உறவாக அன்பில் வாழ – 1

அப்பணிமனையில் விடப்பட்ட தன் வாகனத்தில் ஏறி அது சரியாக பழுது நீக்கப்பட்டுவிட்டதா என்று சரி பார்த்தார் கிருஷ்ணமூர்த்தி.

அவர் துளையில் சாவியிட்டு திருக, வாகனம் எவ்வித தடையும் இன்றி தனது என்ஜினை உயிர்ப்பித்தது.

உடனடியாக அவர் ஏ.சியை ஆன் செய்ய குளிர்ந்த காற்றும், காரில் புதிதாக வைக்கப்பட்டிருந்த மல்லிகை மணம் நிறைந்த கார் பெர்ப்ஃயுமும் அவரை குளிரச் செய்தது.

நீண்ட சுவாசத்தை இழுத்து அந்த நொடியை அனுபவித்தவர் வாகனத்தை நிறுத்திவிட்டு நிதானமாக இறங்கினார்.

அது நொடிவரை இருந்த இளக்கம் முகத்தில் தொலைத்தவராக,

“இன்னும் கூட ஸ்டார்ட் பண்ணும்போது ஸ்மூத்தா இருந்திருக்கலாம். உனக்கு இன்னும் எக்ஸ்பீரியன்ஸ் பத்தல” என்று சற்றும் தயங்காமல் பொய்யுரைத்தார்.

“வெளில இன்னுமே அழுக்கு இருக்கு பாரு.” என்று அவர் கைகாட்டிய இடம், அவர் ஏறும்போது அவரது ஷூவிலிருந்து ஏற்பட்டது என்று அவர் நன்கறிந்தும், அவனது வேலைத்திறன் அபாரமாக இருந்தும், அதை அவர் முழுமனதாக அனுபவித்தும் எதிலும் யாரையும் குற்றம் மட்டுமே சொல்லும் குணம் நிறைந்த அவருக்கு அவனை புகழ மனம் வரவில்லை.

அவன் அவர் கூறியதை இன்முகத்துடன் ஏற்று, “இதோ க்ளீன் பண்ணிடுறேன் சார்” என்று டஸ்டரை வைத்து அவ்விடத்தை சுத்தம் செய்தான்.

அவன் முகத்தில் கிஞ்சித்தும் அவர் தன்னை பாராட்டவில்லையே என்ற வருத்தம் ஏற்படவில்லை.

அந்த பணிமனையை பலர் தேர்ந்தெடுக்க கிருஷ்ணமூர்த்தியும் மிகப்பெரிய காரணம். எப்பொழுதும் தான் செல்லும் இடமெல்லாம் உயர்ந்தது, தான் உயர்ந்ததை மட்டுமே தேர்தெடுக்கும் பழக்கம் கொண்டவன் என்று தம்பட்டம் அடிக்கும் குணம் கொண்ட கிருஷ்ணமூர்த்தி, இப்பணிமனை சிறந்தது என்று வெளியாட்களிடம் சொல்வதுண்டு. ஆனால் ஒருநாளும் அதை அவர் வாய்திறந்து சாய்சரணிடம் சொன்னதில்லை.

ஆம் சாய்சரணின் இந்த பணிமனை சில ஆண்டுகளாக அங்கே இயங்கி வருக்கிறது. யாருடைய உதவியும் பெறாமல் தனி ஒருவனாக அவனது குடும்பத்தை எதிர்த்து இப்பணிமனையை ஆரம்பித்தான் சாய்சரண்.

சில ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க வாடிக்கையாளர்களையும் மிகவும் நேர்மையான பணியாளர்களையும் தன் குணத்தால் சம்பாதித்திருந்தான் சாய்சரண்.

அதில் கிருஷ்ணமூர்த்தியும் குறிப்பிடத்தக்கவர். அவர் அவனது வேலைக்கான பணத்தை வாடிக்கையாக கொடுப்பது போல கொடுத்துவிட்டுக் கிளம்பிச் செல்ல,

“என்னண்ணா நீ? இவ்ளோ வேலை பார்த்திருக்கோம் நல்லா இருக்குன்னு ஒரு வார்த்தை சொன்னா குறைஞ்சா போய்டுவாரு? வாய் வருதா பாருங்க இந்த மனுஷனுக்கு. பேரு தான் பெத்த பேரு டாக்டர் கிருஷ்ணமூர்த்தி, பிரம் கிருஷ்ணா க்ரூப் ஆப் ஹாஸ்பிடல்ஸ். ஆனா கட்டண உயர்வுன்னு கொட்டை எழுத்துல போர்ட் வச்சிருக்கோம். எவ்ளோ ஆச்சுன்னு கூட கேட்காம காசை நீட்டிட்டு போராரு” என்று பொரிந்தான் சாய்சரணின் முதல் நிலை ஊழியனான செந்தில்.

“விடு செந்தில், இவருக்கு பாராட்ட தான் தெரியாது. ஆனா இவர் சொல்லி மட்டுமே நம்ம கேரேஜுக்கு வந்த வண்டி எத்தனை தெரியுமா? அதெல்லாம் பார்க்கும்போது அவர் கொடுக்கற காசு எனக்கு பெருசே இல்ல டா” என்று சொல்லி தன் அலுவல் அறைக்குள் நுழைந்தான்.

அது சாதாரண கேரேஜ் என்று சொல்லிவிட முடியாது. வாகனங்களை பழுது பார்க்க பணிமனை போல, அவற்றை சுத்தம் செய்து தருவது, பழைய கார்களை வாங்கி விற்பது, காருக்கான உதிரிப்பாகங்களை மலிவு விலையில் விற்பது என்று ‘ஸ்ரீ சாய் கேரேஜ்’ சற்று விரிவான நிறுவனமாகவே இருந்தது.

“என்ன வேணா சொல்லுண்ணா என்னவோ எனக்கு அவரை பிடிக்கல.” என்று முகத்தை சுருக்கினான்.

“ஆமா இவன் தான் அவருக்கு பொண்ணு கொடுக்க போறான் பாரு தம்பி, பிடிக்கலையாம்ல பிடிக்கல.” என்று அவன் தாடையில் இடித்தபடி உள்ளே நுழைந்தார் கங்கம்மாள்.

“ஓய் கிழவி, சோறு கொண்டு வந்தியா வச்சுட்டு போனியான்னு இருக்கணும். என்னை வம்பிழுக்குற வேலையெல்லாம் வச்சுக்காத என்ன?” என்று செந்தில் முகத்தைத் திருப்பிக்கொள்ள,

“செந்தில் நம்ம கங்கம்மா கிட்ட என்ன கோவம்?” என்று சிரித்தபடி அவர் கொண்டு வந்த கூடையைப் பெற்றுக்கொண்ட சரண்,

“கங்கம்மா வீட்ல சாப்பாடு கொடுத்தாச்சா?” என்று கேட்டுவிட்டு அவர் பதிலுக்காகக் காத்திருந்தான்.

“நானே சொல்லணும்னு நெனச்சேன் தம்பி, என்ன தான் வாய்க்கு ருசியா சமைச்சு வச்சாலும் அந்த பிள்ளை என்னவோ கோழி மாதிரி கொத்தி தான் துன்னுது.” என்று அங்கலாப்பாகக் கூறினார்.

“அவங்க இந்த காலத்து பொண்ணு கிழவி, டயட்டெல்லாம் ஃபாலோ பண்ணுவாங்க. அள்ளி சாப்பிட்டா உன்னை மாதிரி ஆகிட மாட்டாங்களா?” என்று கையை முடிந்த அளவுக்கு அகலமாக வைத்து அவரை கேலி செய்தான் செந்தில்.

“ஷு. பெரியவர்களை அப்படி பேசாத செந்தில்.” என்று கண்டித்த சரண்,

“நான் அவகிட்ட பேசுறேன் கங்கம்மா. முடிஞ்சா இனிமே சாயங்காலம் நாலு மணிக்கு வீட்டுக்கு போயிட்டு நான் வர்ற வரைக்கும் அவளுக்கு துணைக்கு இருக்க முடியுமா?” என்று சற்றே பதற்றம் நிறைந்தவனாக வினவினான் சரண்.

“இதெல்லாம் நீ சொல்லணுமா தம்பி? நான் போய் பாப்பாவுக்கு துணைக்கு இருக்கேன். ஆமா இது ஏழாவது மாசம் தானே? இப்பவே உனக்கு ஏன் இப்படி பயம் வருது?” என்று மேஜையில் உணவை கடை விரித்தபடி அக்கறையாக வினவினார் கங்கம்மா.

“வீட்ல அவளை தனியா விட பயமா இருக்கு கங்கம்மா. இங்க என்னோடவே வந்து இருன்னு சொன்னா, அங்க வந்து என்ன மாமா பண்ணப்போறேன்னு கேட்டு வைக்கிறா.” என்று தன் மனக்கிலேச்சத்தை வெளியிட்டான் சரண்.

“ஏன் தம்பி உன் குடும்பத்துல இல்லாத ஆளுங்களா? இன்னுமா அவங்க உங்களை ஏத்துக்கல?” என்று கேட்ட கங்கம்மாவுக்கு மௌனத்தை பதிலாக அளித்தான் சாய்சரண்.

அவன் நினைவுகள் ஆறு மாதங்களுக்கு முன்னே சென்று அவன் மனதை ரம்பமாக அறுத்தது.

தன் தலையை உலுக்கிக்கொண்டு நடப்புக்கு வந்தவன், கங்கம்மா வைத்த உணவை அமைதியாக உண்டு முடித்தான்.

“நீங்களும் சாப்பிட்டுட்டு அப்பறமா வீட்டுக்கு போங்க கங்கம்மா” என்று சொல்லிவிட்டு,

“செந்தில் நாளைக்கு அந்த டவேராவை டெலிவரி கொடுக்கணும். மறக்காம போம் வாஷ் பண்ணி வச்சிட்டு வீட்டுக்கு போ. நான் பேங்க்குக்கு போய்ட்டு சாயங்காலம் ஷிவானியை ஹாஸ்ப்பிடல் கூட்டிட்டு போகணும்.” என்று சொல்லிவிட்டு தன் ஹூண்டாய் ஐ 20 இல் அங்கிருந்து கிளம்பினான் சாய்சரண்.

தன் வாகனத்தில் அப்பெரிய மருத்துவமனை வளாகத்திற்குள் நுழைந்தார் கிருஷ்ணமூர்த்தி. கிருஷ்ணா க்ரூப் ஆப் ஹாஸ்பிட்டல்ஸ். சென்னையின் முக்கிய பகுதிகளில் ஐந்துக்கு மேற்பட்ட இடத்தில் கண்ணாடி மாளிகை போல மருத்துவமனைகளை நிர்மானித்திருந்தார் கிருஷ்ணமூர்த்தி. அதில் தலைமை மருத்துவமனையான இதனுள் நுழைந்து வாகனத்தை, மேனேஜிங் டைரெக்டர் என்ற எழுத்துகள் கொண்டு தொங்கவிடப்பட்டிருந்த போர்டின் கீழே நிறுத்தினார்.

பார்க்கிங் ஏரியாவிலிருந்து தனது அறைக்கு நடையிட்ட அவரது நடையில் அந்த மருத்துவமனை குழுமத்தின் தலைவர் என்ற பெருமை பொங்கி வழிந்தது.

இதய அறுவை சிகிச்சை நிபுணரான கிருஷ்ணமூர்த்தி அன்று இரண்டு சிறிய அறுவை சிகிச்சைகளை ஏற்றுக்கொண்டிருந்தார்.

அவர் தன் அறைக்குள் நுழைந்து தன் பிரீப்கேஸை வைத்துவிட்டு, மற்றொரு வாயில் வழியாக அறுவை சிகிச்சை அரங்குக்குச் செல்ல, அவரது வரவை எதிர்பார்த்துக் காத்திருந்த செவிலியர்களும் இளைய மருத்துவர்களும் அவர் தென்பட்டதும் விரைப்பாக அறுவை சிகிச்சைக்கான ஏற்பாட்டில் கவனமாயினர்.

உள்ளே நுழைந்தவர், கண்களை எல்லா திசைகளிலும் செலுத்திவிட்டு “ஷான்வி எங்க?” என்று இரண்டே வார்த்தையில் கேள்வியை முடிக்க,

“டாக்டர் ஷான்விக்கு இன்னிக்கு வேற அப்பாயின்ட்மெண்ட் இருக்குன்னு சொல்லிட்டாங்க டாக்டர்.” என்று பயந்தபடி பதிலளித்த செவிலியரை ஒரு பார்வை பார்த்தவர்,

தன் முன்னே கிடத்தப்பட்டிருந்த நோயாளியின் நெஞ்சுப்பகுதியை ஸ்கேல்பல் கொண்டு இரண்டாகக் கிழித்தார். கேஜெய் வைத்து அக்கிழிசலை தன் அறுவை சிகிச்சைக்கு தகுந்த அளவுக்கு அகலமாக்கியவர் உள்ளே துடிக்க சிரமத்துடன் இருந்த அந்நோயாளியின் இதயத்திற்கு தேவையான சிகைச்சையை மேற்கொள்ளலானார்.

அவர் அறுவை சிகிச்சை செய்து கொண்டிருந்த அவ்வேளையில் அம்மருத்துவமனையின் மேல் தளத்தில் காற்றில் தன் சேலை படபடக்க தான் அணிந்திருந்த வெள்ளைக் கோட்டினுள் கைகளைவிட்டபடி நின்றிருந்தாள் ஷான்வி.

அவள் முகத்தில் இன்னதென்று கண்டறிய முடியாத வலி மிகுந்திருந்தது. தொலைவில் தெரிந்த ஏதோ ஒரு கட்டிடத்தை வெறித்துகொண்டிருந்த அவளை இயலாமையோடு பார்த்துவிட்டு கீழிறங்கிச் சென்றார் அம்மருத்துவமனையின் தலைமை செவிலியரான சுகந்தி.

ஷான்வி கிருஷ்ணமூர்த்தி. இந்த கிருஷ்ணா க்ரூப் ஆப் ஹாஸ்ப்பிட்டல்ஸின் ஒரே வாரிசான அவளுக்கு என்ன குறை இருந்துவிட முடியும்.

எம்.பி.பி.ஸ் படித்தவுடன் எந்த சிக்கலும் இல்லாமல் அவர்கள் மருத்துவமனையிலேயே ஹவுஸ்சர்ஜனாக பணியில் சேர்ந்தாள்.

கிருஷ்ணமூர்த்தி இதய நிபுணர் எனில், அவர் மனைவியும் ஷான்வியின் அன்னையுமான கீர்த்தியோ பெண்கள் மற்றும் மகப்பேறு சிறப்பு மருத்துவர்.

இருவரும் இந்த மருத்துவமனை குழுமத்தை உருவாக்க தங்களது வாழ்நாளின் அத்தனை நாட்களையும்,உழைப்பையும் முதலீடாக போட்டிருக்க, ஷான்விக்குக் கிட்டியதோ தனிமையையும் வெறுமையும் தான்.

பள்ளிக்காலம் தொட்டு கல்லூரி வரை அவளுக்கான எந்த நிகழ்ச்சிக்கும் அவள் பெற்றோர் வந்து நின்றதில்லை. பள்ளி முடிந்து மருத்துவமனை வந்தால் இரவு பாதி நாட்கள் அவள் வாசம் மருத்துவமனையில் தான் என்று எழுதப்பட்டிருந்தது.

அன்னை தந்தைக்கு அருகிலேயே இருந்தாலும் அவர்களோடு ஒரு வார்த்தையும் பேச முடியாமல் தான் பெற்ற மதிபெண்களையோ, தான் செய்த செயல்களையோ அவர்களுடன் பகிர முடியாமல் கண்ணாடிக்கு வெளியே நின்று அருங்காட்சியகத்தில் உள்ள பொருளை பார்ப்பது போல தன் பெற்றோரை பார்த்திருந்தாள் ஷான்வி.

கல்லூரிக்கு சென்ற பின்னாவது அவளது தனிமை தீரும் என்று நினைத்திருக்க அவர்கள் அவளை அனுமதித்ததோ பணக்கார சீமான்களின் பிள்ளைகள் பயிலும் வெளிநாட்டு மருத்துவக்கல்லூரியில்.

அங்கும் தனிமையையே தனக்கான துணையாகக் கொண்டிருந்த ஷான்விக்கு மருத்துவமனையில் இணைந்த பின்னாவது நிம்மதி கிடைக்கும் என்று எண்ணியிருக்க,

ஒரு வாரமாக அன்னையும் தந்தையும் அவளை தங்களது துறையை மேல்படிப்புக்கு தேர்ந்தெடுக்குக்குமாறு வற்புறுத்தி வந்தனர்.

அதன் முதல்கட்டமாக இன்றைய அறுவை சிகிச்சைக்கு தந்தைக்கு அடுத்த நிலையில் உள்ள இளைய மருத்துவராக அவள் செயல்படவேண்டும் என்று அவர் உத்தரவு பிறப்பித்திருக்க, அன்னையோ அன்றைக்கு நடைபெறவிருக்கும் மகப்பேறு அறுவை சிகிச்சைக்கு அவளை கலந்து கொள்ளும்படி கூறி இருந்தார்.

அன்னைக்கும் தந்தைக்கும் இடையில் மாட்டிக்கொண்டு ஷான்வி படும் துன்பத்தை சிறுவயத்திலிருந்தே கவனித்து அவளுக்கு ஆதரவாக இருந்தவர் தலைமை செவிலியரான சுகந்தி மட்டுமே. கீர்த்தி ஷான்விக்கு வாய் வார்த்தையில் தான் அன்னை. ஆனால் அவள் மேல் உண்மையான அக்கறை கொண்ட அன்னையென்றால் அது சுகந்தி மட்டுமே.

ஆனால் இன்றைய பிரச்சனைக்கு சுகந்தியிடம் கூட விடையிருக்கவில்லை.

அன்னையையும் தந்தையையும் எப்படி சமாளிப்பது என்று ஷான்வி குழம்பி இருப்பதாக எண்ணிய சுகந்திக்குக் கூட அவள் மனதில் இருக்கும் தனிமையோ,ஏக்கமோ முழுமையாக புரிந்திருக்க வாய்ப்பில்லை.

அவளது பிரச்சனை அன்னையா தந்தையா என்று தேர்ந்தெடுப்பது அல்ல, அவளது தனித்தன்மை என்ன என்பதை அவர்களுக்கு எப்படி புரியவைப்பது என்பது தான்.

குழந்தைகள் நல மருத்துவத்தில் அதிக நாட்டம் கொண்ட ஷான்வி சென்னை வந்ததுமே மேல்படிப்புக்கு விண்ணப்பித்து பாதி ஆண்டு படிப்பையே முடித்திருந்தாள் என்பது இன்று வரை அவள் பெற்றோர் அறியாத உண்மை.

இதை அவர்களுக்கு எப்படி எடுத்துச் சொல்வது என்று எண்ணியபடி நின்ற ஷான்வியின் விழிகளில் மருத்துவமனைக்கு குடும்பமாக தன் வீட்டின் புதிய உறுப்பினரைப் பார்க்க திரண்டிருந்த கூட்டத்தைக் கண்டதும், தனக்கும் இப்படி உறவுகள் சூழ ஒரு வாழ்வு கிடைக்காதா என்ற ஏக்கம் பெருமூச்சாக வெளியானது.

❤️❤️❤️