உருகுதே உள்ளம் நெகிழுதே நெஞ்சம் 6
Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels
வெளியூரில் படிப்பதற்காகவோ, வேலை செய்வதற்கோவென செல்லும் பிள்ளைகள் மாதத்தில் இரண்டு மூன்று வாரயிறுதி நாட்கள் ஊர் வரும் போது அப்பிள்ளைகளுக்கு அக்குடும்பத்தினர் அளிக்கும் சிறப்பு கவனிப்பிற்காகவே இவ்வாறு அடிக்கடி வெளியூர் சென்று வரலாமென தோன்ற வைக்கும் அப்பிள்ளைகளுக்கு.
அவ்வாறான கவனிப்பைத்தான் வாணி பெற்றுக்கொண்டிருந்தாள் அவளின் இல்லத்தில்.
அவளுக்கு பிடித்த வகை வகையான உணவும் தன்னறையில் தன் கட்டிலில் அனைத்தும் மறந்த நிம்மதியான உறக்கம் என அந்த இரு நாட்கள் அத்தனை நிம்மதி மன அமைதியை உணர்வாள்.
ஆனால் இம்முறை அவளின் மனம் அவளின் கட்டிலில் அவளின் தலையனையை அவள் கட்டிக்கொண்டு படுத்தப்போதும் அலைப்பாய்ந்து எங்கெங்கோ சுற்றித்திரிந்து தன் கட்டுக்குள் வர மறுத்தது. அதன் காரணம் ஆஷிக். அவனை தான் எண்ணிக்கொண்டிருந்தது அவளின் மனம்.
அவளின் தந்தை செல்வமும் அவளை கவனித்துக்கொண்டு தான் இருந்தார். அவளின் தாய் தந்தையிடம் அவள் இயல்பாய் பேசினாலும் அவள் கண்களில் தோன்றிய ஓர் அலைபுறுதல் அவள் எதையோ நினைத்து குழம்பிக் கொண்டிருக்கிறாளென அவருக்குப் பறைச்சாற்றியது.
அன்றைய வாரயிறுதி நாட்கள் நிறைவடைய இருந்த நிலையில் ஞாயிறு இரவு பெங்களுருக்கு திரும்பிச் செல்வதற்காய் அவளை கோயம்பேடு அழைத்துச் சென்றார் அவளின் தந்தை செல்வம்.
கோயம்பேடு பேருந்துநிலையம் சென்றடைந்த நிலையில், அங்கு ஆஷிக் ஏற்கனவே வந்து காத்திருக்க,
“ஹேய் ஆஷிக்… சீக்கிரம் வந்துட்டியா??… இரண்டு நாளா ப்ரண்ட்ஸோட நல்லா ஊரு சுத்துனியா?…” என பூரிப்பான புன்னகையுடன் அவனருகில் நின்று கேட்டுக் கொண்டிருந்தாள் வாணி.
ஆஷிக்கை கண்டதும் வாணியின் கண்களிலிருந்த அலைப்புறுதல் நீங்கி பூரிப்பால் பளப்பளப்பதைக் கண்ட வாணி தந்தையின் முகம் யோசனையில் சுருங்கியது.
ஆயினும் அவளிடம் எதுவும் கேட்டுக்கொள்ளவில்லை அவர்.
மஹாலட்சுமி ஏதோ அவசர வேலையால் திங்கட்கிழமை விடுப்பு எடுப்பதாகவும் ஆகையால் அன்றிரவுப் பேருந்தில் அவள் வரப்போவதில்லையென்றும் வாணிக்கு குறுஞ்செய்தி அனுப்பியிருந்தாள்.
ஆக ஆஷிக் மற்றும் வாணி மட்டுமே அன்று பயணிப்பதாய் ஆயிற்று.
ஆஷிக் வாணியின் தந்தையிடம் வழமைப் போல் வாணியை தான் பார்த்துக் கொள்வதாய் உரைத்து பேருந்திலேற, எப்போதும் அவனின் இச்சொல்லில் நிம்மதிக் கொள்ளும் வாணியின் தந்தை இப்பொழுது இச்சொல்லில் கலக்கம் அடைந்தார்.
மறுநாள் பெங்களுரை அடைந்த இருவரும் வழமை போல் சேர்ந்தே எலக்ட்ரானிக் சிட்டி அலுவலகத்திற்கு சென்றனர்.
திங்கட்கிழமை விடுப்பெடுப்பதாய் கூறியிருந்த மஹா செவ்வாய் கிழமையும் சேர்த்தே விடுப்பெடுத்து அன்றிரவு பெங்களூர் வந்துச் சேர்ந்தாள்.
“என்னடி திடீர்னு இரண்டு நாள் லீவ்? போன் கூட ஸ்விட்ச் ஆஃப்னு வந்தது… அப்படி இல்லனா நாட்ரீச்சபிள்னே வந்தது” வாணி மஹாவிடம் வினவ,
“மதிய பார்க்க போயிருந்தேன்டி” மஹா கூற,
“என்னது மதியவா?அப்ப ஹைத்ராபத்தா போயிருந்த?” வேணிக் கேட்க,
“ஆமாடி… அவனுக்கு அக்சிடெண்ட்டி” என மஹா முடிக்கும் முன்,
“என்னது ஆக்சிடெண்ட்டா?” என வாணி வேணி ஒருசேர கேட்க,
“அடியேய் சும்மா இருங்கடி… வடிவேலு மாதிரி ஏ ஏ னு கூவிக்கிட்டு. என்னைய பேச விடுங்கடி” என மஹா அதட்ட,
வாணி வேணி இருவரும் குரங்கு பொம்மை போல் வாயில் கை வைத்து நிற்க,
பக்கென்று சிரித்துவிட்டாள் மஹா.
“ஹப்பா சிரிச்சிட்டியா… வந்ததுலருந்து ரொம்ப மூடியாவே இருந்தியே… ரொம்ப அடியா மதிக்கு” என வாணி வினவ,
“சே சே இல்லடி… அவன் போன்ல சின்ன ஆக்சிடண்ட் தானு சொன்னான். நான் தான் நம்பாம பெரிய சீனாக்கி… பாவம் அப்பாவ வேற அலையவிட்டுடேன்… ஆமா அப்பாவும் நானும் தான் ஹைத்ரபாத் போனோம்… அப்பா அங்கிருந்து சென்னை போய்டாங்க… நான் இங்க வந்துட்டேன்” என மஹா கூறிக் கொண்டிருக்க,
“மதி அவ்ளோ க்ளோஸா உங்க பேமிலிக்கு” என வாணி கேட்க,
“ஆமாடி மதிக்கு பெரிய நன்றிக்கடன் பட்டுருக்கேன் நான்… ஆனா இந்த நன்றிகடன்ங்கிற வார்த்தையைச் சொன்னாலே கோவம் வரும் அவனுக்கு” என மதியின் நினைவில் மஹாவின் முகம் மென்மையாய் மின்ன,
தன் வாழ்வில் மறக்கமுடியா அந்த நாளை, அந்நாளின் பற்றிய நினைவுகளில் மூழ்கியவள் அவற்றை கூறலானாள்.
அதே நேரம் ஹைதராபாத்தில் தன்னறையின் கட்டிலில் படுத்திருந்த மதியின் மனமும், தனக்கும் மஹாக்கும் மறக்கமுடியா நாளாய் மாறிப்போன அந்நாளை தான் எண்ணிக்கொண்டிருந்தது.
எட்டு மாதங்களுக்கு முன்பு
அன்றைய மஹா மதி சந்திப்பிற்குப் பின் மதி மஹாவின் நெருங்கிய தோழன் ஆனான்.
மதி மஹாவின் இல்லத்தில் ஒருவனாய் அவளின் குடும்ப நண்பனாய் பாவிக்கப்பட்டான்.
நான்கு வருட பொறியியல் படிப்பை மே மாதம் முடித்து விட்டதும் எம்பிஏ படிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தாள் மஹா.
மதி கடைசி தேர்வு முடிந்த மறுநாளே தனக்கு பணி நியமனக் கடிதமளித்த அந்த மென்பொருள் நிறுவனத்தில் பணிசேர்ந்துவிட்டான்.
அன்று காலை மதி தன் அலுவலகத்தின் நுழைவாயிலருகே சென்றுக் கொண்டிருக்க, அந்நேரம் அவன் அலுவலகமிருக்கும் அந்த நெடுஞ்சாலையை இருபெண்கள் அந்த பக்கம் வந்த இருசக்கர வாகனத்தின் வேகத்தை மதிப்பிடத் தெரியாது சட்டென்று கடந்து விடலாமென எண்ணிக் கடக்க முயல அவ்வாகனம் வந்த வேகத்தில் அப்பெண்களை இடித்துத் தள்ளியது.
இதைக் கண்ட மதி பதறியடித்து நெடுஞ்சாலைக்கு ஓடினான்.
இடித்த வேகத்தில் கீழே விழுந்த இருவரும் கை கால்களில் ரத்தம் கொண்டவர்களாக மூர்ச்சையாகி இருந்தனர்.
அதற்குள் மக்கள் கூட்டம் அவர்களைச் சுற்றிக் கூடிவிட மக்களை விலக்கிவிட்டு அப்பெண்களுக்கு உதவி செய்யவென குனிந்து அவர்களைப் பார்க்க, இதயத்துடிப்பு எகிறியது அவனுக்கு.
மஹா எழுந்திருடி… மஹா மஹாவென அவளை தன் மடியில் கிடத்தி கண்ணில் நீர்வழிய அவளின் கன்னத்தில் தட்டிக்கொண்டே இருந்தான்.
ஆம் அங்கே அடிப்பட்டுக் கிடந்தது மஹாவும் அவளின் கல்லூரித் தோழி சுமதியும்.
அவனின் மூளை மறுத்துப்போனது அந்நிலையில். அவளை அள்ளித் தன் மடியில் கிடத்தியவன் உடல் ஆவி அனைத்துமே மஹா மஹாவென கூக்குரலிட தலையில் அடுத்திக் கொண்டு பிதற்றியவன், அடுத்து என்ன செய்யவென அறியா நிலையில் அவளை தன்னோடு இறக்கி அணைத்து கதறிக்கொண்டிருந்தான்.
கண்களில் நீர் ஆராய் வழிய “என்னாச்சுடி மஹா உனக்கு. அய்யோ ரத்தமா வழியுதே… என்னை விட்டு போய்டாதடி.” என அவளை அணைத்தவாறு அரற்றினான்.
அவர்களை சூழ்ந்த மக்களில் யாரோ ஆம்புலன்ஸிற்கு அழைத்திருக்க,
ஊர்தி வந்து நின்றது.
மஹாவை வண்டியில் ஏற்றவென அவனிடமிருந்து அவளை விலக்க முயல, அவளை யாரிடமும் தரமாட்டேன் என்பது போல் வந்தவர்களை உதறி தள்ளி அவளை தன் கை வளைக்குள் வைத்து நெஞ்சில் பொதிந்து வைத்துக்கொண்டான்.
கூட்டத்தில் ஒருவர் அவனிடம் நிலைமையைக் கூறி அவளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டுமெனக் கூற அப்போது தான் தன்நிலை வந்தவனாய் அவளை வண்டியில் ஏற்ற அனுமதித்தவன்,
அப்பொழுது தான் நினைவு வந்தவனாய் அவளுடன் சேர்ந்து அடிப்பட்ட பெண்ணை யாரென்று பார்க்க, அவளும் இவனுடன் கல்லூரியில் படித்தப் பெண் சுமதி என்பதை அறிந்தான்.
மருத்துவமனையில் இருவரையும் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்க,
மஹாவின் அறை வாசலில் அவளின் நிலை ஏற்படுத்திய மன வலியை தாங்க இயலாது கண்ணீருடன் நின்றிருந்தான்.
தன் சட்டையிலிருந்த அவளின் ரத்தத்தைக் கண்டவன்,”சின்ன ஊசி குத்தவும் பயப்படுவியேடா குட்டிம்மா… இவ்ளோ வலியை எப்படிடா தாங்குவ?” எனக் கதறி அழுதான்.
இரத்த கறையெல்லாம் நீக்கி உள்காயம் ஏதேனும் உள்ளதாயென பார்த்து தேவையான இடத்தில் கட்டுப்போட்டுயென டிரெஸ்ஸிங் முடித்தப்பின்னர் அவசரப் பிரிவிலிருந்து சாதாரண வார்டுக்கு மாற்றினர் இருவரையும். மயக்க நிலையில் தான் இருந்தனர் இருவரும்.
இருவருக்கும் உயிர் பிரச்சனையில்லையென அறிந்த பின்னரே அவனால் சீராக மூச்சுவிட முடிந்தது.
இருவருக்கும் கை கால்களில் சிறு முறிவு ஏற்பட்டுள்ளதாகவும், அடிபட்ட பயத்தில் தான் இருவரும் மயங்கிப் போயினர் என்றும் இரண்டு நாட்களில் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகிவிடலாம் என்றும் பெரும் பிரச்சனை ஏதுமில்லை இருவருக்கும் என கூறிவிட்டார் மருத்துவர்.
இருவரின் குடும்பத்தினரும் வந்துக் கொண்டிருந்தனர் மருத்துவமனைக்கு.
மஹாவின் அறையின் வெளியுள்ள நாற்காலியில் அமர்ந்திருந்தவனின் மனம் மஹாவின் அடிப்பட்ட முகத்தை, தன் கண் முன் அவளுக்கு நிகழ்ந்த அந்த விபத்தை எண்ணியே பெரும் வலியில் சிக்குண்டிருந்தது.
ஒருவாறாய் மஹாவிற்காய் இத்தனை நேரம் கதறி கத்திக் கூப்பாடு போட்ட அவனின் மனம் சமன்பட தன் கண்ணீரைத் துடைத்தவன்,
கண் மூடி தலை சாய்த்தான் அந்த நாற்காலியில்.
அவனின் மூடிய விழிகளில் சில மாதங்களாய் குழம்பிக் கொண்டிருந்த அவனின் மனக்குழப்பத்தின் தீர்வை கண் முன் நிறுத்தியது அவனுக்கு.
கல்லூரிப் படிப்பு முடிந்தப் பிறகு…. இனி அவளை தினமும் காண இயலாது என்கின்ற நிதர்சனத்தை அவனின் மூளை உரைக்க, அவனின் மனம் அவளை விட்டுப் பிரிய இயலாதென உரைத்தது அவனுக்கு. அவள் தன்னுடனேயே இருக்க வேண்டுமெனவும் அவனின் மனம் விரும்புவது அவனுக்கு உரைக்க, அவள் மீது தான் கொண்ட அன்பிற்கு பெயர் என்ன? அது வெறும் நட்பு தானா என்கின்ற குழப்பத்தில் சுற்றிக்கொண்டிருந்தவனின் மனம் அக்கேள்விக்கான விடையை இன்று உணர்த்தியது. இத்தகைய நிலையிலா தன் காதலை தான் உணர வேண்டுமென துடிதுடித்தது அவனின் மனம்.
உடனே மஹாவைப் பார்க்கவென மனம் பரபரக்க, மஹா இருந்த அறைக்குச் சென்ற மதி,
கை கால்களில் கட்டுப்போடப்பட்ட நிலையில் மருந்தின் உபயத்தால் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவளின் அருகில் சென்றவன்,
அவளருகில் அமர்ந்து அவளின் முடியைக் கோதி நெற்றியில் மென்மையாய் முத்தமிட்டான்.
“கொஞ்ச நேரத்துல என் உயிர் போற வலியை காமிச்சிட்டியேடி குட்டிம்மா… இன்னும் உன் ரத்தம் தொட்ட இந்த கை நடுங்கிட்டு தான்டி இருக்கு… உன்னை அந்த நிலைமையில் பார்க்க முடியாம நான் துடிச்சது தவிச்சதுலாம் நீ என் மனசுல என்னவா இருக்கனு எனக்கே காமிச்சிடுச்சு மஹா… ஐ லவ் யூ மஹா… என் அடி மனசுல இருக்கும் அந்த வலியோட உனக்காக இன்னும் படபடப்பாய் துடிச்சிட்டு இருக்க அந்த இதயத்துடிப்போட சொல்றேன் ஐ லவ் யூ மஹா… இனி நீ இல்லாத வாழ்வு இல்லைனு அந்த நிமிஷத்துல உணர்ந்தேன்டி… உன்னை என்னிக்கும் யாருக்காகவும் விட்டுதர மாட்டேன்டி… ஐ லவ் யூ டி கண்ணம்மா”
கண்ணில் நீர் வழிய ஒரு கை அவளின் நெற்றியிலிருக்க மறு கை அவளின் டிரிப்ஸ் ஏறிய கையை பிடித்திருக்க உறக்கத்திலிருந்தவளிடம் தன் அன்பை நேசத்தை கண்ணீருடன் கூடிய மொழியால் உரைத்துக் கொண்டிருந்தான் மதி.
மனதின் வலி இறுக்கம் அனைத்தும் அவன் உரைத்த இந்த காதலினால் மாயமாய் மறைந்துப் போனதை எண்ணி மெல்லியதாய் சிரித்துக் கொண்டான்.
“காதல் செய்யும் மாயம் இதுதானோ”
அவன் இதழ் விரிந்தது இப்பொழுது அவன் மனம் கூறிய இவ்வரிகளில்.
மஹாவிடம் மெல்லியதாய் அசைவு தெரியவும் அவளின் குடும்பத்தினர் வரவும் சரியாக இருந்தது.
அவள் காலில் தசை விலகியுள்ளதாகவும் கைகளில் முறிவு ஏற்பட்டுள்ளதாகவும் மருத்துவர் கூறியதை உரைத்தவன், மருத்துவரைக் கண்டு முழு விபரம் கேட்டு வரலாமென அவளின் தந்தையை அழைத்து வெளியே வந்துவிட்டான்.
விழித்ததும் வலியால் அவள் படும் வேதனை காண சகிக்கயிலாதெனவே வெளி வந்துவிட்டான்.
மனதில் காதலை வைத்துவிட்டு நண்பனாய் பழக மனமில்லை அவனுக்கு. இச்சூழலில் காதலை உரைப்பதும் சரியில்லை என்பதை உணர்ந்தவன் அவள் நலமாகி வந்ததும் கூறலாமென முடிவெடுத்தான். ஆனால் அதன் பிறகும் அவளிடம் காதலை கூறும் நிலை வராது போனது அவனுக்கு.
மஹா மற்றும் சுமதி, மதியின் அலுவலகத்தினருகிலிருக்கும் கல்லூரிக்கு எம்பிஏ விண்ணப்ப படிவம் வாங்கவென அன்று வந்திருந்திருந்தனர் என்று மஹாவின் தந்தை மூலம் அறிந்துக் கொண்டான் மதி.
மஹா மற்றும் சுமதி இருவரும் அவர்களின் தாய்மார்களின் கவனிப்பிலேயே மூன்று மாதத்தில் ஓரளவு எழுந்து நடந்து தங்களின் வேலையைத் தானே செய்யுமளவு உடல்நிலை தேறினர்.
அந்த மூன்று மாதமும் தினமும் மாலை அவளுக்குப் பிடித்த ஐஸ்க்ரீம் அல்லது பாசுந்தியுடன் தான் அவளைச் சந்தித்தான் அவளின் இல்லத்தில்.
நான்கு சுவருக்குள்ளேயே வீட்டை விட்டு வெளியே செல்லாமல் இருப்பது மஹாவை பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்தது. மாலை மதி அவளைக் காண வரும் நேரமே பொன்னான நேரமாய் தோன்றியது அவளுக்கு.
அவளின் இம்மன உளைச்சலை அறிந்தவன் அவளை மென்பொருள் நிறுவனத்தின் நேர்முகத் தேர்வுக்கு தயார் செய்துக் கொள்ளச் சொன்னான்.
அடுத்து வந்த மாதத்தில் நிகழ்ந்த அந்த மென்பொருள் நிறுவனத்தின் நேர்முகத் தேர்வுக்கு அவளின் பெற்றோரிடம் நிறைய பேசி சம்மதம் பெற்று தன்னுடன் அவளை அழைத்துச் சென்றான்.
அப்பொழுது கிடைத்தது தான் அவள் செய்யும் இந்த மென்பொருள் வேலை.
மஹாவிற்கு பெங்களுரில் பணி நியமன ஆணை வழங்க, அதே சமயம் மதியின் அலுவலகத்தில் அவனுக்கு ஹைதரபாத் ப்ராஜக்ட் அளித்து அவனை அங்கே செல்லுமாறு ஆணையிட்டனர்.
மஹாவின் உடல் தேறி வரும் இந்நிலையில் மஹாவை தனியாய் பெங்களுர் அனுப்ப அவளின் பெற்றோர் முற்று முதலாய் மறுக்க, மதி அவளுக்காய் அவளின் பெற்றோரிடம் பேசி அனுமதி வாங்க பெரும் முயற்சி செய்தான்.
இதற்கு மேல் தனக்கு எம்பிஏ படிக்க விருப்பமில்லை என்றும் வேலைக்கு செல்வது தனக்கு பெரும் மாற்றத்தை தருமென மஹா எடுத்துக் கூறியும், அவளின் பெற்றோர் எதற்கும் மசியாமல் போக, உண்ணாவிரதம் இருந்து அவளின் பெற்றோரை சம்மதிக்க வைத்திருந்தாள் மஹா.
மஹா கூறியதைக் கேட்டுக் கொண்டிருந்த வாணி மற்றும் வேணியின் கண்களில் நீர் தேங்கியிருந்தது.
“அதனால தான் ரோடு க்ராஸ் செய்யும் போது அப்படி பயப்படுவியாடி? எங்க கைய இறுக்கமா பிடிச்சிக்குவியே… அது இதனால தானாடி?” என கண்ணீரைத் துடைத்துக் கொண்டு வாணி வினவ,
“ஆமாம்டி… அந்த ஆக்சிண்ட் என்னை ரொம்பவே பாதிச்சிடுச்சு… கிட்டதிட்ட மூனு மாசம் நடக்க முடியாம, என் கையால நானே எதுவுமே செய்ய முடியாமனு எல்லாத்துக்குமே அம்மா தான் உதவி செஞ்சாங்க… அப்பா எனக்காக என் வேதனையை பாத்து அழுத அழுகைலாம் என் வாழ்நாள்ல மறக்கவே முடியாதது… இப்படி அப்பா அம்மா கிடைக்க கொடுத்து வச்சிருக்கனும்டி… வீ ஆர் ஆல் பிளஸ்டு டூ ஹேவ் அவர் பேரண்ட்ஸ்… மதி என்னை அந்த வெறுமையான சூழலிலிருந்து மீட்டுக்கொண்டு வந்தவன்… அதனால அவன் எனக்கு ரொம்பவும் ஸ்பெஷல் ப்ரண்ட்”
“கண்டிப்பா இதை ஒத்துக்கிட்டு தான் ஆகனும்டி… இது எல்லாத்துக்கும் காரணம் என்னோட கேர்லெஸ்னஸ்(carelessness)… ஹைவேல எப்பவுமே நம்ம கணிக்குற தூரத்தை விட வாகனம் சீக்கிரமா கிராஸ் ஆயிடும்… அதனால ரொம்பவே கேர்புல்லா இருக்கனும் ரோடு க்ராஸ் செய்யும் போது… முக்கியமா வாகனம் வேகமா பறந்து வர ஹைவேல ரொம்பவே கவனமா இருக்கனும்.” என்று தன் அனுபவத்தை உரைத்துக்கொண்டிருந்தாள் மஹா.
“இப்ப எல்லாம் சரியாயிடுச்சுல மஹா. எங்கயும் வலி இருக்கா இன்னும். ஏன்டி நீ எங்ககிட்ட முன்னாடியே சொல்லலை” என மஹாவின் கைகளை வருடியபடி வேணி கேட்க,
“அப்டிலாம் எதுவுமில்லை அம்மு… ஐம் பர்பெட்லி(perfectly) ஆல்ரைட் நௌ… நீங்க ஏன் இப்டி சோக கீதம் வாசிக்கிறீங்க… நானே அதை ஈஸியா கடந்து வந்துட்டேன்… இப்டி அனுதாப பார்வைலாம் பார்க்காம ஒழுங்கா படுத்து தூங்குங்கடி”
“அப்றம் வாணி, இரண்டு நாளா உன் ஆளு கூட தான் ரவுண்ட்ஸா” என மஹா கண்ணடித்துக் கேட்க,
“அடிங்க யாரு பாத்து ஆளு சொல்ற… உன் வாய் அடங்காதாடி” என மஹாவை அடிக்கத் துரத்தினாள் வாணி.
அனைவரும் ஒரு வழியாக இரவுணவு உண்டு உறங்கத்திற்குச் செல்ல,
மஹாவிற்கு அவளின் நினைவு முன் தினம் மதியுடன் ஹைதராபாத்தில் நிகழ்ந்த அந்த உரையாடலை அசைப்போட்டுக் கொண்டிருந்தது.
மதி ஹைத்ராபாத்தில் ஒரு நண்பனின் இல்லத்தில் மேல் மாடி வீட்டில் தங்கிருந்தான். மஹா அவனை காண வருவதாய் கூறியிருக்கவில்லை.
ஹைதராபாத்தில் காலை இறங்கியதும் தான் கைப்பேசியில் மதியை அழைத்து முகவரி வாங்கினாள். ஆனால் அவள் அங்கு வந்ததற்காக வெகுவாய் அவளை திட்டிவிட்டே முகவரியை கொடுத்தான்.
அவனுடைய வீட்டை அடைந்ததும் அவனது வலதுக்கையிலிருந்த கட்டை பார்த்தும் அவளுக்கே அவ்வலியிருப்பது போல் அவளின் மனது வலித்தது.
அவளையும் அவளின் தந்தையையும் உபசரித்து அமர்ந்தவன், அவர்கள் வரும்போதே வாங்கி வந்திருந்த காலை உணவை அனைவருமாய் உண்டு முடிக்க தன் விபத்து நிகழ்வை கூறினான்.
ஹைதராபாத்தில் தன்னுடைய இரு சக்கர வாகனத்தில் தான் பயணம் செய்வதாகவும், ஒரு திருப்பத்தில் எதிர் வந்த வண்டியை கவனிக்காது அவன் திரும்ப, அவன் சட்டென அழுத்திய ப்ரேக்கின் வேகத்தில் வண்டி ஸ்கிட்டாகி கீழே விழுந்து விட்டதாய் உரைத்தவன், விரலில் சிறு முறிவு எனவும் அதை நேர் செய்ய முழங்கை முழுவதும் கட்டு போட்டிருக்கிறார்கள் என நீண்ட நெடிய விளக்கம் கொடுத்தான்.
“சின்ன விபத்து தான் அங்கிள்… மஹா பயந்துப் போய் உங்களை கூட்டிட்டு வந்துட்டா… உங்களுக்கு தேவையில்லாத சிரமம் தானே அங்கிள்” என மஹாவை முறைத்துக் கொண்டே மதி உரைக்க,
“அன்னிக்கு என் பொண்ணை நீ சிரமம்னு பார்த்திருந்தா இவ இப்படி இங்க நிக்க மாட்டாளேப்பா. உனக்கு ஒன்னுனா உன்னை பார்க்காம எப்படிப்பா நாங்க இருக்க முடியும். மஹா ரொம்பவே பீதியடைய வச்சிடா. உன்னை இப்ப பார்த்தப் பிறகு தான் மனசு நிம்மதியா இருக்கு” என மஹாவின் தந்தை தன் மனதிலுள்ளதை உரைக்க,
“வந்ததுல இருந்து நம்ம கிட்ட ஒரு வார்த்தைக் கூட பேசாம இருக்கானே? பயப்புள்ள நம்ம மேல செம்ம கோவத்துல இருக்கான் போலயே. எப்படி இவனை சமாளிக்கப் போறோம்” என மனதில் மஹா எண்ணிக் கொண்டிருக்க,
“அங்கிள் டிராவல் டயர்டு இருக்கும். நீங்க போய் அந்த ரூம்ல ரெஸ்ட் எடுங்க” என மதிக் கூற,
“மஹா நீயும் வாம்மா. ரெஸ்ட் எடுக்கலாம்” அவளின் தந்தை அழைக்க,
“நீங்க போங்கப்பா. நான் மதிக்கிட்ட கொஞ்சம் பேசிட்டு வரேன்” எனக் கூறி அவரை அனுப்பி வைத்தாள்.
“எப்படிடா இருக்கு கை வலி?… ரொம்ப வலிச்சிச்சா? வலிச்சிருக்கும் தான்… எனக்கு தான் அந்த வலி தெரியுமே” எனக் கண்ணில் வலியுடன், வலி நிறைந்த மொழியுடன் அவன் கையை வருடிக் கொண்டே அவள் கேட்க,
இத்தனை நேரம் அவள் மேல் கொண்ட கோபமெல்லாம் அவள் கண்ணில் கண்ட வலியில் மாயமாய் போக, “சே சே ரொம்ப வலியில்லடா குட்டிம்மா… நீ ஃபீல் செய்யாத” என அவளைத் தேற்ற,
ஏனோ அவளின் மனம் சமாதானம் ஆகாமல் சோக முகத்துடனேயே அவள் அவனின் கையைப் பார்த்திருக்க,
இவளிடம் கொஞ்சினால் வேலைக்காகாது என்பதை உணர்ந்தவன், “உன்னை தான் இங்க வர வேண்டாம்னு சொன்னேன்ல. எதுக்கு இப்ப வந்த நீ? இப்டி சோக கீதம் வாசிக்கவா? போதாக்குறைக்கு அங்கிள்ல வர கூட்டிட்டு வந்திருக்க” என அவன் பொரிந்துத் தள்ள,
“என்னடா நீ உனக்கு வலினு சொல்லும் போது நான் அங்க எப்படி நிம்மதியா இருக்க முடியும் மதி. உனக்கு ஆக்சிடெண்ட்னு சொன்னதும் அப்பாவும் பதறிட்டுக் கூட வரேனு சொல்லிட்டாங்க” என முகத்தை பாவமாய் வைத்துக் கொண்டு அவள் உரைக்க,
“அவரா பதறலை… நீ பதற வெச்சிருக்க” என அவன் கோபத்தில் பல்லைக் கடிக்க,
“என்ன மதி நீ… எனக்கு விபத்துப்போ என்னை எப்படிலாம் பார்த்துக்கிட்ட… உனக்குன்னு போது நான் சும்மா இருக்க முடியும்… நன்றிக்கடன்னு ஒன்னு இருக்குல” மஹா கூறிய மறுநொடி,
“மஹா…. டோண்ட் யூஸ் தட் வர்டு மஹா… அப்ப நீ என்னை நன்றிக்கடனுக்கு தான் பார்க்க வந்திருக்க. என் மேல பாசம் வச்சி வரலை” கோபத்தில் கர்ஜித்தான்.
“என்னப்பா, அப்டி இல்லடா மதி”
“பின்ன என்ன… நீயும் அப்படி தான் பேசுற… உங்க வீட்டுலயும் எனக்கு எது செஞ்சாலும் உன்னை காப்பாத்தினதுக்கு கைம்மாறு மாதிரி செய்றாங்க… அந்த ஆக்சிடெண்ட் முன்னாடியுமே நான் உங்க வீட்டு பேமிலி ப்ரண்ட்டா தானே இருந்தேன். இப்ப மட்டும் எதுக்கெடுத்தாலும் ஏன் அதையே சொல்றீங்க?”
“இப்ப சொல்றது தான் ஃபைனல் மஹா, இந்த நன்றிக்கடன் கைம்மாறு இதெல்லாம் மனசுலருந்து அழிச்சுட்டு என் கூட பேசுறதா இருந்தா பேசு… இல்லனா என் கூட பேசாத” என தன் கோபத்தை வார்த்தையில் கொட்டுவிட்டு அவ்விடத்தை விட்டு போய்விட்டான்.
அவனின் இந்த கோப முகத்தில் அவன் கூறிய வார்த்தையில் அதிர்ந்து நின்றிருந்தாள் மஹா.
அதன் பிறகு அவள் ஹைதராபாத்திலிருந்து கிளம்பு வரை அவன் அவளிடம் பேசவேயில்லை.
“Go safely… message me once you reached bangalore” அவள் வீட்டிலிருந்து கிளம்பும் நேரம் அவளின் கைப்பேசிக்கு குறுஞ்செய்தி அனுப்பியிருந்தான்.
“பக்கத்திலேயே நிக்கிறேன் பேச மாட்டானாமா? ஆனா மெசேஜ் மட்டும் செய்வானாமா… இருடா உன்னை… நீயா வந்து பேசுற மாதிரி செய்றேன்”
மனதிற்குள் அவனிடம் சண்டையிட்டுக் கொண்டிருந்தவள், அவனின் குறுஞ்செய்திக்கு பதில் அனுப்பாமல் இருந்தாள்.
இவளின் பாதுகாப்பு விஷயத்தில் இவளிடம் பேசாமல் அவனால் இருக்க முடியதென அவளுக்குத் தெரியும்.
அவளின் தந்தையை சென்னை செல்லும் ரயிலில் ஏற்றிவிட்டு, இவளை பெங்களூர் செல்லும் இரயிலில் ஏற்றிவிடும் வரையிலுமே அவள் அக்குறுஞ்செய்திக்கு பதிலனுப்பாமலிருக்க,
“மஹா பத்திரமா போய்டு வா… கண்டிப்பா பெங்களூர் ரீச் ஆனதும் எனக்கு மெசேஜ் பண்ணு. கேர்லெஸ்ஸா இருக்காத… உடம்பை பார்த்துக்கோடா குட்டிம்மா” என அவள் இருக்கையின் ஜன்னலருகே நின்று இவன் பேச,
மஹா ஏதும் பேசாது வெளியே வெறித்துக் கொண்டிருக்க,
“இருடி உன்னை எப்படி பேச வைக்கனும்னு எனக்குத் தெரியும்” என மனதில் நினைத்துக் கொண்டிருந்தவன்,
அந்த ஜன்னல் கம்பியில் தன் அடிப்பட்ட கை இடிப்பட்டதுப் போல் கொண்டு வந்து, “ஸ்ஸ் ஆஆஆ” என வலியில் முகம் சுருங்க அவன் தன் கைகளை பிடிக்க,
“அச்சோ என்னாச்சுடா என்னாச்சு… கைல இடிச்சிக்கிட்டியா? கைல ஏற்கனவே வலி… பாத்து இருக்க மாட்டியாடா நீ… இதுல என்னை கேர்புல்லா இருக்கச் சொல்லி டயலாக் வேற” என தன் முகத்தில் வலியைத் தேக்கி அவன் கையை அவள் வருடி விட,
“பேசிட்டியா… பேசிட்டியா” என கண்சிமிட்டி சிரித்தானவன்.
“சீ போடா… உனக்கு வலிக்குதுனு நான் எவ்ளோ பயந்துட்டேன் தெரியுமா”
“தெரியுமே… அதுக்கு தானே இப்டி ப்ளே பண்ணேன்” என அவன் சிரிக்க,
ரயில் கிளம்புவதாய் அறிவிப்பு வர, மீண்டும் இருவரும் டேக் கேர் டேக் கேர் என பாசமழை பொழிந்துக் கொண்டிருக்கும் போது இரயில் நகர்ந்தது.
மெல்லிய சிரிப்புடன் இதை எண்ணிக் கொண்டிருந்தவளின் மனது இதமான உணர்வில் தன்னை மறந்து உறங்கிப்போனாள்.
நட்பைத் தாண்டிய உறவைப் பற்றி அவள் எண்ணிப் பார்த்திராத நிலையில் அவளின் இவ்வுணர்வை நட்பென்றே எண்ணினாள் மஹா.
மதி அவளின் இந்த உணர்வை காதல் என்றே எண்ணினான். அவளதை உணரும் தருணத்திற்காக காத்துக் கொண்டருந்தான்.
மறுநாள் புதன்கிழமை வழமைப்போல் அவரவர் அலுவலகம் செல்ல, ஒரு வழியாய் அன்று நேர்முகத் தேர்வு நடைப்பெற்றது வாணி மற்றும் ஆஷிக்கிற்கு.
மாலை கிளம்பும் வேளையில் அந்த மேனேஜர் ஆஷிக் மட்டுமே அந்த ப்ராஜக்டிற்கு தேர்வாகியுள்ளானென்றும், வாணி நாளை அவளின் பழைய அலுவலகத்திற்கு பென்ஞ்சில் இருக்க சென்றுவிடலாமெனக் கூறிவிட்டார்.
வாணிக்கு அடி மேல் அடி விழுவதாய் ஓர் உணர்வு. மிகவும் இறுக்கமாகவே இருந்தாள். அழவும் இல்லை சிரிக்கவும் இல்லை. வெறுமையான மனநிலை பிரதிபலித்தது அவளின் முகத்தில்.
— தொடரும்