உருகுதே உள்ளம் நெகிழுதே நெஞ்சம் 12

Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels

“ஆன்டிக்கிட்ட பேசினியா மஹா? என்னோட ப்ரபோசல் பத்தி சொன்னியா?” எனக் கேட்டான் மதி

இல்லையென தலையாட்டினாள் மஹா.
“என்னாச்சு உனக்கு? உன்கிட்ட இருந்த அந்த துள்ளல் எதுவுமே இல்லையே இப்ப… ஏன் இவ்ளோ சோகமா இருக்க? என் ப்ரபோசல் பிடிக்கலையா இல்ல என்னைப் பிடிக்கலையா?” என மதி கேட்ட நொடி,

மனதின் வலியை கண்ணில் தேக்கி அவனைப் பார்த்தவள், ‘உன்னை எப்படி எனக்கு பிடிக்காம போகும் மதி’ என மனதிற்குள் எண்ணியவள்,

“வாழ்க்கையில ஒருதருக்கு ஒரு ப்ராமிஸ் செய்யும் போது, அது மத்தவங்களை ஹர்ட் செய்யாத அளவுக்கு இருக்குமா? அந்த ப்ராமிஸ என்னால காப்பாத்த முடியுமா? இப்படிலாம் பல வகையிலும் யோசிச்சி தான் செய்யனும். இது லைப் லாங் கமிட்மெண்ட் மதி. என் வாழ்க்கைல என் வாய்ல இருந்து உங்களை விரும்புறேனு நான் சொல்ற வார்த்தை ஒருத்தருக்கு தான் போகனும். அந்த ஒருத்தர் என் கணவனாய் வரப் போகிறவரா தான் இருக்கனும்” என்று தன் மன எண்ணத்தை அவள் கூற,

“ஹ்ம்ம் உங்க அப்பா அம்மா சம்மதம் இல்லாம என்னை பிடிச்சிருக்குங்கிற வார்த்தை கூட உன் வாய்ல இருந்து வராதுனு சொல்ற. தட்ஸ் பைன். ஆனா உங்க வீட்டில பேச ஏன் இவ்ளோ தயக்கம்?” என மதி வினவ,

“அம்மாவோட டிரஸ்ட்டை உடச்சுட்டேனு நினைச்சிடுவாங்களோனு பயமாயிருக்கு மதி. அப்பா கண்டிப்பா ஓகே தான் சொல்லுவாங்க. ஆனா அம்மா, உன்னை நம்பி வெளியூர் அனுப்பினதுக்கு இப்படி பண்ணிட்டியேனு கேட்டா நான் என்ன செய்வேன்? நினைக்கவே மனசு பதறுது மதி. அம்மா இதுக்கு எப்படி ரியாக்ட் செய்வாங்கனு புரியலை மதி” எனத் தன் கவலையை அவள் கூற,

பெருமூச்சொன்றை விட்டவன், “சரி சாப்பாடு வந்துடுச்சு… சாப்பிடு” என அவளிடம் கூறியவன், அடுத்து தான் என்ன செய்ய வேண்டுமென மனதிற்குள் திட்டம் தீட்டலானான்.


அம்மாத கடைசி தேதியில் நிச்சயத்தார்த்த விழா ஏற்பாடு செய்திருந்தனர் வேணி மற்றும் இளாவின் வீட்டினர்.

ஏனோ தங்களின் நிச்சயத்தைப் பற்றி தங்களின் நட்பு வட்டத்தில் கூறப் பெரிதும் தயங்கினாள் வேணி.

இளா மற்றும் வேணியை அறிந்த அனைவரும் கண்டிப்பாக இதை காதல் திருமணமென்றே எண்ணுவர்.

அவ்வார்த்தையை கேட்க மனமில்லை அவளுக்கு. ஆகையால் நட்புகளுடன் தங்களின் நிச்சயத்தைப் பற்றி பகிர்ந்துக்கொள்ள நாட்களை நகர்த்திக் கொண்டே சென்றாள்.

மஹா மதியிடமே இன்னும் தன் காதலை தெரிவிக்காத நிலையில், எதுவும் முழுமையாய் இன்னும் முடிவாகாத நிலையில் எவரிடமும் இவ்விஷயத்தைப் பற்றி பகிர்ந்துக்கொள்ள மனமில்லை அவளுக்கு.

நிச்சயத் தேதிக்கு ஒரு வாரத்திற்கு முன்பு வந்த அந்த வாரயிறுதி நாளில் வாணி மற்றும் மஹாவிடம் உரைத்துவிடலாமென வேணி முடிவெடுத்திருக்க, ஆனால் விதி வாணிக்கு இவ்விஷயத்தை தாமதமாகவே தெரிய வைத்தது. தன் தோழி தன்னிடம் பெரும் விஷயத்தை மறைத்து விட்டாளென வேணி மீது பெரும் கோபம் கொள்ளச் செய்தது வாணியை.


ஜூலை 2012

அந்த மாதக் கடைசி நாளிற்கு முந்திய வாரயிறுதி நாளில்…

அந்த ஃபோரம் மால் மீட்டிங்கிற்குப் பிறகு தங்களுக்கிருந்த வேலைப் பளுவாலும் மனக்குழப்பத்தாலும் எவருமே தங்களின் ஊருக்கு செல்லாது வாரயிறுதி நாட்கள் பெங்களுரிலேயே இருந்தனர்.

அத்தகைய வாரயிறுதி நாளில் மஹா மற்றும் வேணி சமையலறையில் இரவுணவு சமைத்துக் கொண்டிருக்க,

தரையில் போட்டிருந்த மெத்தையில் வைத்திருந்த தன் கைபேசியை எடுக்கவென வாணி குனிந்தச் சமயம் அவளின் இடுப்பில் கிர்க் என ஒரு சத்தம் கேட்க, அம்மாஆஆஆஆ என வலியில் முணங்கியவள் நிமிர முற்பட, நிமிர்ந்து நேராய் நிற்க முடியவில்லை அவளால்.

இடுப்பில் தொடங்கி வலதுக்கால் கட்டை விரல் நரம்பு வரை விண்ணென வலிக்க, அப்படியே இருக்கையில் அமர்ந்துவிட்டாள்.

வலியில் அவளறியாது ஒரு துளி நீர் அவள் கண்ணில் வந்து விட, அச்சமயம் தாங்கள் சமைத்ததை ருசிப் பார்க்கக் கூறி வாணியிடம் வந்த வேணி,

கண்ணீர் துளியுடன் அவள் அமர்ந்திருப்பதைப் பார்த்து பதறிப்போய் அவளருகில் வந்தவள்,

“என்னடி ஆச்சு? எதுக்கு அழுற? இவ்ளோ நேரம் நல்லாதான பேசிட்டு இருந்த?” என வேணி கேட்க,

“குனியும் போது என்னமோ ஆயிடுச்சுடி” என நடந்ததை கூறிய வாணி,

“நேரா நிமிர முடியலைடி. வலதுக்கால் நரம்பு வேற வலிக்கிது. தாங்கி தாங்கி தான் நடக்கனும் போல” என முகத்தில் வேதனைப் படற அவள் கூற,

அதைக் காணப் பொறுக்காமல்,
“முதல்ல நாம ஹாஸ்ப்பிட்டல் போகலாம். எந்திரி” என வேணி அவளைக் கிளப்ப முற்பட்டாள்.

இவர்களின் பேச்சு சத்தம் கேட்டு அங்கே வந்த மஹாவிடன் வேணி நடந்ததைக் கூற,

இருவருமாய் சேர்ந்து வாணி உடை மாற்ற உதவி செய்து அந்த இரவு ஒன்பது மணி வேளையிலும் அவளை மருத்துவமனை அழைத்து சென்றனர்.

அது இருபத்து நான்கு மணி நேர மருத்துவமனையாதலால் அந்நேரம் இருந்த டியூட்டி டாக்டர் அவளுக்கு சிகிச்சையளித்து, சுளுக்குப் போல் தான் தெரிகிறதெனக் கூறி இடுப்பில் வெந்நீர் ஒத்துடம் கொடுத்து களிம்பை தடவ சொன்னாரவர். வலி குறைய மாத்திரையும் எழுதி தந்தார்.

மருத்துவமனை செலவு மருந்து வாங்குவதற்கான செலவு என அனைத்தையும் அவ்விருப் பெண்களே பார்த்துக் கொண்டனர்.

வீட்டிற்கு சென்றதும் அவளை மெத்தையில் அமர வைத்து வேணி உணவு வழங்க, மஹா அவளுக்கு ஒத்தடம் கொடுக்க சுடுநீர் தயார் செய்தாள்.

வாணி சாப்பிட்டு முடிக்கவும் அவளின் வீட்டிலிருந்து அழைப்பு வர, தன் வலியை தாய் தந்தையிடம் கூறி அவர்களையும் வேதனைக் கொள்ளச் செய்யக் கூடாதென மனதில் எண்ணிக்கொண்டே கைபேசி அழைப்பை ஏற்ற மறு நொடி,

“என்னமா சாப்பிட்டியா மதும்மா” என அவள் தாய் நீலாமதி கேட்க,

“ஹ்ம்ம் சாப்பிட்டேன்ம்மா” எனக் குரலை சமன் செய்து அவள் கூற,

“என்னம்மா குரல் ஒரு மாதிரி இருக்கு? உடம்பு சரியில்லையா?” என வாணியின் தாய் கேட்ட மறு நொடி அவளின் மனத்திடம் தூள் தூளாய் நொறுங்க தாய் மடி தேடி ஏங்கும் கன்றாய் மனம் தாயை நாட கண்களில் நீர் ஆறாய் பெருகியது.

தன்னைக் கட்டுப்படுத்த இயலாது நடந்தவற்றை வாணி கூற, மகளின் தழுதழுத்த குரலில் வாணியின் தாயும் அங்கே கண்ணீர் வடிக்க, அவரருகில் இருந்த வாணியின் தந்தை செல்வம் என்னமோ ஏதோவெனப் பதறி அலைப்பேசி வாங்கிப் பேச, மகளின் வலி நிறைந்தக குரல் தந்தையின் மனதை கனக்க செய்ய,

“நாளைக்கு காலைல அப்பா பெங்களூர்ல இருப்பேன். நீ நம்ம வீட்டுக்கு வந்து ரெஸ்ட் எடு மதும்மா” எனக் கூறி வாணிப் பேச வாய்ப்பளிக்காது கைபேசியை வைத்துவிட்டார்.

இதற்கு மேல் தான் என்ன கூறினாலும் தந்தை கேட்க மாட்டாரென அறிந்த வாணி போனை வைத்து விட்டாள்.

தூரதேசத்தில் இருக்கும் மகளின் வலி நிறைந்த குரல் தாய் தந்தையர் இருவர் மனதிலும் வலியை நிறைத்திருந்தது.
தாய் தந்தையிடம் பேசியதை தோழிகளிடம் கூறி,

“நான் அவங்க கிட்ட சொல்லக்கூடாதுனு எவ்ளவோ ட்ரை பண்ணேன்டி. என்னம்மானு அம்மாவோட பாசமான ஒத்த வார்த்தை கேட்டதுக்குப் பிறகு கண்ட்ரோல் செய்ய முடியலை” எனத் தன்னிலையை வாணி கூற,

“சரி விடுடி. அவங்களுக்கும் உன்னை பார்த்த தான் திருப்தியாகும். வலில நீ துடிச்சதை நாங்களும் தான் பார்த்தோமே. நீ கொஞ்ச நாள் வீட்டுல ரெஸ்ட் எடுத்துட்டு வரது தான் நல்லது” என அப்பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தாள் மஹா.

வாணிக்கு வலி நிறைந்த இடத்தில் வெந்நீரால் ஒத்தடம் கொடுத்து மருத்துவர் கொடுத்த களிம்பை நன்றாய் சூடு பறக்கத் தேய்த்துவிட்டாள் மஹா. வலி நன்றாகவே குறைந்தது மஹாவின் கைவண்ணத்தில்.
அப்படியே உறங்கிப்போனாள் வாணி.

மறுநாள் காலை வாணி விழிக்கும் போது அவளருகே அமர்ந்திருந்தனர் வாணியின் தந்தை செல்வமும் தாய் நீலாமதியும்.

அவளை ஒரு வாரம் ஓய்வு விடுப்பு எடுக்க கூறி தங்களுடன் வருமாறு பணித்தனர். வாணி தன் டீம் லீட்டிடம் தன் நிலைமையை எடுத்துக் கூறியும் விடுப்பு வழங்க அவர் மறுக்க, தனக்கு பதிலாய் தன் வேலையை வேணி கவனித்துக் கொள்வாளென அவள் கூறியதும் தான் விடுப்பெடுக்க ஒப்புக்கொண்டார்.

வேணி தன் மனதில் நல்லவேளை தன் நிச்சயம் விடுமுறை நாளான ஞாயிறென்று நடக்கிறது என எண்ணி நிம்மதி பெருமூச்சுவிட்டாள்.

வாணியின் உடல்நிலை சரியில்லாத இவ்வேளையில் நிச்சயம் பற்றி கூற வேண்டாமென நினைத்தவள், அவளுக்கு கைபேசியில் அழைத்து கூறிக் கொள்ளலாமென எண்ணிக்கொண்டாள்.

ஒரு வழியாய் தன் தாய் தந்தையருடன் அவர்கள் வந்த காரிலேயே அவர்களுடன் சென்னைக்கு பயணப்பட்டாள் வாணி.
சென்னை வந்திறங்கிய வாணி காரிலிருந்து இறங்கும் சமயம் அவளின் கைபேசி தவறி விழ, அது தரையில் விழுந்து சிதறி நொறுங்கியது.

“மதும்மாஆஆஆ… கொஞ்சம் கூட பொறுப்பே இல்லமா உனக்கு” எனக் கூறிக் கொண்டே சிதறிய கைபேசியின் அங்க அவயங்களைத் தேடி எடுத்துக் கொண்டிருந்தார் நீலாமதி.

கைபேசியின் உட்பொருட்களை இணைத்து அதனை உயிர்ப்பிக்க அவர் முயற்சி செய்ய, அது செயலிழந்துப் போனது.

“போன் வேலை செய்யலை. வேற போன் தான் வாங்கனும் போல” என்றுரைத்தவர்,

“ஒரு வாரம் இங்க தானே இருக்கப் போற அதுக்குள்ள போன் ரிப்பேர் செய்ய முடியுதானு பார்ப்போம்” எனக் கூறி அக்கைபேசியை ஓரமாய் வைத்தார்.

ஆக வேணி கைபேசியில் வாணியிடம் தன் நிச்சயத்தைப் பற்றி உரைத்து விடலாமென எண்ணியிருந்தது நிறைவேறாமலே போனது.

இரு நாட்கள் கழித்து அன்றிரவு மஹாவின் மெத்தையில் அமர்ந்திருந்தாள் வேணி.

“என்ன அம்மு என்னமோ பேசனும்னு சொன்ன?” எனக் கேட்டாள் மஹா.

மஹாவின் எதிர்வினை எவ்வாறாய் இருக்கும் என்கின்ற பயத்தினூடே உரைத்தாள் வேணி,

“மஹா, கம்மிங் சண்டே எனக்கும் இளாக்கும் நிச்சயதார்த்தம்டி. கண்டிப்பா இது லவ் மேரேஜ் இல்லடி” என்றவள்,

அன்றைய ஃபோரம் மால் உரையாடலிலிருந்து நடந்த அனைத்தையும் உரைத்து முடித்தவள் மஹாவின் உணர்வுகளை உணர முடியாது பயத்துடனே அவள் முகத்தைப் பார்க்க,

“ஐம் வெரி மச் ஹேப்பி ஃபார் யூ அம்மு. இளா இஸ் த பெஸ்ட் பேர் ஃபார் யூ” எனக் கூறி அவளை அணைத்து மனதார வாழ்த்து தெரிவித்தாள் மஹா.

“ஹப்பா இப்ப தான்டி மனசு நிம்மதியா இருக்கு” முகத்தில் நிம்மதி படர வேணிக் கூற,

“அப்படி என்னடி பயம் என் மேல? என்னை பார்த்து பயப்படவும் ஒரு ஆளு இருக்கேனு சிரிப்பா தான்டி வருது” எனக் கூறி மஹா சிரிக்க,

“லாஸ்ட் மினிட்ல வந்து சொல்றியேனு கடிச்சி குதறிடுவியோனு தான் பயந்தேன்டி. ஆனா உன்னை விட வாணிய நினைச்சி தான் இன்னும் பயமாயிருக்கு. ஃபோன்ல சொல்லலாம்னு நினைச்சது இப்ப பெரும் தப்பா தோணுது. அவ ஃபோன் எப்ப பண்ணாலும் ஸ்விட்ச் ஆஃப்னு வருது. அவ வீட்டுல உள்ளவங்க வேற யாரு நம்பரும் நம்ம கிட்ட இல்ல. ரொம்ப பாசகாரப் புள்ள வேற. நிச்சயம் முடிஞ்சப்புறம் தெரிஞ்சுதுனா கண்டிப்பா சண்டைக்கு நிப்பா” எனத் தன் கவலையை வேணிக் கூற,

“ஹ்ம்ம் முடிஞ்ச வரைக்கும் உன் நிச்சயம் முன்னாடி அவக்கிட்ட சொல்ல டிரை பண்ணலாம். முடியலைனாலும் அவளை சமாதானம் செய்வோம். கல்யாணப் பொண்ணு கண்டதையும் நினைச்சு கவலைப்படாம நிச்சயத்தார்த்த சந்தோஷத்துல இருடி. இதெல்லாம் லைப்ல ஒரு தடவை நடக்கிற விஷயம். அந்த நாளை சந்தோஷமா மறக்க முடியா நாளாய் கொண்டாட நீ சந்தோஷமா அதை வரவேற்கனும்” என அறிவுரை வழங்கினாள் மஹா.

கடைசி வரை வாணியிடம் கூற முடியாமல் போக, அவர்களின் நிச்சய நாளும் வந்தது.
வழமைப் போல் வெள்ளிக்கிழமை இரவு இருவரும் ஒன்றாக பெங்களுர் டூ சேலம் பேருந்தில் பயணித்தனர்.

“டேய் கோவக்காய், இப்படியாடா வருவ எங்கேஜ்மண்டுக்கு. ஆளும் மண்டையும் பாரு. புதருக்குள்ள மூஞ்சி இருக்குற மாதிரி” என அவனைப் பார்த்து அவள் பழிப்பம் காட்ட,

அதில் கோபம் கொண்டவன், “போடி கொத்தவரங்கா. உன்னை மாதிரி பேஷியல் பண்ணிட்டு வழ வழனு மூஞ்சை வச்சிக்க சொல்றியா” என அவளிடம் எகிற,

“டி சொன்னா எனக்கு பிடிக்காதுனு தெரியும்லடா” என கோபமாய் வேக மூஞ்செடுத்தவள் அவன் தோளில் சரமாரியாய் தாக்க,

“அடியேய் வலிக்குதுடி” என அவன் அலற,
“திரும்பவும் டி சொல்ற” என வேகமாய் அவன் பக்கம் திரும்பி அமர்ந்தவள், அவன் கையை பிடித்துக் கடித்து வைத்தாள்.

அவன் வலியில் ஆ வென அலற பயணிகள் அனைவரும் திடுமென அவர்களின் இருக்கையைப் பார்க்க,

“ஒன்னுமில்லைங்க பூச்சி கடிச்சிடுச்சு. அதான் கத்திட்டேன். வேற ஒன்னுமில்லை. நீங்கலாம் உங்க வேலையை பாருங்க” என மற்றவர்களிடம் கூறியவன், முறைத்தான் வேணியை.

அவனின் முறைப்பில் தலையை சிலுப்பிக் கொண்டு முகத்தை மறுப்பக்கம் திருப்பிக் கொண்டாள்.

அதன் பிறகு கோபம் கொண்டவனாய் காதில் ஹெட்செட்டை மாட்டிக் கொண்டு தனது தூங்கும் வேலையை தொடங்கினான்.

சிறிது நேரம் சென்றதும் அவனை அடித்தது இவளின் மனதை வலிக்க செய்ய, இவள் கடித்து பல் தடம் தெரிய இருந்த இடதுகை மணிகட்டில் மென்மையாய் தடவிக் கொடுத்தாள்.

அவளின் தடவலில் தூக்கம் கலைந்தாலும் கண்களை மூடியிருந்தவன் அவளறியாது வாய்க்குள் மென்னகை புரிந்தான்.

மறுநாள் காலை வேணியின் வீட்டில் அவளை விட்டு செல்ல இளா அவளுடன் செல்ல, அங்கே வேணியின் அக்கா கயல்விழி அவர்களைப் பார்த்து முகம் கொள்ளா புன்னகையுடன் வாசல் வரை வந்து இளாவை பார்த்து,

“வாங்க மாப்பிள்ளை” எனக் கூற,
அவ்வார்த்தையில் சங்கோஜப்பட்டவனாய்,

“ஏன்க்கா?” என அவரை பார்த்து கேட்க,

“பார்ரா இந்த கோவக்காய்க்கு வந்த வாழ்வ!!” என தாடையில் கை வந்து வியந்தவளாய் வேணி கூற,

“அடிங்க” என அவளை தூரத்திக் கொண்டு அவள் பின்னே ஓடினான் இளா.

அவள் வீட்டின் முற்றத்தில் துளசியை சுத்தி சுத்தி ஓடிய நேரம், “அங்க என்னமா சத்தம்?” என வீட்டினுளிருந்து வேணியின் தந்தை அன்பரசு குரல் கொடுக்க,

“சும்மா பேசிட்டு இருக்கோம் மாமா” என இளா அந்நேரம் சட்டென வாயில் வந்ததை கூறி தன் நாக்கை கடிக்க,

கயல்விழியும் வேணியும் கல கலவென குலுங்கி சிரித்துக் கொண்டிருக்க,

அப்போது அன்பரசு வெளி வரவும் அனைவரும் வாயை மூடி அமைதிக் காத்தனர்.

“என்னடா அம்மு? மாப்பிள்ளைகிட்ட இன்னும் சின்ன பிள்ளையாட்டம் விளையாடிட்டு இருக்க” என அன்பரசு கேட்க,

“அவ இப்படியே இருக்கட்டும் மாமா. அது தான் எனக்கு பிடிச்சிருக்கு” எனக் கூறிய இளா,

“நான் வீட்டுக்குக் கிளம்புறேன் மாமா. அங்க எனக்காக எல்லாரும் காத்துக்கிட்டு இருப்பாங்க” என்றவன் வேணியின் அருகில் வர,

“என்னது மாமாவாஆஆஆஆ!! இது எப்பலருந்து? அங்கிள்னு தானே கூப்டுட்டு இருந்தான்” என எண்ணிக் கொண்டிருந்த வேணியின் அருகில் வந்தவன்,

“அடியேய் முட்டைக்கண்ணி ஏன் இப்படி ஆளை முழுங்குற மாதிரி முழிச்சி வைக்குற. நாளைக்கு மண்டபத்துக்கு வருவல அப்ப கவனிச்சிக்கிறேன் உன்னை” என கிசுகிசுப்பாய் கூறி விடைப்பெற்று சென்றான்.

சேலத்திலிருந்த அப்பெரிய மண்டபத்தில் அம்சவேணி மற்றும் இளங்கோவனின் குடும்பங்கள் வீற்றிருக்க, நெருங்கிய சொந்தங்கள் மற்றும் மிக நெருங்கிய கல்லூரி தோழமைகள் அமர்ந்திருக்க,
பட்டு வேஷ்டி சட்டையில் சவரம் செய்த முகத்துடன் முறுக்கிய மீசையுடன் நெற்றியில் சிறு கீற்றாய் சந்தனம் வைத்து மங்களகரமாய் மேடையில் அமர்ந்திருந்தான் இளா.

வேணியை அலங்கரித்து மண்டப மேடைக்கு அழைத்து வந்தனர்.

பச்சை நிற பட்டுப்புடவையில் பாரம்பரிய அலங்காரத்தில் நீளமாய் குஞ்சம் வைத்த கூந்தலுடன் அன்னமாய் அவள் நடந்து வர,

முதன் முறையாய் வேணியை தன்னவளாய் எண்ணி ரசனையாய் பார்த்தான்.

அவளும் அவனை கண் சிமிட்டாது வைத்த கண் வாங்காது பார்த்து கொண்டே நடந்து வந்தாள்.

இளாவினருகில் அவளை அமர வைக்க அவன் காதருகே குனிந்தவள், “இளா வேஷ்டி சட்டைல செம்மயா இருக்கடா. மீசை செம்மயோ செம்ம”

அவள் கூறிய நொடி சட்டென அவள் புறம் தன் பார்வையை திருப்ப, அவள் கேலிப் பார்வையை பார்த்து வைத்தாள்.

“அம்ஸ் என்கிட்ட கும் கும்னு அடி வாங்காம போக மாட்ட போல. ஓவரா தான் என்னைய சீண்டிட்டு இருக்க” என சீறியவனாய் கூற,
நிஜமாய் கோபம் கொண்டுவிட்டானோ என பயந்தவள் அவன் கரம் பற்றி,

“சும்மா சொன்னேன்டா. இது நம்ம லைப்ல முக்கிய நாள்… இரண்டு பேருமே சந்தோஷமா சிரிச்ச முகமா இருக்கனும். எங்க சிரி பார்ப்போம்” ஈ ஈ ஈ என அவள் தன் பற்களைக் காட்ட,
அங்கிருந்த மொத்த கூட்டத்தினரும் அவளின் ஈ என்ற முகத்தைப் பார்த்து சிரித்தனர் இப்பொழுது. அவர்களின் சிரிப்புச் சத்தத்தில் நிஜவுலகிற்கு வந்தவர்களாய் இருவரும் அசடு வழிந்து தள்ளி அமர்ந்துக் கொண்டனர்.

ஐயர் நிச்சய பத்திரிக்கையை வாசித்தப்பின் மோதிரம் மாற்றிக் கொள்ளக் கூறினர் இருவரையும்.

அவளின் விழி நோக்கி தன் விழிகளைக் கலக்க விட்டவன் தன் இமை சிமிட்டி சம்மதம் கேட்க, தன் தலை அசைத்து சம்மதம் தெரிவித்தவள் கைகளை மென்மையாய் அவன் பற்ற, இதுவரை எத்தனையோ முறை அவனின் கைகளை அவள் விளையாட்டாய் ஆறுதலாய் பற்றியிருந்தாலும் இப்பொழுது அவன் அவளின் விரல்களை வருடி பிடித்த இச்சமயம் பெண்ணவளின் அடிவயிற்றுக்குள் பட்டாம்பூச்சி பறப்பதைப் போன்ற பயம் கலந்த சிலிர்ப்பை உணர்ந்தாள். அதை அவளின் விரலில் அவன் உணர ஆணவனின் உள்ளம் சிலிர்த்தது.

அவள் விழிகளை நோக்கி கைகளைப் பற்றிக் கொண்டு சிலிர்ப்புடன் நிற்கும் இந்த நிமிடம் இருவரும் ஒருவருள் ஒருவர் தன்னையறியாது மற்றவரைக் கவர்ந்திழுத்துக் கொண்டிருந்தனர் தங்களது விழியின் ஆளுமைக்குள்.

“இந்த நிமிடம் இந்த நிமிடம் இப்படியே தொடராதா….
இந்த மயக்கம் இந்த மயக்கம் இப்படியே நீளாதா”

கோரஸாய் பாடிச் சிரித்தனர் இளா மற்றும் வேணியின் நெருங்கிய கல்லூரி தோழமைகள்.

அவர்களின் கிண்டலில் தங்களின் மோன நிலையிலிருந்து கலைந்தனர் இருவரும்.
இளாவினருகில் வந்த தோழன் ஒருவன், “ரொம்ப நேரமா அந்த பொண்ணு கைய பிடிச்சிட்டு இருக்கடா. மோதிரம் போடாம அப்படியே கையோட கல்யாணம் செஞ்சி கூட்டிட்டு போலாம்னு ப்ளானா” என கிண்டல் செய்தான் அவனை.

அசட்டு சிரிப்பு சிரித்தவன் வேணியின் கையில் மோதிரத்தை அணித்தவன் அவள் அணிவிக்க தன் கையை நீட்டினான்.

“எவ்ளோ முரட்டுக் கை இவனோடது” எண்றெண்ணிக் கொண்டே இளாவின் விரலில் மோதிரத்தை அணிவித்தாள்.

அடுத்த மூன்று மாதத்தில் திருமணம் என முடிவு செய்திருந்தனர் இரு குடும்பமும்.

வேணியின் தந்தை இளாவிற்கு பிரேஸ்லெட்டும் தங்க செயினும் அணிவித்தார். இளாவின் வீட்டினர் வேணிக்கு தங்கச் சங்கிலி அணிவித்தனர்.

நிச்சயம் முடிந்து இருவரும் உண்ணுவதற்கு அமர்ந்திருக்க, “நீ என் கைல மோதிரம் போடும் போது என்னமோ நினைச்ச… என்ன நினைச்ச?” என ஆசையாய் இளா வேணியிடம் கேட்க,

“ஹோ அதுவா… அது வந்து…. அது வந்து” என சுவாரஸ்மாய் ஏதோ கூறுவதுப் போல் நீட்டி முழங்கியவள் “சுரைக்காய்க்கு உப்பில்லைனு நினைச்சேன்” எனக் கூறி தன் நாக்கை துறுத்த, அவள் மண்டையில் நங்கென்று ஒரு குட்டு வைத்தான் இளா.

“போடா கோவக்காய்” என அவனின் கையில் கிள்ளியவள், முகத்தை தூக்கி வைத்துக் கொள்ள,

அதைக் காணப் பொறுக்காது அவளின் காதருகில் குனிந்தவன்,
“இன்னிக்கு புடவைல ரொம்ப அழகாயிருக்க அம்ஸ்” என கண் சிமிட்டிக் கூற,

சட்டென அவன் முகத்தை அவள் காண, அதிலிருந்த ரசனை பாவனை அவளை ஏதோ செய்ய,

“நீயும் அழகா இருக்க இளா. இந்த மீசை ரொம்ப பிடிச்சிருக்கு. இதே மாதிரி மீசை ஏன் தினமும் வைக்க மாட்டேங்கிற” என அவனின் முறுக்கிய மீசையில் பார்வை பதித்தவள் கேட்க,

அழகாய் சிரித்தவன் முகத்தை பார்த்துக் கொண்டே அவள் இருக்க,

“ஆபிஸ்ல எப்படி அம்ஸ் இப்படிலாம் மீசை வைக்க முடியும். நீ சொன்ன மாதிரி இன்னிக்கு ஸ்பெஷல் டே இல்லயா அதான் இப்படி” என புன்னகைத்து கூறினான்.

அவனின் சிரிப்பைக் கண்டு அவளின் மனம் பூரிப்பதேனென அறியாது அவன் முகத்தில் பார்வையை பதித்து அவள் ஆராய்ச்சி செய்துக் கொண்டிருக்க,

கண்ணும் கண்ணும் நோக்கியா

என அவர்களின் தோழமைகள் பட்டாளம் மீண்டும் பாட ஆரம்பிக்க, “அய்யோ இதுங்க வேற” என தன் தலையில் அடித்துக் கொண்டு சாப்பிட தொடங்கினர் இருவரும்.

அந்த நிச்சயதார்த்த விழாவில் இருவரும் மற்றவரை தன்னவளாய் தன்னவனாய் உணர துவங்கியிருந்தனர். ஆனால் அது அவர்களின் கருத்தில் தான் பதியாமல் போனது.

இங்கே நிச்சயம் நிகழ்ந்த அதே நேரம் மதி அமர்ந்திருந்தான் சென்னையில் மஹாவின் இல்ல முகப்பறையில்.

அவனுடன் அமர்நதிருந்த மஹாவின் பெற்றோர் தரணிதரன் மற்றும் கலைச்செல்வி அவனது பெங்களுர் வேலையைப் பற்றி அளவளாவிக் கொண்டிருந்தனர்.

மஹா அங்கிருந்த அனைவருக்காக சமையலறையில் காபி கலக்கிக் கொண்டிருந்தாள்.

அவர்களின் அளவளாவளினிடையில் மதி, “ஆன்டி நம்ம மஹாக்கு ஒரு பையன் ப்ரபோஸ் பண்ணிருக்கான். சொன்னாளா உங்ககிட்ட?” என்றவன் கேட்க,
உள்ளிருந்த மஹாவிற்கு புரையேறியது.

“அச்சச்சோ என்ன ஆகப் போகுதோ தெரியலையே” என்று அவள் இதயம் இரயில் பெட்டியாய் தடதடத்தது.

“அப்படியா மதி. இன்னும் அவ சொல்லலை. ஆனா அன்னிக்கு ப்ராமிஸ் செஞ்சதுக்குப் பிறகு அவ என்கிட்ட சொல்லாம இருந்ததில்லை” என இயல்பாய் அவளின் தாய் கலைச்செல்வி உரைக்க,

“எவ்ளவோ நல்ல பசங்கலாம் ப்ரபோஸ் பண்ணாங்க ஆன்டி அவளுக்கு. ஆனா போயும் போயும் இந்த மொக்க பையனை பிடிச்சிருக்கு அவளுக்கு. ஆனாலும் உங்க கிட்ட ப்ராமிஸ் பண்ணிட்டதால எப்படி அவன் கிட்ட ஓகே சொல்றதுனு முழிச்சிட்டு இருக்கா. உங்க ப்ராமிஸ் தான் அவளை காப்பாத்திட்டு இருக்கு” என முகத்தில் குறும்பு நகையுடன் அவன் கூற,

அதிர்ச்சியில் விழிகளை பெரிதாய் விரித்தவர், “மஹா இங்க வா” என கலைச்செல்வி போட்ட அதட்டலில் மஹா கையிலிருந்த காபி கிண்ணம் கை நழுவி தரையில் விழுந்தது.

“அய்யய்யோ ஏழுரைய கூட்டிட்டானே” என மனதில் எண்ணிக்கொண்டவள் முகம் வெளிற கைகள் நடுக்க முகப்பறைக்கு வந்து நிற்க, கலை கோபமாய் அவளை பார்த்து முறைத்தார்.

— தொடரும்