உருகுதே உள்ளம் நெகிழுதே நெஞ்சம் 8
Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels
கான்ஸ்டபிளின் வார்த்தை இளாவிற்கும் அவளின் கைபேசி வழியாய் கேட்க, மீண்டும் மீண்டும் அவளின் எண்ணிற்கு அவன் முயற்சி செய்ய, அவனின் அழைப்பை ஏற்கவில்லை அவள்.
இளா வேலை செய்வது வைட்ஃபீல்டில்(Whitefield) உள்ள அலுவலகத்தில்.
மஹா வேணி வாணி தங்களின் பிஜியை இந்திரா நகரிலிருந்து மடிவாலாவிற்கு மாற்றி இரு மாதங்கள் தான் ஆகிறது.
தற்போது அவர்கள் செல்லும் எலக்ட்ரானிச் சிட்டி அலுவலகத்திற்கு மஹா செல்லும் பொம்மனஹல்லி (Bommanahalli) அலுவலகத்திற்கும் இந்த இடம் மத்தியமாய் தோன்றியதால் அங்கேயே பிஜி பார்த்து தங்கினார்கள் இவர்கள்.
இளா வைட்பீல்டிலிருந்து மடிவாலா வந்து சேர ஒரு மணி நேரமாகும் என்பதால், ஆஷிகின் எண்ணிற்கு அழைத்து அவனிடம் விபரத்தைக் கூறிச் சென்றுப் பார்க்கும்படி உரைத்தான்.
இளா தன் நண்பனின் பைக் வாங்கி அரை மணி நேரத்தில் அந்த காவல் நிலையம் வந்தடைந்தான்.
காவல் நிலையம் உள்ளே வாணி,வேணி,மஹா ஆகியோர் ஒரு மேஜையில் அமர்ந்திருக்க, ஆஷிக் அங்கிருந்த காவலரிடம் ஏதோ பேசிக்கொண்டிருந்தான் இளா உள் நுழையும் போது.
இளாவைப் பார்த்ததும் அவனருகே சென்ற வேணி, “என்னோடது மஹாவோட லேப்டாப்லாம் காணோம்டா இளா” என வேதனைக் குரலில் அவள் கூற,
அவளின் கையைப் பற்றி வெளியேயுள்ள தோட்டத்தினருகே இழுத்துச் சென்றவன்,
“அறிவிருக்கா உனக்கு? படிச்சிருக்க தானே… புத்தி இல்ல? லேப்டாப் காணும்னு இந்த நேரத்திற்கு போலீஸ் ஸ்டேஷன் வந்திருக்க… இதுல உன்னோட லூசு ப்ரண்ட்ஸ வேற கூட கூட்டிட்டு வந்திருக்க… போன் பண்ணவ முழு விஷயத்தையும் சொல்லாம வேற போனை வச்சிட்ட… திரும்ப பண்ணாலும் எடுக்கலை… நான் என்னனு நினைக்கிறது… நான் என்னமோ ஏதோனு பதறிப் போய் செஞ்ச வேலையை விட்டுட்டு வந்திருக்கேன். எனக்கு ஒரு போன் பண்ணிட்டு நான் வந்ததும் இங்கே வந்திருக்க வேண்டி தானே… உனக்கு ஏதாவது ஆச்சுனா… உன் அப்பா அம்மாக்கு நான் தானே பதில் சொல்லனும்…. இடியட்” என முகம் கோபத்தில் சிவக்க காரமான வார்த்தைகளால் வேணியை வசை மாரி பொழிந்துக் கொண்டிருந்தான்.
அவனின் கோபத்தின் மேல் இவள் கோபம் கொள்ள, “நீ போ.. எனக்கு ஒன்னும் ஹெல்ப் செய்ய வேண்டாம். நானே பார்த்துப்பேன்” என கண்ணில் விழத் தொடங்கிய நீரை கட்டுக்குள் கொண்டு வந்து வெறுமையான குரலில் அவளுரைக்க,
எவர் முன்னும் அழும் சுபாவம் இல்லாத வேணி, தன் அழுகையை கட்டுக்குள் கொண்டுவர பெரும்பாடுபடுவதைப் பார்த்தவன், “நான் தானே இருக்கேன் கன்ட்ரோல் செய்யாம அழுதிடு அம்ஸ். நெஞ்சடைக்கப் போகுது” என இளாக் கூற,
“நீ எனக்கு யாரோ தான் போடா” என நா தழுதழுக்கச் சொன்னவள் அந்த இடத்தைவிட்டு நகரப் போக, இவன் அவளைத் தடுத்து நிறுத்த விழைந்த நேரம், வாணி மஹா மற்றும் ஆஷிக் அவ்விடத்திற்கு வந்தனர்.
வேணி தன் விழியில் தேங்கி நின்ற நீரை துடைத்து விட்டு சோகமாய் நிற்க, மஹாவும் தன் லேப்டாப் தொலைந்த கவலையில் அதை மதியிடம் குறுஞ்செய்தியில் கூறிக்கொண்டிருக்க, அழைத்துவிட்டான் மதி உடனே மஹாவின் கைபேசிக்கு விஷயத்தை அறிந்துக்கொள்ள…
மதியிடம் பேசவென தள்ளிச்சென்று நின்றாள் மஹா.
இங்கே இளா, “தேங்க்ஸ்டா மச்சி! சொன்னதும் உடனே வந்ததுக்கு” என ஆஷிக்கிடம் கைகுலுக்கிக் கொண்டிருக்க,
“என்னது மச்சியா? இது எப்போ? நீங்க இரண்டு பேரும் எப்போ இன்ட்ரோ ஆனீங்க?” என வாணி கேட்க,
“அதெல்லாம் எப்பவோ ஆகிட்டோம்” எனச் சிரித்துக் கொண்டனர் இருவரும்.
“ஒரு நாள் வைட்ஃபீல்ட் ஆபிஸ்க்கு என் ப்ராஜக்ட் விஷயமா போக வேண்டியிருந்துச்சு கேபி. அப்ப அம்மு தான் இளா கான்டேக்ட் கொடுத்து அட்ரஸ் விசாரிச்சிக்க சொன்னா. அப்படி தான் பழக்கம்” என்றான் ஆஷிக்.
“ஓ ஓகே. பசங்க தான் இன்ட்ரோ ஆன அடுத்த செகண்ட் மச்சினு பேசிப்பீங்களே. சோ நீங்க இப்டி கூப்டுகிறது அதிசயம் இல்லை தான்” என்றாள் வாணி.
இவர்களின் இந்த உரையாடல்களை வெற்றுப் பார்வையுடன் கேட்டிருந்த வேணி தன் தந்தையிடம் அலைபேசியில் பேசவென நகர்ந்துச் செல்ல,
“போலீஸ் என்ன சொன்னாங்க மச்சி? லேப்டாப் எப்படி காணாம போனது வாணி?” என வினவினான் இளா.
“ரூம் கிளீனிங்காக ரூம் சாவியை வெளியே வச்சிட்டு போவோம்… இந்த பொண்ணுங்க லேப்டாப் பேகை அவங்க கட்டில்கிட்ட அப்படியே வச்சிருந்திருக்காங்க… ஆனா அப்படி தினமும் வச்சிட்டு போவோம். இன்னிக்கு புது ஆளை க்ளீன் பண்ண சொல்லிருங்காங்க போல… அவங்க தான் எடுத்திருக்கனும்னு எங்க யூகம்… அந்த பிஜி ஓனர் கிட்ட கம்ப்ளைண்ட் செஞ்சோம். எங்களுக்கு அதெல்லாம் தெரியாது உங்க உடைமைகள் நீங்க தான் சேஃபா வச்சிகணும்னு சொல்லிட்டு போய்டாரு. அதான் போலீஸ் கிட்ட கம்ப்ளைண்ட் கொடுக்க வந்தோம்” எனக் கவலையாய் வாணி உரைக்க,
“மச்சி போலீஸ்லாம் வேலைக்கு ஆகாதுடா. அவங்க இதெல்லாம் ஒரு விஷயமாவே மதிக்கமாட்டேங்கிறாங்க. இந்நேரம் அந்த லேப்டாப்பை பார்ட் பார்ட்டா பிரிச்சி வித்திருப்பாங்க… தேடுறதும் வேஸ்ட் தானு சொல்றாங்கடா. நாளைக்கு பிஜில லேடி போலீஸ் வச்சி எல்லா ரூமையும் செக் பண்ண சொல்றோம்னு சொல்லிருக்காங்க… பார்ப்போம் நாளைக்கு பிஜில கிடைச்சா உண்டு… இல்லைனா லேப்டாப் கிடைக்க வாய்ப்பே கிடையாது” ஆஷிக் தான் போலீசிடம் பேசியவற்றைக் கூறினான்.
இதைக் கேட்டு பெருமூச்சுவிட்ட இளா, “அம்ஸ் ரொம்ப கவலையா தெரியுறா. நான் வேற கொஞ்சம் கோவத்துல திட்டிட்டேன். நான் அவகிட்ட ஒரு டென் மினிட்ஸ் பேசி சமாதானம் பண்ணிட்டு பிஜிக்கு கூட்டிட்டு வரேன். நீங்க வேணா கிளம்புங்க” என இளா கூறினான்.
அங்கு போனில் மஹா மதியிடம் தன் லேப்டாப் தொலைந்ததைக் கூறிக் கண்ணீர் வடிக்க, அவன் அவளுக்கேற்றவாறு பேசி சமன்படுத்தியிருந்தான் அவளை.
காவல் நிலையத்திலிருந்து இவர்களின் பிஜி நடந்து செல்லும் தூரமேயிருக்க, மஹா, வாணி, ஆஷிக் தாங்கள் பிஜிக்கு செல்வதாய் வேணியிடம் உரைத்து நடக்கவாரம்பிக்க,
“ஹே என்னைய விட்டு போறீங்க? நானும் வரேன்” என அவள் நடக்கவாரம்பிக்க,
இளா அவளை தடுத்து நிறுத்தி, “நீங்க போங்க ஃப்ரண்ட்ஸ். நான் அவளை கூட்டிட்டு வரேன்” என அவர்களை போகச் சொல்லிவிட்டு வேணியை தன் பைக்கில் ஏறுமாறு கூறினான்.
அவர்கள் வழமையாய் செல்லும் தமிழ்நாடு ஹோட்டலில் நிறுத்தியவன், அங்கே ஒரு மேஜையில் இருவரும் அமர, அவளுக்கு ஒரு பன்னீர் மசாலா தோசையும் தனக்கு இட்லியும் கூறிவிட்டு அவளிடம் திரும்பினான்.
“என்னைக் கேட்காம நீ எப்படி ஆர்டர் செய்யலாம். எனக்கு ஒன்னும் பசிக்கலை. நான் சாப்பிட மாட்டேன்” என கோபத்தில் முகத்தை திருப்பிக் கொண்டாள்.
“அம்ஸ், நீ பசி தாங்க மாட்டனு எனக்கு தெரியும். அதுவும் இந்த தோசை உனக்கு ரொம்ப பிடிக்கும்னும் எனக்கு தெரியும். வீம்பு பண்ணாம சாப்பிடு” என இளாக் கூற,
“நீ ஆர்டர் பண்ணதை நான் ஏன்டா சாப்பிடனும். நான் சாப்பிட மாட்டேன். போ” மேஜை மீதிருந்த தோசையை தொட்டுக்கூடப் பார்க்காமல் அவனிடம் அவள் சண்டையிட,
அவளை முறைத்துக் கொண்டே தன் கைபேசியை எடுத்தவன், யாருக்கோ அழைத்துவிட்டு தன் கைபேசியை காதில் வைக்க,
“யாருக்கு இவன் போன் பண்றான்?” என மனதில் எண்ணிக்கொண்டே அவனை இவள் முறைத்துப் பார்த்துக் கொண்டிருக்க,
மறுமுனையில் அழைப்பை ஏற்றதும்,
“அங்கிள் நான் அம்ஸ் கூட தான் இருக்கேன். நீங்க கவலைப்படாதீங்க” என ஏதேதோ பேசிக்கொண்டிருக்க,
அவனின் அங்கிள் என்ற விளிப்பிலேயே தன் தந்தைக்கு தான் அழைத்திருக்கிறான் என்பதை உணர்ந்தவள் திடுக்கிட்டு “அப்பாகிட்ட எதுவும் சொல்லாதே” என சைகை செய்தாள்.
அவளின் சைகை பாஷயை கண்டுகொள்ளாதவன் போல் அவளின் தந்தையிடம், “அங்கிள், வேணி ரொம்ப கவலைப்பட்டு சாப்பிட மாட்டேனு அடம் பிடிக்கிறா… நீங்க சொல்லுங்க அங்கிள். நான் எவ்ளவோ சொல்லிட்டேன் கேட்க மாட்டேங்கிறா” என இளா பேசிக்கொண்டிருக்க,
அவனின் இந்த செயலில் தன் தலையில் அடித்துக் கொண்டாள் வேணி.
“இந்தா அங்கிள் உன் கிட்ட பேசனுமாம்” என இளா உதட்டில் மறைத்த சிரிப்புடன் கைபேசியை வேணியிடம் கொடுக்க,
“இருடா உன்னை கவனிச்சிக்கிறேன்” என மனதில் அவனை கருவிக்கொண்டே கைபேசியைப் பெற்றவள், “சரிப்பா ஓகேப்பா” என தன் தந்தைக் கூறியனைத்துக்கும் மறுமொழி பேசாது சரி சரியெனக் கூறி போனை வைத்தாள்.
“அறிவிருக்காடா உனக்கு?” கோபமாய் கேட்டாள் வேணி
“எனக்கு அறிவு இருக்கா இல்லையானு அப்புறம் செக் பண்ணலாம். தோசை ஆறுது பார் சாப்பிடு” என்றான் இளா
“நீயும் சாப்பிட்டு தொல” என இளாவிடம் கடுப்பாய் உரைத்தவள் தோசையை பிய்த்து சாப்பிடவாரம்பித்தாள்.
“எங்கப்பாக்கு லேப்டாப் காணாம போச்சிங்கிறது கூட பெரிய விஷயமா தெரியாது. அவங்க மனசு கஷ்டபடாது. நான் ஃபீல் பண்ணி சாப்பிடாம இருக்கேன்ங்கிறது தான் பெரிசா தெரியும்… மனசு கஷ்ட்படுவாங்க” என சாப்பிட்டுக் கொண்டே இளாவை பார்த்து அவள் கூற,
“அதான் தெரியுமே” என்றான்.
“அப்புறம் ஏன் போன் பண்ணி அப்பாவ கஷ்டபடுத்துற” என முறைத்தாள் வேணி.
“இதோ இப்படி உன்னை சாப்பிட வைக்க தான் அம்ஸ். எனக்கும் என்ன அங்கிளை கஷ்டப்படுத்தனும்னு வேண்டுதலா… நீ தான் புரிஞ்சிக்காம நடந்துக்குற” என்றான் இளா.
“யார்டா புரிஞ்சிக்காம நடந்துக்குறது. நீ வந்ததும் மனசு எவ்ளோ நிம்மதியாச்சு தெரியுமா… நான் தான் யார் முன்னாடியும் அழ மாட்டேனு உனக்கு தெரியும்ல… அவ்ளோ நேரம் அடக்கி வச்சிருந்த அழுகையை உன் கிட்ட சொல்லி கொட்டலாமனு வந்தா… அப்படி திட்டுற… எவ்ளோ கஷ்டமா போச்சு தெரியுமா” மீண்டும் கண்ணில் துளிர்த்த நீரை விழிகளுக்குள்ளேயே அடக்கிக் கொண்டு வேணி பேச,
“சாரி… ரியலி சாரி அம்ஸ்… கோபத்துல அவ்ட் ஆஃப் மை மைண்ட் அப்படி வந்துடுச்சுடா… உனக்கு என்னாச்சோ ஏதாச்சோனு நான் எவ்ளோ பயந்துப் போய் துடிச்சுப் போய் வந்தேன் தெரியுமா… எல்லாம் உன் மேல உள்ள அக்கறை தான்டா. ப்ளீஸ் அண்டர்ஸ்டாண்ட் மீ அம்ஸ்” என பாவமாய் முகத்தை வைத்துக் கொண்டு இளா உரைக்க,
“சரி சரி அதை விடு. நாலு இட்லி எப்படிடா உனக்கு போதும். வேற ஆர்டர் பண்ணு” என்றாள் வேணி.
வேறு சில உணவையும் ஆர்டர் செய்த பின், “அம்ஸ் உங்க மேலயும் தப்பிருக்கு. பிஜில இவ்ளோ கேர்லெஸ்ஸா இருக்கக் கூடாது. ரொம்ப முக்கியமான பொருட்கள்லாம் உங்களுக்குனு பிஜில கொடுத்திருக்கிற கப்போர்டு இல்ல பீரோல வச்சி பூட்டி சாவி வச்சிக்கோங்க. உங்க உடைமை உங்கள் பொறுப்புனு தான் பிஜி ஓனர் பேசுவான். நீங்க பொறுப்பா மாறுங்க முதல்ல. உன்னோட ப்ரண்ட்ஸ் கிட்டயும் இதை சொல்லு” என தன் அறிவுரையை அவன் வழங்க,
இதற்கு மேல் அவனிடம் சண்டையிட்டால் தன் தந்தையிடம் போட்டுக்கொடுத்திடுவான் என்றெண்ணியவள் அவன் கூறிய அனைத்திற்கும் தலையை ஆட்டிக்கொண்டாள்.
இருவரும் உண்டு முடிக்கும் போது சமாதானமாகி தங்களின் வழமையான கிண்டல் கேலிப் பேச்சில் இறங்கியிருந்தனர்.
வேணியை பிஜியில் விட்டு தன்னறைக்கு சென்றான் இளா.
இளாவுடன் இருந்தவரை லேசான மனநிலையில் இருந்தவளின் மனதில் பாரமேறிக் கொண்டது தங்களின் பிஜி அறைக்கு வந்ததும்.
மஹாவும் வாணியும் அவரவர் கட்டிலில் படுத்திருக்க, “இரண்டு பேரும் சாப்பிட்டீங்களாடி” எனக் கேட்டுக்கொண்டே தன்னை ரிப்பெரஷ் செய்துக் கொண்டு கட்டிலில் அமர்ந்தாள்.
சாப்பிட்டோம் என இருவரும் கூற,
“லேப்டாப் போனதை விட அதுல இருக்க ஃபோட்டோஸ் எல்லாம் போனது தான்டி ரொம்ப கஷ்டமா இருக்கு. நம்ம பெங்களுர் வந்ததிலருந்து இந்த ஒன் இயர்ரா நம்ம போன இடம் வந்த இடம்னு போட்டோஸ் எடுத்த எல்லாத்தையுமே சேவ் பண்ணி வச்சிருந்தேன். லாஸ்ட் வீக்கி தான் டேட் வைஸ் தனி தனி போல்ட்ர் போட்டு சேவ் பண்ணி வச்சேன். பேக் அப் கூட இல்லைடி அந்த போடோஸ்க்குலாம். இனி இந்த மாதிரி ரொம்ப முக்கியமான போட்டோஸ் மெமரிஸ் நிறஞ்ச போட்டோஸ் பேக் அப் எடுத்து வச்சிகனும்டி” என கவலையாய் வேணி உரைக்க,
ஆமாம் என ஆமோதித்தனர் இருவரும்.
“ஆமா மதி என்ன சொன்னாங்கடி?” வேணிக் கேட்க,
“மதி முதல்ல செம்ம திட்டு… ஏன் தனியா போலீஸ் ஸ்டேஷன் போனீங்க… அதுவும் நைட் டைம்ல போனீங்கனு… அப்புறம் நான் ரொம்ப ஃபீல் பண்ணவும் சமாதானப்படுத்தினான்… அவனும் லேப்டாப் தொலைஞ்சதுக்குலாம் சீரியஸா ஸ்டெப் எடுக்க மாட்டாங்க. கிடைக்குறது கஷ்டம் தான்னு சொன்னான்” என்றாள் மஹா.
“ஹ்ம்ம்ம் இளாக்கு செம்ம கோவம் நான் தனியா போலீஸ் ஸ்டேஷன் வந்ததுல. நான் வேற கம்ப்ளைண்ட் கொடுக்குற அவசரத்துல விஷயத்தை சொல்லாம போலீஸ் ஸ்டேஷன் வானு மட்டும் சொல்லிட்டேன். பாவம் ரொம்ப பதறி பயந்துட்டான்”
“அததான்டி நானும் சொன்னேன். போலீஸ் ஸ்டேஷன் தனியா போக வேண்டாம். காலைல பாத்துக்கலாம்னு சொன்னேன். எங்கே கேட்டீங்க? உன்னோட லேப்டாப்பா இருந்தா இப்படி தான் சொல்லுவியானு என்னை கேட்டுட்டீங்கனா நான் என்ன செய்ய? அதான் ரொம்ப அழுத்தம் கொடுக்கலை… உங்களை தனியா அனுப்பவும் மனசில்லை… அதான் நானும் கூட வந்தேன். என் கிட்ட லேப்டாப் இல்லங்கிறனால நான் தப்பிச்சேன். இல்லனா என் நிலைமையும் உங்களைப் போல தானே ஆகிருக்கும்” என்றாள் வாணி.
“சே சே அப்டிலாம் சொல்லிருக்க மாட்டோம் வாணி. அந்த ஓனர் அப்டி விட்டேத்தியா பதில் சொல்லவும்,ஏதோ அந்த ஓனர் மேல உள்ள கோபத்துல கம்ப்ளைண்ட் கொடுத்தே ஆகனும்னு தோணுச்சு. அதான் எதையும் யோசிக்காம போய்ட்டோம்” என உரைத்தாள் மஹா.
“சரிடி நாளைக்கு எல்லாரும் ஆபிஸ்க்கு லீவ் போடுவோம். அதான் போலீஸ் செக்கிங்கு வரேனு சொல்லிருக்காங்கல. நாம அப்ப இங்க இருந்தா தானே கண்டுபிடிக்க முடியும்” என வாணிக் கூற,
“நீ போ வாணி. நாங்க இரண்டு பேரும் பார்த்துக்கிறோம்” என மஹாக் கூற,
“என்னடி உங்களுக்கு ஒரு பிரச்சனைனா அது எனக்கில்லையா… நானும் இருக்கேன்… நாளைக்கு அந்த போலீஸ்காரங்க என்ன தான் சொல்றாங்கனு பார்ப்போம்” என்றுரைத்தாள் வாணி.
“நம்ம வாடகைக்கு வீடு பார்த்து மாத்தி போய்டலாமாப்பா? எனக்கு முதல்ல இருந்தே பிஜி பிடிக்கலை… இந்த இன்சிடண்ட் அப்புறம் இதே பிஜில இருக்கவோ இல்ல வேற பிஜி மாறவோ மனசில்லை… வேற வீடு பார்த்து போய்டலாம்…. நம்மலே சமைச்சு சாப்பிடலாம்… நம்ம அப்பா அம்மா வந்தா நம்ம கூடவே தங்க வச்சிக்கலாம். என்ன சொல்றீங்க இரண்டு பேரும்?” என வேணிக் கேட்க,
“எனக்கு எதுனாலும் ஓகேடி. உங்க கூட இருந்தாப் போதும்” என வாணி உரைக்க,
“எனக்கும் நோ ப்ராப்ளம்டி. வேலைகள் மட்டும் நமக்குள்ள சண்டைப் போட்டுக்காம கரெக்ட்டா பிரிச்சி வச்சி செஞ்சிக்கிடனும்” என மஹாக் கூற,
“அதெல்லாம் நம்ம மூனு பேருக்குள்ள என்ன ப்ரச்சனை வந்துடப்போகுது… புதுசா யாராவது நம்மக் கூட சேர்ந்தா தான் ப்ரச்சனை… அது பார்த்துக்கலாம்… சரிடி எல்லாரும் தூங்குவோம்” என பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தாள் வாணி.
மறுநாள் அனைவரின் அறையையும் பரிசோதித்து விட்டு எங்கும் இவர்களின் லேப்டாப் இல்லையென கூறிவிட்டார்கள்.
அந்த காவலர்கள் மேம்போக்காய் பெயருக்காக சோதனை செய்ததுப் போல் தோன்றியது இந்த மூன்று பெண்களுக்கும்.
பின் மாலை தான் தெரிந்தது பிஜியின் பெயர் கெட்டுவிடக் கூடாதென அந்த பிஜி ஓனர் போலீஸ்க்கு லஞ்சம் கொடுத்துள்ளாரென்றும் இந்த பிரச்சனையை பெரிது படுத்த வேண்டாமென போலீசிடம் அந்த பகுதியின் எம்எல்ஏ மூலம் பேச வைத்துள்ளாரென்றும் தெரிந்தது.
பின் அங்கிருக்க மனமில்லாமல் தேடி அலைந்து ஒரு வாரத்தில் மடிவாலா ஏரியாவிலேயே ஒரு வீடு வாடகைக்கு தேடிப் பிடித்து குடிபுகுந்தனர் அம்மூன்று பெண்களும்.
சமையல் செய்யும் பாத்திரங்கள் அவரவர் வீட்டில் உபயோகித்த பொருட்களாய் என்னென்ன பாத்திரங்கள் வேண்டுமென மூவருக்குமாக பிரித்தெடுத்து அவர்கள் வீட்டிலிருந்தேக் கொண்டு வந்தனர்.
எரிவாயு இணைப்பு, குட்டி கலைஞர் தொலைக்காட்சி, அடுப்பு, கேபிள் இணைப்பு என அனைத்தையும் அங்கேயே வீட்டு உரிமையாளரிடம் பேசி ஏற்பாடு செய்துக் கொண்டனர். தரை மெத்தை மூவருக்குமாக வாங்கிக்கொண்டனர்.
குடும்பம் நடத்தும் அளவு அவ்வீட்டை தயார் செய்தனர் அம்மூன்று பெண்களும்.
மூவருமாக தங்களுக்குத் தெரிந்த சமையலை செய்து உண்டு வீட்டை சுத்தம் செய்து பாதுகாத்து என பொறுப்பாகவும் அதே சமயம் வாரயிறுதி நாட்களில் தங்களின் ஊர் செல்லாமல் இருக்கும் வேளைகளில் இரவு வெகு நேரம் அரட்டை, அந்தாக்ஷரி, படம் பார்ப்பது என மிகவும் மகிழ்ச்சிகரமாகவும் தோழிகளுடன் சேர்ந்து வாழும் வாழ்வை மூவருமே இன்பமாய் ரசித்து வாழ்ந்தனர்.
அவர்களின் இனிய நினைவுகள் பலவும் சுமந்ததாய், அவர்களின் நட்புக்கோர் நினைவுச் சின்னமாய் அமைந்தது அவ்வீடு அவர்களின் வாழ்வில்.
இவ்வாறாக அலுவலகத்தில் வேலை ஒரு பக்கம் வீட்டில் வேலை ஒரு பக்கம் என இவர்களின் நாட்கள் பறந்துச் செல்ல,
ஒரு நாள் மதிய வேளை வாணியும் வேணியும் தங்களின் அலுவலக கேஃபிடேரியாவில் அமர்ந்துக் கொண்டு மறுநாள் வரவிருக்கும் மஹாவின் பிறந்தநாளுக்கான இன்ப அதிர்ச்சி திட்டம் தீட்டிக் கொண்டிருந்தனர்.
இவர்கள் இவ்வாறு பேசிக்கொண்டிருந்த சமயம் வேணியின் தந்தை நெஞ்சு வலியால் மருத்துவமனை சென்றிருப்பதாக வேணிக்கு ஊரிலிருந்து அவளின் அன்னை தொலைப்பேசியில் உரைக்க, உடனே தான் ஊருக்கு கிளம்புவதாய் உரைத்தாள்.
இதையறிந்த இளங்கோ, அவளை தனியே அனுப்ப மனமில்லலாமல் தானும் அவளுடன் வருவதாய் உரைத்து இருவருமாய் பயணப்பட்டனர் வேணியின் ஊருக்கு.
மாலைப்பொழுது தங்களின் வீட்டிற்கு வந்ததும் வாணியின் மூலம் இதனை அறிந்த மஹா, வேணியின் கைப்பேசிக்கு அழைத்து அவளின் தந்தை பற்றி நலம் விசாரித்தாள்.
பேருந்தில் ஊருக்கு சென்றுக் கொண்டிருந்த வேணி, மஹாவின் அழைப்பினை ஏற்றவள், “சாதாரண வலி தானாம்டி… நான் தான் ரொம்ப பயந்துட்டேன்… இரண்டு நாளா மைல்ட்டா நெஞ்சுல வலி இருந்துட்டே இருந்திருக்கு அப்பாக்கு… இன்னிக்கு எதுக்கும் டாக்டர்கிட்ட காமிக்கலாம்னு அம்மாகிட்ட சொல்லிருக்காங்க… அம்மா நெஞ்சு வலினு சொன்னதும் பயந்து போன் பண்ணி எனக்குச் சொல்ல… நான் நெஞ்சு வலிங்கிற ஒரு வார்த்தைய பிடிச்சிக்கிட்டு கிளம்பிட்டேன்… டாக்டரைப் பார்த்தாங்கலாம்…. ஈசிஜி எக்கோ டெஸ்ட்லாம் எடுத்து பார்த்தாங்கலாம். இந்த வலி ஹார்ட் அட்டாக் லாம் இல்லைனு டாக்டர் சொல்லிட்டாங்கலாம். செரிமானப் பிரச்சனையாக் கூட இருக்கலாம்னு மாத்திரைக் குடுத்திருக்காங்கலாம்… மாத்திரைப் போட்டும் வலி இருந்தா திரும்ப வர சொல்லிருக்காங்க… இருந்தாலும் அப்பாவை ஒரு தடவை நேர்ல பார்த்தா தான் எனக்கு மனசுக்கு நிம்மதியாகும்டி” என அனைத்தையும் சொல்லி முடித்தவள், மஹாவின் பிறந்தநாளிற்கு அட்வான்ஸ் வாழ்த்தையும் கூறினாள்.
வேணிக்கு நன்றியுரைத்து தந்தையை நலம் விசாரித்ததாய் கூறும்படி உரைத்து போனை வைத்துவிட்டாள் மஹா.
இங்கே வேணியினருகில் அமர்ந்திருந்த இளா, “அப்பாக்கு தான் ஒன்னும் இல்லைல. அப்புறம் ஏன் சோகமா முகத்தை வச்சிருக்க?” என இளா கேட்க,
“உனக்கு ஞாபகம் இருக்காடா? நான் காலேஜ் ஃபைனல் இயர் படிக்கும் போது, அப்பாவுடைய ஃப்ரண்ட் ஒருத்தர் அவருடைய பையனுக்கு என்னை பொண்ணு கேட்டாருனு சொன்னேனே” எனக் கேட்டாள் வேணி
“ஆமா… அதுக்கென்ன இப்போ?”
“அப்பவே அப்பா அவங்களுக்கு உடம்புக்கு எதுவும் வரதுக்கு முன்னாடி எனக்கு கல்யாணம் செஞ்சி வச்சிடனும்னு நினைச்சாங்க… அக்காவுக்கு வேற அப்ப தான் கல்யாணமாகி ஒரு வருஷம் ஆகியிருந்தது… அதனால வரன் வரும் போதே எனக்கும் செஞ்சிடலாம்னு நினைச்சாங்க… அதே சமயம் எனக்கு வேலைக் கிடைக்கவும், நான் வேலைப் பார்க்கனும்னு ஆசைப்படுறதை அப்பாகிட்ட சொல்லவும்… அப்பா இப்போதைக்கு அவளுக்கு கல்யாணம் பண்ற ஐடியா இல்ல அந்த வரன் வேண்டாம்னு சொல்லிட்டாங்க”
என இவள் கவலையாய் கூறிக்கொண்டிருந்த வேளையில் குறட்டை சத்தம் கேட்க, இவள் திரும்பி இளாவை நோக்க, ஆழ்ந்த நித்திரையில் இருந்தானவன்.
“டேய் நான் இங்க என்ன தாலாட்டா பாடிக்கிட்டு இருக்கேன்” என அவன் மண்டையில் ஒரு குட்டு வைத்து அவனின் தூக்கத்தைக் களைக்க,
ஆஆஆஆ வென அலறிக்கொண்டு அவன் எழ,
“டேய் கத்தாதடா… மொத்த பஸ்ல உள்ள ஆளுங்க எல்லாரும் நம்மளைத் தான் பார்க்குறாங்க” என வேணி கூற,
“ம்ப்ச்… இப்ப எதுக்கு என்னை எழுப்பின?” என எரிச்சலாய் கேட்டான் இளா.
“எவ்ளோ சீரியஸா பேசிட்டு இருக்கேன். நீ பாட்டுக்கு தூங்கிட்டு இருக்க” என கோபத்தில் வேணி உரைக்க,
“இப்ப என்ன இதை காரணம் காட்டி உங்கப்பா உனக்கு கல்யாணம் செய்றது பத்தி பேசுவாருனு தானே ஃபீல் பண்ற? கல்யாணம் பண்ணுக்கோ… இதுல என்ன கஷ்டம் உனக்கு. அவ அவன் வீட்டுல நம்மளாக் கேட்டாக் கூட மேரேஜ் செய்து வைக்க மாட்டேங்கிறாங்களேனு புலம்புறான். உங்க வீட்டில் தானா மேரேஜ் செஞ்சி வைக்கிறேனு சொல்றாங்க…. பண்ணுவியா… அதைவிட்டுட்டு… என் தூக்கத்தைக் கெடுத்துக்கிட்டு” எனக்கூறி மீண்டும் உறக்கத்திற்கு போனான்.
“போடா கோவக்காய்” என அவனை வசைப்பாடியவள் திரும்பி அமர்ந்துக் கொண்டாள்.
அன்றிரவு வேணியின் வீட்டிற்கு அவளுடன் சென்றவன், வேணியின் தந்தையிடம் நலம் விசாரித்து விட்டு கிளம்ப எத்தனிக்க, இரவு வெகு நேரமாகியதால் அன்றிரவு அங்கேயே தங்கி விட்டு காலை அவனின் வீட்டிற்கு செல்லுமாறு வேணியின் தந்தை இளாவை வற்புறுத்த அங்கேயே தங்கி விட்டான்.
அன்று நள்ளிரவு வாணி வேணியுடன் தான் செய்த திட்டத்தின்படி ஏற்பாடுகள் செய்து மஹாவை இன்ப அதிர்ச்சிக்குள்ளாக காத்திருந்தாள்.
ஆனால் இவளின் திட்டத்தினைத் தாண்டிய ஓர் அதிர்ச்சியைக் கொடுத்தானவன்.
— தொடரும்