உறவாக அன்பில் வாழ – 12

ஞாயிறு காலை விடியலால் தங்க கரங்கள் கொண்டு பூமியை அணைத்துக்கொண்டான் ஆதவன்.

அக்கம்பக்கத்தில் உள்ளார், கேரேஜில் வேலை செய்பவர்கள் என்று காலையே அனைவரும் வளைகாப்புக்குக் கூடி விட, அழகிய பட்டுச்சேலை சரசரக்க நிறைந்த தன் வயிறுடன் நடந்து வந்து அறையின் நடுவே இருந்த ஆசனத்தில் அமர்ந்தாள் ஷிவானி.

எல்லா பெண்களுக்கும் திருமணம், வளைகாப்பு, குழந்தை என்று ஆசைகள் இருப்பது போல ஆசைகள் கொண்ட சராசரிப் பெண் தான் ஷிவானி. ஆனால் இன்று அவளுக்கு வளைகாப்பு நடைபெறும்போதிலும் அதனை மகிழ்ச்சியோடு நடத்திக்கொள்ள முடியாத தன் துர்பாக்கியத்தை நினைத்து அவளையும் மீறி கண்கள் கசிந்தது.

“என்ன பாப்பா அம்மா வரலன்னு வருத்தமா? எங்க போய்ட போறாங்க. நீ வைரம் மாதிரி ஒரு பேரப்பிள்ளைய பெத்து கையில வாங்கு, நீ நான்னு உன் அம்மாவும் தம்பியோட அம்மாவும் போட்டிக்கு வர்றாங்களா இல்லையான்னு பாரு” என்று தேவகி அவள் கண்களை துடைத்துவிட,

கங்கம்மாள் அவளுக்கு அருகே வந்து கன்னத்தில் சந்தனம் தடவி, “உன்னை பத்தி மட்டும் நினைச்சு அழுவாத கண்ணு. நீ சந்தோஷமா இருக்கணும்னு நெனச்சு தானே தம்பி இவ்வளவும் செய்யுது? நீ இப்படி அழுதா அதுக்கு கஷ்டமா இருக்காதா?” என்று கேட்க,

கண்ணீரை அடக்கிக்கொண்டவளுக்கு தன்னை நினைத்தே கோபம் பெருகியது. எப்படிப்பட்ட சூழ்நிலையில் தனக்காக அரணாக நிற்பது மட்டுமின்றி தன் மகிழ்ச்சிக்காகவும் குழந்தை நலனுக்காகவும் பார்த்து பார்த்து நடந்துகொள்ளும் சரணை சற்றும் சிந்திக்காமல் இப்படி சுயநலமாய் இருக்கிறோமே என்று நினைத்தவள் முகத்தை சீராக வைத்துக்கொண்டாள்.

வந்தவர்களை வரவேற்று சாப்பிட அழைத்துப்போன சரணின் முகம் லேசான பதற்றத்தில் இருந்தது. காலை ஏழு மணியில் இருந்தே ஷான்வி அவனுக்கு அழைக்க ஆரம்பித்துவிட்டாள்.

இத்தனை நாட்கள் அவன் அழைத்தபோது பதிலளிக்காதவள், இன்று அவனால் நகர கூட முடியாத நிலையில் விடாமல் அழைப்பதன் காரணம் புரியாமல் திகைத்தான்.

பந்தியை பார்க்கப்போன நேரத்தில் ஷான்வியின் அழைப்பு வர, ஓரமாக சென்று ஏற்றவன் கேட்ட முதல் கேள்வியே, “நீ டாக்டர் கிருஷ்ணமூர்த்தி பொண்ணா? ஏன் என்கிட்ட சொல்லல?” அவள் ஒரு சிறிய மௌனத்துக்குப் பின்,

“நான் ஏற்கனவே உங்ககிட்ட அதை சொல்லி இருந்தேன். நீங்க தான் போன் வந்ததால கவனிக்கல.” என்று உள்ளே போன குரலில் கூறினாள்.

“ஆமா நீ என்னை லவ் பண்றது மாதிரி அன்னைக்கு சொன்னியே உன் அப்பா அதுக்கு ஒத்துப்பாரா?” என்று அவன் கேட்க,

“நான் உங்ககிட்ட நேர்ல பேசணும்.” என்று கூறினாள்.

“இன்னிக்கு முடியாது. நாளைக்கு ஹாஸ்பிடல் பக்கத்துல இருக்கற காபிஷாப் ஓகே வா?” என்று கேட்டான் நிதானமாக.

அவள் “ம்ம்” என்று பதிலளித்து, “உங்களுக்கு” என்று கேட்க ஆரம்பிக்கும் போதே செந்தில் சரணை அழைக்க,

“நாளைக்கு நேர்ல பேசலாம் ஷான்வி” என்று அழைப்பை துண்டித்துவிட்டான்.

‘உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா?’ என்று அவள் கேட்க வந்த கேள்வி அந்தரத்தில் நிற்க, நாளை வரை காத்திருக்க வேண்டுமா என்று நினைக்கும்போதே ஷான்விக்கு பைத்தியம் பிடித்தது.

ஆசைகொண்ட மனம், ‘உங்க அப்பா ஒத்துக்குவாரான்னு கேட்டார்ல கல்யாணம் ஆனா அப்படி கேட்க தோணுமா? உனக்கு என்னைப்பத்தி என்ன தெரியும்ன்னு தானே முதல் கேள்வி வரும். அப்போ அவருக்கு கல்யாணம் ஆகி இருக்க வாய்ப்பில்ல.’ என்று மனதிற்குள் நினைத்தவளாக அன்றைய பொழுதை நெட்டித்தள்ள ஆரம்பித்தாள் ஷான்வி.

செந்தில் அழைத்ததும் கீழே வந்த சரண், “என்ன செந்தில் ஏன் அவசரமா கூப்பிட்ட?” என்று கேட்க,

“யார் வந்திருக்காங்கனு பாருங்க அண்ணா.” என்றான் மெதுவாக,

சரண் மனதிற்குள், அம்மா அப்பா, அத்தை மாமா என்று வந்துவிட்டார்களோ என்று சந்தேகம் வந்து வேகமாக வீட்டிற்குள் நுழைய, அங்கே ஷிவானியை அணைத்து கண்ணீர் விட்டுக்கொண்டிருந்தான் அவள் தம்பி ஷ்யாம்.

சரணுக்கு அவனைக் கண்டு மகிழ்ச்சி எழுந்தாலும் அவன் எதிர்பார்த்த யாரும் வரவில்லை என்ற ஏமாற்றம் முகத்தில் அப்பட்டமாக தெரிந்தது.

“என்ன மாமா நான் வந்ததுல உங்களுக்கு சந்தோஷம் இல்லையா?” என்று ஷ்யாம் அவனிடம் வினவ,

“ஏன் டா இப்படி பேசுற? அதெல்லாம் ஒன்னும் இல்ல. இத்தனை நாள் வரலன்னாலும் அக்காவுக்கு வளைகாப்புன்னு உன் மருமக பிள்ளைக்காக வந்திருக்க, பெத்தவங்களுக்கும் அந்த அளவுக்கு கூட அன்பில்லாம போச்சேன்னு நெனச்சேன்.” என்று மனதில் இருந்ததை சரண் கூறிவிட,

“நீங்களும் தான் வீட்ல சொல்லிட்டு கல்யாணம் பண்ணிக்கிறதுக்கு என்ன? நான் ஸ்கூலுக்கு போன கேப்ல கல்யாணம் பண்ணி அக்காவை தனியா கூட்டிட்டு வந்துட்டீங்க?” என்று ஷ்யாம் கோபத்துடன் வினவினான்.

சரண் கண்களை இறுக்கமாக மூடித்திறந்து, “அதெல்லாம் விடு. சாப்டியா? வா மேல சாப்பிட போகலாம்.” என்று அவனை தோளோடு அணைத்து அழைத்துப்போக,

“ஷ்யாம் தம்பி எப்பவும் மாமா மாமான்னு நம்ம சரண் தம்பியோடவே அலையும், இந்த ஆறு மாசமா பிள்ளை வீட்ல தனியாவே இருந்துச்சு.” என்று தேவகி சொல்ல, கங்கம்மா அவர் கூறிய காலக்கணக்கை மனதில் குறித்துக்கொண்டார். இவர்கள் இங்கே வந்ததும் ஆறு மாதத்துக்கு முன்பு தான். அதனால் பொருள் புரிந்தவராக பெருமூச்சு விட்டார்.

அருகில் கைநிறைய வலையல்களோடு அமார்ந்திருந்த ஷிவானி இந்த பேச்சில் மெல்ல உடல் வியர்க்க ஆரம்பிக்க, அதைக் கண்டவர் ஷிவானியை யாருடைய கவனமும் கவராத வண்ணம் உள்ளே அறைக்கு அழைத்துச் சென்று,

“யார் என்ன சொன்னாலும் உனக்கு சரண் தம்பி துணைக்கு இருக்கும்போது நீ ஏன் கண்ணு கலங்கி பயந்து நிக்கிற?” என்று ஆறுதல் கூற,

“எனக்கு ரொம்ப பயமா இருக்கு அக்கா. உடம்பெல்லாம் என்னவோ செய்யுது” என்று கூறி தோய்வாக கட்டிலில் அமர்ந்தாள்.

“காலைல இருந்து உட்கார்ந்திருந்த இல்லையா? அதான் அலுப்பா இருக்கும். உனக்கு மனையில கொடுத்த கலந்த சாதம் போதுமா இல்ல தட்டுல சாப்பாடு போட்டு எடுத்துட்டு வரவா?” என்று அக்கறையாக வினவ,

“இல்லக்கா நான் படுத்துக்கறேன். தம்பி வந்தா உள்ளே அனுப்புங்க. வேற யாரையும் நான் பார்க்க இப்போ விருப்பப்படல.” என்று கூறி சரிந்து படுத்தாள்.

இத்தனை நேரமும் அணை கட்டி வைத்திருந்த கண்ணீர் மடை திறந்து வந்தது.

சரண் அனைவரையும் வழியனுப்பி வைத்துவிட்டு அவன் மதிய சாப்பாட்டை சாப்பிட்டு எழ மாலை நான்கு மணியானது.

பந்தல், உணவு என்று பைசல் செய்ய வேண்டியவர்களுக்கு கொடுத்து முடிக்க, அவனது கைபேசி ஒலி எழுப்பியது.

அதில் தெரிந்த ராஜராஜன் எண்ணைக் கண்டதும் உள்ளே கனன்றாலும் அமைதி காத்து அதனை ஏற்று காதில் வைத்தான்.

“என்ன பண்ற சரண்? எப்படி இருக்க? செந்தில் காட்டின வண்டி பிடிச்சு உடனே எடுத்துட்டேன். பேப்பர் எல்லாம் இன்னிக்கு வந்து தர்றதா அவன் சொல்லி இருந்தான். ஆளை காணமே?” என்று வினவ,

“ஏன் இதெல்லாம் விசாரிக்க உங்க பி.ஏ இல்லையா? உங்க ஆபிஸ் மேனேஜருக்கு கார் வாங்கித்தர, அதுக்கு டாகுமெண்ட் வாங்க எல்லாத்துக்கும் நீங்களே தான் வரணுமா? வாங்கி வச்சுக்கப்போற சிகாமணி வரமாட்டாரோ?” என்று எரிச்சலை மறைக்காமல் குரலில் காட்டினான் சரண்.

“என்ன சரண் நீ, தெரியாத மாதிரியே பேசுற, நான் உன்னையும் என் பையனா தான் நினைக்கிறேன். நீ இப்படி ஆறு மாசமா என்னோட பேசாம இருக்கிறது எனக்கு கஷ்டமா இருக்காதா? செந்தூரனும் பாவம் தானே? உன்கிட்ட பேச வேற என்ன சாக்கை வச்சுக்கிட்டு வரசொல்ற?” என்று கேட்க,

கடும்கோபத்தில் இருந்த சரண் தன்னையும் மீறி வார்த்தைகளை தவற விட்டான்.

“ம்ம், காரணமா இல்ல. இன்னிக்கு தான் ஷிவானிக்கு வளைகாப்பு போட்டேன். வந்து வளையல் போட்டு ஆசீர்வாதம் பண்ணி இருக்கலாமே!” என்று நக்கலாக வினவி விட்டு,

“ப்ளீஸ் தயவுசெஞ்சு எந்த காரணமும் தேடி நீங்க என்கிட்ட பேச வேண்டாம். முக்கியமா செந்தூரனை என் கண்ணு முன்னாடி வரக்கூடாதுன்னு சொல்லி வைங்க” என்று சொல்லி அழைப்பைத் துண்டித்தான்.

அவனுக்கு மனதில் கோபம் கொழுந்துவிட்டு எரிந்தது.

‘இந்த மனிதர் அன்று நான் சொன்ன ஒரு வார்த்தையையாவது கேட்டாரா? அவருக்கும் தந்தைக்கும் தொழிலில் இருந்த பிரச்சனை முன்னிறுத்தி அவன் சொல்ல வந்ததை கேட்காததோடு தந்தைக்கு அழைத்து அவர் பேசிய எதையும் இன்றளவும் மறந்துவிட முடியாதே’ என்று நினைத்து மனதில் ரணமாய் வலி எடுக்க, வேலைக்கு இருந்த அனைவரையும் அனுப்பி வைத்துவிட்டு தன் அறைக்கு சென்றவன் கண்களை மூடிப் படுத்தான்.

கண்ணுக்குள் தெரியும் இருளாக வாழ்வே ஒரு நொடி அவனுக்கு அந்தகாரமாகத் தோன்றியது.

‘நாளை ஷான்விக்கு என்ன பதில் தருவது? அவளை மனதில் இருத்தியாகி விட்டது. அதனை மாற்றிக்கொள்ள இயலாது. ஆனால் ஷிவானி? எப்படி அனைத்தையும் கையாளப்போகிறோம்?’ என்று நினைக்கவே, பதில் கிடைக்காத கேள்விகளாக அவை தொக்கி நின்றது.

அன்று இரவு ஷிவானிக்கு சரண் நினைவோ, சரணுக்கு ஷிவானி நினைவோ வரவில்லை. இருவரும் அவர்கள் உலகத்தில் தங்கள் சஞ்சலங்களுடன் உறவாடிக்கொண்டிருந்ததால் ஒருவர் மற்றவரை மறந்து உறக்கத்தை தழுவி இருந்தனர்.

காலை அவசரமாக கிளம்பிய சரண், கங்கம்மாவை அழைத்து ஷிவானியை பார்த்துக்கொள்ள சொல்லி விட்டு மருத்துவமனை அருகில் இருந்த காபி ஷாப்புக்கு விரைந்தான்.

பதில் தெரியாத எத்தனை கேள்விகள் இருந்தால் என்ன, அவளின் அழகிய வதனம் காணும்போதெல்லாம் உள்ளுக்குள் எழும் உற்சாகமும் நிறைவும் சில நாட்களாக காணக்கிடைக்காததால் அவசரம் காட்டி முதல் ஆளாக வந்து அமர்ந்துகொண்டான்.

ஷான்வியும் அதே நிலையில் இருந்தாளோ அல்லது இதற்கொரு முடிவு தெரிந்தே ஆகவேண்டும் என்று வேகம் கொண்டு வந்தாளோ அவளும் நேரத்தில் அங்கே வந்துவிட,

இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்தபடி ஏதும் பேசாமல் சற்று நேரம் அமர்ந்திருந்தனர்.

டேபிளின் மேல் அவள் வைத்திருந்த கரத்தை மெல்லப் பற்றிக்கொண்ட சரண், “எனக்கு உன்கிட்ட சொல்ல நிறைய இருக்கு ஷானு மா. ஆனா.. எதை எப்படி ஆரம்பிக்கிறதுன்னு தெரியல. நான் சொல்லப்போறது உனக்கு புரியுமா? புரிஞ்சு நீ ஒத்துக்குவியா? எதுவும் தெரியல. ஆனா ஒண்ணே ஒன்னு உன்கிட்ட சொல்லணும். அன்னைக்கு சொல்லாம விட்டுட்டேன். நீ சொன்ன எல்லாமே எனக்கும் இருக்கு. எஸ். எனக்கும் காதல் நோய் வந்துடுச்சு. ஆனா இப்போ என்னோட சூழ்நிலை சுத்தமா சொல்லி விளக்கற அளவுக்கு கூட இல்ல.” என்று சொல்ல,

ஷான்வி அவன் சொல்வது புரியாமல் விழித்தாள். அவன் தன்னை விரும்புவதை தெரிந்துகொண்டதும் பூரித்த மனது, பின் அவன் சொன்ன எதுவும் புரியாமல் குழம்பியது.

“குழப்பமா இருக்குல்ல.. என் வாழ்க்கையும் இப்போ அப்படித்தான் இருக்கு ஷானு. என் குடும்பத்தோட என்னால சேர்ந்து இருக்க முடியல. அதே நேரம் நான் தனியாவும் இல்ல” என்று மென்று விழுங்கி அவன் ஷிவானியைப் பற்றி பேச்சை ஆரம்பித்தான்.

இத்தனையையும் அவன் அவள் கரத்தைப் பற்றிக்கொண்டு தான் பேசிக்கொண்டிருந்தான். இதனை அந்த வழியாக பள்ளிக்குச் சென்ற ஷ்யாம் பார்த்ததை அவன் அறியவில்லை.

அவன் முழுவதுமாக சொல்லட்டும் தானும் தன் வீட்டில் எதிர்க்கொள்ளும் பிரச்சனைகளை சொல்லிவிட்டு, அன்று போனில் பேசிய பெண் யாரென்று கேட்கவேண்டும் என்று ஷான்வி எண்ணியபடி அமைதி காத்தாள்.

அவள் கையினில் சிறு அழுத்தம் தந்தவன், “எங்க வீடு கூட்டுக்குடும்பம் டா. அப்பா, எங்க அத்தை ரெண்டு பேரும் இப்போ வரைக்கும் ஒண்ணா ஒரே வீட்டுல தான் இருக்காங்க. எங்க மாமா அப்பாவுக்கு க்ளோஸ் பிரெண்ட்” என்று சொல்ல ஆரம்பித்தவனை தடுத்து நிறுத்தியது அவனது கைபேசி. சிந்தனையோடு அதனை ஏற்றவனுக்கு,

அதில் கங்கம்மாவின் குரல் கேட்டதும் பதற்றம் மேலிட,

“என்ன ஆச்சு அக்கா?” என்று நேராக விஷயத்துக்கு வந்தான் சரண்.

“தம்பி உடனே அன்னைக்கு பாப்பாவை அட்மிட் பண்ணுனீங்கல்ல அந்த ஆஸ்பத்திரிக்கு வாப்பா.” என்று பதறினார் அவர்.

“அக்கா பொறுங்க பொறுங்க. என்னாச்சு? ஷிவானி எங்க? நீங்க எங்க இருக்கீங்க?” என்று அவனும் பதற்றத்தை வெளியிட,

“தம்பி நேர்ல வாப்பா”என்று அழைப்பை துண்டித்துவிட்டார்.

அவன் அந்த மருத்துவமனைக்கு அருகில் தானே இருக்கிறான். அவன் சிந்தனை செயலிழந்து போயிருக்க,

“சரண்.. என்னாச்சு? யாரு ஷிவானி?” என்று ஷான்வி அவனை உலுக்கிய பின்னரே நினைவுக்கு வந்தவன்,

“வா ஷான்வி, ஹாஸ்பிடல் போகணும். நீயும் வா. என்ன ஆச்சுன்னு தெரியல.” என்று அவனுக்கு பற்றுகோலாக அவளை அழைத்துக்கொண்டு கிருஷ்ணா க்ரூப் ஆப் மல்டி ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிடல் வளாகத்திற்குள் நுழைந்தான்.

உள்ளே கண்ணீருடன் நின்றிருந்த கங்கம்மா,

“எல்லாமே குடிமுழுகி போயிருச்சே தம்பி, நான் சமையல் பண்ணிட்டு வர்றதுக்குள்ள என்னாச்சுன்னு தெரியல, பாப்பா பதட்டமா ஏதோ பையில எடுத்துக்கிட்டு வேகமா எங்கேயோ கிளம்பிச்சு.

என்ன எங்கன்னு கேட்கறதுக்குள்ள வேகமா படியை தாண்டுறேன்னு காலை வச்சு அப்படியே வழுக்கி விழுந்துடுச்சு பா. இடுப்புல அடி பட்டுடுச்சு. எனக்கு என்ன செய்யறதுன்னு தெரியல. அங்க இருந்த ஆஸ்பத்திரி காய்தத்துல இருந்த நம்பருக்கு கூப்பிட்டு ஆம்புலன்ஸ்ல ஏத்திட்டு வந்துட்டேன். பாப்பாவை தூக்கும்போது என் போனை கீழ போட்டுட்டேன் பா. இங்க வந்து கேரேஜுக்கு போன் பண்ணி தான் நம்பர் வாங்கி உனக்கு கூப்பிட்டேன் பா. என்னை மன்னிச்சிரு தம்பி. என்னை நம்பி விட்டுட்டு போன, இப்படி ஆகிப்போச்சே”என்று கண்ணீர் விட்டார்.

“இப்போ ஷிவானி எங்க?” என்று கேட்க,

“வாங்க மிஸ்டர் சரண். என்ன இவ்ளோ கேர்லெஸ்சா இருந்திருக்கீங்க?” என்று அவன் முன்னே வந்தார் டாக்டர் கீர்த்தி.

அன்னையைக் கண்டதும் சற்று தள்ளி நின்றுகொண்ட ஷான்விக்கு இன்னும் அங்கே நடப்பது எதுவும் புரியவில்லை. யார் ஷிவானி? அவள் விழுந்தால் ஏனிந்த பதற்றம்? அதற்கு அன்னை ஏன் மருத்துவம் பார்க்கிறார் என்று கேள்விகள் குடைய,

“இப்போ ஷிவானி எப்படி இருக்கா டாக்டர்? பேபி எப்படி இருக்கு? ஆபத்து ஒன்னும் இல்லையே?” என்று சரண் கேட்டதும் ஷான்விக்கு இதயம் நின்று துடித்தது.

ஆனாலும் காதலிக்கிறேன் என்று சொன்னனே என்ற நம்பிக்கையில் அவள் ஓரமாக சென்று நடப்பதை கவனிக்க, வேகமாக அங்கே வந்த தலைமை செவிலியரான சுகந்தி, “நான் சொன்னேன்ல மா, பொண்டாட்டியை கைக்குள்ள வச்சு பார்த்துக்கிட்ட மனுஷன்னு.. இவர் தான். ஆனா வேலைக்கு போயிருந்த நேரம் அந்த பொண்ணு வீட்டு படில வழுக்கி விட்டு விழுந்துடிச்சு. அதுக்கு ஒன்னுமில்ல. குழந்தைக்கு தான் பிரச்சனை. பனிக்குடம் உடஞ்சிடுச்சு. உடனே சிசேரியன் பண்ணனும். நான் அவங்களை பிரிப்பேர் பண்ண சொல்லிட்டு வந்திருக்கேன். நீயும் கூட வர்றியா?” என்று அவளையும் அறுவை சிகிச்சை அறைக்கு அழைக்க,

அதே விஷயத்தை கீர்த்தி மூலம் அறிந்த சரண் மனமுடைந்து போய் காத்திருப்போர் நாற்காலியில் அமர்ந்தான்.

அவனருகில் வந்த ஷான்வி, “சரண்..” என்று அழைக்க, அவள் கையை பற்றிக்கொண்டு,

“அவளுக்கோ குழந்தைக்கோ ஏதாவது ஆயிடுச்சுன்னா நானே என்னை மன்னிக்க மாட்டேன் ஷான்வி.. ஷிவானி வேணும். முழுசா பத்திரமா வேணும். பாப்பாவும் வேணும். நான் எல்லாருக்கும் என்ன பதில் சொல்லுவேன்?” என்று அவளை தன்னுயிராய் நினைத்து அவன் புலம்ப,

மனம் உடைந்த ஷான்வி, “கவலைப்படாதிங்க, நானும் அந்த சர்ஜரிக்கு தான் போறேன். மே காட் பிளஸ் போத் ஆஃப் தெம்.” என்று விரக்தியாக சொல்லிவிட்டு சுகாந்தியின் பின்னே செல்ல,

“உனக்கு அவரை தெரியுமா ஷான்வி மா?” என்ற அவரின் கேள்விக்கு,

“நம்ம காரெல்லாம் அவரோட ஷெட்டுக்கு தான் சர்வீஸுக்கு போகும் சுகந்திமா” என்று அவள் சொன்ன பதிலிலேயே அவளது உள்ளத்தின் வலி வெளிப்பட்டது.