உறவாக அன்பில் வாழ – எபிலாக்

மாலை மருத்துவமனையில் இருந்து கிளம்பிக்கொண்டிருந்தார் கீர்த்தி.

அவரது செல்போன் விடாமல் ஒலி எழுப்ப, சலித்தவராக, அருகில் இருந்த கணவன் கையில் அதைக் கொடுத்தவர்,

“ஆனாலும் உங்க பொண்ணு இப்படி புகுந்த வீட்டுக்கே கொடி தூக்க வேண்டாம். அதான் வர்றோம்னு சொல்லிட்டோம்ல. அப்பறம் அரை மணி நேரத்துக்கு ஒரு தடவை போன் பண்ணாட்டி என்ன?” என்று கூறினார்.

“விடு. இதுவரைக்கும் நான் ஷான்வியை இவ்ளோ சந்தோஷமா பார்த்ததே இல்ல. அதை நெனச்சு நாம சந்தோசப்படணும்.” என்றவர் அழைப்பை ஏற்றதும்,

“பா, கிளம்பியாச்சா? எங்க இருக்கீங்க?” என்று உரிமையோடு விசாரித்தாள் ஷான்வி.

“இப்போ தான் மா ஹாஸ்பிடல்ல இருந்து கிளம்பறோம். வீட்டுக்கு போய் ரெஃப்ரெஷ் பண்ணிட்டு இன்னும் அரை மணி நேரத்துல உன் வீட்டுக்கு வந்துடுவோம். நாளைக்கு தானே மா விசேஷம்? ஏன் இப்படி அவசரப்படுற?” என்று வினவினார்.

“அதெல்லாம் நேர்ல வாங்க சொல்றேன்.” என்று சொன்னவள் அழைப்பை துண்டித்தாள்.

இருவரும் கிளம்ப,அங்கே வீட்டில் மாமியாரோடும் சித்ராவோடும் வம்பு வளர்த்தபடி அவர்கள் கையில் மருதாணி வைத்துக்கொண்டிருந்தாள் ஷான்வி.

“எங்களை ஏன் சாவி இப்படி பாடுபடுத்துற நாங்க என்ன சின்ன பிள்ளைங்களா?” என்று சித்ரா சிணுங்க,

“அட சித்தி சும்மா இருங்க, சின்ன பிள்ளைங்க தான் கோன் வைக்கணுமா என்ன?” என்று அதட்டி அவர் விரல்களில் கோலமிட,

ஏற்கனவே முடித்து விட்ட மருதாணி காய காத்திருந்தார் முத்துலட்சுமி.

“நீ எப்ப டா வச்சுக்குவ?” என்று வாஞ்சையாக அவர் வினவ,

“நான் எதுக்கு இருக்கேன். இன்னிக்கு நைட் ஈவேன்ட் நடக்கும்போது அவளுக்கு வச்சு விட்டுடுவேன்.” என்று கையில்  ஒரு வயது சந்தோஷியோடு வந்தாள் ஷிவானி.

குழந்தை ஷான்வியிடம் தாவ, “ஆனாலும் நீ இப்படி அவளோட ஒட்டுபுல்லா இருக்க வேண்டாம் டி” என்று மகளை தாடையில் செல்லமாக இடித்தவள் ஷான்வியிடமிருந்த கோனை தான் பெற்றுக்கொண்டு மகளை அவளிடம் கொடுத்தாள்.

“வாங்க டி தங்கம்” என்று வாங்கி கொஞ்சிய ஷான்வி, அவள் தன் லேசாக மேடிட ஆரம்பித்திருந்த வயிறை இடித்துவிடாமல் வாகாக இடுப்பில் அமர்த்திக்கொண்டாள்.

கிருஷ்ணமூர்த்தியும் கீர்த்தியும் வந்துவிட,

“அப்பா மாடில செகண்ட் ரூம்ல மாமா, பெரியப்பா, சித்தப்பா எல்லாரும் இருக்காங்க. ஜாயின் பண்ணிக்கோங்க.” என்று சொல்ல,அவரோ சங்கடமாக மாடி ஏறினார்

அவர் எப்பொழுதும் மருத்துவமனை கான்பிரன்ஸ் என்று அலைந்து பழகியவர் அவர் இப்படி விழா, கொண்டாட்டம் என்று வருவதே கிடையாது. மகளின் அதீத அழைப்புகளால் வேறு வழி இல்லாமல் வந்தவர்,  அவ்வறையை அடைய,

அங்கே விநாயகம், சமரன், ராஜராஜன் மூவரும் கட்டிலில் அமர்ந்து சீட்டு விளையாடுவதைக் கண்டு வியப்புடன் அனுமதி கேட்டு கதவை தட்டினார்.

“சும்மா வாங்க சம்மந்தி. என்ன பார்மாலிட்டி” என்று அவரையும் தங்களுடன் சேர்த்துக்கொண்டவர்கள் அடுத்த அரை மணி நேரத்தில் கிருஷ்ணமூர்த்திக்குள் அந்நியனாக ஒளிந்திருந்த இருந்த காமெடி கிங், சீட்டு விளையாடும் சிங்கம் ஆகியவர்களை வெளியே கொண்டு வந்திருந்தனர்.

செந்தூரனும் சரணும் ஷியாமும் ஏதோ வேலையாக வெளியே சென்றிருந்தவர்கள் உள்ளே நுழைய சந்தோஷி சரணிடம் தாவினாள்.

“உன் விக்கெட்டும் போச்சா?” என்று செந்தூரன் ஷான்வியை கேலி பேச, அவளோ,

“போங்க அண்ணா பிள்ளை சந்தோஷமா இருக்கால்ல.. அதை பாருங்க” என்று அவர்களுக்கு குடிக்க குளிர்பானம் எடுத்து வந்தாள்.

அதை தன்னிடம் நீட்டிய மனைவியை காதலோடு பார்த்த சரண்,

“மாமா எங்க?” என்று கிருஷ்ணமூர்த்தியை விசாரித்தான்.

அப்பொழுது அவர்கள் நால்வரும் சிரித்தபடி வர, தன் கணவரின் இயல்பான முகத்தைக் கண்டு கீர்த்திக்கு ஒரே ஆச்சரியம் தான்.

அவர் கையில் ஷிவானி மருதாணியால் டிசைன் வரைய,

“உன் கைக்கு அந்த டிசைன் நல்லா இருக்கு கீர்த்தி” என்று கிருஷ்ணமூர்த்தி கூற  உலக அதிசயம் நிகழ்ந்ததைப் போல விழிக்க ஆரம்பித்தார் கீர்த்தி.

மகளிடம் தனிமையில் கேட்க நினைத்ததை அது கிடைக்காத காரணத்தால் குரலை தாழ்த்திக்கொண்டு வினவினார் கீர்த்தி.

“ஷான்வி நாளைக்கு தானே ஃபங்க்ஷன் இன்னிக்கே ஏன் கூப்பிட்ட” என்று கேட்க,

“நான் சொல்லலாமா அத்தை?” என்று அவர் அருகில் அமர்ந்தான் சரண்.

“தினமும் காலைல அரக்க பறக்க ஓடுறோம், வர்றோம் சாப்பிடுறோம், ஏதோ போனது வந்ததுன்னு பேசுறோம், வாரக்கடைசில யாராவது ஒருத்தரை மீட் பண்றோம். அப்பறம் சக்கரம் மாதிரி வாழ்க்கை இப்படியே தான் சுத்துது” என்று கூற,

“அப்படி இருக்கற நேரத்துல ஒரு மாற்றமா தானே விஷேஷமெல்லாம் வருது” என்று அவர் எடுத்துக்கொடுக்க,

“சரி நாளைக்கு விஷேஷத்துக்கு வந்து சேர்ல உட்கார்ந்து ரெண்டு செல்பி, கூட நின்னு ஒரு போட்டோ எடுத்துட்டா நம்ம உறவு பலமா இருக்குமா? அதை விட நாளைக்கு நண்பர்கள், கூட வேலை செய்யறவங்களுக்கு மத்தியில ஓடி அவங்களை கவனிக்கவே நேரம் சரியா இருக்கும். எல்லாம் முடிஞ்சதும் பேசலாம்ன்னு நினைப்போம். ஆனா வேலை பார்த்த அயர்ச்சில அது முடியாமலே போயிடும். அப்பறம் பழைய படி, காலை டு மாலை, வாரக்கடைசி கதை தான். இதுவே முதல் நாள் கொஞ்சம் நமக்காக டைம் எடுத்து பேசி சிரிச்சு, வேண்டியதை எடுத்து வச்சு, நைட் எல்லாரும் சேர்ந்து வீட்ல ப்ரொஜெக்டர் வச்சு ஒரு படம் பார்த்து, சிரிச்சு..யோசிச்சு பாருங்க| என்று சரண் கூற,

மாடியில் சீட்டு விளையாடும்போது தான் எப்படி இருந்தோம் என்று உணர்ந்திருந்த கிருஷ்ணமூர்த்திக்கு சரண் கூற வருவது புரிந்தது.

“நாம வாழறதே சந்தோஷமா இருக்க தான். சம்பாதிக்கிறது நம்ம தேவைகளை தீர்க்க தான். ஆனா சம்பாதிக்கிறது தான் பிரதானம்னு ஆகி, குடும்ப விசேஷங்களுக்கு நேரத்துக்கு போயிட்டு எல்லாரையும் பார்த்து தலையை மட்டும் ஆட்டிட்டு வந்துடறோம். சோஷியல் மீடியால ஆயிரம் கதை பேசினாலும் நேர்ல கையை பிடிச்சு நல்லா இருக்கீங்களான்னு கேட்கறது போலவோ, விளையாடி சிரிக்கிறது போலவோ வருமா?” என்று சமரன் கேட்க,

கீர்த்தி ஆமோதிப்பாக தலையசைத்தார்.

“சரி எல்லாரும் ரெடியா? நான் புதுசா ஓடிடில ரிலீஸ் ஆனா படம் எடுத்து வச்சிருக்கேன்.” என்று ஷியாம் படம் பார்க்கத் தேவையான வேலைகளில் இறங்க,

அனைவரும் ஜோடி ஜோடியாக அமர்ந்து படத்தை ரசிக்க ஆரம்பித்தனர்.

சந்தோஷியை கையில் வைத்திருந்த ஷியாம். இவர்கள் கோறிக்க எடுத்துக்கொண்ட இடைவெளியில்,

“பாரு பேபி எல்லாரும் ஜோடியா உட்கார்ந்து என்னையும் உன்னையும் கழட்டி விட்டுட்டாங்க.” என்று சோக கீதம் வாசிக்க,

“நானும் தனியா தான் டா இருக்கேன். என் பேத்தியை கொடுத்துட்டு  வேணா நீ சைட் அடிக்கிற பக்கத்து வீட்டு பொண்ணை கூட்டிட்டு வந்து ஜோடியா படம் பாரு” என்று அவனை வாரினார் ராஜராஜன்.

அறை முழுவதும் சிரிப்பலை பரவ, அன்றைய இரவு இனிமையான உறவுகளின் சங்கமமாக இருந்தது.

மறுநாள் அழகாக பொழுது புலர, மனையில் அலங்காரமாக வந்து கணவன் அருகில் அமர்ந்தார் முத்துலட்சுமி.

ஆம் இன்று அவர்களின் அறுபதாவது திருமணம். கணவர் அருகில் வெட்கம் பூசிய முகமாய் அவர் இருக்க,

“முத்து மருதாணி அழகா சிவந்திருக்கு. என் மேல அவ்ளோ அன்பா?” என்று விநாயகம் கேட்க,,

“இல்ல பெரிய மாமா. வாங்கின கோன் கம்பனி நல்ல பிராண்ட்” என்று பின்னாலிருந்து வம்பு வளர்த்தான் ஷியாம்.

செந்தில், கங்கம்மா எல்லாம் குடும்பமாக விழாவுக்கு வந்திருக்க, சிவபாலன் ஒரு மலர்செண்டுடன் வந்திருந்து அவர்களிடம் ஆசி பெற்றான்.

மனைவியின் கழுத்தில் திருமாங்கல்யம் பூட்டிய விநாயகம், இனி ஒருநாளும் அவள் வருந்தும்படி நடப்பதில்லை என்று உறுதி ஏற்க,

எப்பொழுதும் போல குடும்பம் அமைதியும் நிம்மதியுமாக இருக்க தன்னால் ஆவன செய்வதாக சங்கல்பம் செய்து கொண்டார் முத்துலட்சுமி.

இளையவர்கள் பெரியவர்களின் திருமணத்தை நிகழ்த்தி வைத்து மகிழ, செந்தூரன் ஷிவானியை சீண்டிக்கொண்டே இருந்தான்.

“என்ன டா இப்படி இம்சை பண்ணுற?” என்று அவள் சிணுங்க,

“சாரி டி நம்ம கல்யாணம் நடந்தப்ப கூட நாம நார்மலா இல்ல. பாப்பாவை நீ சுமந்தப்ப எந்த விதத்திலும் நான் உன்னோட இல்ல. அடுத்த பேபி வரும்போது முழுசா நான் தொலைச்ச எல்லாத்தையும் அனுபவிக்கணும் டி வானி” என்று அவளை கரம் பற்றி அணைத்துக்கொண்டான்.

ஷான்வி தன் மேடிட்ட வயிருடன் எல்லா வேலைகளையும் ஓடி ஓடி செய்ய கீர்த்தி அவளை கடிந்து கொண்ட போது, அவளுக்கு ஜூஸ் கொடுத்து அமர்த்திவிட்டு,

“அவ ரொம்ப ஆசையா எல்லாம் செய்ய நினைக்கிறா அத்தை. ப்ளீஸ் எனக்காக அவளை ஒன்னும் சொல்லாதீங்க. நான் நைட் அவளுக்கு சுடுதண்ணில ஒத்தடம் கொடுத்து நல்லா பார்த்துக்கறேன். அவ இப்போ சந்தோஷமா இருக்கட்டும்” என்று சரண் கூற, அவர் அமைதியாக இருந்து கொண்டார்

அனைவரும் வைபவம் முடிந்து முத்துலட்சுமி விநாயகத்திடம் ஆசி பெற்று கிளம்ப, ஷான்வி அனைவருக்கும் நினைவு பரிசை வழங்கி அனுப்பி வைத்தாள்.

எல்லாம் முடிந்து மீண்டும் குடும்பம் மட்டும் மீதமிருக்க, கீர்த்தி ஷான்விக்கு அருகில் ஏதோ பேச வந்து அமர்ந்தார்.

ஷான்வி கையில் சத்து பானத்தை ஷிவானி திணித்து விட்டுப் போக,

அவளுக்கு தனியாக ஏர் கூலரை கொண்டு வந்து வைத்தான் ஷியாம்.

அவள் தலையில் இருந்த பூக்களை சித்ரா அகற்றி விட, பின்னலை தளர பின்னி விட்டார் முத்துலட்சுமி.

அவர் சற்று நகர்ந்ததும், “பார்த்தியா மா. என் குடும்பம் என்னை எப்படி தாங்கறாங்க. இப்படி அன்போட சேர்ந்து வாழ தான் மா ஆசைப்பட்டேன்.” என்று கண்கலங்க அவள் கூறியதும்,

“புரியுது ஷான்வி” என்று அவளை தட்டிக்கொடுத்தார் கீர்த்தி.

உறவுகள் அன்பை வாரி வழங்கும்போது அவ்வன்பில் வாழ யாருக்குத் தான் பிடிக்காது.

அன்றைய இரவில் சரணின் கைவளைவில் படுத்திருந்த ஷான்வி, “நான் ரொம்ப ஹேப்பி சரண். எனக்கு கிடைச்ச உறவுகள் எல்லாமே வரம்.” என்று சொல்ல,

“நானும் தான் அதிர்ஷ்டம் பண்ணி இருக்கேன். இல்லன்னா இப்படி எல்லாரையும் அரவணைச்சு போகற தேவதை எனக்கு பொண்டாடியா கிடைக்குமா?” என்று அவள் கன்னம் கிள்ளினான்.

வயிற்றில் இருந்த குழந்தையின் அசைவுகள் அப்பொழுது தான் தெரிய ஆரம்பித்திருக்க, சரண் தீண்டியதும் அன்னையின் வயிற்றில் லேசாக அசைந்து கொடுத்த சிசுவை எண்ணி ஷான்வி பூரிக்க,

அவள் வயிற்றில் முத்தமிட்டு தன் வாரிசுக்கும் அன்பென்ற மொழியை கற்றுக்கொடுக்க ஆரம்பித்தான் சாய்சரண்.

கூட்டு பறவைகளாக அனைத்து உறவுகளுடனும் அன்பில் வாழ இந்த ஜோடிப் பறவைகள் மகிழ்ந்து திளைத்தன.

முற்றும்.