திருந்தான் சரண்.

“தெரியல செந்தில்” என்று சொன்னவனுக்கு ஆறுதலாக யாராவது தோள் தர மாட்டார்களா என்று இருந்த வேதனைக்கு செந்திலின் அருகாமை மருந்தாக இருந்தது.

கீர்த்தி அறுவை சிகிச்சை முடிந்து வந்தவர், “சரண் பேபி என்.ஐ.சி.யூல இருக்கும். குறை பிரசவம் இல்லையா? பேபிக்கு வெயிட் கம்மி. இன்குபேட்டர்ல இருக்கணும். ஷிவானியை கொஞ்ச நேரம் கழிச்சு ரூமுக்கு மாத்திடுவாங்க. அவங்களுக்கு அப்பறமா எக்ஸ்ரே எடுத்து பார்த்துட்டு எல்லாம் ஓகே னா அடுத்த வாரம் டிஸ்சார்ஜ் பண்ணிக்கலாம். ஆனா பேபி எவ்ளோ நாள் இருக்கணும்னு இப்போ சொல்ல முடியாது” என்று அடுக்கடுக்காக சொல்ல சரணுக்கு தலை சுற்றியது.

“ரெண்டு பேருக்கும் ஆபத்து இல்ல தானே?” என்று தன் மனதின் தவிப்பை வெளிப்படையாக காட்டி அவன் வினவ,

“ஆல் ஓகே” என்று சிரித்த கீர்த்தி அங்கிருந்து நகர,

“ஷான்வி எங்க இருக்காங்க டாக்டர்?” என்று அவரிடமே கேட்டான் சரண்.

அவனுக்கு இப்போது தான் ஷான்வி நினைவு வந்திருந்தது. அவள் தானே சர்ஜரிக்கு செல்வதாக அவனிடம் சொல்லிச் சென்றது. அவள் அவனிடம் திரும்பி வரவேயில்லையே என்ற எண்ணத்தில் அவன் கேட்க, அவளாக அவனிடம் திரும்பி வரப்போவதில்லை என்று தெரியாமலே வினவினான்.

அவனை மேலும் கீழும் பார்த்த கீர்த்தி, ஏற்கனவே மகளின் செயல்களை கவனித்திருந்ததால்,

“அவளோட ஃபியான்ஸ் வந்திருக்காருன்னு அவரோட வெளில போயிருக்கா” என்று சாதாரணமாக சொல்லிவிட்டு, “அவளை எப்படி தெரியும்?” என்று கேட்க,

கேள்விப்பட்ட செய்தியில் உள்ளம் உடைந்து போனாலும் அதை வெளியே காட்டிக்கொள்ளாமல், “அவங்க சார் சர்வீஸ் நம்ம கேரேஜ்ல தான் பாக்கறோம் டாக்டர். உங்களோடதும் தான்.” என்று கூறியவனுக்கு அங்கே நிற்க முடியாது போக,

“நான் பேமிலிக்கு இன்பார்ம் பண்ணிட்டு வர்றேன் டாக்டர்.” என்று நகர்ந்தான்.

கால்களில் யாரோ இரும்பு குண்டுகளைக் கட்டியது போல நகர முடியாமல் கனத்தது. இதயம் அதற்கு மேல் கனமாக இருக்க, அவன் வெளியே வந்து அங்கிருந்த சின்ன பிள்ளையார் கோவிலைக் கண்டு அங்கு சென்று நின்றான்.

அவன் முகத்தில் விரக்தியான சிரிப்பொன்று உதிர்ந்தது.

‘நான் உனக்கு என்ன பண்ணினேன் விநாயகா? உன்னைப்போலவே என்னையும் கடைசி வரைக்கும் தனியாவே இருக்க வைக்க முடிவு பண்ணிட்ட போல. ஷிவானிக்கு என்ன வழி? அவளோட வாழ்க்கையை எப்படி சரிபண்ண போறேன்னு நெனச்சு என்னோட வாழ்க்கையை கோட்டை விட்டுட்டேன் போல இருக்கே. ஷானுக்கு என் நிலைமையை முழுசா சொல்ல கூட நீ எனக்கு ஒரு வாய்ப்பு தரலையே! இனிமே என்ன நடக்கும்?’ என்று கண்களை மூடிக்கொண்டு நின்றான்.

அவனது அருகில் வந்த கங்கம்மா, “தம்பி தேவையானதெல்லாம் கொண்டு வந்துட்டேன். பாப்பாவை எப்போ ரூமுக்கு அழைச்சிட்டு வருவாங்க? குழந்தையை பார்த்தீங்களா?” என்று கேட்க,

அவனால் அவர்களுக்கு பதிலளிக்க கூட முடியவில்லை. மனவேதனை ஒரு பக்கம் இன்னும் ஷிவானியையும் குழந்தையையும் பார்க்காமல் தன் வாழ்வை நினைத்து மருகினோமே என்ற குற்றவுணர்வு ஒரு பக்கம் அழுத்த,

“வாங்க” என்று அவரை அழைத்துக்கொண்டு குழந்தைங்களுக்கான சிறப்பு பிரிவுக்கு விரைந்தான்.

அங்கே ஒரு கண்ணாடி பெட்டகத்தில் இருந்த வட்ட வடிவ ஓட்டை வழியாக சின்னச் சின்ன கைகால்களை அசைக்காமல் அப்படியே வைத்தபடி கண்களை திறக்கவும் மூடவுமாக இருந்த பச்சிளம் தளிரைக் கண்டதும் மனதின் பாரமெல்லாம் போன இடம் தெரியாமல், அவளை தூக்கிக்கொள்ள வேண்டும் என்ற எண்ணமே மேலோங்கி நின்றது.

அந்த பக்கமாக வந்த சுகந்தி, “குழந்தையை இப்போதைக்கு கண்ணாடி வழியா பாருங்க. பால் கொடுக்க எடுத்துட்டு வரும்போது கவனமா ஒருமுறை தூக்கி பார்த்துட்டு கொடுத்துடுங்க. இன்னும் ஒரு மாசமாவது ஆகும் அந்த குழந்தைக்கு ரெண்டரை கிலோ வெயிட் ஏற” என்று சொல்லிவிட்டு,

“எங்க ஷான்வி மேடம் தான் குழந்தையை முதல்ல வாங்கினங்க. ராசியான பொண்ணு. சீக்கிரம் குழந்தை தேறி வருவா பாருங்க.” என்று சொன்ன அவரைக் கண்டு சிரமப்பட்டு புன்னகையை உதிர்த்தான்.

அடுத்து அவன் சென்று நின்றது ஷிவானி இருந்த அறைக்கு. ஆனால் அவள் இன்னும் கண்விழிக்காமல் இருக்கவே என்ன செய்வதென்று தெரியாமல் அங்கிருந்த இருக்கையில் அமர்ந்தான்.

“ஏன் அக்கா இவ அவ்ளோ வேகமா எங்க போனா? உங்களுக்கு ஏதாவது தெரியுமா?” என்று வறண்ட குரலில் வினவினான்.

“இல்லையே தம்பி. நானும் அதை கேட்க தான் பின்னாடியே போனேன். ஆனா அந்த பொண்ணு அப்படியே கோவமும் ஆத்திரமுமா வேகமா போச்சு. எங்க என் குரலெல்லாம் காதுல வாங்கிச்சு? ரொம்ப பயந்துட்டேன் தம்பி. இந்த மட்டுக்கும் ரெண்டு பேருக்கும் ஆபத்து இல்லாம பிழைச்சு வந்ததே அந்த கருமாரி புண்ணியம்.” என்று கண்களை மூடி கைகளை குவித்து வேண்டினார்.

“இந்த திருவிழாவுக்கு அம்மாவுக்கு பெருசா ஏதாவது செஞ்சிடுங்க தம்பி. நான் வேண்டுதல் வச்சேன்.” என்று சொல்ல,

வேலைக்காரி உன் வேண்டுதலுக்கு நான் செய்யவேண்டுமா என்ற எண்ணமில்லாமல்,

“அதுக்கென்ன அக்கா பட்டுப்புடவையும், தங்க நகையும் வாங்கி சாத்திட்டா போச்சு” என்று மனமாரக் கூறினான்.

ஏனெனில் அவனும் ஷிவானி ஆபரேஷன் தியேட்டருக்குள் இருந்த போது எல்லா கடவுளையும் துணைக்கு அழைத்தான் தானே!

“தம்பி வீட்டுல சொல்லலையா?” என்று தயங்கிக் கேட்ட அவரை கலங்கிய விழிகளோடு நோக்கியவன்,

“ரொம்ப ஜம்பமா நானே அவளை நல்லா பார்த்துக்குவேன்னு போன வாரம் தான் எங்கப்பா கிட்ட சொன்னேன் கா. இப்போ இப்படின்னு எந்த முகத்தை வச்சுக்கிட்டு சொல்றது?” என்று வருந்தினான்.

“ஆயிரம் இருந்தாலும் அந்த பொண்ணு உங்க அத்தை பொண்ணு இல்லையா? அவங்க பொண்ணைப் பத்தி அவங்களுக்கே சொல்லலன்னா எப்படி தம்பி?” என்றதும்,

“சொல்றேன் அக்கா.” என்று கைபேசியை எடுத்தவன் இயந்திரத்தனமாக வீட்டின் லேண்ட்லைன் எண்ணுக்கு அழைத்து விஷயத்தை கூறிவிட்டு அழைப்பைத் தூண்டித்தான்.

அவர்கள் யாராவது வந்தாலும் அவனுக்கு பெரிய உதவியாகவும் தைரியமாகவும் இருக்கும் தான். ஆனால் அதை வெளிப்படையாகக் காட்டிக்கொள்ள அவனுக்கு விருப்பமில்லை.

இன்னும் அவர்களுக்கு ஷிவானி அவன் மனைவி என்ற எண்ணம் இருக்க, அதை ஊக்குவிக்கும் எந்த வார்த்தையையும் உதிர்க்க அவன் தயாராக இல்லை.

விரைவாக மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தனர் சரணின் குடும்பத்தார்.

அவர்கள் வரும் நேரம் சரண் வீட்டுக்கு சென்றுவிட, உறங்கும் ஷிவானியையும் பேழைக்குள் உறங்கும் குழந்தையையும் பார்த்துவிட்டு அவன் வரவுக்காக காத்திருந்தனர்.

அவன் உடைகளை மாற்றிக்கொண்டு அங்கு தங்க தேவையானவைகளோடு வந்து சேர, சித்ரா அவனை பிடித்துக்கொண்டார்.

‘நீ அவளை நல்லா பார்த்துப்பேன்னு சொன்ன தானே சரண்? அப்பறம் எப்படி என் பொண்ணுக்கு இப்படி ஆச்சு?” என்று அழுகையோடு கேட்க,

சரியாக அந்த நேரம் பார்த்து வேலைநேரம் முடிந்து வீட்டுக்கு கிளம்பிக்கொண்டிருந்த ஷான்வி அவர்களை கடந்து சென்றாள்.

அவள் கண்கள் நடப்பவைகளை கவனிக்காதது போல வாயிலை நோக்கி இருந்தாலும் காதுகள் கூர்தீட்டிக்கொண்டு இங்கே தான் கவனித்தது.

“வேலையா வெளில போயிருந்தேன் அத்தை.” என்று அமைதியாக பதில் சொன்ன சரணைக் காண அவளுக்கு கோபம் கட்டுக்கடங்காமல் வந்தது.

அவன் வந்தது தன்னை சந்திக்க, வேலை என்று மனைவியின் அம்மாவிடம் கூறுகிறான் என்றால் இவன் இப்படி எத்தனை பொய்களை நம்மிடம் அவிழ்த்து விட்டிருப்பான் என்று கோபம் கொண்ட மனம் சுணங்க,

முத்துலட்சுமி, “சித்ரா, அவனால முடிஞ்சவரைக்கும் அவன் பார்த்திருக்கான். நம்மளைப்போல அவனுக்கும் இது அதிர்ச்சியா தான் இருக்கும். சூழ்நிலையை புரிஞ்சுக்க முயற்சி பண்ணு. அவளை உன் பொண்ணா மட்டும் நினைச்சு கேள்வி கேட்டுட்டு இருக்க, அவனோட பொறுப்பும் உறவும் உனக்கு மறந்து போய்டுச்சா?” என்று கேட்க,

தன் அன்னையிடம் தாவி வந்தவன், “அம்மா நான் எதிர்பார்க்கலம்மா. எப்படி இப்படி நடந்துச்சுன்னு தெரியல. அவளுக்கு ஒன்னும் இல்லன்னு டாக்டர் சொன்னதும் தான் எனக்கு உயிரே வந்துச்சும்மா.” என்று நெடுநாட்களுக்குப் பின் காணும் அன்னையிடம் தன் மனதின் விசனங்களை வெளிப்படுத்தியவனுக்கு தெரியவில்லை, இதைக் கேட்ட ஒரு உயிருக்கு துடிப்பே நின்றுவிடும் அளவுக்கு மனதில் வலி எடுத்தது பற்றி.

‘ஓஹ்.. மொத்த குடும்பமும் வந்தாச்சா? அம்மா அப்பா, மாமனார் மாமியார்..எல்லாம் இருந்தும் என்கிட்ட நான் குடும்பத்தோட இல்ல. ஆனா தனியாவுமில்ல.. எப்படி எல்லாம் பேசினார். எல்லாத்தையும் கேட்ட எனக்கு எங்க போச்சு அறிவு? காதலுக்கு கண்ணு இல்ல சரி, மூளையுமா இல்ல? ஏன் இப்படி என் மனசை பறிகொடுத்துட்டு துடிச்சிட்டு இருக்கேன். ஆனா அவன் குழந்தை பொண்டாட்டி, குடும்பம்ன்னு எப்படி கூட்டமா இருக்கான் பாரு’ என்று மனம் நொந்து நடையை எட்டிப்போட்டாள்.

அப்பொழுது பக்கவாட்டு அறையிலிருந்து வந்த சிவபாலன், “கிளம்பியாச்சா? மே ஐ டிராப் யூ?” என்று சிரித்த முகமாக கேட்க,

“நோ. என்கிட்ட கார் இருக்கு” என்று வெடுக்கென சொன்னவளைக் கண்டு சிரித்தவன்,

“ஆனா என்கிட்ட இல்லயே ஷான்வி. என்னை நீங்க டிராப் பண்ண முடியுமா?” என்று மீண்டும் பற்கள் தெரிய சிரித்தான்.

இருந்த மனநிலைக்கு கையிலிருந்த கைப்பையை அவன் முகத்தில் வீசிவிடும் ஆத்திரமிருந்தாலும் இருக்கும் இடத்தை கருத்தில்கொண்டு, “நோ” என்று மட்டும் கூறி அவள் நகர முனைய,

“வீட்ல நம்ம மேரேஜ் ப்ரபோசல் பத்தி சொல்லி இருப்பாங்கன்னு நினைக்கறேன் ஷான்வி. எனக்கு உங்க கூட கொஞ்சம் பேசணும். நானும் வேற விதமா முயற்சி பண்ணி முடியாம தான் இப்படி நேரடியா கேட்டுட்டு இருக்கேன். இஃப் யூ டோண்ட் மைண்ட், கார்ல போயிட்டே பேசுவோமா?” என்று முகத்துக்கு நேரே அவன் கேட்டுவிட அதை தவிர்க்க முடியாமல் தவிப்போடு முன்னோக்கி நடந்தாள் ஷான்வி.

அவர்கள் இருவரும் ஜோடியாக போவதை அன்னையிடம் பேசிவிட்டு திரும்பிய சரண் கண்டு உள்ளம் வெதும்பி நின்றான்.